Sunday, May 4, 2014

மாக்கியவெல்லியின் தந்திரம்!


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
16வது மக்களவைக்கான தேர்தல் களில் மொத்தம் உள்ள 9 கட்டங்களில் ஏழு கட்டங்களுக்கான தேர்தல்கள் முடிவடைந்துவிட்டது. ஏழாவது கட்டத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங் கிரஸ் மிகவும் விரிவான அளவில் வன்முறையில் இறங்கி, வாக்குச் சாவடி களைக் கைப்பற்றி மோசடிகளில் ஈடுபட்டது. தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பாக முறையீடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மோசடி நடந்தவாக்குச்சாவடிகளில் மத்திய பாது காப்பு படையினரின் முறையான மேற்பார்வையுடன் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக் கிறோம். தேர்தல் ஆணையத்தின் உரிய முடிவுகளுக்காகக் காத்திருப்போம். அடுத்து, இன்னும் இரு கட்டத் தேர்தல்கள் நடைபெறவேண்டிய சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ்/பாஜக திட்டமிட்டமுறையில் மதவெறித் தீயை கிளறிவிடத் தொடங்கி இருக்கிறது.

இதற்குக் காரணம், மீதம் உள்ள இரு கட்டத் தேர்தல்களில் மிகப்பெரும்பாலான தொகுதிகள் உத்தரப் பிரதேசத்திலும், பீகாரிலும் நடைபெறவிருக் கின்றன. மக்களவைக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பக்கூடிய மாநிலங்களாக இவ்விரு மாநிலங்களும் விளங்குவதோடு, மதவெறி சக்திகளுக்கும் மிக முக்கியமான மாநிலங்களாக, அவற்றின் வலுவான அடித்தள மாக இவை விளங்குவதுமேயாகும். பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களின் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் விதத்தில் மதவெறித் தீ விசிறிவிடப் படுகிறது. பாஜகவின் பிரதமர் வேட் பாளரே மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் வங்கதேசவாசிகள் மே 16க்குப்பின் இந்தியாவைவிட்டு வெளியேற தங்கள் மூட்டை முடிச்சு களுடன் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்திருப்பதன் மூலம் இத்தகைய வாக்குவங்கி அரசியலுக்கு நெருப்பை வைத்துத் துவக்கி வைத் திருக்கிறார்.

கடந்த காலங்களிலும், அவர்கள் வங்க மொழி பேசும் மெய்யான இந்தியப் பிரஜைகளை, அதிலும் குறிப்பாக மேற்குவங்கத்திலிருந்து தில்லி, மும்பை போன்ற மாநகரங்களில் வந்து வசிப் போரைக் குறிவைத்து, துன்புறுத்தி, அச்சுறுத்தி இருக்கிறார்கள். இப்போது ஆர்எஸ்எஸ்/பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் இவ்வாறு கூறியிருப்பதானது, இந்துத்துவா வெறியர்கள் தங்கள் மத வெறித் தீயை நாடு முழுவதும் பற்ற வைத்து தங்கள் தாக்குதலைத் தொடுப் பதற்கான சமிக்ஞையே தவிரவேறல்ல. இதனைத் தொடர்ந்து ஆர் எஸ்எஸ் ஆக்டோபஸின் கொடுக்குகள் இந்த வேலையில் இறங்கியுள்ளன. குஜராத் மாடல் என்பதன் உண்மையான சொரூபத்தை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் தொகாடியாவின் பேச்சு அமைந்திருக்கிறது. குஜராத்தில் சில முஸ்லிம்கள் இந்துக்கள் குடியிருக்கும் பகுதிகளில் நிலம் வாங்கியதை மிகவும் கேவலமான முறையில் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவர் பேசியிருக்கும் பேச் சானது, இன்றைய தினம் குஜராத்தில் இந் துக்களும் முஸ்லிம்களும் தனித்தனியே வாழக்கூடிய காலனிகளை உருவாக்கி இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்திய துணைக் கண்டத்தை பிரிட்டி ஷார் பிரித்ததில் உத்வேகம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது குஜராத் மதரீதியாக, நாட்டின் பிரதமராக வரத்துடிக்கும் இன்றைய குஜராத் முதலமைச்சரால், மாற்றப்பட்டிருக்கிறது. இப்படி மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் பாஜக கூடாரத்திற்கு ஏதோ கொஞ்சம் தேர்தலில் ஆதாயம் கிடைத்திடலாம். ஆனால் அதற்காக நாட்டு மக்கள் இத்தனை ஆண்டு காலம் கட்டிக்காத்து வந்த ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கம் அனைத்தையும் காவு கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது பாஜக இரண்டகமான முறையில் பேசத்துவங்கியிருப்பதிலிருந்து இது தெளி வாகிவிட்டது. நாட்டில் எங்கேயெல்லாம் மதவெறித் தீயை விசிறி அதன்மூலம் தாங்கள் ஆதாயம் அடைய முடியாது என்ற நிலை இருக்கிறதோ அங்கெல்லாம் பாஜக கூடாரம் தன்னுடைய உண்மை யான மதவெறி நிகழ்ச்சிநிரலை மூடி மறைத்து வைத்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சி குறித்து திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறது.

இப்போது முதல் ஏழு கட்டங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தேர்தல்கள் முடிந்துவிட்டன. மீதம் உள்ள இரு கட்டங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் தன் மதவெறிப் பற்களைக் காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ள பொரு ளாதார சுமைகளிலிருந்து ஏதேனும் நிவாரணம் கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஊடகங்களோ மக்களின் கவனத்தை இதிலிருந்து திசைதிருப்பும் நோக் கத்துடன், உணர்ச்சிபூர்வமான (sensational) செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக் கின்றன. `இளவரசர் தன்ஆட்சியை ஒருமுகப் படுத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்என்று மாக்கியவெல்லி அறி வுறுத்தினாரோ அதையெல்லாம் பாஜக/ஆர்எஸ்எஸ் கூடாரம் மிக அற்புதமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது, உங்கள் ஆட்சியில் எந்த அளவுக்கு மோசமாக மக்களை நடத்த முடியுமோ அந்த அளவுக்கு நடத்துங்கள். பின்னர் கொஞ்ச காலம் கழித்து அதனைக் குறைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மக்கள் உங்களையும், உங்கள் ஆட்சியையும் புகழத் தொடங்கிவிடுவார்கள் என்பதுதான் இதன்பொருள்.அதேபோன்று பாஜக சிறுபான்மை யினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக் களை’’ தங்கள் தலைவர்கள் மூலம் கட்டவிழ்த்துவிடும். பின்னர் அதனை சமாதானப்படுத்தக்கூடிய விதத்தில் அதன் `வல்லுநர்கள்பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை 41 மற்றும் 42ஆம் பக்கத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது என்றும் அதற்கு அது அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் பூசி மெழுகுவார்கள்.அடுத்த இரு கட்டத் தேர்தல் களின்போதும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் ஒரு பக்கத்தில் ஹிட்லரின் பாசிச பாணி பிரச்சார முறையைக் கட்டவிழ்த்துவிடக்கூடிய அதே சமயத் தில், மறுபக்கத்தில் இத்தகைய மாக்கிய வெல்லி தந்திரத்தையும் கையாளும் என்பது தெளிவாகி இருக்கிறது.

மதச்சார்பற்ற ஜனநாயக இந் தியக் குடியரசை, வெறிபிடித்த- சகிப்புத் தன்மையற்ற பாசிஸ்ட் இந்து ராஷ்ட் ரமாகமாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் மிக ஆபத்தான நிகழ்ச்சிநிரல் இது. இத்தகையதொரு நிகழ்ச்சிநிரல் வெற்றி பெற அனுமதித்தோமானால், பின், நாடு இன்றுள்ளதுபோல் இருக்காது. எண்ணற்றோர் உயிரிழக்க வேண்டி யிருக்கும், இதுநாள் வரை ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த மக்கள், தங்கள் உடலுக்குள் மதவெறி விஷம் ஏற்றப்பட்டு, ஒருவருக்கொருவர் கடித்துக் குதறி உயிர் துறக்க வேண்டிய கொடூரம் நிகழும்.

இந்தியா இதுநாள்வரை கட்டிக்காத்து வந்த நாகரீக சமுதாயம் தடம்மாறி நிலை குலைந்து நின்றுவிடும். எனவே, நடைபெறும் தேர்தல் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பதிலாக ஒரு மாற்று அரசாங்கத்தை, மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய விதத்தில் அமைத்திடக்கூடிய வகையில் மக்கள் அணிதிரள வேண்டியது மிகவும் அவசியம். அதுதான், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சிறந்ததோர் இந்தியாவை எதிர்காலத்தில் கட்டி எழுப்புவதற்கும் உதவிடும்.

தமிழில்: ச.வீரமணி


Tuesday, April 29, 2014

மே தின புரட்சிப் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிப்போம்!


ஏ.கே.பத்மநாபன்
மே தினக்கொண்டாட்டங்கள் உலகம் முழுதும் தொழிலாளர் வர்க்கத்தினிடையே போராட்ட உணர்விலும், ஒருமைப்பாட்டிலும் புத்தெழுச்சியை ஏற்படுத்திடும். இந்த ஆண்டு, உலகம் முழுதும் மே தினத்தைக் கொண்டாடுகையில், இந்தியத் தொழிலாளி வர்க்கம் மிகவும் முக்கியமானதொரு அரசியல் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் 16ஆவது மக் களவைக்கான பொதுத் தேர்தல்களில் பாதி ஏற்கனவே முடிந்துவிட்டது.இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் களத்திலும், இந்தியத் தொழிலாளி வர்க்கம், உலகின் பல பகுதிகளிலும் உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினரின் முக்கிய கோரிக்கைகளாகவுள்ள பல அம்சங்களை உயர்த்திப் பிடித்திருக்கின்றன.
ஊதியங்கள், வேலைப் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுடன், உழைக்கும் மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை ஆகிய அனைத்தும் இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய கோரிக்கைகளாக அமைந்துள்ளன. இவற்றிலிருந்து இந்தியத் தொழிலாளி வர்க்கமும் வேறுபடவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே நம் நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்தவைகளாகும்.
தங்கள் வாழ்க்கைப்பிரச்சனைகளுடன் நேரடியாகவும், நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் எதிர்காலத்துடனும் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனைகள் மீது உழைக்கும் மக்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியத் தொழிலாளி வர்க்கம் மேற்கொண்டுள்ள போராட்டம் என்பது கடந்த ஐந்தாண்டுகளாக அது நடத்திவரும் பிரம்மாண்டமான ஒன்று பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். வரலாறு படைத்திட்ட நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்கள் உட்பட ஒன்றுபட்ட இயக்கம் மற்றும் பல்வேறு துறையினர் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் என்பவை அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளை மாற்றுவதற்கான அவசியத்தின்மீது கவனம் செலுத்தும் வகையில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். அந்தவிதத்தில் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் பிரம்மாண்டமான போராட்டங்களுடன் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் நடத்திய போராட்டங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவைகளேயாகும்.
நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் முதலாளித்துவ உலகம்
கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ உலகம் கடும் நெருக்கடிக்குள் சிக்கி வெளிவரமுடியாமல் தத்தளித்துக் கொண் டிருக்கிறது. அதன் பாதிப்புகள் உலகம் முழுதும் உள்ள சாமானிய மக்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறும் போராட்டங்களும் மற்றும்உலகின் பல கண்டங்களிலும் நடைபெறும் போராட்டங்களும் இந்நெருக்கடியின் ஆழமான பாதிப்புகளுக்கு எதிரானவை களேயாகும்.
ஐரோப்பாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. வேலையின்மை கிரிஸில் 27.4 சதவீதம், ஸ்பெயினில் 26.7 சதவீதம், போர்த்துக்கல்லில் 15.5 சதவீதம், பல்கேரியாவில் 12.9சதவீதம், இத்தாலியில் 12.7 சதவீதம்என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசம். உலகம் முழுதும் உள்ள நாடுகளில் வேலையில்லாதோர் பட்டாளத்தில் இவர்கள்தான் பெரும் பகுதியினராவார்கள்.இவ்வாறு வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்திருப்பதானது, வேலை யிலிருப்போரின் ஊதியங்களிலும் மற்றும் அவர்களின் சமூகப் பாதுகாப்புப் பயன்களிலும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
இவ்வாறு நிகழும் என்றுதான் வரலாறும் நமக்குச் சொல்லித்தந்திருக்கிறது. சிக்கன நடவடிக்கைகள்என்ற பெய ரில் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் நட வடிக்கைகள் உண்மையில் நெருக்கடியை மேலும் உக்கிரப்படுத்தி, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடுமையான முறையில் தாக்குதல்களைத் தொடுத் துள்ளன. இதுநாள்வரையில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்குத் தத்துவார்த்தரீதியில் ஆதரவாக இருந்தவர்கள்கூட தற்போது ஆளும் வர்க்கத்தினரும், சர்வதேச நிதியம் மற்றும் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி போன்றவற்றின் கட்டளைகளை ஏற்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏப்ரல் 4 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.
மாற்று ஐரோப்பா சாத்தியமே’’, என்றும், “சிக்கன நடவடிக்கைகள் ஒழிக’’ என்றும் முழக்கமிட்டவண்ணம் அவர்கள் பேரணியாகச் சென்றுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய ஆட்சியாளர்கள் வேலையின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மையை ஒழித்திட முன்வரவேண்டும் என்று பேரணியில் வந்தோர் முழக்கமிட்டுள்ளார்கள்.துரதிர்ஷ்டவசமாக, உலகின் பல பகுதிகளில் அநீதிக்கு எதிராகவும், அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் நடத்திடும் இத்தகைய பிரம்மாண்டமான இயக்கங்கள், “வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத் தில்’’ நடந்ததைப்போலவே, அரசியல் திசை தெரியாமல், தொழிலாளர்கள் தங்கள் கோபத்தைக் காட்டுவதோடு அப்படியே அமிழ்ந்து போய்விடுகின்றன.
தொழிலாளி வர்க்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்
மே தினம் இப்பிரச்சனைகள் அனைத்தையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறது. முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுப்பதன் மூலமே நீடித்திருக்க முடியும். இப்போது நாம் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான நெருக்கடிகளும் இந்த முதலாளித்துவ அமைப்பு உருவாக்கியவை களேயாகும். எனவே இந்த அமைப்புமுறையையே எதிர்த்திட வேண்டும். தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் பிரிவினர் அனைவரும் அன்றாடம் அவர்கள் மேற்கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களுடன் நன்கு இணைக்கப்பட வேண்டும்.
ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்குப் பின்னே இருக்கின்ற அரசியலையும் தோலுரித்துக் காட்டிட வேண்டும். இவை அனைத்தும் நம்முன் உள்ள மிக முக்கிய அம்சங்களாகும். முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மே தின எழுச்சி கோருகிறது. இன்றைய உலகில் அல்லது இது தொடர்பாக நம் நாட்டிலும் நம் நடவடிக்கைகள் ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கொள்கைகளுக்கு எதிராக உக்கிரப் படுத்தப்பட வேண்டியிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதல் நம் சமுதாயத்தின் சமூக வலைப்பின்னலையே அரித்து அழித்துக் கொண்டிருப்பதை ஆழமாக ஆய்வு செய்து அதற்கு எதிராகச் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாட்டில் 45 கோடிக்கும் மேலான உழைக் கும் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் மிகவும் குறைந்த அளவிலானவர்களே வெகுஜன ஸ்தாபனங்களில் அணிதிரட்டப் பட்டிருக்கிறார்கள்.
எனவே நம்முன் உள்ள பிரதான கடமை, நம் நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியதாகும். மேலும் தொழிற்சங்க இயக்கம் நாட்டுப்புற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் தங்கள் பிரச்சனைகளாகக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் நாட்டின் உழைப்பாளர் பட்டாளத்தில் அவர்கள் பெரும் எண்ணிக்கை யிலானவர்களாகும். அவர்கள் மிகவும் கருணையற்ற முறையில் சூறையாடப் பட்டுவருகிறார்கள். அதன் விளைவாக நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள அவலநிலை தொடர்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியிலே இன்றளவும் நீடிக்கும் நிலப்பிரபுத்துவ மற்றும் சீர்திருத்த சிந்தனைகள் நம்முன் உள்ள மற்றுமொரு மாபெரும் சவாலாகும். இது நம் பணியை மிகவும் சிக்கலானதாக ஆக்கியிருக்கிறது. தொழிற்சங்கங்களை வர்க்கக் கண்ணோட்டத்தில் வலுப்படுத்த வேண்டியதும், உழைக்கும் மக்கள் மத்தியில் விஞ்ஞான சோசலிசப் புரிந்துணர்வைப் பரப்புவதும் மிகவும் அவசியமாகும்.இவற்றுடன், நம் நாட்டிற்கென்று பிரத்யேகமான சில பிரச்சனைகள் இருக்கின்றன.
இவற்றையும் நம் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களின் போது கையில் எடுப்பதுடன், இவற்றின்மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களையும் அதன் தலையீடுகளையும் கவனத்தில் கொள்வதும் மிகவும் முக்கியமாகும்.இந்த ஆண்டு முதல் உலகப்போர் ஆரம்பித்த நூறாவது ஆண்டாகும். உலகில் 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகம் மற்றொரு உலக யுத்தத்தை எதிர்கொண்டு அதன் விளைவாக எண்ணற்றவர்கள் பலியானதும், அவர்களின் உடைமைகளுக்கு அபரிமிதமான இழப்பு ஏற்பட்டபோதிலும், யுத்த முஸ்தீபு மேற்கொள்ளப்படுவதற்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை. ஏகாதிபத்திய நாடுகள் நேரடியாக வும் மறைமுகமாகவும் பலநாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.சிரியா, வெனிசுலா, பாலஸ்தீனம், கியூபா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய சக்திகளின் சதிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாமும் நம் எதிர்ப்புக் குரலினை எழுப்பிட வேண்டும்.
ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல்களால் லிபியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானம் பலியாகிஇருப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். மே தினம் என்பது நம்முன் உள்ள பணிகளை நினைவுகூர்வதற்கான வாய்ப்பாகும். சிஐடியு-வின் நிறுவனத் தலைவரான தோழர் பி.டி. ரணதிவே, மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியங்களை நினைவுகூர்ந்து நமக்குக் கூறியிருப் பதாவது: மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியம் என்பது எப்போதும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கே முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், தொழிலாளி வர்க்கம் அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் சபதம் ஏற்பதுடன் நம் பகுதி கோரிக்கைகள் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதாகும்.
’’இந்த மாபெரும் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடித்து, இந்தியாவில் இன்றைய தினம் தொழிலாளி வர்க்கம் சமூக விடுதலை மற்றும் சோசலிசத்திற்கான குறிக்கோளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துடன் பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் இணைத்திடக்கூடிய வகையில் சபதம் ஏற்போம். வர்க்கப் போராட்டத்தின் வீரர்கள் மற்றும் எண்ணற்ற தியாகிகளின் மாபெரும் தியாகம் ஆகியவற்றை நெஞ்சில் ஏந்தி, போராட்டப் பதாகையை உயர்த்திப் பிடித்து, முன்னேறுவோம்.
வாழ்க மேதினம்.
தொழிலாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக.
புரட்சி ஓங்குக.
தமிழில்: ச.வீரமணி


Sunday, April 27, 2014

வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்!


உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மே தினப் பிரகடனம்
புதுதில்லி, ஏப். 27-வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம், கண்ணியமான வேலைமற்றும் வாழ்வாதாரங்களுக்காக அணி திரள்வோம், போராடுவோம் என்று உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம்(WFTU-World Federation of Trade Unions) மே தினப் பிரகடனமாக அறைகூவல் விடுத்துள்ளது.இது தொடர்பாக உலகத் தொழிற் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள பிரகடனம் வருமாறு:உலகத் தொழிற்சங்கங்களின் சம் மேளனம், தன்னுடன் இணைந்துள்ள உல கம் முழுதும் உள்ள 120க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்த9 கோடி அமைப்புகளைச் சேர்ந்த தொழி லாளர்களும் தன்னுடைய வர்க்க, சர்வதேசிய மற்றும் வீரஞ்செறிந்த வாழ்த்துக்களை இம் மே தினத்தில் உரித்தாக்கிக் கொள்கிறது. இம் மே நன்னாளை வேலைநிறுத்தங்கள், வீரஞ்செறிந்த பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக கௌரவித்திட வேண்டுமாயும் உலகத் தொழிலாளர்களை சம்மேளனம் அறைகூவி அழைக்கிறது.
இந்த ஆண்டு மே தினத்தை உலகத் தொழிலாளர் வர்க்கம் மிகவும் இடர்சூழ்ந்த சூழ்நிலையில் எதிர்கொள்கிறது. தற்போது நீடித்துவரும் உலகப் பொருளாதார நெருக் கடியிலிருந்து மீள்வதற்காக அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும், ஏகாதிபத்தி யத்தின் எந்திரங்களாக விளங்கும் சர்வ தேச நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் முதலானவைகளும் இந்த நெருக்கடியிலிருந்து வெளிவருதற்காக’’ தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தில் வெட்டு, ஓய்வூதியத்தில் வெட்டு, எதேச்சதிகாரம், சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகள் பறிப்பு, சமூக உரிமைகள் ஒழிப்பு, ஆட் குறைப்பு என அனைத்துவிதமான தொழி லாளர் விரோத நடவடிக்கைகளிலும் இறங்கிஇருக்கின்றன.
அதே சமயத்தில், சமீபத் தில் உக்ரைனில் ஏற்பட்டதுபோன்று ஏகாதிபத்தியத்திற்குள்ளேயே உள்ள முரண்பாடு களும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மேலும் ஆபத்தான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அபாய அறிவிப்பு மணி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. சர்வதேச தொழி லாளர் ஸ்தாபனத்தில், முதலாளித்துவ அரசாங்கங்கள் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கோரி வருகின்றன. அதனால்தான் அவை, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 87வது கன்வென்ஷனான வேலை நிறுத்த உரிமை’’ என்னும் அங்கீகாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கோரி வருகின்றன. வேலை நிறுத்த உரிமை என் பது எந்த அரசாங்கத்தாலோ அல்லது சர்வதேச அமைப்பாலோ கொடையாக வழங் கப்பட்டதல்ல. தொழிலாளர்களின் கடும்போராட்டங்களின் விளைவாக வென் றெடுக்கப்பட்ட ஒன்று. இதனைத் தொடர்ந்துநீட்டித்திடக்கூடிய விதத்தில் தொழி லாளர்களின் போராட்டங்கள் தொடரும். எனவேதான், உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், “வேலைநிறுத்த உரிமைமீது கை வைக்காதே’’ என்ற முழக்கத்தை சர்வதேச தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்களும் வீரஞ்செறித்த போராட்டங்களின் மூலம் உரக்க முழங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது.
சர்வதேச அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் தொழிலாளர் வர்க்கத்தையும் அவர்தம் குழந்தைகளையும் கருணையற்ற முறையில் தாக்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் தன் சுரண்டலை அதிகரித்திட, அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர் இடையே மிகவும் கொடூரமான முறையில் அதிகரித்திட, வேலை யில்லாத் திண்டாட்டத்தை ஒரு காரணியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மே தினத்தை வேலையில்லாத் திண் டாட்டத்திற்கு எதிராகப் போராடவும் தொழிற் சங்க இயக்கம் முன்வரவேண்டும் என்று உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறைகூவி அழைக்கிறது.வேலையில்லாதோரின் வாழ்வுக்காக, தொழிற்சங்கங்கள் வேலையில்லாதோரையும் அணிதிரட்டிட முன்வரவேண்டும், வேலையில்லாதோரின் சமூகநலப் பயன்களுக் காகவும் போராட வேண்டும், உலகில் உள்ள அனைவருக்கும் நிரந்தர மற்றும் உறுதியான வேலைக்கான உரிமைக்காகப் போராட முன்வரவேண்டும், ஒட்டுமொத்தத்தில் வேலையின்மைக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் தொழிலாளர் வர்க்கத் தை உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறைகூவி அழைக்கிறது.
இம்மேதினம் உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் சார்பில் 2014 அக்டோபர் 3 அன்று வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தை பிரதான கோரிக்கையாக முன்வைத்து அனுசரிக்கப்படவுள்ள சர்வதேச நடவடிக்கை தின தயாரிப்புப் பணிகளுக் கான தொடக்கமாக அமைந்திடட்டும். உலகத் தொழிலாளர்களே, வறுமை,வேலையின்மை, பசி, பஞ்சம், பட்டினி,ஏகாதிபத்திய யுத்தங்கள் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் கல்வி கிடைக்காமல் உழைக்கும் வர்க்கம் ஏன் திண்டாட வேண்டும்? அவ்வாறு திண்டாட வேண்டியதற்கான அவசியமே கிடையாது.
உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தன் பதாகை யின் கீழ் உலகத் தொழிலாளர்கள் அனை வரும் ஒன்றுபட்டு நின்று, உலகில் உள்ளஅனைவருக்கும் வேலை கிடைத்திடவும், வேலைநிறுத்த உரிமையைப் பாதுகாத்திட வும், அனைவருக்கும் நிரந்தர மற்றும் உத்தர வாதமான முறையில் வேலை கிடைத்திடவும், பெற்ற தொழிற்சங்க உரிமைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாத்திடவும் போராட அறைகூவி அழைக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்காலம் சுரண்டப்படுவதற்கும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடமளிக்கக் கூடிய வகையில் இருந்திடக்கூடாது. உலகத் தொழிலாளர்களே, முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதி ராக எழுங்கள், சமூக நீதிக்காக எழுங்கள், சுரண்டலற்ற உலகத்தை உரு வாக்கு வதற்காக, ஒன்றுபடுவோம், போராடு வோம் என்று கூறப்பட்டுள்ளது.
-தமிழில்: ச.வீரமணி