Monday, March 17, 2008

பொது விநியோக முறையைச் சீர்குலைத்திடும் மத்திய அரசு:சீத்தாராம் யெச்சூரி

புதுடில்லி, மார்ச் 17-
பொது விநியோக முறையை சீர்குலைத்திடும் மத்திய அரசைக் கண்டித்து, செவ்வாய் அன்று காலை மேற்கு வங்கம் மற்றும் கேரள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:மத்திய அரசு, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வறுமைக் கோட்டுக்கு மேல் என்று மக்களை மோசடியாகப் பிரித்து, மாநிலங்களுக்கு பொது விநியோக முறையில் அனுப்பி வந்த அத்தியாவசியப் பொருள்களின் அளவை கடுமையாகக் குறைத்து விட்டது. கேரளாவிற்கு அனுப்பி வந்த அரிசியின் அளவில் 80 சதவீதமும், மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வந்த கோதுமையின் அளவில் 50 சதவீதமும் இவ்வாறு குறைத்து விட்டது. இதனால் அம்மாநிலங்களில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த பொது விநியோக முறை சீர்குலைந்து போயுள்ளது. பொது விநியோக முறையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களைத் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி செவ்வாய் அன்று காலை நாடாளுமன்ற வீதியில் மேற்கு வங்கம், கேரளம் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களின் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது.
அடுத்ததாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்திய அரசு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ள யுஎஸ் ட்ரென்டன் என்னும் போர்க்கப்பல் குறித்து மத்திய தணிக்கை அதிகாரி கடுமையாக அறிக்கை அளித்துள்ளது குறித்து எழுப்பப்பட்டது. இந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையாலேயே காலாவதியாகிப்போன ஒன்று என்று ஒதுக்கித்தள்ளப்பட்டதாகும். அங்கேயே இக்கப்பலில் விபத்தில் பல கடற்படை வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கப்பலை, அதிக விலை கொடுத்து இந்திய அரசு வாங்க வேண்டிய அவசியம் என்று என்று மத்திய தணிக்கை அதிகாரி வினா எழுப்பியிருக்கிறார். அதையேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எழுப்புகிறது. அதுமட்டுமல்ல, இந்தக் கப்பலை நாம் நியாயமான காரியங்களுக்குத்தான் பயன்படுத்துகிறோமா என்று அமெரிக்க எந்த நேரத்திலும் வந்து சோதனை செய்யுமாம். இவ்வாறு நம் நாட்டின் இறையாண்மையை அடகுவைத்து விட்டு இந்தக் கப்பலை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றுதான் கேட்க விரும்புகிறோம்.எனவே இப்பிரச்சனையை இரு அவைகளிலும் நாங்கள் எழுப்பினோம்.
அடுத்ததாக, இரு அவைகளிலும் நாங்கள் எழுப்பிய பிரச்சனை, மிகவும் லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை அரசு முடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதைக் குறித்ததாகும். பிஎஸ்என்எல் கடந்த ஆறு மாத காலமாக தன்னிடம் மொபைல் போன் கேட்டு பதிவு செய்து வைத்துள்ள 4 கோடியே 55 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு கொடுக்க முடியாத நிலையினை அரசு ஏற்படுத்தி இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து 2 கோடியே 25 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் இன்று வரை 1 கோடியே 35 லட்சம் இணைப்புகள்தான் தர முடிந்திருக்கிறது. தற்சமயம் புதிதாக எந்த இணைப்பும் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் தர முடியவில்லை. இதனால் நாட்டில் முதல் நிலையில் இருந்த இந்நிறுவனம் இன்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. எனவே இப்பிரச்சனையில் அரசு உடனடியாகத் தலையிட்டு நிலைமைகளைச் சீர் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.பிஎஸ்என்எல் பிரச்சனையில் திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.பொது விநியோக முறையை மாநில அரசுகள் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாததினால்தான் அத்தியாவசியப் பொருள்களின் அளவைக் குறைத்திருக்கிறோம் என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டிருப்பதுபோல் தெரிகிறதே என்று ஒரு செய்தியாளர் வினவியபோது, ‘‘நாட்டிலேயே தென் மாநிலங்கள் நான்கும், மேற்கு வங்கமும் திரிபுராவும் பொது விநியோக முறையில் சிறந்து விளங்குவதாக அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றும், ‘‘வறுமைக்கோட்டுக்குக் கீழ் / வறுமைக்கோட்டுக்கு மேல் என்கிற மோசடியான புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தான் அரசு இவ்வாறு அத்தியாவசியப் பொருள்களின் அளவைக் குறைத்திருக்கிறது’’ என்றும், அரசின் அளவுகோலின்படி ‘வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள்’ மிகவும் குறைவு என்றும், ஆனால் தென் மாநிலங்களிலும், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவிலும் பொது விநியோக முறையில் ‘வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கும்’ அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன என்றும் எனவேதான் பிரச்சனை எழுந்துள்ளது என்றும் விளக்கினார்.

No comments: