Sunday, July 23, 2017

மதவெறி கொலைகாரர்களுக்கு தைரியம் கொடுப்பது எது? மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி கேள்வி


 (நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. 19-7-17 புதனன்று மாலை மாநிலங்களவையில், நாட்டில் பல மாநிலங்களில் மதச் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் கொலை செய்யப்படுதல் மற்றும் பல்வேறு அட்டூழியங்களுக்கு ஆளாக்கப்படுதல்  அதிகரித்து வருவது தொடர்பாக குறுகிய கால விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது):
‘‘மிகவும் கனத்த இதயத்துடன் நான் பேச எழுந்திருக்கிறேன். மேலும் சற்று நேரத்திற்கு முன்பு இந்த அவையில் நடந்த நிகழ்ச்சியின் பின்னணியில் என் உரையைத் தொடங்குகிறேன். இங்கே உள்ள சூழ்நிலை நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நலம் தரக் கூடிய விதத்தில் இல்லை என்றே நாம் பார்க்கிறோம். குடியரசு நமக்கு எப்படி வந்தது? உலகத்திற்கு நம்மால் பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும். எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், எந்தவொரு மேற்கத்திய ஜனநாயக நாடும் துணிச்சலுடன் சொல்ல முன்வராத சமயத்தில், நாம் நம் நாட்டில் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்தோம். அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது எந்த சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது எந்தப் பாலினத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்தோம். அந்த சமயத்தில் அது மிகவும் புரட்சிகரமான நடவடிக்கையாக இருந்தது. அதன் அடிப்படை சமத்துவத்தை அங்கீகரிப்பது என்பதாகும். அத்தகைய சமத்துவம் இன்றைக்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினரும், தலித்துகளும் கொல்லப்படுவதன் மூலமாக கடுமையாகக் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எனக்கு முன்பேசிய உறுப்பினர் கொலைச்சம்பவங்களைப் பட்டியலிட்டார். எனவே நான் அதற்குள் செல்லவில்லை. ஆயினும் ஒரு சில சம்பவங்கள் எந்த அளவிற்கு மிகவும் கொடூரமாக நடந்திருக்கிறது என்று பாருங்கள். அக்லாக் என்பவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டிருக்கிறார். எதற்காக? அவர் மாட்டுக்கறி சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். இது 2015இல் நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் லட்டேகர் என்னுமிடத்தில் இரு இளைஞர்கள் தூக்கில் தொங்கவிடப் பட்டிருந்தார்கள். அவர்கள் அவர்களுடைய கால்நடைகளை, கால்நடைக் கண்காட்சிக்கு கொண்டு சென்றார்களாம்.
அவ்விருவரும் முஸ்லிம் பையன்கள். ஆல்வாரில், பெஹ்லுகான் என்னும் பால் வியாபாரம் செய்பவர் கொல்லப்பட்டார். உனாவில் நடந்தது என்ன? தலித்துகள் இறந்த பசுமாடுகளின் தோல்களை உரித்துக் கொண்டிருந்தார்கள். அது துரதிர்ஷ்டவசமாக அவர்களுடைய வேலை. அதனைச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களைக் கொன்றிருக்கிறார்கள். அவர்கள் சவுக்கால் அடித்து இழுத்துச்செல்லப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கொடூரக்காட்சிகள் படமாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவியது. சமீபத்தில் கொல்லப்பட்ட ஜூனைத் மற்றும் அவருடைய சகோதரர்கள் கதையைப் பார்த்தோம். எந்த அளவிற்கு சம்பவங்கள் மிகவும் கொடூரமாக இருப்பதையும், சகிப்புத் தன்மையற்று இருப்பதையும் பாருங்கள்.
தாகூரின் வார்த்தைகள்...
ரவீந்திரநாத் தாகூர் தனக்கு அளிக்கப் பட்ட வீரத்திருமகன் பட்டத்தைத் திரும்ப ஒப்படைக்கும்போது அவர் பயன்படுத்திய வார்த்தைகளை நினைவுகூர்க. ‘‘இவ்வாறு மிகவும் கொடூரமானமுறையில் பெண்களையும், குழந்தைகளையும் விட்டுவைக்காது நரமாமிசம் சாப்பிடும் பட்டினி என்னும் அரக்கனுக்கு சாபம் இடுவதற்காக, இடியோசை போன்றகுரலை எனக்குக் கொடுங்கள்’’ என்றார். அந்த அளவிற்கு மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்வுகள் நடந்து கொண்டி ருக்கின்றன. நாம் ஏன் இதனை இங்கே விவாதித்துக் கொண்டிருக்கிறோம்?
இத்தகைய கொடூரமான நிகழ்வுகள் தொடர்பாக நாம் இந்த அவையில் ஒரு முடிவிற்கு வந்தாக வேண்டும். இவ்வாறு சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு மக்களைக் கொல்பவர்களை சர்வதேச அளவில் பல நாடுகளில் நாம் பார்த்திருக்கிறோம். மத்திய காலத்தில் ரோமன் கத்தோலிக் சர்ச், ஸ்பானிஷ் இன்குவிஷிஷன் (Spanish Inquisition) என்ற பெயரில் நடத்திய அக்கிரமங்களை அறிவோம். அவர்கள் ஒரு நபர், யூதனா அல்லது முஸ்லிமா என்று அடையாளம் கண்டுகொள்வதற்காக அவர்களுக்கு பன்றிக்கறி சூப் கொடுத்து குடிக்கச் சொல்வார்கள். அவர்கள் குடிக்க மறுப்பதை வைத்து அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். இத்தகைய நடைமுறை அமெரிக்காவில் 1940 வரை நீடித்தது. அதுவரை அமெரிக்காவில் கறுப்பர்கள் என்பவர்கள் கீழ்த்தரமானவர் களாகவே கருதப்பட்டு வந்தார்கள்.
‘‘விசித்திரமான பழம்’’ (Strange fruit) என்றுதலைப்பிட்ட பில்லி ஹாலிடே என்கிற புகழ்பெற்ற கவிஞரின் பாடல் ஒன்றை இங்குள்ள என்னுடைய மூத்த சகாக்கள் நன்கு அறிவார்கள். அந்தப் பாடல் தெற்கத்திய மரங்களில் உள்ள இலைகள் ரத்தத்துடன் காணப்படுகிறது என்கிற விதத்தில் அந்தப் பாடல் அமைந்திருக்கும். ‘தெற்கத்திய மரங்கள்’ என்பதன் பொருள் அந்தக் காலத்தில் தென் அமெரிக்காவைக் குறிக்கும். ‘இலைகளின் மீது ரத்தம்’ என்பதன் பொருள் அங்கே கறுப்பர்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்ததைக் குறிக்கும். அவர்கள் ‘யார் பன்றிக் கறி சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்டார்கள். நீங்கள் ‘யார் மாட்டுக்கறி சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்கிறீர்கள்? 2017இல் என் நாட்டின் நிலை எவ்வளவு மோசமானதாக மாறி இருக்கிறது?
தனியார் ராணுவங்களுக்கு தடை
அடுத்து, நாடு முழுவதும் சுற்றித்திரியும் தனியார் ராணுவத்தினரின் நிலை என்ன? அது மாநிலங்களின் பிரச்சனை என்று பிரதமர் கூறுகிறார். அது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை என்கிறார்? ஒரு மத்திய அரசின் உத்தரவின்பேரில் இத்தகைய தனியார் ராணுவங்கள் தடை செய்யப்பட வேண்டியவைகளாகும். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் தனியார் ராணுவங்களைத் தடை செய்திட மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அமெரிக்காவில் செயல்படும் வலதுசாரி தீவிரவாத அமைப்பான கு க்ளக்ஸ் கிளான் (Ku Klux Klan) போன்று, நீங்கள் வைத்திருக்கி றீர்கள். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்ட ஹிட்லர் மற்றும் முசோலியின் கறுப்பு மற்றும் பழுப்பு நிற சட்டைகளை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்.
இத்தகைய தனியார் ராணுவங்களைத் தனியே எந்தவொரு மாநில அரசாங்கமும் தடை செய்திடமுடியாது. அவற்றை மத்திய அரசாங்கம்தான் தடை செய்திட வேண்டும். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திட வேண்டுமானால், தனியார் ராணுவங்களைத் தடுத்திட இது ஒன்றே வழியாகும். நாட்டின் பல பகுதி களிலும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், நாட்டை அறநெறிப்படுத்துகிறோம் என்று கூறிக்கொண்டு பல்வேறு பெயர்களில் செயல்பபடும் பல்வேறு குழுக்களையும் தடுத்து நிறுத்திடமுடியும். இவ்வாறு இவர்கள் நாட்டின் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள் வதற்கு எந்த உரிமையும் கிடையாது.
மூன்றுவிதமான கோட்பாடுகள்
ஏன் இவைகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன? நாட்டில் சித்தாந்த அடிப்படையில் சில திட்டங்கள் (ideological project) நடை முறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீங்களும், நானும், நாம் அனைவரும் இந்தியாவின் சுதந்திரத்தையும், அரசமைப்புச்சட்டத்தையும் மரபுரிமையாகப் பெற்றிருக்கிறோம். இத்தகு சுதந்திரத்தை நாட்டில் நடைபெற்ற மூன்றுவிதமான கோட்பாடுகளுக்கு இடையே நடைபெற்ற போராட்டத்தின் விளைவாகப் பெற்றுள்ளோம். விடுதலைப் போராட்ட காலத்தில் முக்கியமான கோட்பாடாக காங்கிரஸ் கட்சியின் கோட்பாடு இருந்தது. அவர்கள் சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் ஒரு மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருக்கும் என்று கூறினார்கள்.
இடதுசாரிகளாகிய நாங்கள், அவர்களிடமிருந்து வேறுபட்டோம். அத்துடன் நின்றுவிட முடியாது என்று நாங்கள் கூறினோம். நாங்கள், நாம் பெறும் அரசியல் சுதந்திரத்தை பொருளாதார சுதந்திரமாக மாற்றுவதற்காக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், அதனை சோசலிசத்தின் கீழ்தான் செய்திட முடியும் என்று அவர்களிடம் கூறினோம். இல்லையேல், சமூக ஜனநாயகக் குடியரசே வடுப்படத் தக்கதாக மாறக்கூடிய அபாயமிருக்கிறது என்றோம். இவையல்லாமல் மூன்றாவது கோட்பாடு ஒன்றிருந்தது. அதுவும் இரு விதங்களில் வெளிப்பட்டது. முஸ்லிம் லீக், இஸ்லாமிய இந்தியா குறித்துப் பேசியது. நீங்கள், இந்துராஷ்ட்ரம் குறித்துப் பேசிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பெற்றிருந்தீர்கள். இவ்விருவருமே நாட்டை மத அடிப்படையில் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள். துரதிர்ஷ்டவசமாக நாடு பிளவுபட்டது.
முஸ்லிம் லீக் இஸ்லாமிய நாட்டைப் பெற்றது. நம் தலைமுறையினருக்கு, எனக்கு உட்பட இது வரலாறு. ஏனெனில் நாம் அனைவரும் சுதந்திரத்திற்குப் பின்னர்தான் பிறந்தோம். … (குறுக்கீடு) … சரி, அதுபோகட்டும். விஷயம் என்னவென்றால், நாட்டை அமைப்பதற்கு மத உணர்வுகள் அடிப்படையாக அமைந்திட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இவ்வாறு இவர்களுடைய கோட்பாடு, மற்ற இருவிதமான கோட்பாடுகளிலிருந்தும் - அதாவது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்பதிலிருந்தும் சோசலிசக் குடியரசு என்பதிலிருந்தும் - வேறுபட்டதாகும்.
பட்டேல் தயாரித்த உத்தரவு
சுதந்திரத்திற்குப்பின், இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக மாறியது. அந்த ஆத்திரத்தின் காரணமாகத்தான் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. இதற்கு உத்தரவிட்டவர் சர்தார் பட்டேல். அந்தத் தடை உத்தரவைத் தயாரித்தவரே அவர்தான். 1948 பிப்ரவரி 4 அன்று அதனை அவர் தயார்செய்தார். அதில் அவர் என்ன குறிப்பிட்டிருந்தார்? ‘சங் பரிவாரத்தின் ஆட்சேபகரமான மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகள் எவ்விதத்தங்குதடையுமின்றி தொடர்கின்றன. வன்முறைக் கலாச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். சங் பரிவாரங்களின் நடவடிக்கைகளால் உத்வேகம் பெற்றவர்கள் பலரை பலி கொண்டுள்ளனர். இதற்கு சமீபத்தில் பலியானவர், மிகவும் விலை மதிக்கமுடியாத நம் காந்திஜியாவார்.’ இத்தகைய வன்முறைக் கலாச்சாரம்தான் இப்போது பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. பசுப் பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிற அனைவருமே ஆர்எஸ்எஸ்-காரர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் அனைவரும் சமூக விரோதிகள், கிரிமினல்கள் என்று நாங்கள் கூறுகிறோம். நம் பிரதமரும் அப்படித்தான் கூறியிருக்கிறார்.
அவர்கள் இரவில் கிரிமினல்களாக இருக்கிறார்கள், பகலில் வேறு ஏதோவாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள், இவ்வாறு செயல்படுவதற்கு, அவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்தது எது? இவர்களால் பரப்பப்படும் வன்முறைக்கலாச்சாரம்தான் இத்தகைய கிரிமினல்களுக்குத் தைரியத்தைக் கொடுத்தது. இவ்வாறு வன்முறைக் கலாச்சாரம் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த தையடுத்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்குத் தடைவிதித்ததைத் தொடர்ந்து அவர்கள் அமைதியாகிவிட்டார்கள் என்று பலர் நினைத்தார்கள். ஆனால் அப்படி இல்லை. மகாத்மா காந்தி படுகொலைசெய்யப்பட்டபிறகும், நம் அரசமைப்புச்சட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அவர்கள் சொல்லியபிறகும், அவர்கள் தங்கள் வேலை களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ்-இன் தலைவர் ஒருமுறைகூறியதை நான் இங்கே படிக்கிறேன். ‘நம்நாட்டில் முஸ்லிமாகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? அவர்கள் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள். சந்தேகமில்லை. எனினும், அவர்கள்நம் நாட்டிற்கு உண்மையாக இருக்கிறார்களா? அவர்கள் இந்த மண்ணுக்கும் இதன் பாரம்பரியத்திற்கும் சொந்தக்காரர்கள் என்று உண்மையிலேயே உணர்கிறார்களா? நம்மை உருவாக்கிய இந்த மண்ணுக்கு உண்மையாக இருக்க வேண்டும், இது நம் கடமை என்று அவர்கள் நினைத்திருக்கிறார்களா? இல்லை. அவர்கள் மத நம்பிக்கை மாறியதுமே தேசத் தின் மீதான அன்பும் பக்தியும் போய்விட்டது.’ நாடு சுதந்திரம் பெற்றபின்னரும், நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பின்னரும்கூட அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?
இந்நாட்டில் பிறந்த அனைவரும், அவர் எந்தமதத்தினராக இருந்தாலும், எந்த இனத்தினராக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அனைவரும் சமம் என்று அரசமைப்புச்சட்டத்தில் நாம் அளித்திருக்கும் உரிமையுடன் இது நேரடியாகவே முரண்படுகிறது. இவ்வாறு நேரடியாகவே அவர்கள் முரண்படுகிறார்கள். இத்தகைய அவர்களின் சித்தாந்த நிலைபாடுதான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை தேசியவாதம் என்பது இந்து தேசியவாதம் அல்லது இந்துத்துவா தேசியவாதம்தான். இவர்கள் கூறும் பாரத மாதா, என்னுடைய பாரத மாதா கிடையாது. என்னுடையபாரத மாதா, முஸ்லிம்களைப் பெற்றிருக்கிறாள், கிறிஸ்தவர்களைப் பெற்றிருக்கிறாள், பார்சிக்களைப் பெற்றிருக்கிறாள், புத்திஸ்டுகளைப் பெற்றிருக்கிறாள், சமணர் களைப் பெற்றிருக்கிறாள், என்னைப்போன்று கடவுள் நம்பிக்கையற்றவர்களையும் பெற்றிரு க்கிறாள்.
நாம், ‘பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிடும்போது, நாம் இவ்வாறு அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்காகவும்தான் முழக்கமிடுகிறோம். அதே சமயத்தில், ‘ஜெய்ஹிந்த்’ என்றும் முழக்கமிடுகிறோம். ‘ஜெய் ஹிந்த்’ தாய்நாட்டுப் பற்றுடன் கூடிய முழக்கம் இல்லை என்பது ஏன்? ‘பாரத் மாதா கி ஜே’ மட்டும் ஏன் தாய்நாட்டுப் பற்றுடன் கூடிய முழக்கம் என்று கூற வேண்டும்? இதற்குள் மறைந்திருக்கும் நயவஞ்சகம் என்ன? …(குறுக்கீடு)… பகத்சிங் முழக்கமிட்ட ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ பற்றி என்ன கூறுகிறீர்கள்? அது தாய்நாட்டுப்பற்றுடன் கூடியமுழக்கம் இல்லையா? பகத்சிங் நாட்டுப்பற்று கொண்டவர், இல்லையா? … (குறுக்கீடு) … இவ்வாறு முழக்கங்களின் அடிப்படையில் எவரையும் பாகுபடுத்தாதீர்கள்.
ஒரு தேசாபிமானி என்றால் அவன் தேசாபிமானிதான். அவன் ஒரு இந்திய தேசாபிமானி. இத்தகைய இந்தியதேசாபிமானத்திற்காகத்தான் நாம் இருக்கிறோம். மாறாக, இந்துத்துவா தேசாபிமானத்திற்கோ அல்லது இந்துத்துவா தேசியவாதத்திற்கோ அல்ல. இந்திய தேசாபிமானத்தை தண்ணீர் ஊற்றி வளர்ப்பதுதான் நம் கடமையேயொழிய, மதவெறியர்கள் ஊற்றி வளர்த்திடும் இந்துத்துவா தேசியவாதத்தை அல்ல. இவ்வாறு இந்துக்கள் அல்லாதவர்கள் மீது வெறுப்பை ஊட்டி வளர்த்ததன் மூலமாகத்தான் ‘பசுப்பாதுகாப்பு குண்டர்கள்’ உருவாகி இருக்கிறார்கள். இவர்கள் கூறும் தேசியவாதம், நாட்டுக்கு நல்லது என்று என்னால் கருத முடியவில்லை. எனவேதான் இவர்களின் தேசியவாதம் என்ன என்பது குறித்து மேலான இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
ஹிட்லரின் தேசியவாதம்போல்
இவர்கள் கூறும் தேசியவாதம் போல் உலகில் பிற இடங்களிலும் இருந்திருக்கிறது. ஹிட்லரின் தேசியவாதம் இத்தகையதுதான். ஹிட்லரின் தேசியவாதம் எப்படி இருந்தது? ஹிட்லர், ஜெர்மன் தேசியவாதம்தான் பிரம்மாண்டமானது என்றும், பேருருவம் படைத்த உயிரினம் என்றும் (gigantic national organism) கூறிக்கொண்டிருந்தான். ஹிட்லர் தன்னுடைய ‘மெயின் கேம்ப்’ என்னும் நூலில் எழுதியுள்ளதைப் படிக்கிறேன். ‘இத்தகைய பிரம்மாண்டமான உயிரினம், இதற்கு எதிராகத் துளிர்விடும் மற்ற உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கக்கூடிய விதத்தில் வலுவானதாக வளர்ந்திட வேண்டும்’ பிறகு இதனை நிறை வேற்றுவதற்கு ஹிட்லர் என்ன கூறினான். மெயின் கேம்பிலிருந்து மேலும் படிக்கிறேன். ‘ஜெர்மானிய இனம் (இந்த இடத்தில் இந்துத்துவா என்று மாற்றிப் படிக்க) மற்ற இனங்களுடன் இரண்டறக் கலக்காமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்குக் காரணம், பலவீனமான அல்லது நோய்க்கு ஆளான அல்லது ஊசலாட்டத்துடன்கூடிய உயிரினம் இதனுடன் கலந்தால், ஜெர்மன் தேசியவாதம் என்கிற உயிரினத்தை வலுப்படுத்திட முடியாது. மட்டமானவை எப்போதும் உயர்வானதைவிட அதிகம் இருந்திடும் என்பதால், அதனை உயர்வான உயிரினத்துடன் சேர அனுமதித்திடக் கூடாது.’
இவர்கள் தங்களுடைய பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி கூறிவருவதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். எனவே இத்தகைய மட்டரகமான கூறுகளைக் களைந்திட வேண்டும் என்று ஹிட்லர் கூறினான். அப்படித்தான் அவர் ஜெர்மன் தேசியவாதத்தை வலுப்படுத்த முயன்றான். அதையேதான் இவர்களும் பின்பற்றுகிறார்கள். ‘இந்துக்கள் அல்லாத அனைவரையும் களையெடுங்கள். இந்து தேசியவாதத்தை வலுப்படுத்துங்கள்’ என்பது இவர்கள் சித்தாந்தமாகும். இத்தகைய சித்தாந்தத்தைத்தான் இன்றைய தினம் இவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் இந்து உரிமை அல்ல. இதுஇந்துத்துவா தேசியவாதம் ஆகும்.
இத்தகைய இந்துத்துவா தேசியவாதம்தான் ‘பசுப்பாது காப்புக்குழு’ போன்ற குழுக்களுக்கு சக்தியைக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக, தலித்துகளுக்கு எதிராக கொலைபாதகச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இத்தகைய குழுக்களை அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பது போன்றவை என்று கருதிவிட வேண்டாம். இவை ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக முளைத்திட்ட சமூக விரோதக் குழுக்களோ அல்லது கிரிமினல்களோ கிடையாது. வல்லபாய் பட்டேல் கூறியது போன்று வன்முறைக் கலாச்சாரம் உருவாக்கிய ஜென்மங்கள் இவர்கள். இவர்களின் வன்மு றைக் கலாச்சாரம் இத்தகைய குழுக்களை நடவடிக்கைகளில் இறக்கி விட்டிருக்கிறது.
நம் அரசமைப்புக் குடியரசின் அடித்தளமாக விளங்கும் அனைவரும் சமம் என்கிற உரிமையையே தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் கடவுளைக் கும்பிடும் அடிப்படை உரிமையையே மறுக்கிறது. ஒருவர், தான் விரும்பும் மத நம்பிக்கையை மற்றொருவரிடம் பரப்பிடும் உரிமையை மறுக்கிறது. இதனை அனுமதிப்போமானால், இப்போதைய அரசமைப்புச் சட்டத்தின் ஒழுங்கையே அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறோம் அல்லது அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதாகும். எனவேதான் நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவதற்காக முஸ்லிம்களையும், தலித்துகளையும் கொன்று குவிக்கும் ‘பசுப் பாதுகாப்புக் குழுக்களுக்கு’ எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்து மதவெறியர்களின் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து நாம் மட்டும் கூறவில்லை. அரசாங்கம் மிகவும் விரும்பும் வெளிநாட்டு ஊடகங்கள் கூட, குறிப்பிட்டி ருக்கின்றன.
அமெரிக்காவின் குரலுக்காவது மரியாதை கொடுங்கள்
‘தி நியூயார்க் டைம்ஸ்’ என்னும் ஊடகத்தைஅரசாங்கம் உச்சாணிக் கொம்பில் வைத்திருக்கிறது. அந்த ஊடகம் என்ன சொல்கிறது? இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு அது தன்னுடைய தலையங்கத்தில் என்ன எழுதியிருக்கிறது, தெரியுமா? ‘இந்து மதவெறியர்களால் கொலைவெறித் தாக்குதல்கள் மோடியின் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் மீதான இதன் பாதிப்புகள் ரத்தத்தை உறையவைக்கக்கூடிய விதத்தில் இருக்கின்றன. வரும் ஆகஸ்ட் 15 இந்தியா தன்னுடைய 70 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடக்கூடிய தருணத்தில் இந்நிலைக்கு மோடி கொண்டு வந்திருக்கிறார்’ என்று எழுதியிருக்கிறது.
இந்த வாரம் ஃபைனான்சியல் டைம்ஸ் ஏடு என்ன எழுதியிருக்கிறது, தெரியுமா? ‘இந்த அரசாங்கத்தின் பிரதமர் இந்து உரிமைக்குத் துணைபோவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கத்தின் கொள்கையின் காரணமாக மாட்டுக்கறி வர்த்தகம் செய்தார் அல்லது சாப்பிட்டார் என்ற சந்தேக த்தின்பேரில் இந்துமத வெறியர்கள் 25க்கும்மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தி ருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
இவ்வாறு நாட்டில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் நம் அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளுக்கு முற்றிலும் விரோதமான வைகளாகும். இங்கே இருக்கின்ற நாம் அனைவரும் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது நம் அனைவரையும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்குக் கீழ்தான் செயல்படவேண்டும் என்று கூறியுள்ளது. இதுவே இன்றைக்குக் கேள்விக் குறியாக்கப்பட்டி ருக்கிறது.
சுவாமி விவேகானந்தர் என்ன கூறினார்? ‘பல்வேறு திசைகளில் உற்பத்தியாகும் பல்வேறு நதிகளும் கடைசியில் கடலில் கலப்பதைப் போல, பல மதத்தினரும், ஏன் கடவுள் மறுப்பாளரும்கூட, மனித சமுதாயம் என்னும் கடலில் தான் கடைசியில் கலக்கிறார்கள்.’ பகவத்கீதை என்ன கூறுகிறது? விஷ்ணு அவதாரம் எடுத்த சமயத்தில், கிருஷ்ணன் கீழே இறங்கி வந்து, ‘நான் அனைத்து மத நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றுவேன்’ என்கிறார். இதைத்தான் என்னுடைய தாய் நாடு எனக்குக் கூறியிருக்கிறது.
நான் என்ன உடுத்த வேண்டும்? நான் என்ன சாப்பிட வேண்டும்? என்னுடைய நண்பன் யார்? இவ்வாறெல்லாம் என்னைக் கட்டாயப்படுத்திட நீங்கள் யார்? பசுக்களைக் கொன்றார்கள் என்று பசுப் பாதுகாப்புக்குழுவினர் முஸ்லிம்களையும், தலித்துகளையும் கொல்கிறார்கள். ஆனால் இன்று நாட்டின் நிலைமை என்ன? உலகிலேயே மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இந்தத் தொழிலில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ‘தேசவிரோதிகளா?’ இந்த அரசாங்கம் எங்கள் கோரிக்கைக்கு செவிமடுக் காவிட்டாலும், குறைந்தபட்சம் ஜி.20 நாடுக ளின் கருத்துக்காவது மதிப்புக் கொடுங்கள். உங்கள் மூன்று ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஐந்துமுறை பயணம் செய்திருக்கிற அமெரிக்காவின் குரலுக்காவது மரியாதை செலுத்துங்கள்.
ஷேக்ஸ்பியரை ஏன் இழுக்கிறீர்கள்?
இந்து உரிமையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதை நிறுத்துங்கள். அதன் மூலம் முஸ்லிம்கள், தலித்துகள் கொல்லப்படுவதையும் நிறுத்துங்கள். இது ஒன்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை அல்ல. இந்தக் கொலைபாதக நிகழ்வுகள் நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தை அரித்து வீழ்த்த வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கிற சித்தாந்தரீதியான கட்டமைப்பின் ஓர் அங்கமாகும். மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்னும் நம் அரசமைப்புச் சட்டத்தை, தங்கள் சித்தாந்தமான ‘இந்துத்துவா ராஷ்ட்ரம்’-ஆக மாற்றுவதற்கான நடவடிக்கைகளாகும்.  எனவேதான், இது மிகவும் ஆழமான ஒரு விஷயமாகும். எனவேதான், பசுப் பாதுகாப்புக்குழுக்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ரோமியோ எதிர்ப்புக் குழுக்களையும் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பாவம், ஏன் ஏழை ஷேக்ஸ்பியரை உங்கள் இயக்கத்திற்கு இழுத்து வந்திருக்கிறீர்கள்? ஏன் ‘ரோமியோ எதிர்ப்பு?’ ஏன் நீங்கள் ஷேக்ஸ்பியரை அவமானப்படுத்துகிறீர்கள்? …(குறுக்கீடு) … இந்தக் குழுக்கள் அனைத்தையும் தடை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாம் எந்த மதநம்பிக்கையாளராக இருந்தாலும் அல்லது கடவுள் நம்பிக்கை யற்றவர்களாக இருந்தாலும் நம் வேற்றுமைகளைக் கடந்து இதனை நாம் விவாதித்திட வேண்டும். கடவுள் மறுப்பு என்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல. இந்துயிசம் எந்த அளவிற்குப் பழமையானதோ அந்த அளவிற்கு கடவுள் மறுப்பும் பழமையானதாகும். சார்வாகன் ஒரு கடவுள் மறுப்பாளன்தான். பிராமணக் கடவுள் மறுப்பாளன். எனவே கடவுள் மறுப்பாளன் என்பதாலேயே அவன் இந்தியாவிற்கு எதிரானவன் என்று முடிவு செய்துவிடாதீர்கள். நம் ஒவ்வொருவருக்கும் உரிமைகள் உண்டு. நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, நம் நாடு தரம் தாழ்ந்து சென்று கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்திடுவோம். இதுவே இந்த அவைக்கு நான் அளித்திடும் செய்தியாகும். இத்தகைய மதவெறி அமைப்புகளைத் தடை செய்திட இந்த அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாகும்.’’
-ச.வீரமணி (19.7.17)


இஸ்லாமுக்கல்ல, நாட்டுக்கும் மக்களுக்குமே ஆபத்து சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாட்டில் முகமது சலீம் பேச்சு



ஈரோடு, ஜூலை 23-
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் இரண்டாவது மாநிலமாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மக்களவை உறுப்பினருமான முகம்மது சலீம் பேசியதாவது:
ஹரியானாவை சார்ந்த ஜூனைத் என்கிற இளைஞன் ரயிலில் பயணம் செய்தபோது சிலரால் கொடூர மாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டான். அவனது சகோதரர் ஜாகீர் கடுமையான தாக்குதலுக்குஆளாக்கப்பட்டு தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருப்பதாக தகவல் வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து நானும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்தும் ஜாகீரின் தாயாரையும் , இளைய சகோதரனையும் சந்தித்துப் பேசினோம்.
இவ்வளவு பெரிய சம்பவம் நடைபெற்றும் கூட குற்றவாளிகள் யாரையும் காவல்துறை கைது செய்யவும்இல்லை, வழக்கும் பதிவுசெய்யவில்லை. காவல்துறை அதிகாரிகளும் ஊடகங்களுக்கு உண்மையைச் சொல்லாமல் திரித்துச்சொன்னார்கள். நாங்கள் நேரில் சென்று விசாரித்து நடந்த உண்மைகளையெல்லாம் ஊடகங்களுக்குச் சொன்ன பிறகுதான் இந்த சம்பவம் மக்களுக்குத் தெரியவந்தது.
கடந்த மூன்றாண்டுகளாக மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவத்தை மட்டும் உங்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்பதற்காகவே இதனைச் சொல்கிறேன்.
வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் இருக்கிற நிலைமைகள் வெவ்வேறாக இருக்கின்றன. தென்னிந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் நிலைமை நேர்மாறாக மிக மோசமானதாக இருக்கிறது. அதன் உச்சகட்டம்தான் குஜராத்தில் நடைபெற்ற கோரச் சம்பவங்கள். உ.பி. மாநிலத்தின் தாத்ரியில் நீங்கள் மாட்டிறைச்சி உண்டீர்கள், பசுவை வதைக்கிறீர்கள் என்று சொல்லித்தான் தாக்குதல் நடத்தப் பட்டது.
இந்த பிரச்ச னைகளெல்லாம் ஏன் வருகின்றன? ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பெரும்பான்மை மக்களின் மத வெறியை தூண்டிவிட்டு அம்மக்களை தங்களின் பக்கத்தில் திரட்டுவது என்பதுதான் இந்த பாசிச கூட்டத்தின் வேலையாக உள்ளது. ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு ஒவ்வொரு காட்சியும் வெவ்வேறு இடத்தில் எடுக்கப்படுகிறது. அந்த சின்ன சின்ன காட்சிகளை ஒன்றிணைத்து பிறகு மூன்று மணிநேரப் படமாக தயார் செய்து வெளியிடப்படும்.
அதுபோலத்தான் பாஜகவின் ஆட்சியில் கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு இடத்திலும் சங்பரிவாரங்கள் வெவ்வெறு பிரச்சனைகளை கிளப்பிவிடுகிறார்கள். விவாதத்தை உருவாக்குகிறார்கள். கலவரத்தை நடத்துகிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மை மதத்தினரை தனது பக்கம் திரட்டி ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவது என்பதுதான் இவர்களின் நோக்கமாக உள்ளது. அரசு நடத்துகிற ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில்கூட கல்விக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனை எதிர்த்து ஐதராபாத் பல்கலை கழகம், தில்லி பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராடுகிறார்கள். ஆனால் இந்த போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது தேசவிரோத முத்திரை குத்தப்படுகிறது.
காஷ்மீரின் பயங்கரவாதிகள், பாகிஸ்தானின் ஏஜென்டுகள் என பழிசுமத்தப்படுகிறார்கள். உரிமைக்காக போராடுகிற மாணவர்கள் மீது இதுபோன்ற குற்றச் சாட்டை சுமத்துவதுதான் பாஜக அரசின் அணுகுமுறையாக உள்ளது. இதேபோல மோடி அரசு தனது பொருளாதாரக் கொள்கையை அமலாக்குவதற்கும் இதுபோன்ற தேச பக்த நாடகத்தை அரங்கேற்றுகிறது. தற்போது நாட்டில் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நமது அரசியல்சட்டம் வழங்கியுள்ள நல்ல அம்சங்கள் அனைத்தும் மீறப்படுகின்றன. அரசியல் சட்டத்தை ஏற்காதவர்கள்தான் தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சகோதர த்துவம், அமைதி, மனித நேயத்தை தகர்ப்பதற்கு சங்பரிவார அமைப்புகள் முயற்சிக்கின்றன. இதனை எதிர்த்து அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டியுள்ளது.
அன்றைக்கு கவிஞர் சுப்பிர மணிய பாரதி, காந்தி, தாகூர், அபுல்கலாம் ஆசாத் போன்ற தலை வர்கள் இந்த மாண்பைப் பாதுகாக்க போராடினார்கள். அதுபோலத்தான் நாமும் இந்த போராட்டத்தை ஒன்றிணைந்து நடத்த வேண்டி யுள்ளது. இன்று பிளவுவாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. இந்து முஸ்லிம் என்ற பெயரால் பிளவு படுத்தப்படுகிறது. சிறுபான்மைக்கு எதிராக பெரும்பான்மை திரட்டப்படுகிறது. தங்களின் சொந்தலாபத்திற்காக மதவெறி தூண்டப்படு கிறது. இதனால் மக்கள் கடுமை யான துன்ப துயரத்திற்கு ஆளாக்கப்படு கிறார்கள். ஆகவேதான், இந்துத்துவா அமைப்புகள் மக்களை பிளவுபடுத்தி அதன் மூலமாக ஆதரவு திரட்ட முனையும் நிலையில், மறுபுறம் சிறுபான்மை மக்களை மதவெறியூட்டி ஒன்றுபடுத்தி மதமோதலை உருவாக்கும் சூழல் நாட்டில் ஏற்பட்டு வருகிறது. இஸ்லாம் ஆபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
உண்மையில் இஸ்லாம் ஆபத்தில் இல்லை, நம் நாடும் மக்களும்தான் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய சூழலில்தான் சிறு பான்மை மக்கள்நலக்குழு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் இயக்கங்களை தொடர்ந்து நடத்து கிறது. இதுபோன்ற மாநாடுகள் மதவெறியர்களின் சூழ்ச்சியை எதிர்கொள் வதற்கும், மக்களின் ஒற்றுமையை பாதுகாக்கவும் திட்டத்தை உருவாக்குகிற பணியைச் செய்கின்றன. மக்கள் ஒற்றுமை ஓங்குக.. நாட்டின் மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை ஓங்கட்டும்.இவ்வாறு அவர் பேசினர்.
இவரின் ஆங்கில உரையை எஸ்.நூர்முகம்மது தமிழாக்கம் செய்தார்.

(நன்றி-தீக்கதிர் நாளிதழ், 24-7.17)

Saturday, July 22, 2017

இந்தியாவில் மிகவும் சிறப்பாக ஆளப்படும் மாநிலம் குஜராத் அல்ல--சயீத் நக்வி

இந்தியாவில் மிகவும் சிறப்பாக ஆளப்படும் மாநிலம் குஜராத் அல்ல
--சயீத் நக்வி
பகலைத் தொடர்ந்து இரவு வரும் என்ற முதுமொழிக்கேற்ப காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுக்கும் மாநிலங்களில் அதற்குப் பதிலாக அநேகமாக அதனை பாஜக கைப்பற்றும். ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான  திரிபுரா இதற்கு முற்றிலும் மாறுபட்டு நிகரற்ற முறையில் ஸ்திரத்தன்மையுடன் கூடிய மாநிலமாக விளங்குகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அங்கே ஆட்சி அதிகாரத்தில் 32 ஆண்டுகளாக கோலோச்சுகிறது. அதன் வாக்கு சதவீதம் 50க்கும் மேலாகும். காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அப்படி ஒன்றும் குறைவானது அல்ல. அதற்கு 36 சதவீதம் வாக்குகள் உண்டு. இப்போது அதன்மீது பாஜக கண் வைத்திருக்கிறது. மமதா பானர்ஜி மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், காங்கிரசையும் தகர்த்தபோது, அதன் பாதிப்பு திரிபுராவிற்கும் சென்றது. அங்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் சுதிப் ராய் பர்மான் திரிணாமுல் காங்கிரசுக்குத் தாவினார். ஏதேனும் ஆதாயம் கிடைக்காதா என்ற ஆசையில் இவ்வாறு காங்கிரசிலிருந்து திரிணாமுல் காங்கிரசுக்குத் தாவிய பர்மானுக்கு, இப்போது வேறெங்கிருந்தாவது அதைவிடக் கூடுதலாக ஆதாயம் கிடைக்குமெனில் தாவாமல் இருப்பாரா? மிகப்பெரிய அளவில் அவருக்கு அனுகூலங்கள் கிடைத்துள்ளது என்கிற வதந்தி அகர்தலா முழுவதும்  பரவியிருக்கிறது. தற்சமயம் திரிபுரா சட்டமன்றத்தில் பாஜகவிற்கு என்று  ஓர் உறுப்பினர் கூட கிடையாது. பர்மான் தன்னுடன் உள்ள 5 உறுப்பினர்களுடன் பாஜகவிற்குத் தாவ இருக்கிறார். இதனை அம்மாநில ஆளுநரான தத்தாகடா ராய் வரவேற்றிருக்கிறார்.  அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக ஊழியர்களே முஸ்லீம்களுக்கு எதிராக இவர் கக்கிய வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.   முஸ்லீம்கள் பொது இடத்தில் பன்றிக் கறியைச் சாப்பிடத் தொடங்கினார்கள் என்றால்தான்,  அவர்கள் நம்முடன் “முறையாக ஒருங்கிணைவார்கள்” என்று தான் நம்புவதாக ஆளுநர் கூறுகிறார்.  பன்றியுடன் அவருக்குள்ள சித்திரங்கள் அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைக்கின்றன. உதாரணமாக, முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு அவர் விரும்பும் தண்டனை என்ன தெரியுமா?  அவர் கூறும் யோசனையைக் கேட்பவர்கள் தங்கள் மூக்கைப் பிடித்துக்கொள்வார்கள். “பன்றித்தோலுடன் அவர்களைச் சுற்ற வேண்டும், பன்றிகளின் மலத்துவாரத்தில் அவர்களின் முகம் இருக்கும்படி வைத்து அவர்களைப் புதைக்க வேண்டும்.”
இத்தகைய இழிவான வசைமாரிக் கூற்றுகள் குறித்து கடந்த 17  ஆண்டு காலமாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மாணிக் சர்க்கார் அலட்டிக்கொள்ளவில்லை. எனினும்,  மாநிலத்தில் 7 சதவீதம் அளவிற்கு இருக்கின்ற முஸ்லீம்கள் இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்துள்ளார்கள்.  இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக ஆளப்படும் மாநிலமாக திரிபுரா விளங்குவதை என் அனுபவத்தில் நான் கண்டுள்ளபோதிலும், ஊடகங்கள் அதனைக் வெளிக்கொணர விரும்பாததால், நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் இது குறித்து ஒன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள்.  மத்திய சட்ட அமைச்சரான ரவி சங்கர் பிரசாத், “நான் மிகவும் வியந்து பாராட்டும் முதல்வராக மாணிக் சர்க்கார் விளங்குகிறார்” என்று ஒரு சமயம் கூறியதை அனைவருக்கும் சொல்லியாக வேண்டும்.
லண்டனிலிருந்து வெளிவரும் இண்டிபெண்டெண்ட் ஏட்டின்  இதழியலாளர் ஆண்ட்ரு பன்கோம்ப் (Andrew Buncombe), அகர்தலா சென்றுவிட்டு, புதுதில்லி திரும்பியபின்,  திரிபுரா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை மிகவும் வியந்து போற்றிப் புகழ்ந்தார். “ஒழுங்கமைதி, நேர்த்தி, களங்கமற்ற, நிர்வாகத்தில் எவ்விதமான  அபத்தமும் நிகழாக மாநிலம்.”  பார்வையாளர்கள் பலரும் பார்த்திருப்பதைப்போல, அவரும் பார்த்திருக்கிறார். “சிலசமயங்களில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு நடந்தே வருகிறார்.” “நானே, அவரது துணைவியார், ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக இருப்பவர், பள்ளிக்கூடத்திற்கு சைக்கிள் ரிக்சாவை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன்.”  
திரிபுராவின் மனிதவள வளர்ச்சி அட்டவணை குறித்து எவருக்கேனும் தெரியுமா? அம் மாநிலத்தின் மக்கள் தொகை குறைவுதான். 40  லட்சம்தான்.  நாட்டில் இதன்னியில் கோவா மற்றும் சிக்கிம் ஆகியவைதான் சிறிய மாநிலங்களாகும். எனினும்கூட, இம்மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 96 சதவீதம் ஆகும். நாட்டில் மிக உயர்ந்த நிலையில் உள்ள மாநிலமாகும். குஜராத்தில் எழுத்தறிவு எவ்வளவு தெரியுமா? 83 சதவீதம் மட்டுமே. (நான் கேரளாவை இதில் சேர்க்கவில்லை. ஏனெனில் ஒருசமயம் அது நிகரற்று விளங்கிய மாநிலமாகும்.)
தனிமனித ஆயுட்காலம் ஆண்கள் 71 ஆண்டுகள், பெண்கள் 73 ஆண்டுகளாகும்.  இதிலும் இம்மாநிலம் நாட்டில் வரலாறு படைத்துள்ளது.  குஜராத்தில் இது முறையே 64,  66 ஆகும். திரிபுராவில் பழங்குடியினரிடையே பாலின பாகுபாடு என்பது அரிதிலும் அரிதாகும்.
   இதற்கெல்லாம் காரணம் என்ன? இங்கு ஆட்சியில் உள்ள தலைமையின் மேதைமைதான். மாநிலத்தில் உள்ள முக்கியமான அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு,  தாங்கள் தங்கள் அரசியலில் செயல்படுத்துவதைப் போலவே, நல்லாட்சி வழங்குவதிலும் ஒரு கலையாக செயல்படுவதுதான் காரணம். தங்கள் மார்பை விரிவாக்கிக் காட்டுவதற்குப் பதிலாக, ஏதேனும் பிரச்சனை என்றால் கையைப் பிசைந்துகொண்டு நிற்பதற்குப் பதிலாக,  மாநிலத்திற்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, மேலிருந்து கீழ் வரை ஆராய்கிறார்கள், அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார்கள், கட்சி ஊழியர்களை அழைத்துப் பேசுகிறார்கள், மாநிலத்தில் இயங்கும் மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஈடுபடுத்துகிறார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சுயாட்சி  கவுன்சில்களையும் பங்கேற்க வைக்கிறார்கள், (இவை மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்காகும், மாநிலத்தில் பழங்குடியினர் பகுதிகளில் இயங்குபவைகளாகும்) இவ்வாறு அனைவரது உண்மையான பங்களிப்பினையும் உணர வைத்து, செயல்படுத்துகிறார்கள்.  இதனை நாம் பற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து, இந்த மாநிலத்தில் மிக முக்கியமான பிரச்சனை, பழங்குடியினரையும், பழங்குடியினரல்லாதவர்களையும் மோத விடும் பிரச்சனையாகும்.  இங்கே மன்னராட்சி இருந்த சமயத்தில், பழங்குடியினர்தான் அதிகமாக இருந்தார்கள். ஆனால், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) உருவான பின்னர், அண்டைப் பகுதிகளிலிருந்த இந்து வங்காளிகள்  திரிபுராவிற்கு புலம்பெயர்ந்து வந்தார்கள். இதன் காரணமாக இங்கிருந்த பழங்குடியினர் (மொத்தம் 19 பழங்குடியினத்தவர்கள் இருக்கிறார்கள்), மாநிலத்தில் சிறுபான்மையினராக மாறிவிட்டார்கள்.  இப்போது மாநிலத்தின் மக்கள் தொகையில் 70 சதவீதத்தினர் வங்காளிகள், 30 சதவீதத்தினர் பழங்குடியினராவார்கள்.
அதிகாரப் பசி கொண்ட காங்கிரஸ், வங்காளிகளின் வாக்கு வங்கியை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக  வங்காளிகள் – பழங்குடியினர் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தது. இத்தகைய இழிவான அரசியலில் பாஜக மட்டும்தான் செயல்படுமா என்ன? எங்காவது எண்ணிக்கையில் குறைவு ஏற்படுமானால், ஒரு பழங்குடியினத்தவர், இன்னொரு பழங்குடியினத்தவருக்கு எதிராக பயன்படுத்தப்படுவார். இவ்வாறுதான் இந்த மாநிலம் முன்பு இருந்தது.
மாபெரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்  தலைவரான தசரத் தேவ், எதிர்காலம் குறித்து திட்டமிட்டார். பழங்குடியினர் மத்தியில் எழுத்தறிவை ஏற்படுத்துவதற்காக 1945இல் மக்கள் எழுத்தறிவு இயக்கத்தை (ஜன சிக்சா அபியான்) தொடங்கினார்.  அன்றைக்கு ஆட்சியிலிருந்த மகாராஜாவிற்கு நிர்ப்பந்தம் கொடுத்து, 500 ஆரம்பப் பள்ளிகளுக்கு  அங்கீகாரத்தைப் பெற்றார்.  அது இப்போது பல்கிப் பெருகி, மாநிலத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற அளவில் வியாபித்திருக்கிறது.  
இத்தகைய அடித்தளத்தின் காரணமாகத்தான் பழங்குடியினர் இம்மாநிலத்தில் கம்யூனிசத்தை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் வங்காளிகள், காங்கிரஸ் பக்கம் சென்றார்கள்.  காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிளவுவாத நிலைப்பாட்டில் திருப்தி அடைந்துவிட்டது. ஆனால், நிருபன் சக்ரவர்த்தி போன்ற ஒரு  தலைவர்  இம்மாநிலத்திலிருந்த சிக்கலான சமூக எதார்த்தத்தை நன்குணர்ந்தார். பழங்குடியினரின் ஆதரவு இல்லையென்றால், வங்காளிகளின் நிகழ்ச்சிநிரலை ஒரு கட்டத்திற்கு மேல் எடுத்துச் செல்லமுடியாது. அதேபோல், வங்காளிகளின் உதவியில்லலாமல் பழங்குடியினர் முன்னேற முடியாது. எனவே, பழங்குடியினர்—பழங்குடியினரல்லாதவர் ஒன்றுபட்ட போராட்டம், ஒன்றே நமது துயரோட்டும் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. அது இரு தரப்பினர் மத்தியிலும் ஆழமாக எடுத்துச் செல்லப்பட்டது.
1940களிலும், 50களிலும் கம்யூனிசத்தைக் கையில் எடுத்துக் கொண்ட பழங்குடியினர் மத்தியில் இந்த முழக்கத்தை உடனடியாகப் பற்றிக்கொண்டுவிட்டார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக வங்காளிகளும் இம்முழக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள்.  இவ்வாறு இடதுசாரிகள் தங்கள் ஒற்றுமைக்கான மேடையை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கிய அதேசமயத்தில், காங்கிரஸ் வங்காளிகள் இடையே கவனம் செலுத்துவதில் மட்டுமே தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்கள்.  இதன்காரணமாக கொஞ்சம் தேர்தல் ஆதாயம் என்பது அவர்களுக்கு இல்லாமல் இல்லை. ஆயினும் வாக்காளர்கள் மத்தியில், உண்மையில் மக்கள் மத்தியில், இடதுசாரித் தலைவர்கள் அனைவருமே மிகவும் எளிமையுடனும், எவ்விதமான லஞ்ச லாவண்யங்களுக்கும் இடம் கொடுக்காமலும் இருந்ததானது, வாக்காளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கத் தொடங்கியது.  காங்கிரஸ்  எம்எல்ஏ-யான கோபால் ராய் அவர்களே, “தனிப்பட்டமுறையில் இவர்கள் லஞ்சலாவண்யத்திற்கு இடம் கொடுக்காதவர்கள் என்பதை மறுக்க முடியாது,” என்று ஒப்புக்கொள்கிறார்.
1978-88இல் முதல் இடது முன்னணியின் முதலமைச்சராக இருந்த நிருபன் சக்ரவர்த்தி, முதலமைச்சரின் அலுவலக பங்களாவிற்குள் நுழைந்துவிட்டு, பின்னர் வெளியேறிய போது, இரண்டு டிரங்கு பெட்டிகளில் – தன்னுடைய துணிமணிகள், புத்தகங்கள் மற்றும் ஒரு ஷேவிங் செட்டுடன் வெளியேறினார். முதல்வரின் வீட்டிற்குத்  தேவையான மளிகை சாமான்கள் அவருக்கான ரேஷன் அட்டையிலிருந்துதான் பெறப்பட்டன. நவீன முதலாளித்துவம் அவரை அநேகமாக ஒரு தீண்டத்தகாதவராகவே கருதியிருக்கும். ஏனெனில் அவருக்கென்று ஒரு வங்கிக் கணக்கு கூட கிடையாது. அவரது சீடரான, இப்போதைய முதலமைச்சரான மாணிக் சர்க்காரும், மிகவும் சிக்கனமானவர்தான். முதலமைச்சர் மத்திய, மாநிலத் திட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்துள்ளார் என்பது நம்பமுடியாததாகத்தான் இருந்தது.  நான் அவரை, தாகூரின் புகைப்படத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த  அவருடைய மிகவும் எளிமையான அலுவலகத்தில் அவரை சந்தித்தபோது, அவர் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் அமலாக்கம் குறித்த பரிசீலனை அறிக்கையை முடித்து வைத்திருந்தார்.   
திட்டங்களை அமல்படுத்துவதில் இம்மாநிலத்திற்கு இணையாக வேறெந்த மாநிலத்தையும் சொல்லமுடியாது. கிளினிக்குகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள், தாய்-சேய் பாதுகாப்பு இல்லங்கள், மின்சார விநியோகம், எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலத்தின் உள்பகுதிகளைக்கூட இணைத்திடும் சாலைகள் அமைத்தல் – என அனைத்தும் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவை அனைத்தும், மாநிலத்தை ஒரு பொதுவான அமைதிப் பூங்காவாக மாற்றி அமைத்திருந்தன.
அப்போது மாநிலத்தின் காவல்துறைத் தலைவராக இருந்த கே.நாகராஜ், “மாநிலத்தில் குற்றங்கள்  நடப்பவை என்பது மிகவும் குறைவாகும்” என்று கூறி வியந்தார். மூன்றாண்டுகளுக்கு முன்னாள் ஆட்சிக்கெதிராக பிரிவினைவாதிகளின் கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருந்த மாநிலத்தில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டே வெளியே வர பயந்து கொண்டிருந்த ஒரு மாநிலத்தில், இது ஓர் அதிசயமாகும். “காவல்துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பரிபூரண ஒருங்கிணைப்பு நிலவுவதே இதற்கு ஒரே காரணமாகும்.”  பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தூய்மை பாரதம் திட்டத்தில் என்ன கூறுவாரோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம், ஆனால், அவர் தன்னுடைய அதிகாரிகள் எவரையாவது திரிபுராவின் உள்ளடங்கிய பகுதிகளுக்கு அனுப்பினார் என்றால், இவ்வளவு குறுகிய காலத்தில் இது எப்படி சாத்தியம் என்று  அவர்கள் ஆச்சர்யத்தில் தங்கள் கண்களைக் கசக்கிக் கொள்வார்கள்.
(நன்றி-தி டெக்கான் கிரானிக்கிள், 21.07.17)
(தமிழில்: ச. வீரமணி)