Showing posts with label Rana Ayyub. Show all posts
Showing posts with label Rana Ayyub. Show all posts

Tuesday, September 6, 2016

குஜராத் கோப்புகள் 7 என் கவுண்ட்டர் அதிகாரியுடன் கிடைத்த அப்பாயின்ட்மென்ட்


ராணா அய்யூப்
மறுநாள் காலை நான் தொலைபேசியில் உரையாடத் திட்டமிட்டிருந்தவர் ஜி.எல். சிங்கால்.2004 ஜூன் 15ல் இஸ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை, இரண்டு அதிகாரிகளோடுசேர்ந்து சுட்டுக்கொன்றவர் அவர். அந்த என்கவுண்ட்டர் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் நியமித்திருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது விசாரணையை முடுக்கிவிட்டிருந்தது.என்கவுண்ட்டர் நடந்த மறுநாள் காலையில், காவல்துறை உயரதிகாரியும் பயங்கரவாத எதிர்ப்புநடவடிக்கைக் குழுவின் தலைவருமான டி.ஜி. வன்சாரா செய்தியாளர் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார்.
இஸ்ரத் ஜஹான் பயங்கரவாத இயக்கமான லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள், முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்காகஅனுப்பப்பட்டவள் என்று முத்திரை குத்தப்பட்டது.வன்சாரா ஒரே நாளில் ஒரு ‘ஹீரோ’ நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவருடன் இணைந்து இந்தப்பெருமையைப் பெற்ற மற்ற உயரதிகாரிகள் என்.கே. அமின், தருண் பேரட், கிரிஷ் லக்ஷ்மன் சிங்கால்ஆகியோராவர்.
நாட்டை உலுக்கிய அறிக்கை
இஸ்ரத்தின் பெற்றோர் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். உச்சநீதிமன்ற ஆணைப்படிகுஜராத் உயர்நீதிமன்றம் ஒரு நீதித்துறை குழுவை நியமித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி தமங் தலைமையிலான அந்தக் குழு 2008ல் அளித்த அறிக்கை நாட்டையே உலுக்கியது. "இஸ்ரத் ஜஹான்மீதான தாக்குதல் ஒரு போலி என்கவுண்ட்டர்" என்று கூறிய அந்த அறிக்கை, மேல் விசாரணைக்குப்பரிந்துரைத்தது. ஆனால் மாநில அரசு வழக்கைக் கிடப்பில் போட்டது.
இஸ்ரத் குடும்பத்தார் உயர்நீதிமன்றத்தைஅணுகினர். அதன் பின்னர்தான் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குழு அமைக்கப் பட்டது.2013ல் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்தியப் புலனாய்வுத் துறைக் குழு (சிபிஐ டீம்) புலனாய்வை மேற்கொண்டது. நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் போலியானது என்ற முடிவுக்கு வந்தசிபிஐ குழு, அதை நடத்திய உயரதிகாரிகளை குற்றம் சாட்டப்பட்டவர்களாகப் பட்டியலிட்டது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைப்படி அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) 2010ல் புலன் விசாரணையைத் தொடங்கியிருந்த நேரத்தில்தான் நான் சிங்காலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.சிங்கால் வீட்டில் தொலைபேசி ஒலித்தது. அவரே எடுத்துப் பேசினார்.
வெளிநாட்டவருக்கான ஆங்கிலத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அப்பாயிண்ட்மென்ட் கேட்டேன். சிறிது நேரம்மவுனமாக இருந்த அவர், வேறொரு நாளில் தொடர்பு கொள்ளுமாறு சொல்லிவிட்டு முடித்துக்கொண்டார். என்னுடைய உண்மையான புலனாய்வை இவரிடமிருந்துதான் தொடங்கத் திட்டமிட்டிருந்தேன். அவரோ இப்படிச் சொல்லிவிட்டார். என்ன செய்வது?
அழுத்தத்தை மறக்கடித்த கலைக்கூடம்
காலைப் பத்திரிகைகளில் சிங்காலை எஸ்ஐடி கைது செய்வது தவிர்க்க முடியாதது என்பதுபோல் செய்தி வந்திருந்தது. இத்தகைய பதற்றமான நிலையில் சிங்கால் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வழிகளைத்தான் யோசித்துக்கொண்டு இருப்பாரேயன்றி, வெளிநாட்டிலிருந்து வந்துள்ள ஒரு வெளிநாட்டு சினிமாக்காரருக்கு பேட்டியளிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார் என்பதுபுரிந்தது.
என்னோடு வரவேண்டிய வேலை எதுவும் இல்லை என்று நான் சொன்னதில் மகிழ்ச்சியடைந்தமைக், விடுதியிலிருந்த கிரீன்லாந்து நாட்டுப் பெண்ணும், நாங்கள் பானி என்று அழைத்தவளுமாகிய தனது தோழியுடன் வெளியே கிளம்பினான்.அன்று மாலை நான் கேமரா கலைஞனான நண்பன் அஜய் அழைத்திருந்தபடி, கலைக்கூடத்தில்அவனுடைய நண்பரின் புகைப்படக் கண்காட்சிக்குச் சென்றேன். அஜய் என்னை ஒவ்வொருவருக்கும்அறிமுகப்படுத்தினான். அவர்கள் என்னிடம் ‘உங்கள் படத்திற்கு கேமராவை இயக்குவது யார்’,‘என்ன கேமரா பயன்படுத்துகிறீர்கள்’ என்று கேட்டார்கள். இத்தகைய கேள்விகளை எதிர்பார்த்தேசென்றிருந்ததால் எல்லோருக்கும் அமைதியாகப் பதிலளித்தேன்.
கல்லூரி மாணவர்கள் குழு ஒன்றும் வந்திருந்தது. ஒருவன் கிட்டார் வாசித்துக்கொண்டிருந்தான். சிலர் தனித்தனியாகவும் சிலர் இணைகளாகவும் அமர்ந்திருந்தார்கள். கலைக்கூடத்தில் அந்தநேரத்தில் நான் எனது புலனாய்வு, காவல்துறை அதிகாரிகள், என்னுடைய சினிமா முகமூடி,எனக்குள் ஏற்பட்டிருந்த ஒருவித உதறல்..... அனைத்தையும் மறந்தேன். நானும் கலைத்துறை மாணவர்களில் ஒருத்தியானேன்.
எதிர்பாரா அழைப்பு
எனது குடும்பத்தாருடன் சில நாட்களாக எதுவுமே பேசவில்லை என்ற நினைப்பு வந்தது.விடுதிக்குப் பக்கத்தில் இருந்த இணையத் தொடர்பு மையத்திலிருந்துதான், அதுவும் எப்போதாவதுதான், அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்.
அமித் ஷா விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததிலிருந்தே அவர்களுக்கு என்னைப்பற்றிய கவலை கூடுதலாக இருந்தது.தனது வண்டியில் அழைத்து வந்த அஜய்யிடம், விடுதிக்கு அருகிலிருந்த வணிக வளாகத்தில்,சில பொருட்களை வாங்குவதற்காக இறக்கிவிடச் சொன்னேன். சில பொருள்களை வாங்கியபடி,அருகிலிருந்த பொதுத் தொலைபேசி நிலையத்திற்குள் சென்றேன். குடும்பத்தினருடன் தொடர்புகொள்ளப் பாதுகாப்பான இடம் அது.எனக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் அம்மாதான் முதலில் பேசினார்.
நான் விரைவில் திரும்பிவந்துவிட வேண்டுமென்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். குடும்பத்தாருடன் கூட தொடர்புகொள்ள முடியாமல், இது என்ன வாழ்க்கை என்ற சிந்தனை எனக்கும் ஏற்படவே செய்தது.அடுத்த நாள் காலையில் மீண்டும் சிங்காலுக்கு, எதிர்பார்ப்பின்றி, போன் செய்தேன். இம்முறைஅவர் தன்னைச் சந்திக்க வரலாம் என்றார். நடக்குமோ நடக்காதோ என்று மிரட்டிக் கொண்டிருந்த என் புலனாய்வுப் பயணம் தொடங்கியேவிட்டது.
(தொடரும்)



Sunday, September 4, 2016

குஜராத் கோப்புகள்-5 கொலைகளைத் தூண்டியவரின் கோட்டைக்குள் முதல் நுழைவு

ரானா அயூப்
கொலைகளைத் தூண்டியவரின் கோட்டைக்குள் முதல் நுழைவு
எனது நண்பரிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வந்தது. மகப்பேறு மருத்துவர் ஒருவரைப் பற்றிய தகவல்கள் அதில் இருந்தன - மேலிடத் தொடர்புகள் உள்ளவர்என்ற குறிப்புடன். அவரைத் தொடர்பு கொண்டு, மாநிலத்தின் மக்கள் நலவாழ்வு நிலவரம்பற்றிப் படமெடுக்க வந்திருப்பதாகத் தெரிவித்தேன். அவர் அன்று மாலை தனது மருத்துவமனைக்குவரலாம் என்றார். நன்றி தெரிவித்துவிட்டு, என் அறைக்கு நடந்தபோது மைக் வேகமாக வந்தான்.‘மைதிலி, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். இப்படியே என்னால் தொடர முடியாதென்றுநினைக்கிறேன். நாம் சந்திக்கிறவர்களிடம் உங்களை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, என்னை உங்களின் உதவியாளராக அறிமுகப்படுத்துகிறீர்கள். உங்கள் புலனாய்வின் உண்மை நோக்கத்தைஇப்போது நீங்கள் எனக்குச் சொல்லியாக வேண்டும்.’
உண்மையைச் சொல்லும் தருணம்
அவனுடைய விசாரணையை வழக்கம்போல், ‘நேரம் வரும்போது சொல்கிறேன்’ என்று சொல்லி ஒதுக்கிவிடத்தான் நினைத்தேன். ஆனால் இப்போது அவன் குரலில் ஒரு அழுத்தம் வெளிப்பட்டது. உண்மையை மறைப்பதால் ஏதோ தான் அவமானப் படுத்தப்படுவதாக எண்ணுகிறான். ‘நான் ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை. நான் நிறைய படிக்கிறேன். வாழ்க்கையில் ஏதேனும்சாதிக்கிற லட்சியத்துடன் வந்திருக்கிறேன். நீங்கள் என்னை நம்புகிறீர்களா? அல்லது உங்களுடையநோக்கத்திற்காக, மற்றவர்களுக்குக் காட்டுவதற்குக் கிடைத்த ஒரு வெளிநாட்டு முகமாக மட்டுமேபயன்படுத்தப் போகிறீர்களா?’என் உண்மையான புலனாய்வு என்ன என்பதை அவனிடம் சொல்லியாக வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தேன். அதைச் சொல்வதன் மூலம் அவனுடைய நம்பிக்கையைப் பெற முடிவுசெய்தேன். மடிக்கணினியிலிருந்து என்னுடைய முந்தைய சில கட்டுரைகளைஅவனுடையமின்னஞ்சல்முகவரிக்கு அனுப்பினேன். ‘நான் திரும்பி வருவதற்குள் இதையெல்லாம் படித்துவிடு மைக். பிறகு நிதானமாகப் பேசுவோம்.அப்போது என் நோக்கமும் பின்னணியும் உனக்குத்தெரிய வரும்,’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
மருத்துவரின் உதவி
செல்வாக்குள்ள அந்த மகப்பேறு மருத்துவரைச் சந்தித்தது மிகவும் பயனளித்தது. அவர் எனது ‘திரைப்பட முயற்சிக்கு’ உதவ ஆர்வத்துடன் முன்வந்தார். பேச்சோடு பேச்சாக அவரிடம்,மருத்துவத் துறையில் புகழ்பெற்ற பெண் யாரையாவது அறிமுகப்படுத்த முடியுமா என கேட்டேன். என் மனதில் இருந்தவர் மாயா கோட்னானி. குஜராத் சட்டமன்றத்திற்கு நரோடா தொகுதியிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2002 படுகொலைகளைத் தூண்டியவர்களில் ஒருவர்என, நேரடி சாட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டவர். மாநில அமைச்சராகவே ஆக்கப்பட்டவர்.மகப்பேறு மருத்துவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்ததும் அவர் என் முன்னிலையிலேயே, மாயா கோட்னானியையே தொலைபேசியில் அழைத்தார். ‘அமெரிக்காவில் குடியிருக்கிறஒரு பெண் படத்தயாரிப்பாளர் வந்திருக்கிறார். எனக்கு நன்றாகத் தெரிந்தவர். உங்களிடம் பேட்டிகாண விரும்புகிறார்...’ என்றார். மறுநாளே வரச்சொல்லுமாறு அவருக்கு பதில் வந்தது.என்னுடைய நடிப்பில் சந்தேகம் வந்துவிடக்கூடாது. ஆகவே அவரிடம் சுகாதார நிலைமை பற்றிசில கேள்விகள் கேட்டேன். தொடர்ந்து அவரிடமிருந்து நிறையத் தெரிந்துகொள்ள விரும்புவதாகக் கூற, அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புதல் அளித்தார்.விடுதிக்குத் திரும்பியபோது மைக் எனது கட்டுரைகளைப் படித்து முடித்திருந்தான். என்னிடம்கேட்பதற்காக நிறையக் கேள்விகளை எழுதி வைத்திருந்தான். அவன் `கிரிமினல்கள்’ என்றுகருதியவர்களைப் பற்றிய கேள்விகளும் இருந்தன. மாணவர் பகிர்வுத் திட்டத்தின் கீழ் தன்னுடையநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதற்குப் பொருத்தமானவனே என மெய்ப்பித்தான்.நான் சொன்னதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டான். சரியான முறையில்சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டான். நுட்பமான, சிக்கலான விசயங்களைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டான்.
முதல் சந்திப்புக்குத் திட்டம்
அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்துப் பேசினோம். திட்டமிட்டபடி நிகழ்வுகள்அமையவில்லை என்றால் நிலைமைக்கேற்ப உடனடியாகத் திட்டத்தை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றேன். ‘எப்போது புறப்பட வேண்டியிருக்கும், மைதிலி?’ ‘நாளையே! நம் உண்மைப்புலனாய்வுக்கானமுதல் சந்திப்பு இது. இதை சரியாக அமைத்துக்கொள்ளத் திட்டமிடுவோம்மைக்.’மறுநாள் மாயா கோட்னானியை சந்திப்பதே எங்கள் திட்டம். எடுத்த எடுப்பிலேயே தகவல்கள்எளிதாக வந்து கொட்டிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளராக நான் நன்கு அறிவேன். அப்படியே தகவல்கள் தாமாக வந்தாலும் கூட, நாம் நம் ஆர்வத்தைஅளவுக்கு மிஞ்சிக் காட்டிவிடலாகாது. இதனை மைக்கிடம் கூறி எச்சரித்தேன். ‘இன்று நாம்திரைப்படத் தயாரிப்பாளர்கள்தான். படமெடுப்பது மட்டுமே நம் தொழில்.’ மாயா கோட்னானியின் மருத்துவமனை நரோடா பகுதியின் மையச் சாலையில் இருந்தது.அந்த மருத்துவமனையிலிருந்து கல்லெறி தொலைவில்தான் நரோடா பாட்டியா படுகொலைகள் நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வெறியூட்டும் முழக்கங்களால் வன்முறைக் கும்பலை ஏவிவிட்டதே மாயா கோட்னானிதான் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. மைக்கும் நானும் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தபோது, மாயா கோட்னானியின் அறைக்கு வெளியே பல பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அறை வாயிலில் இரண்டு முரட்டு ஆட்கள் காவலுக்கு நின்றிருந்தார்கள். ஒரு ஆளின் கையில் துப்பாக்கி இருந்தது. அவர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினார்கள். தொலைபேசியில் தங்களது தலைவரிடம் பேசி உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதான் எங்களை உள்ளே அனுப்பினார்கள். (தொடரும்)


Saturday, September 3, 2016

குஜராத் கோப்புகள் 4 திரைப்பட நடிகரிடமே நடித்த காட்சி!


ராணா அய்யூப்
மாலை நேரங்களில் மைக்கும் நானும் எங்கள் கேமராக்களை எடுத்துக் கொண்டு பழைய நகரப் பகுதிக்கு சென்று படங்களாக எடுத்துக்கொண்டிருப்போம். புகைப்படக்கலை ஈடுபாட்டினால் மட்டுமல்ல, எங்களை கவனிக்கக்கூடியவர்களின் பார்வையில் நாங்கள் படமெடுக்கிற வேலையாகத்தான் வந்திருக்கிறோம் என்று பதிவாக வேண்டும் என்பதற்காகவும்தான். எங்களைப் பற்றி சொல்லிக்கொண்டதற்குப் பொருத்தமாக, திரைப்பட ஆர்வலர்களின் வட்டம் ஒன்றையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. புகழ்பெற்ற ஓவியர் எம்.எப். ஹுசேன் உருவாக்கிய ‘அம்தவாத் நி குஃபா’ என்ற கலைக்கூடம் எங்களுக்கு உறுதுணையானது. அங்குள்ள பூங்காவில் இளம் ஓவியர்களும், கேமரா கலைஞர்களும் சுற்றி வருவார்கள்.
திரைப்பட ஈடுபாடு உடையவர்கள், நாடக நடிகர்கள்முதலியோரும் நடமாடுகிற அந்த இடத்தின் மாலைப் பொழுதுகள் ஒரு மைதிலியாகவும் ஒரு மைக்காகவும் எங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்ல ஏதுவாக அமைந்தன. உயர்நிலை அதிகாரிகள் பலருடன் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. என்னிடமிருந்த பட்டியலில் முதலில் இருந்தவர் காவல்துறை உயரதிகாரி ஜி.எஸ். சிங்கால். குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் செயல்முறைத் தலைவராக நியமிக்கப்பட்டி ருந்தவர் அவர். இஸ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் வழக்கு விசாரணை அவர் மீதும் பாய்ந்திருந்தது. சக ஊடக நண்பர்கள் மூலம் கிடைத்த தகவல்களின்படி அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதையும், ஊடகவியலாளர்களைச் சந்திப்பதில்லை என்பதையும் அறிந்தேன். இப்படிப்பட்டவரை எப்படி நெருங்குவது?
குஜராத்தின் அமிதாப்
நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தபோது சமூகப்பணியாளரான ஒரு நண்பரிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் குஜராத்திய திரைப்பட நடிகர்கள் நரேஷ் கனோடியா, அவருடையமகன் ஹிட்டு கனோடியா பற்றிய விவரங்கள் இருந்தன. நரேஷ் கனோடியா, குஜராத்தின் அமிதாப்பச்சன்என்ற அடைமொழி பெற்றவர். ஹிட்டு இந்திப்பட வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தாலும், குஜராத் திரைப்படத்துறையில் தந்தையின் வழியைப் பின்பற்றத் தீர்மானித்திருந்தவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான சிங்காலுடனும் வேறு பல உயரதிகாரிகளுடனும் நல்ல தொடர்பு உண்டு என்று அந்த மின்னஞ்சல் தெரிவித்தது.
இந்தத் தகவலால் உந்தப்பட்டவளாக நான் நரேஷ் கனோடியா வைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவர் மறுநாள் காலை ஜிம்கானா மன்றத்திற்குவந்து பார்க்குமாறு அழைத்தார். அவருடன் என்ன பேச வேண்டும் என்று ஆங்கிலத்தில் தயாரித்துப்பலமுறை ஒத்திகை பார்த்துக்கொண்டு சென்றேன். நான் பேசியதை முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் கேட்டுக்கொண்டிருந்த அவர் கண்ணாடிப் பக்கம் திரும்பி தலைவாரிக் கொண்டே, ‘‘சகோதரி, இந்தியில் பேசு, இல்லையென்றால் ஆங்கிலத்தில் மெதுவாகப் பேசு.
இவ்வளவு வேகமாகப் பேசினால் எனக்குப் புரியாதம்மா,’’ என்றார். நான் என் ஒத்திகையை முறையாகச் செய்யவில்லை என்பது தெளிவானது! அடுத்த ஒரு மணி நேரம், நான் எடுக்கவுள்ள படத்தின் கருப்பொருளை அவரிடம் விளக்கினேன். குஜராத் குறித்துவெளியுலகம் அறியாதவற்றை என் படத்தில் சொல்ல விரும்புவதாகக் கூறினேன். குஜராத்தி திரைப்படம் குறித்தும் பிற்படுத்தப்பட்டவர்கள் எப்படி முன்னேறியிருக்கிறார்கள் என்பது பற்றியும்காட்ட விரும்புகிறேன் என்றேன். இப்போதுதான் அவர் கண்களில் ஆர்வம் ஒளிர்ந்தது.
கிராமத்தில் ஒரு சண்டைக்காட்சி
அடுத்த நாள் ஒரு கிராமத்தில் நடக்கவிருந்த படப்பிடிப்புக்கு வரச்சொன்னார். சண்டைக்காட்சியில் அவர் நடிப்பதைப் பார்க்கலாம் என்றார். விடுதிக்குத் திரும்பிய பின் எனது பயிற்சிகள் வீணாகிக் கொண்டிருக்கிறதோ என்ற கவலையில் மூழ்கினேன். ஆனா லும், நான் மேற்கொண்டிருக்கிற பணி ஆபத்தானது. இதைத் தவிர வேறு வழியில்லை.காலையில் கையில் கேமராவுடன் என் அறையிலிருந்து வெளியே வந்தபோது, மைக் என்னை நிறுத்தினான். ‘‘உங்களுடைய கேமராவில் லென்ஸ்களைக் காணவில்லை பாருங்கள்,’’ என்றான்.என் புது அவதாரத்திற்கு இன்னமும் நான் முழுவதுமாகப் பழக்கப்படாதிருந்தது தெரியவந்தது.
கிராமத்தில் படத்திற்கான ‘செட்’ போடப்பட்டிருந்தது. படப்பிடிப்பைக் காண ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தார்கள். கனோடியாவின் மகன் ஹிட்டுவும் அங்கிருந்தார், ஒரு கைதியின் உடையில். தந்தை ஒரு காவலர் உடையில் இருந்தார். நான் நடப்பவற்றைக் குறித்துக்கொண்டும், கேமராவில் படமெடுத்துக்கொண்டும் இருந்தேன். அங்கே வேறொரு இளைஞரும் தன்னுடைய கேமராவில் சண்டைக் காட்சிகளைப்பதிவு செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் அஜய் பஞ்ச்வானி (மாற்றப்பட்ட பெயர்) என்றும்ஆவணப்பட இயக்குநர் என்றும் கனோடியா எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் எங்களிடம் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
படமெடுப்பதிலேயே கவனம் செலுத்தினார். ஆயினும் நாட்கள் செல்லச் செல்ல எங்களிடையே ஒரு நட்பு வளர்ந்தது.இப்படியாகக் காலம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் ஒருநாள் கனோடியாவிடம், என் படத் திற்காக குஜராத் காவல்துறை உயரதிகாரிகளில் சிலரைப் பார்க்க வேண்டுமென்ற என் விருப்பத்தைக்கூறினேன். அந்த அதிகாரி ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக, வீர சாகசங்களில்ஈடுபட்டவராக, குறிப்பாகப் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன்.
இந்த வார்த்தைகள் பலனளித்தன. ‘‘நீ மிஸ்டர்சிங்காலை சந்திக்க வேண்டும்மா. மிகத் திறமையான அதிகாரி. பல பயங்கரவாதிகளைத் தீர்த்துக்கட்டியவர்,’’ என்றார் கனோடியா. என் உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கட்டுப் படுத்திக்கொண்டு, சிங்கால் பற்றி அப்போதுதான் கேள்விப்படுவது போல அவரைப் பற்றிய விவரங்களை இவரிடமிருந்து கேட்டுக் குறித்துக்கொள்ளலானேன். சந்திக்கவிருக்கும் அதிகாரிகளுக்கு என்னைப்பற்றி எவ்வித சந்தேகமும் ஏற்படாம லிருக்க இப்படிப்பட்ட திரைப்படத்துறையினரின் அறிமுகக் கடிதங்கள் எனக்கு உதவின. குஜராத்தி மொழியில் திரைப்படம் எடுக்கிற நட்சத்திரம் ஒருவரிடமிருந்து வரும் சிபாரிசை சிங்கால் எப்படி சந்தேகிப்பார்?
(தொடரும்)


Thursday, September 1, 2016

குஜராத் கோப்புகள் 2 தொடங்கிய முயற்சியும் துணைசேர்ந்த முகமூடியும்




எங்கள் ஊடகத்தின் மூத்த சகாக்கள் ஆழமாக விசாரணையை மேற்கொள்ள ஊக்குவித்தார்கள். அதிகார பீடங்களில் அமர்ந்திருந்தவர்களிடமிருந்து உண்மையை வெளிக்கொணர்வது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்திருந்தேன். 2002 கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களிடம் பேட்டிஎடுப்பதைத் தவிர்க்க முடிவு செய்தேன்.
அவர்களை ஏவிய காவல்துறை உயரதிகாரிகளையே சந்திக்க விரும்பினேன். பழம் தின்று கொட்டை போட்டவர்களான அந்த அதிகாரிகள் இந்திய உளவு நிறுவமான ‘ரா’ உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புள்ளவர்கள். அந்த முரட்டுத் தோல் அதிகாரிகளைப் பேச வைக்க மதிநுட்பம் வாய்ந்த புலனாய்வாளராகச் செயல்படும் திறன் தேவைப்பட்டது. அதற்காகத் திட்டமிடுவதும் நிறைவேற்றுவதும் முழுக்க என்னையே சார்ந்திருந்தது. உதவிக்காக எங்கள் அலுவலகத்திலிருந்துஇளநிலைப் பணியாளர் எவரையும் அழைத்துக் கொள்ள முடியாது.
அது மேற்கொண்டுள்ள பணிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். என் கட்டுரைகளை அனுப்பும் ஒவ்வொரு முறையும்,பத்திரிகையின் ஆசிரியர்கள் ஷோம சவுத்திரி, தருண் தேஜ்பால் இருவரும் ‘‘அற்புதம்... தொடர்க...’’, ‘‘திடுக்கிடும் விவரங்கள்’’ என்றெல்லாம் பதிலனுப்பி ஊக்குவித்தார்கள்தான். அதே வேளையில் இந்தப் போர்க்களத்தில் நான் ஒருத்தி மட்டுமே தனித்து நின்று வாள் சுழற்றும் நிலையில் இருந்தேன். என்னைத் தற்காத்துக் கொண்டே, எனது புலனாய்வு முடிவுகள் உண்மையின் அடிப்படையில் அமைவதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.2002ல் ரத்த ஆறு ஓடிய சமயத்தில் பணியிலிருந்த நேர்மையான அதிகாரிகள் பலர் அந்த அக்கிரமங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளாமல் ஒதுங்கியிருந்தது எனக்குத் தெரியும். அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் உதவ முடியுமென்று நான் அவர்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டியபோதெல்லாம் அவை இறுக மூடப்பட்டன. எனக்கிருந்த ஒரே வழி, உண்மையைக் கண்டறிவதற்காக ஒரு பத்திரிகையாளர் கடைசியாகக் கடைப்பிடிக்கும் உத்திதான் - மாறுவேடம் பூணுவது. நான் 26 வயதுப் பெண்.
அதுவும் ஒரு முஸ்லிம். இந்த அடையாளங்கள் குறித்து அதுவரை நான் பொருட்படுத்தியதில்லை. ஆனால், மதவாத அடிப்படையில் வெறித்தனமாக செயல்படுவோர் மிகுந்திருக்கிற ஒரு மாநிலத்தில், இத்தகைய ஒரு புலனாய்வுத் திட்டத்தை பகுத்தறிவுடன் வகுக்க வேண்டியவளானேன். என்னுடன் கல்லூரியில் படித்தவர்களில் சிலர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தார்கள். இன்றைய புகழ்பெற்ற கதாநாயகி ரிச்சா சத்தா என் வகுப்புத் தோழி. அவர் ஒரு நேர்காணலில், தான் ஒரு படத்தில் செய்தியாளராக நடிப்பதாகவும், அதற்காகஎன்னை ஒரு முன்மாதிரியாகத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார். அதேபோன்று மற்றொரு நடிகரும் எனக்கு நெருக்கமானவர். அவருடைய உதவியுடன், நான் அவரது ஒப்பனைக் கலைஞரைச் சந்தித்தேன்.
மும்பை புறநகரில் இருந்த ஸ்டுடியோ ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டே, சரியான முறையில் செயற்கை கூந்தல் (விக்) வைத்துக் கொள்வதற்கான நுட்பங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கைதேர்ந்த அந்த ஒப்பனைக்கலைஞர் கொடுத்த விக்குகள் என்னை மாற்றிக் காண்பித்தன என்றாலும் அது அன்றாடவாழ்க்கையில் பொருந்தி வராது என்று கண்டறிந்தேன். எனவே விக் அணியும் யோசனையைக் கைவிட்டு வேறு அடையாளத்தை உருவாக்குவது பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்.மின்னஞ்சலில் வந்த ஒரு தகவல் அருமையான யோசனையைத் தந்தது. என்னோடு படித்தவர் ஒருவர்அனுப்பிய அந்த மின்னஞ்சலில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற அமெரிக்கன் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
‘யுரேகா’ என்று கத்த வேண்டும் போல இருந்தது. எனக்கொரு அடையாளம் கிடைத்துவிட்டது! அந்தக் கல்லூரியில் பயில்கிற இளம் இயக்குநர் நான்! குஜராத் பற்றியும் மோடி பற்றியும் ஒரு ஆவணத் திரைப்படம் தயாரிக்கப் போகிறேன்!அடுத்த சில நாட்கள் அந்தக் கல்லூரி தொடர்பான தகவல்களை ஆராய்ந்தேன். அதன் பழைய மாணவர்கள், அங்கு தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், இன்ன பிற விவரங்களைத் தேடிப் படித்தேன்.இப்போது எனக்கொரு புதிய பெயரையே நான் சூட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் பெயர் இயல்பானதாக, பழம்பெருமை பேசக்கூடியதாக, ஏற்கத்தக்கதாக, வலுவானதாக இருக்க வேண்டும்.
எனது சினிமா பைத்தியம் இதற்கு உதவியது. தில்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தபோது நான் பார்த்த படம் ‘லஜ்ஜா’ -ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் மாதுரி தீட்சித், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்த அந்தப் படத்தின் சிறப்பு, பெண்களின் வலுவான பாத்திரப்படைப்பு. மைதிலி என்ற, சாதிய ஒடுக்குமுறைகளையும் ஆணாதிக்கக் கொடுமைகளையும் எதிர்கொண்ட பெண்ணாக நடித்திருந்தார் மனிஷா. மைதிலி என்பது ராமனின் மனைவி சீதையின் மற்றொரு பெயர். பிராமணராகவோ தலித்தாகவோ காட்டாத பொதுவான பெயரில், `மைதிலி தியாகி’ பிறந்தாள். ‘மைதிலி தியாகி, தன்னார்வத் திரைப்பட இயக்குநர், அமெரிக்கன் திரைப்படக் கல்லூரி’ என்று விசிட்டிங் கார்டு அச்சிட்டேன்.அடுத்து ஒரு திறமையான உதவியாளர் தேவைப்பட்டபோது, என் வாழ்க்கையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவனாக வந்தான் மைக் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது).
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக் இந்திய-பிரெஞ்சு மாணவர் பகிர்வுத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வந்திருந்தான். இந்திய ஊடகவியலாளர்களோடு பணியாற்றிக் கற்றுக்கொள்ள விரும்பிய அவனுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டேன். எனது புலனாய்வு பற்றிய முழு விவரங்களைத் துல்லியமாக அவனுக்கு நான் தெரிவிக்கவில்லை என்றாலும், சாத்தியமான அளவுக்கு அவனிடம் எனது திட்டம் குறித்து நேர்மையாகச் சொல்லிவிடுவது என முடிவு செய்தேன். என்னுடன் பணி செய்வது போல் நடிப்பதற்கு இந்தியரல்லாத ஒருவர் தேவைப்படுகிறார் என்றும், நான் மேற்கொண்டிருக்கிற மிக முக்கியமான புலனாய்வுத் திட்டத்தின் ஒரு பகுதி இது என்றும் அவனிடம் தெரிவித்தேன். ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டவனிடம், பணியின்போது சிக்கலான கேள்விகளைக் கேட்டு சங்கடத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்றேன். என் புதிய அடையாளத்தின் அங்கீகாரத்துக்கு அவன் ஒரு முகமூடி - அவ்வளவுதான்.
(தொடரும்)



Saturday, May 28, 2016

‘நேற்று எப்படியோ தப்பிவிட்டேன், ஆனால் இன்று அநேகமாக முடியாது என்றே தெரிகிறது,’’: குஜராத் கோப்புகள் --ரானா அய்யுப்



‘‘நேற்று எப்படியோ தப்பிவிட்டேன், ஆனால் இன்று அநேகமாக முடியாது என்றே தெரிகிறது,’’: குஜராத் கோப்புகள்
--ரானா அய்யுப்
(தெஹல்கா ஏட்டின் ஆசிரியராக இருந்த திருமதி ரானா அய்யுப், குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட விவரங்கள்’’ என்று மோடியின் குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளின்போது நடைபெற்ற சம்பவங்களை நினைவுகூர்ந்து ஒரு நூல் எழுதி இப்போது வெளியாகி இருக்கிறது. ரானா அய்யுப், அப்போது குஜராத் அரசாங்கத்தின் உள்துறை செயலாளராக இந்த அசோக் நாராயணன் என்பரைப் பேட்டி கண்டு, அதனை ரகசியமாக ஒலிப்பதிவுசெய்து அதனை இந்த நூலில் வெளியிட்டிருக்கிறார். அது தொடர்பான அம்சங்கள் வருமாறு:)
நான் அவரைப் பார்க்கச் சென்ற சமயத்தில், மதிய உணவு தயாராய் இருந்தது. அன்றைய தினம் நான் அவரிடம் உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவருக்கிருந்த மிகமுக்கியமான கடமைகள் குறித்து அவரிடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.  எனவே சூழலை மிகவும் இயல்பானதாக அமைத்துக்கொண்டு பேட்டியைத் தொடர விரும்பினேன். நாராயணன் எவ்வித சங்கடமுமின்றி மிகவும் இயல்பாகப் பேசினார்.
உணவு அருந்தியபின் அருந்தும் தேநீருக்காக நாங்கள் அமர்ந்திருந்தசமயத்தில், நரேந்திர மோடி கலவரங்களை எப்படிக் கையாண்டார் என்ற விவரங்களைக் கூறத் தொடங்கினார்.  அப்போது நான் அவரிடம், உங்களுக்குத் தெரியுமா மிஸ்டர் நாராயணன்? கடந்த ஒரு வாரமாக உங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, கூகுள் தேடு பொறியில், நான் தேடியபோது, உங்கள் பெயர் குஜராத் கலவரங்கள், மோடி மற்றும் ஏராளமான ஆணையங்கள் குறித்த இணைப்புகளைக் காட்டின.  அது எனக்கு மிகுந்த சங்கடத்தை அளித்தது.  இப்போதுள்ள சூழல் உங்களுக்கு மிகவும் சங்கடத்தைத் தந்திருக்கும். மிகவும் உயர்ந்த கொள்கையுடனும், மிகவும் மனிதாபிமானத்துடனும் இருக்கும் உங்களுக்கு எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்துதான் என்னால் பார்க்க முடிந்தது.’’
இவ்வாறு எங்கள் உரையாடல் துவங்கியது.
கேள்வி: கலவரத்தைக் கட்டுப்படுத்திட மிகவும் மெதுவாகப் போகுமாறு முதல்வர் (மோடி) உங்களைக் கேட்டுக்கொண்டபோது, உங்கள் முகம் சிவந்திருக்க வேண்டும்.’’
பதில்: எப்போதுமே அவர் அவ்வாறு செய்ததில்லை.  அதேபோல் எழுத்துபூர்வமாக எப்போதும் அவர் கேட்டுக்கொண்டதுமில்லை. அவருக்கு ஆட்கள் இருந்தார்கள். அவர்களும், விசுவ இந்து பரிசத் மூலமாகவும் கீழே பணிபுரியும் காவல்துறை ஆய்வாளர்கள் வரை அவர்கள் கட்டளையிடுவதை செய்வதற்கு ஆட்கள் இருந்தார்கள்.
கேள்வி: அப்படியென்றால், நீங்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தீர்களா?
பதில்: நிச்சயமாக.  ஏன் இவ்வாறு நடக்கிறது?’’ என்று நாங்கள் கேட்போம். ஆனால் உண்மையில் எங்களையும் மீறி ஏற்கனவே எல்லாமும் நடக்கத் துவங்கிவிட்டன.
கேள்வி:  விசாரணைக் குழுக்களுக்கான சான்று எதுவும் இல்லையா?
பதில்: பல சமயங்களில், அமைச்சர்கள் வீதிகளில் நின்று கொண்டு, கூட்டத்தினருக்குக் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்கள். நான் முதல்வர் (மோடியின்)  அறையில் உட்கார்ந்திருந்தபோது  அதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்தது. எங்களுக்கு ஓர் அழைப்பு வந்தது. நான்,   ஓர் அமைச்சர் இதனைச் செய்து கொண்டிருப்பதாக அவரிடம் (மோடியிடம்) தெரிவித்தேன்.  ஆகையால் அவர், அவரை திரும்ப அழைத்தார்.
கேள்வி: அவர் ஒரு பாஜக அமைச்சரா?
பதில்: ஆம், அவருடைய அமைச்சர்தான், இளைஞர்.
கேள்வி: அங்கே மாயா கோட்னானியும் இருந்தாரா? அவர் அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்பியிருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
பதில்: ஆம், அவரும் இருந்திருக்க வேண்டும்.
கேள்வி: அது பைத்தியக்காரத்தனமாக இருந்ததா?
பதில்: நான் சிலவற்றை உங்களிடம் சொல்கிறேன். முஸ்லீம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை எனக்குத் தெரியும். அவர் என்னை அழைத்தார். அவர் என்னிடம், ஐயா, என்னைக் காப்பாற்றுங்கள், என் வீடு சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது.’’ நான் போலீஸ் கமிஷனரைக் கூப்பிட்டேன். ... அவர் அந்த அழைப்பை எடுத்தாரா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.  அவர் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். அடுத்த நாள் அந்த அதிகாரி என்னை அழைத்தார் ஐயா, எப்படியோ நேற்று நான் காப்பாற்றப்பட்டு விட்டேன். ஆனால் இன்று அநேகமாக முடியாது என்றே தெரிகிறது,’’ என்றார்.
எனவே, நான் போலீஸ் கமிஷனரை மீண்டும் அழைத்தேன். அந்த அதிகாரியைக் காப்பாற்றுங்கள் என்று நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன். பதினைந்து நாட்கள் கழித்து, அந்த அதிகாரி என் அறைக்குள் நடந்து வந்தார். ஐயா, அந்தக் கதைதான். காலனியில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள். முஸ்லீம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் என்னிடம் மேலும் கூறினார். நீங்கள் போலீசாரை அழைத்தபோது, போலீசார் அங்கே வந்துவிட்டார்கள், ஓர் அமைச்சர் அந்தக் கும்பலுக்கு தலைமை தாங்கி கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்.  போலீஸ் அதிகாரி அந்த அமைச்சருக்கு ‘சல்யூட்’ அடித்தார். அவரும் போலீஸ் அதிகாரியைப் பார்த்தார்.  அவர்களிடம் எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது என்றார். பின்னர் எப்படியோ ஒரு போலீஸ் அதிகாரி என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னைக் காப்பாற்றினார்.’’
கேள்வி: அந்த அமைச்சர் கைது செய்யப்பட்டாரா?
பதில்: அனைவருமே வெளியேதான் இருக்கிறார்கள். ஆனால் சிலராவது ஏதாவது செய்ய வேண்டும். யாராவது சாட்சி சொல்லவில்லை என்றால், எப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்?
கேள்வி: யாருக்கும் அதைச் செய்வதற்கான தைரியம் இல்லையா?
பதில்:  யாருக்கும் அதைச் செய்வதற்கான தைரியம் இல்லை.
கேள்வி: அமைச்சர்களுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பது? 
பதில்: நான் ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லணும். ஒரு தடவை விஜிலன்ஸ் கமிஷனராக இருந்தேன். அது உள்துறை அமைச்சர் பதவிக்கு இணையான பதவிதான்.  அமைச்சர்களுக்கு எதிராக புகார் வந்தால் விசாரிப்பதற்காக லோகாயுக்தா என்னும் அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறது அல்லவா? அதுபோன்ற அமைப்பு. ஆனால் யாரும் அமைச்சர்களுக்கு எதிராக புகார் எதுவும் கொடுக்கவில்லை.  லஞ்சம், ஊழல் குறித்தே அமைச்சர்களுக்கு எதிராக புகார் அளிக்க மக்கள் முன்வராதபோது, கலவரத்தைத் தூண்டும் அமைச்சர்கள் குறித்து புகார் அளிக்க எப்படி அவர்களுக்குத் தைரியம் வரும்? அவர்களாக முன்வந்த சொல்லாதவரை, என்ன செய்ய முடியும்? மேலும் இந்தப் பேர்வழிகள் கலவரத்தைத் தூண்டுவதற்கு என்று சில சங்கேத பாஷைகளை பயன்படுத்துகிறார்கள். தொலைபேசியில், அந்த ஏரியாவில் கலவரம் எதுவும் நடைபெறவில்லை, பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று வந்தால், அந்த ஏரியாவில் கலவரத்தைத் தூண்டுங்கள்,’’ என்று அர்த்தம். அவர்கள் தாங்களாகவே எதையும் செய்வது இல்லை, அவர்களுக்குக் கீழ் பல அடுக்குகளில் ஏஜண்டுகள் இருக்கிறார்கள்.  அடுத்து முதல் தகவல் அறிக்கையை கலவரத்தை நடத்திய கும்பலுக்கு எதிராகத்தான் பதிவு செய்யப்படுகின்றன. ஒரு கும்பலை எப்படிக் கைது செய்ய முடியும்?
கேள்வி:  கலவரங்களைக் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையங்கள் எந்த விதத்திலும் உதவிகரமாக இல்லையா?
பதில்: நானாவதி கமிஷன் என்ற ஒன்று இருந்தது. அதனால் இதுவரை எவ்விதமான அறிக்கையும் அதனால் கொடுக்க முடியவில்லை.
நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, எழுத்துபூர்வமாக உத்தரவு வந்தாலன்றி எதுவும் நடக்கக்கூடாது என்று கட்டளை பிறப்பித்திருந்தேன்.  பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது தலைமைச் செயலாளர் சுப்பாராவ் என்னை அழைத்தார். விசுவ இந்து பரிசத் தலைவர் பிரவீண் தொகாடியா ஊர்வலம் நடத்த அனுமதி வேண்டும் என்கிறார், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றார். நான், அவ்வாறு அனுமதி தரக்கூடாது, ஏனெனில் விஷயங்கள் நம் கையைவிட்டுப் போய்விடும்,’’ என்றேன்.
இது குறித்து  முதல்வருக்குத் தெரிய வந்திருக்கிறது. அவர், என்னிடம், எப்படி நீங்கள் இவ்வாறு கூறமுடியும்? அவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்,’’ என்றார். அப்போது நான், ஓ.கே., எனக்கு எழுத்துபூர்வமாக கட்டளை பிறப்பியுங்கள்,’’ என்றேன். அவர் (மோடி) என்னை முறைத்துப் பார்த்தார்.
கேள்வி: எனவே, நீங்கள் அந்தக் கூட்டத்தில் இல்லையா?
பதில்: எந்தக் கூட்டத்தில்?
கேள்வி: கலவரங்களைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் மந்தமாக நடவடிக்கை எடுங்கள் என்று முதல்வர் அதிகாரிகள் மத்தியில் கேட்டுக்கொண்டதாக ஒரு பிரச்சனைக்குரிய கூட்டம் நடந்ததாகக் கூறுகிறார்களே, அந்தக் கூட்டத்தில்?
பதில்: ஆம், ஆம். நானும் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். இதுதொடர்பாக இல்லை என்று முன்பு உங்களிடம் சொன்னேன். 
கேள்வி: ஆனால், முதல்வர் ஏன் இப்படி நடந்து கொண்டார்? பாஜகவில் இருப்பதுதான் காரணமா?
பதில்: கலவரங்களின்போது விசுவ இந்து பரிசத்தை அவர் ஆதரித்ததற்குக் காரணம், இந்து வாக்குகள் தேவை என்பதற்காகவே அவர் இதை செய்தார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினாரோ அதை அவர் செய்தார். அது நடந்தது.
கேள்வி:ஆனால் அவர் மெதுவாகப் போங்கள் என்று கேட்டுக்கொண்டாரே?
பதில்: கூட்டத்தில் அவர் அப்படி சொல்லவில்லை. ஆனால் அவருடைய ஆட்களுக்கு சொல்லி இருப்பார். விசுவ இந்து பரிசத் மற்றும் டாண்டன் மற்றும் சில அதிகாரிகளுக்கும் சொல்லி இருப்பார்.  ஓர் அதிகாரி என்ற முறையில் அவர்கள் கிழித்த கோட்டின்படிதான் செல்ல வேண்டும்.
கேள்வி: ஆனால், டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ்-ஆக இருந்த சக்ரவர்த்தி அவர்கள் கிழித்த கோட்டின்படி செல்ல வில்லையே?
பதில்: நாங்கள் இரண்டு பேர் மட்டும்தான் அப்படி இருந்தோம். நாங்கள் எங்கள் கடமையைச் செய்தோம். நான் வேலையில் சேர்ந்தபோது, மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேனே ஒழிய, ஆளும் கட்சிக்கு சேவை செய்ய அல்ல,’’ என்று நான் அவர்களிடம் கூறினேன்.
கேள்வி: மற்றவர்கள் ஏன் உங்களைப்போல் நடந்து கொள்ளவில்லை.
பதில்: ஏனெனில் அவர்கள் எப்படியாவது காலத்தை ஓட்ட வேண்டியிருந்தது. அவர்களுக்கு என்று சில கடமைகள் இருந்தன.  அதனால் அவர்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. சக்ரவர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குப்பிறகு அவருக்குப் பதவி உயர்வே கிடையாது. அயல்நாடுகளுக்கு அவர் அனுப்பப்படவில்லை. எனினும் தன் மனசாட்சிப்படி அவர் நடந்து கொண்டார்.
கேள்வி: மோடி நடத்திய அந்தப் பிரச்சனைக்குரிய கூட்டம் குறித்து வெளியில் உள்ள மக்களுக்கு எப்படித் தெரிய வந்தது?
பதில்: ஹரேன் பாண்ட்யா என்ற ஓர் அமைச்சர். அவர்தான் இது குறித்து பத்திரிகைகளிடம் சொன்ன முதல் ஆள்.
கேள்வி: அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் யார், யார்?
பதில்: தலைமை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல் துறைத் தலைவர், அதிகாரிகள்.
குஜராத் கலவரங்களின்போது மாநில நிர்வாகம் எந்த அளவிற்கு உடந்தையாக இருந்தது என்பது சாமானிய மக்கள்கூட தெரிந்துகொள்ளும் விதத்தில் மேற்படி கூட்டத்தின் உரையாடல்கள் இருந்தன.
***                 ***                 ***
அசோக் நாராயணன் என்னிடம் சொல்லிய விஷயங்கள் அனைத்தும் நம்மில் பலருக்கு ஏற்கனவே தெரிந்தவைதான். ஆனால் இவற்றை இதுவரை அதிகாரிகள் யாரும் அதிகாரபூர்வமாக சொல்லியது இல்லை. 
அவர் பேட்டி அளித்த சமயத்தில் அவர் எந்த சமயத்திலும் உண்மையான விவரங்களுடன் கதைகளை ஜோடிக்க அவர் முயற்சிக்கவில்லை.
அசோக் நாராயணன்: பாஜகவின் கட்டளைப்படி விசுவ இந்து பரிசத் பந்திற்கு அழைப்பு விடுத்தது. அப்படித்தான் அது தொடங்கியது.
கேள்வி: இதனைச் சமாளிப்பது உங்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இல்லையா?
பதில்: ஆம்.
கேள்வி: மோடியின் மதிப்பு அப்போது எப்படி இருந்தது?
பதில்: அவரைக் கும்பிட்டனர், சனாதன இந்துக்கள் அவர்தான் கொடியைப் பிடித்திருப்பதாக நம்பினார்கள்.
கேள்வி: அவர் ஒரு தரப்பினருக்கு மட்டுமே செயல்பட்டதாக அது அமைந்திடவில்லையா?
பதில்: அவர் கோத்ரா நிகழ்வுகளுக்காக மன்னிப்பு கோரி இருக்க முடியும், கலவரங்கள் நடந்ததற்கு மன்னிப்பு கோரி இருக்க முடியும்.
கேள்வி: கோத்ராவில் இறந்தவர்களின் சடலங்களை தலைநகருக்குக் கொண்டு வந்தது, முடிவுகளில் எடுப்பதில் தாமதித்தது போன்ற செயல்களில் ஈடுபட்டு கலவரத்தை அதிகப்படுத்தும்விதத்தில் மக்களைத் தூண்டினார் என்றும் இவ்வாறு மோடி ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார் என்றும் எனக்குக் கூறப்பட்டிருக்கிறது.
பதில்: அகமதாபாத்திற்கு சடலங்களைக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு எடுத்தது அவர்தான் என்று நான் ஓர் அறிக்கை கொடுத்திருந்தேன்.
கேள்வி: அப்படியானால் ஆட்சியாளர்கள் உங்களுக்கு எதிராக இருந்திருக்க வேண்டுமே?
பதில்: இதோ பாருங்கள், சடலங்கள் அனைத்தையும் அகமதாபாத்திற்குக் கொண்டுவந்ததுதான் அனைத்துப் பிரச்சனைகளும் கொழுந்துவிட்டெரிய காரணமாகும். இந்த முடிவை எடுத்தது அவர்தான்.
நன்றி: தி ஒயர், இணைய இதழ்.
தமிழில்: ச. வீரமணி.