Sunday, January 27, 2008

தமிழ் வளர்ச்சிக்கு பொதுவுடைமையாளர்கள் ஆற்றிய பங்கு - து. ராசா

தமிழ் வளர்ச்சிக்கு பொதுவுடைமையாளர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா நிகழ்ச்சியில் ராசா உரை

புதுடில்லி, ஜன. 28-
தமிழ் வளர்ச்சிக்கு பொதுவுடைமையாளர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான து. ராசா கூறினார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், புதுடில்லி, ஆசியாட் வில்லேஜ், சிரி ஃபோர்ட் கலையரங்கத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சியை முன்னிட்டு மக்கள் இசைக் கலைஞர் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி இசை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சேதுதுரை முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்புரையாற்றினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான து. ராசா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘பல ஆண்டு காலமாக டில்லியில் வாழ்ந்து, அரசியல் பணியாற்றி வருபவன் நான். டில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு பல முறை வந்திருக்கிறேன். ஆனால் தில்லித் தமிழ்ச் சங்கத்தினுடைய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை. நிகழ்ச்சியினுடைய தொடக்கத்தில் தில்லித் தமிழ்ச் சங்கத்தார் அறிவித்ததைப் போல் பொங்கல் விழா நிறைவு பெறுகிற நிகழ்ச்சி இது.எனவே உங்கள் அனைவருக்கும் முதற்கண் பொங்கல் வாழ்த்துக்களையும், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். டில்லித் தமிழ்ச் சங்கம், ஒரு விசாலமான தளத்தில் தொலைநோக்கோடு செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.

டில்லித் தலைநகரத்தில் வாழ்கிற தமிழ் மக்கள் அனைத்துப் பகுதியினரையும் அரவணைத்து, தில்லித் தமிழ்ச் சங்கம் பாடுபடுமானால் தில்லியின் சமூக வாழ்க்கையில், கலாச்சார வாழ்க்கையில் தமிழ் மக்கள் சிறப்பான பங்கைச் செலுத்த முடியும். தில்லிக் கலாச்சாரம் பன்முகக் கலாச்சாரம். இந்தியத் தேசத்தின் தலை நகரம் டில்லி. இந்தியாவின் கலாச்சாரமும் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாராத்தினுடைய ஒரு பிரதிபலிப்பாகத்தான் டில்லிக் கலாச்சாரத்தைப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு கலாச்சார வேர்கள் மிகவும் பழைமையானவை. இந்தியாவில் யாரும் ஒரேயொரு கலாச்சாரத்தைத் திணித்துவிட முடியாது. பன்முகக் கலாச்சாரத்தை அனைவரும் அங்கீகரித்தேயாக வேண்டும். தமிழ்நாட்டின் கலை, தமிழ்நாட்டின் இலக்கியம், இந்த அடிப்படைக் கலாச்சார வேர்களைக் கொண்டவையாகும். நம்முடைய கலாச்சாரம், தமிழ்க் கலாச்சாரம் என்று சொல்கிறபோது, தமிழ் மக்களின் கலைகள், இசை, இலக்கியம் - இவை அனைத்தும் தமிழ் மக்களின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டவை. இதை உலக நாடுகளில் உள்ள அறிஞர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் இந்த உழைப்பை ஆதாரமாகக் கொண்டு பிறந்தவைதான். தமிழ்நாட்டில் எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் உழைப்பின் அழகைக் காட்டுவதாகத்தான் அமைந்திருக்கிறது. ‘‘ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது, அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது’’ என்பதை தமிழ்நாட்டின் உழைப்புக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு, தமிழ்க் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு பொதுவுடைமைவாதிகள் பெரும் பங்கை ஆற்றியிருக்கிறார்கள் என்பதை டில்லி வாழ் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ப. ஜீவானந்தம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவரது நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகளை வெளிக்கொணர்வதற்காக பேராசிரியர் நா, வானமாமலை ‘‘ஆராய்ச்சி’’ என்கிற ஓர் இதழையே நடத்தி வந்தார். அந்த இதழின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள நாட்டுப்புறக் கலைகளைத் தேடிப் பிடித்து அவற்றிற்கு அங்கீகாரம் வழங்கினார்கள். அவர் அப்படிச் செய்யவில்லை என்றால், புஷ்பவனம் குப்புசாமியை நாம் கண்டிருக்க முடியாது. பேரா. நா. வானமாமலைதான் நாட்டுப்புறக் கலைகளுக்கு அங்கீகாரத்தை வழங்கியவர். அதேபோன்று புதுவைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் கே.ஏ. குணசேகரன் நாட்டுப்புற இசையை இயக்கமாகக் கொண்டு சென்று வருகிறார்.இளையராசா, கங்கை அமரனை உங்கள் எல்லோருக்கும் தெரியும். சின்னராசா இளையராசாவாக மலர்வதற்கு முன்னால், அவருக்கு ஒரு வாழ்க்கை இருந்தது, இளையராசா, கங்கை அமரனுக்கு எல்லாம் மூத்த சகோதரர் பாவலர் வரதராசன் நாட்டுப்புற இசையை ஆதாரப்படுத்தி தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் இசை முழக்கம் செய்தவர். பொதுவுடைமை இயக்கம்தான் அவருக்கு மேடை கொடுத்தது, சின்னராசா, இளையராசாவாக மாறியதற்குக் காரணம் நாட்டுப்புற இசைதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.நாட்டுப்புற இசைக்கு ஓர் அங்கீகாரத்தை பொதுவுடைமை இயக்கம்தான் கொண்டு வந்தது.

அதேபோன்று ஒருவர் தன் பெயரை கார்க்கி என்று மாற்றிக் கொண்டு வில்லுப்பாட்டுக் கலையை தமிழ்நாடு முழுதும் கொண்டு சென்றிருக்கிறார். இதுவெல்லாம் டில்லித் தமிழ் மக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இதுவெல்லாம் நம்முடைய காலத்தில் நடைபெற்றிருக்கிறது.அதேபோன்று ‘சின்ன சின்ன மூக்குத்தியாம், சிகப்புக் கல்லு மூக்குத்தியாம்’ எழுதிய அருணாசலம், தொ.மு.சி, ரகுநாதன் என்கிற திருச்சிற்றம்பலக் கவிராயர், ஆகியோரை அடுத்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரைத் தெரியாமல் தமிழ்நாட்டில் எவரும் இருக்க முடியாது. பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் கேட்போர் அனைவரின் நெஞ்சையும் உலுக்குகிற பாடல்களாகும். இவர்கள் எல்லாம் பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்தவர்கள்.

இவ்வாறு தமிழின் வளர்ச்சிக்கு, தமிழ்க் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு பொதுவுடைமைவாதிகள் அளப்பரிய பங்கினை ஆற்றியிருக்கிறார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். பொங்கல் விழா என்பது உழைப்பைப் போற்றுகிற விழா. உழைப்பைப் போற்றுகிற மக்கள் தமிழ் மக்கள். டில்லி தமிழ் மக்கள் உழைப்பின் மூலமாகத்தான் இந்த ஏற்றத்தைப் பெற்றிருக்கிறார்களே தவிர, வேறு வழியில் இல்லை என்று நான் நம்புகிறேன். உழைப்பை ஆதாரமாக வளர்க்கிற, உழைப்பை ஆதாரமாகக் கொண்டு வெற்றி பெறுகிற இனம் தமிழினம். அதன் ஒரு பகுதியாக டில்லி தமிழ்ச் சங்கம் நடத்துகிற இவ்விழா வெற்றிபெற வாழ்த்தி விடைபெறுகிறேன்.’’

இவ்வாறு து. ராசா கூறினார். இதனை அடுத்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் ரமாமணி சுந்தர் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி குழுவினரின் மக்கள் இசை விருந்து நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகளை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கே.வி.கே. பெருமாள் தொகுத்தளித்தார்.

(தொகுப்பு: ச. வீரமணி)

No comments: