Wednesday, April 25, 2018
காவிப் பயங்கரவாதம் என்பது ஆதாரமற்ற கற்பனை அல்ல என்பது, ஏன்? -பேரா. அசோக் ஸ்வெயின்
(மோடி அரசாங்கம், இந்து
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைப்
பாதுகாத்திடுவதன்மூலம், மாபெரும் தவறைச் செய்து கொண்டிருக்கிறது. அது பாகிஸ்தான்
செய்திட்ட கண்மூடித்தனமான தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.)
தேசியப்
புலனாய்வு முகமை (நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸி), 2000 மாலேகான்
வெடிகுண்டுத்தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாமியாரிணி பிரக்யா சிங்
தாகூர் என்பவருக்கு எதிராக, பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும்
அவரை விடுவித்திடுவது என்று சமீபத்தில் முடிவு செய்திருக்கிறது. தேசியப் புலனாய்வு முகமை சிங்கிற்கு எதிராக
இதற்கு முன்பு கண்டிருந்த புலனாய்வு முடிவுகள் அனைத்தையும், நரேந்திர மோடி ஆட்சிப்
பொறுப்பை ஏற்றபின்பு, மூடிமறைத்திட முயலும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
சமீப
தினங்களில், தேசியப் புலனாய்வு முகமை இதுபோன்று காவிப் பயங்கரவாதிகள் பலருக்கு
எதிரான மிகவும் சீரியசான குற்றச்சாட்டுகளை எல்லாம் நீர்த்துப் போகச் செய்வதற்கான
வேலைகளில் இறங்கி இருக்கிறது. ராணுவ அதிகாரியாக இருந்த ஸ்ரீகாந்த் புரோகித்
மற்றும் ஆர்எஸ்எஸ் பேர்வழியான ஸ்வாமி ஆசிமானந்த் என்கிற இரு பெரும் புள்ளிகள்,
2007இல் 68 பேர் (இவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம்கள்) கொல்லப்பட்ட சம்ஜூதா
எக்ஸ்பிரஸ் தகர்க்கப்பட்ட சம்பவம் உட்பட
முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான
அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்களை விடுவிப்பதற்கான வேலைகளில் இறங்கி
இருக்கிறது. இவ்வாறு, தாகூருக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும்
அவரை விடுவிப்பதற்கான முடிவு, இந்துத்துவா குழுக்களுக்கு, தாங்கள் காவிப்
பயங்கரவாதிகள் என்று கூறப்படுவது கற்பனையே தவிர வேறல்ல என்று சித்தரிப்பதற்கான
வாய்ப்பை அளித்திருக்கிறது.
சங் பரிவாரக்
கூட்டம், காங்கிரஸ் மீது அது பயங்கரவாதத்தின் மீது மிக மென்மையான அணுகுமுறையைக்
கொண்டிருக்கிறது என்றே எப்போதும் குற்றஞ்சாட்டி வந்திருக்கிறது. உண்மையில், சங் பரிவாரக் கூட்டம் பயங்கரவாதம்
என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போதெல்லாம், அது இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற
அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறது. அதுவே இந்துத்துவாக் குழுக்கள், ஆர்எஸ்எஸ், பாஜக
ஆகியவற்றின் பயங்கரவாத நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டினோமானால், அவற்றை
ஏற்றுக்கொள்ளவே அவை மறுக்கின்றன.
காவிப் பயங்கரவாதத்திற்கு எதிரான
போராட்டம்
குஜராத்தில்
நடைபெற்ற கலவரங்களில் முஸ்லீம்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னர்,
மேற்கத்திய விமர்சகர்கள் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக இந்து
பயங்கரவாதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் பற்றி எழுதினார்கள். எனினும் அந்த
விமர்சனங்கள் எல்லாம் 2010 வரை இந்தியாவை வந்து சேரவில்லை. அப்போது உள்துறை
அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தன்னிடம் வந்த உளவுத்துறை அதிகாரிகள் அளித்திட்ட
விவரங்களின் அடிப்படையில், “காவிப் பயங்கரவாதம்” என்ற
சொற்றொடைரைப் பயன்படுத்திய பின்னர்தான்,
இது பூதாகாரமாக வெளிச்சத்திற்கு வந்தது. அந்த சமயத்தில் நரேந்திர மோடி,
குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார். அவர், ப.சிதம்பரத்தைத் தாக்குவதாகக்
கருதிக்கொண்டு, காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு என்ன பெயர் என்று
கேட்டார். மேலும் அவருடைய மாநிலத்தில் சிதம்பரத்தின் கருத்துக்களுக்கு எதிராகப்
பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக, இந்து இருதய சாம்ராட் என்னும் அமைப்பின் சார்பில்
“காவிப் பெருமை பிரச்சாரம்”
மேற்கொள்ளப்பட்டது.
உண்மையில்
காவிப் பயங்கரவாதம் குறித்து முதலில் பிரச்சனையை எழுப்பியது ப.சிதம்பரம் அல்ல.
2010 டிசம்பரில் விக்கிலீக்ஸ் கேபிள்கள்
வெளிப்படுத்தியிருந்த விவரங்களில், அதற்கு ஓராண்டிற்கு முன்பே, காங்கிரஸ் கட்சித்
தலைவரான ராகுல் காந்தி, தில்லியில் இருந்த அமெரிக்கத் தூதருக்கு, “முஸ்லீம்களுக்கு எதிராக மதப் பதட்டத்தையும் அரசியல் மோதலையும்” உருவாக்கிக்கொண்டிருந்த இந்து பயங்கரவாதக்
குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருப்பது பற்றி எச்சரித்திருந்தார்.
2013இல் ப.
சிதம்பரத்திற்குப் பின்னர் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த சுஷில் குமார்
ஷிந்தே அவர்ள் மீண்டும் காவிப் பயங்கரவாதத்தின் அபாயம் குறித்து பொதுவெளியில்
கொண்டுவந்தார். எனினும் பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகள் அவரது கூற்றைத் திரும்பப்
பெற வேண்டுமென்று நிர்ப்பந்தித்தன. ஷிந்தே தன் அறிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டபோதிலும்
கூட, அப்போது உள்துறை செயலாளராக இருந்தவரும், தற்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக
இருப்பவருமான ஆர்.கே. சிங், ஷிந்தேயின் அறிக்கை, தேசியப் புலனாய்வு முகமையின்
புலனாய்வுகளின் அடிப்படையிலேயே அளித்திட்டார் என்று உறுதிப்படுத்தினார்.
சங் வரிவாரக்
கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் குறைந்தபட்சம் பத்து பேர், நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற,
பல்வேறுவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று 2013இல்
புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்திருந்தன. அந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் தலைவராக மோகன் பகவத், தங்களுடைய அமைப்பை பயங்கரவாத
அமைப்பு என்று சதிசெய்து கூறுவதாக காங்கிரஸ் கட்சியின் மீது குற்றஞ்சாட்டினார்.
இந்துத்துவா கூட்டத்தின் ஓர் அங்கமாகத் திகழும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் என்பவரும்
காவிப் பயங்கரவாதம் என்ற சொற்றொடரைப்
பயன்படுத்துவதற்கு ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு
ஆர்எஸ்எஸ் கூடாரம், காவிப் பயங்கரவாதம் என்ற சொற்றொடருக்குக் கடுமையாக ஆட்சேபணை
தெரிவித்தபோதிலும்கூட, அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிற சொற்றொடரில்
தவறெதையும் காணவில்லை. 2001இல் மோடி ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது,
நியூயார்க்கில் இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதல் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின்
கைவரிசை என்று முத்திரை குத்தியிருந்தார்.
இந்துக்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில்
ஈடுபட வல்லமையற்றவர்களா?
இந்துயிசம்
என்பது உலகிலேயே மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம் என்றும், எனவே காவி என்பதும்
பயங்கரவாதம் என்பதும் இரண்டு எதிரெதிரான சொற்கள் என்றும் எனவே அவற்றை
ஒன்றிணைக்காதீர்கள் என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் அடிக்கடி கூறிவருகிறது. பாஜக-வின்
சிந்தனாவாதி என்று கூறப்படும் கோவிந்தாசார்யா, காவிப் பயங்கரவாதம் என்று கூறுவது
பாலை, கருப்பு வர்ணத்துடன் ஒப்பிடுவதற்குச் சமம் என்று விவாதித்தார். சென்ற ஆண்டு,
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
முஸ்லீம்களைத் திருப்திப்படுத்துவதற்காக, காங்கிரஸ் கட்சி இந்து பயங்கரவாதம்
என்கிற சொற்றொடரைக் கண்டுபிடித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
தங்களுக்கு எதிரானவர்களை
வென்றெடுப்பதற்காக, பயங்கரவாதத்தை ஓர் உத்தியாகப் பயன்படுத்திடக்கூடிய அளவிற்கு
இந்துக்கள் வல்லமையற்றவர்களாக இருக்கிறார்களா? உலகப் பயங்கரவாத அமைப்புகளில்
மிகவும் ஆபத்தானவர்களாகவும், பயங்கர வாதிகளாகவும் இருந்தவர்களில் ஒரு
பிரிவினர்தான் இலங்கைத் தமிழ்ப் புலிகள். இவர்கள் அனைவரும் இந்துக்கள்தான்.
1984இல், அல் கொய்தா இயக்கத்தாரின் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு
முன்பே, இந்துக்களின் அவதாரப் புருஷன் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட
ரஜ்னீஷின் சீடர்களால் அமெரிக்கா பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டது.
எனவே, இந்துக்கள் என்றால் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட
வல்லமையற்றவர்கள் என்றெல்லாம் கூற முடியாது.
எல்லா
மதங்களையும்போலவே, இந்து மதமும், பயங்கரவாதத்தை மேம்படுத்திடவில்லைதான். ஆனாலும்,
ஒரு மதத்தை தனித்துவமானது என்று கூறி, பிற மதங்களை இழிவாகக் கருதுகிற குணத்தைக்
காட்டும்போது, அதன் அருவருப்பான பக்கம் முனைப்பாகத் தெரியத் துவங்கிவிடுகிறது.
உலகில் உள்ள அனைத்து மதங்களுமே ஏதேனும் ஒரு சமயத்தில் யுத்தத்தையும் வன்முறை
வெறியாட்டங்களையும் நியாயப்படுத்தக்கூடிய விதத்தில்
உருக்குலைக்கப்பட்டிருக்கின்றன. இந்து மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. மோடி அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்துத்துவா
குழுக்கள் இந்துயிசத்தை அத்தகையதொரு கொடூரமான திசையை நோக்கி இப்போது
இழுத்துச்சென்று கொண்டிருக்கின்றன.
சுதந்திரம்
கிடைத்தவுடனேயே, நாட்டின் தந்தை என்று அழைக்கப்பட்ட மகாத்மா காந்தியை
முஸ்லீம்களிடம் மென்மையாக நடந்துகொள்கிறார் என்று குற்றஞ்சாட்டி ஆர்எஸ்எஸ் அவரைக்
கடுமையாக நிந்தித்தது. இது, அவர் கொலை செய்யப்படக்கூடிய அளவிற்கு இட்டுச் சென்றது.
மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த, நாதுராம் கோட்சே, ஓர் இந்து மற்றும் ஆர்எஸ்எஸ்
இயக்கத்தின் முன்னாள் உறுப்பினராவார்.
சுதந்திரத்திற்குப்பின்னர்
பல ஆண்டு காலம், காங்கிரஸ் கட்சி இந்துத்துவா சக்திகளை தலை தூக்க முடியாதவாறு வைத்திருந்தது. எனினும், காங்கிரஸ்
கட்சி வீழ்ச்சியுறத் துவங்கியபின், குறிப்பாக அயோத்தி இயக்கம் தொடங்கியதற்குப் பின்னர்,
இந்துத்துவா குழுக்கள் வலுப்பட்டதானது, காவிப் பயங்கரவாத அச்சுறுத்தல்களை மீண்டும்
முன்னணிக்குக் கொண்டு வந்திருக்கிறது.
1999இல்
ஒடிசாவில் ஒரு குக்கிராமத்தில் ஆஸ்திரேலியக் கிறித்தவப் பாதிரியார் கிரகாம்
ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகள் உயிருடன் கொளுத்தப்பட்டபோதே இந்துத்துவா
பயங்கரவாதம் தொடங்கிவிட்டது. இந்து மதத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் இந்தக்
கொடூரமான கொலைகளைச் செய்ததாகக் கூறிய தாரா சிங், இந்துத்துவா அமைப்புகளில் ஒன்றான
விசுவ இந்து பரிசத்தின் இளைஞர் பிரிவாகச்
செயல்பட்டு வரும் பஜ்ரங் தளத்தின் தலைவர்களில் ஒருவர்.
சமீபத்தில்
நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம்.கல்புர்கி போன்ற
பகுத்தறிவாளர்கள் கொல்லப்பட்டிருப்பதும், அவர்களைக் கொன்றவர்கள் இந்துத்துவ
குழுக்களில் ஒன்றுதான் என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பின்னர்
மறுத்தபோதிலும், முன்னதாக கேரவன் மாத இதழுக்குப் பேட்டி அளித்திருந்த ஸ்வாமி
ஆசீமானந்த்தா (இவரது நேர்காணல்
அந்நிறுவனத்தால் முழுமையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது) ஆர்எஸ்எஸ்
இயக்கத்தின் அனுமதி பெற்றுதான் 2006க்கும் 2008க்கும் இடையே அக்கொலைபாதக
வெடிகுண்டுத் தாக்குதல்களைச் செய்ததாக ஒப்புக்கொண்டிருந்தார்.
தில்லியில்
நரேந்திர மோடி பிரதமராக வந்திருப்பது, இந்துத்துவா குழுக்களின் கைகளை
வலுப்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில், இந்து இளைஞர்கள் தர்ம சேனா என்ற
பெயரில் 15 ஆயிரம் பேருக்கு இந்து நாட்டை உருவாக்க வேண்டும் என்று கோரி கத்திகள்,
துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்து உயர் ஆதிக்கத்தை
மேம்படுத்துவதற்காக இந்து இளைஞர்களை ராணுவ ரீதியில் தயார் செய்வதற்காக நாட்டின் பல
பகுதிகளில், குறிப்பாக மேற்கு மற்றும்
வடக்குப் பகுதிகளில், எண்ணற்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நிஷா
பஹூஜா என்பவர் வெளியிட்டுள்ள ‘அவளுக்கு முன் உள்ள உலகம்’ (The World Before Her)
என்னும் ஆவணப்படம், இத்தகைய முகாம்களில் ஏராளமான இந்துப் பெண்களும் ராணுவப்
பயிற்சி மேற்கொண்டு வருவதைக் காட்டுகிறது.
பாகிஸ்தான்
ராணுவம், அங்கு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதக்குழுக்களுக்கு ஆதரவு அளித்து வந்ததானது,
அவர்களையே மிகவிரைவில் திருப்பித் தாக்கியது. அதேபோன்ற தவறை இங்கே மோடி அரசாங்கம்
இந்து பயங்கரவாதிகளைப் பாதுகாப்பதன் மூலம் செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு “நம் கொல்லைப்புறத்தில் உள்ள பாம்புகள்” விரைவில் இந்தியாவின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு
மாபெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
(கட்டுரையாளர்,
ஸ்வீடன், உப்சாலா பல்கலைக் கழகத்தில் அமைதி மற்றும் மோதுதல் ஆய்வுத்துறை (Peace and Conflict Research) பேராசிரியர்.
நன்றி:
ஸ்குரோல்.இன்
(தமிழில்: ச.
வீரமணி)
Sunday, April 22, 2018
காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம்
தி டெலிகிராப் நாளேட்டுக்கு சீத்தாராம் யெச்சூரி பேட்டி
[காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம் என்று தி டெலிகிராப் நாளேட்டுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டில் ஞாயிறு அன்று மீண்டும் ஒருமனதாக சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது தி டெலிகிராப் நாளேட்டின் செய்தியாளருக்கு அவர் சுருக்கமான முறையில் பேட்டி அளித்தார். அதன் சாராம்சங்கள் வருமாறு:]
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகளை தாங்கள் மாநாட்டில் தொகுப்புரை வழங்கியபோது எப்படி வெளிப்படையாகக் குறிப்பிட்டீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி: கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், அதன்முன் வந்துள்ள சவால்களை எதிர்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ள கட்சியின் அகில இந்திய மாநாடு இதுவாகும்.
கேள்வி: தங்களால் முன்வைக்கப்பட்ட சிறுபான்மைக் கருத்தை கட்சியின் அகில இந்திய மாநாடு ஏற்றுக்கொண்டிருப்பது குறித்து, எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி: நிறைவாக, இரு கருத்துக்களின் அடிப்படையில் ஒரு புரிதல் உருவாகியிருக்கிறது. வழிகாட்டும் குழு (ஸ்டியரிங் கமிட்டி) முன்கொணர்ந்த பரஸ்பர திருத்தத்தின் மூலம் இது சாத்தியமானது. அதுதான் ஏற்றுக்கொண்டமைக்கு அடிப்படையாகும். அதனால்தான், எங்கள் ஒற்றுமையும் எங்கள் உறுதியும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறினேன்.
கேள்வி: கடந்த மூன்றாண்டுகளில் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களைப் பரிசீலனை செய்கையில், எதிர்வரும் நாட்களில் உள்ள சவால்களைப்பற்றி…?
சீத்தாராம் யெச்சூரி: இப்போது எங்கள்முன் உள்ள சவால் இந்த அரசை (நரேந்திர மோடி அரசாங்கத்தை)த் தூக்கி எறிவதாகும். இந்த அரசுக்கு எதிரான சவால்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெதிராக உடனடியாக வேலைகளைத் துவங்க வேண்டியிருக்கிறது.
கேள்வி: கட்சியின் அகில இந்திய மாநாட்டு முன்பும் பின்பும் அரசியல் நிலைப்பாட்டின் மீதான விவாதத்தில் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ள கேரளம், வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
சீத்தாராம் யெச்சூரி: எங்கள் அடிப்படை ஆயுதம், மக்கள் இயக்கங்கள்தான், அவற்றை வலுப்படுத்துவோம் என்பதுதான்.
கேள்வி: அரசியல் தீர்மானத்திலிருந்து அடிக்கப்பட்டுள்ள காங்கிரசுடன் எவ்விதமான அரசியல் கூட்டணி என்று நீங்கள் எப்படி விளக்குகிறீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி: ஆளும் வர்க்க கட்சியுடன் அணிசேர்தல் என்கிற கேள்விக்கே இடமில்லை. எங்கள் குறிக்கோள், ஒரு மாற்றுக் கொள்கை வடிவமைப்பை (an alternative policy framework) உருவாக்குவதுதான். அது இன்னமும் உருவாகாத நிலையிலிருக்கிறது.
தேர்தல்கள் என்ற பிரச்சனை வருகிறபோது, அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் பொருத்தமான உத்திகள் வகுக்கப்படும் என்று தெள்ளத் தெளிவாக நாங்கள் கூறியிருக்கிறோம்.
அதேபோன்று, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் ஒத்துழைப்பு, நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒத்துழைப்பு மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் போராட்டங்களில் ஒத்துழைப்பு என்று "புரிதல்" என்பது குறித்தும் வரையறுத்திருக்கிறோம்.
கேள்வி: அரசியல் கூட்டணி என்றால் என்ன?
சீத்தாராம் யெச்சூரி: ஐக்கிய முன்னணியில் ஓர் அங்கமாக இருக்கக்கூடிய விதத்தில் அமைக்கப்படுவதுதான் ஓர் அரசியல் கூட்டணி என்பதாகும். இவ்வாறு அமைப்பது என்பது எந்தக் காலத்திலுமே எங்கள் கட்சியின் குணம் அல்ல.
கேள்வி: ஐமுகூ-1 ஆட்சிக்காலத்தின்போது (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்தது போன்ற ஏற்பாட்டிற்கு சாத்தியப்பாடு இருக்கிறதா?
சீத்தாராம் யெச்சூரி: நான் என்ன கூறிக்கொண்டிருக்கிறேன் என்றால், நாங்கள் எந்தக் காலத்திலும் எந்தவிதமான அரசியல் கூட்டணியிலும் அங்கம் வகித்தது இல்லை என்பதுதான். அது 1996-98ஆக இருந்தாலும் சரி, அல்லது ஐமுகூ-1ஆக இருந்தாலும் சரி. நாங்கள் எப்போதும் வெளியிலிருந்துதான் ஆதரவு அளித்திருக்கிறோம். அரசியல் முன்னணி என்பதும் கிடையாது. அவர்களுடன் சேர்வது என்பதும் கிடையாது.
கேள்வி: ஆனால், ஐமுகூ-1 அல்லது 1996 போன்ற ஏற்பாடு சாத்தியமா?
சீத்தாராம் யெச்சூரி: எப்படி எதிர்காலத்தில் துல்லியமான நிலைமைகள் உருவாகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு அவை குறித்தெல்லாம் நாம் பார்க்கலாம்.
கேள்வி: அரசியல் கூட்டணி இல்லாதபோது, அதுபோன்ற ஏற்பாடுகள் எல்லாம் சாத்தியமா?
சீத்தாராம் யெச்சூரி: நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால், துல்லியமான சூழ்நிலையின் அடிப்படையில், பொருத்தமான தேர்தல் உத்திகளை வகுத்திடுவோம் என்பதேயாகும். அதற்கெல்லாம் காலம் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும், எப்போது நடக்கும் என்றெல்லாம் இப்போதே ஊகிக்க வேண்டாம்.
கேள்வி: நீங்கள் தொகுப்புரை வழங்கும்போது, ஒற்றுமை குறித்து அழுத்தம் தந்தது ஏன்?
சீத்தாராம் யெச்சூரி: நாங்கள் எப்போதும் செய்வதுதான் அது. தோழர் ஹோசிமின் அனைத்துக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும், கட்சியின் ஒற்றுமையை "கண்ணின் மணியைப் போன்று காத்திட வேண்டும்," என்று கூறியிருக்கிறார். அதுதான் எங்களுடைய ஆயுதம். எனவே, அந்த ஆயுதத்தை நாங்கள் பாதுகாத்திட வேண்டியிருக்கிறது.
கேள்வி: மேற்கு வங்கத்தில் புதிய நிலைப்பாடு எப்படி வேலை செய்யும்?
சீத்தாராம் யெச்சூரி: காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம். இப்போதைக்கு எங்கள் மனதை இதற்கு மேல் செலவிடவில்லை. காலம் வரும்போது நாங்கள் அதைச் செய்வோம்.
கேள்வி: புதிய அரசியல் நிலைப்பாடு கேரளாவை எப்படிப் பாதிக்கும்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒரே பக்கத்தில்தான் இருக்கின்றன என்று பாஜக முன்னிறுத்தும் என்கிற ஐயுறவு இருக்கிறதே?
சீத்தாராம் யெச்சூரி: கேரளத்தில் நாங்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். அதனைச் செய்வது தொடரும். 2006இல் மத்தியில் ஐமுகூ அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த சமயத்திலும் வங்கத்திலும் கேரளாவிலும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
எனவே குழப்பத்திற்கே இடமில்லை. கேரளாவிலும்கூட காங்கிரசை எதிர்த்துப் போராடும் அதே சமயத்தில், பாஜகவை எதிர்ப்பதிலும் மிகவிரிவான அளவில் ஒற்றுமையை ஒருமுகப்படுத்திட முயற்சிப்போம்.
கேள்வி: அகில இந்திய மாநாட்டில் தாக்கல் செய்திருந்த அரசியல்-ஸ்தாபன அறிக்கையில், அரசியல் நிலைப்பாட்டில் இருந்த கருத்து வேறுபாடுகள் எப்படி கட்சி மையத்தின் வேலைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதனைப் பரிசீலிக்கும்போது, இப்போது உருவாகியுள்ள புதிய மத்தியக்குழுவும், அரசியல் தலைமைக்குழுவும் கட்சிக்குப் புத்தியிரூட்டுவதற்கு உங்களுக்கு உதவிடுமா?
சீத்தாராம் யெச்சூரி: நாங்கள் புதிய திசைவழியைப் பெற்றிருக்கிறோம். அதன் அடிப்படையில் கட்சி மையத்தை ஸ்தாபித்திட உறுதிபூண்டிருக்கிறோம். அது எப்படி வடிவம் கொள்ளும் என்று நாங்கள் வேலையைத் துவங்கும்போது மட்டுமே தெரியும். இதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் எல்லாமும் எந்தவொரு அரசியல் நடவடிக்கையின்போதும் இயல்பாக நடைபெறும் விஷயங்கள்தான். எப்போது இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு கூட்டு முடிவினை எடுத்துவிட்டோமோ, அதனை அமல்படுத்திட நாங்கள் அனைவரும் வேலை செய்திடுவோம்.
கேள்வி: புதிய நிலைப்பாடு, இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மக்கள் இயக்கங்களைக் கட்டி எழுப்பிட, உங்களுக்கு அதிக வாய்ப்புகளை அனுமதித்திடுமா?
சீத்தாராம் யெச்சூரி: அதைத்தான் நாங்கள் மிகவும் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.
(தமிழில்: ச.வீரமணி)
Tuesday, April 17, 2018
கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல் குறித்து மக்கள் பொதுவிசாரணை நடுவர் மன்றம் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் தகவல்கள்
கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல் குறித்து
மக்கள் பொதுவிசாரணை நடுவர் மன்றம்
வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும்
தகவல்கள்
-பேராசிரியர் வசந்திதேவி
கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல் குறித்து மக்கள் பொதுவிசாரணை
நடுவர் மன்றம் சார்பில், தலைநகர்
புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில், ஏப்ரல் 11-13 தேதிகளில்
கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்தியாவில் ஜனநாயகத்திற்கான இடம் சுருங்கிவருவதன்
மீதான மக்கள் ஆணையம் (PCSDS—People’s Commission on Shrinking Democratic Space in
India) என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கத்திற்கு, மக்கள் பொதுவிசாரணை நடுவர்
மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
இம்மன்றத்தின் நடுவர் குழுவில் என்னையும் சேர்த்து,
ஓய்வுபெற்ற நீதியரசர் ஹோஸ்பேட் சுரேஷ், ஓய்வுபெற்ற நீதியரசர் பி.ஜி. கோல்சே
பட்டீல், பேராசிரியர் அமித் பாதுரி, டாக்டர் உமா சக்ரவர்த்தி, பேராசிரியர் டி.கே.
உம்மன், பேராசிரியர் ஞான்ஷியாம் ஷா, பேராசிரியர் மெஹர் என்ஜினியர், பேராசிரியர்
கல்பனா கண்ணபிரான், மற்றும் திருமதி பமீலா பிலிபோஸ் அங்கம் வகித்தோம். பேராசிரியர்
ரோமிலா தாப்பர் நடுவர் மன்றத்தின் பிரதானமான அமர்வுக்குத் தலைமை வகித்தார்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்கள் மீது
நடக்கும் தாக்குதல் குறித்த பொது விசாரணை நடுவர் மன்றத்தில், நாடு முழுதும் உள்ள
50 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பயிலும் மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள் சுமார் 120 பேர் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்தார்கள். பொது விசாரணை நடுவர் மன்றத்தின் இறுதியில் ஓர்
அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
பொது விசாரணை நடுவர் மன்றத்தில் நாட்டில் உள்ள 17
மாநிலங்களில் உள்ள 50 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களிலிருந்து 120
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சாட்சியங்களை அளித்துள்ளார்கள். தற்போது
உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் அவல நிலை குறித்து நேரடியாக 49 பேர் சாட்சியம்
அளித்துள்ளார்கள். 17 வல்லுநர்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள். ‘
இவற்றின் அடிப்படையில் நடுவர் மன்றம் விரிவான அளவில் கண்டுள்ளவை பின்வருமாறு:
இரண்டரை நாட்கள் நடைபெற்ற விசாரணை நடுவர் மன்றத்தின்
அடிப்படை ஆய்வுப் பொருள், இந்திய ஜனநாயகம் தொடர்ந்து நீடித்து நிலைத்து நிற்க
வேண்டுமானால் அதற்கு உயர்கல்வித்துறையில் இதுநாள்வரை கட்டிக்காத்து வந்த உயரிய
மாண்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தே அமைந்திருந்தது.
இதுநாள்வரையிலும் நம் நாட்டில் உயர்கல்வித்துறையில்தான் மாணவர்கள் சுதந்திரமாக
சிந்திப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும், விவாதிப்பதற்கும், தங்களுக்குப்
பிடிக்காத அம்சமாக இருப்பின் மறுப்பு
தெரிவிப்பதற்கும் மிகப்பெரிய அளவில் இடம் கொடுத்து வந்தது. ஜனநாயக அரசியல் என்னும்
ஒட்டுமொத்த உடம்பிற்கும் இரத்தத்தைச் செலுத்தக்கூடிய விசையியக்கக்கருவியான
இதயமாகச் செயல்பட்டது. உயர்கல்வி நிறுவனங்கள், சமூகத்தின்
அனைத்துப்பிரிவினருக்கும், குறிப்பாக
பல்வேறு காரணங்களால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மாணவர்களுக்கும்
இடம் அளிக்கக்கூடிய விதத்தில் இருந்திட
வேண்டும். ஆனால் தற்போதைய பாஜக ஆட்சியில் கடந்த நான்காண்டுகளில்
உயர்கல்வித்துறையில் எந்த அளவிற்கு நெருக்கடி மிக மோசமான முறையில்
ஆழமாகியிருக்கிறது என்பது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சாட்சியங்களிலிருந்து
தெரிய வந்தது. நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் உயரிய மாண்புகளைத் தொடர்ந்து
பாதுகாத்திடுவதே நாட்டின் உச்சபட்ச முன்னுரிமையாக இருந்திட வேண்டும் என்றும்
அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் நடுவர் மன்றத்தில் பேசிய மாணவர்களும்
ஆசிரியர்களும் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்கள். இவர்கள் உரைகள் கூட்டத்திற்கு
வந்திருந்த அனைவருக்கும் எச்சரிக்கை மணியாகவே ஒலித்தது.
கல்வியைத் தனியாரிடம் தாரை வார்த்தல்
நாட்டில் உயர்கல்வித்துறையில் படிப்படியாக
மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை விசாரணை நடுவர் மன்றத்தில் உரைநிகழ்த்திய மாணவர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் தங்கள் சாட்சியங்களில் தெளிவாக
எடுத்துரைத்தார்கள்.
உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு சிரமங்களுக்கு இடையில்
படிப்பதற்காக வரும் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் இனி
உயர்கல்வி நிறுவனங்களின் படியே ஏறக்கூடாது என்று செய்வதற்கு வழி வகுக்கும்
விதத்தில், மத்திய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சகம் சமீபத்தில் பொதுக் கல்வி
நிறுவனங்களுக்கு சுயாட்சி வழங்கிட முடிவு செய்திருக்கிறது. சுயாட்சி என்ற பெயரில்
தொழிற்கல்வி மற்றும் சந்தை தொடர்பான பாட வகுப்புகளை மேம்படுத்திடத் திட்ட
மிட்டிருக்கிறது.
இவற்றைத் தொடர்ந்து, இதுநாள்வரையிலும் நாட்டில் தலித்,
பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் படித்துவந்த நிறுவனங்களில்
எல்லாம் இனிவருங்காலங்களில் அவ்வாறு சேர முடியாத நிலையை உருவாக்கிக்
கொண்டிருக்கிறார்கள். இக்கல்வி நிறுவனங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும்
கட்டணங்களை இவர்களால் முழுமையாக அளித்திட முடியாது. படித்துவரும் மாணவர்களும்
விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதோடு, தற்சமயம் மத்திய அரசு
கொண்டுவரவிருக்கும் நுழைவுத் தேர்வு மாதிரிகள், கல்வி நிறுவனங்களில் உள்ளூர்
மாணவர்கள் சேர முடியாத விதத்திலும், உள்ளூர் மாணவர்களின் நலன்களுக்கு எதிரான
விதத்திலும் அமைந்திருக்கின்றன.
இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில்
மிகவும் அறிவுக்கூர்மை வாய்ந்த தலித் மாணவியான அனிதாவின் துர்ப்பாக்கிய நிலை
சுட்டிக்காட்டப்பட்டது. அவர் மருத்துவப்படிப்பிற்காகத் தங்கள் மாநிலத்திலிருந்த
பாடப் புத்தகங்களை நன்கு படித்து மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் மத்திய
அரசு திடீரென்று ‘நீட்’ தேர்வை அறிமுகப்படுத்தி அவர் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்
போட்டது. அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. இவ்வாறு
அறிமுகப்படுத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் நிச்சயமாக தலித், பழங்குடியின மற்றும்
இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை விரட்டியடிப்பதற்காகத்தான் என்பதை மாணவர்களும்
ஆசிரியர்களும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் இத்தகைய நுழைவுத்
தேர்வுகள் நம் நாட்டின் கூட்டாட்சி
கட்டமைப்பு முறைக்கும் எதிரானதாகும். அவர் இதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்தார். எனினும் வழக்கு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்காத நிலையில்,
தற்கொலை செய்துகொண்டார்.
தற்போது உயர்கல்வி நிறுவனங்களுக்கு முறையாக ஆசிரியர்கள்
பணியமர்த்தப்படுவதில்லை. எல்லாம் இடைக்கால
நியமனங்கள்தான். இது மாணவர்கள் – ஆசிரியர்கள் இடையே எதிர்மறைத் தாக்கத்தை
ஏற்படுத்தி இருக்கிறது. அதிகரித்துவரும் இடைக்கால நியமனங்கள் ஆசிரியர்கள்
மத்தியில் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி இருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக இதுநாள்வரை
ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையே நிலவிவந்த விமர்சனரீதியான சிந்தனையையே அற்றுப்போகச்
செய்துள்ளது.
எடுத்துக்காட்டாக, 1980களின் மத்தியிலிருந்தே
மத்தியப்பிரதேச பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்கள் நிரந்தரமாக நியமனம்
செய்யப்படுவதில்லை. தில்லிப் பல்கலைக் கழகத்தில் தற்சமயம் ஐயாயிரம் ஆசிரியர்
பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இவை நிச்சயமாக கல்வியின் தரத்தைப் பாதிக்கும்
என்பதிலோ, மாணவர்களுக்கும் – ஆசிரியர்களுக்கும் இடையே இதுநாள்வரையிலும்
இருந்துவந்த சுதந்திரமான முறையில் கேள்வி கேட்கும் நிலைமைகள் அடிபட்டுப்போகும் என்பதிலோ
சந்தேகமில்லை.
நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைகிறது என்றால் அரசாங்கம்
கல்விக்கான செலவினத்தை அதிகரித்திட வேண்டும். ஆனால் இன்றைய தினம் என்ன நிலைமை?
கல்விக்கு நிதி ஒதுக்கும் அரசமைப்புச் சட்ட பொறுப்பினை அரசாங்கம் கைகழுவிக்
கொண்டிருக்கிறது. உயர்கல்வித்துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதோடு
மட்டுமல்லாமல், அவற்றை கார்ப்பரேட்மயமாக்கிடவும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இது நாட்டின் எழுத்தறிவு மட்டத்தை நிச்சயமாகப் பாதிக்கும். இது ஏற்கனவே 75 சதவீத
அளவிற்குத் தேக்க நிலையில் இருக்கிறது. இதன் விளைவு, வரவிருக்கும் காலங்களில்
மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களை வெறுமனே மாணவர்களின் தேர்வு மையங்களாக
மாற்றிடும் என்பதிலும் ஐயமில்லை.
கல்வியை
காவிமயமாக்குதல்
கல்வி நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதோடு
மட்டுமல்லாமல், அவற்றைக் காவிமயப்படுத்திடும் வேலைகளும் மும்முரமாக நடந்து
வருகின்றன. முக்கியமான பொறுப்புகளில் இந்துத்துவா வெறியர்கள்
பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்களின் கட்டளைக்கிணங்கதான் அனைவரும் செயல்பட்டாக
வேண்டும். எடுத்துக்காட்டாக, அஸ்ஸாமில்,
சங்கர் தேபோ ஷிசு நிகேடன் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்
கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் 500 பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 1
லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயிலுகிறார்கள். இப்பள்ளிகள், மாணவர்கள் இதுநாள்வரை
படித்துவந்த மதச்சார்பின்மை தத்துவத்தை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு, இனி
இந்துத்துவா சித்தாந்தத்தையே படித்திட வேண்டும். ராமானுஜன் எழுதிய 300 ராமாயணங்கள்
என்னும் நூல் பாடத்திட்டத்திலிருந்து ஓரங்கட்டப் பட்டுவிட்டது. ஆரியர்கள்
வந்தேறிகள் அல்ல அவர்கள்தான் இந்த நாட்டின் பூர்வகுடியினர் என்று
மெய்ப்பிக்கும்விதத்தில் தில்லிப் பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதப் பிரிவு,
வரலாற்றை முழுமையாக மாற்றியமைத்துத்தரும்படி, கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது.
இதற்காக ஆர்எஸ்எஸ் இயக்கம் ஓர் எட்டு அம்ச வழிகாட்டும் விதிகளை
அளித்திருப்பதாகவும் கூறப்பட்டது. இவை அனைத்தும் மாணவர்கள் – ஆசிரியர்கள்
மத்தியில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. அதுமட்டுமல்ல,
உத்தரப்பிரதேசத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் இந்துத்துவா அமைப்பைச்
சார்ந்தவர்கள், எவ்விதக்கல்வித்தகுதியும் இல்லாதவர்கள், உயர்பீடங்களில்
நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இவற்றுக்கு எதிராக மாணவர்களோ, ஆசிரியர்களோ
எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது கடுமையானமுறையில் நடவடிக்கை
எடுக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்களில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-க்கு
பல்வேறு வழிகளிலும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பீகாரில் ஒரு
வழக்கில், ஏபிவிபி மாணவர்கள் மட்டுமே வருகைப்பதிவேட்டில் 75 சதவீதம்
வந்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்டு, இதர மாணவர்களை அதிகாரமிழக்கச் செய்திடும்
வேலை நடந்திருக்கிறது.
பல மாநிலங்களில் மாணவர் சங்கங்களுக்கான தேர்தல்களை
நடத்துவதிலும், மாணவர் சங்கங்களை அமைப்பதிலும் படிப்படியாகத் தடைக்கற்கள் கொண்டுவரப்
படுகின்றன.
பல்கலைக் கழக நிர்வாகம் சொல்வதற்கு எதிராக மறுப்பு
தெரிவிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக, சட்டரீதியான நடவடிக்கை,
ஒழுங்கு நடவடிக்கை, நிர்ப்பந்தம் கொடுத்துக் கீழ்ப்படியச் செய்தல் போன்று பல்வேறு வழிகளில் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன
என்பதை மிகவும் தெளிவானமுறையில் மாணவர்களும் ஆசிரியர்களும் சாட்சியமளித்தார்கள்.
இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையைத் தருவது
மறுக்கப்படுகிறது. இதன்மூலம் மாணவர் சமுதாயத்தில் ஓர் அச்ச உணர்வை உருவாக்கி
இருக்கிறார்கள். பல கல்வி வளாகங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு
காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக
விளிம்புநிலையிலிருந்து வந்துள்ள மாணவர்களில் உள்ள முஸ்லீம்கள், தலித்துகள்,
பெண்கள் முதலானவர்களைக் குறிவைத்து இவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு எதிர்ப்புத்தெரிவிக்கும் மாணவர்கள் -
ஆசிரியர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, அவர்களுக்கு
இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் பேச்சுரிமை
திட்டமிட்டு படிப்படியாக மறுக்கப்படுகிறது. அவர்கள் கூறும் எதிர்ப்பு
எத்தகையதாயினும் அதனை தேச விரோதம் என்ற முத்திரைகுத்தி கிரிமினல்படுத்தும்
வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. “தேசவிரோதிகள்”, “பயங்கரவாதிகள்”, “தேசத்துரோகிகள்”, “அரசாங்கத்தின் எதிரிகள்” என்று முத்திரைகுத்தி அச்சுறுத்துவது
சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகிறது.
அதேபோன்று மூன்றாம் பாலினத்தவர் உட்பட தலித்துகள், பழங்குடியினர்,
மதச்சிறுபான்மையினர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரிகள் மற்றும்
பெண்கள் முதலான ஆசிரியர்கள் – மாணவர்கள்
மீது பாகுபாடு காட்டுவது அதிகரித்து வருகிறது. உயர்கல்வி நிறுவனங்களுக்கு
தலித்துகள், பழங்குடியின மாணவர்கள் வருவதை பல்வேறு வழிகளிலும் அடைத்து
வருகின்றனர். அவர்களுக்கு விடுதிகள் அளிக்கப்படுவதில்லை. அவர்களின் அடையாளத்தை
வைத்து கல்வி வளாகங்களில் அவர்கள் அவமதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு அளித்துவந்த கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும்
அவர்கள் பல்வேறு வடிவங்களில் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். தலித்
மாணவிகளாக இருந்துவிட்டால் இத்தகைய அவமதிப்புகள் மேலும் அதிகமாகும். இதேபோன்றே
கடந்த சில ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சலுகைகளும் படிப்படியாக
வெட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தலித், பழங்குடியின மாணவர்களுக்கு இட
ஒதுக்கீடுகள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் மறுக்கப்படுவதால், இவர்களுக்குக் கல்வி
கற்கும் வாய்ப்பே மூடப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதற்குப்
பதிலாக மாணவர்கள் வங்கிகளில் சென்று கடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசால்
புதிய கொள்கை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இத்தகைய கடன்கள் அவர்களை பல ஆண்டுகளுக்குக்
கொத்தடிமைகளாக மாற்றிடும் என்பதில் சந்தேகமில்லை.
அரசியல்ரீதியான நடவடிக்கைகளிலிருந்து பெண்களைத்
தடுப்பதற்காக, அவர்களை அச்கறுத்தும் உத்தியாக பாலியில் ரீதியாகத் துன்புறுத்தும்
நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.
எனினும் இத்தகைய அரசின் தாக்குதல்களுக்கு எதிராக தலித்
மாணவர்கள் மத்தியில் போராட்ட உணர்வு அதிகரித்து வருகிறது. அவர்கள்
அச்சுறுத்தப்பட்டபோதிலும், அவற்றுக்கு எதிராகப் போராடும் குணத்தை அவர்கள்
கைவிட்டுவிடவில்லை. உத்தரப்பிரதேசத்தில் ஒரு பல்கலைக் கழகத்தில் விடுதி மாணவிகள்
தங்களுக்கு படிப்பதற்கான நேரத்தை அதிகரித்திட வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைத்துப் போராடியபோது, அப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் என்ன கூறினார்
தெரியுமா? “மாணவிகள்
இரவில் படிப்பது இயற்கைக்கு விரோதமான செயல்” என்று திருவாய்மலர்ந்திருக்கிறார்.
மாணவர்கள் போராடும் சமயங்களில் காவல்துறையினரால் மாணவிகள்
குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். குறிப்பாக காஷ்மீரி மாணவர்களும், பெண்களும்
அவர்கள் முஸ்லீம்களாக இருப்பதால் அவர்களின் மீதான தாக்குதல்கள் இரட்டிப்பாகும்.
அவர்களைத் “தேசவிரோதிகள்”, என்றும், “இஸ்லாமிய பயங்கரவாதிகள்” என்றும், “பாகிஸ்தான் ஏஜண்டுகள்” என்றும் விளிப்பது சர்வசாதாரணமாக
நடைபெற்று வருகிறது.
அதேபோன்றே வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்துள்ள
மாணவர்கள் பழங்குடியினர் என்ற அடையாளத்தால் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.
மாணவர்கள் மத்தியில் இதுநாள்வரையிலும் இருந்துவந்த
வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயரிய பண்பு கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது. இந்துத்துவா சித்தாந்தத்துடன் தங்களைப் பிணைத்துக்கொண்டுள்ள உயர்
சாதியைச் சேர்ந்தவர்கள் பல கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு
அவர்கள் மூலமாக மாணவர்களின் அறிவைத் தீர்மானித்திடும் துரதிர்ஷ்டவசமான நிலை
உருவாகி இருக்கிறது.
இவற்றைக் காலத்தே சரிசெய்திடாவிட்டால், இந்திய
ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளுக்கு ஆழமானவிதத்தில் ஆபத்துகள் ஏற்படும்.
(தமிழில்: ச.வீரமணி)
Subscribe to:
Posts (Atom)