Sunday, February 3, 2008

ஜும்பா லஹிரி - புளிட்சர் பரிசு பெற்ற ஒரேயொரு தெற்காசிய எழுத்தாளர்-சிவ. வீர. வியட்நாம்


“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது முதுமொழி. திரவியம் தேடுவதற்காக திரைகடலோடி சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. உலகமய காலகட்டத்தில் நாடுகளின் எல்லைதாண்டிய போக்குவரத்து, கலாச்சார பரிமாற்றம் போன்றவையெல்லாம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிலை எப்படியுள்ளது? அவர்களுடைய ஆசைகள், கனவுகள், திருமண வாழ்க்கை, வெளிநாட்டுக் குடியுரிமை, குழந்தைகளின் எதிர்காலம் போன்றவை எப்படியுள்ளன? வெளிநாட்டு வாழ்க்கை என்பது சொர்க்கமா? நரகமா? அங்கு வாழும் நம் மக்கள், குறிப்பாக உயர் மத்தியதர அறிவுஜீவிகள் சொகுசாக வாழ்வதாக நமக்குத் தோன்றும். ஆனால் அவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்களா?
இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட இலக்கிய இயக்கத்தை உருவாக்க வேண்டுமென்பது தற்போதைய இலக்கிய உலகம் எதிர்கொள்ளும் சவால். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பற்றிய இலக்கியத்திற்கு - கலாச்சார மோதல்கள், தனிமை, இடமாற்றம், சுய அடையாளம் இழத்தல், மாறுபட்ட திருமண வாழ்க்கை போன்ற பல்வேறு கருப்பொருள்கள் உள்ளன. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று கற்பனை செய்து எழுதுவதை விட ஒருவெளிநாட்டு வாழ் இந்தியரே எழுதும்போது அவர்களுடைய உண்மையான உணர்வுகள், ஆசாபாசங்கள், சிக்கல்கள், எதிர்கால வாழ்க்கை போன்றவற்றை உலக வாசகர்கள் நன்றாக உணரமுடியும். அப்படி , ஓர் எழுத்தாளராக உருவாகிக்கொண்டிருப்பவர்தான் ஆங்கில எழுத்தாளர் ஜும்பா லஹிரி.
இளம்பெண்ணான இவர் ஓர் அமெரிக்க வாழ் இந்தியர். இவர் 1967ம் ஆண்டு இலண்டனில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய வங்காளி. இவர் ஆங்கில இலக்கியம், படைப்பிலக்கியம், ஒப்பிலக்கியம் என்ற மூன்று துறைகளிலும் தனித்தனியாக எம்.ஏ. பட்டம் - அதாவது மூன்று முறை எம்.ஏ. பட்டம் பெற்று - மறுமலர்ச்சி இலக்கியத்தில் (ஷேக்ஸ்பியர் கால இலக்கியத்தில்) முனைவர் பட்டம் பெற்றவர். பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் படைப்பிலக்கியம் பற்றி போதித்து வரும் ஆசிரியர். பிறந்ததிலிருந்து அமெரிக்காவில் வாழ்ந்தாலும், தன்னுடைய குழந்தைகள் இந்தியர்களாகவே வளர வேண்டும் என்பதில் இவருடைய தாய் உறுதியாக இருந்தார், அதனால்தான் இவருக்கு சிறுவயதிலிருந்தே வங்கமொழியும் இந்திய பாரம்பரியமும் இந்திய வாழ்க்கைமுறையும் பயிற்றுவிக்கப்பட்டது. இவருடைய தந்தை ஒரு நூலகர். தாய் ஆசிரியர். இலக்கியமும் எழுத்தும் இவருக்கு சிறுவயதிலிருந்தே பொழுதுபோக்கு. ஆரம்ப காலத்தில் பல பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ஜும்பா லஹிரி, தன்னுடைய சிறுகதைகளைத் தொகுத்து முதன் முதலாக “பிரச்சனைகளின் மொழிபெயர்ப்பாளர்” (இன்டர்பிரடர் ஆஃப் மலடிஸ் -Interpreter of Maladies) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த முதல் புத்தகத்திற்கே இவருக்கு புளிட்சர் பரிசு கிடைத்தது. இந்தப் பரிசு அமெரிக்கவாழ் மக்களின் வாழ்க்கையை பற்றி மிகச்சிறந்த கதைகளை வெளியிடும் அமெரிக்கவாழ் எழுத்தாளருக்கு வழங்கப்படும் பரிசாகும்.
ஜும்பா லஹிரி இந்த விருதைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்க வாழ் தெற்காசிய எழுத்தாளர். ‘நியூயார்க்கர்’ என்னும் அமெரிக்கப் பத்திரிகை “40 வயதுக்குள் எழுத்தாளராகிய உலகின் மிகச் சிறந்த 20 எழுத்தாளர்களுள் ஒருவர்,” என்று ஜும்பாலஹிரி குறித்துக் குறிப்பிட்டுள்ளது.
இப்புத்தகம் உலகின் 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், குறிப்பாக அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தப் புத்தகத்தைப் படித்தால் போதும். எல்லாக் கதைகளுமே இந்த ஆசிரியரைப் போல் இந்தியாவை விட்டு சென்று வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இந்தியர்களைப் பற்றிய கதைகள்.
அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் படித்த மத்திய தர வர்க்க இந்தியர்களுக்கு வருமானத்திற்குக் குறைவில்லை. ஆனால் இந்த வருமானத்திற்காக அவர்களின் வாழ்க்கையின் போக்கு எப்படியெல்லாம் மாறிப்போகிறது, அவர்களுடைய சக மனித உறவுகள் எப்படியெல்லாம் கணித்துக் கூறமுடியாததாக உள்ளது என்பதை மையமாக வைத்துத் தன் கதைகளை படைத்தார் ஜும்பா லஹிரி.
இந்தக் கதைகளின் கருக்களாக புலம்பெயர்ந்த இந்தியர்களின் முதல் தலைமுறையும் இரண்டாம் தலைமுறையும் சந்திக்கும் சிக்கல்கள், இந்தியத் திருமண முறைக்கும் மேற்கத்திய வாழ்கை நிலைக்கும் உள்ள வேறுபாடுகள், குடும்பத்தில் கணவன்-மனைவி பாத்திரங்களில் ஏற்படும் வேறுபாடுகள் போன்றவை உள்ளன. இக்கதைக்கருக்களை மனித மனத்தின் ஆழமான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜும்பா லஹிரி படைத்துள்ளார்.
இந்தப் புத்தகத்தின் தலைப்பை பற்றி கூறுகையில் அவர் சொல்கிறார்: “பாஸ்டன் நகரில் நான் ஒரு ரஷ்யரைச் சந்தித்தேன். அவர் தான் மருத்துவமனையில் பணிபுரிவதாகக் கூறினார். ஆனால் உண்மையில் அவர் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். மருத்துவத் துறை சம்பந்தமாக எந்தப் படிப்புகளையும் அவர் படிக்கவில்லை. ஆனால் தினமும் மருத்துவமனைக்குச் செல்வார். அவருடைய வேலை என்ன என்று ஒரு நாள் கேட்டேன். அவர் சொன்னார் ‘நான் பிரச்சனைகளின் மொழிபெயர்ப்பாளன் என்று.’ எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு நாள் அவருடன் நானும் மருத்துவமனைக்குச் சென்றேன். அந்த மருத்துவமனையில் பல நோயாளிகள் ரஷ்யர்கள். ஆனால் மருத்துவர்கள் அனைவரும் ஆங்கிலம் மட்டும் தெரிந்த அமெரிக்கர்கள். இருவருக்கும் இடையில் மொழிப் பிரச்சனை. இந்தச் சூழ்நிலையில் அந்த நபர் ரஷ்ய நோயாளிகளின் வியாதியை மருத்துவருக்கும் மருத்துவரின் பரிசோதனையை ரஷ்ய நோயாளிகளுக்கும் மொழி பெயர்த்துச் சொன்னது மட்டுமல்லாமல், நோயாளிகளின் மன ஆறுதலுக்கு என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அந்த ஆறுதல் வார்த்தைகளை மருத்துவர் கூறியதாக அவரே சொல்லிக்கொண்டிருந்தார். ‘ஒருவருடைய வியாதியை மட்டும் மருத்துவருக்குச் சொல்லும் மொழிபெயர்ப்பு, கணிதம் போடுவது போன்று நடுநிலையானது. ஆனால் அவர்களுக்கு மிக முக்கிய தேவை பேச்சுத் துணையும் ஆறுதல் வார்த்தைகளும்தான். நான் அவர்கள் நோய்களை மட்டுமல்ல பிரச்சனைகளையும் மொழிபெயர்க்கிறேன்’ என்றார் அந்த நண்பர். இந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தின. எழுத்தாளன் என்பவனும் பிரச்சனைகளின் மொழிபெயர்ப்பாளன்தான் என்று எனக்குத் தோன்றியது. அந்த வாக்கியத்தையே எனது புத்தகத்தின் தலைப்பாக்கியது மட்டுமல்லாமல், அந்த கதாபாத்திரத்தையும் என்னுடைய ஒரு கதையில் பதிவு செய்துள்ளேன்.”
இந்தப் புத்தகத்தின் மற்ற கதைகள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணவன்-மனைவி உறவு எப்படியுள்ளது என்பதைச் சித்தரிக்கின்றன. இதுகுறித்துப் பேசுகையில் ஜும்பா லஹிரி கூறுகிறார்: “இந்தியாவில் குடும்பங்களைக்கட்டிக் காப்பதில் கணவனின் பங்கு என்ன, மனைவியின் பங்கு என்ன என்பது பற்றி வரையறுக்கப்பட்டுள்ளது. வெளிவாழ்க்கையில் ஒரு கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், வீட்டு வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் புலம் பெயர்ந்து வரும்போது இந்த வரையறைகள் மாறுகின்றன, சில சமயங்களில் தூக்கியெறியப்படுகின்றன. இந்தியக் கலாச்சாரத்தின்படி பெண் என்றால் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும், குழந்தைகளை வளர்க்க வேண்டும், வயோதிகர்களைக் கவனிக்க வேண்டும். அவள் வேலைக்குச் செல்பவளாக இருந்தால் மேற்கொண்ட வேலைகளோடு சம்பாதிக்கவும் வேண்டும். வேலைக்குச் செல்கிறாள் என்பதற்காக இந்தியச் சமூகம் அவளுடைய பொறுப்புக்களைக் குறைத்திடவில்லை. இந்தியாவின் வேலை நேரமும் அதற்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் வேலை நேரம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாக உள்ளது. எனவே மனைவி வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணவர்கள் சமையல், குழந்தை வளர்ப்பு போன்ற பல்வேறு வேலைகளையும் மனிதாபிமான அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் நம் ஊரில் வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லா வேலைகளையும் செய்வார்கள் என்று விதண்டாவாதம் பேசிக்கொண்டிருந்தால், அந்தக் குடும்பம் வெளிநாட்டு வசதிக்காக வாழ்க்கையை தொலைத்த குடும்பம் ஆகிப்போகும். மேலும் வெளிநாடுகளில் வாழும் தம்பதியருக்கு வேறு சொந்த பந்தங்கள் கிடையாது. கலாச்சாரம், மொழி, நாடு கடந்த சக ஊழியர்கள், உண்மையான நண்பர்களும் குறைவு. வாழ்க்கைத் துணைதான் மிகச் சிறந்த நண்பராகவும் உறவினராகவும் விளங்க வேண்டும். பரஸ்பரம் புரிந்து கொள்ளுதலை ஒதுக்கிவிட்டு பொருளற்ற சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் பிடித்துகொண்டு வாழும் இந்திய ஆண்களின் திருமண வாழ்கை இதனால் இங்கே இனிப்பதில்லை. இந்தியப் பெண்களும் தற்போது பன்மடங்கு முன்னேறியிருக்கிறார்கள். முன்பெல்லாம் படித்த பெண்கள் கூட வன்முறையான கணவன் கிடைத்தால் விதியென்று ஏற்றுகொண்டிருந்தார்கள். அவர்களுடைய பொறுமையைத்தான் அந்த கால இலக்கியங்கள் போற்றியிருக்கின்றன. ஆனால் அவர்களுடைய உள்ளக் குமுறல்களையோ குடும்பம் என்ற நிறுவனத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களையோ யாரும் பெரிதாக எழுதிடவில்லை. ஆனால் தற்காலப் படித்த பெண்கள் ஆண்களின் அராஜகத்தை புரிந்துகொள்கின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்ளும் இந்தியப் பெண்கள் நன்கு படித்தவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு உடனே வேலையும் கிடைத்து விடுகிறது. ஆனால் வேலை நேரம் மிகக் கடுமையானது. இந்தச் சூழ்நிலையில் கணவன் நல்ல நண்பனாக நடந்துகொள்ளாவிட்டால் , திருமணம் என்பது புனிதம், உடைக்கமுடியாதது என்ற போதனைகள் தூக்கியெறியப்படுகின்றன. எனவே விவாகரத்துகளும் அதிகாமாகிறது. எந்த இந்திய பெண்ணும் முட்டாள்தனமான மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணங்களுக்காக விவாகரத்து செய்வதில்லை.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற இந்தியத் தத்துவம் கணவனின் கொடுமைகளையெல்லாம் ஒரு பெண் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று போதிக்கிறது. கொடுமை தாங்காமல் விவாகரத்து செய்தால் இந்திய சமுகம் அவளை வாழாவெட்டி என்றுஎள்ளி நகையாடுகிறது. இந்திய சாத்திரங்கள் அவள் தெருவில் சென்றால் அபசகுணம் என்று அறிவிக்கின்றன. ஆனால் இம்மாதிரியான கேலிகள் வெளிநாடுகளில் வாழும் பெண்களுக்குக் கிடையாது. எனவே விவாகரத்து செய்வதால் உறவு முறிகிறதே தவிர அந்த சமூகம் அவளை எள்ளி நகையாடுவதில்லை.”
இப்படிப்பட்ட வெளிநாட்டு பெண்களின் உணர்வுகள், கஷ்டங்கள் போன்றவற்றை நடுநிலையுடன் தன் கதைகளில் சித்தரித்துள்ளார் ஜும்பா லஹிரி. இவர் விவாகரத்துகளை நியாயப்படுத்தவும் இல்லை, குற்றம் கூறவும் இல்லை. வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்களின் உண்மையான பிரச்சனைகளை அப்படியே தம் கதைகளில் படம் பிடித்திருக்கிறார். இவர் எழுதிய மற்றொரு பிரபலமான நாவல் “பெயரளவில்” (தி நேம் சேக்).
அதாவது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு எல்லாமே பெயரளவில் உள்ளது. இந்தியன் என்ற அடையாளமும் பெயரளவில் உள்ளது. வெளிநாட்டுக்காரன் என்ற அடையாளமும் பெயரளவில் உள்ளது என்கிறார் ஆசிரியர் ஜும்பா லஹிரி . இக்கதை இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் முப்பதாண்டு காலம் வாழ்ந்துவரும் ஒரு வங்காளி குடும்பத்தின் கதை. சுயவாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து ஜும்பா லஹிரி இந்த நாவலை படைத்துள்ளார். இந்தியாவில் 25-30 ஆண்டுகள் வாழ்ந்து கல்வி கற்று தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் வாழ்க்கை முறைக்கும் இந்தியப் பெற்றோருக்கு குழந்தையாக அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் தலைமுறையினரின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வேறுபாடுகள், அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்தியாவில் 25-30 ஆண்டுகள் வாழ்ந்த பின்பு வெளிநாடு செல்பவர்களுக்கு இந்தியா என்றால் என்ன, இந்திய வாழ்க்கைமுறை என்றால் என்னவென்று தெரியும். வெளிநாடுகளின் வாழும் அந்நிய வாழ்க்கை, தனிமை, எப்போது நாடு திரும்புவோம் என்ற ஏக்கம், கலாச்சார கர்வம், இந்திய இசை, இந்திய உணவுகள், இந்திய பொழுதுபோக்குகள்- போன்றவையே அவர்களுடைய சிந்தனையில் நிறைந்திருக்கும். எப்படியாவது தன் குழந்தைகளை, தன் கலாச்சாரத்தின்படி தன் மொழி பேசி, தன் நாட்டு உணவுகளை பழக்கப்படுத்தி வளர்த்துவிட வேண்டும் என்பது ஒவ்வொரு தாயின் ஆசையாகவும் இருக்கும். ஆனால் அங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளுக்கு இந்தியா என்றால் அவர்களுடைய பெற்றோரிடமிருந்து என்ன கற்கிறார்களோ அதுதான். ஏனென்றால் அவர்களுடைய இந்திய வாழ்க்கை விடுமுறையின்போது பாட்டனார் வீட்டுக்கு வருவதும் ஊர் சுற்றி பார்ப்பதும் மட்டும்தான். ஆனால் இந்திய சமூகம் என்றால் என்னவென்பது பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. இதனால் இரண்டாம் தலைமுறையினருக்கு அடையாள சிக்கல் ஏற்படுகிறது. ‘நீ யார்?’ என்ற கேள்விக்கு அவர்களுக்குப் பதில் தெரியாது. ‘நான் முழுமையான இந்தியன்’ என்று அவர்களால் சொல்லமுடியாது. ஏனெனில் அவர்கள் இந்தியாவில் வாழ்ந்ததில்லை. நான் அமெரிக்கன் என்றும் அவர்களால் சொல்லமுடியாது. அவர்களுடைய உணவு, உடை, பெயர், குடும்பம் அவர்களை அமெரிக்கர்களிடமிருந்து நன்றாகவே வேறுபடுத்திகாட்டும். எனவே தற்போது பலர் நான் அமெரிக்க-இந்தியன் என்று சொல்லி வருகின்றனர்.
எனவே இவர்களைப் பற்றி எழுதிய அமெரிக்க-இந்தியர் ஜும்பா லஹிரியின் புத்தகங்களுக்கு உலகளவில் பெரும் கிராக்கி உள்ளது. இவருடைய புத்தகங்களைப் படிக்கும்வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையையே இவர் எழுதியிருப்பதாக இவருக்குப் பாராட்டுக் கடிதங்கள்எழுதுகிறார்கள். இவரை, மாக்சிம் கார்க்கியைப் போல், அச்சிபியைப் போல் இலட்சிய எழுத்தாளர் வரிசையில் நிறுத்த முடியாது. இவர் வளர்ந்து வரும் எழுத்தாளராவார்.
இலக்கியம் என்பது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி. அமெரிக்க-இந்தியர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கம் கண்ணாடியாக ஜும்பா லஹிரியின் எழுத்துக்கள் இருக்கின்றன. இந்த அமெரிக்க இந்தியர் ஓர் அமெரிக்க வாழ் கிரேக்கரை காதல் மணம் புரிந்துள்ளார். தற்போது இவருக்கு இரண்டு வயது மகன் உள்ளான். எல்லா வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும் போலவே, அவனுக்குத் தாய்மொழியான வங்காள மொழியையும் தந்தை மொழியான ஸ்பானிசையும் இப்போதிருந்தே கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
----

Saturday, February 2, 2008

மகாத்மா காந்தியும் மதச்சார்பின்மையும் - சிவ.வீர.வியட்நாம்

மகாத்மா காந்தி ஒரு மாபெரும் ஆளுமை. அவர் வலுவான மதநம்பிகை உடையவராக இருந்தாலும், மதப்பற்று, மதச்சார்பின்மை, மதவெறி - இவை மூன்றிற்கும் உள்ள வேறுபாடுகளை நன்கு உணர்ந்திருந்தார். மதம் பெண்களுக்கு விதித்த தேவையற்ற கட்டுபாடுகளையும், தீண்டாமையையும், சாதி அடக்குமுறைகளையும் வன்மையாக கண்டித்ததோடு மட்டுமல்லால்அவற்றிற்கெதிரான போராட்டத்தையும் மக்களிடையே கொண்டு சென்றார். சமூக வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களிலும் பகுத்தறிவை பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுகொண்டார். அகிம்சையின் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று நம்பினார். மகாத்மா காந்தி இறந்து 59 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் மகாத்மா காந்தி என்கிற அரசியல்வாதியையும் ஆளுமையையும் பற்றிய பல பரிமாணங்கள் மக்களுக்கு தெரியாமலேயே உள்ளன. மகாத்மா காந்தி நாத்திகர் அல்ல. மதப்பற்று இல்லாதவரும் அல்ல. தான் சார்ந்த மதத்தின் மீது அவருக்கு பற்று இருந்தது. கடவுள் பக்தி அதிகம் உடையவர். ஆனால் மதப்பற்றுக்கும், மதச்சார்பின்மைக்கும் உள்ள வேறுபாடுகளை நன்கு உணர்ந்தவர். மதவெறிக்கு எதிராக கடைசி வரை போராடியவர். மதச்சார்பின்மைக்காகவும் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் தன் இறுதி மூச்சுவரை போராடியவர் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உண்டு. ஆனால் மதவெறியர்கள் காந்தியின் மதநம்பிக்கையையும் அவரின் மதச்சார்பின்மையையும் தவறாக புரிந்து கொண்டு அவருக்கு எதிராகவே செயல்பட்டனர். மகாத்மா காந்தி எவ்வாறு மதநம்பிக்கையையும் மதச்சார்பின்மையையும் வேறுபடுத்தி காட்டினார் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

இந்தியாவிலும் வேறுசில நாடுகளிலும் மதச்சார்பின்மை நான்கு நெறிமுறைகளை வரையறை செய்யப்பட்டுள்ளது.1. மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி இவையனைத்திலும் மதம் ஊடுறுவல் செய்யக்கூடாது. 2. அரசு எல்லா மதங்களையும் நடுநிலையோடு பார்க்க வேண்டும். நாத்திகம் உட்பட எல்லா நம்பிக்கைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். 3. மதத்தின் அடிப்படையில் எந்தவொரு மனிதனையும் அரசு வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. மதத்தின் அடிப்படையில் எந்தவொரு சலுகையையும் அரசு விதிக்கக்கூடாது. 4. இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய தேசத்தை ஒருங்கிணைக்கவும் இந்திய மக்களை ஒன்றுபடுத்தவும் மதச்சார்பின்மை என்ற தத்துவம் கடைபிடிக்கப்பட்டது. மதச்சார்பின்மையின் மூலமே வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும். மதவெறி மக்களை பிளவுபடுத்தவும் பிரிவினைக்கும் வித்திட்டது. இந்த நான்கு நெறிமுறைகளையும் மகாத்மா காந்தி எவ்வாறு கடைபிடித்தார் என்பதை காண்போம்.

மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். 1942ம் ஆண்டு தன்னுடைய பத்திரிகையில் காந்தி பின்வருமாறு எழுதுகிறார். “மதத்தின் பெயரால் ஒருமனிதனை இன்னொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றில் மதம் ஊடுருவ கூடாது. வருவாய், காவல்துறை, நீதி, உணவு, ஆரோக்கியம், சுகாதாரம், பொது இடங்களில் பழகுதல் போன்றவற்றில் ஒரு இந்துவின் தேவையும் ஒரு முஸ்லிமின் தேவையும் எவ்வாறு வேறுபட முடியும்? யதார்த்த வாழ்கையில் எத்தனை தனி மனிதர்கள் உள்ளனரோ அத்தனை மதம் உள்ளது. ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய கல்வி, சிந்தனை, அறிவு - இவற்றின்மூலம் தன்னுடைய மதத்தை எந்த அளவிற்கு கடைபிடிக்கவேண்டும் எந்த கருத்துகளை ஏற்றுகொள்ளவேண்டும் என்று முடிவு செய்த பிறகே கடைபிடிக்கிறான். எனவே மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியலிலோ சமூகத்திலோ மதம் ஊடுருவ கூடாது.”எல்லா மதங்களும் அரசின் முன் சமமே:இரண்டாவது நெறிமுறையான “அரசு எல்லா மதங்களையும் நடுநிலையோடு பார்க்க வேண்டும். நாத்திகம் உட்பட எல்லா நம்பிக்கைகளையும் சமமாக பாவிக்க வேண்டும்,” என்ற வரையறையை மகாத்மா காந்தி 1931ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அடிப்படை உரிமைகளுக்கான கராச்சி தீர்மானமாக வெளியிட்டார். இந்த வரையறையைதான் அவர் சர்வதர்ம சம்பவ என்று அடிக்கடி குறிப்பிடுவார். எல்லா மதங்களை மட்டுமல்ல நாத்திகத்தையும் அவர் சமமாக பாவித்தார். “ஆத்திகர்கள் ‘கடவுள் உண்மையானவர் என்று நம்புகின்றனர்.’ நாத்திகர்கள் ‘உண்மையே கடவுள்’ என்று நம்புகின்றனர். ஆகையால் அவர்களுடைய நேர்மையை நான் மதிக்கிறேன்” என்றார் காந்தி. காந்தியின் நண்பர்களுள் ஒருவரான பேராசிரியர் கோரா என்பவர் நாத்திகர். அவருடைய மகளை ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கு நாத்திக முறைப்படி காந்தி தலைமையில் மணமுடிக்க விரும்பினார்.

மணமக்கள் உறுதிமொழி எடுக்கும்போது கடவுளின் பெயரால் அல்ல உண்மையின் பெயரால் இவ்விருவருக்கும் திருமணம் நடத்திவைக்க காந்தி ஒப்புகொண்டார். காந்திக்கு மிகப்பிரியமான இரண்டு நபர்கள் நாத்திகர்கள். மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலேவும் அரசியல் வாரிசான ஜவஹர்லால் நேருவும் நாத்திகர்களே.

மத அடிப்படையில் வேறுபாடின்மை:“சட்டத்தின் முன் அனைவரும் சமம். மதம், சாதி, இனம், பால் இவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடும் இந்தியாவில் கிடையாது. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மனசாட்சியின் படி நடந்துகொள்ளும் உரிமை வழங்கப்படும். தன் மனதிற்கு பிடித்த எந்த மதத்தையும் கடைபிடிக்கலாம் அல்லது மதப்பற்று அற்ற நாத்திகராகவும் இருக்கலாம்.” என்று கராச்சி தீர்மானத்தில் தெரிவித்தார் காந்திஜி.

மதச்சார்பின்மை ஒன்றுபடுத்தும் சக்தி; மதவெறி பிளவுபடுத்தும் சக்தி;1922ம் ஆண்டு “பேச்சு சுதந்திரமும் சங்கமிக்கும் சுதந்திரமும் மக்களின் அடிப்படை உரிமை. அதை பெற்றால்தான் நம்முடைய இலக்கை நோக்கி நாம் செல்லமுடியும்,” என்று கூறும் காந்தி 1936ம் ஆண்டு “பேச்சு சுதந்திரம் மதவெறியை மக்களிடையே தூவுவதாக இருக்கக்கூடாது. மதவெறி, இனவெறி, கெட்ட எண்ணம், தனிமனிதர்கள், மதங்கள், இனங்கள் இவற்றிக்டையே வெறுப்பை தூண்டும் பத்திரிகைகளை தடைசெய்யும் உரிமை எனக்கிருந்தால் அதனை உடனே செய்வேன். பேச்சு சுதந்திரம் என்பது மக்களின் மனதில் விஷத்தை தூவுவதற்காக அல்ல. சுதந்திர இந்தியாவில் இப்படிபட்ட பத்திரிகைகளுக்கு இடமளிக்க மாட்டோம் என்று கூறுகிறார்.

மதச்சார்பின்மையின் ஒவ்வொரு அங்கத்தையும் இவ்வாறு கடைபிடித்த காந்தியை ஏன் இந்து மதவெறியர்களும் முஸ்லிம் மதவெறியர்களும் வெறுத்தனர். மதநம்பிக்கையையும் மதச்சார்பின்மையையும் காந்தி எவ்வாறு வேறுபடுத்தி காட்டினார் என்ற தெளிவின்மைதான் இதற்கு காரணம். காந்தியைப் பொறுத்தவரை மதம் என்பது இந்துமதத்தையோ, முஸ்லிம் மதத்தையோ, புத்த மதத்தையோ குறிப்பிடுவது அல்ல. “மதம் என்பது அறம், நீதி, உண்மை, நேர்மை. பொது வாழ்கையில் ஈடுபடுபவர்கள் அறம், நீதி, உண்மை, நேர்மை, என்ற மதத்தை கடைபிடிக்கவேண்டும். ஏனென்றால் எல்லா மதங்களும் அறம், நீதி, உண்மை, நேர்மை - போன்றவற்றைதான் போதிக்கின்றன. மதம் என்பது தர்மம். நான் தர்மம் என்கிற மத நம்பிக்கை உடையவன். உண்மையும் அன்புமே கடவுள்கள். நேர்மையும் நெறிமுறையும் தான் கடவுள். மனசாட்சிதான் கடவுள். வீரம்தான் கடவுள் நம்பிக்கை. மதம் இல்லாமல் அரசியல் இல்லை. மதம் என்று நான் குறிப்பிடுவது ஒருவரை ஒருவர் வெறுக்கவும் ஒருவரோடு ஒருவர் சண்டையிடவும் வைக்கும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள் நிறைந்த மதம் அல்ல. எல்லோரையும் தன் அன்பால் அரவணைக்கும் சகிப்புதன்மை என்பதே மதம். அப்படிபட்ட சகிப்புத்தன்மை என்ற மதத்தின் பல்வேறு கிளைகள்தான் இந்துமதம், முஸ்லிம் மதம் புத்த மதம், கிறித்துவ மதம் போன்றவை. அப்படிபட்ட சகிப்புத்தன்மை என்ற நெறியே அரசு கடைபிடிக்கும் மதமாக இருக்கவேண்டும். ” என்று பல இடங்களில் 1922 முதல் 1942 வரை கூறியுள்ளார்.

இப்படி மதத்தையும் தர்மத்தையும் அவர் ஒன்றாக பாவித்தார். ஆனால்தர்மம்தான் காந்தி குறிப்பிடும் மதம் என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. பிரிவினைவாதமும் மதவெறியும் உச்சகட்டத்தில் இருந்த சமயத்தில் தன்னுடைய மதநம்பிக்கையை மக்கள் தவறாக புரிந்துகொண்டனர் என்பதை காந்தி உணர்ந்தார். எனவே 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து “மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றில் மதம் ஊடுருவ கூடாது,” என்று பேசவும் எழுதவும் ஆரம்பித்தார். கல்வியில் மதம் திணிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார். 1947ம் ஆண்டு ஜாஹிர் ஹூசேனிடம் பேசும்போது “மதத்தையும் கல்வியையும் ஒன்றுபடுத்தக்கூடாது. எந்தவிதமான மதபோதனையும் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்பட கூடாது. அதன் விளையு விபரீதமாக இருக்கும். மதம் என்பது தனிமனித விவகாரம். மத நிறுவனங்கள் தன் மதத்தை பற்றி தனிமனிதர்களுக்கு சொல்லிகொடுக்கட்டும். ஆனால் அரசு அந்த வேலையை செய்யக்கூடாது. தனிமனித மத நம்பிக்கையும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்காமல் இருக்கவேண்டும். எல்லா மதத்திற்கும் பொதுவான ஒழுக்க நெறிகளையும் சகிப்புத்தன்மையையும்தான் அரசு போதிக்கவேண்டும். ஏனென்றால் இந்தியா ஒரு மதச்சார்ப்ற்ற நாடாக இருக்கவேண்டும். அடிப்படை மதத்தையும் தர்மத்தையும் ஒன்றுபடுத்தாதீர்கள்.” என்றார். 1920களில் மதம் என்பது தர்மம்தான் என்று சொன்ன காந்தி 1947ல் மதத்தையும் தர்மத்தையும் ஒன்றுபடுத்தாதீர்கள் என்று ஏன் சொன்னார். காந்தி இப்படி மாறி மாறி மதத்தையும் தர்மத்தையும் குழப்பிகொண்டாரா என்ற கேள்விக்கு அவருடைய சுயசரிதை பதிலளிக்கிறது. “சத்தியத்தை நோக்கிய என்னுடைய தேடலில் நான் பல விஷயங்களை உணர்ந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய பல கருத்துகளை மாற்றிகொண்டிருக்கிறேன். நான் இப்பொழுது பேசும் வார்தைகள் முன் பேசியவைகளுக்கு முரணாக இருந்திருந்தால் நான் கடைசியாக சொன்னவைகளை எடுத்துகொள்ளவேண்டும். தனிமனிதனின் அறிவு பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டது. சத்தியத்தை நோக்கிய என்னுடைய தேடலில் என்னுடைய வார்த்தைகளையோ கருத்துக்களையோ மக்கள் புரிந்துகொள்ளவில்லையென்றால் மக்களால் புரிந்துகொள்ளக்கூடிய கருத்துக்களை நான் பரப்புவேன். நான் நல்ல மனநிலையில் உள்ளவன்தான், கிறுக்கன் அல்ல என்பதை நம்பினால், என்னுடைய அறிவு பரிமாணத்தை. அதன் பரிணாம வளர்ச்சியை புரிந்துகொள்ளுங்கள்,” என்று கூறுகிறார். மகாத்மாவின் இந்த சுயவிமர்சனம் அவருடைய மதம் குறித்த கோட்பாட்டை நமக்கு விளக்கும். 1920 களில் தனிப்பட்ட மனிதனின் மதம் என்பது தர்மம்தான் என்று போதித்தார். ஆனால் அந்த போதனை மக்களிடையே தவறாக சென்றிருக்கிறது என்பதை காந்திஉணர்ந்தார். மக்கள் மதம் என்றால் இந்து மதத்தையும் முஸ்லிம் மதத்தையும்தான் நினைக்கின்றனர். தர்மம்தான் மதம் என்பதை மக்கள் உணர்ந்திருந்தால் நாடு பிரிவினைக்கு உட்பட்டிருக்காது என்பதை புரிந்துகொண்டார். எனவே மதமும் தர்மமும் ஒன்றுதான் என்று பேசுவதையும் எழுதுவதையும் தன்னுடைய தனிநபர் நம்பிக்கையாக எடுத்துகொண்டு அரசியலிலும் கல்வியிலும் மதம் புகக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அதேபோல் மகாத்மாவின் பேச்சுக்கள் புராணங்களையும் இதிகாசங்களையும் உள்ளடக்கியிருந்தது. சுயராஜ்யம் இராம இராஜ்யமாக இருக்கவேண்டும் என்று மகாத்மாக காந்தி பேசுவார். இதனை பிரிவினைவாதிகள் மதவெறிக்கு ஆதரவாக திசைதிருப்பினர். இதற்கு பதிலளிக்கையில் “இராம இராஜ்யம் என்ற என்னுடை சொல்லை மதவெறிக்கு ஆதராக திசைதிருப்பிவிடும் நண்பர்களை நான் கண்டிக்கிறேன். இராம இராஜ்யம் என்று நான் குறிப்பிடுவது இந்துக்களின் இராஜ்யத்தை அல்ல. இராம இராஜ்யம் நல்லாட்சியின் முன்னுதாரணம். இராம இராஜ்யம் என்பது கடவுளின் இராஜ்யமாக இருக்கவேண்டும். உண்மை நேர்மை என்ற கடவுளின் இராஜ்யமாக இருக்கவேண்டும். எனக்கு இராமனும் ரஹிமும் ஒன்றுதான். நல்ல அரசாங்கம் என்பதை இராம இராஜ்யம் என்று சொன்னால் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். எல்லைபகுதிகளுக்கு செல்கையில் நான் அதனை குதாய் இராஜ்யம் என்று சொல்வேன். கிறித்துவர்களிடம் பேசுகையில் பூமியில் தேவன் நடத்தும் ஆட்சி என்று குறிப்பிடுவேன். நான் சந்தர்ப்பவாதியல்ல. இந்தியாவில் சாதி மதம் பேதமற்ற, இருப்போர் இல்லாதோர் போன்ற வேறுபாடுகளற்ற நீதி தவறாத பேச்சுரிமையும் வழிபாட்டுரிமையும் கொண்ட மக்களாட்சி மலரவேண்டும். அதுதான் கடவுளின் ஆட்சி. அதுதான் சுயராஜ்யம் என்ற கருத்தை மதச்சார்பற்று பரப்பவேண்டும். இதுவே என் நோக்கம்,” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மதவெறியர்கள் காந்தியை கடைசி வரைபுரிந்துகொள்ளவில்லை. மதச்சார்பின்மைக்கு ஆதரவாக தன்னுடைய கருத்துகளை விதைத்த காந்தி மதவெறியை முற்றிலும் எதிர்த்தார். எனவேதான் முஸ்லிம் மதவெறியர்கள் மட்டுமல்லாமல் இந்து மதவெறியர்களும் அவருடைய கருத்துகளை மக்களிடம் திரித்து கூறியுள்ளனர். மதவெறி ஒரு பிரிவினைசக்தி என்பதை நன்றாக புரிந்துகொண்ட காந்தியால் அவற்றை கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய முடியவில்லை. மதவெறியை அடக்குவதற்காக காந்தி மததலைவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் மதத்தலைவர்களின் செல்வாக்கை அதிகரித்தனவே தவிர மதவெறியை குறைக்கவில்லை. சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனை வெளியேற்றுவதற்காக அணி திரண்ட மக்கள் மதம் கடந்து ஒன்றுபடுவார்கள் என்று நம்பினார். பிரிவினையை தடுப்பதற்காக முகம்மது அலி ஜின்னா இந்தியாவின் பிரதமராக அரியணையேறட்டும் என்று முன்மொழிந்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் மதவெறியை கட்டுப்படுத்துவதற்கு தோற்று போனது. ஏனென்றால் மதவெறியும் ஒரு தத்துவம். அரசியல் பொருளாதார போராட்டங்கள் போல் மதவெறியும் ஒரு போராட்டம் மட்டுமே என்று எண்ணக்கூடாது. இதனை எதிர்ப்பதற்கு தத்துவார்த்த ரீதியான பதில் தேவை என்பதை காந்தி உணரவில்லை. மதவெறியை அடக்குவதற்கு நலப்பணித்திட்டங்களும் சலுகைகளும் அறிவிப்பதென்பது தற்காலிக பயனையே தரும். நிரந்தரமாக மதவெறியை ஒழிக்கவேண்டுமென்றால் மதவெறி என்பது தவறான தத்துவம் என்பதை உணர்த்தவேண்டும். இதனை தத்துவ போராட்டத்தின் மூலம்தான் செய்யமுடியும் என்பதை அக்கால தலைவர்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவேதான் நாடு மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபட்டது. இதனை காந்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடைசி வரை அதன் வேதனையும் விரக்தியும் காந்தியிடம் இருந்தன. காந்தியின் மதச்சார்பின்மையை பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே ஒரு இந்து மதவெறியனால் காந்தி சுட்டுகொல்லப்பட்டார். காந்தி மதச்சார்பின்மைக்காகவே தன்னுடைய உயிரை தியாகம் செய்தார். காந்தியின் மதச்சார்பின்மை இந்தியாவை மதச்சார்பற்ற அரசாக மாற்றியது. பிரிவினை, பிரிவினை சார்ந்த கலவரம் இவற்றிற்கு மத்தியிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் மதச்சார்பின்மையை தூக்கிபிடிக்க முடிந்தது. மதச்சார்பற்ற இந்தியராக வாழ்ந்து மதசகிப்புத்தன்மையை கடைபிடித்து எல்லா மதத்தை சேர்ந்தவர்களையும் இந்தியராக அரவணைத்து ஒற்றுமையாக வாழ்வதே மகாத்மாவிற்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்.
-----

Friday, February 1, 2008

பி. சாய்நாத்திற்கு மகாசேசே விருது - சிவ.வீர.வியட்நாம்


(அவருடைய வாழ்க்கை மென்மையானது; இயற்கையெழுந்து இந்த உலகத்தில் எல்லாரிடத்தும் சொல்லும், இவன்தான் மனிதன் என்று சொல்லக்கூடிய வகையில் இவருடைய குணாம்சங்கள் கலந்திருக்கின்றன. - ஜுலியஸ் சீஸர் நாடகத்தில் - வில்லியம் ஷேக்ஸ்பியர்)
2007ஆம் ஆண்டு இதழியல், இலக்கியம் மற்றும் தகவல்தொடர்புத் துறை தொடர்பான ரமான் மகாசேசே விருது, தி ஹிந்து நாளிதழின் கிராமப்புற விவகாரங்கள் துறைஆசிரியர் பி.சாய்நாத் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி மணிலாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும். இவ்விருதிற்கான காரணம் குறித்து, விருதிற்கான தேர்வுக் குழுவினர் கூறுகையில், “இந்திய மக்களின் மனத்தில் கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கையைப் பதிவு செய்வதைத் தன் பெரும் கடமையாகக் கருதி, செயல்பட்டுவரும் பத்திரிகையாளர். இவருடைய அறிக்கைகள், இந்திய அதிகாரிகளின் கவனத்தை சில பிரச்சனைகளின்பால் ஈர்க்கவும் அதற்கான நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் வைத்துள்ளன. அரசு சொல்வதைப் போல இந்தியாவின் மிக வறிய மாவட்டங்களின் துயர நிலை வறட்சியால் ஏற்பட்டதல்ல மாறாக நாட்டின் சமச்சீரற்றக் கட்டமைப்பு, வறுமை, எழுத்தறிவின்மை, சாதி பாகுபாடுகள், பொருளாதார சீர்திருத்தங்களால் ஏற்பட்ட வெளிநாட்டு முதலீடுகள், தனியார்மயம் இவற்றால் ஏற்பட்டதே என்பதைக் கண்டறிந்துள்ளார்.”
பி.சாய்நாத் இதழியல், இலக்கியம் மற்றும் தகவல்தொடர்பு துறையில் இந்த விருதைப்பெறும் ஆறாவது இந்தியப் பத்திரிகையாளர் ஆவார். 1984இல் ஆர். கே. இலட்சுமணன் இவ்விருதைப் பெற்ற பிறகு 23 ஆண்டுகள் கழித்து இவ்விருதைப் பெறும் இந்தியர் பி.சாய்நாத். 1957இல் சென்னையில் பிறந்த இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம். முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி.கிரியின் பேரன். கல்லுhரி மாணவராக இருக்கும்போதிருந்தே சமூகப் பிரச்சனைகள் குறித்த கண்ணோட்டம், தேடுதல் அவருக்கிருந்தது. இவர் தன்னுடைய முதுகலைப் பட்டத்திற்காக புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்ற போது மாணவர் இயக்கங்களில் தீவிர பங்கு பெற்றார். வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராக 1980ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கினார். இந்நிறுவனத்தில் வழங்கப்படும் தனிப்பட்ட மனிதருக்கு உயரிய விருது இவருக்கு வழங்கப் பட்டது. பின்னர் தெற்காசியாவின் முக்கிய பத்திரிக்கைகளில் ஒன்றான ‘பிளிட்ஸ்’ பத்திரிக்கையில் வெளிநாட்டு விவகாரங்கள் துறை ஆசிரியராகவும் அப்பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் பத்தாண்டுகள் பணிபுரிந்தார்.
1991ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இந்தியப் பத்திரிகைத் துறையின் கவனம் “செய்தி”க்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து மாறி “பொழுதுபோக்கு அம்சங்கள், நுகர்வோரியம், நகர்ப்புற மேல்மட்டு மக்களின் வாழ்க்கை முறை” போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தன. இந்திய வறுமையின் உண்மை நிலை என்ன வென்பதை மக்களுக்கு கொண்டு செல்வது பற்றி இந்தியப் பத்திரிகைகள் பொருட்படுத்தவில்லை. ஆனால் இந்த சூழ்நிலை பி.சாய்நாத்தின் தொழிலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. “மற்ற பத்திரிகைகள் மேல் மட்டத்திலுள்ள ஐந்து சதவீதத்தினரைப் பற்றி எழுதினால். நான் அடி மட்டத்திலுள்ள ஐந்து சதவீதத்தினரை பற்றி எழுத வேண்டும்” என்று முடிவு செய்தார் பி.சாய்நாத். இதன் விளைவாக 1993ஆம் ஆண்டு ‘பிளிட்ஸ்’ பத்திரிகையிலிருந்து வெளியில் வந்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வழங்கிய படிப்புதவி தொகைக்கு விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வின்போது தான் கிராமப்புறங்களைப் பற்றி எழுத விரும்புவதாக தெரிவித்தார். அப்பொழுது அப்பத்திரிகையின் ஆசிரியர், “இப்படிபட்ட செய்திகளில் எங்கள் வாசகர்களுக்கு ஆர்வமில்லை என்று நாங்கள் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்” என்று கேட்டார். அதற்கு பி.சாய்நாத், “நீங்கள் கடைசியாக உங்கள் வாசகரை எப்பொழுது சந்தித்தீர்க்ள்? அவர்கள் சார்பாக அவர்கள் என்ன விருப்பம் தெரிவித்தார்கள்?” என்று கேட்டார். இக்கேள்விக்கான பதிலாக அவருக்கு அவ்வுதவித்தொகை கிடைத்தது.
இவ்வுதவித் தொகையுடன், ஐந்து மாநிலங்களிலுள்ள மிக வறிய பத்து கிராமங்களுக்குச் சென்றார். இதற்காக அவர் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார். 16 விதமான போக்குவரத்து முறைகளை பின்பற்றியிருக்கிறார். நடந்தே ஐயாயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்றிருக்கிறார். மிக வறிய கிராமங்களில் மக்களின் வாழ்க்கைமுறை எப்படியுள்ளது, அவர்கள் எவ்வாறெல்லாம் அவதிப்படுகிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை நிலைக்கு அரசின் கொள்கைகள் எவ்வாறு காரணமாயிருக்கின்றன என்பனவற்றை ஆராய்ந்து தன் கட்டுரைகளில் எழுதினார்.
இவ்வனுபங்களைப் பற்றி அவர் நினைவு கூர்கையில், “இந்தக் கிராமங்களுக்குச் சென்ற பிறகுதான் பாரம்பரிய இதழியல், ஆட்சி - அதிகாரத்தில் இருப்பவர்கள் பற்றிய செய்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதையும், அது உண்மையான மக்களின் வாழ்க்கைமுறை பற்றிக் கண்டு கொள்ளவில்லை என்பதையும் உணர்ந்தேன். அந்நேரத்தில் எனக்கு இரண்டு பரிசுகள் கிடைத்தன. ஆனால் மக்களுக்காக நான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்ற உணர்வினால் வெட்கப்பட்டு இவ்விருதுகளை புறக்கணித்தேன்,” என்கிறார்.
இதழியல் துறையைப் பற்றி கூறுகையில், “20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் இதய நாடியாக பத்திரிகைகள் விளங்கின. மனிதனின் விடுதலைக்காக பத்திரிகைகள் மகத்தான பங்காற்றின. ஆனால் இன்று அரசாங்கத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கும் பெரு முதலாளிகளுக்கும் சேவகம் செய்யும் வெறும் சுருக்கெழுத்தாளர்கள்போல் பத்திரிகைகள் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் நெருக்கடிகள் வரும்போது, அது குறித்து பொதுமக்களுக்கும், அரசாங்கத்திற்கும் தெளிவினை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, நடிகர்களைப் பற்றியும், அழகு ராணிகளைப் பற்றியும், பங்குச் சந்தைகளைப் பற்றியும், தகவல் தொழில்நுட்பத்துறையின் மகோன்னதங்களைப்பற்றியும் எழுதி அதிக பக்கங்களை நிரப்புகின்றன. இன்றைய இதழியல் சாமானிய மக்களின் பிரச்சனைகைளைப் பற்றியோ சகமனிதர்களின் உணர்வுகளைப் பற்றியோ கவலைப்படாத வாசகர்களை உருவாக்குகிறது.
“ஆனால் இப்படிபட்ட பத்திரிகையாளர்களிடமிருந்து சாய்நாத் வேறுபட்டார். இதழியல் என்பது பங்குசந்தை பங்குதாரர்களுக்கானது அல்ல, மாறாக அது மக்களுக்கானது என்பதை உணர்ந்தார். பெரும்பான்மை பத்திரிகைகள் எண்ணியும் பாராத ஏழை மக்களையும் அவர்களுடைய கஷ்டங்களையும் மற்றவர்களுக்கு கொண்டு சென்றார். இந்தியாவில் கடனில் மூழ்கிய விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பு பற்றி பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இக்கட்டுரைகளை எந்தவிதமான புள்ளியியல் குறிப்பையும் வைத்து அவர் எழுத வில்லை. மகாராஷ்ட்ர மாநிலம் விதர்பா பகுதியிலும், ஆந்திராவிலும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் சிரமங்களைக் கட்டுரைகளாக எழுதி வாசகர்களுக்கு தெரிவித்தது மட்டுமல்லாமல், அரசின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
1997ஆம் ஆண்டு “எல்லோரும் விரும்புவது ஒரு நல்ல வறட்சியையே” ( Everybody loves a good drought) என்ற புத்தகத்தை வெளியிட்டு தன்னுடை கிராமப்புற அனுபங்களைத் தொகுத்துள்ளார். “கண்ணுக்குத் தெரியும் வேலை, கண்ணுக்குத் தெரியாத பெண்கள்” என்ற புகைப்படக் கண்காட்சியை இந்தியாவின் பல நகரங்களிலும், அமெரிக்கா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் நடத்தியுள்ளார். நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென், “ பஞ்சம், பசி பற்றி நன்கு அறிந்துள்ள உலக வல்லுநர்களில் ஒருவர் பி. சாய்நாத்” என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய கிராமப்புற பயணத்திற்காகவும் பயணச் செலவுகளுக்காகவும் பத்திரிகைகள் கொடுக்கும் தொகை போதவில்லையென்றால் தன்னுடைய தனிப்பட்ட வருமானத்திலிருந்தோ, சேமிப் பிலிருந்தோதான் செலவு செய்வார். பெரு முதலாளிகள் இவருக்கு அளிக்கும் உதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார். இவருடைய தற்போதையத் திட்டம் தலித்துகள் பற்றி எழுதுவதாகும். இதற்காக 15 மாநிலங்களை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். ஏற்கெனவே 10 மாநிலங்களையும் 1 லட்சத்து ஐம்பதாயிரம் கிலோ மீட்டர்கள் தொலையும் பயணம் செய்து முடித்துவிட்டார். இன்னும் ஐந்து மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். இவை மட்டுமல்லாது கிராமப்புற விவகாரங்களை புதிய கண்ணோட்டத்தோடு அணுகும் முறை , அவற்றிற்கான இதழியல் நுட்பங்கள் பற்றி பல இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். இவருடைய இதழியல் வகுப்புகள் நேரடியாக கிராமங்களிலேயே நடத்தப்படுகின்றன. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும் சமூக மாற்றத்தின் பிரதிநிதியாக இருக்கவும் இவருடைய மாணவர்களை ஊக்கமளித்து பயிற்றுவிக்கிறார். இப்படியொரு பத்திரிகையாளரைப் பெற்றதற்காக இந்தியா பெருமைப்படுகிறது. உண்மையான நாட்டுப்பற்று என்றால் என்னவென்பதைத் தன் எழுத்துக்கள் மூலம் மெய்ப்பித்துக்கொண்டிருக்கும் பி. சாய்நாத்திற்கு விருது வழங்கிய ரமான் மகாசேசே தேர்வுக் குழுவினருக்கு இந்தியா தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது..
.