Thursday, March 13, 2008

பாசிஸ்ட்டுகளின் கோழைத்தனம்



ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவன் மீது 2008 மார்ச் 9 அன்று திடீரென்று தாக்குதலைத் தொடுத்ததன் மூலம், தங்களுடைய சுயமான பாசிஸ்ட் குணத்தை தோலுரித்துக் காட்டிவிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், மத்திய உள்துறை அமைச்சர் அளித்திட்ட அறிக்கையின்படி, தாக்குதல் புரிந்தோர் ஏகே கோபாலன் பவனுக்கு அருகில் உள்ள இந்து மகா சபையில், காவல்துறையினரிடம் எவ்வித அனுமதி வாங்காமலும், அல்லது தகவல் தராமலும் கூடியுள்ளனர். அவர்களில் ஒருசிலர் ஏகேஜி பவனுக்கு ஆர்ப்பாட்டம் செய்திட செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் விவாதித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில், ஒரு கும்பல் தங்களுடைய சொந்தக் கார்களில் கற்கள், செங்கற்கள் முதலானவற்றை நிரப்பிக்கொண்டு, ஏகேஜி பவனை நோக்கி வந்து, திடீரென்று தாக்குதலைத் தொடங்கியுள்ளது, கற்களை அலுவலகம் நோக்கி வீசத் தொடங்கியது. ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மத்தியக் குழு அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்ததை மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் தடுத்தபோது, அவர்களைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் ஹரிசிங் காங், வி. சீனிவாசராவ், ஜோகேந்திர சர்மா, குமார் சிரால்கர், புஷ்பிந்தர் கிரேவால் ஆகிய ஐந்து மத்தியக் குழு உறுப்பினர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதலில் சொத்துக்களுக்கு ஏராளமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களையும் அடித்து நொறுக்கினார்கள்.

இத்தாக்குதலானது முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று என்பதும், பாஜகவினர் தனியார் கார்களில் கற்கள் மற்றும் செங்கற்களுடன் மத்தியக்குழு அலுவலகத்தை அடித்து நொறுக்கவும் தடுக்க வரும் தோழர்களைத் தாக்கிடவும் முன்னேற்பாட்டுடன் வந்திருக்கிறார்கள் என்பதும் தெளிவுபடத் தெரிகிறது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 14 பேர்களில், இருவர் பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆறு பேர் தற்போது நகர்மன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள். ஏகேஜி பவனுக்குப் பக்கத்தில் உள்ள இந்து மகா சபாவில் ஒன்றுகூடி, டில்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள பாஜக-வின் தலைவராலும், டில்லி மேயராலும் தலைமைதாங்கி இவ் வன்முறைக் கும்பல் வந்திருக்கிறது.அதே இரவு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த குண்டர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில செயலாளர், விஜேகே நாயரின் வீட்டிற்குள் வலுவந்தமாக நுழைந்திருக்கின்றனர். அங்கிருந்த அவரது மனைவியை அச்சுறுத்தி, வீட்டையே அடித்து நொறுக்கி நிர்மூல்யமாக்கி இருக்கின்றனர். மறுநாள், ஆர்எஸ்எஸ் குண்டர்கள் டேராடூன், நாகர்கோவில், ஆகிய இடங்களில் உள்ள கட்சியின் அலுவலகங்களுக்குச் சென்று தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் சுந்தரய்யா விஞ்ஞான் கேந்திரத்தையும் சேதப்படுத்தி, தீ வைத்துக் கொளுத்திட முயற்சித்திருக்கின்றனர்.

இவ்வாறு பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, கொலைவெறித்தாண்டவமாட முன்வந்திருக்கிறது.கம்யூனிச எதிர்ப்பு தாக்குதல்களை மூடிமறைப்பதற்காக ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் வெளியில் சொல்லும் காரணம், கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் தற்சமயம் நடந்து வரும் நிகழ்ச்சிப் போக்குகளாகும். கேரளாவில் இடது முன்னணி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கண்ணூரில் கொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் எத்தனை பேர் என்பதையும் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் எவை எவை என்பதையும் தனியே பட்டியலிடப்பட்டு, ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யின் இதே இதழில் வேறொரு பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் தலைமையில் வன்முறைச் சம்பவங்கள் நiபெறுவது கண்ணூருக்குப் புதிய செய்தி ஒன்றுமல்ல. ஆயினும், சென்ற சட்டமன்றத் தேர்தலில், மதவெறி சக்திகள் மீண்டும் ஒருமுறை சட்டமன்றத்திற்குள் நுழைய மேற்கண்ட முயற்சிகள் படுதோல்வி அடைந்ததை அடுத்து, (சுதந்திரத்திற்குப்பின் கேரள மாநிலம் உருவானதிலிருந்து, சட்டமன்றத்திற்குள் ஓரிடத்தைக்கூட அவர்களால் பிடிக்க முடியவில்லை) அவர்கள் தங்களுடைய கம்யூனிச எதிர்ப்பு தாக்குதல்களை, மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராகத் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். சமீப காலங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை வேகமாகச் சரிந்து கொண்டு வருகிறது. இவ்வாறு அரசியலில் தாங்கள் வெகு வேகமாக ஓரங்கட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள விரக்தியின் விளைவாகவே, வழக்கமான தங்களுடைய கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கையை, மேலும் தீவிரமாக்கி கொலைவெறித் தாண்டவமாட முன்வந்திருக்கின்றனர்.

மார்க்சிஸ்ட்டுகள் மீது இவ்வாறு வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம், அவர்களை அச்சுறுத்தி, மிரட்டி பணியவைத்துவிடலாம் என்று ஆர்எஸ்எஸ் கருதுமானால், அதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறில்லை. பாசிஸ்ட்டுகளின் வன்முறை மற்றும் தாக்குதல்களை எதிர்த்து முறியடித்துத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. 1972க்கும் 1977க்கும் இடையில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஏவப்பட்ட அரைப் பாசிசத் தாக்குதல்களின்போது, நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தோழர்களைப் பலிகொடுத்துள்ளோம். அந்தத் தாக்குதல்களை முறியடித்து மீண்டதோடு மட்டுமல்லாமல், முன்பிருந்ததை விட மேலும் பலமடங்கு வலுவடைந்து, அதன்பின் மாநிலத்தில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் மாபெரும் வெற்றியினை மார்க்சிஸ்ட் கட்சி ஈட்டி வந்திருக்கிறது. உலக அளவிலும், கம்யூனிசத்தை அழித்திடப்போகிறோம் என்று ஓலமிட்டுக்கொண்டு, சோவியத் ஒன்றியத்திற்கெதிராக, ஏவப்பட்ட ஹிட்லரின் பாசிசத் தாக்குதலை, கம்யூனிஸ்ட் செம்படை முறியடித்தது மட்டுமல்ல, ஹிட்லரின் ரெய்ச்ஸ்டாக் கோட்டையின் மீது செங்கொடியை உயர்த்தி உலகையே விடுவித்தது.

அதேபோன்று, இந்தியாவில், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான தாக்குதலும், முறியடிக்கப்படும். இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்படுத்தப்படக்கூடிய வகையில், ஆர்எஸ்எஸ்/பாஜக பாசிச மதவெறிக் கும்பல், அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்படும்.

தமிழில்: ச. வீரமணி

No comments: