Friday, June 5, 2015

இஸ்ரேலுக்காக பாலஸ்தீனத்தை கைவிடும் மத்திய அரசு



பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய இருப்பதாகவும், இந்தியாவும் இஸ்ரேலும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய தேதியில் இது நடைபெறும் என்றும் அயல்துறை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலுக்கு ஓர் இந்தியப் பிரதமர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவை. இத்தகைய பயணத்தின் முக்கியத்துவம் என்னவெனில், இருநாடுகளுக்கும் இடையே இதுநாள்வரை இருந்து வந்த ராணுவ உறவுகளுக்கு அதிகாரப்பூர்வ முத்திரை அளிப்பதேயாகும்.
சில விமர்சகர்கள் குறிப்பிட்டிருப்பதைப்போன்று, இந்திய - இஸ்ரேல் உறவுகள் “மிகவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன.’’இஸ்ரேல் மற்றும் யூத தேசியஇன இயக்கத்துக்கும் பாஜக-வின் தத்துவார்த்தப் பின்புலத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமையை அறிந்தவர்கள், இஸ்ரேலுக்கு நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாகப் பயணம் செய்ய இருப்பது குறித்து ஆச்சரியப்பட மாட்டார்கள். முந்தைய தேஜகூட்டணி அரசாங்கத்தின்போதும், அன்றைய துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி 2000ம் ஆண்டு இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் ஏராளமான எண்ணிக்கையில் கையெழுத்தாயின.
இந்தியா 1992ல் நரசிம்மராவ் அரசாங்கம் இருந்தபோதே இஸ்ரேலுடன் முழுமையான அளவில் தூதரக உறவுகளை நிறுவிவிட்டது. நரேந்திரமோடி அரசாங்கம் அமைந்தவுடனேயே இஸ்ரேலுடன் நெருங்கிய உறவுகள் மேற்கொள்ளப்படும் என்று பறைசாற்றப்பட்டது. இஸ்ரேல் ராணுவ அமைச்சர் மோஷே யாவ்லான் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்கு வந்தார். இஸ்ரேல் ராணுவ அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாக வருவதென்பது இதுவே முதல் தடவை. அவர் இந்தியாவிற்கு வந்திருந்தபோது, “இரு நாடுகளும் திரைமறைவுக்குப்பின்னால் பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்களில் ஒத்துழைப்பை நல்கிட வழிவகைகளைக் கண்டறிந்திருக்கின்றன,’’ என்று கூறி, இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் வெளிச்சத்திற்கு வராத வகையில் விரிவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.
இந்தியாவிற்கு அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை விநியோகம் செய்யும் நாடுகளில் இஸ்ரேல் தற்சமயம் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இஸ்ரேலில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகூ தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. வலதுசாரி மற்றும் யூதவெறிக் கட்சிகள் இவரது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பாலஸ்தீனத் தலைவர்களுடன் ஓர் அரசியல் தீர்வுக்கு எவ்விதமான சாத்தியக்கூறு இருந்தாலும் அதனைச் செல்லாததாக்கக்கூடிய விதத்தில் நேதன்யாகூ அரசாங்கம் அரக்கத்தனமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இஸ்ரேல் துணை அயல்துறை அமைச்சராக இருக்கும் ஜிப்பி ஹோடோவெலி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதிகள் மற்றும் மேற்கு கரைப் பகுதி இஸ்ரேலுக்குச் சொந்தமானவை என்றும் ஏனெனில் அவை கடவுளால் கொடுக்கப்பட்டவை என்றும் பகர்ந்திருக்கிறார்.
அமைச்சரவையில் `விரிவான இஸ்ரேல்’ பகுதியைச் சார்ந்த வழக்குரைஞர்கள் மிகுதியாக இருக்கிறார்கள். அவர்கள் மேற்கு கரைப் பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதிலேயே ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் எடுத்துக்கொள்ளப்பட, ஒரு மார்க்கமாக, மேற்கு கரைப் பகுதியில் யூதர்கள் குடியேற்றத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள். இஸ்ரேல் யூதர்களின் நாடு என்று பிரகடனம் செய்வதற்கான ஒரு சட்டமுன்வடிவு முந்தைய நாடாளுமன்றத்திலிருந்து நிலுவையில் இருந்து வருகிறது. இத்தகைய வெறிபிடித்த பிற்போக்கான இஸ்ரேல் அரசாங்கத்திற்கு ஆதரவினை விரிவுபடுத்திக் கொள்வதில் மோடி அரசாங்கத்திற்கோ, பாஜக-விற்கோ எவ்விதமான மன உளைவும் இருக்கப் போவதில்லை.
இந்தியாவின் நிலைப்பாடு இதுநாள்வரை பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்தது. அத்தகைய நிலைப்பாட்டினைக் குழிதோண்டிப் புதைத்திட இந்த அரசு இப்போது வெளிப்படையாகவே செயல்படத் தொடங்கிவிட்டது.எதிர்பார்த்ததைப்போலவே, கார்ப்பரேட் ஊடகங்கள் மோடியின் இஸ்ரேல் பயணத்தை வரவேற்றுத் தலையங்கங்கள் தீட்டி இருக்கின்றன, உண்மையான அரசியல் நடவடிக்கை என்று போற்றிப் புகழ்ந்திருக்கின்றன. இந்திய - இஸ்ரேல் உறவுகள் புதிய பரிணாமம் எடுத்திருப்பது இந்தியாவின் ஒட்டுமொத்த அயல்துறைக் கொள்கையையும் அமெரிக்காவின் பூகோள-அரசியல் கேந்திர நடவடிக்கைகளுடன் முழுமையாக ஒத்துப்போகச் செய்திடும் சூழ்ச்சியேயாகும். இந்த அடிப்படையில்தான் மோடியின் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியப் பயணங்களும் அமைந்திருந்தன. இவ்விரு நாடுகளும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமான முறையில் கூட்டணிகள் வைத்திருக்கும் நாடுகளாகும். இவ்விரு நாடுகளுடனும்தான் மோடி அரசாங்கம் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருக்கிறது.அமெரிக்காவின் போர்த்தந்திர நிலைப்பாட்டின்படி, இந்தியா கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான நாடு இஸ்ரேல் ஆகும். அமெரிக்காவின் தலைமையின் கீழ் அத்தகையதொரு போர்த்தந்திரக் கூட்டணியை உருவாக்குவதற்கான மற்றொரு நடவடிக்கைதான் தற்போதைய மோடியின் இஸ்ரேல் பயணம். இந்தப் பயணம், இதுநாள்வரை இந்தியா, சுதந்திர பாலஸ்தீனத்திற்கு எவ்விதமான நெகிழ்வுத்தன்மையுமின்றி அளித்துவந்த ஆதரவு கைவிடப்பட இருப்பதற்கான அறிகுறியுமாகும்.
 ஜூன் 3, 2015
தமிழில்: ச.வீரமணி



Wednesday, June 3, 2015

நவீன தீண்டாமை



-சீத்தாராம் யெச்சூரி

`மொட்டைக் கடிதங்கள், பொய்ப் பெயர்களில் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது’
சென்னை ஐஐடி-யில் இயங்கி வந்த மாணவர்களின் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டம் தடை செய்யப்பட்டிருப்பது, மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிபிடித்த- சகிப்புத் தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற வேண்டும் என்கிற குறிக்கோளின் ஒரு பகுதியேயாகும்.மேற்படி வாசிப்பு வட்டத்திற்கு எதிராக மொட்டைக் கடிதம் ஒன்றைப் பெற்றதைத் தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டளையின் அடிப்படையில் இந்தத் தடை மேற்கொள்ளப்பட்டிருக் கிறது.
வாசிப்பு வட்டத்தில், `பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களைக் கூறினார்கள்’ என்றும், அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்றும் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாகச் வெளியிட்டிருக்கின்றன. மத்திய கண்காணிப்பு ஆணையம் “மொட்டைக் கடிதங்கள், பொய்ப் பெயர்களில் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது,’’ என்று அறிவுரைகள் வழங்கியுள்ள போதிலும், உயர்கல்வி நிறுவனங்களில் “அறிவார்ந்த முறையில் நடைபெறும் சிந்தனைகளை’’ மழுங்கடிக்கும் விதத்தில், நாட்டில் பல்வேறு மதத்தினர் வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களுக்கிடையே இருந்து வரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பண்புகளை இந்துமதப் புராண, இதிகாசங்களுக்கேற்ப மாற்றியமைக்க முயலும் விதத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய தடைகள் அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கின்ற உரிமைகளின் ஆணிவேரையே பிடுங்கி எறியும் இழிசெயல்களாகும்.
நாட்டை நவீனத்துவத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சமத்துவம் அளிப்பது என்பதும் ஒரு பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஆண்டாண்டு காலமாக முழக்கங்களை வாயளவில் முழங்கி வந்த போதிலும், இந்தக் கேவலமான அமைப்புமுறை இன்னமும் நம்மைப் பீடித்திருப்பது தொடர்கிறது. தலித் - பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடுகள் வழங்கியிருக்கின்ற போதிலும், ஒட்டுமொத்தத்தில் அவர்கள் இன்னமும் மிகவும் இருளடைந்த நிலையிலிருப்பது தொடர்கிறது. பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிடும் சிறார்களில் தலித்-பழங்குடியினர் சதவீதம் இன்றளவும் அதிக அளவில் இருக்கிறது. அதேபோன்று உயர்கல்வி நிறுவனங்களிலும் அரசுப் பணிகளிலும் இவர்களது பிரதிநிதித்துவம் என்பது இன்றளவும் மிக மிகக் குறைவான நிலையிலேயே தொடர்கின்றன.
அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியாகி இருக்கும் சில புள்ளிவிவரங்கள் உண்மையில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியவைகளாகும். அதாவது, ஒவ்வொரு வாரமும் சராசரியாக 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்; 6 பேர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்லப்படுகிறார்கள்; 21 தலித் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நாட்டிலுள்ள விவசாயத் தொழிலாளர்களில், நகர்ப்புறங்களில் வாழும் ஆதரவற்ற மக்களில், மலம் அள்ளும் இழிதொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் தலித் - பழங்குடியினர்களே யாவார்கள்.
இத்தகைய பிரச்சனைகளை எழுப்பி, சாதிய வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்க முயன்ற ஒரு மாணவர் குழுவினரைத் தடை செய்ய முடியுமா? முடியும் என்று ஐஐடி நிர்வாகம் கூறுகிறது. இந்து `தர்மத்தின்கீழ்’ இந்து தேசத்தை மேன்மைப்படுத்திட வேண்டுமாயின், ஏணிப்படிகள் போன்று இருக்கும் சாதியக் கட்டமைப்பைக் கட்டிக்காக்க வேண்டியது அவசியம் என்பதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்டளையாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குருவாகக் கருதப்படும் கோல்வால்கர், “சிந்தனைக்கொத்து’’ என்னும் தன்னுடைய நூலில், “பிராமணன் தலையிலிருந்து பிறந்தவன், சத்திரியன் (அரசன்) கைகளிலிருந்து பிறந்தவன், வைசியன் தொடைகளிலிருந்து பிறந்தவன் மற்றும் சூத்திரன் கால்களி லிருந்து பிறந்தவன். இதன்பொருள், மக்கள் என்போர் இவ்வாறு நான்கு அடுக்குகளாக ஆக்கப்பட் டிருக்கிறார்கள் என்பதே’’ என்கிறார்.
நம் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நம் நாட்டின் பொருளாதார சமத்துவமின்மையை மிகப்பெரிய அளவில் விரிவடைய வைத்திருக்கின்றன. நம் நாட்டின் மொத்தவளத்தில் அதிகபட்சம் வைத்திருக்கும் ஒரு சதவீதத்தினரின் சொத்து மதிப்பு 2000ஆம் ஆண்டில் 36.8 சதவீதமாக இருந்தது, 2014ல் அது 49 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கையின்படி, 2015ம் ஆண்டில் உலகில் பசி - பஞ்சம் - பட்டினியால் வாடுவோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா கீழ்த்தரமான இடத்தைப் பிடித்திருக்கிறது.
அதாவது நம் நாட்டில் பசி - பஞ்சம் - பட்டினியால் வாடுவோர் 19 கோடியே 40 லட்சம் பேர்களாவர். நம் நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைத்து வந்த உணவின் அளவு சுருங்கி விட்டதால், கிடைக்கும் உணவைப் பங்கு போட்டுக் கொள்ளும் சண்டை சாதிய மோதலுக்கும் பகைமைக்கும் இட்டுச் செல்கிறது. சமூகத்தில் ஒதுக்கிவைத்தல் என்னும் இழி செயல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு திடுக்கிடும் சில உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறது.
“சமூகத்தில் ஒருசில பிரிவினரை ஒதுக்கிவைக்கும் போக்கு என்பது கடந்தகால மிச்ச சொச்சம் மட்டும் அல்ல; கல்வியறிவற்றவர்களிடம் மட்டும் இத்தகைய புத்தி நிலைகொண்டிருக்கவில்லை; மாறாக, சாதிக்காரர்களுக்கு சலுகை அளிப்பது என்பதும், தலித் மற்றும்முஸ்லிம்களை ஒதுக்கி வைத்தல் என்பதும் இந்தியப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் வகிக்கக் கூடிய நிலையில் உள்ள தனியார் நிறுவனங்களால் ஊட்டி வளர்க்கப்படுவதாவே தெரிகிறது’’ என்று அந்த ஆய்வு கூறுகிறது. இவ்வாறு, காலங்காலமாக சமூகத்தில் ஒருசில பிரிவினரை ஒதுக்கி வைத்தல், சாதிய ஒடுக்கு முறை, வகுப்புவாத அடிப்படையில் பாரபட்சம் காட்டுதல், ஆண் - பெண் பாலினப் பாகுபாடுகள் முதலானவை இருந்து வருகின்றன.
இவைதான், நவீன இந்தியாவில் மிகவும் நளினமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.`பிரதமருக்கு எதிராக வெறுப்பைப் பரப்புகிறார்கள்’ என்று கூறுவோரால் இந்த உண்மைகளை மறுக்க முடியுமா? கடந்த சில ஆண்டுகளில், சாதிகளுக்கிடையேயும் மற்றும் சாதிகளுக்குள்ளேயும் அரிதாரம் பூசும் வேலைகள் சில நடை பெற்றிருந்தபோதிலும், சமூக ஒடுக்குமுறையின் அடிப்படைக் கட்டமைப்பு இன்னமும் அப்படியே தான் இருக்கிறது என்கிற எதார்த்தத்தை நாம் உணர வேண்டிய தருணம் இது.
மகாத்மா காந்தி, “கடவுளின் மக்கள்’’ என்றபொருள்படும் ஹரிஜன் என்ற சொல்லை உருவாக்கி, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களின் மனப்பான்மையில் மாற்றம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சாதி ஒழிப்பு இயக்கங்களை வலுவாக நடத்தியவர்களுள் ஜோதிபா பூலே ஒருவராவார். அவர் நடத்திய சத்யசோதாக் இயக்கம் இன்றளவும் செல்வாக்குடன் விளங்குகிறது. சாதியச் சுரண்டலுக்கு எதிராக ஓய்வு ஒழிச்சலின்றி போராடிய பாபா சாகேப் அம்பேத்கர், கடைசிக் காலங்களில் தன்னைப் பின்பற்றியோரை, இந்துசமூகத்தின் சாதிய அநீதிகளிலிருந்து தப்பிப்பதற்காக, புத்தமதத்தைத் தழுவுமாறு கேட்டுக் கொண் டார்.
தந்தை பெரியாரால் தலைமை தாங்கப்பட்ட வலுவான திராவிட இயக்கம் சாதிய ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வலுவான உணர்வுகளை உருவாக்கியது. ஆயினும், இவ்வாறு அளப்பரிய தலைவர்களும் அவர்களுடைய வலுவான இயக்கங்களும் செயல் பட்டிருந்த போதிலும், சாதிய ஒடுக்குமுறை இன்னமும் நம்மைப் பீடித்திருப்பது தொடர்கிறது. மனதை மாற்றிக் கொள்ளுங்கள், பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று வெறுமனே வேண்டுகோள் விடுப்பதோ அல்லது இத்தகைய சமூக ஒடுக்குமுறைக்கான மூல வேர்களைச் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதோ மட்டும் இத்தகைய அருவருப்பான அமைப்பினை ஒழித்துக்கட்டப் போதுமானதல்ல.
இவ்வாறு ஒடுக்கப்பட்டு அடித்தட்டில் இருப்போரைப் புரட்சிகரமான முறையில் பொருளாதார ரீதியாக மேம்படுத்தாதவரை இக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட முடியாது. ஆனால் பாஜக அரசு, இக்கொடுமைகள் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறது. அதற்காகப் பணியாற்றுகிறது.
வரைவு அரசமைப்புச் சட்டத்தை ஏற்பளிப்புக்காக சமர்ப்பிக்கையில் டாக்டர் அம்பேத்கர் கூறியவார்த்தைகளை மீண்டும் ஒருமுறை நாம் நினைவு கூர்வது அவசியம்:
“1950 ஜனவரி 26 அன்று முரண்பாடுகளின் மத்தியில் ஒரு வாழ்க்கையை வாழ்வதற்காகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற இருக்கிறோம். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையைப் பெற இருக்கிறோம். அரசியலில், ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு மற்றும் ஒரு வாக்கிற்கு - ஒரு மதிப்பு என்பதைக் கொள்கைரீதியாக அங்கீகரித்திருப்போம். ஆனால் நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில், நம் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக, ஒரு மனிதன் - ஒரு மதிப்பு என்னும் கொள்கையை மறுக்கும் நிலையைத் தொடரப் போகிறோம். இத்தகைய முரண்பாடுகளுடனான வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடரப் போகிறோம்?
நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை மறுக்கும் போக்கை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடரப் போகிறோம்? இவ்வாறு நாம் வெகுகாலத்திற்கு மறுப்பது தொடருமேயானால், அது நம் அரசியல் ஜனநாயகத்தையே இடருக்குள்ளாக்கிடும்.’’
இத்தகைய பிரச்சனைகளை விவாதித்திடும் மாணவர் வாசிப்பு வட்டங்களைத் தடைசெய்வ தென்பது, எதிர்காலத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா மிகப்பெரிய அளவில் நெருக்கடிக்கு உள்ளாக இருக்கிறது என்பதற்கு  நிச்சயமான அடையாளமாகும்.

நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு
தமிழில்: ச.வீரமணி


Tuesday, June 2, 2015

வெற்றுப் பிரச்சாரம் வயிற்றை நிரப்பாது!

பாஜக தலைமையிலான தேஜகூட்டணி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி அதன் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் தொடங்கி இருக் கின்றன. பிரதமர் மோடி ஊடகங்களின் படாடோபமான பிரச்சாரங்களுக்கிடையே முதலாமாண்டு கொண் டாட்டத்தை மதுராவில் தொடக்கி வைத்திருக்கிறார். நாடு முழுதும் இதனையொட்டி 200 பொதுக் கூட்டங்கள் நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருக்கிறது. அனைத்து மத்திய அமைச்சர்களும் தலா குறைந்தது மூன்று பொதுக் கூட்டங்களையும், மூன்று பத்திரிகை யாளர் மாநாடுகளையும் நடத்திட வேண்டும் என்றும், அதாவது நாடு முழுதும் குறைந்தபட்சம் 200 பொதுக்கூட்டங்களிலும், 200 பத்திரிகையாளர் மாநாடுகளிலும் பங்கேற்க வேண்டும் என்றும் கட்டளை யிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்கள் பங்கேற்கும் 200 கூட்டங்களுடன் மேலும் 200 கூட்டங்கள் கூடுதலாக இருந்திடும். பிரதமர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அயல்நாடுகளில் பயணம் செய்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் தன்னுடைய பகட்டு ஆரவாரத்தன்மையை நன்கு காட்டிவிட்டு வந்திருக்கிறார். இப்போது ஆர்எஸ்எஸ்/பாஜக அதேபோன்று நாட்டு மக்கள் மத்தியில் தங்கள் வாய்வீச்சுக் கலையைக் காட்ட விருக்கின்றன.
ஊடகங்களுக்கு விளம்பரம் வாரியிறைப்பு
பிரதமர் தன் பிரச்சாரத்தை மதுராவிலிருந்து தொடங்கியிருப்பது கள்ளங்கபடமற்ற ஒன்று அல்ல. நாடு முழுதும் மதக்கலவரங்களை உருவாக்க வேண்டும் என்கிற மிகவும் மோசமான இழிநோக்கத்துடன்தான் அங்கிருந்து இது தொடங்கப்படுகிறது. ராமன் பிறந்த இடம் (அயோத்தி), கிருஷ்ணன் பிறந்த இடம் (மதுரா) மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவை `விடுவிக்கப்படும்’ என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் பேசி வருவதை நினைவுகூர்க. அதற்குப் பொருத்தமான வகையில் பிரதமர் மோடிக்கு மதுராவின் உள்ளூர் பாஜக எம்பியான ஹேம மாலினியால் கிருஷ்ணன் சிலை பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பிரச்சாரம், பல நூறு ஆண்டு காலமாக இருந்து வந்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதற்கும் அதனைத் தொடர்ந்து நாடு முழுதும் மதவெறி விஷப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வைப் பலிகொள்வதற்கும், நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையினர் மத்தியில் ஓர் ஆழமான பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்குவதற்கும் இட்டுச் சென்றிருக்கிறது.
பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினராக இரு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின், தன் சொந்த மாநிலமான குஜராத்தில் வென்ற தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, உ.பி. யில் வென்ற பனாரஸ் தொகுதியை மட்டும் இருத்தி வைத்துக்கொண்டிருக்கிறார். இப்போது ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தை மதுராவில் இருந்து தொடங்குகிறார். உண்மையில் இவை அனைத்தும் கெட்ட சமிக்ஞைகளேயாகும்.தனக்கு விசுவாசமாக இருக்கும் அனைத்துவகை ஊடகங்களுக்கும் பல வண்ண விளம்பரங்களை அரசாங்கம் வாரி இறைத்திருப்பது அதிகமாகி இருக் கிறது. எனவே, ஊடகங்கள் பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கம் தன் முதலாம் ஆண்டில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அதிக வித்தியாசத்துடன் தேறிஇருக்கிறது என்று அளந்திருப்பதில் ஆச்சரியப்படு வதற்கு எதுவும் இல்லை.
(தி டைம்ஸ் ஆப் இந்தியா) ஒருவர் தேர்விற்கு அமரும்போதுதான் மதிப்பெண்கள் கொடுக்கப்படும். இங்கே, இந்த அரசாங்கம் எந்தவிதமான தேர்வையும் எழுதாமல் இருக்கும் நிலையிலேயே, ஊடகங்கள் இந்த அரசாங்கத்திற்கு மதிப் பெண்களை வாரி வழங்கி இருக்கின்றன. ஊடகங்களின் வாயிலாக ஊட்டி, வளர்க்கப் படுவதன் காரணமாக எழுந்துள்ள `செல்வாக்கி’ன் தாக்கம் எப்படி இருந்தபோதிலும், சொந்தமாகவே ஊடக நிறுவனங்களை வைத்திருக்கும் கார்ப்பரேட்டுகள் இந்த அரசாங்கத்திற்குத் துதிபாடுவதில் போட்டிபோடுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
கார்ப்பரேட்டுகள் ஊடகங் களை விலைக்கு வாங்கியிருப்பது அவற்றின் மூலம் தங்கள் செல்வாக்கை செலுத்துவதற்கான முயற்சியேயாகும். கார்ப்பரேட்டுகள் ஊடகங்களின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்தி, துதிபாடுவது என்பது எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதன் காரணமாக, மக்கள் மத்தியில் ஊடகங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.
முதல் பக்கத்தில் துதி தலையங்கத்தில் விமர்சனம்
இதன்காரணமாகத்தானோ என்னவோ, பத்திரிகைகளின் முதல் பக்கத்தலைப்புச் செய்தியில் அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு விழா குறித்து `ஓகோ’ என்று துதி பாடியிருந்தாலும், அதன் தலையங்கங்களில் இந்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பது என்பதும் தொடர்ந்துள்ளது. ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். மேலே கூறியதுபோன்று தி டைம்ஸ் ஆப் இந்தியா இந்த அரசாங்கத்தைத் தூக்கி வைத்துப் பாராட்டியுள்ள அதே சமயத்தில், அதன் தலையங்கப்பகுதியோ, “... தேஜகூட்டணி அரசாங்கத்தின் முதல் ஓராண்டு ஆட்சிக் காலத்தில், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது கடினம்தான். ஏற்றுமதிகளும் தொழில்உற்பத்தியும் தேக்க நிலையில் இருக்கின்றன.
2014-ல் சற்றே உயர்ந்திருந்த `சென்செக்ஸ்’ புள்ளிகள் மீண்டும் இறங்குமுகத்தில் வீழத் தொடங்கிவிட்டன. போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஒவ்வோராண்டும் ஒரு கோடி பேர் வேலைதேடி வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழைந்து கொண்டிருப்பதால் `நல்லகாலம் பிறப்பதற்கான’ நம்பிக்கைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன,’’ என்று எழுதியிருப்பதுடன் இதேபோன்று மேலும் பல கருத்துக்களையும் அளித்துள்ளது.தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, “இந்த அரசாங்கம் எவ்விதத்திட்டத்தின் அடிப்படையிலோ அல்லது ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலோ செயல்படுவதுபோலத் தோன்றவில்லை,’’ என்று கூறுகிறது.
மேலும் அது, “இந்த அரசாங்கம் தன்னிடம் உள்ள தகவல்தொழில்நுட்பங்கள் வழியாக மக்களிடம் நேரடியாகப் பிரச்சாரம் மேற்கொள்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் ஒரு கருத்தொற்றுமையை உருவாக்க தன் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’’ என்றும் அறிவுரை வழங்கி இருக்கிறது.
ஆதரித்தவர்களே குறைகூறுகிறார்கள்
தி ஆசியன் ஏஜ் நாளேடு, “... ஆட்சியிலிருப்போர் மக்களுக்கு அளித்துள்ள வானளாவிய வாக்குறுதிகள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினர் மத்தியிலும் அதீத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், இவை நிறைவேற்றப்படுவதென்பது மிகவும் ஒளிமங்கிய நிலையிலேயே இருப்பதால், இந்த அரசாங்கத்தை வலுவாக ஆதரித்தவர்களே இப்போது இந்த அரசாங்கம் எந்தத் திசைவழியில் செல்வது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருப்பதாகக் குறைகூறத் தொடங்கி விட்டனர்,’’ என்று கூறுகிறது. மேலும் அது, “நாடு முழுதும் விவசாயத்துறை கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அதிலும் முக்கியமாக இந்த அரசாங்கம் யாரைத் தூக்கிநிறுத்த வேண்டும் என்று விரும்புகிறதோ அந்தக் கார்ப்பரேட் துறையே, அதிலும் குறிப்பாக பெரும் வர்த்தக நிறுவனங்களே, இப்போது இந்த அரசாங்கத்தைக்குறைகூறத் தொடங்கி இருக்கின்றன,’’ என்றும் கூறுகிறது.
தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு கூட, “இந்த அரசாங்கத்தின் கொள்கையைத் தீர்மானிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்கள்கூட இப்போது இந்த அரசாங்கம் தங்களுக்கு நம்பிக்கை மோசம் செய்துவிட்டதோ என சந்தேகம் கொள்ளத் தொடங்கி, எதிர்ப்பினைக் காட்டும் போக்கு உருவாகி இருக் கிறது. எதிர்க்கட்சிகள் குறித்து மோதல்போக்கைக் கடைப் பிடிப்பதற்குப் பதிலாக அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகும். அடுத்த நான்கு ஆண்டு கால நிகழ்ச்சிநிரல் அப்படித்தான் அமைந்திட வேண்டும். வருடாந்திரக் கொண்டாட்டங்கள் குறித்து வாக்காளர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்,’’ என்று எச்சரித்திருக்கிறது. தி பிசினஸ் ஸ்டாண்டர்டு தலையங்கமும் இதேதொனியை எதிரொலித்திருக்கிறது. தன் தலையங்கத்தில் அது இறுதியாக, “இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் கடந்த ஓராண்டின் செயல்பாடுகளிலிருந்து கற்றுக்கொண்டு, 2016 மே 26 அன்று விளம்பரம் செய்து தான் தங்கள் பெருமையைப் பீற்றிக்கொள்ள வேண் டும் என்கிற அவசியம் இல்லாத அளவிற்கு, சிறந்தமுறையில் செயலாற்ற வேண்டும்,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
நிறைவேறா வாக்குறுதிகள்
தி இந்து நாளேடு, “இந்த அரசாங்கத்தின் முதலாம் ஆண்டின் இறுதியில், இவை கூறிய வாக்குறுதிகளில் பல இன்னமும் முன்மொழிவுகளாகவே நீடிக்கின்றன. பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக எதுவுமே நடக்காததன் காரணமாக, இவையெல்லாம் அடுத்த நான்காண்டுகளில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பே கிடையாது அல்லது வாய்ப்பு அபூர்வம் என்றே தோன்றுகிறது,’’ என்று கூறியிருக்கிறது. அது மேலும், “இந்த அரசாங்கத்தின் அரசியல் வரவு செலவுப் பதிவேட்டில் வரவுப் பக்கத்தைக் காட்டிலும் செலவுப் பக்கமே நீண்டதாக இருக்கிறது,’’ என்று தன் தலையங்கத்தை முடித்திருக்கிறது.
இவ்வாறு நாட்டின் முக்கிய பத்திரிகைகள் தங்கள்தலையங்கங்கள் மூலம் கொஞ்சம் நம்பகத்தன் மையை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண் டிருக்கின்றன. ஆயினும், `நான்காவது தூண்’ என்று அழைக்கப்படும் ஊடகங்களின் நம்பகத்தன்மை, அரசாங்கத்திடமிருந்து கணிசமான அளவிற்கு விளம்பரங்களைப் பெறக்கூடிய நிலையில், நீடிக்குமா என்பது சந்தேகமே.வெறும் பிரச்சாரங்கள் மூலமாக மட்டும் மக்கள் வயிறு நிரம்பிடாது மற்றும் எப்போதும் நிரப்பிடவும் முடியாது என்பதை பெரும்திரளாக மக்களை அணி திரட்டுவதன் மூலம் பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கத்திற்கு நன்கு உறைக்கும் விதத்தில் சொல்ல வேண்டும்.
இன்றைய எதார்த்த நிலைமைகள் நம் வயிற்றை நிரப்பிடப் போதுமானதல்ல என்பதால், இந்த அரசாங்கம் தன் மக்கள் விரோதக் கொள்கைகளை மாற்றியமைத்திடவும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையே மறுதலிக்கக்கூடிய விதத்தில் மதவெறிப் பிரச்சாரங்களைக் கூர்மைப் படுத்து வதைத் தவிர்த்திடவும் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.
(மே 27, 2015)
(தமிழில்: ச.வீரமணி)