Saturday, April 25, 2009

டார்ஜிலிங் தொகுதியில் மக்கள் வாக்களித்திட உரிய பாதுகாப்பினை தேர்தல் ஆணையம் அளித்திட வேண்டும்:சீத்தாராம் யெச்சூரி கடிதம்

புதுடில்லி, ஏப். 25-
மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் தொகுதியில் மக்களவைத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற, அனைத்துப் பாதுகாப்பு உதவிகளையும், தேர்தல் ஆணையம் அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் தந்துள்ளார்.
அதன்பின் புதுடில்லியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:
‘‘இன்று நான் தேர்தல் ஆணையத்தை சந்தித்ததற்கான அடிப்படைப் பிரச்சனை டார்ஜிலிங் தொகுதியில் உள்ள நிலைமைகள் குறித்து விளக்குவதற்காகும். வெகு நீண்ட காலத்திற்குப் பின்னர் பொது மக்கள்பேரணி இப்போது அங்கே நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு நல்லம்சம். இதுநாள்வரை அப்பகுதியில் கூர்க்கா தனிநாடு கோரி இயக்கம் நடத்தி வந்த கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா இயக்கத்தினர் அப்பகுதியில் வேறெந்த அரசியல் கட்சிகளின் பேரணிகளும் நடத்திட முடியாதவாறு மக்களை அவர்கள் மிரட்டி வந்தனர்.அந்நிலை இன்று மாற்றப்பட்டிருப்பதற்கு முதற்கண் தேர்தல் ஆணையத்தினைப் பாராட்டுகிறேன்.
சமீபத்தில் நான் அங்கு தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டேன். அங்குள்ளமக்களைக் கலந்து பேசினேன். அவர்கள் அங்குள்ள பிரத்யேகமான சூழ்நிலைகளை என்னிடம் தெரிவித்தார்கள். பிரிவினை சக்திகள், தாங்கள் யாருக்கு வாக்களிக்கக் கோருகிறோமோ, அவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றும், தாங்கள் அளித்திடும் வாக்கு யாருக்கு அளித்தீர்கள் என்பதைத் தாங்கள் கண்டுபிடித்துவிடுவோம் என்றும் மீறி வேறெவர்க்கேனும் வாக்களித்திருந்தால் சும்மாவிடமாட்டோம் என்றும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள்.
இதனை அடுத்து தேர்தல் ஆணையம், மேற்படி மக்களுக்கு உரிய தைர்யத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மக்கள் மத்தியில், தாங்கள் அளிக்கும் வாக்கு ரகசியமானது என்றும் தாங்கள் எவருக்கு வாக்களித்தீர்கள் என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்று தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். மலைப்பகுதிகளில் மத்திய ரிசர்வ் படையை அனுப்பி, கொடிப் பேரணிகள் (கடயப அயசஉhநள) நடத்தி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்திட வேண்டும்.
அப்பகுதியில் இயங்கிவரும் கூர்க்கா படை (ழுடிசமாய டுயனே ஞநசளடிnநேட) என்னும் தனியார் ராணுவத்தினர், ராணுவத்தினரைப் போல் நடந்து கொண்டு மக்களை மிரட்டி வருகின்றனர். இத்தனியார் படை உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்.
மத்திய ரிசர்வ் படை தேர்தலுக்குப் பின்பும் சிறிது காலத்திற்கு அப்பகுதியில் நீட்டித்திருக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் கொடுத்திருக்கிறேன். அவர்கள் இதனை ஆய்வு செய்துபார்த்துவிட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தேர்தல் ஆணையர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
தற்போது டார்ஜிலிங் தொகுதியில் உள்ள நிலைமை குறித்து சற்றே விளக்கமாகக் கூறுமாறு செய்தியாளர்கள் கேட்டபோது, அங்கே பாஜக-வின் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் போட்டியிடுகிறார் என்றும், இவருக்கு கூர்கா தனிநாடு கோரும் இயக்கம் ஆதரவு அளிக்கிறது என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூர்க்கா தனிநாடு அளித்திடுவோம் என்று அவர்களிடம் ஜஸ்வந்த்சிங் உறுதி அளித்துவருகிறார் என்றும், ஆனால் அதே சமயத்தில் மேற்கு வங்க பாரதிய ஜனதாக் கட்சியானது, தாங்கள் பிரிவினைக்கு எதிராக இருப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறது என்றும் இவ்வாறு பாஜக ஒரு நிலை எடுத்திருக்கிறது, ஆனால் அதன் தலைவர் பிரிவினை சக்திகளுடன் இணைந்து நின்றுகொண்டு வேறு நிலை எடுத்திருக்கிறார் என்றும் சீத்தாராம் கூறினார்.
(ச.வீரமணி)

No comments: