Monday, January 14, 2008

பொங்குக பொங்கல் - பொங்கல் பொங்குக

பொங்குக பொங்கல் தங்குக இன்பம்

அறுவடை திருநாள் என்பது உலகின் பல பகுதி களில் பல்வேறு வடிவங்களில் காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் கூறும் நல்லு லகில் பொங்கல் திருநாள் தை முதல்நாளில் அறு வடை நாளாக கொண்டாடப்படுகிறது.
இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையிலான ஆனந்தமான உறவின் வெளிப்பாடு இது. வேளாண் தொழில் செய்ய துவங்கிய பிறகு அந்த பயிர் வளர்க்க துணை செய்யும் மண்ணுக்கும், ஒளிக்கும், கால் நடைகளுக்கும் நன்றி தெரிவிக் கும் நாள் தான் இது. சாதி, சமய வேறுபாடுகளை கடந்து ஒற்றுமை யின், உழைப்பின் பெருமையை வெளிப்படுத்தும் திருநாள் தான் பொங்கல் திருநாள் ஆகும். புராண பண்டிதர்கள் பொங்கல் திருநாளுக்கும் கூட இந்திரன் சூரிய கடவுள் என்று பல்வேறு புராண பூச்சுகளை பூசினாலும் கூட எளிய விவசாயிகள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் கடப்பாட்டின் வெளிப்பாடாகவே பொங்கல் திருநாளை கருதுகின்றனர். உலகின் மிகப் பெரிய விவசாய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்றைக்கும் கூட பெரும் பகுதி மக்கள் விவசாயத்தை தங்கள் வாழ்வாதார மாக கொண்டுள்ளனர்.
பொங்கல் திருநாள் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் தொன் மையான மொழிகளில் ஒன்றாக நம்முடைய தாய்மொழியாம் தமிழ் இருக்கிறது என்பது மட்டுமின்றி, இன்று வரை அது உயிருள்ள மொழி யாகவும் இருக்கிறது என்பது பெருமிதம் அளிக்கக் கூடியது. தமிழ் தோன்றிய காலத்தில் தோன்றிய பல மொழிகள் காலப் புயலில் அழிந்துவிட்டன. ஆனால், செம்மொழி என்ற தகுதியினைப் பெற்று செம்மாந்து நிற்கும் தமிழ் மொழி இன்றுவரை கோடானுகோடி தமிழர்களின் வாழ்விலும், பண்பாட்டிலும் பின்னிப்பிணைந்த மொழியாகவும் மின்னுகிறது.முன்னை பழமைக்கும், பின்னை புதுமைக்கும் ஈடுகொடுத்து நிற்கும் தமிழ் மொழி சிறப்பு பெற செய்ய வேண்டிய பணிகள் இன்னமும் ஏராளமாக உள்ளன.
அன்னைத் தமிழ் ஆட்சித் தமிழாக, பயிற்றுமொழி தமிழாக, நீதித்துறை மொழியாக மாறவேண்டிய அவசியம் உள்ளது. துவக்க கல்வி முதல், தொழில் நுட்பக் கல்வி வரை சமச்சீரான முறையில் தமிழ்வழிக் கல்வியை வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டளையாகும்.தமிழின் வளர்ச்சிக்கு இருக்கும் தடைகளை தகர்க்கவும், உழவர் வாழ்வில் இடர்பாடுகளை நொறுக்கவும் இந்த பொங்கல் திருநாளில் உறுதியேற்போம். எல்லோரும் சமம் என்ற நிலை நோக்கி அடி எடுத்து வைப்போம்.

No comments: