Tuesday, December 8, 2009

மதவெறி சக்திகளுடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டதால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது மக்களவையில் பாசுதேவ் ஆச்சார்யா பேச்சு



புதுதில்லி, டிச. 8-

மதவெறி சக்திகளுடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டதால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற நடத்தை விதி 193ஆவது பிரிவின்கீழ் லிபரான் ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாசுதேவ் ஆச்சார்யா கூறியதாவது:

‘‘பாபர் மசூதி இடிக்கப்பட்டது சம்பந்தமாக லிபரான் ஆணையத்தின் அறிக்கை மீது அவையில் கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மககள் கொல்லப்பட்ட சம்பவங்களையும், வன்முறை வெறியாட்டங்கள் தலைவிரித்தாடியதையும் பார்த்தோம். டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதானது சங் பரிவாரக்கூட்டத்தால் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஒன்று.

பாபர் மசூதி இருந்த இடத்தில் பாபர் மசூதி - ராமஜன்ம பூமி தாவா எப்போது ஏற்பட்டது? இந்தத் தாவா உண்மையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரச்சனை. அது எப்படி தேசியப் பிரச்சனையாக உருவெடுத்தது? 1949 டிசம்பர் 23 அன்று பாபர் மசூதி இருக்கும் இடத்தில் கள்ளத்தனமாக ராமர் சிலை ஒன்று புதைக்கப்பட்டது. இது தொடர்பாக பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்தச் செயலைக் கண்டித்தும், இதனை ஏற்க முடியாது என்று கூறியும் உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு தந்தி அனுப்பினார். இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலும் கள்ளத்தனமாக ராமர் சிலையை அங்கு வைத்த செய்கையை ஏற்கவில்லை.

பாபர் மசூதி - ராமஜன்ம பூமி தாவா ஓர் உள்ளூர் பிரச்சனை. ஆனால் இது ஏன் தேசிய பிரச்சனையாக உருவெடுத்தது? 1986இல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, இப்பிரச்சனை தொடர்பாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் நாங்கள் எங்கள் கட்சியின் சார்பில் பாபர் மசூதி இருக்கும் இடம் திறக்கப்படக் கூடாது என்று கூறினோம்.
அந்த சமயத்தில் பாஜகவின் சார்பில் நாடாளுமன்றத்தில் இருவர்தான் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஒருவர் குஜராத்திலிருந்தும் மற்றொருவர் ஆந்திராவிலிருந்தும் உறுப்பினர்களாகத் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்கள் இந்த உள்ளூர் பிரச்சனையை நாடு தழுவிய அளவில் ஊதிப் பெரிதாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயற்சித்தார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். இரண்டு உறுப்பினர்களாக இருந்த இந்த அவையில் அவர்களது எண்ணிக்கை 88ஆக உயர்ந்தது.
வி.பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி உருவாகி ஆட்சியை அமைத்தது. இடதுசாரிகளாகிய நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம். பாஜக தேசிய முன்னணியில் அங்கம் வகிக்க விருப்பப்பட்டது. ஆயினும் நாங்கள் கடுமையாக ஆட்சேபித்ததால், அதுவும் வெளியிலிருந்து ஆதரவு அளித்தது.,
அதன்பின்னர் பாஜக பாபர் மசூதி - ராமஜன்ம பூமி பிரச்சனையை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்வதற்காக அத்வானி தலைமையில் ரத யாத்திரையை நடத்தியது. ரத யாத்திரை சென்ற இடமெல்லாம் ரத்தக்களறி. மதக் கலவரங்கள், நான் சார்ந்துள்ள புருலியா மாவட்டம் மதநல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கும் மாவட்டமாகும். அங்கு அத்வானியின் ரதயாத்திரை வந்த சமயத்தில் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. 14 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அது பீகார் சென்றபோது, அங்கு முதல்வராக இருந்த லல்லுபிரசாத் யாதவ் அதனை அனுமதிக்கவில்லை. அத்வானியையும் கைது செய்தார். நாடு முழுதும் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன.

உத்தரப்பிரதேசத்தில் அப்போது முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்தார். அந்த சமயத்தில் பாபர் மசூதியை இடிக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முலாயம் சிங் யாதவ் உறுதியான நடவடிக்கை எடுத்து அதனைத் தடுத்துநிறுத்தினார். பாபர் மசூதி அப்போது பாதுகாக்கப்பட்டது. பாபர் மசூதி மட்டுமல்ல, நாடே பாதுகாக்கப்பட்டது.
இதனையடுத்து, மத்தியில் வி.பி. சிங் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொள்ளத் தீர்மானித்தது. அந்த சமயத்தில் காங்கிரசும் பாஜகவும் இணைந்து நின்று வி.பி. சிங் அரசைப் பதவி இழக்கச் செய்தன. அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியானது மதவெறி சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டது. வி.பி. சிங் அரசு கவிழ்க்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியானது இந்துமத அடிப்படைவாதிகளுடன் மட்டுமல்ல, முஸ்லீம் மத அடிப்படைவாதிகளுடனும் சமரசம் செய்து கொண்டது. இவ்வாறு சமரசப் போக்கை காங்கிரஸ் பின்பற்றாமலிருந்திருந்தால் பாபர் மசூதி காப்பாற்றப்பட்டிருக்கும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபின் உத்தரப்பிரதேசம் உட்பட பாஜக ஆட்சியிலிருந்த நான்கு மாநிலங்களையும் அரசியலமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைத்திட மத்திய அரசு முன்வந்தது. நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தினைப் பயன்படுத்துவதை எப்போதும் ஆதரிப்பதில்லை. ஆயினும் முதன்முறையாக பாஜக ஆட்சியிலிருந்த இந்த நான்கு மாநிலங்களையும் கலைத்திட ஆதரவு அளித்தோம். ஏனெனில் இந்த நான்கு மாநில அரசுகளும் பாபர் மசூதி இடிப்புக்கு அனைத்து விதங்களிலும் உதவிகள் செய்திருந்தன. கர சேவகர்களை அனுப்பி வைத்திருந்தன. வன்முறை வெறியாட்டங்கள் நடத்திட அனுமதி அளித்திருந்தன. நாட்டின் மதச்சார்பற்ற மாண்பினை நசுக்கிட அனைத்து விதங்களிலும் உதவிகள் செய்து வந்தன.

பாபர் மசூதி இடிக்கப்படும் சமயத்தில் பிரதமர் நரசிம்மராவின் பங்கு எவ்வாறிருந்தது? அவர் அந்த சம்பவம் நடந்து முடியும் வரை தூங்கிக் கொண்டிருந்தார். அவர் தூக்கத்திலிருந்து திடீரென்று விழிக்கும் சமயத்தில், பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டிருந்தது.
பாபர் மசூதி இடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித், பிரதமர் நரசிம்மராவுக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். பாபர் மசூதியை இடித்திட சங்பரிவாரக் கூட்டம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். எப்படியாவது மசூதியைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஜோதிபாசுவும் இதுபோல் நரசிம்மராவைக் கேட்டுக் கொண்டார்.
மத்திய உள்துறை செயலாளரும் இதனை உறுதி செய்திருந்தார். பாபர் மசூதியைக் காக்க வேண்டுமானால், அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கருதியிருந்தது. இது தொடர்பாக நவம்பர் 20 அன்று அரசின் குறிப்பு கூட தயாராகிவிட்டது. ஆனாலும் உயர்மட்டத்திலிருந்த தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு நரசிம்மராவுக்கம் சாதுக்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை.

நவம்பர் 23 அன்று புதுடில்லியில் தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளவில்லை. கலந்த கொள்ளாத மற்றொரு கட்சி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கூட்டத்தில் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அ ந்தத் தீர்மானம் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘பாபர் மசூதியைப் பாதுகாக்க எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்திட அத்தீர்மானம் பிரதமருக்கு முழு அதிகாரம் அளித்திருந்தது.’ ஆயினும் நரசிம்மராவ் எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

இது குறித்து லிபரான் ஆணையம் ஏன் மவுனம் சாதிக்கிறது? பிரதமர் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தாரானால் பாபர் மசூதி காப்பாற்றப்பட்டிருக்கும். நாட்டின் மதச்சார்பற்ற மாண்பு இடிக்கப்பட்டிருக்காது.
நேற்ற அவையில் பேசிய பாஜக உறுப்பினர் ராஜ்நாத் சிங் சங் பரிவாரத்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்திப் பேசினார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுதும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இவை தொடர்பாக நாடு முழுதும் பல வழக்குகள் பல நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி, விரைந்து விசாரணை மேற்கொண்டு, கயவர்கள் தண்டிக்கப்பட, உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இனியும் அவர்களைச் சுதந்திரமாக உலவ அரசு அனுமதிக்கக்கூடாது. அதன்மூலம் நாட்டின் மதச்சார்பற்ற மாண்பினை வலுப்படுத்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.

(சவீரமணி)

No comments: