Sunday, April 26, 2009

விலையிலா வாக்குகளால் விடையளிப்பர் தமிழ் மக்கள்! - உ.ரா.வரதராசன்

கம்யூனிசம் மட்டும் பிடிக்குமே தவிர
கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்கவே பிடிக்காதென
'அருள்வாக்கு' நல்கிய அறிவாலயத் தலைவர்
பெருந்தொலைவு சென்று சீனத்தையே குறி வைத்தார்!
உலகத்து நாடுகளெல்லாம் உருண்டோடி வந்து
இலங்கையில் போர் நிறுத்த ஆயத்தம் ஆயினராம்!
ஐநா சபைதனிலே அறிவிக்கை வெளியாகியதை
சீனா தலையிட்டுத் தடுத்ததோடு,
தீவிரவாதிகளைத் தீர்த்துக் கட்டு என்றதாம்!
கூவி அரற்றிக் கவிதை தீட்டுகையில்
இரட்டை வேடக் கம்யூனிஸ்ட்டுகளெனப்
பட்டம் சூட்டிப் பரிகசிக்கிறார்!
சர்வதேச அரங்கில் நடந்ததொன்று; இங்கு
தேர்தல் களத்தில் திரித்துரைப்பது வேறொன்று.
கலைஞருக்கு இது வாடிக்கை என்றாலும்,
தொலைதூரம் சென்று பதில் தேட வேண்டாம்.
தாயே என்று இவர் இறைஞ்சிய சோனியாவின்
மேவு புகழ் மைந்தன் ராகுல் பேச்சு இது:
`எந்தை ராஜீவை மட்டுமின்றி, அப்பாவி மக்களையும்
சிந்தையில் கருணை ஏதுமின்றிக் கொன்றிட்ட
பயங்கரவாதிகளே விடுதலைப்புலிகள்; அவர்களை நயந்து ஆதரிக்க நாம் தயாரில்லை.'
இளவரசரின் இந்தப் பேச்சு இனிக்கிறது; கண்கள் குளமாகப் பாசப் பெருக்கெடுத்து, பாராட்டும் தொடர்கிறது!
காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் அமெரிக்காவோடு
பாங்காகக் கூட்டு வைத்து, பயங்கரவாதத்தைப்
பார் முழுவதும் எதிர்த்துப் போர் நடத்த ஒப்பியதை
ஊர் அறியும்; உலகறியும். விடுதலைப்புலிகள் மீது
ஈராண்டுக்கு ஒரு முறை தடையாணை விதிக்க, பாரத நாடாளும் அமைச்சரவையில் கைதூக்கி
ஆதரவு அளித்தனரே அறிவாலய உடன்பிறப்புகள்;
பாதகமல்ல அது; 'இடதுசாரிகள் தமிழருக்கு
சாதகமாய் முடிவெடுக்கக் குரல் கொடுப்பதுதான் தீது', என
முத்தமிழ் அறிஞர் கவிதை தீட்டி வித்தகம் காட்டினால் கைகொட்டிச் சிரியாரோ? பொய்யை அடுக்கியே பொழிப்புரை எழுதும் கலைஞர் பெருமானே, உமது பழிப்புரைக்கு
விலையிலா வாக்குகளால் விடையளிப்பர் தமிழ் மக்கள்!

1 comment:

Anonymous said...

அது தானே , அந்த வீரமணீ இப்படியா எழுதுவார்?