Saturday, September 7, 2013

எம் தொழிலாளர் நெஞ்சங்களில் குமுறும் எரிமலை


எம் தொழிலாளர் நெஞ்சங்களில் குமுறும் எரிமலை
புதிய பென்சன் மசோதாவை எதிர்த்து தபன்சென்  எச்சரிக்கை
புதுதில்லி, செப். 7-
ஓய்வூதிய நிதியத்திற்கு எதிராக தொழிலாளர்களின் நெஞ்சங்களில் எரிமலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு-வின் பொதுச் செயலாளருமான தபன்சென் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெள்ளியன்று ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையச் சட்டமுன்வடிவின்மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது. விவாதத்தில் கலந்து கொண்டு தபன்சென் பேசியதாவது:
‘‘இந்தச் சட்டமுன்வடிவை எங்கள் கட்சியின் சார்பில் எதிர்க்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவின் மீதான பரிந்துரைகளைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவில் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் பொதுவாக கருத்தொற்றுமை இருந்தது. நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்க இயக்கமும் இதனை எதிர்த்து வருகின்றன. இடதுசாரி தொழிற்சங்கம், வலதுசாரி தொழிற்சங்கம், இரண்டும் மத்தியில் உள்ள தொழிற்சங்கம் - இவைகளுக்குள் எந்த வித்தியாசமும் இன்றி அனைத்து சங்கங்களும் இதனை எதிர்த்து வந்தன. இச்சட்டமுன்வடிவு இங்கே கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் தங்களுக்கு மாபெரும் நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டுவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். நாடு முழுதும் பல்வேறு இயக்கங்கள் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் இதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருசிலரைத் திருப்திப்படுத்துவதன் மூலம் மட்டும் நீங்கள் ஆட்சியை நடத்திவிட முடியாது.
இந்த நாட்டின் தொழிலாளி வர்க்கம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்குபவர்கள், உங்கள் கருவூலத்திற்கு வருவாயைத் தேடித்தருபவர்கள், வேலையளிப்பவர்களுக்கு லாபத்தை ஈட்டித்தருபவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். 
இந்தச் சட்டமுன்வடிவின் மூலம், ஓய்வூதியம் என்பது மனிதன் ஓய்வுபெற்ற பின் உயிர்வாழ்வதற்கு உத்தரவாதமாகக் கிடைக்கக்கூடிய ஓர் ஊதியம் என்பது ஒழித்துக்கட்டப்படுகிறது. இச்சொற்றொடர் சமூகப் பாதுகாப்பு என்னும் கலைக்களஞ்சியத்திலிருந்து நீக்கப்படுகிறது. ஓய்வுபெற்றபின்னர் அதுவரை சமூகத்திற்காக உழைத்து வந்த உழைப்பாளி மக்கள் வயதான காலங்களில் தாங்கள் உயிர்வாழ்வதற்காகப் பெற்று வந்த ஊதியம் இச்சட்டமுன்வடிவின் மூலம் அவர்களிடமிருந்து பறித்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டால் என்ன நடக்கும்? ‘‘அந்நிய நிறுவனங்கள் இங்கே வரும். வெளிநாடுகளிலிருந்து பணத்தைக் கொண்டுவரும். நமக்கு சிறந்தவகையில் ஓய்வூதியம் அளிக்கும்.’’ இவ்வாறு இச்சட்டமுன்வடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. தங்கள் சொந்த நாடுகளிலேயே வர்த்தகத்தை ஒழுங்காகச் செய்ய முடியாத இவர்கள் இங்கே வந்து நம்முடைய ஓய்வூதிய நிதியத்தை, நம்முடைய மக்களின் பயன்பாட்டிற்காக, சிறந்த முறையில் மேலாண்மை செய்வார்களாம். இதை நாம் நம்ப வேண்டுமா
இது தொடர்பாக அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன? நம் நாட்டில் இயங்கிவரும் சில தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அரசாங்கத்தையும், தங்களை நம்பி காப்பீடு செய்துள்ள காப்பீட்டுதாரர்களையும் ஏமாற்றி வருவது குறித்து ஜனவரி 1 முதல் இந்த அரசாங்கத்திற்கு நான் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இவர்களின் மோசடியான நடவடிக்கைகளின் காரணமாக முறைசாராத் தொழிலாளர்களும்நெசவாளர்களும், கைவினைஞர்களும் மிகவும் மோசமான முறையில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். மிகவும் தெளிவான முறையில் சாட்சியங்கள் இருக்கின்றன. இதுதொடர்பாக நிதி அமைச்சகத்திற்கும், ஐஆர்டிஏ எனப்படும் இன்சூரன்ஸ் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கும் ஜனவரி 1இலிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. அயல்நாடுகளிலிருந்து அந்நிய மூலதனம் கொட்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
எந்த எந்த நிறுவனங்கள் இவ்வாறு ஏமாற்றி இருக்கின்றன என்று நிதி அமைச்சருக்குத் தெரியும். ஐஆர்டிஏ-க்குத் தெரியும். இன்சூரன்ஸில் இதுபோன்ற நிலை என்றால், ஓய்வூதிய நிதியத்தின் கதி என்ன?
ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்குப் பயன் அளிக்கும் திட்டம் என்றிருந்ததை இந்த அரசாங்கம் ஓய்வூதியர்கள் பங்களிப்பு அளிக்கும் திட்டம் என்று மாற்றி இருக்கிறது. இப்புதிய திட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தைத் தவிர மற்ற எல்லாமே உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த ஓய்வூதிய நிதியத்தை யார் கையாளப் போவது? இதிலிருந்து பயன் அடையப் போவது யார்? அனைத்தும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஓய்வூதியப் பங்களிப்பினை தன் ஊதியத்தில் பத்து விழுக்காடு என ஒவ்வொரு மாதமும் தன் வாழ்நாள் முழுதும் செலுத்தி வரும் ஊழியர் பெறப்போகும் ஓய்வூதியம் என்ன என்பது மட்டும் உத்தரவாதப் படுத்தப்படவில்லை.
அரசாங்கத்தின் நோக்கம்தான் என்ன? மக்களவையிலும், மாநிலங்களவையில் அரசியல் கருத்தொற்றுமை மூலம் பெரும்பான்மையைப் பெற்று இச்சட்டமுன்வடிவை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் நாடு முழுதும், ஏன் உலகம் முழுதும், படிப்படியாக ஓர் எரிமலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள். இத்தகைய மோசடியை தொழிலாளர்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள்.
பிரதமர் என்ன கூறுகிறார் என்று மிகவும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்தோம். அவர் ஆகஸ்டு 30 அன்று இந்த அவையில் நம் நாட்டின் பொருளாதாரத்தின் நிலை குறித்து  ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். நாட்டின் பொருளாதார நிலை அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் இருக்கிறது என்றும் அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர், மிக எளிய சீர்திருத்தங்கள் மேற்கொண்ட காலமெல்லாம் முடிந்துவிட்டன என்றும், இனிவருங்காலங்களில் மிகவும் கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினார். என்ன அந்தக் கடினமான சீர்திருத்தங்கள் என்பதையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார்.
அவற்றில் ஒன்று இந்த ஓய்வூதிய நிதியம். மற்றொன்று மக்களுக்கு அளித்து வரும் மான்யங்களை  வெட்டுவது. இன்றுள்ள நெருக்கடியிலிருந்து மீள இவ்விரு கடினமான சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதாக அவர் பட்டியலிட்டார். இவ்வாறு இது கடினமான சீர்திருத்தங்களுக்கான நேரம் என்று பிரதமரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
எளிதான சீர்திருத்தங்களுக்கான காலம் முடிந்துவிட்டது, கடினமான சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நாங்கள் வாதத்திற்காக ஒத்துக்கொண்டாலும், இந்த அரசாங்கத்திடம் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்ள விரும்புவதெல்லாம், அவ்வாறு எளிதான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அதனால் பயனடைந்தவர்களிடம் - கார்ப்பரேட் வர்க்கத்தினரிடம் - உங்கள் கடினமான சீர்திருத்தங்களைப் பிரயோகியுங்கள். தயவுசெய்து முயற்சியுங்கள். நாட்டில் மிகவும் இருளார்ந்த நிலையில் நிதிப் பற்றாக்குறை (களைஉயட னநகiஉவை) இருக்கிறது. அதைவிட ஆழமான முறையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஊரசசநவே ஹஉஉடிரவே னுநகiஉவை) இருக்கிறது.  எனவே கடந்த இருபதாண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த எளிய சீர்திருத்தங்களின் காரணமாகப் பயன் அடைந்த வர்க்கத்தினரிடம் கேளுங்கள். அவர்களுக்கு அளித்த சலுகைகளைத் திரும்பப் பெறுங்கள். குறைந்தபட்சம்  அவர்கள் அரசுக்கு அளிக்காமல் இருக்கும் நேரடி மற்றும் கார்ப்பரேட் வரித் தொகைகளில் பாதியையாவது வசூல் செய்திடுங்கள். சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் இதில் பாதியையாவது வசூல் செய்திடுங்கள். தயவுசெய்து தொழிலாளிகளை விட்டுவிடுங்கள். தயவுசெய்து உழைக்கும் வர்க்கத்தினரை விட்டுவிடுங்கள். நாட்டின் இக்கட்டான சூழ்நிலையிலும், தாங்கள் கடினமான சீர்திருத்தங்களைக் கொண்டுவரவிருக்கும் இந் நேரத்திலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்கிக் கொண்டிருப்ப வர்களை, நாட்டிற்கு வருவாயை உருவாக்கித் தருபவர்களை விட்டுவிடுங்கள். தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள். அரசாங்கம் அவர்களுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறது.
கடைசியாக ஒரு வேண்டுகோள். நான் என்னதான் வேண்டுகோள் விடுத்தாலும் அது கேளாதவர் காதில்  ஊதிய சங்கு போன்றதுதான் என்பது எனக்குத் தெரியும். இச்சட்டமுன்வடிவின்மீது சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். அவற்றை நிறைவேற்றித்தருமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன். திருத்தங்கள் இன்றி இச்சட்டமுன்வடிவை நிறைவேற்றி தொழிலாளர் களின் வாழ்வைச் சூறையாட அனுமதிக்கக் கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
(ந.நி.)


 
     



Wednesday, September 4, 2013

‘‘சிரியா மீது கை வைக்காதே’’ : பிரகாஷ் காரத்


-
சிரியா மீது தாக்குதலைத் தொடுக்க அமெரிக்க திட்டமிட்டு வருகிறது. அமெரிக்க நாடாளுமன் றத்தின் ஒப்புதல் கிடைத்தபின்னர், சிரியா மீதான ராணுவத் தாக்குதல் கள் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்திருக் கிறார்.இவ்வாறு தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில், அமெரிக்க-நேட்டோ படைகள் சமீப ஆண்டுகளில் அரபு நாடு ஒன்றிற்கு எதிராக மேற்கொள் ளும் மூன்றாவது ஆக்கிரமிப்பு நட வடிக்கையாக இருந்திடும்.
2003ல், ஜார்ஜ் புஷ் இராக்கின் மீது படை யெடுத்தார். அப்போது, சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்ற தவறான முறையில் போலிக் காரணம் ஒன் றைக் கூறி இவ்வாறு படையெடுத் தார். அடுத்து, ஒபாமா 2011இல் லிபி யாவிற்கு எதிராக வான்வழி வழி யாக ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தார். அப்போது அவர் பெங் காசியில் ரத்த ஆறு ஓடுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப் படுவதாகக் கூறி னார். இப்போது சிரியா அமெரிக்கா வின் குறியாகும். இதற்கு அவர்கள் கூறும் சால்ஜாப்பு: சிரியா ராணுவம், அங்கே கலகம் செய்திடும் படை யினருக்கு எதிராக சரின்எனப் படும் நரம்புகளைப் பாதிக்கும் ரசா யன ஆயுதத்தைப் பயன்படுத்துகிற தாம்.
அமெரிக்காவும் அதன் நேட் டோ கூட்டாளிகளான பிரிட்டனும், பிரான்சும் ‘ ‘சரின்வாயுவை ஐ.நா. ஆய்வாளர்கள் புலனாய்வுகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடங் களுக்குச் செல்வதற்கு முன்பேயே சிரியா அரசாங்கம் பயன்படுத்தி யதுஎன்று முடிவு செய்துள்ளன. ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று தாங்கள் கூறிய எச்சரிக்கையை சிரியா அர சாங்கம் மீறி விட்டது என்பதே ஒபா மாவின் கூற்றாகும். அமெரிக்காவின் அறநெறிவேடம் உண்மையிலேயே அதிசய மான ஒன்றாகும். வியட்நாமில் சண் டை நடைபெற்றபோது, அமெரிக் கப்படைகள் ஏஜண்ட் ஆரஞ்சுஎன்னும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலைப் பேரழிவுக்கு உள்ளாக்கின, பிறக்கும் குழந்தைகளில் பல்லாயிரக்கணக் கான குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதற்கும் காரணமாய் அமைந் தன.
இராக்கில், சமீபத்தில்கூட, அமெரிக்கப் படையினர் செறிவு குறைந்த யுரேனியத்தையும், வெள் ளை பாஸ்பரஸ் குண்டுகளையும் பயன்படுத்தி மக்களுக்கு மிகவும் கொடூரமான காயங்களை ஏற்படுத்தி னார்கள். இப்போது இதே ஏகாதிபத் திய ஆட்சியாளர்கள்தான் சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன் படுத்துவதாகவும், எனவே அத னைத் தாக்கப்போகிறோம் என்றும் தங்களுடைய சட்டவிரோத ஆக்கிர மிப்புக்குக் காரணங்களாகக் கூறிக் கொண்டிருக் கிறார்கள்.கற்பனையான ஒன்றை அல்லது அரைகுறை உண்மையைத் தங்கள் ஆக்கிரமிப்புக்கான காரணமாக, ஏகாதிபத்தியம் காலங் காலமாகக் கூறிவரும் உத்தியையே ஒபாமா வும் இப்போது கூறிக்கொண்டிருக் கிறார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாகவே சிரியா தங்களுக்கு எதிராக சீறியெழுகிற எதிர்ப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சிரியா வில் இயங்கும் பல்வகைக் கலகக் கும்பல்கள் தற்போதைய பஷார் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிராக சண்டை புரிந்து கொண் டிருக்கின்றன. சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இக்கலகக் கும்பல்களுக்கு நிதி உதவி, ஆயுத உதவி மற்றும் அனைத்துவிதமான உதவிகளை யும் செய்து வருகின்றன. ஜபாட் அல்-நஸ்ரா மற்றும் சலாஃபிஸ்ட்ஸ் போன்ற தீவிர இஸ்லாமியக் குழுக் கள் மற்றும் மேற்கத்திய நாடு களுக்கு ஆதரவான குழுக்கள் பல இவற்றில் அடங்கும். இவ்வாறு கல கம் புரிபவர்களில் சிலருக்கு அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏ ஆயுதங்களை வழங்கி இருப் பதோடு பயிற்சியும் அளித்து வரு கிறது.
ஆப்கானிஸ்தான், லிபியா, துனிசியா, ஏமன் மற்றும் செசன்யா நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியக் குழுக்களும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளன. முப்ப தாண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ் தானத்தில் என்ன செய்ததோ அதைப் போன்றோ இப்போது சிரியாவிலும் இஸ்லாமிய அடிப் படைவாதிகளின் படையினருக்கு அமெரிக்கா அனைத்து உதவிகளை யும் செய்து வருகிறது. அரபு உலகத்தில் இயங்கிடும் ஒரேயொரு மதச்சார்பற்ற அரசான சிரியாவை பலவீனப்படுத்த வேண்டும் என் பதே அமெரிக்காவின் ஒரே குறிக் கோளாகும்.சிரியாவில் கலகம் செய்துவரும் கும்பல் விரைவில் தன்னுடைய லட் சியத்தை எய்திடும் என்றும், சிரியா ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும் அமெரிக்கா எதிர்பார்த்தது.
ஆனால் அது நடைபெறவில்லை. தற்போது நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள், இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் அண் டை நாடுகளில் அகதிகளாகத் தஞ் சம் புகுந்திருக்கிறார்கள். சிரியா அரசாங்கமும், அதன் ஆயுதப் படைகளும் கலகக் கும்பல்களை விரட்டி அடித்து, அவற்றால் கைப் பற்றப்பட்டிருந்த நகரங்கள் மற்றும் பகுதிகளை சமீப மாதங்களில் மீள வும் கைப்பற்றியுள்ளனர். இத்தகு சூழ்நிலையில்தான் ரசாயன ஆயு தங்கள் பிரச்சனை முன்னுக்கு வந் திருக்கிறது. இந்த ஆண்டு, ஜூன் மாதத்தில், ‘சிரியா ராணுவம் சரின் வாயு பயன்படுத்துவதாகக் கூறி, அதனை எதிர்த்துப் போரிடுபவர் களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கும்என்று அதிபர் ஒபாமா அறிவித்தார். அந்த சமயத்தில், அமெரிக்காவின் கூற்று தவறானது என்று தக்க ஆதாரத்துடன் மெய்ப் பித்துக் காட்டப்பட்டது.
ஐ.நா. மன் றத்தின் ரஷ்யத் தூதர், சிரியாவில் அலெப்போ என்னுமிடத்தில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள கலகக் கும்பல்கள்தான் சரின் வாயுவை உபயோகப் படுத்துகின்றன என்பதை தக்க ஆதாரத்துடன் நிரூபித்தார். கடைசியாக ஆகஸ்ட் 21 அன்று டமாஸ்கஸ் அருகில் கௌதா என் னுமிடத்தில் நடைபெற்ற மோதலில் சரின் வாயு பயன்படுத்தப்பட்டிருக் கிறது. அன்றையதினம்தான் ஐ.நா. ஆய்வாளர்கள் டமாஸ்கஸ் போய்ச் சேர்ந்திருந்தனர். சிரியா அரசாங்கம் மோதல்களில் வாயு பயன்படுத்தப் படுவதாக எழுந்துள்ள புகார்களை விசாரணை செய்வதற்காக ஐ.நா. ஆய்வாளர்களை சிரியா அரசாங் கம் அனுமதித்த பின்னர் இச்சம்ப வம் நடந்துள்ளது.
இத்தகைய குற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.நா. ஆய் வாளர்கள் வந்திருக்கும் நாளன்று சிரியா அரசாங்கம் இவ்வாறு ரசா யன ஆயுதங்ளைப் பயன்படுத்தும் என்பது நம்பமுடியாததாக உள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் உட்பட சிரியாவில் நடைபெற்று வரும் மோதல்களைக் கூர்ந்து கவனித்து வரும் நோக்கர்கள் பலர் சுட்டிக்காட் டியிருக்கின்றனர். சிரியா அரசாங்க மும் அமெரிக்கா சுமத்தும் குற்றச் சாட்டை மறுத்திருக்கிறது. சரின் வாயுவை புகைபோக்கிக் குழல் களில் கலகக் கும்பல்கள்தான் வைத் திருக்கின்றன என்றும் கூறியிருக்கிறது.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் என அனைத்து நாடுகளும் சிரியா அரசாங்கம்தான் ரசாயன ஆயுதங் களை பயன்படுத்துகிறதுஎன்று ஒரே குரலில் கூறியிருப்பது கவனிக் கத்தக்கது. மேலும் அமெரிக்கா, ஐ.நா. ஆய்வுக்குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல அனுமதிக் கப் பட்டிருப்பதே மிகவும் காலங் கடந்தது என்று கூறியிருக்கிறது. ஐ.நா.ஆய்வுக்குழு முடிவுகள் வெளி வருவதற்கு முன்பே, அமெரிக்க அரசின் சார்பில் அமைச்சர்ஜான் கெர்ரி சிரியா அரசாங்கம் ரசாயன ஆயுதங்களை உபயோகப்படுத்து வது கண்டனத்திற்குரியது என்றும் இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுக் கும் என்றும் அறிவித்திருக்கிறார்.
ஆயுதந்தாங்கிய ஐந்து அமெரிக்க கப்பல்கள் குருயீஸ் ஏவுகணைகளு டன் கிழக்கு மத்தியத்தரைக்கடல் நோக்கி நகரத் துவங்கியுள்ளன. ராணுவத் தாக்குதல்கள் நிச்சயம் நடைபெறவிருக்கிறது. ஐ.நா. ஆய் வாளர்கள் சிரியாவை விட்டுப் புறப் பட்டவுடனேயே இவை நடத்தப்பட இருக்கின்றன. அநேகமாக எந்த நிமிடமும் இது நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் மற்றும் பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே ராணுவத் தாக்குதல் களில் தங்கள் நாடுகளும் இணைந்து கொள்ளத் தயாராயிருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு தடங்கல் எழுந்துள்ளது. சிரியா விற்கு எதிரான ராணுவ நடவடிக் கைக்கு ஒப்புதல் பெறுவதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் அறிவித் திருந்தார். நாடாளுமன்றம் ஆகஸ்ட் 29 அன்று கூடியது. பிரிட்டிஷ் பிரதம ருக்கு மரண அடி கொடுக்கும் விதத் தில் நாடாளுமன்றம் தன்னுடைய பெரும்பான்மை வாக்கு வித்தி யாசத்தில் அரசாங்கம் கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்தது. யுத் தத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் உள்ள கடுமையான கருத்தை இது பிரதிபலிப்பதாக அமைந்தது. குறிப் பாக, டோனி பிளேயர் ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது எடுத்த நெறிபிறழ்ந்த முடி வின் அனுபவத்திற்குப் பின்னர் இவ்வாறு அமைந்துள்ளது.இவ்வாறாக, அதிபர் ஒபாமா, தன் னுடைய உடனடி ராணுவத் தாக்கு தல் திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட் டிருக்கிறார்.
அமெரிக்க காங்கிரசின் ஒப்புதல் கிடைத்தபின்னர் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று அவர் அறிவித்திருக்கிறார். அமெரிக்க காங்கிரஸ் வரும் செப்டம்பர் 9 அன்று மறுபடியும் கூட விருக்கிறது. ஒபாமா, அதிபர் என்ற முறையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆளும் வர்க்க நலன்களைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறார். அவர் மிக வும் அரக்கத்தனமாகவும், வலதுசாரி சிந்தனைப்போக்கும் உடைய ரிபப் ளிகன் கட்சியினரின்ஆதரவையே மிகவும் நம்பி இருக்கிறார். பிரான்ஸ், தன்னுடைய முன்னாள் காலனியாக இருந்த சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் இணைந்திட இன்னமும் அறிவிக்கவில்லை.
அமெரிக்கா, அதன் மேற்கத்திய கூட்டாளிகள் மற்றும் இஸ்ரேல் சிரி யாவை பலவீனப்படுத்த விரும்பு கின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் ஈரானைத் தனிமைப்படுத்த அவை விரும்புகின்றன. லிபியாவில் செய் ததைப்போல அல்லாமல், ராணுவத் தலையீட்டிற்கு ஐ.நா.வின் அனு மதியை இதற்கு அவர்கள் பெற்று விட முடியாது. ஏனெனில் ரஷ்யா வும் சீனாவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. எனவே, அவர்கள் மனிதாபிமான அடிப்ப டையில் ராணுவத் தலையீட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்று சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ரசாயன ஆயுதங்களின் தாக்குதலிலிருந்து அப்பாவி மக்களைப் பாதுகாக்க வேண்டுமாம்.
ஆயினும், மேற்கு ஆசியாவை அதன் எண்ணெய் மற்றும் வாயு இருப்புகளுக்காகத் தங் கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், தங்கள் ஆதிக்கத் தை அங்கே நிலைநிறுத்த வேண் டும் என்கிற ஏகாதிபத்தியத்தின் எண்ணத்தை அதனால் மூடி மறைக்க முடியவில்லை. இராக்கிலும், லிபியாவிலும் அமெரிக்காவும் மற்றும் மேற்கத்திய நாடுகளும் எண்ணெய் வளங் களைத் தற்போது தங்கள் கட்டுப் பாடுகளில் கொண்டுவந்துவிட்டன. இரு நாடுகளுமே அமெரிக்க - நேட்டோ தலையீடுகளுக்குப் பின் னால் ஏற்பட்ட விளைவுகளால் பிரி வினை சக்திகளின் மோதல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
சிரி யாவிலும் கூட, ஏகாதிபத்தியம் சன்னி - ஷியா பிரிவுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கி முட்டி மோதவிட்டுள்ளது. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்கள் மேலாதிக்கக் கட்டுப்பாட்டை உறு திப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்நாடுகளின் தேசிய இறையாண் மையைக் காலில் போட்டு மிதிக்க வும், அங்கே இயங்கிடும் இஸ்லா மிய அடிப்படைவாதப் பிற்போக்கு சக்திகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன. அமெரிக்கத் தலையீட்டுக்கு எதி ராக ஐமுகூட்டணி அரசாங்கம் வலு வாகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும். அயல்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித், கூறியிருப்பது போல ஐ.நா. மன்றத்தின் கட்டளைக் கிணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பது போதுமானதல்ல.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முடிவுகளை மீறிட அமெரிக்கா சென்று கொண்டிருக் கிறது என்று தெளிவாகத் தெரிகை யில், ராணுவத் தலையீட்டை இந்தியா வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் சிரியாவில் ராணுவத் தலையீட்டு அச்சுறுத்த லுக்கு எதிராக கிளர்ச்சிகள் நடத் திடத் தீர்மானித்திருக்கின்றன. அமெரிக்காவே, சிரியா மீது கை வைக்காதேஎன்ற கோரிக்கை யுடன் உலக அளவிலான இயக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
- தமிழில்: ச.வீரமணி


Sunday, September 1, 2013

பணக்காரர்களுக்கான மானியத்தை நிறுத்துக; பொது முதலீட்டை அதிகப்படுத்துக!


இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணா அளவிற்கு சரிந்துள்ளது. இதை விட மோசமான நிலை என்னவெனில் இவ்வாறு சரிவது நிற்குமா என்றே தெரிய வில்லை. நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு லாலி பாடிய மேதாவிகள், உணவுப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவினை மக்களவையில் நிறை வேற்றியதுதான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு உடனடிக் காரணம் என்று கூறத் தொடங்கி உள்ளனர். இந்திய கார்ப்ப ரேட்டுகளும் சர்வதேச நிதி மூலதன நிகழ்ச்சி நிரலுக்கு வக்காலத்து வாங்கும் ஊடக அடிமைகளும் உணவுப் பாது காப்புச் சட்டம் ‘‘பொது நிதிகளுக்குச் சரியான அடி கொடுத்துள்ளது’’ என்று எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியத் தொழில்களின் கூட்டமைப்பு (சிஐஐ) தலைவர் சிவப்புக் கொடியை உயர்த்தி, ‘இந்த நேரத்தில் இவ்வாறு பெரும் தொகையை (உணவுப் பாதுகாப்புக்காக) ஒதுக்குவது நிச்சயமாக நிதிப் பற்றாக் குறையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும்என்று கூறியிருக்கிறார்.உயர் நிதிப் பற்றாக்குறையை எதிர் பார்ப்பது நிச்சயமாக இந்தியாவில் முத லீடு செய்துள்ள சர்வதேச நிதி முதலீட் டாளர்களை நடுங்க வைத்திருக்கிறது. அவர்கள் இந்தியச் சந்தையிலிருந்து வெளியேறிக் கொண்டிருக் கிறார்கள். அதன் காரணமாக ரூபாயின் மதிப்பும் சரிந்து கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் உள்ள நிச்சயமற்ற தன்மையின் காரணமாக வளர்முக நாடுகளின் கரன்சி களும் கூர்மையாக சரிந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தி லிருந்து 20 விழுக்காடு அளவிற்கு சரிந் திருக்கிறது. தென் ஆப்ரிக்காவின் கரன்சி யான ரேண்ட் (rand)-உம் கிட்டத்தட்ட 23 விழுக்காடு அளவிற்கு வீழ்ச்சியடைந் திருக்கிறது.
நிச்சயமாக இதற்கு இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவை இம்மேதாவிகள் காரணமாய் கூறமாட் டார்கள் என்று நம்பலாம்.தாங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற் கான வாய்ப்பு வாசல்களைப் பாதுகாத் திடும் முயற்சியின் காரணமாகத் தான் இந் திய கார்ப்பரேட்டுகள், ‘‘நாடு எப்படி பட் டினி கிடப்பவர்களுக்குப் பசியாற வைப் பதற்கான வேலைகளில் ஈடுபடலாம்’’ என்று மிகவும் மனிதாபிமானமற்ற முறை யில் கூக்குரல் எழுப்புகிறார்கள். தற்போ தைய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன் வடிவில் அனைத்து மக்களுக்கும் எட்ட முடியாது என்று தெரிந்தும் மிகவும் அற் பதமான ஒதுக்கீட்டையே அரசு செய் திருக்கிறது. ஆயினும் இதனைக்கூட தாங் கள் கொள்ளைலாபம் அடிப்பதைக் கட் டுப்படுத்தும் செயலாக இவர்கள்பார்க் கிறார்கள். நம்முடைய மக்களுக்கு ஓர் அர்த்தமுள்ள உணவுப் பாதுகாப்பு என்பது எப்போது சாத்தியமாகும்? நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதத் திற்கு குறைந்தபட்சம் 35 கிலோ கிராம் உணவு தானியங்களை கிலோ கிராம் 2 ரூபாய்க்கு மிகைப்படாத விலையில் கொடுக்கும்போதுதான் சாத்தியமாகும். இப்போது நிறைவேறியிருக்கும் சட்ட முன்வடிவு இந்தக் குறிக்கோளை எய்து வதற்குப் போதுமானதில்லை.ஆயினும் இவ்வாறு அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் அரைகுறையான இச்சட்டமுன்வடிவிற்கே அரசின் கரு வூலத்திற்கு ஆண்டொன்றுக்கு, கூடுத லாக 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவா கும். இதற்காக பட்ஜெட்டில் ஏற்கனவே 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருக் கிறது. எனவே மேலும் கூடுதலாக ஒதுக்க வேண்டிய தொகை 20 ஆயிரம் கோடி ரூபாய்தான். இத்தொகையைத்தான் நமது பொருளாதாரத்தால் ஒதுக்க முடியாது என்று இந்திய கார்ப்பரேட்டுகள் கூறு கிறார்கள். பசியால் வாடிக் கொண்டிருக் கும் தம் மக்களுக்கு உணவளிக்க முடி யாத ஒரு நாடு நிச்சயமாக தங்கள் நாட் டில் இருக்கும் விரல்விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்கள் மட்டும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்புவாசல் களைத் திறந்துவிட முடியாது.
இதே இந்திய கார்ப்பரேட்டுகள், தங்களுக்கு வளர்ச்சியை மேம்படுத்து வதற்காக என்று கூறி பல்லாயிரம் கோடி ரூபாய்களை முடுக்கிவிடும் நிவாரண உதவி’ (`stimulus packages’) என்ற பெய ரில் ஊக்கத்தொகைகளாக’ (`incentives’) பெற்றுக் கொண்டிருப்பது குறித்து வாயே திறப்பதில்லை. கடந்த மூன்றாண்டு களாக, மத்திய அரசால் ஒவ்வோராண்டும் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டின்போதும் அது வரிவசூல் செய்யாமல் கைவிட்ட தொகை குறித்தும் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி ஒவ்வோராண் டும் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வரி வசூல் செய்யாமல் மத்திய அரசால் கைவிடப்பட்டிருந்தது. இதில் பெரும் தொகை வழக்கில் சிக்கிக் கொண்டிருப்ப தால் இத்தொகை முழுவதையுமே வசூ லிக்க முடியாது என்று கூறப்பட்டது. ஆயி னும் அரசுத் தரப்பில் கூறப்படும் வாதத் தை அப்படியே ஏற்றுக்கொண்டா லும்கூட, இத்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்குத் தொகை ஒவ்வோராண்டும் பணக்காரர் களுக்கும் கார்ப்பரேட்டுகளுக் கும் வரிச் சலுகைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் இவர்கள் கூறும் ‘‘ஊக் கத் தொகைகள்’’ என்பது வேறெதுவும் இல்லை. கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப் படும் மானியங்கள்தான். இவ்வாறு இவர் களுக்கு சலுகைகளை வாரி வழங்கி யிருந்த போதிலும்கூட, இந்த ஆண்டு மே மாதத்தில் தொழில் உற்பத்தியின் வளர்ச்சி அட்டவணையைப் பார்த் தோமானால் அது -1.6 என்ற ரீதியில்தான் இருக்கிறது. இதற்குப் பிந்தைய மாதங் களில் அதுவும் வீழ்ச்சி யடைந்தது. இவ் வாறு பணக்காரர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கிய போதிலும், அதனால் நாட் டின் வளர்ச்சிக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று நன்கு தெரிந்த பின்னரும் கூட, பணக்காரர் களுக்கு அளித்து வரும் மானியங்களை நிறுத்தக்கூட வேண்டாம், அதனைக் குறைப்பது குறித்து கூட பேச்சு எதையும் அரசுத்தரப்பில் காணோம்.ஆனால் அதே சமயத்தில் பணக்காரர் களுக்கு அளிக்கும் மானியங்களோடு ஒப்பிடுகையில் அதில் மிகவும் சொற்ப அளவிற்கு ஏழைகளுக்கு அளிக்கப்படு கையில் கார்ப்பரேட்டுகளும், பணக்காரர் களும் குய்யோ முறையோ என்று கூச்சல் போடுகிறார்கள். ஏற்கனவே அரசாங்கம், அதிகரித்து வரும் மானியங்களையும், நிதிப் பற்றாக்குறை மேலும் உயர்வதைச் சரிக்கட்டுதல் என்ற பெயர்களால், பெட் ரோலியப் பொருட்களின் விலைகளை மேலும் உயர்த்த முடிவெடுத்துவிட்டது. இவற்றின் விளைவாக அரசாங்கம் தற் போது மக்களுக்கு அளிக்கவிருக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு அளித்திட இருக்கும் கொஞ்சநஞ்ச பயன் களும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு முழுமையாகச் சென்று அடையப் போவதில்லை.மேலும் அரசின் இந்த நடவடிக்கை வளர்ச்சிக்கு உதவாது. உயர் பணவீக்கம் உள்ள பின்னணியில் இத்தகைய உயர்வு களும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுகளும் மக்க ளின் வாங்கும் சக்தியை மேலும் குறைத் திடும்.
அதன் மூலம் நம் பொருளாதாரத் தின் உள்நாட்டுச் சந்தையும் சுருங்கும். இவை தொடர்ந்து பொறியியல் மற்றும் எந் திரவியல் போன்ற உற்பத்தித் துறைகளி லும் வேலைகளைச் சுருக்கி, நாட்டின் ஒட்டுமொத்த அளவில் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தையும் (GDP) குறைத்திடும். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக நம் பொருளாதாரத் தில் மொத்த நுகர்வு செலவினம் மிகவும் ஆரோக்கியமான விதத்தில் ஒவ்வோராண்டும் 8 விழுக்காடு என்ற அளவிற்கு வளர்ந்து கொண்டிருந்த தானது, கடந்த சில ஆண்டுகளாக வெறும் 4.4 விழுக்காடு அளவிற்குக் குறைந்து விட்டது.கார்ப்பரேட்டுகளின் அறிக்கைகளும் இவற்றை உறுதிப்படுத்துகின்றன. அவர் களது அறிக்கைகளின்படி நுகர்வுப் பொருட்கள் விற்பனை என்பது 2012 தொடக்கத்திலிருந்து 2013 வரை கணிச மான அளவிற்கு மந்தமாகிவிட்டது. நாட் டில் நுகர்வுப் பொருட்களை விற்கும் 12 பெரிய கம்பெனிகள் இந்த ஜூன் மாதம் தங்கள் விற்பனை வளர்ச்சி 5 விழுக்காடு என்று காட்டியிருக்கிறது. இதே கம்பெனி கள் சென்ற ஜூனில் இதனை 29.3 விழுக்காடு வளர்ச்சி என்று காட்டியிருந்த தோடு ஒப்பிட்டோமானால் எந்த அள விற்கு மக்களிடம் வாங்கும் சக்தி குறைந் திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர் வுப்பொருட்களை விற்பனை செய்திடும் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனி, ‘‘மக்கள் தங்கள் செலவுகளை வெட்டிச் சுருக்கிக்கொண்டுவிட்டார்கள்’’ என்று அறிக்கை தாக்கல் செய்திருக் கிறது. மோட்டார் கார்கள் விற்பனை சென்ற நிதியாண்டில் 6.7 விழுக்காடு வீழ்ச்சி யடைந்துள்ளது.
இவ்வாறு வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது கடந்த பத்தாண் டில் இதுவே முதன்முறையாகும். 2013 ஏப் ரல் - ஜூன் மாதத்தில் இது 10 விழுக்காடு அளவிற்கு வீழ்ச்சியடைந்ததாக இந்திய ஆட்டோமோபைல் உற்பத்தியாளர் சங்கம் கூறியிருக்கிறது. மேலும் இந்த நிதி யாண்டில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதால் இது 5 - 12 விழுக் காடு அளவிற்கு விற்பனை குறையும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேபோன்று, வாஷிங் மெஷின், தொலைக்காட்சிப் பெட்டி, மைக்ரோவேவ் போன்ற அனைத்து நுகர்வுப் பொருள் களின் விற்பனையும் கணிசமான அள விற்கு வீழ்ச்சி அடைந்திருக்கின்றன.நம் நாட்டின் பொருளாதாரத்தில் ஒட்டு மொத்த உள்நாட்டுத் தேவை சுருங்கியதே இதற்கு முக்கிய காரணமாகும். இவற்றின் நேரடி விளைவு, பணக்காரர்களும் இந்திய கார்ப்பரேட்டுகளும் தங்களிடம் உள்ள கணிசமான உபரியை உற்பத்தியில் முத லீடு செய்வதைத் தவிர்க்கிறார்கள். ஏனெ னில் அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் உலகப் பொருளாதார நெருக் கடியின் காரணமாக சர்வதேசச் சந்தை யிலும் விலை போகாது, இந்தியச் சந் தையில் மக்களின் வாங்கும் சக்தி குறைந் திருப்பதால் இங்கும் விற்காது என்று அவர்கள் கருதுகிறார்கள். கடந்த ஓராண் டாக நம் பிரதமரும் நிதி அமைச்சரும் நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களைக் கூட அவற்றின் ரொக்க இருப்புகளை முதலீடு செய்வதற்குத் தூண்டத் தவறி விட்டார்கள். இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், பணக்காரர்கள் தங்களிடம் உள்ள கையிருப்புகளைப் போட்டு வைக்க வழி தேடினார்கள். இதற்கு அவர்கள் தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை வாங்குவது முதலியவை களில் ஈடுபட்டார்கள். வரலாற்றில் முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத் தின் விலை பத்து கிராம் 33 ஆயிரத்து 590 ரூபாயை எட்டியது. வெள்ளியின் விலை கூட கடந்த ஆறு மாதங்களில் கடுமை யாக உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் விலைகள் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமான அளவில் உயர்ந்திருக் கிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி அமெரிக்க டாலர் மற்றும் இதர வெளிநாட்டு கரன்சி களின் தேவையையும் கூர்மையாக அதி கரித்திருக்கிறது.இவற்றுடன், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கக்கூடும் என்ற அச் சுறுத்தலும், எண்ணெய் விலைகள் மீது நிச்சயமற்ற தன்மை அதிகரித்திருப்பதும் இந்திய பங்குச் சந்தை மீதும் ரூபாய் மதிப் பின்மீதும் பாதிப்பை ஏற்படுத்தி இருக் கிறது. இவ்வாறான சர்வதேச நிச்சயமற்ற தன்மைகளும் இந்தியத் தொழில்களின் கூட்டமைப்பு இந்தியச் சந்தைகளி லிருந்து வெளியேற வலுவான காரணி களாக அமைந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள பிரச்சனை களுக்குத் தீர்வு, மேலும் சீர்திருத்தங்கள் என்ற கூக்குரலில் அடங்கி இருக்கவில் லை. இத்தகைய கூக்குரல்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒளிரும் இந்தி யர்களை’, ‘அல்லல்பட்டு அவதிக்குள் ளாகிஇருக்கும் இந்தியர்களின் வயிற்றில் அடித்து மேலும் ஒளிரச் செய்வதற்கான குரலே தவிர வேறல்ல. மக்கள் எந்த அளவிற்கு அல்லல்பட்டு அவதிக்குள் ளாகி இருக்கிறார்களோ அந்த அளவிற்கு ஒளிரும் இந்தியர்கள் பிரகாசமாய் இருப் பார்கள்.
எனவே, தீர்வு என்பது பணக்காரர் களுக்கு அளிக்கப்படும் மானியங்களை நிறுத்துவதிலும், அவற்றை மிகப்பெரிய அளவில் பொது முதலீடுகளில் செலுத்தி, நமக்கு மிகவும் தேவையான உள்கட்ட மைப்பு வசதிகளைப் பெருக்குவதிலும் தான் அடங்கி இருக்கிறது. இதன் மூலம் கணிசமான அளவிற்கு வேலைவாய்ப்பு களைப் பெருக்கிட முடியும். அதன் காரண மாக உள்நாட்டுத் தேவைகளும் அதி கரித்து, அது நம்நாட்டின் பொறியியல் மற் றும் எந்திரவியல் போன்ற உற்பத்தித் துறை வளர்ச்சிக்கும் தூண்டுதலாக அமைந்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)