Friday, June 13, 2014

`நல்லாட்சி’ சந்தேகம்தான்!


நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு விட்டது. பதினாறாவது மக்களவைத் தேர்தல்கள் முடிந்தபின்னர் நடைபெற்ற முதல் கூட்டத்தொடர் தேசிய கீதத்துடன் சம்பிரதாயமான முறையில் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. சமீப காலத்தில் என் நினைவுக் கெட்டியவரை அநேகமாக மிகவும் குறுகிய நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இதுதான். இக்கூட்டத்தொடரின் ஒரேயொரு நிகழ்ச்சி நிரல் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில் முதல் நாளன்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு சம்பிரதாயமான முறையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவதுதான். கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடைபெற்று மூன்றாம் நாள் நிறைவேற்றப்பட்டு, கூட்டத்தொடர் முடிவடைந்தது. வழக்கமான கேள்வி நேரம் இரு அவைகளிலும் இல்லை.
அதேபோன்று பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளையும் உறுப்பினர்கள் எழுப்புவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீதான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, பரிசீலிக்கப்படவும் இல்லை. சமீபத்தில் என் நினைவுக் கெட்டியவரை, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிப்பதற்கும் அப்பாற்பட்டு வேறெந்த நாடாளுமன்ற நடவடிக்கைகளும் நடைபெறாது முடிந்த கூட்டத்தொடர் இதுவேயாகும்.பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்தபின்னர் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதும், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் எடுக்க வைப்பதும், வழக்கமான ஒன்றுதான். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி மேற் கொள்ளப்படவேண்டிய சம்பிரதாயமான பழக்க வழக்கங்களுக்கு மேல் இக்கூட்டத்தொடரில் எதுவும் நடந்திடவில்லை.
பொதுவாக, புதிய அரசு பதவியேற்கும்போது, குடியரசுத்தலைவர் உரையில் இந்த அரசு முதலாண்டில் என்ன என்ன திட்டங்களை அமல்படுத்த இருக்கிறது என்று குறிப்பிடப்படும். எனவே அதிலிருந்து புதிய அரசு எந்தத் திசைவழியில் பயணிக்க இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இந்த அரசு முன்னுரிமைகொடுத்து முக்கியமாக பரிசீலிக்க இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்படும் எனவும் ஊகிக்கப்பட்டது. உதாரணமாக, ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சமயத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் அந்த அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் எவை எவை என்றும் அவற்றை நிறைவேற்ற முதல் நூறு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். அவ்வாறு ஐமுகூ அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளை அது நிறைவேற்றவில்லை என்பது வேறு விஷயம். இப்போது, குடியரசுத் தலைவர் உரையில் அவ்வாறு எவ்விதமான முன்னுரிமைத் திட்டங்களும் குறிப்பிடப்படவில்லை. இப்போது குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை என்பது இன்றைய ஆளும் கட்சியானது தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்திய தேர்தல் முழக்கங்களின் தொகுப்பும் மற்றும் பாஜக தேர்தல் அறிக்கையின் புதியவடிவமும் ஆகும்.
எனவே இந்த அரசாங்கம் எந்தத் திசைவழியில் செல்ல இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நாம் நாடாளுமன்றத்தின் அடுத்தக் கூட்டத்தொடர் வரைக்கும் -அதாவது முறையான பட்ஜெட் கூட்டத்தொடர் வரைக்கும் - காத்திருக்க வேண்டியிருக்கும். அநேகமாக அக்கூட்டத்தொடர் ஜூலை முற்பகுதியில் ஏதேனும் ஒருநாளில் துவக்கப்படக்கூடும். இது தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லை. இப்போது நமக்கு ஏற்பட்டுள்ள அனுபவத்தின்படி எப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எவராலும் நிச்சயமாகக் கூற முடியாது. இந்த அரசாங்கம் `நல்லாட்சிஉட்பட பல முழக்கங்களை வாரி வழங்கியதன் அடிப்படையில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. நல்லாட்சி என்பதற்குப் பல்வேறு சிறப்பியல்புகள் உண்டு. முதலாவது, மக்களின் உடனடிப் பிரச்சனைகள் மீதான உறுதிமொழிகளை எப்படி நிறைவேற்றப்போகிறார்கள் என்பது உட்பட தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நிகழ்ச்சிநிரல் குறித்து மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போதுமான தகவல்களை அவர்கள் தெரிவித்திட வேண்டும்.
இரண்டாவது, இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் கீழ் அமைந்துள்ள அமைப்புகளில் போதுமான அளவிற்கு ஒரு பொருள்பொதிந்த விவாதத்திற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மூன்றாவது, அவ்வாறு உரிய பரிசீலனைகள் மேற்கொண்டபின், நாடாளுமன்ற நடவடிக்கைத் தொடர வேண்டும். இதேபோன்று பல்வேறு சிறப்பியல்புகளுடன், நல்லாட்சி என்பதன் பொருள் அரசாங்கம், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நாடாளுமன்றத்திற்கு சொல்லியாக வேண்டும். இதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைத் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குச் சொல்லியாக வேண்டும். இதுதான் நம் முடைய அரசமைப்புச் சட்டத்தின் திட்டப்பின்னணியாகும்.
அதாவது, இவ்வாறு மக்கள்தான் நாட்டின் விவகாரங்களில் மிக உயர்ந்த அதிகாரங்களைப் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய சிறப்பியல்புகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, இந்த அரசாங்கம் செயல்படத் தொடங்கியிருப்பதன்மூலம், நாட்டு மக்களுக்கு இது மிகவும் மோசமான முறையில் பல் வேறு தீய அறிகுறிகளையே அனுப்பிக் கொண்டிருக்கிறது. அவசரச்சட்டங்களைப் பிறப்பிப்பதன்மூலம் இந்த அரசாங்கம் தன் வேலையைத் தொடங்கி இருக்கிறது. அவ்வாறு அவசரச்சட்டம் பிறப்பித்தால் அதனை அடுத்து நடைபெறக்கூடிய நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் பரிசீலனைக்காகவும், ஏற்புரைக்காகவும் தாக்கல் செய்திட வேண்டும் என்பது மரபு. ஆனால் இந்த அரசு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவ்வாறு இச்சட்டங்களைத் தாக்கல் செய்திடவும் இல்லை. இதுகுறித்துக் கேட்டபோது, அடுத்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வார்களாம். அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத கால அளவிற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக மாற்றாவிட்டால், அது, சட்டப்படி, காலாவதியாகிவிடும்.அவசரச்சட்டங்கள் மூலம் ஆட்சி நடத்துவதென்பது நாடாளுமன்றத்தைப் பிடித்த சனியன் என்று பொதுவாகக் கருதப்படும்.
இந்த அரசாங்கம், தனக்கு மிகவும் தெளிவான முறையில் பெரும்பான்மை கிடைத்திருக்கிற போதிலும்கூட, `அவசரச்சட்டவழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. நிச்சயமாக இது `நல்லாட்சிக்கு அழகல்ல. நல்லாட்சிக்கான இலக்கணங்கள் இந்த அரசின் மேலும் பல நடவடிக்கைகள் மூலம் சந்தேகத்திற்கிடமளித்துள்ளது. முன்பு நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த நபர், தற்போது இந்த அரசின் கீழ் தனிப்பொறுப்புடன் இணை அமைச்சராக ஆகி இருப்பவர். முந்தைய அரசாங்கத்தால் ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் குறித்து வெளிப்படையாகவே எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கீழ், ஓர் அரசாங்கம் என்றால் அது அரசாங்கம்தான். ஒரு குறிப்பிட்ட காலத்தில் எந்தக் கட்சியின் கீழ் அது ஆட்சியில் இருந்திருந்தாலும் சரி. தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுபவர்கள் முந்தைய அரசாங்கம் மேற்கொண்ட முடிவுகளை மதிக்க வேண்டும்.
ஏனெனில் பல விஷயங்களில் ஒரு முடிவினை எடுப்பதற்குமுன்பு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பல்வேறு நடைமுறைகள் மற்றும் விதிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர்தான் முடிவுகள் எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவினை பாஜகவின் புதிய இணை அமைச்சர் கேள்விக்கு உட்படுத்துகிறார், வெளிப் படையாகவே தன்னுடைய `ட்விட்டர்இணையத் தளத்தில், இவ்வாறு புதிதாகப் பொறுப்பேற்க இருக்கும் ராணுவத் தலைமைத் தளபதி அப்பாவிகளைக் கொன்றவர்,” என்றும், “கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டவர் என்றும், “கிரிமினல்களுக்கு அடைக்கலம் கொடுத்துக்கொண்டிருக்கிறவர்,’’ என்றும் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப் பேற்க இருப்பவர் குறித்து, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவரும், முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியுமான ஒருவர், இவ்வாறு கடுமையான முறையில் கண்டனங்கள் தெரிவித்திருப்பது உண்மையில் குளவிக் கூட்டுக்குள் கையை விட்டவர் கதை போலாகிவிட்டது.
இதனால் மிகவும் தர்மசங்கடத்திற்குள் ளாகி இருக்கும் பாஜக அரசாங்கம் தன்னு டைய ராணுவ அமைச்சரின் மூலமாக நாடாளுமன்றத்தில் முந்தைய அரசாங்கம் இவ்வாறுராணுவத் தலைமைத் தளபதியை நியமித்திருப்பது முற்றிலும் சரிதான் என்று கூற வைத்திருக்கிறது. இந்த அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைபெறும் வழக்கில்ஜூன் 10 அன்று ஒரு பிரமாண உறுதிவாக்கு மூலம் (sworn affidavit) சமர்ப்பித்திருக்கிறது. அதில் அது, இவ்வாறு புதிதாக ராணுவத் தலைமை தளபதி நியமனம் செய்யப்பட்டிருப்பது சரி என்றும், முந்தைய ராணுவத்தலைமைத் தளபதியும் தற்போதைய அமைச்சரும் அவர் மீது மேற்கொண்டுள்ள ஒழுங்குநடவடிக்கை சட்டவிரோதமானது’’ (“illegal”), சம்பந்தமற்றது (extraneous”) மற்றும் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொண்ட ஒன்று”(“pre-meditated”) என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த உறுதிவாக்குமூலத்தில் தற்போதைய மத்திய அமைச்சர், 2012 மே மாதத்தில், பொறுப்பேற்க விருக்கும் ராணுவத்தலைமைத் தளபதிக்கு எதிராக மேற்கொண் டுள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை அல்லது பதிவேடுகளின் படி ஆதாரமும் இல்லைஎன்றும் கூறியிருக்கிறது.
`நல்லாட்சிஅளிப்போம் என்று உறுதிமொழி அளித்துள்ள புதிய பாஜக அரசாங்கத்திற்கு உண்மையிலேயே இது ஓர் அசாதாரணமான நிலைதான். முந்தைய அரசாங்கம் நியமனம் செய்த புதிய ராணுவத் தலைமைத் தளபதி நியமனம் செல்லும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பதும், அவ்வாறே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண உறுதிவாக்குமூலம் சமர்ப்பித்திருப்பதும், முன்பு நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்து, தற்போது மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவருக்கு எதிரான ஒன்று என்பது தெள்ளத்தெளிவானதாகும். தன் சொந்த அமைச்சரைவை சகா குறித்தே மிகவும் கடுமையான முறையில் அரசாங்கம் கண்டித்திருப்பதானது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளிப்படையாகவே மன்னிப்பு கோரி தன் செயலினை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது மத்திய அமைச்சரவையிலிருந்து தானாகவே விலகிக் கொள்ளவேண்டும்.
அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் பயபக்தியுடன் அளித்துள்ள பிரமாண உறுதி வாக்குமூலத்தில் அமைச்சர், ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த சமயத்தில் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு எவ்வித அடிப்படையும் இல்லை அல்லது பதிவேடுகளின்படி ஆதாரமும் இல்லை,’’ என்று கூறி அவரது செய்கையை வெளிப்படையாகக் கண்டித்திருப்பது மிகவும் மோசமான ஒன்று. இதனைச் சரிசெய்திடாமல் இந்தப் புதிய பாஜக அரசாங்கம் தன்னுடைய நடவடிக்கைகளை `வழக்கமான முறையில் தொடர்வதுஎன்பது சாத்தியப்படாது. இப்புதிய அரசாங்கம் இந்த அமைச்சரைத் தன்னுடைய அமைச்சரவையிலேயே தொடர்ந்து வைத்திருக்கப்போகிறதா? நல்லாட்சி அளிப்போம் என்று உறுதிமொழி அளித்துள்ள இப்புதிய அரசாங்கத்திற்கு இவ்வாறு மிகவும் சிக்கலான முறையில் சோதனை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே, “இந்த அரசாங்கத்திடமிருந்து இரு கோணங்களிலிருந்து வரும் தாக்குதல்களையும் சந்திக்கத் தயாராயிருக்குமாறுநாம் மக்களை எச்சரித்திருந்தோம். முதலாவது, பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில். நமக்குக் கிடைத்திருக்கிற அனைத்து அறிகுறிகளிலிருந்தும், மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படும். இரண்டாவது, மதவெறிக் கூர்மைப்படுத்தப்படுவது தொடர்பானது. தேர்தல்கள் முடிந்தவுடனேயே நாட்டின் பல பகுதிகளில் மதவெறியாட்டங்கள் அதிகமாகி இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் புனேயில் பொறியாளர் மாணவர் ஒருவர் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவா அமைப்பு ஒன்றால் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கைகளால் மக்களின் துன்ப துயரங்கள் மேலும் அதிகமாகும். இவ்வாறு இரு முனைகளிலிருந்தும் வரும் இவர்களது தாக்குதல்களை முறியடித்திடவும், அதன் மூலம் நாட்டின் நலன்களைக் காத்திடவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடவும் வலுவான வகையில் மக்கள் இயக்கங்களைக் கட்டி எழுப்பிடுவோம்.
(தமிழில்: ச.வீரமணி)


Sunday, June 8, 2014

தீய அறிகுறிகள்


புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசாங்கம் குறித்து அதற்குள் விமர்சனங்களை அளிப்பது என்பது சரியல்ல. ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்குப்பின்னரும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, புதிதாக மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டபின்னர், குடியரசுத் தலைவர். நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில்,   உரையாற்றுவார். இவ்வாறு அவர் உரையாற்றுவது 2014 ஜூன் 9 திங்களன்று நடைபெறவுள்ளது. அவருடைய உரையில், குடியரசுத் தலைவர். `அவருடைய அரசாங்கம் எதிர்காலத்தில் ஆற்ற இருக்கும் பணிகள் குறித்த பொதுவான திட்ட வரையறைகளை முன்வைப்பார். இது வழக்கமாக முன்னுரிமைகொடுத்து, அரசு அடுத்த நூறு நாட்களில் நிறைவேற்றுவதாக மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகளாக அமைந்திருக்கும். இவ்வாறு இவர்கள் அளித்திடும் திட்டம் மற்றும் இவற்றை நிறைவேற்றிட இவை மேற்கொள்ளும் பாணி ஆகியவை நிறைவுற்றபின்னர்தான் இவை குறித்த விமர்சனங்களை  இயல்பானமுறையில் வைத்திட முடியும்.
ஆயினும், `நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கசிந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களிலிருந்து, அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் குறித்த சமிக்ஞைகள்அவ்வளவு நன்றாக இல்லை. ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது நாம் ஏதோ குடியரசுத் தலைவர் தலைமையிலான ஆட்சியை நடத்துவதுபோல அமைந்திருந்ததைப் பார்த்தோம். இப்போது தற்போதைய நாடாளுமன்ற ஆட்சி அமைப்பையே அவ்வாறு மாற்றிட (modify) கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதுபோலத் தெரிகிறது.
பிரதமர் மட்டுமே பொறுப்பா...?
புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் மேற்கொண்டதற்கு அடுத்த நாள் காலை, பிரதமரின் அறிவுரைக்கிணங்க, கேபினட் அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள்குடியரசுத் தலைவரின் மாளிகை யிலிருந்து ஒரு பத்திரிகைச் செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் பட்டியல், இயற்கையாகவே, பிரதமரின் பொறுப்புக்களிலிருந்து தொடங்குகிறது. பல்வேறு துறைகளுக்கு மத்தியில், பட்டியல் அனைத்து முக்கிய கொள்கைப் பிரச்சனைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. இது வழக்கத்திற்கு விரோதமானது. அரசாங்கத்தின் கேபினட் வடிவ அமைச்சரவையில், கேபினட் அமைச்சரவைஅரசாங்கம் பின்பற்றக்கூடிய கொள்கைகளையும் திட்டங்களையும் ஒட்டுமொத்தத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதே சமயத்தில்ஒவ்வொரு கேபினட் அமைச்சரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை சம்பந்தமாக அவசியமான முடிவுகளையும்  மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கேபினட் அமைச்சரவையில் ஒவ்வோர் அமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்புகள் அளிக்கப்பட்டிருப்பதுடன், கூட்டு செயல்பாட்டின் ஜனநாயக வடிவமும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. `அனைத்து முக்கிய பிரச்சனைகள் மீதும் பிரதமர் மட்டுமே பொறுப்பு எனில், பின்  இப்போதைய அமைப்புமுறை குடியரசுத்தலைவர் வடிவ ஆட்சியை நோக்கி தள்ளப்படுகிறது என்றே கொள்ள வேண்டும். மேலும், அரசின் அனைத்து செயலாளர்களும் தங்கள் துறை சம்பந்தப்பட்ட விவரங்களைத் தங்கள்துறை சார்ந்த அமைச்சர்களுக்குத் தெரிவிப்பதோடு பிரதமருக்கும் நேரடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பதாக  ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.  மேலும், முந்தைய அரசாங்கம் பின்பற்றி வந்த `அமைச்சர்கள் குழுக்கள் (`Group of Ministers)மற்றும் `அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுக்கள் (`Empowered Group of Ministers) ஆகிய இரண்டையுமே கலைத்துவிட்டதாகவும் ஊடகங்களுக்குத் `தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன. இத்தகைய குழுக்கள் சில முக்கியமான பிரச்சனைகள் குறித்து பரிசீலிப்பற்கான ஓர் இடைப்பட்ட நிர்வாக ஏற்பாடாகத்தான் இருந்தன. இத்தகைய குழுக்களின் பரிசீலனைகள் முடிந்தபின்னர் கேபினட் அமைச்சரவையில் உரிய தீர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்போது இத்தகைய ஏற்பாடுகள் கைவிடப்பட்டு அனைத்தும் நேரடியாக பிரதமருக்கோ அல்லது பிரதமர் அலுவலகத்திற்கோ செல்லும்.
ஜனநாயகத்தின் அடித்தளம் மறுதலிப்பு
இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தையும் மிகவும் கூர்மையாகக் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அரசியல் நிர்ணயசபை மிக நீண்ட நெடிய விவாதங்களுக்குப்பின்னர்தான் நாடாளுமன்ற அமைச்சரவை ஆட்சி வடிவம்தான், குடியரசுத்தலைவர் ஆட்சி வடிவத்தைவிடஉகந்தது என முடிவுக்கு வந்தது.  நமது நாட்டின் வளம்பொருந்திய வேற்றுமைகள் மற்றும் பன்முகத்தன்மைகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான், அரசியல் நிர்ணயசபை அரசமைப்புச் சட்டத்தில்  மக்கள்தான் இறுதி இறையாண்மை அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்கள் என்ற பொருளைத்தரக்கூடிய விதத்தில், முதல் பத்தியிலேயேஇந்திய மக்களாகிய...நாம், என்று தீர்மானித்தது. மக்கள் இவ்வாறு தங்கள் இறையாண்மையை தாங்கள் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தீர்மானிக்கிறார்கள். அரசாங்கம் அந்த மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இதனைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகளும், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இதை மீளவும் உறுதிப்படுத்துவதற்காகத்தான் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.  இத்தகைய அமைப்பில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டுவந்தால் அது நம் ஜனநாயகத்தின் அடித்தளங்களையே மறுதலிக்கக்கூடிய விதத்தில் எதேச்சாதிகாரப் போக்கிற்கு இட்டுச்செல்லும் ஆபத்தை உள்ளடக்கி இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் புதிய அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பத்தாண்டு கால நிகழ்ச்சி நிரல் பார்க்கப்பட வேண்டும். நாம் நம் நாடாளுமன்றத்தை ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை மறுபடியும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். 1975இல் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டு இதனை மாற்றக்கூடிய விதத்தில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அத்தகைய எதேச்சாதிகார அணுகுமுறையை நாட்டு மக்கள் தங்கள் உறுதியான போராட்டத்தின் மூலம் முறியடித்து, நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுத்தார்கள்.
அவசரச் சட்டத்துக்கு அவசியம் என்ன?
அதேபோன்று அரசாங்கம் அவ்வப்போது அவசரச்சட்டங்கள் வெளியிடுவதன் மூலம் தங்கள் பணிகளைத் துவக்குவதும் கவலைக்குரிய ஒன்றாகும். முதலாவதாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டம் பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக நபரைத் தேர்வு செய்வது தொடர்பானதாகும்.  தனக்கு வேண்டிய ஒருவருக்கு இப்பதவியை அளிக்க வேண்டும் என்பதற்காக நடைமுறையிலிருந்த சட்டமே மாற்றப்பட்டிருப்பது, உண்மையில், முன்னெப்போதும் இல்லாத ஒன்று.    இரண்டாவதாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச்சட்டம் சமீபத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எல்லைகளை மீளவும் மாற்றியமைப்பது தொடர்பானதாகும். ஆந்திரப்பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றபோது, போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதி இரு மாநிலங்களுக்கும் இடையே பிரிக்கப்படாது என்ற பரிந்துரையை ஏற்றுக்கொள்ள ஐமுகூ-2 அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இது தொடர்பான அவசரச் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் அப்போது ஒப்புதல் அளிக்கவில்லை. பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் அவ்வாறு அவரால் ஒப்புதல் அளிக்கப்பட வில்லை. நாடாளுமன்றம் கூட்டப்படவிருக்கக்கூடிய நிலையில் இப்போது இது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தவிர்க்கவியலாக சூழ்நிலைகளில் மட்டுமே அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும்.  மற்றபடி சட்டம் தொடர்பான அனைத்து விஷயங்களும் நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் ஒரு வாரத்தில் கூடவிருக்கையில் அதுவரைக்கும்கூட காத்திருக்கமுடியாதது ஏன் என்பது புதிராக இருக்கிறது. அவசரச் சட்டங்கள் மூலம் ஆட்சி செய்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைரீதியாக எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறது. பாஜக கூட கடந்த காலத்தில் இத்தகைய `அவசரச்சட்ட ஆட்சியை எதிர்த்ததுதான். தவறான தகவல்கள்
புதிய கேபினட் அமைச்சர்களின் கல்வித்தகுதி குறித்தும் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன. மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் தற்போது சாலை விபத்து ஒன்றில் துயரார்ந்தமுறையில் இறந்த கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆகியோர் தாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தன்னிச்சையாக அளித்த உறுதிவாக்குமூலங்களில் தங்கள் கல்வித்தகுதி குறித்து தவறான தகவல்களை அளித்திருக்கிறார்கள் என்று புகார்கள் எழுந்துள்ளன. வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்னும் அந்தஸ்தை,   பல முதிர்ச்சிபெற்ற மேற்கத்திய ஜனநாயக நாடுகள் எல்லாம் கொண்டுவருவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே, சாதி, சமயம், பாலினம், பட்டதாரி, பட்டாதாரர் என எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது, வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்த நாடு, இந்தியா என்று நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொண்டிருந்தோம்.  நாம் `ஒரு நபர், ஒரு வாக்கு, `ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற கொள்கைக் கோட்பாட்டை உயர்த்திப்பிடித்தோம். எனவே இப்போது நம்முன் எழுந்துள்ள பிரச்சனை கல்வித் தகுதி சம்பந்தப்பட்டதல்ல. மாறாக உண்மையல்லாதவைகளைக் குறிப்பிட்டிருப்பதுதான். இவ்வாறு தகவல்களை மறைத்திருப்பது `நல்லதோர் அரசாங்கத்திற்கு நல்லதோர் அறிகுறியாகத் தெரியவில்லை. இதில் மேலும் மோசமான விஷயம் என்னவெனில் இவ்வாறு அமைச்சரின் பட்டப்படிப்பு சம்பந்தமாக `உண்மைத் தகவல்களைக் கொடுத்தார்கள் என்பதற்காக  தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகும். இதனை அதிகாரபூர்வமாக மறுத்திட நிர்வாகத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், தகவல் உரிமைச் சட்டம் அமலில் உள்ள இக்காலத்தில் இவ்வாறு நிர்வாகத்தினர் நடந்துகொண்டிருப்பது அட்டூழியமாகும், ஏற்க முடியாததாகும். `நல்லதோர் ஆட்சியை அளிப்போம் என்கிற புதிய அரசாங்கத்தின் வரையறை உண்மையில் புதிராகத்தான் இருக்கிறது.
உள்நாட்டுத் தொழில்கள், நாட்டின் பாதுகாப்பு பாதிக்கும்
`வளர்ச்சி கோஷத்தைச் சுற்றி மிகவும் படாடோபமான முறையில் தேர்தல் பிரசாரம் இருந்ததைப் பொறுத்தவரை, மக்கள் புதிய அரசாங்கத்திடமிருந்து தங்கள் மீது ஏற்றப்பட்டுள்ள பொருளாதார சுமைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால் நடந்தது என்னடீசலின் விலை மீண்டும் ஒருமுறை ஏற்றப்பட்டிருக்கிறது. அதன் மூலம் பல அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மேலும் உயரும். பாதுகாப்புத் துறை உட்பட பல துறைகளில் அந்நிய மூலதனத்திற்கு ஆதரவான கொள்கை அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றால் நாட்டின் உள்நாட்டுத் தொழில்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பே கடும் பாதிப்புக்கு உள்ளாகும். நாட்டின் உற்பத்தித் திறனை விரிவாக்கக்கூடிய விதத்திலும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய விதத்திலும், நம் நாட்டின் தொழில்நுட்பத்தை உயர்த்தக்கூடிய விதத்திலும் அமைந்திருந்தால் மட்டுமே அந்நிய மூலதனத்தை வரவேற்கவேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை நிலைப்பாடாகும்.   மேற்படி மூன்று குறிக்கோள்களையும் நிறைவேற்றாத எந்தவொரு அந்நிய நேரடி முதலீடும் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ பயன் அளிக்காது.  சில்லரை  வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததற்கான காரணமே இத்துறையில் தற்போது உள்ள வேலைவாய்ப்புகளை இது குறைத்திடும் என்பதால்தான். தற்போதுள்ள வேலைவாய்ப்புகளை சுருக்கிடும் என்பதால்தான் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை பாஜகவும் முந்தைய காலங்களில் எதிர்த்து வந்தது. அவ்வாறு எதிர்த்து வந்தததன் மூலம் அது தன் சமூக ஆதரவுத் தளத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது.
குழப்பங்களின் மூலம் `வளர்ச்சி மற்றும் `நல்லாட்சி அளிப்போம் என்று பிரகடனம் செய்து ஐந்தாண்டு காலத்திற்கு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசின் ஆரம்ப நடவடிக்கைகளே மிகவும் குழப்பம் விளைவிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றன.  தேர்தல் வெற்றிக்குப்பின்னால் மிகவும் ரகசியமாக இயங்கிக் கொண்டிருக்கும் மதவெறியைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்கிற இவர்களது செயல்பாடுகளே இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணங்களாகும். இவ்வாறாக இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளிலிருந்து வெளிவந்துள்ள ஆரம்ப சமிக்ஞைகள் - ஒரு பக்கத்தில் மதவெறியைக் கூர்மைப்படுத்திக்கொண்டே, மறுபக்கத்தில் மக்கள் மீதான சுமைகளை மேலும் திணித்தல் என்பவை - உண்மையில் தீய அறிகுறிகளாகும். மக்களின் ஆசை அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அரசாங்கத்தின் மீது போதுமான அளவிற்கு வெகுஜன இயக்கங்களின் நிர்ப்பந்தத்தைக் கட்டி எழுப்ப வேண்டியது அவசியம் என்பது தெளிவாகி இருக்கிறது. அப்போதுதான் இவர்கள் உறுதிமொழி அளித்துள்ள `வளர்ச்சி மற்றும் `நல்லாட்சி என்பவைகளையும் நடைமுறையில் பயனளிக்கக் கூடியவைகளாக மாற்ற முடியும்.

(தமிழில்: ச.வீரமணி)  

Monday, June 2, 2014

புதிய அரசாங்கத்தின் தாக்குதல்கள்

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் இரட்டை நாக்குடன் பேசக்கூடியது என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றுதான். தங்களுடைய இருவேறு நிகழ்ச்சி நிரல்களையும் ஒரே சமயத்தில் பின்பற்றுவதற்கு அவ்வாறு இதனை அது பயன்படுத்திக் கொள்கிறது. ஒன்று, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆணிவேராக விளங்கும் நிகழ்ச்சிநிரலை - அதாவது மக்கள் மத்தியில் மதவெறியைக் கூர்மைப் படுத்துவதை - பின்பற்றுவது. அதே சமயத்தில் மற்றொரு நிகழ்ச்சிநிரல் பொது நுகர்வோரியத்தை முன்னெடுத்துச் செல் வது. ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் இவ்வாறு இருவித நிகழ்ச்சிநிரலையும் தன் னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைமுறைப்படுத்தியதை முன்னரே பார்த்தோம்.
2002ஆம் ஆண்டில் குஜராத்மாநிலத்தில் முஸ்லிம் சிறுபான்மையின ருக்கு எதிரான படுகொலைகளை அரங்கேற்றியதன் மூலம் புகழ்பெற்ற,  நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னி றுத்தியதிலிருந்தே மதவெறித் தீயை எந்த அளவிற்கு விசிறிவிட அவர்கள் தயாராகி விட்டார்கள் என்பது நன்கு விளங்கும். அதேசமயத்தில், மறுபக்கத்தில், தாங்கள் மதவெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக `குஜராத் மாடல்வளர்ச்சி மற்றும் `நல்லதோர் ஆட்சிஎன்றும் கூறி, வாக்காளர்களின் ஆதர வினைக் கோரினார்கள்.
இவ்வாறான ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் இரட்டை வேடத்தை மிகவும் திறமையாக இவர்கள் அணிந்து கொண்டதன்மூலம் தேர்தல் ஆதாயங்களை நன்கு அறுவடை செய்து விட்டார்கள். ஆயினும், நரேந்திர மோடி அரசாங்கம் பதவிப் பிரமாணம் எடுத்த சமயத்திலும் மற்றும் அதற்கு அடுத்த நாளும், அவர்களது உண்மையான நிகழ்ச்சிநிரலின் சொரூபம் வெளிவரத் தொடங்கிவிட்டது. இந்துத்துவா அமைப்புகளால் கட்ட விழ்த்துவிடப்பட்ட பயங்காரவாதத் தாக்கு தல்கள் பலவற்றில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்களில் ஒருவரும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்த்ரேஷ் குமார், மத்தி யப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தேசியப் புலனாய்வு ஏஜன்சி மற்றும் பயங்கர வாத எதிர்ப்புக் குழு(ATS-Anti-Terror Squad) ஆகியவற்றால் புலனாய்வு மேற்கொள்ளப்பட்ட அனைத்து வழக்கு களையும் விலக்கிக் கொள்ளுமாறு கோரிஇருக்கிறார். தேர்தல் முடிவுகள் எங்க ளுக்கு இரண்டாவது விடுதலையாக வந்திருக்கிறது,’’ என்று அவர் ஒரு தேசிய நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். (தி இந்தியன் எக்ஸ் பிரஸ், மே 24, 2014)பதவியேற்றவுடனேயே பிரதமர் அலுவலகத்திற்குப் பொறுப்பான புதிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், தங்களுடைய அரசாங்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவைத் தொடர்வது சம்பந்தமாக மறு ஆய்வு செய்திடத் தயாராக இருக்கிறது என்று பிரகடனம் செய்திருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ்தான், நம்முடைய நாடு சுதந் திரம் அடைந்த சமயத்திலும் மற்றும் பிரிவினை அடைந்த சமயத்திலும், ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இந்திய யூனியனுடன் இணைய உடன்பட்டது என்பதை வாசகர்கள் நினைவுகூர்ந்திட வேண் டும். இவ்வாறு அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவை நீக்கிட உரியநடவடிக்கைகள்/விவாதங்கள் மேற் கொள்ள வேண்டும் என்று இவர்கள் மிக வும் தெளிவான முறையில் அறிக்கை விடுத்திருப்பதானது ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் ஆகிய இரு தரப்பினர் மத்தியி லிருந்தும் கூர்மையான முறையில் இயற்கையாகவே கண்டனக் குரலை வர வழைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பது இவர்களது உண்மையான நிகழ்ச்சிநிரலின்’’ ஒரு பகுதியே யாகும்.
வாஜ்பாயி அரசாங்கம் இருந்த காலத்தில் தங்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாததால் இதனைச் செய்ய முடியவில்லை என்று அவர்கள்கூறிக்கொண்டிருந்தார்கள். இந்த சட்டப்பிரிவை ரத்து செய்திட உறுதி பூண்டிருக் கிறோம்,’’ என்று பாஜக தேர்தல் அறிக்கை யில் கூறியிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரத்தின் ஆணிவேராக அமைந்திருக்கக்கூடிய இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் என்பவை அயோத்தியில் தாவாவுக் குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது என்பதும், நாடு முழுவதும் ஒரே சீரான சிவில் சட்டம் அமல்படுத்துவது என்பதும், அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குவது என் பதுமாகும்.
இவையன்றி மதச் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடுகள் அளிப்பது தொடர்பாகவும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் கருத்துக்களைக் கூறத் தொடங்கி இருக் கிறார்கள். சமூக நீதிக்கான அமைச்சர் தவர்சந்த் ஜெஹ்லாத் ஊடகங்களி டையே, உரையாற்றுகையில், “சிறுபான் மையினருக்கு 4.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு செய்வதை பாஜக அரசாங்கம் எதிர்க்கிறது’’ என்றும், “ஏனெனில் மதஅடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது’’ (“unconstitutional”) என்றும் கூறியிருக்கிறார்.
சிறுபான்மையினர் விவகாரங் களுக்கான அமைச்சர் நஜ்மா ஹெப்துல் லாவும்கூட, சிறுபான்மை யினருக்கான இட ஒதுக்கீட்டைத் தான் எதிர்ப்பதாகவும், ஏனெனில் இடஒதுக்கீடு என்பது போட்டி உணர்வையே கொன்றுவிடுகிறது என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். (டைம்ஸ் ஆப் இந்தியா, மே 28, 2014)அவர் மேலும், முஸ்லிம்கள் சிறு பான்மையினர் இல்லை என்றும், ஏனெனில் அவர்கள்நாட்டில் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்றும் கூறியிருப்பதுடன், அவர் ஒருபடி மேலும் சென்று, பார்சிக்களை அவர்களின் மக்கள்தொகை சுருங்கி வருவதால் இத்தகைய வரையறைக்குள் கொண்டுவரலாம் என்றும் வாதிட் டுள்ளார். முஸ்லிம்கள் நலன் தொடர் பாக முந்தைய ஐமுகூ அரசாங்கம் மேற் கொண்ட கொள்கைகளைக் கைவிட அவர் முடிவு செய்துவிட்டதுபோலவே தோன்றுகிறது.
முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை. பார்சிக்கள் தான் சிறுபான்மையினர். அவர்கள் எண்ணிக்கை மேலும் குறையா வண்ணம் இருப்பதற்கு அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று பார்க்கவேண்டியிருக்கிறது,’’ என்று ஊடகங் களிடையே அவர் கூறியிருக்கிறார். (டைம்ஸ் ஆப் இந்தியா, மே 28, 2014)
முஸ்லிம் சிறுபான்மையினரின் பொருளாதார மற்றும் சமூக நிலைகுறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட நீதியரசர் சச்சார் குழு, அவர்களின் வாழ்நிலை தலித்துகள்/பழங்குடியினர் நிலைமைகளைவிட கீழானதாக இருக்கிறது என்று அறிக்கை தாக்கல் செய்திருந்ததையும், அதன் அடிப்படை யில் ஐமுகூ அரசாங்கம் நீதியரசர் ரங்க னாத் மிஷ்ரா ஆணையம் அமைத்து, அவர் களின் நிலைமையை மேம்படுத்திட ஆலோசனைகள் கோரியதையும் வாச கர்கள் நினைவுகூர்ந்திட வேண்டும். அது அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான், 2011 டிசம்பரில் ஐமுகூ அரசாங்கம், இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டில், முஸ்லிம் சிறுபான்மை யினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வெட்டி உருவாக்கியது.
நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படை யில்தான் மேற்கு வங்கத்தில் முந்தைய இடது முன்னணி அரசாங்கமும் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டிய லில் இருந்த பல்வேறு முஸ்லீம் குழுவினருக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு, இதரபிற்படுத்தப்பட்டவர்கள் ஒதுக்கீட்டிற் குள்ளேயே ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சனையில் மத்திய அரசாங்கம் முடிவுகள் மேற்கொள்வதற்கு முன்பே மேற்கு வங்க முந்தைய இடது முன்னணி அரசு இவ்வாறு முடிவெடுத்திருந்தது. முஸ்லிம்களை சிறுபான்மையின ராகக் கருதுவது என்பதை அவர் களின் மக்கள் தொகை எண்ணிக்கையை  வைத்துப் பரிசீலிக்கக்கூடாது, மாறாக அவர்களின் பொருளா தார மற்றும் சமூக நிலையின் அடிப் படையில்தான் பரிசீலிக்க வேண்டும் என்று இப்போது சிறுபான்மையினர் நலன்களுக்காகப் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சருக்கு, சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் சிறுபான்மையினரை, பார்சிக்கள் போன்ற சிறுபான்மையின ரோடு ஒப்பிடுவது மிகவும் குரூரமான ஒன்று.
இந்துத்துவா நிகழ்ச்சிநிரலின் பல முக்கிய அம்சங்கள் அரசாங்கத்தின் கொள்கை விவகாரங்களில் இவ்வாறு பலவிதங்களிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ள அதே சமயத்தில், நாட்டின் பலபகுதிகளிலும் மதவெறியைக் கூர்மைப்படுத்தக்கூடிய விதத்தில், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் தன் கோர முகத்தை, உயர்த்தி இருப்பதும் ஆழ்ந்து பரிசீலிக்கப் பட வேண்டிய ஒன்றாகும்.
மோடி அரசாங்கம் தில்லியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு ஒருநாள் முன்பு, ஞாயிறு அன்று, கர் நாடகா மாநிலம் மங்களூரில் இந்துத் துவா அமைப்புகள் சில கிளர்ச்சிப் போராட்டங்களை மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
என்ன கோரிக்கை தெரியுமா? முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவ தைத் தடை செய்ய வேண்டுமாம். தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மதப் பதற்ற நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. (டூ சர்க்கிள்ஸ்.நெட், மே 27, 2014).
மோடி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அதே நாளன்று அதனைக் கொண்டாடும் விதத்தில் கர்நாடகா மாநிலம் பிஜப்பூரில் பாஜக ஊர்வலம் ஒன்று நகரின் மையப்பகுதியான காய்கறி சந்தை அருகில் செல்லும்போது வகுப்புக்கலவரமாக வெடித்து 15பேர் காயமடைந்திருக்கின்றனர், சந்தை யையே நிர்மூலமாக்கி சூறையாடி இருக் கின்றனர். உள்ளூர் தொலைக்காட்சி சானல்கள் இவ்வன்முறையை ஒளிபரப்பி யுள்ளன. தில்லியில் பதவிப் பிரமாணம் நடை பெறும் சமயத்தில், குஜராத் தலைநகரான அகமதாபாத்தில் கோம்டிபூர் பகுதியிலும், வகுப்புக்கலவரங்கள் வெடித்துள்ளன. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடை யிலான மோதலைத் தகர்ப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இரு வகுப்பின ருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு வாய்த்தகராறுதான் இம்மோதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இம்மோதலில் அங்கிருந்த சில கடைகள், ஒரு மினிபேருந்து, ஒருசில இரு சக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. (ஏஎப்பி சர்வதேச ஏஜன்சி நிறுவனத்தின் செய்தியை மேற்கோள் காட்டி, மும்பையி லிருந்து வெளியாகும் டிஎன்ஏ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி, மே 27, 2014)
பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரையில், நவீன தாராள மயச் சீர்திருத்தங்கள் தொடர அனைத்துநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்புத் தளவாடங்களை வாங்குவது தொடர்பாக அந்நிய நேரடிமுதலீட்டுக்கான உச்சவரம்பு தற் போதுள்ள 26 சதவீதத்திலிருந்து மேலும் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை முதன்முறையாக அமல் படுத்தியது பாஜக தலைமையிலான வாஜ்பாய் அரசாங்கம்தான் என்பதை இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு இது ஊறு விளைவிக்கும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அப்போது அது பொருட்படுத்தவில்லை.இப்போதைய அரசாங்கத்தின் ஆரம்ப அறிகுறிகள், ஒருபக்கத்தில் மதவெறியைக் கூர்மைப்படுத்தும் அதே சமயத்தில் மறுபக்கத்தில் தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தும் வேலையிலும் அது ஈடுபடும் என்று நாம் வெளிவிட்டு வந்த சந்தேகங்கள் அனைத்தும் மீண்டும் உறுதிசெய்யும் வண்ணம் அமைந்துள்ளதாகவே கருதுகிறோம். உண்மையில், பாஜக அரசாங்கத்தின் இவ்வாறு இரு பக்கங்களிலிருந்தும் வரக்கூடிய தாக்குதல்களைச் சந்திக்கத் தயாராயிருக்கக்கூடிய அதே சமயத் தில், எதிர்காலத்தில் நம் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்திடக்கூடிய விதத்திலும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடக் கூடிய விதத்திலும் வலுவான போராட் டங்களுக்கும் தயாராவோம்.
- தமிழில்: ச.வீரமணி