Friday, June 13, 2014

`நல்லாட்சி’ சந்தேகம்தான்!


நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு விட்டது. பதினாறாவது மக்களவைத் தேர்தல்கள் முடிந்தபின்னர் நடைபெற்ற முதல் கூட்டத்தொடர் தேசிய கீதத்துடன் சம்பிரதாயமான முறையில் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. சமீப காலத்தில் என் நினைவுக் கெட்டியவரை அநேகமாக மிகவும் குறுகிய நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இதுதான். இக்கூட்டத்தொடரின் ஒரேயொரு நிகழ்ச்சி நிரல் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில் முதல் நாளன்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு சம்பிரதாயமான முறையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவதுதான். கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடைபெற்று மூன்றாம் நாள் நிறைவேற்றப்பட்டு, கூட்டத்தொடர் முடிவடைந்தது. வழக்கமான கேள்வி நேரம் இரு அவைகளிலும் இல்லை.
அதேபோன்று பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளையும் உறுப்பினர்கள் எழுப்புவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீதான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, பரிசீலிக்கப்படவும் இல்லை. சமீபத்தில் என் நினைவுக் கெட்டியவரை, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிப்பதற்கும் அப்பாற்பட்டு வேறெந்த நாடாளுமன்ற நடவடிக்கைகளும் நடைபெறாது முடிந்த கூட்டத்தொடர் இதுவேயாகும்.பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்தபின்னர் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதும், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் எடுக்க வைப்பதும், வழக்கமான ஒன்றுதான். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி மேற் கொள்ளப்படவேண்டிய சம்பிரதாயமான பழக்க வழக்கங்களுக்கு மேல் இக்கூட்டத்தொடரில் எதுவும் நடந்திடவில்லை.
பொதுவாக, புதிய அரசு பதவியேற்கும்போது, குடியரசுத்தலைவர் உரையில் இந்த அரசு முதலாண்டில் என்ன என்ன திட்டங்களை அமல்படுத்த இருக்கிறது என்று குறிப்பிடப்படும். எனவே அதிலிருந்து புதிய அரசு எந்தத் திசைவழியில் பயணிக்க இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இந்த அரசு முன்னுரிமைகொடுத்து முக்கியமாக பரிசீலிக்க இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்படும் எனவும் ஊகிக்கப்பட்டது. உதாரணமாக, ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சமயத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் அந்த அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் எவை எவை என்றும் அவற்றை நிறைவேற்ற முதல் நூறு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். அவ்வாறு ஐமுகூ அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளை அது நிறைவேற்றவில்லை என்பது வேறு விஷயம். இப்போது, குடியரசுத் தலைவர் உரையில் அவ்வாறு எவ்விதமான முன்னுரிமைத் திட்டங்களும் குறிப்பிடப்படவில்லை. இப்போது குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை என்பது இன்றைய ஆளும் கட்சியானது தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்திய தேர்தல் முழக்கங்களின் தொகுப்பும் மற்றும் பாஜக தேர்தல் அறிக்கையின் புதியவடிவமும் ஆகும்.
எனவே இந்த அரசாங்கம் எந்தத் திசைவழியில் செல்ல இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நாம் நாடாளுமன்றத்தின் அடுத்தக் கூட்டத்தொடர் வரைக்கும் -அதாவது முறையான பட்ஜெட் கூட்டத்தொடர் வரைக்கும் - காத்திருக்க வேண்டியிருக்கும். அநேகமாக அக்கூட்டத்தொடர் ஜூலை முற்பகுதியில் ஏதேனும் ஒருநாளில் துவக்கப்படக்கூடும். இது தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லை. இப்போது நமக்கு ஏற்பட்டுள்ள அனுபவத்தின்படி எப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எவராலும் நிச்சயமாகக் கூற முடியாது. இந்த அரசாங்கம் `நல்லாட்சிஉட்பட பல முழக்கங்களை வாரி வழங்கியதன் அடிப்படையில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. நல்லாட்சி என்பதற்குப் பல்வேறு சிறப்பியல்புகள் உண்டு. முதலாவது, மக்களின் உடனடிப் பிரச்சனைகள் மீதான உறுதிமொழிகளை எப்படி நிறைவேற்றப்போகிறார்கள் என்பது உட்பட தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நிகழ்ச்சிநிரல் குறித்து மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போதுமான தகவல்களை அவர்கள் தெரிவித்திட வேண்டும்.
இரண்டாவது, இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் கீழ் அமைந்துள்ள அமைப்புகளில் போதுமான அளவிற்கு ஒரு பொருள்பொதிந்த விவாதத்திற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மூன்றாவது, அவ்வாறு உரிய பரிசீலனைகள் மேற்கொண்டபின், நாடாளுமன்ற நடவடிக்கைத் தொடர வேண்டும். இதேபோன்று பல்வேறு சிறப்பியல்புகளுடன், நல்லாட்சி என்பதன் பொருள் அரசாங்கம், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நாடாளுமன்றத்திற்கு சொல்லியாக வேண்டும். இதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைத் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குச் சொல்லியாக வேண்டும். இதுதான் நம் முடைய அரசமைப்புச் சட்டத்தின் திட்டப்பின்னணியாகும்.
அதாவது, இவ்வாறு மக்கள்தான் நாட்டின் விவகாரங்களில் மிக உயர்ந்த அதிகாரங்களைப் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய சிறப்பியல்புகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, இந்த அரசாங்கம் செயல்படத் தொடங்கியிருப்பதன்மூலம், நாட்டு மக்களுக்கு இது மிகவும் மோசமான முறையில் பல் வேறு தீய அறிகுறிகளையே அனுப்பிக் கொண்டிருக்கிறது. அவசரச்சட்டங்களைப் பிறப்பிப்பதன்மூலம் இந்த அரசாங்கம் தன் வேலையைத் தொடங்கி இருக்கிறது. அவ்வாறு அவசரச்சட்டம் பிறப்பித்தால் அதனை அடுத்து நடைபெறக்கூடிய நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் பரிசீலனைக்காகவும், ஏற்புரைக்காகவும் தாக்கல் செய்திட வேண்டும் என்பது மரபு. ஆனால் இந்த அரசு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவ்வாறு இச்சட்டங்களைத் தாக்கல் செய்திடவும் இல்லை. இதுகுறித்துக் கேட்டபோது, அடுத்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வார்களாம். அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத கால அளவிற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக மாற்றாவிட்டால், அது, சட்டப்படி, காலாவதியாகிவிடும்.அவசரச்சட்டங்கள் மூலம் ஆட்சி நடத்துவதென்பது நாடாளுமன்றத்தைப் பிடித்த சனியன் என்று பொதுவாகக் கருதப்படும்.
இந்த அரசாங்கம், தனக்கு மிகவும் தெளிவான முறையில் பெரும்பான்மை கிடைத்திருக்கிற போதிலும்கூட, `அவசரச்சட்டவழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. நிச்சயமாக இது `நல்லாட்சிக்கு அழகல்ல. நல்லாட்சிக்கான இலக்கணங்கள் இந்த அரசின் மேலும் பல நடவடிக்கைகள் மூலம் சந்தேகத்திற்கிடமளித்துள்ளது. முன்பு நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த நபர், தற்போது இந்த அரசின் கீழ் தனிப்பொறுப்புடன் இணை அமைச்சராக ஆகி இருப்பவர். முந்தைய அரசாங்கத்தால் ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் குறித்து வெளிப்படையாகவே எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கீழ், ஓர் அரசாங்கம் என்றால் அது அரசாங்கம்தான். ஒரு குறிப்பிட்ட காலத்தில் எந்தக் கட்சியின் கீழ் அது ஆட்சியில் இருந்திருந்தாலும் சரி. தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுபவர்கள் முந்தைய அரசாங்கம் மேற்கொண்ட முடிவுகளை மதிக்க வேண்டும்.
ஏனெனில் பல விஷயங்களில் ஒரு முடிவினை எடுப்பதற்குமுன்பு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பல்வேறு நடைமுறைகள் மற்றும் விதிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர்தான் முடிவுகள் எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவினை பாஜகவின் புதிய இணை அமைச்சர் கேள்விக்கு உட்படுத்துகிறார், வெளிப் படையாகவே தன்னுடைய `ட்விட்டர்இணையத் தளத்தில், இவ்வாறு புதிதாகப் பொறுப்பேற்க இருக்கும் ராணுவத் தலைமைத் தளபதி அப்பாவிகளைக் கொன்றவர்,” என்றும், “கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டவர் என்றும், “கிரிமினல்களுக்கு அடைக்கலம் கொடுத்துக்கொண்டிருக்கிறவர்,’’ என்றும் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப் பேற்க இருப்பவர் குறித்து, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவரும், முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியுமான ஒருவர், இவ்வாறு கடுமையான முறையில் கண்டனங்கள் தெரிவித்திருப்பது உண்மையில் குளவிக் கூட்டுக்குள் கையை விட்டவர் கதை போலாகிவிட்டது.
இதனால் மிகவும் தர்மசங்கடத்திற்குள் ளாகி இருக்கும் பாஜக அரசாங்கம் தன்னு டைய ராணுவ அமைச்சரின் மூலமாக நாடாளுமன்றத்தில் முந்தைய அரசாங்கம் இவ்வாறுராணுவத் தலைமைத் தளபதியை நியமித்திருப்பது முற்றிலும் சரிதான் என்று கூற வைத்திருக்கிறது. இந்த அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைபெறும் வழக்கில்ஜூன் 10 அன்று ஒரு பிரமாண உறுதிவாக்கு மூலம் (sworn affidavit) சமர்ப்பித்திருக்கிறது. அதில் அது, இவ்வாறு புதிதாக ராணுவத் தலைமை தளபதி நியமனம் செய்யப்பட்டிருப்பது சரி என்றும், முந்தைய ராணுவத்தலைமைத் தளபதியும் தற்போதைய அமைச்சரும் அவர் மீது மேற்கொண்டுள்ள ஒழுங்குநடவடிக்கை சட்டவிரோதமானது’’ (“illegal”), சம்பந்தமற்றது (extraneous”) மற்றும் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொண்ட ஒன்று”(“pre-meditated”) என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த உறுதிவாக்குமூலத்தில் தற்போதைய மத்திய அமைச்சர், 2012 மே மாதத்தில், பொறுப்பேற்க விருக்கும் ராணுவத்தலைமைத் தளபதிக்கு எதிராக மேற்கொண் டுள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை அல்லது பதிவேடுகளின் படி ஆதாரமும் இல்லைஎன்றும் கூறியிருக்கிறது.
`நல்லாட்சிஅளிப்போம் என்று உறுதிமொழி அளித்துள்ள புதிய பாஜக அரசாங்கத்திற்கு உண்மையிலேயே இது ஓர் அசாதாரணமான நிலைதான். முந்தைய அரசாங்கம் நியமனம் செய்த புதிய ராணுவத் தலைமைத் தளபதி நியமனம் செல்லும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பதும், அவ்வாறே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண உறுதிவாக்குமூலம் சமர்ப்பித்திருப்பதும், முன்பு நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்து, தற்போது மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவருக்கு எதிரான ஒன்று என்பது தெள்ளத்தெளிவானதாகும். தன் சொந்த அமைச்சரைவை சகா குறித்தே மிகவும் கடுமையான முறையில் அரசாங்கம் கண்டித்திருப்பதானது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளிப்படையாகவே மன்னிப்பு கோரி தன் செயலினை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது மத்திய அமைச்சரவையிலிருந்து தானாகவே விலகிக் கொள்ளவேண்டும்.
அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் பயபக்தியுடன் அளித்துள்ள பிரமாண உறுதி வாக்குமூலத்தில் அமைச்சர், ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த சமயத்தில் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு எவ்வித அடிப்படையும் இல்லை அல்லது பதிவேடுகளின்படி ஆதாரமும் இல்லை,’’ என்று கூறி அவரது செய்கையை வெளிப்படையாகக் கண்டித்திருப்பது மிகவும் மோசமான ஒன்று. இதனைச் சரிசெய்திடாமல் இந்தப் புதிய பாஜக அரசாங்கம் தன்னுடைய நடவடிக்கைகளை `வழக்கமான முறையில் தொடர்வதுஎன்பது சாத்தியப்படாது. இப்புதிய அரசாங்கம் இந்த அமைச்சரைத் தன்னுடைய அமைச்சரவையிலேயே தொடர்ந்து வைத்திருக்கப்போகிறதா? நல்லாட்சி அளிப்போம் என்று உறுதிமொழி அளித்துள்ள இப்புதிய அரசாங்கத்திற்கு இவ்வாறு மிகவும் சிக்கலான முறையில் சோதனை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே, “இந்த அரசாங்கத்திடமிருந்து இரு கோணங்களிலிருந்து வரும் தாக்குதல்களையும் சந்திக்கத் தயாராயிருக்குமாறுநாம் மக்களை எச்சரித்திருந்தோம். முதலாவது, பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில். நமக்குக் கிடைத்திருக்கிற அனைத்து அறிகுறிகளிலிருந்தும், மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படும். இரண்டாவது, மதவெறிக் கூர்மைப்படுத்தப்படுவது தொடர்பானது. தேர்தல்கள் முடிந்தவுடனேயே நாட்டின் பல பகுதிகளில் மதவெறியாட்டங்கள் அதிகமாகி இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் புனேயில் பொறியாளர் மாணவர் ஒருவர் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவா அமைப்பு ஒன்றால் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கைகளால் மக்களின் துன்ப துயரங்கள் மேலும் அதிகமாகும். இவ்வாறு இரு முனைகளிலிருந்தும் வரும் இவர்களது தாக்குதல்களை முறியடித்திடவும், அதன் மூலம் நாட்டின் நலன்களைக் காத்திடவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடவும் வலுவான வகையில் மக்கள் இயக்கங்களைக் கட்டி எழுப்பிடுவோம்.
(தமிழில்: ச.வீரமணி)


3 comments:

Unknown said...

கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் காட்டும்!

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

காலம்பதில் சொல்லும் விரைவில் மிக விரிவான அலசல்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-