Thursday, January 31, 2008

2007க்கான மேன் புக்கர் சர்வதேச விருது பெற்ற: சினுவா அச்சிபி -சிவ.வீர.வியட்நாம்

“சமூக மறுமலர்ச்சியும் மக்களுக்கு கல்வி புகட்டுவதும் ஒரு எழுத்தாளர் கண்டிப்பாக செய்ய வேண்டிய கடமை. இதிலிருந்து ஒரு எழுத்தாளர் தப்பித்தால் அவரை மன்னிக்க முடியாது.”
- (சினுவா அச்சிபி)

நைஜுரிய நாவலாசிரியர் சினுவா அச்சிபிக்கு 2007க்கான மேன் புக்கர் சர்வதேச விருது கிடைத்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பல சிறப்பான இலக்கியங்களைப் படைத்த ஆசிரியருக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது. 76 வயதான சினுவா அச்சிபி நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், மற்றும் கவிதைகள் உட்பட 20 புத்தகங்களை எழுதியுள்ளார். 1958ல் வெளிவந்த “திங்ஸ் ஃபால் அபார்ட்” (Things Fall Apart) நாவல், ஆப்பிரிக்க இலக்கியம் என்றால் என்னவென்பதை உலக மக்களிடையே பறைசாற்றிய நூலாகும். ஆப்பிரிக்க சமூகத்தில் காலனியாதிக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள், ஆப்பிரிக்காவையும் ஆப்பிரிக்க மக்களையும் மேற்கத்திய நாடுகள் எப்படி சித்தரிக்கின்றன, ஆப்பிரிக்க அரசியல், கலாச்சாரம், வாழ்க்கைமுறை, தனித்துவம் - இவற்றை மையப்படுத்தியே இவர் தனது நூல்களைப் படைத்துள்ளார்.சினுவா அச்சிபியைப் பொறுத்தவரை எழுத்திற்கும் சமூகமாற்றத்திற்கும் ஒரு உயிரோட்டமான தொடர்பு உள்ளது என்றும், எனவே சமூக மாற்றம் என்னும் மகத்தான பணியில் தன்னுடைய பங்கு என்னவென்பதை ஒவ்வொரு எழுத்தாளனும் முடிவு செய்யவேண்டும் என்றும் கருதினார். கலை எப்பொழுதுமே மனித குலத்திற்கு சேவை புரியவேண்டும் என்று கூறும் சினுவா அச்சிபி, கலை கலைக்காகவே என்ற சிந்தனையை புறக்கணித்தவர். எந்தவொரு கதையும் அர்த்தமுடையதாகவும் ஒரு குறிக்கோள் உடையதாகவும் மக்களுக்கு பணிபுரிவதாகவும் இருக்கவேண்டும் என்பார்.

“சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும் வரை சமூகப்பணியை 15 ஆண்டுகளோ அல்லது 50 ஆண்டுகளோ தள்ளிப்போடலாம் என்று யாரும் காத்திருக்கமுடியாது, காத்திருக்கக்கூடாது. தற்கால சூழ்நிலை ஒவ்வொருவரையும் எங்கு எப்படி இட்டுச் செல்லும் என யாராலும் சொல்லமுடியாது. செய்ய வேண்டியதை நம்மால் முடிந்தவரை இந்த சமூகத்திற்கு உடனடியாகச் செய்துவிடவேண்டும்” என்கிறார் சினுவா அச்சிபி.

சினுவா அச்சிபியின் எழுத்துக்கள் ஆப்பிரிக்காவையும் அதன் கலாச்சாரத்தையும் சிறப்பித்தாலும் காலனியாதிக்கத்திற்கு முந்தைய வாழ்க்கைநிலை குறித்து அவர் அதிகமாக ஒன்றும் சொல்லவில்லை. ஆயினும் கடந்த கால ஆப்பிரிக்க சமுதாயத்துடன் தற்போதைய நவீன சமுதாயத்தையும் மிக அற்புதமாக இணைத்திருக்கிறார்.

‘‘உலகில் உள்ள அனைத்தும் மாறக்கூடியதே. இப்பொழுது இருக்கும் உலகம் இன்னும் பத்தாண்டுகள் கழித்து நிறையவே மாறியிருக்கும்.” என்று கூறும் சினுவா அச்சிபி, ஆயினும் ‘‘அதற்காக பாரம்பரியத்தை தூக்கியெறிய முடியாது. காலத்திற்கேற்ப நம்மை நாம் மாற்றம் செய்து கொண்டாலும் பாரம்பரிய பெருமையையும் கட்டிகாக்கவேண்டும்.’’ என்கிறார்.

மேற்கத்திய இலக்கியங்களில் அரசியல் பேசும் இலக்கியங்களை நல்ல இலக்கியம் என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால், சினுவா அச்சிபி, அரசியலுக்கும் இலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று கருதினார். நைஜுரியாவின் பிரச்சனை (The Trouble with Nigeria) என்ற தனது புத்தகத்தில் தன்னுடைய அரசியல் கருத்துகளை அவர் விளக்கியுள்ளார், “மக்களாட்சி என்பது சிறந்த தத்துவம். ஆனால் மக்கள் வறுமையால் வாடும்போது தங்களை நன்றாக ஆளுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் திறமை அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. பசியின் காரணமாக, ஒரு சில டாலர்களுக்காக தங்கள் வாக்குரிமையையே அவர்கள் விற்றுவிடுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் இதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே அவர்கள் நாட்டின் பணத்தை கொள்ளையடித்து தேர்தல் வரும் நேரங்களில் பணத்தை வாரி இறைக்கிறார்கள். இந்நிலை ஒரு நாட்டிற்கு மட்டும் சொந்தமில்லை, எங்கெல்லாம் வறுமை தாண்டவமாடுகிறதோ அந்த நாடுகளில் உள்ள தேர்தல்களில் இப்படி நடப்பது சர்வ சாதாரணம். மக்களாட்சியின் உண்மையான பலனை அனுபவிக்கவேண்டுமென்றால் வறுமை ஒழிய வேண்டும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆப்பிரிக்க இலக்கியம் என்றாலே ஜோசப் கான்ராட் எழுதிய “இருட்டின் இதயம்” (Heart of Darkness) என்ற புத்தகமும் ஜாய்ஸ் கேரி எழுதிய “மிஸ்டர் ஜான்சன்” என்ற புத்தகமும் உலக வாசகர்களுக்குத் தெரியும். ஜோசப் கான்ராட் எழுதிய “இருட்டின் இதயம்” ஆப்பிரிக்காவைப் பற்றி கூறுகையில், “ஆப்பிரிக்கர்கள் வாழும் பகுதியைப் பார்த்தால் ஏதோ புதிய கிரகத்திற்கு வந்துவிட்டோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இங்குள்ள மனிதர்கள் கறுப்பாக, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த காட்டு மிராண்டிகளை ஒத்துள்ளனர். பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக உள்ளனர். இவர்களை வழிக்கு கொண்டு வருவதற்குள் ஐரோப்பிய பிரதிநிதிகள் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. இதில் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க விஷயம் என்னவென்றால் இவர்களும் நம்மை போன்ற மனிதர்கள்தான். ஆனால் நாம் இவர்களிடமிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறோம். எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது,” என்கிறார். இப்படிப்பட்ட புத்தகங்களின் கதைக்கரு - ஆப்பிரிக்க மக்களை அடிமைப்படுத்துவதில் ஐரோப்பியர்கள் காட்டிய சாதனை, அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் எவ்வாறெல்லாம் முட்டாள்தனமான கட்டளைகளுக்கு கூட அடிபடிணிந்தார்கள், தங்களுடைய ஐரோப்பிய முதலாளிகளைக் கண்டு எப்படியெல்லாம் பிரமித்தார்கள், ஐரோப்பிய முதலாளிகளின் கைகளால் சுடப்பட்டு சாவதைக்கூட சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள் என்பவைகளைச் சுற்றித்தான் இருக்கும்.சினுவா அச்சிபியும் இப்படிபட்ட கதைகளைத்தான் ஆப்பிரிக்க இலக்கியம் என்று தனது சிறுவயதில் படித்தார். ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கைமுறையை எந்தஅளவிற்கு ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர், ஆப்பிரிக்க மக்களின் பிரச்சனையை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய இலக்கியங்களும் ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கைமுறையை கேலிச்சித்திரமாக்குகின்றன என்பதை எண்ணி மனம் நொந்தார். மேற்கத்திய இலக்கியங்கள் தங்கள் வாழ்க்கைமுறையை மிகவும் கேவலப்படுத்திவிட்டன என்று வருத்தப்பட்டார். இந்த வருத்தம்தான் அவரை தன்னுடைய 28ம் வயதிலேயே திங்ஸ் ஃபால் அபார்ட் என்ற காவியத்தை எழுத வைத்தது. திங்ஸ் ஃபால் அபார்ட் இதுவரை ஒரு கோடிப் பிரதிகள் உலக அளவில் விற்பனையாகியிருக்கின்றன, 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிரிக்க ஆசிரியர்களில் சினுவா அச்சிபி நூல்கள்தான் உலக அளவில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை கொண்டவைகளாகும். “மூன்றாம் உலக நாடுகள்” குறித்த - தேசியவாதம், பின்காலனியாதிக்கம், இனஅடையாளங்கள், பெண்ணுரிமை சார்ந்த பிரச்சனைகள், உலகமய சூழலில் சுதந்திரம் - போன்ற பல்வேறு கருத்துகளை இந்த புத்தகம் முன்னிறுத்தியது. இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இவையனைத்தையும் பற்றி வகுப்பெடுக்காமல் இந்த புத்தகத்தின் கதையமைப்பே இந்த பிரச்சனைகளை வாசகர்களுக்கு உணர்த்தியதுதான் . பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆசிரியர் க்வாமே அந்தோணி அப்பையா, “இந்த பூமியில் ஆங்கில பேசக்கூடிய அல்லது ஆங்கிலம் பேசாத நாடுகளில், இலக்கிய வாசகர்கள் யாரிடமாவது அவருக்கு பிடித்த ஆப்பிரிக்க நாவல் எதுவென்று கேட்டால் பெரும்பாலும் அவர்கள் சினுவா அச்சிபி எழுதிய திங்ஸ் ஃபால் அபார்ட் நாவலைத்தான் சொல்கிறார்கள். இந்த நாவலைத் தவிர்த்து ஆப்பிரிக்க இலக்கியத்தை யாரும் கற்பனை செய்யமுடியாது. ஆப்பிரிக்க இலக்கியத்தை எப்படி படைக்கவேண்டும் என்று மற்ற எழுத்தார்களுக்கான சூத்திரம் திங்ஸ் ஃபால் அபார்ட். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆப்பிரிக்க இலக்கியம் என இந்நாவல் பெயர்பெற்றிருக்கிறது.’’ என்று கூறுகிறார். அப்படி என்னதான் எழுதினார் சினுவா அச்சிபி இந்த நாவலில்.

இந்த நாவலின் கதாநாயகன் பெயர் ஒகாங்கோவ். இக்போ என்னும் ஆப்பிரிக்க சமூகத்தின் தலைசிறந்த தலைவன். ஆப்பிரிக்க சமூகத்தின் தலைவன் என்றால் உடல்வலிமையும் மனஉறுதியும் பெற்றிருக்கவேண்டும். ஆப்பிரிக்க சமூகத்தின் செல்வந்தன் என்றால் நிறைய கருணைக் கிழங்கு பயிரிட வேண்டும். ஒகாங்கோவ் இவையெல்லா அம்சமும் பெற்றிருந்தான். இவனுடைய மனைவிகளிடம் எந்த சண்டை சச்சரவும் வைத்துக்கொள்ளமாட்டான். ஆனால் தன்னுடைய இனத்தவன் ஒருவனை துரதிர்ஷ்டவசமாக கொல்ல வேண்டிய சூழ்நிலை அவனுக்கு ஏற்பட்டது. இந்தக் குற்றத்திற்காக அவனை அந்த கிராமத்தைவிட்டு ஏழு ஆண்டுகள் தள்ளிவைத்தனர். தன்னுடைய இக்போ சமூகத்தின் கட்டுப்பாட்டிற்கு அடிபணிந்து ஒகாங்கோவ் ஊரைவிட்டு சென்று ஏழு ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தான். இந்த ஏழு ஆண்டுகளுக்குள் அவனுடைய கிராமத்தில் பெரிய அளவிற்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அவனுடைய கிராமத்தில் வெள்ளையர்கள் குடியேறி கல்வியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அந்தக் கிராமத்தின் வாழ்கைமுறையையே மாற்றியிருந்தனர்.வெள்ளையர்கள் தங்களை அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்ற உணர்வே கூட இல்லாமல், இக்போ சமூக மக்கள் அவர்களுக்காக விசுவாசமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். தன்னுடைய இனக்கடவுள்களையும் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் விட்டுவிட்டு வேறு ஏதோ ஒரு கடவுளை புதிய சடங்குகளை பின்பற்றிக்கொண்டிருந்தார்கள். ஒகாங்கோவ் தான் இருந்த தலைமை பதவியை தனது மகனோ அல்லது ஏதாவது உறவினனோ வகித்திருப்பான் என்று நினைத்துக்கொண்டு வந்தான். ஆனால் அவனுடைய ஊரின் தலைவர் என்று சொல்லிகொண்டு ஒரு வெள்ளைக்காரர் இவனை அதிகாரம் செய்தார். அவர் தன்னை மாவட்ட ஆணையர் என்று சொல்லிகொண்டார், மாவட்ட ஆணையர் என்றால் என்னவென்றே ஒகாங்கோவ்விற்குத் தெரியாது. இந்த சூழ்நிலைகளால் ஒகாங்கோவ் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானான். பாரம்பரியத்தில் ஊறிப்போன ஒகாங்கோவ்விற்குத்தான் இந்த நிலைமை. ஆனால், அந்த ஊரில் இருந்த மற்றவர்களோ, மாற்றம் வந்ததையே உணராமல், வெள்ளைக்கார அதிகாரிகளின் விசுவாசமான ஊழியர்களாக மாறி அவர்களின் அடி உதை அனைத்தையும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒகாங்கோவ் மனம் நொந்து இறந்துவிடுகிறான். 1890ம் ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை மனதில் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. காலனியாதிக்கம் என்பது போரின் மூலம்தான் வரவேண்டும் என்றில்லை. வேறு எப்படியெல்லாம் ஒரு சமூகத்தில் அது நுழையலாம் என்பதை சினுவா அச்சிபி இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார். அடிமைப்படுத்துவதென்பது ஒருவரை வேலைக்காரராக வேலைவாங்குவது மட்டுமல்ல, அவருடைய சிந்தனை, நம்பிக்கை, கலாச்சாரம் இவையனைத்தையும் மாற்றியமைப்பதுமாகும். இந்த நாவலின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால் இந்தக் கருத்தை அச்சிபி எவ்வாறு தனது கதையமைப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதுதான். பொதுவாக காலனியாதிக்கம் பற்றிய இலக்கியங்களோ சமூக மாற்றம் பற்றிய இலக்கியங்களோ அதிதீவிர வாசிப்பைத்தான் தரும். ஆனால் இந்த புத்தகம், சிறுவர்கள் படித்தால் கூட விறுவிறுப்பாக இருக்கும். இந்த புத்தகத்தில் முக்கால் பங்கு, காலனியாதிக்கத்திற்கு முந்தைய நைஜுரிய மக்களின் புராதன வாழ்க்கையைப் பற்றியதாகும். அவர்களிடம் நம்பிக்கைகள், வேடிக்கைகள், விளையாட்டுகள், சண்டை சச்சரவுகள் இருந்தாலும் சமூக ஒற்றுமைக்காக அவற்றையெல்லாம் மறந்து விட்டு ஒன்றாக உழைக்கின்ற மனப்பான்மை. இவற்றையெல்லாம் எளிமையாக சிறுகுழந்தைகளுக்குக் கூட புரியக்கூடிய விதத்தில் சொல்லியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கை, காலனியாதிக்கத்தால் எப்படி மாறிப்போனது, எப்படி காலனியாதிக்கம் இந்த சமூகத்தில் நுழைந்தது, அவர்களை எப்படி அடிமைப்படுத்தியது என்பதையெல்லாம் மிக இயல்பாக கடைசி 50 பக்கங்களில்தான் சொல்லியிருப்பார். 200 பக்கங்கள் வரை ஏதோ சிறுவர் கதையை படித்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்த வாசகர்களின் மனமானது, கடைசி 50 பக்கங்களில் திடீரென கனத்து ஒகாங்கோவ்வின் மரணத்திற்காகவும் அந்த ஆப்பிரிக்க மக்கள் தொலைத்த வாழ்கைக்காகவும் கண்ணீர் வடிக்கச் செய்துவிடுவார்.மேற்கத்தியர்கள் இனப்பிரச்சனை கொண்ட சமூகம் என்று ஆப்பிரிக்காவை குற்றம் சாட்டுவர். ஆனால் சினுவா அச்சிபி சொல்கிறார், “ஆப்பிரிக்க சமூகத்தில் இனப்பிரச்சனை இருப்பது உண்மைதான். இவற்றை உடைக்க வேண்டியது இன்றியமையாததுதான். ஒவ்வொரு இனத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் வரலாறு இவற்றில் வேறுபாடுகள் உண்டுதான். ஆனால் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வேறுபட்ட இனங்கள் திடீரென்று ஆப்பிரிக்காவிற்குள் குதிக்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் இதே இடத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பல்வேறு இனங்களுக்கான தொடர்பு தற்போது அதிகரித்திருக்கிறது. ஆனால் அவர்கள் யாரும் அந்நியர்கள் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக இவர்கள் இனப்பிரச்னையின்றிதான் வாழ்ந்திருக்கிறார்கள். இனப்பிரச்னை என்பது சமீபத்திய நிகழ்வு. எங்கெல்லாம் இனப்பிரச்னை தோன்றுகிறதோ ஆராய்ந்து பார்த்தால் அவ்விடத்தில் ஏதாவது சுயநல சக்தி தன்னுடைய சுயநலத்திற்காக இனப்பிரச்னையை தூண்டிவிட்டிருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேற்றுமையில் ஒற்றுமைகண்டு வாழ்ந்து வந்த மக்கள் திடீரென்று கடந்த 40-50 ஆண்டுகளில் இனப்பிரச்னைக்கு ஆளாகிறார்கள் என்றால் அது கண்டிப்பாக சுயநலசக்திகளால்தான். உதாராணமாக என்னுடைய நாடான நைஜுரியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தை கூறலாம். எப்பொழுது பிரிட்டிஷார் எங்கள் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனரோ அப்பொழுது அவர்கள் எங்களுக்குள் இனப்பிரச்னையை தூண்டிவிட்டு சென்றனர். ஏனென்றால் அப்படியிருந்தால்தான் நாங்கள் எங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் அடித்துகொள்வோம். நாங்கள் எங்களுக்குள் பகைமையை வளர்த்துகொண்டால் அவர்கள் மீதான பகையை மறந்துவிடுவோம் என்பது அவர்களின் கணிப்பு. பெரும்பாலான நாடுகளில் அந்நிய சக்திகள் இப்படி செய்தன, செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ளமுடியும்.”

ஆங்கிலேயருக்கு எதிராக தன் கருத்தை இவ்வாறு வெளிப்படுத்தும் சினுவா அசிபி அவர்களுடைய மொழியான ஆங்கிலத்திலேயே தனது படைப்புகளை வெளியிட்டார். ஆனால் அவருடைய சக ஆப்பிரிக்க ஆசிரியர்கள் பலர் அவ்வாறு செய்யவில்லை. இதுகுறித்து அச்சிபி பேசுகையில், “என்னுடைய எழுத்து ஆப்பிரிக்காவின் குரல். ஆப்பிரிக்காவின் அனுபவத்தை உலக மக்களுக்கு அறிவிக்கும் குரல். இந்த குரல் உலக மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்றால் அவர்களுக்கு புரிந்த மொழியில் சென்றடைய வேண்டும். ஆங்கிலம் உலகெங்கும் பரவியிருக்கும் மொழி. உண்மையான ஆப்பிரிக்க இலக்கியம் என்றால் என்னவென்பதை உலக மக்களுக்கு தெரிவிக்கவும் எங்களைத் தவறாக சித்தரித்த ஐரோப்பிய எழுத்தாளர்களுக்குப் பாடம் புகட்டவும் ஆங்கில மொழி தேவைப்படுகிறது,” என்கிறார்.

அச்சிபி கூறியபடி ஆங்கிலத்தில் எழுதவேண்டும் என்று அவர் எடுத்த முடிவு சரியானதே. இல்லையென்றால் அவருடைய கருத்து உலக வாசகர்களை சென்றடைந்திருக்காது. அச்சிபியின் ஆங்கிலத்தில் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால் ஆப்பிரிக்க கதையின் தேவைக்கேற்றபடி ஆங்கிலத்தை மாற்றியமைத்து பிரயோகித்திருப்பார். அச்சிபியின் ஆங்கிலம் ஆப்பிரிக்க பழமொழிகள், பாடல்கள், சடங்குகள் எல்லாம் கலந்த கலவை. அவருடைய இலக்கியங்களைப் படிக்கும்போது அவர் படைத்த கதாபாத்திரங்கள் கண்டிப்பாக ஆங்கிலத்தில் பேசியிருக்க மாட்டார்கள், ஆப்பிரிக்க மொழியில்தான் பேசியிருப்பார்கள், சர்வதேச வாசகரின் புரிந்துகொள்ளுதலுக்காக ஆங்கிலம் ஒரு ஊடகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ளமுடியும்.

உதாரணமாக சமீபத்தில் தமிழில் வெளியான ‘பாரதி’, ‘பெரியார்’ போன்ற திரைப்படங்களில் மகாத்மா காந்தி தமிழில் பேசுவார். படம் பார்க்கும் எல்லோருக்கும் கண்டிப்பாக காந்தி தமிழில் பேசியிருக்க மாட்டார், சாமானிய மக்களின் புரிந்துகொள்ளுதலுக்காக அவ்வாறு காட்சியமைக்கப் பட்டிருக்கிறது என்று தெரியும். அங்ஙனம்தான் அச்சிபியும் ஆங்கிலத்தை ஒரு ஊடகமாக பயன்படுத்தியிருப்பார். அச்சிபியை ஆப்பிரிக்க இலக்கியம் படைப்பதற்கு தூண்டிய ஆப்பிரிக்க பழமொழி -“வேடனுக்கும் சிங்கத்திற்கும் நடக்கும் சண்டையில், சிங்கத்திற்கென தனியான வரலாற்றாசிரியன் இல்லையென்றால் , வரலாறு வேடனைத்தான் பாராட்டும்.” இதன் பொருள் பற்றி அச்சிபி விளக்குகையில் “சிங்கம் தானாக அடிபணிந்திருக்காது, தோற்றுப்போக ஆசைப்படாது, கொல்லப்பட இடம் கொடுத்திருக்காது. வேடனின் சூழ்ச்சி வலையில் அறியாமையால் மாட்டிக்கொண்டாலும் இறுதி வரை வேடனுடன் போராடும். சிங்கத்தினுடைய வீரம், தன்னைக் காப்பாற்றிகொள்ள வேடனுடன் அது மேற்கொண்ட போராட்டம், போராட்டத்தில் தோற்று இறக்கும் சூழ்நிலை வந்தால் அதனுடைய வேதனை, வலி, இவற்றையெல்லாம் சிங்கத்தின் நிலையிலிருந்து சிந்திக்கவேண்டும். வேடன் சிங்கத்தை கொன்றுவிட்டதாலேயே அவன் சிங்கத்தைவிட வலிமையானவன் என்று அர்த்தம் இல்லை. வலையும் துப்பாக்கியும் இல்லாவிட்டால் யார் வலிமையானவர் என்பது தெரிந்திருக்கும். வரலாற்றாசிரியர்கள் எல்லாம் வேடனின் ஆளாக இருப்பதால்தான் அவன் பெருமை பெறுகிறான். காலனியாதிக்க நாடுகளில் ஏகாதிபத்திய சக்திகள் வேடர்கள் இடத்திலும் அந்நாட்டின் சொந்தமக்கள் சிங்கத்தின் இடத்திலும் உள்ளனர். வரலாறும் மேற்கத்திய இலக்கியங்களும் அவர்களுடைய வெற்றிப்பதாகைகளை பற்றி பேசுகிறது. ஆகவே ஆப்பிரிக்க இலக்கியம் அந்நாட்டின் சொந்தமக்களின் வலிகளையும் வேதனைகளையும் பேசவேண்டும். அதற்கு சான்றாக அம்மக்கள் பட்ட தழும்புகள் உள்ளன. அவைகளே என் போன்ற இலக்கிய வாதிகளை சொந்த மண்ணை பற்றி எழுதத் தூண்டியவை “ என்று கூறுகிறார். தன்னுடைய நாட்டிற்காகவும் தன்னுடைய மக்களுக்காகவும் குரல்கொடுத்து உலக வாசகர்களின் கவனத்தை ஆப்பிரிக்க இலக்கியத்தை நோக்கி ஈர்த்த சினுவா அச்சிபி உலகம் போற்றப்பட வேண்டிய இலக்கியகர்த்தா என்பதை மேற்கத்திய இலக்கிய ஆசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதற்கு சான்று லண்டனிலிருந்த இவருக்கு வழங்கப்பட்ட இந்த 2007ம் ஆண்டுக்கான மேன் புக்கர் விருது. சினுவா அச்சிபி ஆப்பிரிக்க இலக்கியம் குறித்த பார்வையை சாமானிய வாசகர்களுக்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க இலக்கியம் குறித்த மேற்கத்திய இலக்கிய ஆசிரியர்களின் தவறான கருத்தையும் மாற்றியிருக்கிறார் என்பதற்கு இவ்விருது ஒரு சாட்சி. இவ்விருது ஆப்பிரிக்க இலக்கியத்திற்கும் ஆப்பிரிக்க மக்களுக்கும் சினுவா அச்சிபி செய்த சேவைக்கான அங்கீகாரம். மேலும் பல வாசகர்கள் சினுவா அச்சிபியின் புத்தகங்களை படிக்க இவ்விருது தூண்டும் என்பதில் ஐயமில்லை.
..

No comments: