Tuesday, October 15, 2013

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பாஜக!


உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது என்பதே ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்களின் முத்திரையாகும். இவ்வாறு அவர்கள் பேசுவதென்பது ஒன்றும் புதிதல்ல. பாபர் மசூதி இடித்துத் தரை மட்டமாக்கப்படுவதற்கு முன்பு தன் ‘‘ரதயாத்திரை’’யைத் துவங்கும்போது எல்.கே. அத்வானி மக்கள் மத்தியில் ஆவேசத்தைக் கிளப்பும் வகையில் பேசிய பேச்சுக்களை எல்லாம் நினைவு கூர்க. ‘‘இராமர் கோவில் அங்கே கட்டியே தீருவோம்’’ என்று செல்லும் இடங்களில் எல்லாம் அவர் இடிமுழக்கம் இட்டதை நாமறிவோம்.
பாபர் மசூதி இடிக் கப்பட்டபின்னர்தான் இந்தப் பேச்சு நின்றது. பல நூற்றாண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட, மிகவும் சிறப்பு வாய்ந்த, பாபர் மசூதியை கரசேவகர்கள் இடித்துத் தரைமட்டமாக்குவதற்கு இவரது ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் நேரடியாகவே உதவின. பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதற்குப்பிறகு, அத்வானி என்ன கூறுகிறார்? 1992 டிசம்பர் 6 தன்னுடைய வாழ்நாளிலேயே மிகவும் துக்ககரமான நாள் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.
மேலும் ரத யாத்திரையைத் துவங்குவதற்கு முன் எல்.கே. அத்வானி மதச்சார்பின்மை குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்என்று கூறிக் கொண்டிருந்ததையும் நாம் பார்த்தோம்.இவை மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ்/பாஜகவின் தற்போதைய பிரதமர் வேட்பாளரும், அத்வானியைப் போன்றே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் வல்லவராக இருக்கிறார். குஜராத்தில் 2002 முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்குத் தலைமை தாங்கிய இந்த மனிதர், இப்போது தில்லியில் மாணவர்கள் மத்தியில் ஒரு கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், ‘‘கழிப்பறைகளே முதலில், கோவில்கள் பின்னர்தான்’’ என்று கூறியிருக்கிறார். இந்த ஆண்டு ஏப்ரலில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதுபோன்றே இவரும் எதிரொலித்திருக்கிறார்.கழிப்பறைகள் கட்டுவோம் போன்றுவாக்குறுதிகள் வருவது நல்ல விஷயம்தான்.
ஆனால் குஜராத்தில் பாஜகவின் ஆட்சியின் கீழ் சுகாதாரம் சம்பந்தமான திட்டங்கள் அப்படி ஒன்றும் சிறப்பானமுறையில் இல்லை என்பதே எதார்த்த நிலை. 2012-13 இந்திய ஊரக வளர்ச்சி அறிக்கையின்படி நாட்டில், கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களில் ஐந்தில் ஒன்றில், மூன்று அடிப்படை வசதிகளான - குடிநீர் வசதி, மின்சார வசதி, சுகாதார வசதி - ஆகிய மூன்றும் இல்லாதிருக்கின்றனர் என்றும் கிராமப்புறத்தில் உள்ளோரில் 18 விழுக்காட்டினருக்கு மட்டுமே இம்மூன்றையும் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது. குஜராத்திலும் நிலைமை அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லை. இம்மூன்று வசதிகளும் பெற்ற குடும்பங்கள் நான்கில் ஒன்று கூட அங்கே கிடையாது.
கேரளாவில் 71 விழுக்காட்டினர் இவ்வசதிகளைப் பெற்றிருக்கின்றனர். வேறு மாநிலங்களில் 13 மாநிலங்கள் இதனைவிட அதிகமான அளவில் பெற்றிருக்கின்றன. மலம் அள்ளும் இனத்தினரின் (அருந்ததியினரின்) உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மணவ் கரிமா என்னும் ஸ்தாபனம், சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஓர் ஆய்வினை மேற் கொண்டு, அகமதாபாத் மாநகராட்சியின் ஆதரவின் கீழ் 126 இடங்களில் மலத்தைத்தலையில் சுமக்கும் பணியாளர்களால் மலம் அள்ளுவது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அம்பலப் படுத்தியிருக்கிறது. இந்த நடைமுறை 1993ஆம் ஆண்டுசட்டத்திற்கு விரோதமாக அங்கேதொடர்ந்து இருந்து வருகிறது. இவ்வாறு மலத் தைத் தலையில் சுமக்கும் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தினால் அவ்வாறு வேலைக்கு அமர்த்துவோரை இச்சட்டத்தின்படி தண்டிக்க முடியும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுதொடர்பாக ஆட்சேபணை எழுப்பியபோது, அதற்கு குஜராத் அரசு என்ன பதில் அளித்தது தெரியுமா? குஜராத் அரசு 1993ஆம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்துவதில் மிகவும் அக்கறையுடன் இருக்கின்றதாம், குஜராத்தில் மலத்தைத் தலையில் சுமப் போரே கிடையாதாம். இவ்வாறு அளந்து விட்டிருக்கிறது. இவை அனைத்தும் குஜராத் முதல்வரின் கூற்றுகளில் உள்ள வெறுமையை வெட்ட வெளிச்ச மாக்குகின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜகவினரால் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ‘‘வீர்யம் மிகுந்த குஜராத்’’ என்னும் பிரச்சாரமும், குஜராத் அனைத்து மனிதவள வளர்ச்சிக் குறியீடுகளின் தேசிய சராசரியைவிட கீழான நிலையில் இருக்கிறது என்று வெளிவந்துள்ள உண்மைகளின் மூலம் புஸ்வானமாகிப் போனது. தேசிய சராசரியில் குஜராத் மிகவும் பின்தங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் தலைமையில் இயங்கிய மாநிலங்களின் பலவகை வளர்ச்சி அட்டவணைகளைப் பரிசீலனை செய்த குழுவின் அறிக்கையானது, பலமுனைகளில் குஜராத் முன்னேறியிருப்பதாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டதையும் தரைமட்டமாக்கியுள்ளது.
அந்த அறிக்கையில், நாட்டின் வளர்ச்சி அட்டவணையில் குஜராத் 12ஆவது இடத்தினை வகிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இதுதான் பாஜக மாநில அரசான குஜராத்தின் ‘‘வீர்யம்’’ ஆகும். மோடி இப்போது கூறியதைப்போன்ற ஒரு கருத்தை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியபோது அதனைக் கண்டித்து, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் அவரது இல்லத்திற்கு முன்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது. அப்போது இதுதொடர்பாகப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர், இத்தகைய கருத்துக்கள் ‘‘மதம் மற்றும் மக்களின் நம்பிக்கைகள் என்னும் அற்புதமான மாண்பினை அழித்துவிடும்என்றும் குறிப்பிட்டார். எதிர்பார்த்ததைப் போலவே, விஸ்வ இந்து பரிசத் தலைவரான பிரவீண் தொகாடியாவும், ``இந்து சமூகத்திற்கு இதைவிட அவமானம்வேறெதுவும் இருக்க முடியாது என்று குஜராத் முதல்வர் மோடியின் கழிப்பறைகள்/கோவில் கள்கருத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறார். அவர் மேலும்,“கோவில்கள் குறித்து இவ்வாறு தேவையற்ற கருத்துக்கள் பற்றிக் கேள்விப் பட்டதும் அதிர்ச்சியடைந்தோம், நிலைகுலைந்து நிற்கிறோம், ... சிறந்தமுறையில் சுகாதார வசதிகள் செய்யப்பட வேண்டியது தேவைதான் என்று நாங்களும் நம்புகிறோம். ஆனால் அதற்காக கோவில்களை இழுத்திருப்பது தேவையில்லாததுஎன்று குறிப்பிட்டிருக்கிறார். இதேபோன்று மத்திய அமைச்சர் கூறியபோது கிளர்ச்சிகள் நடத்தியதை நினைவுகூர்ந்த அவர், மேலும் கூறுகையில், ``இந்த சமயத்தில் பாஜக மீண்டும் ஒருமுறை முன்வந்து தன்னுடைய சொந்தப் பிரதமர் வேட்பாளர் அளித்துள்ள அறிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்என்றார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் இத்தகைய பேச்சுக்களை, கார்ப்பரேட்டுகளில் சில பிரிவினர் மோடிக்குஅளிக்கும் ஆதரவுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அவை, மோடியை, நவீன தாராளமய பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னிலும் மிகத்தீவிரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடிய நபராக சித்தரித்துக் கொண் டிருக்கின்றன. வாஜ்பாயின் தலைமையில் அமைந்திருந்த பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தின்போது இந்தியா ஒளிர்கிறதுஎன்றும் எல்லாம் நன்றாகவே நடக்கிறதுஎன்றும் அறிவிக்கப்பட்டவைகளை நினைவுகூர்க.
இவ்வாறு, அவர்கள் இரு இந்தியர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு வளர்ந்து கொண் டிருப்பதுடனேயே அவர்களை ஒருங்கிணைப்பதற்கான வேலையையும் செய்தார்கள். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கிடவும் ஏழைகளை மேலும் பரம ஏழைகளாக மாற்றிடவும் நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதனை இப்போதும் அவர்கள் தொடர்கிறார்கள். 2013 செப்டம்பரில் ஊடகங்களில் வெளியான இரு செய்திகள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. முதலாவது, உலக அளவிலான செல்வந்தர்களை உருவாக்கியதில், உல கில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்துக்கள் வைத்திருப்பவர்களில் ( ஸ்ரீ 1 அடைடiடிn = சுமார்5 ஆயிரம் கோடி ரூபாய்) இந்தியா இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.2012இல் இவர்களின் எண்ணிக் கை 22.2 விழுக்காடாக இருந்ததுதற்போது 23.4 விழுக்காடாக அதி கரித்திருக்கிறது. இவ்வாறு நாட்டில் உள்ள 1,53,000 உலக அளவிலான செல் வந்தர்களின் சொத் துக்கள் 589 பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகும்.
இரண்டாவது செய்தி அகில இந்திய ஊரக வளர்ச்சி அறிக்கைதொடர்பானதாகும். இது கிராமப்புறங் களில் சுயமாக வேலை பார்த்து வந்த விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் சுருங்கிவிட்டதாகவும், இவர்கள் விவ சாயம் அல்லாத வேலைக்கு மாறி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு விவசாயம் அல்லாத வேலைக்கு மாறியவர்களில் 42 விழுக்காட்டினர், தொழில்திறமை தேவைப்படாத வேலைகளான கட்டிடத்தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகங் களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எந்தப் பாதுகாப்புமின்றி கேசுவல் தொழிலாளி களாகவே வேலை செய்து கொண்டிருக் கிறார்கள். அறிக்கை மேலும், கடந்த பத்தாண்டு களில் வேளாண்மையில் பொது முதலீடு என்பது தேக்க நிலையில் இருப்பது தொடர்கிறது என்றும் அதாவது வேளாண் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடு அளவிற்குத்தான் இருக்கிறது என்றும், இதன்காரணமாக எழுந்துள்ள விவசாய நெருக்கடியின் விளைவாக விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்வது அதிகரித்திருப்பதில் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
1995ல்10 ஆயிரத்து 700 விவசாயிகள் என்றிருந்தது, 2009ல் 17 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. கடன்களைக் கட்ட முடியாமை, பயிர்களின் விளைச்சலின்மை பெரும்பாலான தற்கொலை களுக்குக் காரணங்களாகும். அரசாங் கத்தின் உதவிகள் மக்களுக்கு நேரடி யாக மாற்றம் செய்யப்படும் என்று அரசுத்தரப்பில் பலமான முறையில் தம்பட்டங்கள் அடிக்கப்பட்டு வந்த போதிலும், கிராமப்புறங்களில் வங்கி சேவை யைப் பெற்ற குடும்பங்கள் என் பவை 2011ல் 54 விழுக்காடு மட்டுமே என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயிகளுக்கு அளித்துள்ள வங்கிக்கடன்கள் குறித்து ஆய்வு செய்தோ மானால், சிறு விவசாயிகள் 42,600 கோடி ரூபாய் கடன் உதவி பெற்றிருக்கிறார்கள், நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகள் 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி பெற்றிருக்கிறார்கள். இதுதான் இவர் கள் ஏழை மக்கள் மீது காட்டும் கரிசனமாகும்.குழந்தைகள் ஊட்டச் சத்தின்றி வாடுவது என்பது கிராமப்புறங்களில் இன்னமும் தொடர்கிறது. ஒவ்வொரு தனி நபரும் 2,153 கலோரி உணவு உட்கொண்டு வந்த நிலைமைகள் 2009-10ஆம் ஆண்டில் 2,020 கலோரியாகக் குறைந்துள்ளது.
சுகாதாரம் தொடர்பாகவும், கிராமப்புற இந்தியா கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது. உடல் நலிவுற்றவர்களில் 28 விழுக்காட்டினர் எவ்விதச் சிகிச்சையும் எடுத்துக்கொள்வதில்லை. ஏனெனில் அதற்கான வசதிகள் அவர் களிடம் இல்லை. இது தலித்துகள் மத்தி யில் 37 விழுக்காடாகவும், பழங்குடியினர் மத்தியில் 32 விழுக்காடாகவும் இருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையினர் அரசின் சுகாதார வசதிகளைத்தான் பயன் படுத்தி வந்தார்கள். சுகாதார மையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாமையும், சுகாதாரத்துறை பெரிய அளவிற்கு தனியார்மயத்தை நோக்கித் தள்ளிவிட்டிருப்பதும், இவர்களைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. தேசிய கிராமப்புற சுகாதார நிறுவனம் என்று ஒன்று செயல்பட்ட போதிலும், கிராமப்புற சுகாதாரப் பாதுகாப்பு என்பது தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் அல்லாத பணியாளர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் போதிய அளவிற்கு இல்லாமல் இருப்பதால் மிகவும் நலிவடைந்துதான் காணப்படுகிறது. இவற்றை வலுப்படுத்திட க்கூடிய விதத்தில் மிகப்பெரிய அளவிற்கு முதலீடுகள் தேவைப்படுகின்றன.
கிராமப்புறங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளின் பதிவு அதிகரித்துள்ள போதிலும், ஆரம்பக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 78 விழுக்காட்டிலிருந்து இடைநிலைக்குச் செல்கையில் 29 விழுக்காடாக சரிந்துள்ளது என்று 2009-10 ஆண்டின் ஆய்வுகள் காட்டுவதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மாணவர்களின் கற்றறிந்த நிலையும் மிகவும் மோசமாக இருப்பதாகவும் ஐந் தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பாடங்களைக் கூட படிக்க முடியாமல் திணறுகிறார்கள் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற் பட்டவர்களுக்கு கூட்டல், கழித்தல் கணக்குகளைக் கூட போட முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது.அதிகாரப்பூர்வமான அறிக்கை களின்படி இருவித இந்தியர்களின் எதார்த்த நிலை இதுதான். இத்த கையதோர் அமைப்பைதான் இந்தியக் கார்ப்பரேட்டுகள் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். இத்தகைய அமைப்பைத்தான் பாஜகவின் பிர தமர் வேட்பாளர் மிகச் சிறப்பாக மேற்கொள்வார் என்று இவர்கள் நம்புகிறார்கள்.மதவெறித் தீயைக் கொழுந்து விட்டெரியச் செய்வதும், நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களைத் தீவிரமாகப் பின்பற்றுவதும் நாட்டு மக்க ளின் வாழ்வாதாரங்களைக் கடுமையாகத் துன்பத்திற்குள்ளாக்கும் என்பதிலும், நம் நவீன குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை வேர றுத்து நாட்டின் ஒற்றுமையையும் ஒரு மைப்பாட்டையும் குலைத்துவிடும் என்பதிலும் சந்தேகமில்லை.
எனவே, நம்மக்களுக்கும், நம் நாட்டிற்கும் சிறந்த தோர் இந்தியாவை உருவாக்கிட நம் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டுமானால் இவர்களின் இத்தகைய இழி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)


Tuesday, October 8, 2013

முசாபர் நகர் கலவரத்திற்குக் காரணமான வன்முறையாளகளைக் கது செய்க-அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள்








புதுதில்லி, அக்.9-
முசாபர்நகர் கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். வன்முறைக்கு ஆளான  பெண்களுக்கு மறையான சிகிச்சை (கவுன்சிலிங்) அளித்திட வேண்டும். அவர்களின் புனர்நிர்மாணப் பணிகளை முறையாகச் செய்திட வேண்டும். இவை தொடர்பாக மாதர் சங்கத்தினர் சார்பில் உ.பி. முதல்வரைச் சந்தித்திட உள்ளோம்  என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் கூறினார். 
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் உண்மை கண்டறியும் குழு ஒன்று  முசாபர்நகர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துத் திரும்பியுள்ளது. இது தொடர்பாக விளக்கிட செவ்வாய் அன்று தில்லியில் பெண் பத்திரிகையாளர் சங்க வளாகத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவர்கள் கூறியதாவது:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தில்லி மாநில பொதுச் செயலாளர் சேபா பரூக்கி, உ.பி. மாநிலத் தலைவர் மது கார்க், லக்னோ செயலாளர் சீமா ரானா, தில்லி செயல் தலைவர் ஆஷா சர்மா, தில்லிப் பொருளாளர் அஞ்சனா ஜா, தில்லி துணைத் தலைவர் மைமூனா முல்லா ஆகியோர்  2013 அக்டோபர் 5 அன்று முசாபர்நகரில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் தங்கியிருந்த முகாம்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.  கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஏராளமான பெண்களையும் அவர்கள் சந்தித்தார்கள்.
தூதுக்குழுவினர் முதலில் புதானா வட்டத்தில் ஜோகியகேரா கிராமத்திற்குச் சென்றார்கள். இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஃபுகானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஃபுகானா கிராமத்தில் சுமார் 20-25 ஆயிரம் மக்கள் வசித்து வந்தார்கள். இவர்களில் 3500 பேர் முஸ்லீம்கள். இவர்களின் மீது செப்டம்பர் 8 அன்று காலை தாக்குதல் தொடங்கியது. இந்தப் பகுதியில் மட்டும் பெண்கள் கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளானதாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைவரும் முஸ்லீம் பெண்கள்.
பின்னர் தூதுக்குழுவினர் லோயி என்னும் மற்றொரு கிராமத்திற்குச் சென்றனர். ஹிசாட், லேக், பகாவ்தி, கராத், ஃபுகானா, ஸசன்பூர் முதலான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 80 விழுக்காட்டினர் ஃபுகானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
முசாபர் நகர் குறித்து ...
முசாபர்நகர் குறித்து பொதுவாக தவறான தகவல்களே பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆண்-பெண் விகிதாசாரம் என்பது இங்கே 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற அளவில்தான் இருக்கிறது. குழந்தை பிறப்பில் விகிதாசாரம் இன்னும் மோசம். 1000க்கு 863தான். பெண்கள் படிப்பறிவு என்பது 58.69 விழுக்காடுதான். அதேசமயத்தில் சராசரி படிப்பறிவு விகிதம் 69.12 விழுக்காடாகும். பெரும்பகுதி பெண்கள் பத்தாம் வகுப்பிற்கு மேல் கல்வியைத் தொடர முடியா நிலை.
முசாபர்நகர் பகுதியில் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவது என்பது அடிக்கடி நடைபெறும் பகுதியாகும். இதில் இரு சமூகத்துப் பெண்களுமே பாதிக்கப்படுகிறார்கள். இக்குற்றச் செயல்களில் ஈடுபடும் கயவர்கள் இரு சமூகத்திலும் உண்டு.  அதேபோன்று கயமைத்தனம் செய்பவனும், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்ணும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆயினும் இந்த எதார்த்த உண்மைகள் வேண்டுமென்றே இப்போது வன்முறையைத் தூண்டிவிட்டவர்களால் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‘‘கவுரவக் கொலைகள்’’ தொடர்ந்து நடைபெறும் மாவட்டங்களில் முசாபர்நகர் மாவட்டமும் ஒன்று. சராசரியாக மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டுபேர் இம்மாவட்டத்தில் ‘‘கவுரவக் கொலை’’களால் கொல்லப்படும் கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவற்றின் பின்னணியில் கட்டைப் பஞ்சாயத்துக்கள் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இதில் பாதிக்கப்படும் பெண்கள் இரு சமூகத்திலும் உண்டு.
உதாரணமாக, வன்முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஃபுகானாவும் ஒன்று. இக்கிராமத்தில் கவுரவக் கொலைகள் என்பவை சர்வசாதாரணமாகும். சமீபத்திய வன்முறையில் இக்கிராமத்தில் முஸ்லீம் பெண்கள் வன்புணர்ச்சிகு ஆளாகி இருக்கிறார்கள். இதே கிராமத்தில் 2006இல் ஓர் இந்துப் பெண் நடுத்தெருவில் ஆடைகள் உறிக்கப்பட்டு, ‘‘கவுரவக்’’ கொலை செய்யப்பட்டுள்ளார். விஷயம் என்னவெனில், அந்த அளவிற்கு பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கச் சிந்தனை ஆழமாக இங்கே புரையோடிப் போயிருக்கிறது. இவர்களின் கொடூர மனப்பான்மைக்கு இரு இனத்துப் பெண்களுமே தப்பவில்லை.
இன்றையதினம் இரு இனத்தில் உள்ள இளம் பெண்களும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லக்கூடப் பயப்படுகிறார்கள்.
இத்தகைய இடத்தைத்தான் ஆர்எஸ்எஸ்/பாஜக-வினர் தங்கள் மதவெறித் தீயை கிளறிவிட நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முஸ்லீம் மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டுள்ளார்கள். இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லீம் பெண்களாகும்.
பாலியல் தாக்குதல்கள்
சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. பல வன்முறைச் சம்பவங்கள் குறித்து வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சில சம்பவங்கள் குறித்து மட்டுமே முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வளவுதான் அதன்பின் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் எதுவும் பெறப்படவில்லை. கயவர்கள் எவரும் கைது செய்யப்படவும் இல்லை. சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் எந்தத் தொடர் நடவடிக்கையும் இல்லை.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அனைத்துப் பெண்களையும் மாதர் சங்கத்தின் சந்தித்தனர். அவர்கள்  எப்படி வன்முறைக்கு ஆளானார்கள்?
வழக்குகளின் விவரம் வருமாறு: (பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).
1. சபா (சலீம் என்பவரின் மனைவி):  சலீம் துணிகளை சுமந்து சென்று விற்று வருபவர். சென்ற மாதம் 8ஆம் தேதி காலை கயவர்கள் (பத்லு, நிலு மற்றும் அமர்தீப்) கத்திகளுடன் சபாவின் இல்லத்திற்கு வந்தனர்சபாவைப் பிடித்துக்கொண்டு மூன்று பேரும் வன்புணர்ச்சி  செய்துள்ளனர். தடுக்க வந்த சலீமின் தம்பியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்கள். பின்னர் பெட்ரோல் எடுத்து வந்து வீட்டைத் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். சபாவும் அவரது குடும்பத்தினரும் தப்பி ஓடிவந்து ஜோகியாகேராவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
2. சமீனா: சுமார் 10 மணியளவில் ரூபேஷ், ராம்வீர் மற்றும் பீம் அவரது வீட்டிற்கு வந்து அவரை வன்புணர்ச்சி செய்துள்ளார்கள். பின்னர் அவரது வீட்டைத் தீக்கிரையாக்கியுள்ளனர். அவரது 2 வயது குழந்தையையும் வீசி எறிந்துள்ளனர். இதில் அக்குழந்தைக்குக் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
3. குத்சியா: சுமார் பிற்பகல் 2 மணியளவில் ஐந்து பையன்கள் (அனைவரும் அவரது அண்டை வீடுகளைச் சேர்ந்தவர்கள்) - சுனில் (சாது என்பவரின் மகன்), தேவேந்தர் (ஹர்பால் என்பவர் மகன்), ரமேஷ் (விர்மா என்பவரின் மகன்), ராம்குமார் (பட்வாரி என்பவரின் மகன்), ஜோகிந்தர் (பிரதான் என்பவரின் மகன்) அவரது வீட்டிற்கு வந்தார்கள், குத்சியா அணிந்திருந்த உடைகளை ரமேஷ் கிழித்து எறிந்தான். சுனில், தேவேந்தர் மற்றும் ராம்குமார் அவரை வன்புணர்ச்சி செய்தார்கள். குத்சியா தப்பி ஓட முயற்சித்திருக்கிறார். ஆனால் அவர்கள் அவரைப்பிடித்து, சுவரில் அவரது தலையை மோதச் செய்துள்ளார்கள். இதில் அவர் மயங்கி விழுந்துவிட்டார். பின்னர் 4 மணியளவில் பாதுகாப்புப் படையினர் அங்கே வந்தசமயத்தில் அவர்களால் அவர் காப்பாற்றப்பட்டு, லோயி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளார்.
4. ஃபரிதா (சல்மான் மனைவி): கயவர்கள் அவரது வீட்டிற்கு வந்த சமயத்தில் அவர் ரொட்டி தயார் செய்து கொண்டிருந்திருக்கிறார். கயவர்களைப் பார்த்ததும், தப்பி ஓட முயற்சி செய்திருக்கிறார். ஆயினும் அவர்கள் அவரைப் பிடித்துத் தாக்கி, வன்புணர்ச்சி செய்துள்ளார்கள். சச்சின், வேத்பால், ஷானி, அஜித் மற்றும் யோகேஷ் என்னும் ஐந்து பையன்களும் இவ்வாறு அவரை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். மற்ற எவரும் அவரைக் காப்பாற்றுவதற்காக வரும்முன்னர் அவரே பக்கத்திலிருந்த காட்டிற்குள் தப்பிஓடி ஒளிந்திருந்து, லோயி கிராமத்தில் இருந்த மதராசா பள்ளிக்கு வந்திருக்கிறார்.
5. சல்மா (நாசீர் மனைவி): புகாமா கிராமத்தைச் சேர்ந்த இவரை 6 பேர் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர். இப்போது இவர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.
6. சபீனா : சபீனா தன்குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலங்களை விவரித்தார். கயவர்கள் இவரது வீட்டிற்கு வந்தபோது வீட்டிலிருந்தவர்கள் அவர்களை எதிர்த்துத் தாக்கியுள்ளனர். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் அவர்கள் எதிர்ப்பை முறியடித்து, சபீனாவையும் அவரது இரு மகள்களையும் (வயது முறையே 16 மற்றும் 22) மானபங்கப்படுத்தியுள்ளனர். பின்னர் வீட்டை தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் காடு வழியே தப்பி ஜோகியாகேரா வந்து சேர்ந்தனர்.
இவ்வாறு வன்புணர்ச்சிக்கு ஆளான அனைவருமே மாதர் சங்கத்தினரிடம் தங்களிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டவர்கள் யார் என்று தங்களால் அடையாளம் காட்ட முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இவர்கள் காவல்நிலையத்தில் அளித்துள்ள முறையீடுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளிலும் கயவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயினும் இவர்களில் எவரும் காவல்துறையினரால் இதுவரை கைது செய்யப்படவில்லை.
வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பல குழந்தைகள் காணாமல் போயுள்ளன. ஆயினும் இவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்களைக் கண்டறிந்திட நிர்வாகத்தினரால் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
முகமது அல்டாப் தெருத்தெருவாகச் சுற்றித்திரிந்து துணிகளை விற்பனை செய்பவர். கலவரம் நடந்தபோது இவர் தன் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் தப்பி ஓடியபோது அக்குழந்தை இவரது பிடியிலிருந்து நழுவி விழுந்துவிட்டது. இன்னமும் அது கிடைக்கவில்லை.
நதீம் என்ற பெண் தன் ஐந்து மாதக் குழந்தை ரெஹனாவைத் தன் கைகளில் வைத்துக்கொண்டு ஓடியபோது மயங்கி விழுந்துவிட்டார். எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை.
இதில் மிகவும் கொடுமை என்னவெனில், பெண்களிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டவர்கள், தங்கள் வீடுகளைத் தாக்கி, தீக்கிரையாக்கியவர்கள்தங்கள் சொந்தக் கிராமத்தைச் சேர்ந்த அக்கம்பக்கம் இருந்தவர்கள்தான். இவ்வாறு இவர்கள் மத்தியில் பாதுகாப்பற்ற விதத்தில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே இவர்கள் மீளவும் தங்கள் கிராமத்திற்குச் செல்ல மிகவும் அஞ்சுகிறார்கள்.
கலவரம் நடந்து ஒரு மாதம் ஆகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்னமும் தற்காலிகமான திறந்தவெளி முகாம்களிலேயே தங்கியிருப்பதால் சுகாதார சீர்கேட்டிற்கு மேலும் ஆளாகியுள்ளார்கள்.
முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் மிகவும் நன்கு திட்டமிடப்பட்டவைகளாகும். பாஜக/ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்தவர்கள்மகாபஞ்சாயத்துக்கள் மற்றும் கட்டைப் பஞ்சாயத்துக்களைக் கைப்பற்றிக் கொண்டு இவற்றின் மூலம் இத்தாக்குதல்களை செய்துள்ளார்கள். 
ஜோலி என்னும் இடத்தில்மட்டும்தான் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற இடங்களில் எல்லாம் முஸ்லீம்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள்.
கலவரம் நடப்பதற்கு முன்பும் சரி, நடந்த பின்பும் சர் உத்தரப்பிரதேச மாநில அரசு மிகவும் பொறுப்பற்ற முறையிலேயே நடந்துகொண்டு வருகிறது. வன்முறையாளர்கள் மீது காலத்தே அது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவிற்குச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது.
இதில் மிகவும் கொடுமையான அம்சம் என்னவெனில் கலவரம் நடைபெற்ற சமயத்தில் மிகவும் நேர்மையாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டிருப்பதாகும்.
ஒருசில பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தபோதிலும், கலவரத்தை நடத்தியவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
தற்காலிக முகாம்களை தனிநபர் சிலர்தான் அமைத்துள்ளனர். இம்முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு அரசின் நிவாரண உதவி என்பது இன்னமும் முறையாகப் போய்ச்சேரவில்லை.
முகாம்களை நடத்துபவர்கள் மாதர் சங்கத்தினரிடம் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கோரினார்கள். இதனை அடுத்து மாதர் சங்கத்தினர் 65 முகாம்களுக்குத் தேவையான தார்பாலின்களை வழங்கி இருக்கிறார்கள்.
மாதர் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்தது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
‘‘நிலைமை உண்மையில் மிகவும் பயங்கரமானது. மதவெறியை வன்முறை வெறியாட்டங்களை நடத்தியவர்கள், பெண்களின் பாதுகாப்பை இதற்குக் காரணமாகக் கூறியுள்ளனர்.  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் திரித்துக் கூறப்பட்டு, முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவப் பயன்படுத்தப்பட்டள்ளன.  
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக இவ்வாறு முஸ்லீம் மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டிருக்கிறது என்பதை எங்களால் உணர முடிந்தது. ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தினர், குஜராத்திலிருந்து அனுப்பப்பட்ட அமித்ஷா உத்தரப்பிரதேசத்திற்கு வந்தபிறகு இவ்வாறு முஸ்லீம் மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டிருக்கிறது. கட்டைப் பஞ்சாயத்து, மகா பஞ்சாயத்து ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார்கள்.
நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக, முஸ்லீம் மக்களுக்கு  எதிராக, நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக இவ்வாறு இவர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். இதுதான் நரேந்திர மோடி நாட்டுக்குக் காட்டக்கூடிய எதிர்காலமாகும். இது நமக்கு வேண்டாம். 
வன்முறையாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். வன்முறைக்கு ஆளான  பெண்களுக்கு மறையான சிகிச்சை (கவுன்சிலிங்) அளிக்கப்பட வேண்டும். அவர்களின் புனர்நிர்மாணப் பணிகளை முறையாகச் செய்திட வேண்டும். இவை தொடர்பாக மாதர் சங்கத்தினர் சார்பில் உ.பி. முதல்வரைச் சந்தித்திட உள்ளோம்.’’
இவ்வாறு சுதா சுந்தரராமன் கூறினார்.
மாதர் சங்கத்தினர் தாங்கள் சென்று வந்த விவரங்கள் குறித்து தில்லியில் செவ்வாய் அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்களில் சிலரையும் அழைத்து வந்திருந்தனர். அவர்களும் பத்திரிகையாளர்கள் மத்தியில் தாங்கள் எவ்வாறெல்லாம் தாக்கப்பட்டோம் என்பதை விவரித்தார்கள்.
(ச. வீரமணி)

 


Sunday, October 6, 2013

மதவெறியைக் கிளறிவிட பாஜக முயற்சி



பல ஆண்டுகளுக்குப்பின்னர்,  இறுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் நாட்டின் பல மதச்சார்பற்ற சக்திகளின் வேண்டுகோளுக்கு இணங்க,  பயங்கரவாத வழக்குகள் தொடர்பாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தவறான முறையில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை சரி செய்திடவும் அதன்மூலம் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு மீண்டும் அளித்திடவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். அனைத்து முதலமைச்சர்களுக்கும் அவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில்,  பயங்கரவாத வழக்குகளில் தவறான முறையில் சிறையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் எவரும் இருத்தி வைக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ‘‘இரண்டகமான’’ முறையில் கைதுகளில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்திடவும் பரிந்துரைத்திருக்கிறார்.

புலனாய்வு அமைப்புகளால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவதாகப் பல புகார்கள் மத்திய அரசுக்கு வந்திருக்கின்றன.... சிறுபான்மை இளைஞர்களில் சிலர் தாங்கள் வேண்டும் என்றே குறிவைத்துத் தாக்கப்படுவதாகவும்,  தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் உணரத் தொடங்கியுள்ளார்கள். தேவையற்ற முறையில் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவதற்கு அப்பாவி இளைஞர்கள் எவரொருவரும் சிக்க வைக்கப்படக்கூடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது,” என்று ஷிண்டே தன்னுடைய கடிதத்தில் எழுதியிருக்கிறார். அவர் மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை காட்டக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். ஆயினும் பயங்கரவாத வழக்குகளைப் புலனாய்வு அமைப்புகள் கையாளும்போது மத மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பேணக்கூடிய விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஷிண்டேயின் கடிதத்திற்கு எதிராக பாஜக துள்ளிக்குதிக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். ஷிண்டே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவதாகவும், நாட்டை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க முயற்சிப்பதாக வும் பாஜக,  குற்றம் சுமத்தி இருக்கிறது. 2011இல் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் நடைபெற்ற சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டு, சிறைகளில் வாடுவதாகவும்,  இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும்,  குறிப்பாக ஆஜ்மீர் ஷெரிப், மாலேகான் மற்றும் ஹைதராபாத் மெக்கா மசூதி ஆகியஇடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இவ்வாறு அவர்கள் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் பிரச்சனையை எழுப்பியது. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் இந்துத்துவா பயங்கரவாதிகளின் திட்டமிட்ட வேலைகளே என்று புலனாய்வுகளின் மூலம் நன்கு தெரிந்த பிறகும் கூட, முஸ்லிம் இளைஞர்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், 2012 நவம்பரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிக்குழு ஒன்று, குடியரசுத் தலைவரைச் சந்தித்து,  மனு ஒன்றையும் தாக்கல் செய்தது. அந்த மனுவில் குறிப்பிட்டிருந்த விவரங்கள் வருமாறு: நாட்டின் பல பகுதிகளிலும் நடை பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக புலனாய்வு அமைப்புகளால் முஸ்லிம் இளைஞர்கள் தவறான முறையில் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். சில வழக்குகளில் இந்த இளைஞர்கள் பத்து அல்லது பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே சிறையிலடைக்கப் பட்டிருந்து, கடைசியில் நீதிமன்றங்களால் இவர்கள் அப்பாவிகள் என்று கூறப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் மீது இரக்கம் கொண்டு நம்பகமான குழுக்கள் மற்றும் அமைப்புகள் சில, இவ்வழக்குகளின் விவரங்களை சேகரித்து வெளியிட்டிருக்கின்றன. அவற்றை ஆராயுங்கால்,  இந்த வழக்குகள் பலவற்றில் முஸ்லீம் இளைஞர்களுக்கு எதிராகப் புலனாய்வு அதிகாரிகள் ஒருதலைப்பட்சமான கண்ணோட்டத்துடன் செயல்பட்டுள்ளனர் என்பதையும், அப்பாவி இளைஞர்களுக்கு எதிராகப் பொய்யாகப் புனையப்பட்ட சாட்சியங்களைத் தாக்கல் செய்துள்ளனர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளன. புலனாய்வு அமைப்புகள் தங்கள் புலன்விசாரணைகள் மூலம் ‘‘வழக்குகள்’’ போட வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்திருக்கிறார்களே யொழிய, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதை உத்தரவாதப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.’’ ‘‘மிகவும் கொடூரமான முறையில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட அமைப்புகள் அத்தகையத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க முன்வராத சமயங்களில்,  கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் நிலைமை மிகவும் பரிதாபமானவை. இவர்கள் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இத்தகைய செயல்பாடுகள், நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் கொள்கைகள் மீதே கறையை உண்டாக்குகின்றன. அதே சமயத்தில், அப்பாவி மக்கள் கைது என்பதன் பொருள் உண்மையான கயவர்களை சுதந்தரமாக உலவ விடுகிறோம் என்பதாகும்.’’ மேற்படி மனுவில் தவறான முறையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்பான 22 வழக்குகளைப் பட்டிய லிட்டிருந்தோம். 2006இல் மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள், தவறான முறையில் கைது செய்யப்பட்டார்கள் என்பதும், அவர்கள் ஆறு ஆண்டு காலத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்து, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதும் இப்போது தெரிய வந்திருக்கிறது. அதே போன்று 2007 ஹைதராபாத் மெக்கா மசூதி வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 27 முஸ்லிம் இளைஞர்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் அனைத்திலிருந்தும் நிரபராதிகள் என்று கூறப்பட்டு ஐந் தாண்டுகளுக்குப் பின் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று கர்நாடகாவில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் கைது செய்யப்பட்ட ஐவரில் இரு முஸ்லிம் இளைஞர்கள் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நிரபராதிகள் எனக் கூறப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. அதேபோன்று அது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு, இனத்தினருக்கு, நிறத்தினருக்கு அல்லது பிராந்தியத்தினருக்கு மட்டும் சொந்தம் என்றும் கூற முடியாது.

பயங்கரவாதச் செயல் என்பது தேச விரோதச் செயல் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. ஆயினும்,  பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில்,  அப்பாவி இளைஞர்களை,  அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக,  பலியாக்கிடக் கூடாது. இவ்வாறு செய்வது என்பது நாட்டின் சுதந்திரத்தையே,  நாட்டின் நீதிபரிபாலன அமைப்பையே கேலிக்குரியதாக்கி விடும். பயங்கரவாத வழக்குகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அடிக்கடி இன்னல்களுக்கு உட்படுத்தப்படுவது அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். இதனை ஏற்க முடியாது. இது நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்னும் கட்டமைப்பிற்கே விரோதமானதாகும். உள்துறை அமைச்சரின் கடிதத்திற்கு எதிரான ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் கோபம் புரிந்து கொள்ளக்கூடியதே. ஏனெனில் இவர்களைப் பொறுத்தவரை,  இவர்கள் நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற தன்மையை மறுதலிப்பவர்கள். இன்றைய நவீன இந்தியக் குடியரசை,  ஆர்எஸ்எஸ்-இன் கொள்கையை உயர்த்திப்பிடிக்கக்கூடிய விதத்தில் ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரமாகமாற்ற வேண்டும் என்பதே இவர்களது குறிக்கோளாகும். இவர்கள் மதச் சிறுபான்மையினருக்கு சுதந்திரத்தையும் நீதி அமைப்பில் சமத்துவத்தையும் உறுதியளிக்கக்கூடிய விதத்தில் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் எதிர்ப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. எனவேதான் அரசின் இந்த முயற்சியானது, முஸ்லிம்களை முகஸ்துதிசெய்வதாகவும், வாக்குவங்கி அரசியலாகவும் அவர்களால் கருதப்படுகிறது. உண்மையில் சொல்லப்போனால், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம்தான் நம் நாட்டில் மதப் பெரும்பான்மையினரின் வாக்குகளை ஒருமுனைப் படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளில் மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் மதவெறியைக் கூர்மைப்படுத்தி,  தங்களுடைய வாக்குவங்கி அரசியலின் மோசமான வடிவத்தை நடைமுறைப்படுத்தும் கேவலமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டில் மதச்சிறுபான்மையினரின் சமூக -பொருளாதார வாழ்நிலை குறித்து நீதியரசர் சச்சார் குழு அளித்த பரிந்துரைகள் கண்டு நாடே அதிர்ச்சிக்குள்ளாகியது. இவரது அறிக்கையைத் தொடர்ந்து வெளியான நீதியரசர் ரங்கனாத் மிஷ்ரா ஆணையத்தின் அறிக்கையானது, மதச் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு, இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. உண்மையில் நிலைமைகள் இவ்வாறு இருந்த போதிலும், முஸ்லிம் மக்களுக்காக ஏதேனும் நடவடிக்கை வந்தால், அவர்கள் முகஸ்துதிசெய்யப்படுவதாக ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் அலறுகிறது.

இவ்வாறு இவர்கள் கூறுவதன் மூலம் தங்கள் மதவெறிப்பிரச்சாரத்தை அவர்கள் கூர்மைப்படுத்துகிறார்கள் என்பதே இதன் உண்மைப் பொருளாகும். ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தால் தங்களின் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குஜராத் முதல்வர் மோடிதான் என்று கூறி அதற்குக் காரணம் குஜராத் மாநிலத்தை அவர் வீர்யம் மிக்க குஜராத்தாக மாற்றி இருப்பதுதான் என்றும் தம்பட்டம் அடித்து வந்தது. இப்போது நாட்டின் மனிதவள ஆற்றல் அட்ட வணையின்படி தேசிய சராசரியில் குஜராத் மிகவும் பின்தங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் தலைமையில் இயங்கிய மாநிலங்களின் பலவகை வளர்ச்சி அட்டவணைகளைப் பரிசீலனை செய்த குழுவின் அறிக்கையானது, பலமுனைகளில் குஜராத் முன்னேறியிருப்பதாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டதையும் தரைமட்ட மாக்கியுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டின் வளர்ச்சி அட்டவணையில் குஜராத் 12ஆவது இடத்தினை வகிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இதுதான் பாஜக மாநில அரசான குஜராத்தின் ‘‘வீர்யம்’’ ஆகும். 2014 பொதுத் தேர்தலின்போது தங் களுடைய பிரச்சாரத்தின் அடிப்படையாக மதவெறித் தீயை விசிறிவிட்டு மத வெறியைக் கூர்மைப்படுத்துவது என்ற அடிப்படைக்கு ஆர்எஸ்எஸ்/பாஜக திரும்பி யிருக்கிறது என்பது தெளிவாகி இருக்கிறது. எனவேதான்,  பாஜக தலைவர் மத்திய உள்துறை அமைச்சரின் கடிதம் அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரானது’’ என்றும் உள்துறை அமைச்சர், முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெற பிரதமர் கட்டளையிட வேண்டும்’’ என்றும் கூறியதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. அவர் மேலும்,  காங்கிரஸ் கட்சிதான் நாட்டில் மிகப்பெரிய வகுப்புவாதக் கட்சி. முன்னதாக, பிரதமர் இந்தியாவின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று கூறியிருந்தார். இப்போது பயங்கரவாதம் என்ற பெயரால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தவறாக சிறையில் அடைக்கப்படாது இருப்பதை முதலமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்’’ என்றும் இதுபோன்று மேலும் பலவும் எழுதியிருக்கிறார்.
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகர் கலவரங்களுக்குப்பின் உருவான பதற்ற நிலைமை இன்னமும் தொடர்கிறது. 

நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்று பதற்றத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை அவர்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள் என்பதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காக நாட்டின் பிற பகுதிகளில் மதவெறித் தீயை விசிறிவிட ஆர்எஸ்எஸ்/பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அனுமதித்திடக் கூடாது. நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை ஒரு முனைப்படுத்திடவும், நாட்டின் நலன்களைப் பாதுகாத்திடவும் இது அவசிய மாகும்.

(தமிழில்: ச. வீரமணி)