Friday, April 25, 2014

அதிக இடங்களைக் கைப்பற்றுவோம் : பிரகாஷ் காரத்

பிரண்ட்லைன் ஏட்டின் சார்பில் அதன் செய்தியாளர் டி.கே.ராஜலக்ஷ்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்திடம் நேர்காணல் கண்டிருக்கிறார். அதன் சாராம்சம் வருமாறு:



காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஓர் அரசியல் மாற்று குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில், இது தொடர்பாக இடதுசாரிகள், காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளைக் கடந்த காலங்களில் ஒருங்கிணைத்த அனுபவத்தின் அடிப்படை
யில், இன்றைய தினம் உள்ள அரசியல் சூழ்நிலையில், இடதுசாரிகள் மற்றும் சில மாநிலக் கட்சிகளின் தற்போதைய பங்களிப்பு எப்படி இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பிரகாஷ் காரத்: கடந்த இருபதாண்டு காலமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் ஒரு மாற்றை உருவாக் கிட முயற்சித்துக் கொண்டு வந்திருக் கிறோம். நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே அடிப்படை வித்தியாசங்கள் எதுவும் கிடையாது. காங்கிரசுக்கு மாற்றாக பாஜக இருப்பது என்பது அதுபின்பற்றிவரும் இந்துத்துவா சித்தாந்தத்தில்தான். இத்தகைய சூழ்நிலையில் ஓர் அரசியல் மாற்றுக்கு அடிப்படையாக அமைந்துள்ள மாற்றுக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லநாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கி றோம். தேசிய அளவில் இத்தகைய மாற்றுக் கொள்கையை ஓர் எதார்த்தமானதாக மாற்றக்கூடிய அளவிற்கு இடதுசாரிகள் இன்னமும் வலுப்பெறவில்லை.
ஆனால், அதே சமயத்தில், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளை மக்கள் தேர்ந்தெடுத்திடக்கூடிய வகையில் தேர்தல் காலங்களில் காங்கிரஸ் அல் லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறோம். 1996ல், தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் அல்லாத, பாஜகஅல்லாத பல கட்சிகளை இணைத்துஐக்கிய முன்னணி அமைத்து, அதுஅரசாங்கத்தை அமைக்கக்கூடிய அளவிற்கு கொண்டு சென்றதில் வெற்றிபெற்றோம். இவ்வாறு தேர்தலுக்குப் பின்னர்தான் ஏற்பாடு செய்யப்பட்டது. ஐக்கிய முன்னணி சார்பில் குறைந்தபட்ச பொது செயல்திட்டமும் வரையப்பட்டது. இதன் ஆட்சிக் காலம் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. அந்த ஈராண்டு காலத்திலும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்திட இடதுசாரிகள் கோரினார்கள்.
ஆனால், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக்கொண்டு விட்டதால், ஆட்சி கவிழ்ந்தது. இப்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் நன்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். பாஜகவைப் பொறுத்தவரையில், வலுவாகவுள்ள மாநிலங்களில் அது ஆதாயம் அடையலாம். ஆனால் அதே சமயத்தில் இதர மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக உள்ள மக்களின் மனநிலை மாநிலக் கட்சிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் ஆதரவாகவே திரும்பிடும். இந்தப் புரிதலுடன்தான் நாட்டிலுள்ள காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற 11 கட்சிகளும் தேர்தலுக் குப்பின் ஒருங்கிணைந்து கூட்டாகச் செயல்படுவது எனத் தீர்மானித்தன.
நாட்டிலுள்ள பிரதான கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் மூன்றாவது மாற்று என்பதையே நிராகரிக்கிறார்களே?
பிரகாஷ் காரத்: பாஜக மூன்றாவது அணிக்கான வாய்ப்பையே தள்ளுபடி செய்கிறது. ஏனெனில், காங்கிரஸ் அல் லாத மதச்சார்பற்ற கட்சிகளுக்கு பல மாநிலங்களில் கணிசமான அளவிற்கு ஆதரவு உண்டு என்பதும், காங்கிரஸ் மீதுள்ள கோபத்தால் பாஜக ஆதாயம் அடைந்துவிடாமல் அவற்றால் தடுக்க முடியும் என்பதும் அதற்கு நன்கு தெரியும். காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் குணத்தின் காரணமாக, அக்கட்சிகளில் ஒருவரை தேர்தலுக்கு முன்பாகவே, பிரத மர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பாஜக சார்பில் எதேச்சதிகாரி ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பது இந்த அணுகுமுறையே கேலிக்குரிய தாக்குகிறது. ஆயினும், பிரதமர் யார் என்று தீர்மானிப்பது தேர்தலுக்குப்பின்னர் மட்டுமே சாத்தியம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
இடதுசாரிகள், ஐமுகூ-1 அரசாங்க களத்தில் முன்வைத்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மிகவும் நன்றாக இருந்தன என்பதையும், மக்கள் ஆதரவுக் கொள்கைகள் என்பதையும் பொதுவாக அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆயினும், அவற்றால் இடதுசாரிகள் ஆதாயம் அடையவில்லையே. இடதுசாரிகள்இதற்காக நடத்திய போராட்டங்கள் மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லப்படாததுதான் இதற்குக் காரணம் என்று கூறலாமா?
பிரகாஷ் காரத்: ஐமுகூ அரசாங்கத் திற்கு நாங்கள் அளித்த ஆதரவு என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குத்தான் நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில், அந்த அரசாங்கத்தைத் தொடர்ந்து நாங்கள் ஆதரித்தோமானால், விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற அக்கட்சியின் எதிர்மறை அம்சங்கள், எங்களையும் கடுமையாக பாதிக்கும். ஆயினும், 2009 தேர்தல்களில் எங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டதற் கான காரணங்கள் இது அல்ல. பிரதான மான காரணம், மேற்கு வங்கத்தில் நாங்கள் தோற்றது. ஏனெனில் அங்கிருந்துதான் அதிகமான இடங்கள் இடதுசாரிகள் பெற்று வந்தார்கள். அம்மாநிலம் சம்பந்தப்பட்ட பல காரணிகள் எங்கள் செயல்பாடுகளைப் பாதித்தன. ஐமுகூ அரசாங்கமும், அதற்கு இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்ததும் வேறு வகையானது. நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவும் இல்லை, அதனுடன் கூட்டணியும் வைத்துக் கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவினை அளித் தோம்.
ஏனெனில், பாஜகவின் ஆறாண்டு கால ஆட்சிக்குப்பின்னே அங்கே ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அப்போது காங்கிரசிடம் நாங்கள் கேட்டுக்கொண்டது என்னவென்றால், ஐமுகூ அரசாங்கத்திற்கு என்று ஒரு குறைந்தபட்ச பொது செயல்திட்டம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி னோம். அந்தத் திட்டம் எங்கள் திட்டம்அல்ல. ஆனால் அதனை உருவாக்குகையில் அதுகுறித்து எங்களிடமும்கலந்தாலோசனை மேற்கொண் டார்கள். குறைந்தபட்ச பொது செயல்திட்டத் தில் இருந்த, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம், வன உரிமைகள் சட்டம் போன்ற மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் சிலவற்றை அமல்படுத்த வேண்டும் என்று கோரினோம். அதே சமயத்தில், ஐமுகூ அரசாங்கம் மேற்கொண்டநவீன தாராளமய நடவடிக்கைகளை எதிர்த்தோம்.
இந்தக் காலத்தில் இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தின. நாட்டில் ஒருநாள் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவோ அல்லது கூட்டணியாகவோ இல்லை. எனினும்,எங்களது போராட்டங்கள் காரணமாக ஐமுகூ அரசாங்கம் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தில் உறுதியளிக்கப்பட் டிருந்த தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் போன்ற சில உறுதிமொழிகளை நிறைவேற்ற ஐமுகூஅரசாங்கம் முன்வந்தது. அது 2009தேர்தலில் அவர்களுக்கு உதவியது. அவர்கள் அரசாங்கத்தில் இருந்ததாலும், அவற்றைத் தாங்கள்தான் அமல்படுத்தினோம் என்று உரிமை கொண்டாடக்கூடிய நிலையில் அவர்கள் இருந்ததாலும், அதற்கான நற்பெயரை இடதுசாரிகள் பெற முடியவில்லை. ஏனெனில் நாங்கள் அரசாங்கத்திற்கு வெளியே இருந்தோம். நாங்கள் ஐமுகூ அரசாங்கத்தை ஆதரித்து வந்த இந்தக் காலம் முழுவதுமே, நாங்கள் எண்ணற்ற கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்தி னோம்.
2009ல் தாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கும், 2014 தேர்தல் அறிக்கைக்கும் இடையே உங்கள் கொள்கை மற்றும் திட்டங்களில் மாற்றம் இருக்கிறதா?
பிரகாஷ் காரத்: சில பொதுவான கோரிக்கைகளை நாங்கள் கெட்டிப்படுத்தி யிருக்கிறோம். உதாரணமாக, குறைந்த பட்ச ஊதியம் பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என்பதுடன், அது நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும்கோரியிருக்கிறோம். 4,000 ரூபாய்குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டிருக்கிறோம். தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சர்வதேச அளவிலான ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்வதற்கு முன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய வகையில் அர சியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும், ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், கார்ப்பரேட்டுகளையும், பொது-தனியார்-ஒத்துழைப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் லோக்பால் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் என்பது முதலான சட்டத்திருத்தங்களையும் நாங்கள் கேட்டிருக்கிறோம்.
சில கொள்கைகளின் அடிப்படையில் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுக்கிடையே ஓர் அமைப்பை உருவாக்கிடக்கூடிய விதத்தில் இக்கட்சிகளுக்கிடையே கருத்தொற்றுமை ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா?
பிரகாஷ்காரத்: இக்கட்சிகளுடன் இதுதொடர்பாக பொதுவான கொள்கை களின் மேடை அமைத்திட இதுவரை நாங்கள் தெளிவானமுறையில் இறங்கிட வில்லை. சில பிரச்சனைகளின் மீது எங்களிடையே ஒரு பொதுவான அணுகுமுறை இருக்கிறது. ஆனால், தேர்தலுக்குப் பின்னர், தேவைப்பட்டால், நிச்சயமாக பொது செயல் திட்டம் ஒன்றை உருவாக்கிடுவோம். இப்போதைக்கு, சில வித்தியாசமான அணுகுமுறைகள் இருக்கின்றன. உதாரணமாக, நாடாளுமன்றம்/சட்டமன்றங்களில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் அளிப்பது தொடர்பான பிரச்சனைக்கு சில கட்சிகள் எங்களுடன் ஒத்துவரவில்லை. இதேபோன்று வேறுசில பிரச்சனைகளும் பேசித் தீர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றன.
உங்களுக்கிடையே பெரிய அளவில் கருத்துவேறுபாடுகள் இல்லை, அப்படியே வந்தாலும் ஒரு பொது குறிக்கோளை எய்துவதற்காக அவற்றைக் கடந்து செல்ல முடியாதா?
பிரகாஷ்காரத்: உண்மையில் அப்படிபொது செயல்திட்டம் எதையும் இன்ன மும் நாங்கள் தயாரித்திடவில்லை. எங்களுக்கிடையே சில வித்தியாசங்கள் உண்டு என்பது எங்களுக்குத் தெரியும். எனவேதான், பொது செயல்திட்டம் உருவாக்கும் சமயத்தில், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களை முன்வைத்து அது உருவாக்கப்படும். அவ்வாறு உருவாக்கும் சமயத்தில் அதிகபட்சம் அனைவராலும் ஒப்புக் கொள்ளக்கூடியவற்றை அதில் இணைத்திட முயல்வோம்.
தேர்தலில் இடதுசாரிகளின் வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பிரகாஷ்காரத்: மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் தங்க ளுக்குப் பிரதானமான வலிமையை மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலிருந்துதான் பெறுகின்றன. இம்மூன்று மாநிலங்களிலும் 2009இல் இருந்ததைவிட இப்போது எங்கள் நிலையை மேம்படுத் திக்கொள்வதற்காகக் கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தத் தடவை சிறப்பான முறையில் அதிக இடங்களைக் கைப்பற்றுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

தமிழில்: ச.வீரமணி

Sunday, April 13, 2014

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்...


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
கடைசியில் பாஜக, 16வது மக்களவைக்கான தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. இந்திய கார்ப்பரேட்டுகளும் அவற்றின் ஊடகங்களும் பாஜக-தான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று மிகவும் தம்பட்டம் அடித்துவந்த போதி லும், அத்தேர்தல் அறிக்கையில் எதிர்கால இந்தியாவை எப்படி உருவாக்கப்போகிறோம் என்பது குறித்து சரியானமுறையில் தெளிவு படுத்தப்படவில்லை என்கிற கருத்தும் வெளியாகி இருக்கிறது. தேர்தல் நடைமுறை அமல்படுத்தத் துவங்கியபின்னர் தேர்தல் அறிக்கை வெளியாகி இருப்பது என்பதுஇதற்குமுன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். இந்தியத் தேர்தல் வரலாற் றினை ஆய்வு செய்தால், இவ்வாறு இதற்கு முன்னெப்போதுமே நடந்ததில்லை என்பதை அறிந்துகொள்ள முடியும். இதிலிருந்தே பாஜக வின் தேர்தல் அறிக்கை ஒரு சடங்காகத்தான் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதும், உண் மையில் அதன் உண்மையான நிகழ்ச்சிநிரல் வேறு என்பதும் அதனை அவர்கள் மக்க ளுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்ப வில்லை என்பதும் தெளிவாகிறது.
எப்படி இருந்தபோதிலும், தேர்தல் அறிக் கையைப் பரிசீலிக்கும்போது, தன்னுடைய மறைமுகமான குறிக்கோளை எய்துவதற்கு அது மேற்கொள்ள விருக்கும் முக்கியமான நடவடிக்கைகளை கழித்துவிட்டுப் பார்த்தோ மானால், அதில் படாடோபமான வார்த்தை களுக்குப் பஞ்சமில்லை என்பது தெரிய வரும். பல்வேறுவிதமான ஸ்லோகங்களுக்கிடையே இரு அடிப்படையான அம்சங்கள் வெளியாகி இருப்பதையும் காணமுடியும். முதலாவது அம்சம், பாஜக மீளவும் தன்னுடைய வெறி பிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை வலி யுறுத்தி இருப்பதாகும். அயோத்தியில் தாவா வுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று மீளவும் அது உறுதி அளித்திருக்கிறது. ஆயினும், இந்த தடவை இதனை அது ``அரசியலமைப்புச் சட்டத்திற்குஉட்பட்டு செய்யும் என்று மிகவும் எச்சரிக்கையுடன் கூறியிருக்கிறது.அப்படியானால் பாபர் மசூதி அரசிய லமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இடிக்கப்பட்டதா என்கிற கேள்வியை இயற்கையாகவே எழுப்புமாறு இது நம்மைத் தூண்டுகிறது. அந்த சமயத்தில், பாஜக மிகவும் கேடுகெட்டமுறையில் இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தை மீறியது. மாநிலத்தில் ஆட்சி செய்த அதன் அரசாங்கம் உச்சநீதி மன்றத்தில் பாபர் மசூதியை முழுமையாகப் பாதுகாத்திடுவோம் என்று அளித்த உறுதி மொழிகளையெல்லாம் அது காற்றில் பறக்கவிட்டு விட்டது.
மேலும், அப்போது ஆட்சியிலிருந்த முதலமைச்சர் மீண்டும் இப் போது பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதுடன், அன்றையதினம், ``நன்கு பயிற்சிபெற்ற ஒப்பந்தக்காரர்கள் பல மாதங் களில் செய்யக்கூடிய வேலையை எங்கள் `கரசேவகர்கள்ஐந்தே மணி நேரங்களில் இடித்துத் தள்ளியுள்ளார்கள்என்று பீற்றிக் கொண்டுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறித்தனமான இந்துத்துவாவின் மற்ற கோரிக்கை களையும்கூட வலியுறுத்திக் கூறியிருக்கிறது. ஒரே சீரான சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு ஒழித்துக்கட்டப்படும் என் றும் அது கூறியிருக்கிறது. பாஜக 1999ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையைத் தவிர 1996க்குப்பின் வெளியிட்ட அனைத்துத் தேர்தல் அறிக்கைகளிலுமே இந்துத்துவாவின் இந்த நிகழ்ச்சிநிரல்களை எல்லாம் அது உயர்த்திப்பிடித்திருக்கிறது. இவ்வாறு பாஜக மிகவும் தெளிவாகவே இருக்கிறது. அன்றைக்கிருந்த பாஜக இன்றைக்கும் சிறிதும் மாறவே இல்லை. அது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கம்தான் என்ப தைத்தவிர வேறெதுவும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாகவே இன்றையதினம் பறைசாற்றிவிட்டது.
தங்களுடைய `இந்து வாக்குவங்கி`யை ஒருமுகப்படுத்துவதற்காக மதவெறி விஷத்தை மிகவும் ஆழமான முறையில் இப்போது விதைத்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. அடுத்து, அதன் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு வருவோம். பாஜக ``உள்கட்டமைப்பு வசதிகள்மற்றும் ``தெரிவு செய்யப்பட்ட ராணுவத் தொழில்கள்உட்பட அனைத்துத் துறைகளிலும் அந்நிய நேரடிமுதலீட்டை அனுமதித்திடும் என்று கூறி யிருக்கிறது. ``தொழில்தகராறு சட்டங்கள்மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், ``வர்த்தகர்களுக்கு உரிமங்கள் வழங்குவதற் கான நெறிமுறைகள்தளர்த்தப்படும் என் றும் கூட கூறியிருக்கிறது. மத்திய அரசின் வரிவிதிப்பு முறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்படும் என்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மேலும் எளிமைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கிறது. குஜராத் உட்பட அதன் மாநில அரசுகளே இதனை இதுவரை உறுதியாக எதிர்த்து வந்திருக்கின் றன. இவை அனைத்துமே இந்திய மற்றும் சர்வதேச நிதி மூலதனத்திற்கு தேன் தடவிய வார்த்தைகளாகும்.
அதாவது, பாஜக தலைமையில் மத்திய ஆட்சி அமைந்தால் இந்தியாவின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களை யும் பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கார்ப்ப ரேட்டுகள் தங்கள் கொள்ளைலாப வேட் கைக்கு மிக எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே இதன் உட்பொருளா கும். அதாவது, இத்தாலி பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினி ஒருசமயம் வரையறுத்ததைப் போல, ``பாசிசம் என்பது, அதற்குள் வேறுபல அம்சங்கள் அடங்கியிருந்தபோதிலும் அத்துடன், அரசு மூலதனத்துடன் கைகோர்ப்பது என்பதுதான்.தேர்தல் அறிக்கையில் மீதம்உள்ள 42 பக்கங்களும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் வகையில்தான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பாஜகவின் உண்மையான உள்நோக்கம் முற்றிலும் வேறானதாகும். பாஜகவின் பிரச்சாரம் முழுக்க முழுக்க அதனுடைய `தலைவரைச் சுற்றியே அமைக்கப்பட்டிருக்கிறது. ``நமது தேசம் எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சனைகளுக் கும், ``ஒளிமயமான எதிர்காலத் திற்கும்சர்வலோக நிவாரணியாக ``மோடி மந்திரம் செயல் படும்என்று பாஜகவின் இணையதளம் கூறுகிறது. ஆயினும் இவற்றை அது எப்படிச் செய்யப்போகிறது என்பதற்கு அதில் ஒன்றும் பதில் இல்லை. நாட்டில் எதிர்காலத்தில் `பாலும் தேனும்` ஓடும் என்பதற்கு நமக்குக் காட்டப்படும் திசைவழி, `குஜராத் மாடல்என்பதாகும். ஆனால் `குஜராத் மக்கள் வாழ்நிலைமைகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் தற்போது வெட்டவெளிச்சமாக்கி வருகின்றன. உதாரணமாக, பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீதான மதிப்புக் கூட்டல் வரி என்பது நாட்டிலேயே பிற மாநிலங்களை விட குஜராத் மாநிலத்தில்தான் அதிகமாகும்.
அதாவது 15 சதவீதம் அங்கே வரி. விலைவாசி உயர்வுக்காக மத்திய அரசைக் குறைகூறும் அதே சமயத்தில் இவ்வாறு மதிப்புக்கூட்டல் வரி மூலமாக பல மாநில அரசுகள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொண்டுள்ளன. வேலைநிறுத்தங்கள், கதவடைப்புகள் உட்பட தொழிலாளர் அமைதியின்மை நிகழ்வுகள் அதிகம் நடந்துள்ளது குஜராத் மாநிலத்தில்தான். பொது விநியோக முறை மிகவும் மோசமாக உள்ள மாநிலம் குஜராத் மாநிலம்தான். இந்தியாவிலேயே தொழிலாளர் பகுதிகள் மிகவும் மாசு அடைந்திருப்பது குஜராத் மாநிலத்தில் உள்ள அங்கலேஸ்வர் மற்றும் வாப்பி பகுதிகளாகும். குஜராத் மாநில அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் மின் உற்பத்தியை மிகவும் குறைத்துவிட்டதாகவும், அது தனியார் நிறுவனங்களிடமிருந்து மிகவும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் விமர் சகர்கள் கூறுகிறார்கள். நாட்டில் சுகாதாரத்திற்காக தனிநபர் செலவு செய்வது என்பது குஜராத்தில்தான் மிகவும் குறைவு.இந்தியாவிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ மனைப் படுக்கைகள் கொண்டிருப்பது, குஜராத் மாநிலம் தான்.
அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 143 படுக்கைகளே அங்கே உள்ளன. கர்ப்பிணிப் பெண்கள் பிறந்த குழந்தைகள் இறப்பதும் குஜராத்தில்தான் அதிகம். அநேகமாக ஐந்து வயதுக்குக் குறைவாக வுள்ள குழந்தைகளில் இரண்டில் ஒரு குழந்தை போதிய சத்துணவு இன்றியும், நான்கில் மூன்று குழந்தைகள் ரத்தச்சோகையுட னும் குஜராத்தில் காணப்படுகின்றன. (முழு மையான தகவல்களுக்கு, 2014 ஏப்ரல் 6, தி வீக் இதழைப் பார்க்கவும்.)
`குஜராத் மாடல்அவலட்சணங்களை ஏற்கனவே நாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். அதன் சாராம்சம் என்னவெனில், இந்தியா மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சலுகைகளும், உதவி களும் வாரி வழங்கிருப்பதேயாகும். இத்தகைய பேர்வழி மாநில முதல்வராயிருப்பதிலிருந்து, மத்திய ஆட்சியின் பிரதமராக வந்துவிட்டால், இதைவிடப் பல்மடங்கு சலுகைகளும் உதவிகளும் கிடைத்திடுமே என்று அவை ஏங்குவதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஒரு மாநிலத்தில் கிடைப்பதைப்போல அனைத்து மாநிலங்களிலும் தங்களுக்குக் கொள்ளை லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள். பாஜகவின் பொருளாதாரப் பார்வை என்பது பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதுதான். இருவித இந்தியர்களை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்பதே அதன் பொருளாதாரப் பார்வை. இதனால்தான் கார்ப்ப ரேட்டுகள் பாஜகவையும் மோடியையும் தூக்கிநிறுத்துகின்றன.
ஆனால், நாட்டின் பெரும் பான்மை மக்களின் கதி? பாஜக ஆட்சிக்கு வருமாயின் அவர்களின் அன்றாட வாழ்க்கை கடும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கப்படும். ஊடகங்களில் நேர்காணல் நடைபெறும் போது பாஜகவின் தலைவர் பல கேள்விகளுக்கு பதில் கூற மறுப்பதானது, அவரது ஜனநாயக விரோத அணுகுமுறையை முழுமையாகவே வெளிப்படுத்துகிறது. சமீபத்தில் மோடியின் வலதுகரமாக விளங்குபவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மதவெறித் தீயை கிளறிவிட்டு, வரும் தேர்தலில் அவர்களைப் `பழிக்குப்பழிவாங்க வேண்டும் என்கிற முறையில் பேசியிருப்பது அவர்களின் உண் மையான கோர முகத்தை உலகுக்குக் காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்களின் மூலமாகத்தான் இவர்கள் வளர்கிறார்கள்.
முதலில் கலவரங்களை உருவாக்கு வார்கள், பின்னர், அந்தப் பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களையே கலவரங்களுக்குக் காரணமானவர்கள் என்று குற்றம் சுமத்துவார்கள். பின்னர், அவர்கள் மீது மேலும் மதவெறி வன்முறையை ஏவ இதனையே ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொள் வார்கள். மிகமோசமான முறையில் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் செயலை - பெரும்பான்மை இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் செயலை இவ்வாறு இவர்கள் மேற்கொள்வதற்கு இது மிகச் சரியான எடுத்துக்காட்டாகும்.
பிரதமர் வேட்பாளர் மோடியின் பேச்சுக் களை உற்றுக்கவனித்தால் ஒன்றை நாம் நன்கு புரிந்துகொள்ள முடியும். ஐ.மு.கூட்டணி அரசாங்கம் மோசமாக ஆட்சி செய்தது என்று அவர் கூறும் அதே சமயத்தில் அதைவிட மிகவும் கூர்மையான முறையில் நாட்டில் மதக்கலவரங்களைத் தூண்டும் விதத்தில் மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருப்பதை நன்கு உணர முடியும். காங்கிரஸ் கட்சியும் உத்தரப்பிரதேச மாநிலஅரசும் `இளஞ்சிவப்பு புரட்சியை ஊக்குவிக்கின்றனவாம். அதாவது, உத்தரப் பிரதேசத்தில் பசுக்களுக்குப் போதிய அளவு தீவனமோ தண்ணீரோ இல்லை என்பதும், அவற்றின் காரணமாகவே அம்மாநிலத்தில் பசுக்கள் கொல்லப்பட்டு, மாட்டுக்கறிக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும் இதன் பொருளாகும்.
பசுவதையைத் தடை செய்ய வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் கோரிக்கையை இது பிரதிபலிப்பதுபோல் இல்லையா? இது குஜராத்தில் நடைபெற்று வரும் வெண்மைப் புரட்சிக்கு எதிராக இருக்கிறதாம். குஜராத்தில் அமுல் கூட்டுறவு நிறுவனம் மூலம் பால் உற்பத்தி அதிகரித்திருப்பதைத்தான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். உண்மையில் அமுல் கூட்டுறவு நிறுவனம் மோடி தான் பிறந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் அதிகாரப்பூர்வமான தேதிக்கு முன்பாகவே, 1946லேயே அமைக்கப்பட்ட ஒரு நிறுவன மாகும். அக்கூட்டுறவு நிறுவனம் 1946 டிசம்பர் 14 அன்று முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது. இதற்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கும் அல்லது மோடிக்கும் எவ்விதத்திலும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆயினும் மேலும் ஒரு வரலாற்றைச் சிதைத்து தங்களுக்கு சாதகமாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்.
வாரணாசி(காசி)யைத் தேர்வு செய்ததுகூட உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்பதற்காகத்தான் நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக அடித்தளங்களைத் தாங்கள் விரும்பக்கூடிய அளவிற்கு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்டிரியமாகமாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலை எப்படியாவது அரங்கேற்றிடவேண்டும் என்பது அடிநாதமாக அவர்கள் ஒவ்வொருவரின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் இருந்து வருகிறது. நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் மீது ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகள் சொல்லொண்ணாத் துன்ப துயரங்களைக் கொண்டு வந்தது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. எனவே இவர்களது இக்கொள்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இதற்கான மாற்றுக் கொள்கைத் திசைவழியை இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்திருக்கும் அதே சமயத்தில், பாஜக அவ்வாறு எந்த மாற்றுக் கொள்கையையும் முன்வைத்திடவில்லை என்பது மட்டுமல்ல, உண்மையில் அக்கட்சி, அதனை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வோம் என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறது.
ஊழல் புரிவதிலோ அல்லது பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருப்பதிலோ காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையே எவ்விதமான வித்தியாசமும் கிடையாது. பாஜகவின் தேர்தல் அறிக்கையை உன்னிப்பாகப் பார்த்தோமானால் அது ஆர்எஸ்எஸ்-இன் ஸ்லோகமான ``ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்என்பதை உயர்த்திப்பிடித்திருப்பதைக் காண முடியும். இந்தியில் இதனை ``ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான்என்று பிரபலப்படுத்தி வருகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ள நம் நாட்டை அவர்களால் ஏற்க முடியாமல் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஹிட்லர், முசோலினி ஆகியோர் பின் பற்றிய நாஜி பாசிசத்தின் வாரிசுகள்தான் இவர்கள். அதன் காரணமாகத்தான் கார்ப்பரேட்டுகள் இவர்களைத் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையுமே புறந்தள்ளிவிட்டு, இடது ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் வலுவுடன் அமையக்கூடிய எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதன் மூலம் மட்டுமே, அதன் மூலம் மாற்று மக்கள் ஆதரவுக் கொள்கை திசைவழியில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மட்டுமே, நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்ததோர் வாழ்க்கைத்தரத்தை அளித்திட முடியும்.
- தமிழில்: ச.வீரமணி



Friday, April 11, 2014

தோழர் எம். பசவபுன்னையா

•           தோழர் எம். பசவபுன்னையா

           -பிரகாஷ் காரத்
           தோழர் எம். பசவபுன்னையா அவர்களின் நூற்றாண்டை 2013 டிசம்பர் 14இலிருந்து கொண்டாடி வருகிறோம். தோழர்  எம். பசவபுன்னையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர்.  அவரது தலைமுறையைச் சேர்ந்த பல தலைவர்களைப்போலவே அவரும், நம் நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பல முனைகளிலும் பங்களிப்பினைச் செய்துள்ளார். அவரது காலத்திலிருந்த பல தலைவர்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்தோ அல்லது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்தோ கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர்கள். ஆனால், தோழர் எம். பசவபுன்iயா, அவர்களைப் போலல்லாமல், 1934இல் அவர் மாணவர் இயக்கப் போராளியாக இருந்தபோதே நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
           எம்.பி. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தோழர் எம். பசவபுன்னையா ஆந்திரப் பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியிலும், வீரஞ்செறிந்த தெலுங்கானா விவசாயிகள் ஆயுதப் போராட்டத்தினைத் தலைமையேற்று நடத்தியதிலும் மிக முக்கியமான பங்கினை வகித்தார். அதன்பின்னர் கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டத்திலும், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதிலும் அவர் மிக முக்கிய பங்களிப்பினைச் செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாட்டை மிகக்கூர்மையாகச் செதுக்கியதிலும் அவரது பங்களிப்புத் தன்னிகரற்றதாகும்.
           1920களில் உருவான இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் பொதுவாக கம்யூனிஸ்ட் அகிலம் (comintern) அளித்த வழிகாட்டுதல் அடிப்படையிலும் பின்னர் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையிலும் செயல்பட்டு வந்தது. இவ்வாறாக அது மிகவும் சோவியத் மார்க்சிஸ்ட் எந்திரத்தையே தன்னுடைய தத்துவார்த்த நிலைப்பாட்டிற்குப் பெரிதும் சார்ந்திருந்தது. கட்சியின் ஆரம்பகாலக் கட்டத்தில் இது இயற்கையாக இருந்தபோதிலும், பின்னர் இது தொடர்ந்து மார்க்சிஸ்ட் புரிந்துணர்வை படிப்படியாக இந்தியாவின் நிலைமைகளுக்குப் பொருத்துவதில் மிகவும் எந்திரகதியாகச் செயல்படுவதற்கும், பின்னர் கட்சிக்குள் திருத்தவாத நிலையை நடைமுறைப்படுத்துவதற்கும் இட்டுச் சென்றது.
           உள்கட்சிப் போராட்டம்
           நாடு அரசியல் சுதந்திரம் பெற்றபின் இந்தியப் புரட்சிக்கான பாதை குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய போர்த்தந்திரம் (strategy) மற்றும் நடைமுறை உத்திகள் (tactics) குறித்தும்  கம்யூனிஸ்ட் கட்சிக்குள் போராட்டம் நடந்தது. இவ்வாறு கட்சிக்குள் நடைபெற்ற போராட்டமானது கட்சிக்குள் நிலவிய வறட்டுத்தனத்திலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பை ``இடதுசாரிகம்யூனிஸ்ட்டுகளுக்கு நல்கியது.
       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது இவ்வாறு கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டத்தின் விளைவேயாகும். இப்போராட்டத்தை நடத்திய முன்னணித் தலைவர்களில் தோழர் எம். பசவபுன்னையா முக்கியமானவராவார்.  உள்கட்சிப் போராட்டம் நடைபெற்ற சமயங்களிலான கட்சி ஆவணங்களை உன்னிப்பாகப் பரிசீலித்தோமானால், தோழர்கள் பி.சுந்தரய்யா, ஹர்கிசன் சிங் சுர்ஜித், பி.டி.ரணதிவே, பி. ராமமூர்த்தி முதலானவர்களுடன் இணைந்துநின்று தோழர் எம். பசவபுன்iயாவும் உள்கட்சிப் போராட்டங்களை, கட்சி இரண்டாகப் பிரியும் வரை நடத்தியிருப்பதைக் காண முடியும். கட்சியின் ஒரு பிரிவினர் வர்க்க சமரசப் பாதையை (class collaborationist line)  உயர்த்திப்பிடித்ததை இவர்கள் முழுமையாக நிராகரித்தனர். அந்த சமயத்தில் இவ்வாறு வர்க்க சமரசப் பாதையை உயர்த்திப் பிடித்தவர்களை சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.
       1960களின் முற்பகுதியில், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் மிகவும் கூர்மையாகவும் கசப்பாகவும் வெளிப்பட்டன. உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் மிகப்பெரிய கட்சிகளாக விளங்கிய இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான இந்தச் சண்டை இந்தியாவிலும் தத்துவார்த்தரீதியிலான மோதலை ஏற்படுத்தியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் கட்சித் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், புரட்சிக்கான போர்த் தந்திரம் (strategy) மற்றும் பின்பற்றப்பட வேண்டிய உத்திகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்துமான போராட்டமாக பின்னிப்பிணைந்து காணப்பட்டது.
           மார்க்சிச-லெனினிசத்தை மதிப்பிடுவதற்கான தத்துவார்த்த போராட்டத்தில், இந்தியாவில் உள்ள துல்லியமான நிலைமைகளுடன் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தைச் சரியாகப் பொறுத்தி,  மிகச் சரியான முறையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதே நம் நாட்டின் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அந்த அடிப்படையில் நீண்ட நெடிய தத்துவார்த்தப் போராட்டத்தின் ஊடாகத்தான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மலர்ந்தது. தோழர் எம். பசவபுன்னையா இது தொடர்பாக கட்சிக்குள் நடைபெற்ற  உள்கட்சிப் போராட்டங்களிலும், அதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த ரீதியிலான உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கியதிலும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பினைச் செய்துள்ளார்.    
           கட்சித் திட்டம்
       கட்சியின் போர்த்தந்திரம் (strategy) குறித்து சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள் கட்சிப் போராட்டத்தின் விளைவாக 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதே போன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனியே நடத்திய தங்கள் தங்கள் அகில இந்திய மாநாடுகளில் தனித்தனியாக கட்சித் திட்டங்களை வெளியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7ஆவது அகில இந்திய மாநாடு 1964 அக்டோபர் 31க்கும் நவம்பர் 7க்கும் இடையே கொல்கத்தாவில் நடைபெற்றது. வரைவு கட்சித் திட்டம் தோழர் எம்.பசவபுன்னையா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு அறிமுகப்படுத்தி உரையாற்றுகையில் அவர், கட்சித் திட்டத்தின் சாராம்சங்களை விளக்கி உரையாற்றினார். இந்திய சமூகத்தின் வர்க்கங்களை ஆய்வு செய்தும், புரட்சியின் கட்டம் குறித்தும், இந்திய அரசின் வர்க்கத்தன்மை குறித்தும், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில்  மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தும்போது அது யார் யாரை யெல்லாம் தன் வர்க்கக் கூட்டாளிகளாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அவர் தெளிவுபடுத்தினார். அவர் இவ்வாறு உரையாற்றுகையில், எந்த எந்த அம்சங்களில் எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வேறுபடுகிறது  என்பதையும் தெளிவுபடுத்தினார். இந்திய அரசு என்பது பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவக் கூட்டணி அரசு என்பதையும்,  மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைமைப் பாத்திரம் தொழிலாளி வர்க்கத்திடம்தான் இருந்திட வேண்டும் என்பதையும், மாறாக அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறுவதுபோல் தேசிய முதலாளிகளுடன் கூட்டாக இருக்கக்கூடாது என்பதையும், தற்போதுள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசு அந்நிய நிதி மூலதனத்துடன் வேகவேகமாக கைகோர்த்துக் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
           இடது அதிதீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம்
       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே, கட்சியானது நக்சலிசம் வடிவத்தில் உருவான இடது அதிதீவிரவாத (Left sectarian trend) சவாலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதில் பெரும் பாதிப்பு ஆந்திராவில் ஏற்பட்டது. அந்த சமயத்தில் சீனாவில் கலாச்சாரப் புரட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆயுதப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டதை அடுத்து ஆந்திராவில் இருந்த நம் கட்சி முன்னணி ஊழியர்களும் தலைவர்களும் பெருமளவில் ஈர்க்கப்பட்டார்கள்.  இவ்வாறு ஏற்பட்ட இடது அதிதீவிரவாத திரிபுக்கு (ultra-Left deviation) எதிரான போராட்டத்தையும் தோழர் எம். பசவபுன்னையா கடுமையாக நடத்தினார்.  கட்சியின் சார்பில் 1968இல் பர்துவானில் தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான பிளீனம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக ஆந்திராவில் நடைபெற்ற மாநில அளவிலான பிளீனம் நடைபெற்றது. இதில் இடது அதிதீவிரவாத திரிபுக்கு எதிரான போராட்டத்தை மிகச் சரியான முறையில் பி.சுந்தரய்யாவுடன் இணைந்து நின்று எம். பசவபுன்னையா நடத்தினார். பின்னர் பர்துவானில் நடைபெற்ற பிளீனத்தின்போதும் எம். பசவபுன்னையா ஆந்திராவிலிருந்து வந்திருந்த தலைவர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்ட இடது அதிதீவிர நிலைப்பாட்டினை எதிர்த்து  முறியடித்தார். அப்போது கட்சியால் பர்துவான் பீளீனத்தில் தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது வலது திருத்தல்வாதம் (right revisionism) மற்றும் இடது அதிதீவிரவாதம் (left sectarianism) ஆகியவற்றிற்கு எதிராக கட்சி மேற்கொண்ட தத்துவார்த்தப் போராட்டத்திற்கு இன்றளவும் அடிப்படையாக இருந்து வருகிறது.
           சர்வதேச அளவில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதப் போக்கிற்கு எதிராகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட இடது அதிதீவிரவாத நிலைப்பாட்டிற்கு எதிராகவும் போராட்டத்தை நடத்துவதற்கான பொறுப்பை எம். பசவபுன்னையா எடுத்துக்கொண்டார். சமூக முரண்பாடுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே சமாதான முறையில் போட்டியை ஏற்படுத்தி, சோசலிசத்தை சமாதானமான முறையிலேயே அடைய முடியும் என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட திருத்தல்வாத சிந்தனைகளை வேரறுக்கும் அறுவைக் கத்தியாக எம்.பசவபுன்னையா தன் பேனாவை உபயோகித்தார்.
       அதேபோன்று கலாச்சாரப் புரட்சி காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட இடது அதிதீவிர நிலைப்பாடுகள் (Left sectarian positions) பலவற்றையும் எம். பசவபுன்னையா கடுமையாக எதிர்த்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த ``மூன்றுலகக் கோட்பாடு, சோவியத் யூனியனை ``சமூக ஏகாதிபத்தியவாதிஎன்று சித்தரித்தது மற்றும் பல நாடுகளிலும் உள்ள நிலைகளின் தன்மைகளைப் புரிந்துகொள்ளாது அல்லது அதனைப்பற்றிக் கவலைப்படாது ஆயுதப் போராட்டத்திற்காக இடது அதிதீவிர அறைகூவல் (Left adventurist call) விடுத்தது ஆகியவை இதில் அடங்கும்.  
           இதேபோன்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தவறான கொள்கைகளுக்கு எதிரான நிலையினை மேற்கொண்ட அதே சமயத்தில், சோவியத் எதிர்ப்பு அல்லது சீன எதிர்ப்பு நிலைப்பாடுகளை மேற்கொள்ளாது இருப்பதிலும் எம்.பசவபுன்னையா மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். இரு நாடுகளுமே மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் நிலைப்பாடுகளிலிருந்தும், சோசலிசத்தைக் கட்டுவதற்கான விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையிலிருந்தும்  விலகிச் சென்றுள்ளபோதிலும், அவை இரண்டும் சோசலிச நாடுகள்தான் என்பதிலும் மிக உறுதியாக இருந்தார்.
           இந்தியா போன்ற புதிய சுதந்திர நாடுகள் தங்களுடைய வளர்ச்சிக்கு முதலாளித்துவமற்ற பாதையைப் பின்பற்றலாம் என்று கூறிய சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தத்தை (இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டிருந்தது) எம். பசவபுன்னையா மிகவும் நாசுக்கானமுறையில் நிராகரித்தார். அதேபோன்று இந்தியாவில் ஏற்பட்டுவந்த முதலாளித்துவ வளர்ச்சியின் குணம் குறித்து நக்சலைட்டுகள் முன்வைத்த வறட்டுத்தனமான புரிந்துணர்வையும் எதிர்த்துத் தவிடுபொடியாக்கினார். அவர் எழுதிய ``ஆந்திரா தோழர்களுக்கான கடிதம் (இதனை பர்துவான் பிளீனத்திற்குப்பின்னர் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஏற்றுக்கொண்டது) இவற்றை நன்கு விளக்குகிறது.
       இந்தியாவில் உள்ள முதலாளித்துவம் தரகு முதலாளித்துவம் என்று நக்சலைட்டுகள் கூறிவந்ததையும் அவர் தவிடுபொடியாக்கினார். மற்ற  ஜனநாயகக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்து போராட வேண்டும் என்பதனை அவர் உயர்த்திப்பிடித்தார். அதேபோன்று நாடாளுமன்றத்தில் பங்கேற்பதற்கும் மற்றும் 1967களில் கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அமைக்கப்பெற்ற கூட்டணி அரசாங்கங்களுக்கும் எதிரான இடது அதிதீவிரவாத நிலைப்பாட்டையும் (Left sectarian stand) அவர் கண்டித்தார்.
           1978இல் கட்சியின் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழின் ஆசிரியராக அவர் பொறுப்பேற்றபின் தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து அதில் எழுதி வந்தார். 
           தனிநபர் துதிக்கு எதிராக
           கலாச்சாரப் புரட்சி காலகட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் எந்த இடது அதிதீவிர திரிபுடன் மாசேதுங்கைச் சுற்றி தனிநபர் துதியும் உருவாக்கப்பட்டது. எம். பசவபுன்னையா இந்த சமயத்தில் ``தனிநபர் துதிக்கு எதிரான போராட்டம்குறித்தும் ஒரு முக்கியமான கட்டுரையை எழுதினார்.  தனிநபர் துதி தொடர்பான மார்க்சிஸ்ட் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அதில் அவரை வரையறை செய்தார். சோவியத் யூனியனில் ஸ்டாலின் மீதான தனிநபர் துதியும், சீனத்தில் மாசேதுங் மீதான தனிநபர் துதியும் எப்படியெல்லாம் கட்சியை சீர்குலைத்தது என்பதைக் குறிப்பிட்டார். தனிநபர் துதி என்பது உள்கட்சி ஜனநாயகத்தை சின்னாபின்னமாக்கிடும் என்பதை அவர் நன்கு அக்கட்டுரையில் விளக்கி இருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
       ``தனிநபர் துதிக்கு எதிரான போராட்டம் என்பது உள்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடனும், கட்சியில் கூட்டுத் தலைமையை உத்தரவாதப்படுத்துவதற்கான போராட்டத்துடனும், விமர்சனம் - சுய விமர்சனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டத்துடனும்  நெருக்கமான முறையில் பின்னிப்பிணைந்தது என்பதனை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது.  மிக அற்புதமாக தீர்மானங்கள் நிறைவேற்றினால் மட்டும் போதாது. சொல்லுக்கும் செயலுக்கும் இடையே எவ்வித வித்தியாசமுமின்றி அவை முறையாக அமல்படுத்தப்படவும் வேண்டும். கட்சியில் ``பாதிகடவுள் (““demigod””) மற்றும் ``தவறே புரியாத மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (“infallible Marxist-Leninist”) என்று எந்தத் தலைவரும் இல்லை என்பது கட்சி அணிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் விடாது தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டே இருக்க வேண்டும். அதேபோன்று கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதற்காக உறுப்பினரைத் தண்டிக்கும் நடவடிக்கையிலும் எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியும் இறங்கிடக் கூடாது.”
           தேசிய இனப் பிரச்சனை
           கட்சித் திட்டம் உருவாக்கப்பட்ட சமயத்தில் எழுந்த விவாதங்களின்போது இந்தியாவில் தேசிய இனப் பிரச்சனை குறித்து பின்னர் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. பல தேசிய இனங்களைக் கொண்ட இந்தியா போன்றதொரு நாட்டில், பல்வேறு மொழி பேசுகின்ற தேசிய இனங்களுக்கான பங்கு என்ன? இது தொடர்பாக 1972இல் மதுரையில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் விவாதங்கள் நடைபெற்றன. ``தேசிய இனப்பிரச்சனை மீதான குறிப்பு  மாநாட்டில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய மாநாட்டில் இதற்கான ஆவணத்தை எம். பசவபுன்னையா அறிமுகப்படுத்தி உரைநிகழ்த்தினார். அப்போது அவர் ரஷ்யாவில் புரட்சிக்கு முன்பிருந்த நிலைக்கும், இந்தியாவில் நாம் அதிலிருந்து எப்படியெல்லாம் வேறுபடுகிறோம் என்பதையும் மிகவும் தெளிவாக முன்வைத்தார்.  ஜார் ஆட்சி காலத்தில் அங்கிருந்த பல்வேறு தேசிய இனங்கள், வெள்ளை ரஷ்ய தேசிய இனத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருந்தன. ஆனால் இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு. இங்கே எந்த தேசிய இனமும், மற்றொரு தேசிய இனத்தை அடக்கி ஆளவில்லை. இரண்டாவதாக, இந்தியாவின் ஆளும் வர்க்கம், முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கம், பல்வேறு மொழிபேசும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டுக் கலவையாகும். இந்த ஆளும் வர்க்கம்தான் பல்வேறு மொழிபேசும் பல்வேறு தேசிய இன உழைக்கும் வர்க்கத்தினரையும் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. அதன்மூலம் ஒரு பொதுவான வர்க்க ஒடுக்குமுறையை அவர்கள் மீது ஏவிக்கொண்டிருக்கின்றன. எனவே, இந்தியாவில் தனித்துப் பிரிந்து செல்ல வேண்டுமென்கிற அறைகூவல் நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எதிராக நடந்துவரும் ஒடுக்குமுறைக்கு எதிராக உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி, போராட்டத்தில் இறக்குவதற்கு ஊறு விளைவித்திடும். தொழிலாளர் வர்க்கக் கட்சியின் பணி என்பது முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பொதுவான வர்க்க சுரண்டலுக்கு எதிராக அனைத்து மொழி மற்றும் தேசிய இனங்களின் தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டுவதாகத்தான் இருக்க வேண்டும்.
           மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,   கட்சித் திட்டத்தில் முன்வைத்துள்ள பிரச்சனைகள் மீது தத்துவார்த்தரீதியாக ஒரு நீண்ட நெடிய உள்கட்சிப் போராட்டத்தை மேற்கொண்டு உருவான கட்சியாகும். கட்சி உருவானபின்பு அதன்மீது சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தவறாக மேற்கொண்ட நிலைப்பாடுகளையும் முறியடித்து வளர்ந்த கட்சியாகும். இது எப்படி சாத்தியமானது? கட்சி, இந்திய நிலைமைகளுக்கேற்ப மார்க்சிச-லெனினிசத்தை மிகச் சரியான முறையில் பொருத்தி முன்னேறியதே இதற்குக் காரணமாகும். இவ்வாறு கட்சியை முன்னெடுத்துச் சென்றதில் தோழர் எம். பசவபுன்னையாவிற்கு மகத்தான பங்கு உண்டு.
           (தமிழில்: ச.வீரமணி)