Monday, March 3, 2008

ஹைடு சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்பதை ஏற்பதற்கில்லை--சீத்தாராம் யெச்சூரி

புதுடில்லி, மார்ச் 3-

இந்திய அமெரிக்க ராணுவம் சாரா அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்க இயற்றியுள்ள ஹைடு சட்டம் இந்தியாவுக்குப் பொருந்தாது என்கிற இந்திய அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கூற்றை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்களன்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. அடுத்து, இன்று மக்களவையில் அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன்னிச்சையாக ஓர் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு பத்திகள் இருக்கின்றன. அதில் அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கங்களிலும் அரசின் நிலைபாட்டிலும் புதிதாக ஒன்றுமில்லை. அரசாங்கம் அதன் நிலைபாட்டினைத் தெரிவித்திருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும் தங்களுடைய சொந்த நிலைபாட்டினை இங்கே திரும்பவும் வலியுறுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை, சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் நடைபெறும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே ஓர் எழுத்துபூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அதன்படி, அரசாங்கம் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம். பேச்சுவார்த்தைகளின் முடிவை ஐமுகூ அரசாங்கம் - இடதுசாரிக் கட்சிகளின் குழுவில் சமர்ப்பித்து, அக்குழு எடுத்திடும் முடிவின் அடிப்படையிலேயே மேல்நடவடிக்கையை அரசு தொடர வேண்டும். எனவே, அவ்வாறு ஐமுகூ அரசு - இடதுசாரிக் கட்சிகளின் குழுவின் முடிவு எதுவும் எடுக்காது, அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தொடரும் என்று நாங்கள் கருதவில்லை. இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருக்கின்றன.

அதேபோன்று அமைச்சர் ஹைடு சட்டம் குறித்து விளக்கியுள்ள பத்தியைப் பொறுத்தவரை, ‘ஹைடு சட்டத்தின் தாக்கங்கள் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்கிற அரசின் புரிதலோடு நாங்கள் ஒத்துக்போகவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பிரணாப்முகர்ஜி அந்த அறிக்கையில், ‘‘ஹைடு சட்டம் அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கும் நாடாளுமன்ற அமைப்புகளுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஷரத்து’’ என்று கூறியிருக்கிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அமெரிக்க நாடாளுமன்றமானது அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்தியாவுடன் ராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு, ஒரு சில நிபந்தனைகளுடன், அதிகாரம் அளித்திருக்கிறது. எனவேதான் அந்த நிபந்தனைகள் இந்தியாவைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் கூறுகிறோம். அந்த நிபந்தனைகள் நம் நாட்டின் அயல்துறைக் கொள்கையில் தலையிடுகின்றன, நம் நாட்டின் இறையாண்மையில் தலையிடுகின்றன, இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்திலும் தலையிடுகின்றன. அந்த நிபந்தனைகள் குறித்து கடந்த காலங்களில் நாம் விரிவாக விவாதித்திருக்கிறோம். எனவேதான் அந்த நிபந்தனைகள் இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல என்றும், ஹைடு சட்டம் இந்தியாவைக் கடுமையாகப் பாதிக்கும் ஒரு சட்டம் என்று நாம் கூறுகிறோம். இத்தகைய நிபந்தனைகளை உள்ளடக்கிய ஹைடு சட்டத்துடன் போடப்படும் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும், அது நம் நாட்டின் இறையாண்மை மீது ஏவப்படும் நேரடித் தாக்குதலாகும்.

நம்மைப் பொறுத்தவரை, இந்தியாவின் அயல்துறைக் கொள்கைக்கு ஹைடு சட்டம் ஆபத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவின் இறையாண்மைக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கிறது, மேலும் இந்தியாவை அமெரிக்காவுடனான ஒரு ராணுவக் கூட்டாளியாக மாற்றுவதற்கும் முயற்சிக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ற வகையில் மாற்ற முயற்சிக்கிறது.

இந்திய அமெரிக்க ராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அரசாங்கம் இடதுசாரிக் கட்சிகளுடன் ஏற்படும் கருத்தொற்றுமை அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார். இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை இப்பிரச்சனையில் அரசாங்கத்துடன் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்திட விரும்புகிறோம்.

தற்சமயம் அமெரிக்காவில் ஜனாதிபதிக்கான தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்றுதான் நாம் நம் அரசாங்கத்தைக் கேட்கிறோம். எனவே, இந்திய அரசு இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் நடைமுறைப்படுத்தும் பணியைத் தொடரக்கூடாது என்கிற எங்கள் நிலைபாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(தொகுப்பு: ச.வீரமணி)

No comments: