Showing posts with label young political workers. Show all posts
Showing posts with label young political workers. Show all posts

Sunday, September 27, 2015

இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் வேண்டுகோள்




இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் வேண்டுகோள்
(1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான ஒருவிதமான வழிகாட்டியாகும். அப்போது நாட்டில் இருந்த நிலைமைகளைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து, இறுதியில் அவர் இளைஞர்களை, மக்கள் மத்தியில் வேலை செய்திட, தொழிலாளர்களை - விவசாயிகளை அணிதிரட்டிட, மார்க்சிய சிந்தனையைத் தழுவிட, கம்யூனி°ட் கட்சியைக் கட்டி வளர்த்திட அறிவுறுத்தினார். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபின், இந்த ஆவணம் மிகவும் சிதைக்கப்பட்ட வடிவத்தில் பிரசுரமானது. சோவியத் ஒன்றியம், மார்க்°, லெனின், கம்யூனி°ட் கட்சி போன்ற வார்த்தைகள் மிகவும் எச்சரிக்கையாக நீக்கப்பட்டிருந்தன. பின்னர், இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் (Martys’ Memorial and Freedom Struggle Research Centre at Lucknow) அதன் போட்டோ நகல் ஒன்று பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.)
பெறுநர்
இளம் அரசியல் ஊழியர்கள்.
அன்புத் தோழர்களே,
ஒரு புரட்சிக்காக நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய சக்திகளைப் பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எனினும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் செயல்முனைப்புள்ள ஆதரவைத் திரட்டுவதற்காக அவர்களை நாங்கள் அணுகுவோம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உணர்ச்சிகரமான பசப்பு வார்த்தைகள் எதற்கும் அவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
இப்பொழுது இரண்டு வெவ்வேறு கட்டங்களை நீங்கள் கடந்தாக வேண்டியுள்து. முதலாவது முன்னேற்பாடு, இரண்டாவது நேரடி நடவடிக்கை.
தற்போதைய போராட்டத்திற்குப் பிறகு நேர்மையான புரட்சிகரத் தொண்டர்கள் மத்தியில் வெறுப்பையும் அவநம்பிக்கையினையும் நீங்கள் காண்பீர்கள். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உணர்ச்சி வயப்படுதலை ஒதுக்கித் தள்ளுங்கள். நிகழ்வுகளை எதிர்கொள்வதற்குத் தயாராக இருங்கள். புரட்சி என்பது மிகவும் கடினமான பணி. புரட்சியை ஏற்படுத்துவது என்பது தனிநபர்கள் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது. அதனை முன்கூட்டியே குறித்து வைத்த தேதி ஏதேனுமொன்றில் கொண்டு வரவும் முடியாது. அது குறிப்பிட்ட சமுதாய-பொருளாதார சூழ்நிலைகளின் மூலமாகவே கொண்டுவரப்படும். இந்த சூழ்நிலைகளால் கொடுக்கப்படும் எந்தவகையான வாய்ப்பையும் பயன்படுத்துவதே ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் வேலை. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும் புரட்சிக்கான சக்திகளை ஒன்று திரட்டுவதும் மிகவும் கடினமான தொரு பணி.  அப்பணி, புரட்சிகர தொண்டர்களிடமிருந்து மாபெரும் தியாகத்தை வேண்டுகிறது. இதனை நான் தெளிவுபடுத்துகிறேன். நீங்கள் ஒரு வியாபாரியாகவோ இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர் அல்லது குடும்ப°தராகவோ இருந்தால் தயவு செய்து நெருப்போடு விளையாடாதீர்கள். ஒரு தலைவராக உங்களால் கட்சிக்கு ஒரு பயனும் இல்லை. சொற்பொழிவாற்றுவதற்காக சில மாலை நேரங்களை செலவிடும் இத்தகைய தலைவர்கள் நம்மிடத்தில் ஏற்கனவே நிறையப்பேர் இருக்கின்றனர். அவர்கள் பயனற்றவர்கள்.
நமக்குத் தேவையானவர்கள்- லெனினுக்கு பிடித்தமான வார்த்தையில் சொல்வதானால்- புரட்சியே தங்களது தொழிலாகக் கொண்ட முழுநேர புரட்சியாளர்களே (professional revolutionaries). புரட்சியைத்தவிர வேறெந்த இலட்சியமோ வாழ்நாட் பணியோ இல்லாத முழுநேரத் தொண்டர்கள். அத்தகைய தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கட்சிக்குள் சேர்க்கப்படுவது உங்களது வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். திட்டமிட்டுச் செயலாற்றுவதற்கு முக்கியமாக உங்களுக்குத் தேவைப்படுவது ஒரு கட்சி. அக்கட்சியானது மேலே விவாதிக்கப்பட்ட வகையினைச் சேர்ந்த தொண்டர்களை (அதாவது முழுநேர புரட்சியாளர்களை) கொண்டதாக இருக்க வேண்டும். அத்தொண்டர்கள், தெளிவான சிந்தனைகளும் கூரிய அறிவும் முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும் விரைந்து முடிவெடுக்கும் ஆற்றலும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
கட்சிக்குத் தேவைப்படுகின்ற தொண்டர்களை இளைஞர் இயக்கத்தின் மூலமாக மட்டுமே கொண்டு வர முடியும். ஆகவே இளைஞர் இயக்கத்தையே நமது செயல் திட்டத்தின் தொடக்கப் புள்ளியாக நாம் காண்கிறோம்.
தங்களது கருத்துக்களில் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் குறிக்கோளுக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக தம்மையே உணருபவர்களாகவும் இருக்கும் இளைஞர்களை (இளைஞர் இயக்கத்திலிருந்து) கட்சிக்குக் கொண்டு செல்லலாம். கட்சித் தொண்டர்கள் எப்போதும் இளைஞர் இயக்கத்தின் செயல்பாட்டையும் சேர்த்து வழிநடத்துபவர்களாகவும் கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். வெகுஜன பிரச்சாரப் பணியில் இருந்து கட்சியின் வேலை துவக்கப்பட வேண்டும். இது மிகவும் இன்றியமையாதது.
இவை நீங்கலாக, இராணுவத் துறை ஒன்று கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். இது மிக முக்கியமானதாகும். சில நேரங்களில் இதன் தேவையானது மிக அவசியமாக உணரப்படும். ஆனால் அந்நேரத்தில் அத்தகையதொரு அமைப்பை ஆற்றலுடன் செயல்படுவதற்குப் போதுமான வழிவகைகளுடன் உடனடியாக உங்களால் துவக்கவும் முறைப்படுத்தவும் முடியாது.
ஒருவேளை கவனமான விளக்கம் தேவைப்படக்கூடிய தலைப்பாகும் இது. இத்தலைப்பில் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது. வெளித்தோற்றத்திற்கு நான் ஒரு பயங்கரவாதியைப் போல் செயல்பட்டுள்ளேன். ஆனால் நான் பயங்கரவாதி அல்ல. இங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது போன்ற மிக நீண்டதொரு செயற்திட்டம் பற்றிய திட்டவட்டமான கொள்கைகளைக் கொண்ட புரட்சியாளன் நான், தண்டனைக் கைதிகளின் அறையில் ஏதோவொரு வகை பிற்போக்கிற்கு ஆளானதாக- அது உண்மையல்ல என்றாலும். "ஆயுதம் தாங்கியிருக்கும் என் தோழர்கள், ராம் பிரசாத் பி°மில்லை போல் என்னை குற்றம் சாட்டியிருக்கலாம். வெளியில் இருக்கும் போது வழக்கமாக நான் கொண்டிருந்ததைப் போன்றே, ஒருவேளை இன்னும் சொல்லப்போனால், சந்தேகத்திற்கிடமின்றி அதனினும் மேம்பட்ட நிலையில்- அதே கொள்கைகள், அதே உறுதியான பற்று, அதே விருப்பம் மற்றும் அதே உணர்வை நான் இப்போதும் கொண்டுள்ளேன். இதனால் எனது வார்த்தைகளை வாசிக்கும் போது கவனமுடன் இருக்குமாறு எனது வாசகர்களை எச்சரிக்கிறேன். அவர்கள் எனது எழுத்துகளுக்குப் புறம்பாக எதையும் ஊகித்தறிய முயற்சி செய்யக்கூடாது. எனது சக்தி அனைத்தையும் ஒன்றுகூட்டி உரக்க அறிவிக்கிறேன். நான் பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. அந்த முறைகளின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஹிந்து°தான் சோசலி°ட் ரிபப்ளிகள் அசோசியேசனின் வரலாற்றில் இருந்து ஒருவர் இதனை எளிதாக தீர்மானிக்கலாம். எங்களது செயல்பாடுகள் அனைத்தும் மாபெரும்(விடுதலை) இயக்கத்துடன், அதன் இராணுவப் படைப்பிரிவாக எங்களை நாங்களே ஒன்றிணைத்துக் கொள்ளும் இலக்கை நோக்கியதாகவே இருந்தன. எவரேனும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளட்டும். வெடிகுண்டுகளும் துப்பாக்கிகளும் பயனற்றவை என்று நான் சொல்லவில்லை. இன்னும் சரியாகச் சொன்னால் இதற்கு நேர்மாறாகவே நான் சொல்கிறேன். ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், வெறுமனே வெடிகுண்டுகளை மட்டும் வீசியெறிவதால் பயன் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, சில நேரங்களில் அது கேடுவிளைவிப்பதாகவும் இருந்து விடுகிறது.
கட்சியின் இராணுவத் துறையானது, எந்தவொரு அவசர காலத் தேவைக்கும் கிடைக்கக்கூடிய வகையில் அனைத்து போர்த் தளவாடங்களையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அது கட்சியின் அரசியல் வேலைக்கு பின்பலமாக இருக்கவேண்டும். அது தன்னிச்சையாக செயல்பட இயலாது, செயல்படவும் கூடாது.
மேலே சுட்டிக் காட்டப்பட்டதன் திசை வழியில் கட்சி, அதன் செயல்பாட்டைத் தொடர வேண்டும். பத்திரிகைகள் மூலமாகவும் மாநாடுகள் மூலமாகவும் தங்களது தொண்டர்களை எல்லா விவாதப் பொருள்பற்றியும் பயிற்றுவித்துக் கொண்டும் தப்பெண்ணங்களை அகற்றிக் கொண்டும் அவர்கள் செல்ல வேண்டும். இத்திசைவழியில் நீங்கள் செயல்பாட்டைத் துவக்கினால் மிகவும் பொறுமை காக்க வேண்டும். இச்செயல் திட்டம் நிறைவேறுவதற்கு குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் தேவைப்படலாம். ஒரு வருடத்தில் சுயராஜ்யம் என்ற காந்தியின் கற்பனாவாத வாக்குறுதியைப் போன்றே, பத்து ஆண்டுகளுக்குள் ஒரு புரட்சி என்ற உங்களின் இளமைக்குரிய கனவுகளையும் உதறித் தள்ளுங்கள். புரட்சி, உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம், துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது. முதலில் உங்களது தன்னலத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்கள் பற்றிய கனவுகளை உதறித் தள்ளுங்கள். அதன் பிறகு செயல்பாட்டைத் தொடங்குங்கள். படிப்படியாக நீங்கள் முன்செல்ல வேண்டும். இதற்கு துணிவும், விடாமுயற்சியும், கலைக்க முடியாத மனவுறுதியும்வேண்டும். எந்தத் துன்பங்களும் துயரங்களும் உங்களது தன்னம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது. எந்தத் தோல்வியும் துரோகங்களும் உங்களை மனம் தளரச் செய்துவிடக்கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகர மனநிலையை கொன்று விடக்கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றிகரமான மீண்டு வரவேண்டும். தனிநபர்கள் அடையும் இந்த வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்.
புரட்சி நீடூழி வாழ்க!
2 பிப்ரவரி 1931.
(இன்று (செப்டம்பர் 28)  பகத்சிங் பிறந்த தினம். சிலர் செப்டம்பர் 27 என்றும் குறிப்பிடுகிறார்கள்.)