Friday, October 30, 2009

ப.சிதம்பரம் கூற்றிற்கு சீத்தாராம் யெச்சூரி விளக்கம்



புதுடில்லி, அக். 31-
திரிணாமுல் காங்கிரஸ் தொடர்பாக ப.சிதம்பரம் அளித்துள்ள கூற்றினை மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி விளக்கம் அளித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவைகளாகும் என்று ப.சிதம்பரம் கூறியிருப்பதனை மறுத்து, தக்க ஆதாரங்களை சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். வெள்ளிக்கிழமையன்று மாலை செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:

‘‘மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூற்றினை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, மத்திய பாதுகாப்புப் படையினரும், மாநிலப் பாதுகாப்புப் படையினரும் சேர்ந்து மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றனர். அவை தொடர வேண்டும். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை,

மத்தியில் அமைச்சராக உள்ள திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த சிசீர் அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்ல, ராஜதானி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்படவிருக்கும் செய்தி தனக்கு முன்னமேயே தெரியும் என்று கூறியிருக்கிறார். இது ஓர் ஆழமான விஷயமாகும். மத்திய அமைச்சர் ஒருவருக்கு நடக்கப் போகும் குற்ற நடவடிக்கை குறித்து ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இது மிகவும் ஆழமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாவோயிஸ்ட்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் ரீதியாக அன்பும் ஆதரவும் அளித்து வருவதாக நாம் ஏற்கனவே கூறி வந்திருக்கிறோம். இப்போது, நாம் கூறிவந்தவற்றை அமைச்சரின் பேட்டி உறுதிப்படுத்துகிறது. இது ஒரு மிகவும் மோசமான விஷயம். எனவேதான் இதனை மக்கள் பார்வைக்குக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம்.
இரண்டாவதாக, மாவோயிஸ்ட்டுகளின் ஆபத்துக்கள் குறித்து மார்க்சிஸ்ட்டுகள் மிகவும் காலதாமதமாகத்தான் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படும் கூற்று குறித்ததாகும். மக்கள் தங்கள் நினைவாற்றலையும் வரலாற்றையும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நக்சலைட் இயக்கம் என்பது 1967இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சிறு குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது மேற்கு வங்கத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்தில் உருவானதால், இதற்கு நக்சல்பாரி இயக்கம் என்றும் நக்சலைட் இயக்கம் என்றும் இவ்வியக்கம் அழைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தங்கள் இயக்கத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்று அமைத்துக் கொண்டனர். அவர்கள் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து வந்தனர். 60களின் பிற்பகுதியிலும் 70களின் முற்பகுதியிலும் நாங்கள்தான் அவர்களின் கொலைவெறித் தாக்குதல்களின் இலக்காக இருந்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரச்சாரத்தின் மூலமாக அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அதனால்தான் அவர்களால் பிற மாநிலங்களில் வேரூன்ற முடிந்த அளவிற்கு, மேற்கு வங்கத்தில் முடியவில்லை.

இவ்வாறு, இடது அதிதீவிர கட்சிகள் நம் நாட்டில் பிறப்பெடுத்த நாட்களிலிருந்தே, மார்க்சிஸ்ட் கட்சியை இலக்காக வைத்துத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சியை அழித்த ஒழித்தால்தான் நாட்டில் மக்கள் யுத்தமும் விடுதலையும் சாத்தியம் என்று அவர்கள் கருதினார்கள். எனவே அது உருவான காலத்தில் - 60களின் பிற்பகுதியிலும் 70களின் முற்பகுதியிலும் - ஆயிரக்கணக்கான ஊழியர்களை நாங்கள் இழந்திருக்கிறோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) உருவான பிறகு, அது மேலும் 32 குழுக்களாக சிதறுண்டது. அவற்றில், இரு பெரிய குழுக்கள் (ஆந்திராவில் செயல்பட்டு வந்த மக்கள் யுத்தக் குழு மற்றும் பீகாரில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் ஒருங்கிணைப்பு மையம்) ஒன்றிணைந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்று உருவானது. மற்ற குழுக்கள் தேர்தல்களில் பங்கெடுக்கத் துவங்கிவிட்டன.

இது வரலாறு. இதனை எவரும் மறக்கவும் கூடாது, திரிக்கவும் கூடாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே இந்த அதிதீவிர இடதுசாரிக் குழுக்களின் பிரதான இலக்காக இருந்து வந்திருக்கிறது.

இன்றும் கூட மேற்கு வங்கத்தில் கடந்த நான்கு வாரங்களில் எங்களின் 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் ரீதியாக அளித்து வரும் அன்பும் ஆதரவும்தான், மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் வங்கத்தில் புத்துணர்ச்சி பெற்று செயல்படக் காரணமாகும்.

நக்சலைட் இயக்கம், மேற்கு வங்கத்தில் உருவாகியிருந்தபோதிலும் அதனால் அங்கு நீடித்து வளர முடியாமல் போனது. காரணம், மேற்கு வங்கத்தில் அமைந்த இடது முன்னணி விவசாயிகள் ஆதரவுக் கொள்கைகளை மேற்கொண்டு, நிலச்சீர்திருத்தத்தைக் கொண்டுவந்து, நிலங்களை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ததால், அதி தீவிரக் குழுக்கள் அங்கு நீடித்திருக்க முடியவில்லை. இப்போது திரிணாமுல் காங்கிரஸ் அளித்து வரும் ஆதரவினைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் மீண்டும் வங்கத்திற்குள் தங்கள் தாக்குதலை எங்களுக்கு எதிராகத் தொடுத்திருக்கிறார்கள். இவ்வாறான தாக்குதல்களில் பெரும்பாலானவை மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் - ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் - என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகளாகும்.

எனவேதான், இவற்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்று அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கேட்டுக் கொள்கிறோம். மாவோயிஸ்ட் வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒரிசா ஆகிய மாநில அரசுகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திடவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

...

No comments: