Sunday, April 19, 2009

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப்பணம் -பாஜக கூறுவது மக்களை ஏமாற்றும் தந்திரமே-சீத்தாராம் யெச்சூரி சாடல்

புதுடில்லி, ஏப்ரல் 19-
ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் என்று பாஜக கூறுவது, தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்கான தந்திரமே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
தலைநகர் டில்லியில் சனிக்கிழமையன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
‘‘ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் மற்றும் கள்ளப்பணம் இருப்பதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் சம அளவில் பொறுப்பு உண்டு. இந்தியாவிலிருந்து இவ்வாறு பணம் கள்ளத்தனமாகக் கடத்திச் செல்லப்படுவதற்கு தேஜகூ அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளே காரணமாகும்.
இந்தியாவிலிருந்து இவ்வாறு இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பணத்தைக் கள்ளத்தனமாக எடுத்துச் செல்வதற்கு பாதை அமைத்துத்தந்த அதே பாஜக இப்போதுஅது தொடர்பாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறுவது என்னே விநோதம்?
பாஜக-வின் அறிக்கையின்படியே, இந்தியாவிலிருந்து அவர்கள் தலைமையில் தேஜகூ ஆட்சி நடைபெற்ற சமயத்தில்தான் சுமார் 55 பில்லியன் டாலர்கள் மதிப்பிலா இந்தியப் பணம் இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருக்கிறது.
பாஜக-வினரின் ஆட்சிக் காலத்தில்தான், மொரிசியஸ் மார்க்கம் வழியாக பார்ட்டிசிபேடரி நோட்ஸ் (Participatory Notes) என்னும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக அந்நிய முதலீட்டாளர்கள் ‘பினாமி’ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இவர்கள்தான் நீண்டகால மூலதன ஆதாய வரியை ஒழித்துக்கட்டினர். இவ்வாறு இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாகக் கறுப்புப் பணத்தை எடுத்துச் செல்ல அனைத்துவிதமான விதங்களிலும் அன்றைய தினம் உதவிவிட்டு இப்போது அதற்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாக ஸ்விஸ் வங்கிகளில் போடப்பட்டுள்ள பணம் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிப்ரவரியிலேயே ஐமுகூ அரசாங்கத்தை நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் அரசு அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. அந்தப் பணம் அனைத்தும் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியாவின் தொழில் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் அவை முதலீடு செய்யப்பட வேண்டும்.’’
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
----

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறிக்கை

புதுடில்லி, ஏப்ரல் 19-
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பல கோடி ரூபாய் கள்ளப்பணத்தையும், கறுப்புப் பணத்தையும் ரகசியமாகப் போட்டு வைத்திருப்பதற்கு பாஜக-வும் ஒரு காரணம் என்றும் எனவே அக்கட்சி அவ்வாறு இந்தியர்கள் பணத்தை இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல உடந்தையாக இருந்ததை பாஜக மறுத்திட முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் சனிக்கிழமையன்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
‘‘எல்.கே. அத்வானி மும்பையில் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஸ்விஸ் வங்கிகளிலும் மற்றும் உலகின் பல்வேறு இடங்களிலும் இந்தியர்கள் கள்ளத்தனமாக பல கோடி ரூபாய் கறுப்புப்பணத்தை போட்டு வைத்திருப்பதாகவும் அதனை மீள இந்தியாவிற்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஒரு படையை அமைத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அமெரிக்க, வாஷிங்டன்னைச் சேர்ந்த குளோபல் பைனான்சியல் இண்டக்ரிடி என்னும் அமைப்பின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பாஜக இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. ‘‘குளோபல் பைனான்சியல இண்டக்ரிடி அமைப்பின் ஆய்வானது, 2002க்கும் 2006க்கும் இடையிலான கால கட்டத்தில், ஒவ்வோராண்டும் சுமார் 27.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ரூபாய்கள் இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாகக் கொண்டுவரப் பட்டிருக்கிறது’’ என்று காட்டியிருக்கிறது. இது உண்மையானால், பாஜக ஆட்சியிலிருந்த 2002 முதல் 2004ஆம் ஆண்டுகளில் சுமார் 55 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரூபாய்கள் இந்தியாவிலிருந்து கள்ளததனமாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில் எல்.கே. அத்வானிதான் நாட்டின் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவர். அவ்வாறு அவர் அதிகாரத்திலிருந்த சமயத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக இந்தியர்கள் பணத்தைக் கொண்டுசெல்லாமல் தடுத்திட அவர் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்?
பாஜக-வின் அறிக்கையானது, சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் இவ்வாறு இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கிறது. பாஜக-வின் மதிப்பீட்டின்படியே பார்த்தாலும், சுமார் 164 பில்லியன் டாலர்கள் அல்லது நாட்டிலிருந்து கள்ளத்தனமாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பில் 30 சதவீதத் தொகையானது, பாஜக தலைமையிலான தேஜகூட்டணி ஆட்சியின்போதே நடைபெற்றிருக்கிறது.
பாஜக ஆட்சியிலிருந்த காலத்தில் இவ்வாறு இந்தியர்கள் கள்ளத்தனமாகக் கறுப்புப்பணத்தை நாட்டிலிருந்து கடத்திச் செல்வதைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. வரி ஏய்ப்பைத் தடுத்திடும் ஒப்பந்தம் அதாவது இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை கோரியபோதிலும், அதனை பாஜக செய்ய மறுத்துவிட்டது. நாட்டிலிருந்து மூலதன ஆதாய வரி மற்றும் பன்னாட்டு வர்த்தக வரிகள் கள்ளத்தனமாகக் கொண்டு செல்லப்படுவதற்கு மொரிசியஸ் மார்க்கம் பெருமளவில் உதவி வந்திருக்கிறது. 2000 ஏப்ரலிலிருந்து 2008 நவம்பர் வரை, இந்தியாவிற்குள் வந்துள்ள அந்நிய நேரடி முதலீட்டில் சுமார் 44 சதவீதம் மொரிசியஸ் வழியாகத்தான் வந்திருக்கிறது. அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ள அந்நிய நேரடி முதலீடு என்பது முறையே வெறும் 8 மற்றும் 7 சதவீதம்தான். இந்திய வரிவிதிப்பிலிருந்து சூழ்ச்சிசெய்து தப்பித்துக்கொள்வதற்காகவே, அந்நியக் கம்பெனிகள் மொரிசியஸ் மார்க்கத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அம்சத்தைக் குறித்து பாஜகவின் அறிக்கை மவுனம் சாதிக்கிறது.
பாஜக-வின் அறிக்கையானது பார்ட்டிசிபேடரி நோட்ஸ் என்னும் பங்கேற்பு ஆவணங்கள் குறித்தும் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது. ‘‘இதன் மூலம் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிகள், இந்தியாவிலும் ஒரு ஸ்விட்சர்லாந்து இருந்திட அனுமதிக்கிறது. அவ்வாறு இந்தியாவில் ஒரு குட்டி-ஸ்விட்சர்லாந்து இருந்திட அனுமதித்தபின், ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட எப்படி இந்தியா கோர முடியும்?’’ ஆயினும், இவ்வாறு அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, பணப்பட்டுவாடா ஏற்பாடுகள் மூலமாக பணத்தை முதலீடு செய்திட அனுமதித்ததும் இதே பாஜக தலைமையிலான தேஜகூ அரசுதான். இவ்வாறு நாட்டிலிருந்து சென்ற பணத்தில் 50 சதவீதம் அளவிற்கு தேஜகூ ஆட்சியின்போது சென்றிருக்கிறது. உண்மை இவ்வாறிருக்கையில், இத்தகு கொள்கைகளை இன்றைய தினம் பாஜக விமர்சிப்பதில் என்ன நியாயமிருக்கிறது?
பார்ட்டிசிபேடரி நோட்ஸ் என்னும் பங்கேற்பு ஆவணங்களைத் தடை செய்திட வேண்டும் என்றும், நீண்டகால மூலதான ஆதாய வரியை மீளவும் கொண்டுவர வேண்டும் என்றும் அதன்மூலம் ஊகவர்த்தகர்களை ஊக்குவிக்கக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ந்து கோரி வருகின்றன. ஆயினும் அதனை பாஜக தலைமையிலான தேஜகூ ஆட்சியும் செய்திடவில்லை. இப்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசும் ஊக வர்த்தக றிறுவனங்களைத் தாஜா செய்ய வேண்டுமென்பதற்காக இப்பிரச்சனைகள் தொடர்பாக எதுவும் செய்ய மறுத்துவருகிறது.
உலகப் பொருளாதார மந்தம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் செய்து வரும் வரி ஏய்ப்புகள் உலக அளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக உலகில் உள்ள பல அரசுகள் இவற்றின்மீது நடவடிக்கைள் எடுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. ஸ்விஸ் வங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்கள் குறித்து விவரங்ளைத் தெரிவிக்குமாறு பணிக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், இந்திய அரசாங்கமோ இதுவரை உலகப் பொருளாதார மந்தத்திற்கும் தனக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்பது போல வெளியில் காட்டிக்கொண்டிருக்கிறது.
பாஜக இப்போது இவ்வாறு கோருவதற்கு இரு மாதங்களுக்கு முன்னாலேயே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, பிப்ரவரி 23 அன்றே, ‘‘ஐமுகூ அரசாங்கமானது ஸ்விஸ் வங்கிகள் மற்றும் உலகத்தின் பல வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணம் குறித்து விவரங்களைக் கோர வேண்டும் என்று கோரியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் பரிவர்த்தனைகள் வரி ஏய்ப்பு மட்டுமல்ல மாறாக சட்டவிரோதமாக இந்தியப் பணத்தை வெளிநாட்டுக்குக் கடத்திச் சென்றிருப்பதுமாகும். உண்மையில் அரசு, கறுப்புப் பணத்தை வெளிக்கொணர வேண்டுமெனில், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமெனில், வெளிநாட்டில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணத்தை மீள இந்தியாவிற்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்’’ என்று கோரியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது:
* பங்கு பரிமாற்றத்தின் மீதான வரியை அதிகப்படுத்துதல் மற்றும் நீண்டகால முதலீட்டின் பெற்ற ஆதாயத்தின் மீதான வரியை மீண்டும் கொண்டு வருதல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஊக முதலீட்டின் ஆதாயத்தின் மீது வரி விதிக்கப்பட வேண்டும்.
* பெரும் நிறுவனங்களுக்கு மேலும் வரிச்சலுகைகள் அளிப்பதை நிறுத்த வேண்டும். கறுப்புப் பணததை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஸ்விஸ் வங்கி உள்ளிட்ட பல நாடுகளில் வரி ஏய்ப்பு செய்து சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணத்தை வெளிக்கொணர வேண்டும்.
* மொரிசியஸ் வரி ஏய்ப்பு மார்க்கத்தை அடைக்க வேண்டும். மொரிசியஸ் மற்றும் பிற நாடுகளுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்திட வேண்டும். அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பயன்படுத்தும் பங்கேற்பு ஆவணங்களைத் தடை செய்திட வேண்டும். நிதிச்சந்தை ஊக பேரத்தை மட்டுப்படுத்திட வேண்டும்.
* மூலதனக் கணக்கில் முழுமையான அந்நியச் செலாவணி மாற்றம் என்பதை நோக்கி எடுக்கப்படும் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும். உள்ளே வரும் மற்றும் வெளியேறும் நிதி மூலதனம் மீது முன்பிருந்து வந்ததபோல கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்திட வேண்டும்.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(ச.வீரமணி)

No comments: