Thursday, April 30, 2009

தோழர் அகல்யா ரங்கனேகருக்கு இரங்கல்

புதுடில்லி, ஏப்ரல் 30-
மறைந்த தோழர் அகல்யா ரங்கனேகருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் புதுடில்லியில் உள்ள பிடிஆர் பவனில் வியாழன் அன்று மதியம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சுபாஷினி அலி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன், புரவலர் பிரமிளா பாந்தே, சிஐடியு செயலாளர் தேவராஜ், இந்திய தேசிய மகளிர் சம்மேளத்தின் சார்பில் பிரமிளா லும்பா, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரஞ்சனா மற்றும் இந்து அக்னி கோத்திரி ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள்.
அப்போது சுதா சுந்தரராமன், தோழர் அகல்யா ரங்கனேகர் குறித்து கூறியதாவது:
(ச. வீரமணி)



Wednesday, April 29, 2009

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அழகிரிக்குத் துணைபோகும் அரசு எந்திரம் -

தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுத்திட வேண்டும்
பிரகாஷ்காரத் கடிதம்
புதுடில்லி, ஏப். 29-
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.க. அழகிரிக்குத் துணைபோகும் அரசு எந்திரத்திற்கு எதிராக, தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கோரியுள்ளார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பொ.மோகனுக்கு எதிராகப் போட்டியிடும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி போட்டியிடும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் நிலவும் அசாதாரணமான நிலைமைகள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், தலைமைத் தேர்தல் ஆணையர் சால்வாவிற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
‘‘தமிழ்நாட்டில் மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் இருக்கின்ற அசாதாரணமான நிலைமைகள் குறித்து இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். எங்கள் கட்சியின் வேட்பாளர் பொ.மோகன் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, தமிழக முதல்வரின் மகன் மு.க. அழகிரி நிறுத்தப்பட்டிருக்கிறார். கடந்த சில வாரங்களாகவே, இத்தொகுதியில் வாக்காளர்களை வஞ்சகமானமுறையில் கவர்வதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பணமும் பொருளும் விநியோகிக்கப்படுவதையும், அரசு எந்திரம் முழுமையாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் காண முடிகிறது. எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட எங்கள் கட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் சமீபத்தில் திருமங்கலம் என்னும் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணபலம் பயன்படுத்தப்பட்டது. அதே ‘திருமங்கலம் பாணி’ மதுரையிலும் பெரிய அளவில் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது.
எங்கள் கட்சியின் சார்பிலும், எங்கள் வேட்பாளரின் தேர்தல் முகவர் சார்பில் செய்யப்பட்டுள்ள முறையீடுகளின் பட்டியலை இத்துடன் இணைத்திருக்கிறேன். இதில் கண்டுள்ள துஷ்பிரயோகங்களை நிறுத்தி, நியாயமான மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற வலுவான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்பட வில்லை.
எனவே, இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும் மதுரை மாவட்டத் தேர்தல் அலுவலர், மாநகரக் காவல்துறை கண்காணிப்பாளர், மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் உடனடியாக மாற்றல் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நடுநிலை தவறாது செயல்படும் அதிகாரிகள் அப்பொறுப்புக்களிவ் நியமிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், தன்னுடைய சிறப்புப் பார்வையாளர்களை அனுப்பி, அரசு எந்திரம் அங்கே துஷ்பிரயோகம் செய்யப்படாது பார்த்துக்கொள்ள வேண்டும், தேர்தல் நடத்தைவிதி அப்பட்டமாக மீறப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மதுரையில் தேர்தல் பணிகள் கறைப்படுத்தப்படாமல் நடைபெற வேண்டுமெனில் தாங்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு பிரகாஷ்காரத் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
கடிதத்துடன் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள குறிப்பிவ் கூறப்பட்டிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில், ஆளும்கட்சியினர் வாக்காளர்களைக் கவர்வதற்காக மேற்கொண்டுள்ள அனைத்துவிதமான அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டுவந்துகொண்டிருக்கிறோம். தலைமைத் தேர்தல் ஆணையம் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்திருந்தபோதிலும், அவர்களின் இழிவான சட்டவிரோத நடவடிக்கைகள் கிஞ்சிற்றும் குறைந்திடவில்லை, மாறாக தேர்தல் நாள் நெருங்க நெருங்க மேலும் மேலும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆளும் திமுக=-வும் அதன் வேட்பாளரும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திட புதுப் புதுப்பாணிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகமோ, தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பான இத்தகைய இழிவான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, திமுக வேட்பாளரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் கட்சியின் மாவட்டச் செயலர், சட்டமன்ற உறுப்பினர், தேர்தல் முகவர் மற்றும் கட்சியின் மற்ற பிரிவு ஊழியர்களால் தரப்பட்டுள்ள கீழ்க்கண்ட நிகழ்வுகள், சட்டவிரோத நடவடிக்கைகளின் தன்மைகளைத் தங்களுக்கு விளக்கிடும்.
(1) திமுக-வின் சார்பில் 3.3.2009 அன்று நுகர்வுப் பொருள்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதற்கு எதிரான முறையீடு.
(2) 3.3.2009 அன்று திமுக வேட்பாளர் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட முறையிடு.
(3) 5.3.2009 அன்று தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்கு எதிராக, மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(4) 20.3.2009 அன்று மிகப்பெரிய அளவில் வாக்காளர்கள் சேர்க்கைக்காக அளிக்கப்பட்ட பட்டியலுக்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(5) 28.3.2009 அ ன்று சுய உதவிக் குழுக்களுக்கும் வாக்காளர்களுக்கும் பணம், புடவை, முதலானவை விநியோகிக்கப்பட்டதற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(6) 31.3.2009 அன்று திமுக-வால் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(7) 3.4.2009 அன்று திமுக-வால் பணம் பட்டுவாடா செய்வதற்காக திருமண மண்டபங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(8) 8.4.2009 அன்று திமுக வேட்பாளரால் தேர்தல் பிரச்சாரத்திற்காக, சாமி கும்பிடும் இடங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(9) 15.4.2009 அன்று மாவட்ட ஆட்சியர், ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறார் என்று, மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் அவர்களால் அளிக்கப்பட்ட முறையீடு.
(10) 15.4.2009 அன்று எங்கள் கட்சி ஊழியர் விஜயராஜன் மீது நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராக காவல்துறையில் முறையீடு அளிக்கப்பட்டும் அதன்மீது அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்காததற்காக அளிக்கப்பட்ட முறையீடு.
(11) 16.4.2009 அன்று திமுக-வினரால் மார்க்சிஸ்ட் கட்சித் தேர்தல் கூட்டத்தை சீர்குலைவு செய்ததற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(12) ஆளும் கட்சியின் அளித்துள்ள பொய்ப் புகார்களின் அடிப்படையில் எங்கள் கட்சி ஊழியர்களைக் கைது செய்ய, காவல்துறை எந்திரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(13) 17.4.2009 அன்று எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் மீது கொலைவெறித் தாக்குதல் தொடுத்திட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் செயல்படாதிருப்பதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(14) 18.4.2009 அன்று திமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்துக்காக மக்கள் தொடர் அலுவலரின் அலுவலகம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(15) 22.4.2009 அன்று மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினரால் டோக்கன்கள் அளிக்கப்பட்டதற்கு எதிராக தரப்பட்ட முறையீடு.
இந்த முறையீடுகளில் பல மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலருக்கு அவ்வப்போது அளிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய விதத்தில் எந்த நடவடிக்கையும் தேர்தல் அலுவலரால் இதுவரை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இவ்வாறு சட்டவிரோத தேர்தல் உத்திகளில் ஈடுபட்டுள்ள கயவர்களுக்கு மேலும் தைர்யம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலர், மாநகரக் காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் தொடர்பு அலுவலர் உடனடியாக அங்கிருந்து மாற்றப்படவில்லை என்றால், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவே மாறிடும்.
எனவே, தேர்தல் ஆணையம், மதுரைத் தொகுதியில் நடைபெறும் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நேர்மையான, நடுநிலை வழுவாத அதிகாரிகளை அங்கு தேர்தல் பணியில் அமர்த்திடுமாறும் கேட்டுக்கொள்கிறோம். அரசு எந்திரம் அங்கே துஷ்பிரயோகம் செய்யப்படுவதாலும், சட்டவிரோதமான பண பலம் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதாலும் சிறப்புப் பார்வையாளர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
(ச.வீரமணி.)

மே தின சபதம் ஏற்போம்



மே முதல் தினம். உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தால் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படக்கூடிய தினம், மே முதல் தினமாகும்.
இந்த மேதினம் கொண்டாடப்படுவது எவ்வாறு தொடங்கியது, அது இந்தியாவில் முதன்முதலில் எப்போது கொண்டாடப்பட்டது என்பதைச் சற்றே ஆராய்வோம்..
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தொழிலாளிகள் வர்க்கமாய் திரளாத சூழலில் முதலாளித்துவம் தனது கொடுங்கரங்களால் தொழிலாளிகளை மொத்தமாக சுரண்டி கொழுத்தது. அப்போது தொழிலாளிகளின் சராசரி ஆயுட் காலம் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமேயாகும்.
தொழிற்புரட்சி கண்ட இங்கிலாந்தில் தொழிலாளிகளின் நிலை படு பாதாளத்தில் இருந்தது. வயது வித்தியாசம், பால் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் 16 மணி நேரம், 18 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. மூன்று வயது குழந்தைகள் கூட 12 மணி நேரம் உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். சோர்ந்து தூங்கிவிடும் குழந்தைகளுக்கு சாட்டையடியே கூலியாகக் கிடைத்தது. தொழிலாளிகளின் இத்தகைய நிலையை எதிர்த்து 1836இல் “சாசன இயக்கம்” உருவானது.. இந்த இயக்கமே உலகின் பெருந்திரள் தொழிலாளிகளை கொண்ட முதன்மையான அரசியல் இயக்கமாக உருவெடுத்தது.
10 மணி நேர வேலை, அனைவருக்கும் வாக்குரிமை, பாராளுமன்றத்தில் ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் பங்கேற்பு முதலிய கோரிக்கைகளை முன்வைத்து 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இதைத் தள்ளுபடி செய்து விட்டது. சாசன இயக்கத்தினர் இரண்டாவது முறையாக 30 லட்சம் கையெழுத்துக்களை பெற்று மீண்டும் சமர்ப்பித்தனர். தொழிலாளிகளின் ஒன்றுபட்ட போராட்டம் வளர்ந்து வருவதை கண்ட பிரிட்டன் முதலாளித்துவ வர்க்கம் பெயரளவுக்கு 1847இல் 10 மணிநேர சட்டத்தை கொண்டு வந்தது. இது தொழிலாளிகளின் தொடர்ச்சியான இயக்கத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
1850களில் மார்க்சும், ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது, சாசன இயக்கத்தினருடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டி வந்தனர். மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் முயற்சியால், “கம்யூனிஸ்ட் புரட்சிக்காரர்களின் சர்வதேசக் கழகம்” உருவாக்கப்பட்டது.
1856இல் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் - விக்டோரியாவில், கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள்தான் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக் கங்களை இணைத்து “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு “ 1886 மே 1, அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது”. இவ்வியக்கமே ‘மே தினம்’ பிறப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்த சமயத்தில், மார்க்சும் - ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். 1847ஆம் ஆண்டு “நீதியாளர் கழகம்” என்ற பெயரில் செயல் பட்டு வந்த அமைப்பு, மார்க்ஸ் - ஏங்கெல்சுடன் தொடர்பு கொண்டு, அவர்களை தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படை யில் மார்க்சும் - ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டதோடு, இவ்வமைப்பின் பெயரை “கம்யூனிஸ்ட் லீக்” என்று மாற்றினர்.
அத்துடன் நீதியாளர் கழகத்தின் உறுப்பினர் அட்டைகளில் “அனைத்து மனிதர்களும் சகோதரர்களே” என்ற கோஷம் இடம் பெற்றிருந்ததை அகற்றி விட்டு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற புரட்சிகரமான முழக்கத்தை முன்வைத்தனர்.
கம்யூனிஸ்ட் லீக்கின் அறைகூவலுக்கு ஏற்ப உருவாக்கப் பட்டதே மார்க்ஸ் - ஏங்கெல்சின் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.” மார்க்சும், ஏங்கெல்சும் இத்துடன் நிற்காமல், 1864இல் முதல் அகிலம் என்று அழைக்கப்பட்ட, சர்வதேச தொழிலாளர் அமைப்பை ஏற்படுத்தினர். இவ்வமைப்பு உலகின் பல நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்க பிரதிநிதிகளை உள்ளடக்கி இருந்தது. 1865இல் ஜெனிவாவில் நடைபெற்ற முதலாம் அகிலத்தின் மாநாட்டு பிரதிநிதிகளிடையே உரையாற்றிய மார்க்ஸ்,
“...வேலை நிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புகளின் போது முதலாளிகள் வெளி நாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதி செய்யக்கூடாது; எட்டு மணிநேர வேலைதான் வேண்டும்; குழந்தைகளுக்கும் குறைந்த வயதினருக்கும் வேலை நேரத்தைக் குறைத்திட வேண்டும்....”
என்று தொழிலாளி வர்க்கத்தின் அக்கால நிலைமைக்கு ஏற்ப கோரிக்கைகளை முன்வைத்தார். இக்கோரிக்கைகளை வென்றெடுக்க உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாடுபட முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அத்துடன் “...சட்டப்பூர்வமான வேலை நேரம் என்பது அடிப்படையானது; இதில் முன்னேற்றம் இல்லாமல், வேறு சமூக முன்னேற்றம் காண்பது அரிது...” என்று கூறி 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை உலகளவில், தொழிலாளர் இயக்கங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று முழங்கினார்.
8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம். இவையே தொழிலாளிகளின் முதல் தேவையாக இருந்தது. ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு,’ தொழிலாளர்களிடையே ஓங்கி வளர்ந்த போராட்ட உணர்வை நெறிப்படுத்தி, ஒருங்கிணைத்தது.
அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் வேண்டுகோளான 8 மணிநேர வேலை கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய முறையில் நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் 1886 மே 1 அன்று பேரெழுச்சியோடு துவங்கின.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. சிக்காகோவில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
8 மணி நேர வேலைக்கான இயக்கம் அமெரிக்காவில் வீறு கொண்டு எழுந்தது. 1886 மே 3- அன்று “மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் ஆகஸ்ட் ஸ்பைஸ் எழுச்சி மிகு உரையாற்றினார். கூட்டம் அமைதியாக நடை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், பெரும் போலீஸ் படை கூட்டத்தை முற்றுகையிட்டதோடு, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டது. 4 தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
இச்செய்தி நகரெங்கும் பரவியதையொட்டி, சிகாகோ மக்கள் பெரும் கோபாவேசத்திற்கு ஆளாயினர். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று கண்டனக் கூட்டம் நடத்தி மிகத் துரிதமாக தொழிலாளர்கள் திட்டமிட்டனர்.
1886 மே 4 ஹே மார்க்கெட் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் மெக்கார்மிக்கில் நடைபெற்ற சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆகஸ்ட் ஸ்பைஸ் , ஆல்பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் பேசத் துவங்கும் போது, போலீசார், கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து, அனைவரையும் கலைந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இந்த சமயத்தில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது; இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார். உடனே போலீஸ் படை கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்றைக்கும் வெளி வராத மர்மமாகவே இருக்கிறது. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஹே மார்க்கெட் சதுக்கமே சிவந்தது.
போலீசார் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் எந்தக் கட்டத்திலும் போலீஸார் மீது வெடிகுண்டை வீசியது யார் என்று நிரூபிக்கப்பட வில்லை.
இவ்வழக்கின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ”நம்முடைய நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு, இது போன்றவர்களை தூக்கி லேற்றுவதுதான் முன்னுதாரணமாக இருக்கும்” என்று கூறி 7 பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்புக் கூறினார்.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிஸ்ட் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது” 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஏங்கெல்ஸ் உட்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிகாகோ சதியை கண்டித்து, 1890 மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்தே மே முதல் நாள் மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் சிங்காரவேலர் இந்தியாவிலேயே முதன் முதலில் 1923இல் மேதினத்தை கொண்டாட திட்டமிட்டார். அந்த அடிப்படையில் 1923 மே 1 அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமிசர்மா தலைமையிலும் மே தினக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய சிங்காரவேலர், 8 மணி நேர வேலையை சட்டமாக்கவேண்டும் என்று அறைகூவினார். அதன் பின் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களிலும் மே தினம் தொழிலாளர் வர்க்கத்தால் மிக எழுச்சியோடு நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு மே தினமும், உலகத் தொழிலாளிகளை எழுச்சிக் கொள்ளச் செய்யும் - அடிமை விலங்குகளில் இருந்து விடுவிக்கும்.
நாமும் மேதினி சிறக்க இம் மேதினத்தில் சபதமேற்போம்.
..
ச.வீரமணி