Saturday, October 17, 2009

யாருடைய நலன்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் சேவகம் செய்கிறார்கள்?



ஒரிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் விழா நிகழ்ச்சியின்போது மூவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜார்கண்ட் மாநிலம், கிரிதி மாவட்டத்தில் ஈஸ்ரி என்னும் ஊரில் ஆஜ்மீர் செரீஃபுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 12 பக்தர்கள் மிக மோசமான முறையில் காயமடைந்திருக்கிறார்கள். பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் இருப்புப் பாதைகள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரிசா மாநிலத்தில் சிமிலிபால் புலிகள் வனச் சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றனர், வனத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் மற்றும் ஒயர்லஸ் தகவல் தொடர்பு சாதனங்களைப் கொள்ளையடித்திருக்கிறார்கள். லக்கி சரத் மாவட்டம் மற்றும் சத்ராவிலிருந்த நவாதி நடுநிலைப் பள்ளி ஆகியவை வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை சேதப்படுத்தி போக்குவரத்தைச் சீர்குலைத்திருக்கின்றனர். தொலைத்தகவல் தொடர்பு கோபுரங்களை (டெலிகம்யூனிகேசன் டவர்கள்) சேதப்படுத்திட வெடிகுண்டுகள் அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களில் நடைபெற்றுள்ள மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை மேலே குறிப்பிடப்பட்டவைகளாகும். இவ்வன்முறைச் சம்பவங்களில் அப்பாவிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட விட்டு வைக்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் மெடினாபூர் மாவட்டத்தில் இவர்களின் கொலைபாதகத் தாக்குதல்கள் தொடர்கின்றன. இதற்கு சமீபத்தில் ஜார்கண்ட் கட்சி உறுப்பினர் ஒருவர் பலியாகியிருக்கிறார். கடந்த சில வாரங்களில் மட்டும் இவர்களின் வன்முறைத் தாக்குதல்களின் விளைவாக மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுமார் 130 பேர் பலியாகியிருக்கின்றனர். அப்பாவி மக்களின் உடமைகளையும் உயிர்களையும் மார்க்சிஸ்ட் ஊழியர்கள் பாதுகாத்து நிற்பதால், இவர்கள் மார்க்சிஸ்ட் ஊழியர்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்கு பரவிக் கொண்டிருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டாலும் உண்மை நிலைமைகள் என்ன? மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ள பழங்குடியினரின் பகுதிகளில் அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பினும், பழங்குடியினர் பகுதிகள் சிலவற்றை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, நிர்வாகத்தை அங்கே அவர்கள் செய்து வருவதால், கணிசமான அளவிற்கு அது அவர்களுக்குப் பணபலத்தையும் அரசியல் அதிகாரத்தையும் அளித்திருக்கிறது. அவர்களின் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் இதுதான் உந்துசக்தியாக இருந்திருக்கிறது. மேற்கு வங்கம், லால்கார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் தலைவர், சத்ரஹார் மஹாதோ அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ள விவரங்களும் இதனை உறுதி செய்கின்றன. மேலும் மஹாதோ தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில், போலீஸ் அத்துமீறல்களுக்கு எதிரான மக்கள் குழு என்பது உள்ளூர் பழங்குடியின மக்களால் தன்னெழுச்சியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுவதும் பொய் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். மாவோயிஸ்ட்டுகள் அப்பகுதியை ‘‘விடுவிக்கப்பட்ட பகுதி’’யாக மாற்ற வேண்டும் என்பதற்காக, மாவோயிஸ்ட்டுகளால் உருவாக்கப்பட்ட முன்னணியே இது என்றும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். சல்போனி என்னுமிடத்தில் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அவர்களைப் படுகொலை செய்ய முயற்சித்த மாவோயிஸ்ட்டுகளைப் பாதுகாத்திட, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திட உருவாக்கப்பட்டதே இந்த ‘விடுவிக்கப்பட்ட பகுதி’யாகும். இதற்குமுன் அவர்கள் நந்திகிராமத்தில் கடைப்பிடித்த அதேபாணியில், இங்கும் இப்பகுதியை நோக்கி வரும் அனைத்து சாலைகளையும், தொலைத் தகவல் தொடர்பு சாதனங்களையும் துண்டித்து, அனைத்தையும் சீர்குலைத்தனர். அதே சமயத்தில் இதற்கு எதிராக நின்ற அனைவரையும், குறிப்பாக மார்க்சிஸ்ட்டுகளை, அழித்தொழித்திட அவர்கள் குறிவைத்தனர்.

மாவோயிஸ்ட்டுகள், திரிணாமுல் காங்கிரசிடமிருந்து முழுமையான ஆதரவும் பாதுகாப்பும் பெற்றுக் கொண்டிருப்பதையும் மஹாதோ வெளிப்படுத்தி இருக்கிறார். அண்டை கிராமங்கள் பலவற்றில் இத்தகைய ‘குழுக்களை’ அமைத்திட, திரிணாமல் காங்கிரஸ் ஆதரவு அவர்களுக்கு உதவி இருக்கிறது. மாவோயிஸ்ட்டுகள் தங்கள் கொலை பாதக நடவடிக்கைகளை விரிவாக்கிட, உள்ளூர் திரிணாமுல் காங்கிரசார் அடைக்கலமும் ஆதரவும் அளித்திருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரசார் தங்கள் அரசியலையும் தேர்தல் ஆதாயங்களையும் விரிவாக்கிடுவதற்காக, மார்க்சிஸ்ட்டு தலைவர்களையும், இடது முன்னணி ஆதரவுத் தளத்தையும் குறிவைத்துத் தாக்குவதற்கு, மாவோயிஸ்ட்டுகளுக்குத் தங்கள் கட்சியின் அரசியல் முகமூடியை அளித்தனர் என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. திரிணாமுல் காங்கிரசால் திரட்டப்பட்ட ‘அறிவுஜீவிகள்’ என்று அழைக்கப்பட்டவர்கள் தங்கள் நடவடிக்கைகளுக்காக அவர்களுக்கு அதீத நன்கொடைகளும் பிற உதவிகளும் செய்யப்பட்டன என்பதையும் மஹாதோ வெளிப்படுத்தி இருக்கிறார். மாவோயிஸ்ட் - திரிணாமுல் பிணைப்பு எந்த அளவிற்கு பின்னிப்பிணைந்திருந்தது என்பதை, மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவர், ஆனந்த் பசார் பத்திரிகா (அக்டோபர் 4) இதழுக்கு அளித்துள்ள நேர்காணல் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதில் அவர் நேரடியாகவே, ‘மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக மம்தா பானர்ஜியைப் பார்க்கவே’ தாங்கள் ஆசைப்படுவதாக அவர் வெளிப்படையாகவே பிரகடனம் செய்திருக்கிறார்.
எனவேதான், மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய - மாநில அரசுகளின் பாதுகாப்புப் படையினர் இணைந்து பணியில் ஈடுபட்டிருப்பதிலிருந்து மத்திய அரசின் பாதுகாப்புப்படையினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வலியுறுத்துவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. மாவோயிஸ்ட்டுகளின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவங்களை நியாயப்படுத்துவதோடு மட்டுமல்லாது திரிணாமுல் காங்கிரசார், ‘இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மாவோயிஸ்ட்டுகள் பெறும் அச்சுறுத்தலாக உள்ளனர்’ என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் செய்துள்ள மதிப்பீடுகளையும் மறுதலிக்கின்றனர். காபூலில் இந்தியத் தூதரகத்தின் மீது தாலிபான்கள் புரிந்திட்ட தாக்குதலில் 17 பேர் பலியானதைப் போலவே, மாவோயிஸ்ட்டுகள் கத்சிரோலியில் மேற்கொண்ட தாக்குதலிலும் 17 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆயினும் இத்தகைய வன்முறையாளர்களின் அனைத்து காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் செயல்களையும் நியாயப்படுத்திடும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் காங்கிரஸ் கட்சியும் நாட்டு மக்களுக்கு இது தொடர்பாக பதில் சொல்லியேயாக வேண்டும்.

அடித்தட்டு மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தாங்களே என்று மாவோயிஸ்ட்டுகள் கூறிவருவதும் தற்போது மீண்டும் ஒருமுறைப் பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. கத்சிரோலியில் நடைபெற்ற தேர்தலைப் புறக்கணிக்குமாறு மாவோயிஸ்ட்டுகள் விடுத்த அறைகூவலை மக்கள் புறந்தள்ளிவிட்டனர். இங்கே வாக்களித்தோரின் சதவீதம், நாட்டின் வணிகத் தலைநகரான மும்பையில் வாக்களித்தோரின் சதவீதத்தைவிட அதிகமானதாகும். இவ்வாறு நாட்டின் எந்தப் பகுதியிலும் அவர்களது ஆதிக்கம் என்பது மிரட்டலையும் அச்சுறுத்தலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறதேயொழிய, சுரண்டப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களின் ஆதரவு அவர்களுக்குக் கிடையாது என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது.

நாட்டில் சுரண்டப்படுவோர் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளுமேயாகும். வறுமை ஒழிப்பிற்கான நிலைமைகளை முற்றிலுமாக ஒழித்திடுவது என்பது, பெரும் திரளான மக்களை அரசியல் நடவடிக்கைகளில் திரட்டிப் போராட வைப்பதன் மூலமும், அதன் வழியாக இந்திய ஆளும் வர்க்கங்களை மாற்றியமைப்பதன் மூலமுமே சாத்தியமாகும். எனவேதான் மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டுள்ள அரசின் கொள்கைகளுக்கு எதிராகப் பெரும் திரளான மக்களைத் திரட்டிப் போராடுவதற்கான அறைகூவல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் விடுத்து வருகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதற்காக, ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக இத்தகைய வலுவான மக்கள் எழுச்சி, எதிர்ப்பு இயக்கங்களை நடத்தி வருகின்றன. இதன் பொருள், மக்கள் மத்தியில் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு, துன்ப துயரங்களைக் கொண்டு வந்துள்ள, ஏகாதிபத்திய உலகமயம் கட்டவிழ்த்துவிட்டுள்ள நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை முழுமையாக எதிர்த்திட வேண்டியது இன்றைய தேவையாகும். கடந்த பத்தாண்டுகளில் ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளுக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் நடத்தி வந்துள்ளன. இப்போராட்டங்கள் குறித்து மாவோயிஸ்ட்டுகள் என்றைக்காவது கவலைப்பட்டதுண்டா? தங்கள் கருத்துக்களை இவை தொடர்பாகக் கூறியதுண்டா?
மேலும், சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், அத்தகைய போராட்டங்களின் போது அவர்களின் வர்க்க ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய ஒற்றுமை ஏற்படாது தடுத்திட, மக்கள் மத்தியில் மதவெறி சக்திகள் மத உணர்வைத் தூண்டி அவர்களின்ஒற்றமையைச் சீர்குலைக்கின்றன. நாட்டு மக்களை புரட்சிகரமான முறையில் அணிவகுக்க வைத்திட வேண்டுமானால், இத்தகைய மதவெறி சக்திகளின் முயற்சிகள் பலவீனப்படுத்தப்பட்டு, முறியடிக்கப்பட்டாக வேண்டியது அவசியம். இவ்வாறு மதவெறியர்களுக்கு எதிரான போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள்? அவர்கள், எதிர்கால மேற்கு வங்க முதல்வராகக் கொண்டுவர முயலும் நபர், வாஜ்பாய் அரசாங்கத்தின்போது மத்திய அமைச்சராகப் பணியாற்றியவராவார். அப்போது அவர், குஜராத் மாநிலத்தில் அரசே முன்னின்று நடத்திய முஸ்லீம் மக்களுக்கு எதிரான மதவெறிக் கொலைகள் குறித்து வாயே திறக்காது மவுனியாக இருந்து, அதன் வாயிலாக அக்கொலைபாதக சம்பவங்களுக்கு ஆதரவாக இருந்தவர்தான். அதே நபர்தான் இப்போது மக்மோகன்சிங் தலைமையில் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்து வருகிறார். இத்தகைய சந்தர்ப்பவாதியைத்தான், அரசுக்கு எதிராக ‘வர்க்க தாக்குதல்’ தொடுப்பதாகக் கூறும் மாவோயிஸ்ட்டுகள் ஆதரிக்கிறார்கள். இவ்வாறான மாவோயிஸ்ட்டுகளின் ‘சந்தர்ப்பவாதத்தை ’ என்னென்பது?

1967இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினர் 1969இல் சாரு மஜும்தார் தலைமையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) என்ற பெயருடன் ஒரு கட்சியை ஆரம்பித்தனர். இவர்களும் அதற்கடுத்த முப்பதாண்டுகளில் எண்ணற்ற குழுக்களாகப் பிரிந்தனர், பிரிந்த குழுக்களில் சில மீண்டும் சேர்ந்தன. அத்தகைய குழுக்களில் பீகாரிலிருந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செண்டர் என்ற குழுவும், ஆந்திராவிலிருந்த மக்கள் யுத்தக் குழுவும் ஒன்றிணைந்து, 2004இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்று ஒரு கட்சியைத் துவங்கினர். அவ்வாறு இணைந்தவர்கள்தான்
இப்போதுள்ள மாவோயிஸ்ட்டுகள்.

இந்திய ஆளும் வர்க்கங்களின் குணம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்த மதிப்பீட்டை நிராகரித்துத்தான் மாவோயிஸ்ட்டுகள் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார்கள். அவர்களின் கூற்றின்படி, இந்திய ஆளும் வர்க்கங்கள் வெறும் ‘தரகு முதலாளிகள்’தான். அதாவது, இவர்கள் ஏகாதிபத்தியத்தின் வெறும் ஏஜண்டுகள்தானேயொழிய, இந்திய மக்கள் மத்தியில் இவர்களுக்கென்ற எவ்விதமான அர்த்தமுள்ள சமூக மற்றும் அரசியல் தளமும் கிடையாது. எனவே, நமக்குத் தேவையானதெல்லாம் இந்திய மக்களை ஆயுதபாணிகளாக்குவது மற்றும் புரட்சிகர விடுதலையை எய்திட ‘மக்கள் யுத்தத்தை’ நடத்துவது என்பதுதான். இவ்வாறு உருவான நக்சலைட் இயக்கத்தை முற்றிலுமாக நசுக்கிட அரசு நடவடிக்கைகளில் இறங்கியது.
கடந்த நாற்பதாண்டுகளின் அனுபவமானது, முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ இந்திய ஆளும் வர்க்கங்கள் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு வலுவான அரசியல் மற்றும் சமூக அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிந்துணர்வு சரியானது என மெய்ப்பிக்கப்பட்ட போதிலும் கூட, நக்சல்/மாவோயிஸ்ட்டுக் குழுக்கள் தங்களது முந்தைய மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இன்னமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, நாட்டில் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, நாட்டு மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் சேர்மானங்களை மாற்றியமைத்திடுவதற்காக, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு முறைகளில், செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் ஆதரித்து நிற்பதன் காரணமாகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளைத் தங்கள் பிரதான எதிரியாக மாவோயிஸ்ட்டுகள் கருதி, மார்க்சிஸ்ட்டுகளைக் குறி வைத்துத் தாக்கி வருகிறார்கள்.
துல்லியமான நிலைமைகளை மிகவும் துல்லியமாக ஆய்வு செய்வதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம் என்றார் லெனின். நிலைமைகள் சரியாகப் புரிந்துகொள்ளப் படாவிட்டால், பின் தவறான ஆய்வானது, ஒரு தவறான அரசியல் நிலைப்பாட்டுக்கு இட்டுச் செல்லும். மக்களைத் திரட்டும் பணி மற்றும் மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் சேர்மானங்களை மாற்றியமைத்தல் ஆகியவற்றை துப்பாக்கி முனையில் மக்களை மிரட்டிப் பணியவைப்பதன் மூலமாகக் கொண்டு வந்திட முடியாது. ‘‘நீரில் வாழும் மீன்களைப் போல மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட்டுகள் இரண்டறக் கலக்காவிட்டால் எந்த ஒரு புரட்சியும் வெற்றி பெற முடியாது’’ என்று நம் அனைவருக்குமே மாவோ கற்பித்திருக்கிறார். இதனை துப்பாக்கி முனையில் மிரட்டுவதன் மூலம் எந்தக் காலத்திலும் செய்திட முடியாது.
இவ்வாறாக மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து பார்க்கையில் இறுதியாக வரக்கூடிய முடிவு என்னவெனில், ஏகாதிபத்தியம் அல்லது வகுப்புவாதத்திற்கு எதிராக எவ்வித எதிர்ப்பையும் காட்டாது, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பிற்போக்கு சக்திகளுக்குத் துணை போகக் கூடிய நிலைக்குத்தான் சென்றிருக்கிறார்கள் என்பதேயாகும். அதன்மூலம் நாட்டில் வர்க்க சுரண்டல் என்னும் அமைப்பு தொடர்ந்திடவே அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 1967இல் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்றபோதிலிருந்தே, நாம் அவர்களிடம் ‘வன்முறை மற்றும் பயங்கரவாத அரசியலைக் கைவிடு’மாறும், ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திடுமாறும், புரட்சிகர மாற்றத்திற்காக மக்களை அணிதிரட்ட முன்வருமாறும் வலியுறுத்தி வந்திருக்கிறோம். மாவோ கூறியது என்ன என்பதை அவர்கள் மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்க்கட்டும்:
‘‘நூறு பூக்கள் மலரட்டும், ஆயிரம் சிந்தனைகள் முட்டிமோதட்டும்.’’

தமிழில்: ச.வீரமணி

No comments: