Sunday, June 8, 2014

தீய அறிகுறிகள்


புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசாங்கம் குறித்து அதற்குள் விமர்சனங்களை அளிப்பது என்பது சரியல்ல. ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்குப்பின்னரும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, புதிதாக மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டபின்னர், குடியரசுத் தலைவர். நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில்,   உரையாற்றுவார். இவ்வாறு அவர் உரையாற்றுவது 2014 ஜூன் 9 திங்களன்று நடைபெறவுள்ளது. அவருடைய உரையில், குடியரசுத் தலைவர். `அவருடைய அரசாங்கம் எதிர்காலத்தில் ஆற்ற இருக்கும் பணிகள் குறித்த பொதுவான திட்ட வரையறைகளை முன்வைப்பார். இது வழக்கமாக முன்னுரிமைகொடுத்து, அரசு அடுத்த நூறு நாட்களில் நிறைவேற்றுவதாக மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகளாக அமைந்திருக்கும். இவ்வாறு இவர்கள் அளித்திடும் திட்டம் மற்றும் இவற்றை நிறைவேற்றிட இவை மேற்கொள்ளும் பாணி ஆகியவை நிறைவுற்றபின்னர்தான் இவை குறித்த விமர்சனங்களை  இயல்பானமுறையில் வைத்திட முடியும்.
ஆயினும், `நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கசிந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களிலிருந்து, அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் குறித்த சமிக்ஞைகள்அவ்வளவு நன்றாக இல்லை. ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது நாம் ஏதோ குடியரசுத் தலைவர் தலைமையிலான ஆட்சியை நடத்துவதுபோல அமைந்திருந்ததைப் பார்த்தோம். இப்போது தற்போதைய நாடாளுமன்ற ஆட்சி அமைப்பையே அவ்வாறு மாற்றிட (modify) கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதுபோலத் தெரிகிறது.
பிரதமர் மட்டுமே பொறுப்பா...?
புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் மேற்கொண்டதற்கு அடுத்த நாள் காலை, பிரதமரின் அறிவுரைக்கிணங்க, கேபினட் அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள்குடியரசுத் தலைவரின் மாளிகை யிலிருந்து ஒரு பத்திரிகைச் செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் பட்டியல், இயற்கையாகவே, பிரதமரின் பொறுப்புக்களிலிருந்து தொடங்குகிறது. பல்வேறு துறைகளுக்கு மத்தியில், பட்டியல் அனைத்து முக்கிய கொள்கைப் பிரச்சனைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. இது வழக்கத்திற்கு விரோதமானது. அரசாங்கத்தின் கேபினட் வடிவ அமைச்சரவையில், கேபினட் அமைச்சரவைஅரசாங்கம் பின்பற்றக்கூடிய கொள்கைகளையும் திட்டங்களையும் ஒட்டுமொத்தத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதே சமயத்தில்ஒவ்வொரு கேபினட் அமைச்சரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை சம்பந்தமாக அவசியமான முடிவுகளையும்  மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கேபினட் அமைச்சரவையில் ஒவ்வோர் அமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்புகள் அளிக்கப்பட்டிருப்பதுடன், கூட்டு செயல்பாட்டின் ஜனநாயக வடிவமும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. `அனைத்து முக்கிய பிரச்சனைகள் மீதும் பிரதமர் மட்டுமே பொறுப்பு எனில், பின்  இப்போதைய அமைப்புமுறை குடியரசுத்தலைவர் வடிவ ஆட்சியை நோக்கி தள்ளப்படுகிறது என்றே கொள்ள வேண்டும். மேலும், அரசின் அனைத்து செயலாளர்களும் தங்கள் துறை சம்பந்தப்பட்ட விவரங்களைத் தங்கள்துறை சார்ந்த அமைச்சர்களுக்குத் தெரிவிப்பதோடு பிரதமருக்கும் நேரடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பதாக  ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.  மேலும், முந்தைய அரசாங்கம் பின்பற்றி வந்த `அமைச்சர்கள் குழுக்கள் (`Group of Ministers)மற்றும் `அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுக்கள் (`Empowered Group of Ministers) ஆகிய இரண்டையுமே கலைத்துவிட்டதாகவும் ஊடகங்களுக்குத் `தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன. இத்தகைய குழுக்கள் சில முக்கியமான பிரச்சனைகள் குறித்து பரிசீலிப்பற்கான ஓர் இடைப்பட்ட நிர்வாக ஏற்பாடாகத்தான் இருந்தன. இத்தகைய குழுக்களின் பரிசீலனைகள் முடிந்தபின்னர் கேபினட் அமைச்சரவையில் உரிய தீர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்போது இத்தகைய ஏற்பாடுகள் கைவிடப்பட்டு அனைத்தும் நேரடியாக பிரதமருக்கோ அல்லது பிரதமர் அலுவலகத்திற்கோ செல்லும்.
ஜனநாயகத்தின் அடித்தளம் மறுதலிப்பு
இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தையும் மிகவும் கூர்மையாகக் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அரசியல் நிர்ணயசபை மிக நீண்ட நெடிய விவாதங்களுக்குப்பின்னர்தான் நாடாளுமன்ற அமைச்சரவை ஆட்சி வடிவம்தான், குடியரசுத்தலைவர் ஆட்சி வடிவத்தைவிடஉகந்தது என முடிவுக்கு வந்தது.  நமது நாட்டின் வளம்பொருந்திய வேற்றுமைகள் மற்றும் பன்முகத்தன்மைகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான், அரசியல் நிர்ணயசபை அரசமைப்புச் சட்டத்தில்  மக்கள்தான் இறுதி இறையாண்மை அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்கள் என்ற பொருளைத்தரக்கூடிய விதத்தில், முதல் பத்தியிலேயேஇந்திய மக்களாகிய...நாம், என்று தீர்மானித்தது. மக்கள் இவ்வாறு தங்கள் இறையாண்மையை தாங்கள் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தீர்மானிக்கிறார்கள். அரசாங்கம் அந்த மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இதனைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகளும், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இதை மீளவும் உறுதிப்படுத்துவதற்காகத்தான் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.  இத்தகைய அமைப்பில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டுவந்தால் அது நம் ஜனநாயகத்தின் அடித்தளங்களையே மறுதலிக்கக்கூடிய விதத்தில் எதேச்சாதிகாரப் போக்கிற்கு இட்டுச்செல்லும் ஆபத்தை உள்ளடக்கி இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் புதிய அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பத்தாண்டு கால நிகழ்ச்சி நிரல் பார்க்கப்பட வேண்டும். நாம் நம் நாடாளுமன்றத்தை ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை மறுபடியும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். 1975இல் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டு இதனை மாற்றக்கூடிய விதத்தில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அத்தகைய எதேச்சாதிகார அணுகுமுறையை நாட்டு மக்கள் தங்கள் உறுதியான போராட்டத்தின் மூலம் முறியடித்து, நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுத்தார்கள்.
அவசரச் சட்டத்துக்கு அவசியம் என்ன?
அதேபோன்று அரசாங்கம் அவ்வப்போது அவசரச்சட்டங்கள் வெளியிடுவதன் மூலம் தங்கள் பணிகளைத் துவக்குவதும் கவலைக்குரிய ஒன்றாகும். முதலாவதாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டம் பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக நபரைத் தேர்வு செய்வது தொடர்பானதாகும்.  தனக்கு வேண்டிய ஒருவருக்கு இப்பதவியை அளிக்க வேண்டும் என்பதற்காக நடைமுறையிலிருந்த சட்டமே மாற்றப்பட்டிருப்பது, உண்மையில், முன்னெப்போதும் இல்லாத ஒன்று.    இரண்டாவதாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச்சட்டம் சமீபத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எல்லைகளை மீளவும் மாற்றியமைப்பது தொடர்பானதாகும். ஆந்திரப்பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றபோது, போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதி இரு மாநிலங்களுக்கும் இடையே பிரிக்கப்படாது என்ற பரிந்துரையை ஏற்றுக்கொள்ள ஐமுகூ-2 அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இது தொடர்பான அவசரச் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் அப்போது ஒப்புதல் அளிக்கவில்லை. பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் அவ்வாறு அவரால் ஒப்புதல் அளிக்கப்பட வில்லை. நாடாளுமன்றம் கூட்டப்படவிருக்கக்கூடிய நிலையில் இப்போது இது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தவிர்க்கவியலாக சூழ்நிலைகளில் மட்டுமே அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும்.  மற்றபடி சட்டம் தொடர்பான அனைத்து விஷயங்களும் நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் ஒரு வாரத்தில் கூடவிருக்கையில் அதுவரைக்கும்கூட காத்திருக்கமுடியாதது ஏன் என்பது புதிராக இருக்கிறது. அவசரச் சட்டங்கள் மூலம் ஆட்சி செய்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைரீதியாக எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறது. பாஜக கூட கடந்த காலத்தில் இத்தகைய `அவசரச்சட்ட ஆட்சியை எதிர்த்ததுதான். தவறான தகவல்கள்
புதிய கேபினட் அமைச்சர்களின் கல்வித்தகுதி குறித்தும் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன. மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் தற்போது சாலை விபத்து ஒன்றில் துயரார்ந்தமுறையில் இறந்த கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆகியோர் தாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தன்னிச்சையாக அளித்த உறுதிவாக்குமூலங்களில் தங்கள் கல்வித்தகுதி குறித்து தவறான தகவல்களை அளித்திருக்கிறார்கள் என்று புகார்கள் எழுந்துள்ளன. வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்னும் அந்தஸ்தை,   பல முதிர்ச்சிபெற்ற மேற்கத்திய ஜனநாயக நாடுகள் எல்லாம் கொண்டுவருவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே, சாதி, சமயம், பாலினம், பட்டதாரி, பட்டாதாரர் என எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது, வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்த நாடு, இந்தியா என்று நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொண்டிருந்தோம்.  நாம் `ஒரு நபர், ஒரு வாக்கு, `ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற கொள்கைக் கோட்பாட்டை உயர்த்திப்பிடித்தோம். எனவே இப்போது நம்முன் எழுந்துள்ள பிரச்சனை கல்வித் தகுதி சம்பந்தப்பட்டதல்ல. மாறாக உண்மையல்லாதவைகளைக் குறிப்பிட்டிருப்பதுதான். இவ்வாறு தகவல்களை மறைத்திருப்பது `நல்லதோர் அரசாங்கத்திற்கு நல்லதோர் அறிகுறியாகத் தெரியவில்லை. இதில் மேலும் மோசமான விஷயம் என்னவெனில் இவ்வாறு அமைச்சரின் பட்டப்படிப்பு சம்பந்தமாக `உண்மைத் தகவல்களைக் கொடுத்தார்கள் என்பதற்காக  தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகும். இதனை அதிகாரபூர்வமாக மறுத்திட நிர்வாகத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், தகவல் உரிமைச் சட்டம் அமலில் உள்ள இக்காலத்தில் இவ்வாறு நிர்வாகத்தினர் நடந்துகொண்டிருப்பது அட்டூழியமாகும், ஏற்க முடியாததாகும். `நல்லதோர் ஆட்சியை அளிப்போம் என்கிற புதிய அரசாங்கத்தின் வரையறை உண்மையில் புதிராகத்தான் இருக்கிறது.
உள்நாட்டுத் தொழில்கள், நாட்டின் பாதுகாப்பு பாதிக்கும்
`வளர்ச்சி கோஷத்தைச் சுற்றி மிகவும் படாடோபமான முறையில் தேர்தல் பிரசாரம் இருந்ததைப் பொறுத்தவரை, மக்கள் புதிய அரசாங்கத்திடமிருந்து தங்கள் மீது ஏற்றப்பட்டுள்ள பொருளாதார சுமைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால் நடந்தது என்னடீசலின் விலை மீண்டும் ஒருமுறை ஏற்றப்பட்டிருக்கிறது. அதன் மூலம் பல அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மேலும் உயரும். பாதுகாப்புத் துறை உட்பட பல துறைகளில் அந்நிய மூலதனத்திற்கு ஆதரவான கொள்கை அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றால் நாட்டின் உள்நாட்டுத் தொழில்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பே கடும் பாதிப்புக்கு உள்ளாகும். நாட்டின் உற்பத்தித் திறனை விரிவாக்கக்கூடிய விதத்திலும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய விதத்திலும், நம் நாட்டின் தொழில்நுட்பத்தை உயர்த்தக்கூடிய விதத்திலும் அமைந்திருந்தால் மட்டுமே அந்நிய மூலதனத்தை வரவேற்கவேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை நிலைப்பாடாகும்.   மேற்படி மூன்று குறிக்கோள்களையும் நிறைவேற்றாத எந்தவொரு அந்நிய நேரடி முதலீடும் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ பயன் அளிக்காது.  சில்லரை  வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததற்கான காரணமே இத்துறையில் தற்போது உள்ள வேலைவாய்ப்புகளை இது குறைத்திடும் என்பதால்தான். தற்போதுள்ள வேலைவாய்ப்புகளை சுருக்கிடும் என்பதால்தான் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை பாஜகவும் முந்தைய காலங்களில் எதிர்த்து வந்தது. அவ்வாறு எதிர்த்து வந்தததன் மூலம் அது தன் சமூக ஆதரவுத் தளத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது.
குழப்பங்களின் மூலம் `வளர்ச்சி மற்றும் `நல்லாட்சி அளிப்போம் என்று பிரகடனம் செய்து ஐந்தாண்டு காலத்திற்கு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசின் ஆரம்ப நடவடிக்கைகளே மிகவும் குழப்பம் விளைவிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றன.  தேர்தல் வெற்றிக்குப்பின்னால் மிகவும் ரகசியமாக இயங்கிக் கொண்டிருக்கும் மதவெறியைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்கிற இவர்களது செயல்பாடுகளே இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணங்களாகும். இவ்வாறாக இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளிலிருந்து வெளிவந்துள்ள ஆரம்ப சமிக்ஞைகள் - ஒரு பக்கத்தில் மதவெறியைக் கூர்மைப்படுத்திக்கொண்டே, மறுபக்கத்தில் மக்கள் மீதான சுமைகளை மேலும் திணித்தல் என்பவை - உண்மையில் தீய அறிகுறிகளாகும். மக்களின் ஆசை அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அரசாங்கத்தின் மீது போதுமான அளவிற்கு வெகுஜன இயக்கங்களின் நிர்ப்பந்தத்தைக் கட்டி எழுப்ப வேண்டியது அவசியம் என்பது தெளிவாகி இருக்கிறது. அப்போதுதான் இவர்கள் உறுதிமொழி அளித்துள்ள `வளர்ச்சி மற்றும் `நல்லாட்சி என்பவைகளையும் நடைமுறையில் பயனளிக்கக் கூடியவைகளாக மாற்ற முடியும்.

(தமிழில்: ச.வீரமணி)  

No comments: