Showing posts with label Gujarat files. Show all posts
Showing posts with label Gujarat files. Show all posts

Saturday, September 10, 2016

குஜராத் கோப்புகள் 11 பயன்படுத்திய பின் பதுங்கிக்கொண்ட அரசாங்கம்


ராணா அய்யூப்
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குழு பொறுப்பதிகாரி ஜி.எல். சிங்கால் என்னுடன் பேசப்பேச மேலும் பல உண்மைகளை வெளிப்படுத்தினார்.
கேள்வி: உங்கள் சீனியர் ஒரு தலித், இல்லையா?
பதில்: இல்லை. ஆனால் நான் அவர்களுக்குத் தவிர்க்க முடியாதவனாக இருந்தேன். அவர்களுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டேன். பல சமயங்களில் ஒரு கான்ஸ்டபிள் செய்யக்கூடியவேலைக்குக்கூட என்னை அனுப்புவார்கள்.
கேள்வி: நீங்களும் ஏதோ சில பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறீர்களாமே?
பதில்: 2004ல் நான்கு பேரை என்கவுண்ட்டர் செய்தோம். அவர்களில் இரண்டு பேர் பாகிஸ்தானியர்கள், இரண்டு பேர் மும்பையிலிருந்து வந்தவர்கள். அவர்களில் ஒரு பெண்ணும் உண்டு - இஸ்ரத் ஜஹான். நாடறிந்த வழக்காகிவிட்டது அது. அது உண்மையான என்கவுண்ட்டர்தானா என்று கண்டறிய உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
கேள்வி: அது போலி என்கவுண்ட்டரா? அதில் நீங்கள் ஏன் வருகிறீர்கள்?
பதில்: சில சிக்கலான பிரச்சனைகளை மாறுபட்ட முறையில்தான் கையாள வேண்டியிருக்கும். 9/11க்குப் பின் அமெரிக்கா என்ன செய்தது? சந்தேகத்துக்குரியவர்களை குவாண்டனாமோ முகாமில் வைத்து சித்ரவதை செய்யவில்லையா? எல்லோரும் அல்ல, ஒரு பத்து சதவீதம்பேர் சித்ரவதைக்கு உள்ளானார்கள். அவர்களில் எந்தக் குற்றமும் செய்யாதவர்களும் இருக்கத்தான்செய்தார்கள். ஆனாலும் தேசத்தைக் காப்பதற்காக அதைச் செய்ய வேண்டியதாகிறது.
கேள்வி: அந்த என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் பயங்கரவாதிகளா?
பதில்: ஆம்.
கேள்வி: அந்தப் பெண்ணுமா?
பதில்: இதோ பாருங்கள், அந்த நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவர் பயங்கரவாதியாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஒரு முகமூடியாகக் கூட பயன்படுத்தப்பட்டிருக்கலாம்...
கேள்வி: இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வன்சாரா, பாண்டியன், அமின், பர்மர்ஆகியோரும், வேறு சில அதிகாரிகளும் கீழடுக்கு சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்களே? அரசாங்கம் இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு பிறகு கைகழுவி விட்டுவிட்டது என்பதாகத்தான் இது இருக்கிறதா?
பதில்: நாங்கள் எல்லோருமே அப்படித்தான். அரசாங்கம் இப்படி நினைத்துச் செய்யவில்லைதான். ஆனால், அவர்கள் என்ன சொன்னாலும் நாங்கள் அதற்குக் கட்டுப்பட்டு, அவர்களின்தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு அரசு ஊழியர் என்ன செய்தாலும் அரசாங்கத்திற்காகத்தான் செய்கிறார். ஆனால்அதன் பிறகு அரசாங்கமும் சமுதாயமும் அவரை அங்கீகரிப்பதில்லை. வன்சாரா இந்த அரசாங்கத்திற்காக என்னவெல்லாம் செய்தார்! ஆனால் யாரும் அவர் பக்கம் நிற்கவில்லையே...
கேள்வி: உங்கள் ஆட்கள் அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருப்போரின் கட்டளைப்படிதானே செயல்பட்டார்கள்? ஆனால், அவர்களை ஏன் இவர்கள் காப்பாற்றவில்லை?
பதில்: இந்த அமைப்புடன் ஒத்துப்போக வேண்டும் என்றால் சமரசம் செய்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
கேள்வி: ஆனால் பிரியதர்சி அரசாங்கத்திற்கு நெருக்கமானவராக இருக்கவில்லையே...
பதில்: அவர் அரசாங்கத்திற்கு நெருக்கமானவராகத்தான் இருந்தார். ஆனால், ஏதேனும் தப்பான செயலைச் செய்யச் சொன்னால் மறுத்து விடுவார்.
கேள்வி: அவரையும் பாண்டியனையும் ஒரு என்கவுண்ட்டரில் ஈடுபட அரசாங்கம் சொன்னதாகவும், தான் அதைச் செய்ய முடியாதென மறுத்துவிட்டதாகவும் பிரியதர்சி என்னிடம் கூறினார்.
பதில்: பாண்டியனும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
கேள்வி:: அவர் எப்படி உள்துறை அமைச்சருக்கு (அமித் ஷா) நெருக்கமானவரானார்?
பதில்: ஏடிஎஸ் பொறுப்புக்கு வருவதற்கு முன் அவர் உளவுத் துறையில் இருந்தார்.
கேள்வி: முதலமைச்சரும் உள்துறை அமைச்சரும் தங்களுக்கு வேண்டிய சில செயல்களைச் செய்ய வைத்தார்கள் என்று எனக்குத் தெரிகிறது...
பதில்: சில விஷயங்கள் நம் கைகளில் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் இந்த அமைப்புக்காகச் செயல்பட்டோம்.
கேள்வி: நீங்கள் இப்போதும் கண்காணிக்கப்படுகிறீர்களா, அல்லது உங்கள் வழக்கு முடிந்துவிட்டதா?
பதில்: வழக்கு சுறுசுறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.
கேள்வி: அரசாங்கம் உங்களுக்கு உதவுகிறதா, இல்லையா?
பதில்: அதிகாரத்தில் காங்கிரஸ் இருந்தாலும் சரி, பாஜக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகள் என்றால் அரசியல் கட்சிகள்தான். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் முதலில் தங்கள் நலன்களைக் காப்பாற்றிக்கொள்ளவே முயல்வார்கள். எங்களுடைய வழக்கில் உதவுகிறார்கள்தான். ஆனாலும் தங்களுக்கு எதுவும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.
எங்கள் என்கவுண்ட்டர் வழக்குகளை விசாரிப்பவர்கள் யார் என்று பாருங்களேன். கர்னாயில் சிங், தில்லியில் ஸ்பெஷல் செல் காவல்துறை இணை ஆணையராக இருந்தவர். அவருடைய பதவிக்காலத்தில் நாற்பத்து நான்கு என்கவுண்ட்டர்கள் நடந்திருக்கின்றன. அவர்தான் இப்போது எங்களை விசாரிக்கிற எஸ்ஐடி தலைவர். அடுத்து, சதிஷ் வர்மா. தன்னை மனித உரிமைகளுக்காக நிற்கிற ஒரு சுத்தமான ஆள் என்று காட்டிக்கொள்கிறவர். அவர் பத்து என்கவுண்ட்டர்களைச் செய்திருக்கிறார்.
கேள்வி: இதற்கு என்னதான் முடிவு?
பதில்:பொறுத்திருந்து பார்ப்போம், எதுவும் வெளியில் வராது.
(தொடரும்)


Friday, September 9, 2016

குஜராத் கோப்புகள் 10 உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட உரையாடல்


ராணா அய்யூப்
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழு பொறுப்பதிகாரி சிங்கால் ஒரு சிகரெட்டைப்பற்ற வைத்துக்கொண்டு என் கேள்விகளுக்குத் தயாரானார். அந்த உரையாடல் அவரதுசிக்கலான வாழ்க்கையையும், அவரது மனப்போக்கு உருவாகியிருந்த விதத்தையும் அறிந்துகொள்ளஉதவியது.
பதில்கள் பூடகமாகவே இருந்தன என்றாலும் அவருடைய நீண்ட அமைதியும், கூர்மையான பார்வையும், மேசையில் தன் விரல்களால் தட்டிக்கொண்டிருந்த விதமும் எண்ணற்ற பக்கங்களைக் கூறின. எச்சரிக்கையாகப் பேசுவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, என்னிடமிருந்து தீங்கு எதுவும் வராது நம்பியதாலோ என்னவோ மனம்திறந்து பேசினார்.
‘சார், உங்களை உங்கள் வீட்டில் குடும்பத்தாருடன் சந்திக்க விரும்புகிறேன், என்றேன்.‘வேண்டாம் ப்ளீஸ். அவர்கள் ஏற்கெனவே சங்கடத்துடன் இருக்கிறார்கள். என் என்கவுண்ட்டர்கள்அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
வீட்டிற்கு அருகே போலீஸ் வண்டி வரக்கூடாது, தூரத்திலேயே நிறுத்திவிட்டு வரச் சொல்லுங்கள் என்கிறார்கள்,’ என்றார்.
ஒப்புதல் வாக்குமூலம்
நான் இந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த பின்னாட்களில், அவர் சிபிஐ-யால் கைதுசெய்யப்பட்டு, இஸ்ரத் ஜஹான் என்கவுண்ட்டரில் தன்னுடைய பங்கு குறித்து ஒப்புதல் வாக்குமூலம்அளித்திருந்தார். அந்த என்கவுண்ட்டரில் மாநிலத்தின் வேறு பல அதிகாரிகளும் உடந்தையாகஇருந்ததை அவருடைய வாக்குமூலங்கள் வெளிப்படுத்தின.
சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில், இஸ்ரத் ஒரு லஸ்கர்-இ-தொய்பா ஆள் அல்ல என்றும், அவர்மீதான என்கவுண்ட்டர் போலியானதுஎன்றும் குறிப்பிட்டிருந்தது.சிங்காலின் மூத்த மகன் ஹர்டிக், தனது தந்தையைப் பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வந்ததன் பின்னணியில் மனம் நொந்து 2013ல் தற்கொலை செய்துகொண்டார். ஹர்டிக் மேல் மிகுந்தபாசம் கொண்டிருந்தவர் சிங்கால். மகனின் அகால மரணத்திற்குப்பிறகுதான் அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தார்கள்.அந்த நண்பர்களிடமிருந்து வந்த கடைசித் தகவல்:
அவர் பதவி விலகிவிட்டார். அரசாங்கம்வற்புறுத்தியும் தனது முடிவை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார். சிபிஐ-யிடம் சிங்கால், தான் அப்ரூவராக மாற விரும்பவில்லை என்றும், தன்மீது இரக்கம் காட்ட வேண்டியதில்லை என்றும்,வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களைப் போலவே தன்னிடமும் விசாரணையை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார். இந்த மாறுபட்ட வேண்டுகோள், என்னை 2010 டிசம்பரில் எங்களுக்கிடையே நடந்த உரையாடலுக்கு இழுத்துச் சென்றது.
வேடிக்கையான சூழ்நிலை
ஜி.எல். சிங்காலுடன் ஒரு திரைப்பட இயக்குநராக நான் நடத்திய அந்த உரையாடலிலிருந்து:
கேள்வி: குஜராத் காவல்துறையினர் குறித்து ஏராளமானவைகள் அடிபடுகிறதே?
பதில்: இது ஒரு வேடிக்கையான சூழ்நிலை. எங்களிடம் ஏதாவது புகாருடன் வரக்கூடிய ஒருவருக்கு மனநிறைவாக நாங்கள் செயல்பட்டோம் என்றால் அது அரசாங்கத்தை நிலைகுலையச்செய்ததாகிவிடும். நாங்கள் அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்து கொண்டால், புகார்தாரர்நிலைகுலைந்து போவார். போலீஸ்காரர்களாகிய நாங்கள் இப்படித்தான் இடையில் சிக்கியிருக்கிறோம்.
கேள்வி: என்கவுண்ட்டர் அதிகாரிகளில் பெரும்பாலோர் கீழடுக்கு சாதிகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் இன்றைய அரசியல் அமைப்பில் பயன்படுத்தப்பட்டுவிட்டு பின்னர் கைவிடப்பட்டார்களா?
பதில்: ஆம், அவர்கள் எல்லோரும் போலீசில்தான் இருக்கிறார்கள். அதிகாரம் மிகுந்ததுறை இது.
மதவாதியாக காவல் அதிகாரி
கேள்வி: கலவரங்கள் மாநிலத்தைப் பாதித்தது எப்படி?
பதில்: நான் இங்கே 1998லிருந்து பணியில் இருந்து வருகிறேன். எண்ணற்ற கலவரங்களைப் பார்த்திருக்கிறேன். 1982, 1983, 1985, 1987 ஆகிய ஆண்டுகளிலும் கலவரங்களைப் பார்த்திருக்கிறேன். அயோத்தி சம்பவத்திற்குப் பிந்தைய 1992 கலவரத்தையும்பார்த்திருக்கிறேன். 2002ல் நிறைய முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு முன் முஸ்லிம்கள்தான் இந்துக்களைக்கொன்றார்கள். எனவே 2002ல் என்ன நடந்திருந்தாலும், அது இத்தனை ஆண்டு கால முஸ்லிம்களின் தாக்குதல்களுக்குப் பழி வாங்குவதாகவே இருந்தது. வெளி உலகில் இருப்பவர்கள்தான் கூச்சல் போட்டார்கள். இந்துக்கள் கொல்லப்பட்ட சூழ்நிலையை அவர்கள் பார்க்கவில்லை.
கேள்வி: நீங்கள் சொன்னபடி, தலித்தாகிய முன்னாள் அதிகாரி ராஜன் பிரியதர்சியை நான் சந்தித்தேன்.
பதில்: எல்லா அதிகாரிகளுடனும் நான் பணியாற்றியிருக்கிறேன். அவரைப் போல ஓர் அற்புதமான அதிகாரியாக என்னால் வேறு யாரையும் பார்க்க முடியவில்லை. எவருக்கும் வளைந்துகொடுக்காத நேர்மையான அதிகாரி அவர்.
கேள்வி: அவர் என்னுடன் பேசியபோது, தான் அனுசரித்துப்போக அரசாங்கம் விரும்பியதாகவும், ஆனால் தான் ஒருபோதும் அதற்குத் தயாராக இல்லை என்றும்கூறினார்...
பதில்: ஒருதடவை நீங்கள் அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொண்டு விட்டீர்கள் என்றால்,பின்னர் நீங்கள் எல்லாவற்றுடனும் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்...
சாதியால் மறுக்கப்பட்ட பதவி உயர்வுகள்
கேள்வி: ஆனால் ஆட்சியாளர்கள் உங்களை ஆதரிக்கத்தானே செய்தார்கள்?
பதில்: இல்லவே இல்லை. நான் ஒரு தலித். ஆனால் பிராமணனைப்போல ஒவ்வொன்றை யும் என்னால் செய்ய முடியும். என் மதத்தைப் பற்றி அவர்களை விட எனக்கு அதிகமாகவே தெரியும்.ஆனால் ஜனங்கள் இதனை உணரவில்லை. ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தது என் தவறா?
கேள்வி: உரிய பதவி உயர்வுகள் உங்களுக்கு வழங்கப்படவில்லை, அதற்கு உங்கள் சாதிதான்காரணம் என்று சொல்லப்படுகிறதே.
பதில்:ஆம். எல்லா மாநிலங்களிலும் இருப்பது போலத்தான் இங்கேயும். பிராமணர்களோ சத்திரியர்களோ தங்களுடைய ஜூனியராக, தலித்தையோ, பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களை யோ வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
(தொடரும்)


Thursday, September 8, 2016

குஜராத் கோப்புகள் 9 அதிகாரப்பூர்வமற்ற நேர்காணலுக்கு ஒரு பாடம்


ராணா அய்யூப்
நான் மைக்கை சிங்காலுக்கு அறிமுகப்படுத்தினேன். அவனை அவர் பிரச்சனையின்றி ஏற்றுக்கொண்டதாகவே தோன்றியது. வெளிநாட்டவரின் ஆங்கில உச்சரிப்பில் அவரிடம் நாங்கள் வந்ததன் நோக்கத்தை விளக்கினேன். சிங்கால் அவ்வப்போது தலையை ஆட்டியபடி ஒவ்வொரு சொல்லையும் கவனித்துக் கேட்டார்.அவர் கவனத்தை மேலும் கவர்கிற எண்ணத்துடன், இருவருக்கும் தெரிந்த பெயர்களைப் பயன்படுத்த முயன்றேன். ‘உண்மையிலேயே சார், மாயா கோட்னானி மேடத்தை நாங்கள் சந்தித்தபோது அவர் உங்களைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார்.
மாநிலத்தின் பிரகாசமான அதிகாரிகளில் நீங்களும் ஒருவர் என்றார்,’’ என்றேன். இது தேவையான விளைவைத் தந்தது. அவரது இறுக்கமானமுகம் தளர்ந்தது. அவருடைய சாதனைகளை நான் பாராட்டியபோது அவர் முகம் சிவந்தது. தன் பதவியே பறிபோய்விடுமோ என்ற சிக்கலான நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து வந்தவர் அவரைப் பாராட்டியது அவர் மனதிற்கு ஆறுதலாக இருந்திருக்கலாம்.
சாதி பற்றி ஒரு பேச்சு
எங்கள் உரையாடலில் சாதி அமைப்பு குறித்துப் பேச்சு வந்தது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பிறந்து, சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் பற்றிப் பேசியபோது, சிங்கால், தன்னைச் செதுக்கிய ராஜன் பிரியதர்சி அப்படிப்பட்டவர்தான் என்று மிகுந்த மரியாதையுடன் குறிப்பிட்டார். ஏடிஎஸ் முன்னாள் தலைவரான ராஜன் பிரியதர்சி எங்கள் ஆவணப்படத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க முடியும் என்றார். ஓராண்டுக்கு முன் பணி ஓய்வு பெற்ற அவர் அகமதாபாத்தில்தான் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் என்று தெரிவித்தார். படத்தயாரிப்பு பற்றி நாங்கள் கூறியவற்றில் அவருக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்; அவரைப் பார்ப்பதற்குத் தானே உதவுவதாகத் தெரிவித்தார்.
ஒரு மணி நேர உரையாடலுக்குப் பின், கடும் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஏடிஎஸ்தலைமையகத்திலிருந்து மைக்கும் நானும் அமைதியாக வெளியே வந்தோம். வழியில்நின்றுகொண்டிருந்த பாதுகாவலர் இப்போது எங்களுக்குப் புன்னகையுடன் விடைகொடுத்ததுடன், ஓர் ஆட்டோவையும் வரவழைத்து, எங்களை அதில் அனுப்பிவைத்தார். ஆட்டோ ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு, நாங்கள் ஒருவரை யொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். ‘‘நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது, இல்லையா,’’ என்று கேட்டான் மைக். ஆம் என்று தலையாட்டினேன்.
அடுத்த அழைப்பு
மறுபடியும் சிங்காலை சந்திப்பதற்கு சிறிது இடைவெளி விடத் தீர்மானித்தேன். அவரை அடிக்கடிபோன் மூலம் தொடர்பு கொண்டால் ஒருவேளை அவர் எரிச்சலடையக்கூடும், சந்தேகம்கூட ஏற்படக்கூடும். இதற்கிடையில் குஜராத் பற்றிய எங்களது ஆராய்ச்சி தொடர்பான பதிவு ஒன்றைத் தயாரித்து அவருக்கு அனுப்பினேன்.
அவருடன் நடத்திய உரையாடலில் கிடைத்த தகவல்களின்அடிப்படையிலேயே அதைத் தயாரித்திருந்தேன். அதில் அவர் மாநில வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன்பங்களித்து வருவதாகக் காட்டியிருந்தேன். அதைத் தொடர்ந்து அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் அழைப்பு விரைவில் வந்தது.இந்தத் தடவை நான் மட்டும் செல்லத் தீர்மானித்தேன்.
அரசியல்வாதிகளுடன் நடத்திய நேர்காணல்களில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம், இப்படிப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நம்மோடு பேச முன்வருகிறபோது வேறு யாரும் உடனிருப்பதை விரும்ப மாட்டார்கள் என்பது. இம்முறை கேட்க வேண்டிய கேள்விகளை முதல் தடவையை விட நன்றாகத் தயார் செய்துகொண்டு செல்லத் தீர்மானித்தேன். சென்ற சந்திப்பின்போது சிங்கால் நடந்துகொண்ட விதம், தற்போதைய சந்திப்பில் அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கறந்திட முடியும் என்ற நம்பிக்கையை அளித்திருந்தது.
குர்தாவுக்குள் மறைத்த கேமரா
அன்று மாலை எச்சரிக்கையாக, சின்னஞ்சிறு வீடியோ கேமராவை எனது குர்தாவிற்குள் மறைத்து வைத்தேன். குர்தாவின் மேல் பகுதியில் காஷ்மீரி பூ வேலைப்பாடு நெய்யப்பட்டிருந்தது. அதற்குள் ஒரு சிறிய துளை இருந்தது. கேமராவுடன் இணைக்கப்பட்ட ஒரு ஒயர் அந்தத் துளையின் வழியே கீழே சென்று ஒரு சிறிய பட்டனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
நான் அந்தப் பட்டனை அழுத்தினால் கேமரா இயங்கும். அது இயங்குவதற்கு அடையாளமாக ஒரு சிவப்பு விளக்கு எரியும். இது ஒரு மிகவும் நுட்பமான உத்தி. அது வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நான் நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். கேமரா இயங்குவதை நிச்சயப்படுத்துவதற்காக என் பேனாவை அடிக்கடி நழுவ விடுவேன். அதனை எடுப்பதற்காகக் குனிவது போல, குர்தாவுக்குள் கேமரா சிவப்பு விளக்கு எரிவதை உறுதிப்படுத்திக் கொள்வேன். இம்முறை ஏடிஎஸ் அலுவலகப் பாதுகாவலர் புன்னகையுடன் வரவேற்றார். ‘‘மேடம், எப்போதுஷூட்டிங் ஆரம்பிக்கப் போகிறீர்கள்,’’ என்று கேட்டார்.
விரைவில் என்று பதிலளித்தேன்.சிங்காலின் அறைக்குள் நுழையும்போது அவர் உற்சாகத்துடன் ‘ஹலோ’ என்று வரவேற்பார்என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்பதை அவர் முகம் காட்டிற்று. தன் முன் கணினித் திரையில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவையும்அதன் கீழ் வந்த அடிக்குறிப்புகளையும் அவர் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் வசிக்கும் பகுதியில் உள்ள வம்பர்கள் சிலர் தயாரித்திருந்த வீடியோ அது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் கண்காணிப்பாளராக இருப்பவருக்கு அது ஒரு பெரிய பிரச்சனையேகிடையாது. ஆனால் அந்த அடிக்குறிப்புகள் அப்படிப்பட்டவையல்ல. காவல்துறையிலேயே உள்ள சக அதிகாரிகள் சிலர் அவருக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சில ரகசிய உள்ளடி வேலைகளில் இறங்கியிருந்தார்கள்.
அப்படித் தயாரிக்கப்பட்டிருந்த வீடியோ பதிவுதான் அது. சிறிது நேரம் கழித்து அதனை நிறுத்திய சிங்கால் தன்னை இயல்பாக மாற்றிக்கொண்டார். அவரைப் பற்றி நான் செய்திருந்த ஆராய்ச்சி அவருக்குப் பிடித்திருந்தது போலும். தன்னைப் பற்றி வேறு எவரிடமாவது விசாரித்தேனா, அவர்கள் என்ன சொன்னார்கள் என்று அறிவதில் ஆர்வமாக இருந்தார். உரையாடலைப் பதிவு செய்ய சரியான தருணம் அது. நாட்டிலேயே பயங்கரமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டவர்களைச் சுட்டுக் கொன்றவருக்கு எதிரில் நான் அமர்ந்திருந்தேன்.
(தொடரும்)



Wednesday, September 7, 2016

குஜராத் கோப்புகள்(8) வீர விருது பெற்றவரின் மேசையில்...


ராணா அய்யூப்
சிங்காலைச் சந்திக்கப் புறப்பட்டோம். அவர் சாதாரண போலீஸ் அதிகாரியல்ல; குஜராத்பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழு (ஏடிஎஸ்) கண்காணிப்பாளர், பல என்கவுண்ட்டர்களை நடத்தியவர் என்று அவரைச் சந்திப்பதன் முக்கியத்துவத்தை மைக்கிடம் கூறியிருந்தேன்.சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) புலனாய்வு தொடங்கியிருந்த பின்னணியில் சிங்காலின்ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட நேரம் அது. அவரும் தன்னை சந்திக்க வருகிறவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருந்தார். எஸ்ஐடி ஏற்கெனவே இரண்டு இளநிலைஅதிகாரிகளைக் கைது செய்திருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரால் ஓர் அப்பாவிப் பெண்ணை நாடகமாடிக் கொன்றுவிட்டார்கள் என்பதுதான் அவர்கள் மீதானகுற்றச்சாட்டு.
வளர்க்கப்பட்ட பகைமைச் சூழல்
இதற்கான பின்னணி குஜராத்திற்கு ஒன்றும் புதிதல்ல. மக்களிடையே ஒரு பகைமைச் சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது. நிலைமை மேலும் மோசமாகக்கூடும் என்பது தெளிவாகத் தெரிந்தது. முதலமைச்சர் நரேந்திர மோடி, குஜராத்தின் பெருமையை அந்நியர் படையெடுப்புகளிலிருந்து பாதுகாக்க வந்த இந்துத் தலைவராகப் பார்க்கப்பட்டார். கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்படுவது தொடங்கியது. உயரதிகாரிகளே கூட அந்த அக்கிரமங்களைச் செய்தார்கள் என்றாலும் புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. விசாரணைக் குழுக்கள் அனைத்தும் அதிகாரிகளின் செயல்பாடு அல்லது செயலின்மை குறித்துக் கடும் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அடிமட்டத்தில் இருந்த சிலரைத் தவிர, அதிகார பீடத்தில் இருந்தவர்கள் பாதிப்பின்றி நீடித்தார்கள். இதனால் ஊக்கமடைந்தவர்களாக மேலும் மேலும் என்கவுண்ட்டர்களை நிகழ்த்தினார்கள்.குஜராத் என்கவுண்ட்டர்கள் நிகழ்த்தப்பட்ட வடிவங்கள் மிகக் கேவலமானவை. சமீர்கான் பர்தான், சாதிக் ஜமால், இஸ்ரத் ஜஹான், ஜாவீத், சொராபுதீன், துளசி ராம் பிரஜிபதி உள்ளிட்டோர்‘என்கவுண்ட்டர்களில்’ கொல்லப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தாலும் குஜராத் உயர்நீதிமன்றத்தாலும் நேரடியாக மேற்பார்வையிடப்பட்டன. மேலோட்டமாகப் பார்த்தால் கூட, அவை மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொலைகளே என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். 19 வயது இளம் பெண் இஸ்ரத் ஜஹான் கொல்லப்பட்ட விதம், கொடூரச் செயல்களின் வரிசையில் முதலிடம் பிடிக்கத்தக்கது. அதனைச் செய்தவர் சிங்கால். வேறு சில என்கவுண்ட்டர்களிலும்அவருக்குப் பங்குண்டு என்றாலும், அவற்றில், அவர் புலனாய்வுக்குக் குறுக்கே நின்றார் என்ற அளவிலேயே குற்றச்சாட்டு இருந்தது.
வீர விருது
2002 அக்சர்தம் ஆலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை மிகவும் வெற்றிகரமாகக் கையாண்டது உள்ளிட்ட அவரது வெற்றிகரமான நடவடிக்கைகள் அவருக்கு குஜராத் அரசின் வீரச்செயல் விருதினைப் பெற்றுத் தந்திருந்தன. அந்த வயதில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல.அகமதாபாத்தில் சாஹிபாக் பகுதியிலிருந்த ஏடிஎஸ் அலுவலகத்திற்கு மைக்கும் நானும் சென்றோம். கறாரான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டோம். பாதுகாப்புப் பணியிலிருந்தவர் எங்களைக் கண்டதும் குழப்பமும் வியப்பும் அடைந்தார் போலும். அரைப் பாவாடையும் பலவண்ணத் தலைப்பாகையும் அணிந்த ஒரு பெண், ஒரு வெளிநாட்டு இளைஞனோடு எதற்காக ஏடிஎஸ் பொறுப்பதிகாரியைச் சந்திக்க வந்திருக்கிறாள்?சில நிமிடங்களில் ஒரு காவலர் அங்கே வந்து, அந்தப் பாதுகாவலரிடம் குஜராத்தியில் கண்காணிப்பாளர் அனுமதியோடுதான் வந்திருக்கிறோம் என்பதைச் சொன்னார். மைக் வழக்கமான வசீகரப் புன்னகையுடன் காணப்பட்டான். அவனுடைய வயதில் வேறு யாராகஇருந்தாலும் அந்த சூழ்நிலையில் கொஞ்சம் நடுங்கிப் போயிருப்பார்கள். அவன் நல்ல புரிதலோடுதான் இருந்தான் என்றாலும், எங்கே தடுமாறிவிடுவானோ என்ற ஐயம் எனக்குக் கொஞ்சம் இருக்கவே செய்தது. எனினும், நான் வியக்கும் விதத்தில் சிறப்பாகச் செயல்பட்டான் அவன்.வரவேற்பறைக்குள் நுழைந்தபோது மற்ற சிந்தனைகள் மறைந்தன. சிங்காலைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலான காவல்துறையினர் சீருடையின்றி இருந்தனர். விளையாட்டு ஷூ அணிந்திருந்தனர். இவை அவர்களை சாமானிய மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டின. டி.வி.யில் பாலிவுட் படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அது கோவிந்தா நடித்த படம். மைக் அதை ஆர்வத்துடன் கவனித்தான். காத்திருந்தவர்களில் சிலரையும்அந்தப் படம் ஈர்த்திருந்தது. ஒரு இளம் காவலர் மைக் அருகில் வந்து அமர்ந்துகொண்டு, காவலர்கள்பாணியில் ‘வணக்கம்’ வைத்தான். தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசினான். மைக் எந்த நாட்டுக்காரன், இங்கே என்ன சாப்பாடு பிடித்திருக்கிறது என்பது முதல் இரு நாடுகள் பற்றியதகவல்கள் வரையில் அவர்களுடைய உரையாடலில் இடம்பெற்றன. மைக் தன்னை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். கொஞ்சமும் நடுக்கமோ, மிகையான ஆர்வமோ அவனிடமிருந்து வெளிப்படவில்லை.
முன் தயாரிப்பு

அப்போது அங்கே வந்தார் ஆர்டர்லி. ‘மைதிலி தியாகி, ஐயா உங்களை அழைக்கிறார்’ என்றுகூறினார். சந்திப்பு நாடகத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. நாற்பதுகளின் முற்பகுதியில் இருந்தகிரிஷ் சிங்கால், நன்கு உடையணிந்துகொண்டு, புன்முறுவலுடன் பழகுவதற்கு இனியவராகவே காணப்பட்டார். அவரது கை விரல்களில் பாதி சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. தன் மடிக்கணினியில் ஏதோ ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார். மேசையில் ஓஷோ புத்தகங்கள் இருந்தன. ‘நீங்கள் ஓஷோவைப் பின்பற்றுபவரா என்று இருக்கையில் உட்கார்ந்து கொண்டே அவரிடம் கேட்டேன். என்னுடைய டைரியை கவனமாக மேசை மீது வைத்தேன். ரகசியமாக வீடியோ கேமரா பொருத்தப்பட்ட டைரி அது. உணர்ச்சிவசப்படக்கூடியவரான சிங்கால், பேசுகிறபோது முக்கியமானது எதையாவது சொல்லிவிட்டால் பதிவு செய்யத் தவறிவிடக்கூடாது என்ற எண்ணத்தால் இந்த முன்னேற்பாட்டுடன்தான் வந்திருந்தேன்.(தொடரும்)

Tuesday, September 6, 2016

குஜராத் கோப்புகள் 7 என் கவுண்ட்டர் அதிகாரியுடன் கிடைத்த அப்பாயின்ட்மென்ட்


ராணா அய்யூப்
மறுநாள் காலை நான் தொலைபேசியில் உரையாடத் திட்டமிட்டிருந்தவர் ஜி.எல். சிங்கால்.2004 ஜூன் 15ல் இஸ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை, இரண்டு அதிகாரிகளோடுசேர்ந்து சுட்டுக்கொன்றவர் அவர். அந்த என்கவுண்ட்டர் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் நியமித்திருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது விசாரணையை முடுக்கிவிட்டிருந்தது.என்கவுண்ட்டர் நடந்த மறுநாள் காலையில், காவல்துறை உயரதிகாரியும் பயங்கரவாத எதிர்ப்புநடவடிக்கைக் குழுவின் தலைவருமான டி.ஜி. வன்சாரா செய்தியாளர் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார்.
இஸ்ரத் ஜஹான் பயங்கரவாத இயக்கமான லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள், முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்காகஅனுப்பப்பட்டவள் என்று முத்திரை குத்தப்பட்டது.வன்சாரா ஒரே நாளில் ஒரு ‘ஹீரோ’ நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவருடன் இணைந்து இந்தப்பெருமையைப் பெற்ற மற்ற உயரதிகாரிகள் என்.கே. அமின், தருண் பேரட், கிரிஷ் லக்ஷ்மன் சிங்கால்ஆகியோராவர்.
நாட்டை உலுக்கிய அறிக்கை
இஸ்ரத்தின் பெற்றோர் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். உச்சநீதிமன்ற ஆணைப்படிகுஜராத் உயர்நீதிமன்றம் ஒரு நீதித்துறை குழுவை நியமித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி தமங் தலைமையிலான அந்தக் குழு 2008ல் அளித்த அறிக்கை நாட்டையே உலுக்கியது. "இஸ்ரத் ஜஹான்மீதான தாக்குதல் ஒரு போலி என்கவுண்ட்டர்" என்று கூறிய அந்த அறிக்கை, மேல் விசாரணைக்குப்பரிந்துரைத்தது. ஆனால் மாநில அரசு வழக்கைக் கிடப்பில் போட்டது.
இஸ்ரத் குடும்பத்தார் உயர்நீதிமன்றத்தைஅணுகினர். அதன் பின்னர்தான் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குழு அமைக்கப் பட்டது.2013ல் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்தியப் புலனாய்வுத் துறைக் குழு (சிபிஐ டீம்) புலனாய்வை மேற்கொண்டது. நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் போலியானது என்ற முடிவுக்கு வந்தசிபிஐ குழு, அதை நடத்திய உயரதிகாரிகளை குற்றம் சாட்டப்பட்டவர்களாகப் பட்டியலிட்டது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைப்படி அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) 2010ல் புலன் விசாரணையைத் தொடங்கியிருந்த நேரத்தில்தான் நான் சிங்காலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.சிங்கால் வீட்டில் தொலைபேசி ஒலித்தது. அவரே எடுத்துப் பேசினார்.
வெளிநாட்டவருக்கான ஆங்கிலத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அப்பாயிண்ட்மென்ட் கேட்டேன். சிறிது நேரம்மவுனமாக இருந்த அவர், வேறொரு நாளில் தொடர்பு கொள்ளுமாறு சொல்லிவிட்டு முடித்துக்கொண்டார். என்னுடைய உண்மையான புலனாய்வை இவரிடமிருந்துதான் தொடங்கத் திட்டமிட்டிருந்தேன். அவரோ இப்படிச் சொல்லிவிட்டார். என்ன செய்வது?
அழுத்தத்தை மறக்கடித்த கலைக்கூடம்
காலைப் பத்திரிகைகளில் சிங்காலை எஸ்ஐடி கைது செய்வது தவிர்க்க முடியாதது என்பதுபோல் செய்தி வந்திருந்தது. இத்தகைய பதற்றமான நிலையில் சிங்கால் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வழிகளைத்தான் யோசித்துக்கொண்டு இருப்பாரேயன்றி, வெளிநாட்டிலிருந்து வந்துள்ள ஒரு வெளிநாட்டு சினிமாக்காரருக்கு பேட்டியளிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார் என்பதுபுரிந்தது.
என்னோடு வரவேண்டிய வேலை எதுவும் இல்லை என்று நான் சொன்னதில் மகிழ்ச்சியடைந்தமைக், விடுதியிலிருந்த கிரீன்லாந்து நாட்டுப் பெண்ணும், நாங்கள் பானி என்று அழைத்தவளுமாகிய தனது தோழியுடன் வெளியே கிளம்பினான்.அன்று மாலை நான் கேமரா கலைஞனான நண்பன் அஜய் அழைத்திருந்தபடி, கலைக்கூடத்தில்அவனுடைய நண்பரின் புகைப்படக் கண்காட்சிக்குச் சென்றேன். அஜய் என்னை ஒவ்வொருவருக்கும்அறிமுகப்படுத்தினான். அவர்கள் என்னிடம் ‘உங்கள் படத்திற்கு கேமராவை இயக்குவது யார்’,‘என்ன கேமரா பயன்படுத்துகிறீர்கள்’ என்று கேட்டார்கள். இத்தகைய கேள்விகளை எதிர்பார்த்தேசென்றிருந்ததால் எல்லோருக்கும் அமைதியாகப் பதிலளித்தேன்.
கல்லூரி மாணவர்கள் குழு ஒன்றும் வந்திருந்தது. ஒருவன் கிட்டார் வாசித்துக்கொண்டிருந்தான். சிலர் தனித்தனியாகவும் சிலர் இணைகளாகவும் அமர்ந்திருந்தார்கள். கலைக்கூடத்தில் அந்தநேரத்தில் நான் எனது புலனாய்வு, காவல்துறை அதிகாரிகள், என்னுடைய சினிமா முகமூடி,எனக்குள் ஏற்பட்டிருந்த ஒருவித உதறல்..... அனைத்தையும் மறந்தேன். நானும் கலைத்துறை மாணவர்களில் ஒருத்தியானேன்.
எதிர்பாரா அழைப்பு
எனது குடும்பத்தாருடன் சில நாட்களாக எதுவுமே பேசவில்லை என்ற நினைப்பு வந்தது.விடுதிக்குப் பக்கத்தில் இருந்த இணையத் தொடர்பு மையத்திலிருந்துதான், அதுவும் எப்போதாவதுதான், அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்.
அமித் ஷா விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததிலிருந்தே அவர்களுக்கு என்னைப்பற்றிய கவலை கூடுதலாக இருந்தது.தனது வண்டியில் அழைத்து வந்த அஜய்யிடம், விடுதிக்கு அருகிலிருந்த வணிக வளாகத்தில்,சில பொருட்களை வாங்குவதற்காக இறக்கிவிடச் சொன்னேன். சில பொருள்களை வாங்கியபடி,அருகிலிருந்த பொதுத் தொலைபேசி நிலையத்திற்குள் சென்றேன். குடும்பத்தினருடன் தொடர்புகொள்ளப் பாதுகாப்பான இடம் அது.எனக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் அம்மாதான் முதலில் பேசினார்.
நான் விரைவில் திரும்பிவந்துவிட வேண்டுமென்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். குடும்பத்தாருடன் கூட தொடர்புகொள்ள முடியாமல், இது என்ன வாழ்க்கை என்ற சிந்தனை எனக்கும் ஏற்படவே செய்தது.அடுத்த நாள் காலையில் மீண்டும் சிங்காலுக்கு, எதிர்பார்ப்பின்றி, போன் செய்தேன். இம்முறைஅவர் தன்னைச் சந்திக்க வரலாம் என்றார். நடக்குமோ நடக்காதோ என்று மிரட்டிக் கொண்டிருந்த என் புலனாய்வுப் பயணம் தொடங்கியேவிட்டது.
(தொடரும்)



Sunday, September 4, 2016

குஜராத் கோப்புகள்-5 கொலைகளைத் தூண்டியவரின் கோட்டைக்குள் முதல் நுழைவு

ரானா அயூப்
கொலைகளைத் தூண்டியவரின் கோட்டைக்குள் முதல் நுழைவு
எனது நண்பரிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வந்தது. மகப்பேறு மருத்துவர் ஒருவரைப் பற்றிய தகவல்கள் அதில் இருந்தன - மேலிடத் தொடர்புகள் உள்ளவர்என்ற குறிப்புடன். அவரைத் தொடர்பு கொண்டு, மாநிலத்தின் மக்கள் நலவாழ்வு நிலவரம்பற்றிப் படமெடுக்க வந்திருப்பதாகத் தெரிவித்தேன். அவர் அன்று மாலை தனது மருத்துவமனைக்குவரலாம் என்றார். நன்றி தெரிவித்துவிட்டு, என் அறைக்கு நடந்தபோது மைக் வேகமாக வந்தான்.‘மைதிலி, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். இப்படியே என்னால் தொடர முடியாதென்றுநினைக்கிறேன். நாம் சந்திக்கிறவர்களிடம் உங்களை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, என்னை உங்களின் உதவியாளராக அறிமுகப்படுத்துகிறீர்கள். உங்கள் புலனாய்வின் உண்மை நோக்கத்தைஇப்போது நீங்கள் எனக்குச் சொல்லியாக வேண்டும்.’
உண்மையைச் சொல்லும் தருணம்
அவனுடைய விசாரணையை வழக்கம்போல், ‘நேரம் வரும்போது சொல்கிறேன்’ என்று சொல்லி ஒதுக்கிவிடத்தான் நினைத்தேன். ஆனால் இப்போது அவன் குரலில் ஒரு அழுத்தம் வெளிப்பட்டது. உண்மையை மறைப்பதால் ஏதோ தான் அவமானப் படுத்தப்படுவதாக எண்ணுகிறான். ‘நான் ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை. நான் நிறைய படிக்கிறேன். வாழ்க்கையில் ஏதேனும்சாதிக்கிற லட்சியத்துடன் வந்திருக்கிறேன். நீங்கள் என்னை நம்புகிறீர்களா? அல்லது உங்களுடையநோக்கத்திற்காக, மற்றவர்களுக்குக் காட்டுவதற்குக் கிடைத்த ஒரு வெளிநாட்டு முகமாக மட்டுமேபயன்படுத்தப் போகிறீர்களா?’என் உண்மையான புலனாய்வு என்ன என்பதை அவனிடம் சொல்லியாக வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தேன். அதைச் சொல்வதன் மூலம் அவனுடைய நம்பிக்கையைப் பெற முடிவுசெய்தேன். மடிக்கணினியிலிருந்து என்னுடைய முந்தைய சில கட்டுரைகளைஅவனுடையமின்னஞ்சல்முகவரிக்கு அனுப்பினேன். ‘நான் திரும்பி வருவதற்குள் இதையெல்லாம் படித்துவிடு மைக். பிறகு நிதானமாகப் பேசுவோம்.அப்போது என் நோக்கமும் பின்னணியும் உனக்குத்தெரிய வரும்,’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
மருத்துவரின் உதவி
செல்வாக்குள்ள அந்த மகப்பேறு மருத்துவரைச் சந்தித்தது மிகவும் பயனளித்தது. அவர் எனது ‘திரைப்பட முயற்சிக்கு’ உதவ ஆர்வத்துடன் முன்வந்தார். பேச்சோடு பேச்சாக அவரிடம்,மருத்துவத் துறையில் புகழ்பெற்ற பெண் யாரையாவது அறிமுகப்படுத்த முடியுமா என கேட்டேன். என் மனதில் இருந்தவர் மாயா கோட்னானி. குஜராத் சட்டமன்றத்திற்கு நரோடா தொகுதியிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2002 படுகொலைகளைத் தூண்டியவர்களில் ஒருவர்என, நேரடி சாட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டவர். மாநில அமைச்சராகவே ஆக்கப்பட்டவர்.மகப்பேறு மருத்துவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்ததும் அவர் என் முன்னிலையிலேயே, மாயா கோட்னானியையே தொலைபேசியில் அழைத்தார். ‘அமெரிக்காவில் குடியிருக்கிறஒரு பெண் படத்தயாரிப்பாளர் வந்திருக்கிறார். எனக்கு நன்றாகத் தெரிந்தவர். உங்களிடம் பேட்டிகாண விரும்புகிறார்...’ என்றார். மறுநாளே வரச்சொல்லுமாறு அவருக்கு பதில் வந்தது.என்னுடைய நடிப்பில் சந்தேகம் வந்துவிடக்கூடாது. ஆகவே அவரிடம் சுகாதார நிலைமை பற்றிசில கேள்விகள் கேட்டேன். தொடர்ந்து அவரிடமிருந்து நிறையத் தெரிந்துகொள்ள விரும்புவதாகக் கூற, அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புதல் அளித்தார்.விடுதிக்குத் திரும்பியபோது மைக் எனது கட்டுரைகளைப் படித்து முடித்திருந்தான். என்னிடம்கேட்பதற்காக நிறையக் கேள்விகளை எழுதி வைத்திருந்தான். அவன் `கிரிமினல்கள்’ என்றுகருதியவர்களைப் பற்றிய கேள்விகளும் இருந்தன. மாணவர் பகிர்வுத் திட்டத்தின் கீழ் தன்னுடையநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதற்குப் பொருத்தமானவனே என மெய்ப்பித்தான்.நான் சொன்னதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டான். சரியான முறையில்சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டான். நுட்பமான, சிக்கலான விசயங்களைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டான்.
முதல் சந்திப்புக்குத் திட்டம்
அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்துப் பேசினோம். திட்டமிட்டபடி நிகழ்வுகள்அமையவில்லை என்றால் நிலைமைக்கேற்ப உடனடியாகத் திட்டத்தை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றேன். ‘எப்போது புறப்பட வேண்டியிருக்கும், மைதிலி?’ ‘நாளையே! நம் உண்மைப்புலனாய்வுக்கானமுதல் சந்திப்பு இது. இதை சரியாக அமைத்துக்கொள்ளத் திட்டமிடுவோம்மைக்.’மறுநாள் மாயா கோட்னானியை சந்திப்பதே எங்கள் திட்டம். எடுத்த எடுப்பிலேயே தகவல்கள்எளிதாக வந்து கொட்டிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளராக நான் நன்கு அறிவேன். அப்படியே தகவல்கள் தாமாக வந்தாலும் கூட, நாம் நம் ஆர்வத்தைஅளவுக்கு மிஞ்சிக் காட்டிவிடலாகாது. இதனை மைக்கிடம் கூறி எச்சரித்தேன். ‘இன்று நாம்திரைப்படத் தயாரிப்பாளர்கள்தான். படமெடுப்பது மட்டுமே நம் தொழில்.’ மாயா கோட்னானியின் மருத்துவமனை நரோடா பகுதியின் மையச் சாலையில் இருந்தது.அந்த மருத்துவமனையிலிருந்து கல்லெறி தொலைவில்தான் நரோடா பாட்டியா படுகொலைகள் நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வெறியூட்டும் முழக்கங்களால் வன்முறைக் கும்பலை ஏவிவிட்டதே மாயா கோட்னானிதான் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. மைக்கும் நானும் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தபோது, மாயா கோட்னானியின் அறைக்கு வெளியே பல பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அறை வாயிலில் இரண்டு முரட்டு ஆட்கள் காவலுக்கு நின்றிருந்தார்கள். ஒரு ஆளின் கையில் துப்பாக்கி இருந்தது. அவர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினார்கள். தொலைபேசியில் தங்களது தலைவரிடம் பேசி உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதான் எங்களை உள்ளே அனுப்பினார்கள். (தொடரும்)


Friday, September 2, 2016

திரைப்படக்காரர் என்பதால் கிடைத்த இல்லம் குஜராத் கோப்புகள்(3)

-ராணா அய்யூப்
என்னுடைய கண்களில் காண்டாக்ட் லென்ஸ் பொருத்திக்கொண்டு, தலைமுடியை நீளமாக்கிக் கொண்டு, வண்ணப் புள்ளிகள் தூவிய தலைத்துணியுடனும், சில ஒலி/ஒளிப்பதிவுக் கருவிகளுடனும் அகமதாபாத்தில் தரை இறங்கினேன். வந்ததுமே மைதிலி தியாகி என்ற பெயரில் ஒரு சிம் கார்டு உடனடியாக வாங்கினேன். அகமதாபாத்தில் என் `குடும்ப பாதுகாவலர்’ ஒருவர் மிக எளிதாக அதனை எனக்குப் பெற்றுத் தந்தார். புலன் விசாரணைக்கு நீண்ட காலமாகும். அவ்வளவு காலம் நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கிற அளவுக்கு எங்கள்நிறுவனம் வசதியானது அல்ல.
மேலும் மிகவும் குறைந்த நிதி வசதியே உள்ள திரைப்படத் தயாரிப்பாளராகவும், படத்தை எடுக்கப் பொருளாதாரமாய்ப் போராடிக்கொண்டிருப்ப வளாகவும் என்னைக் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. என்னைப் போன்றவருக்கேற்ற தங்குமிட வசதிக்கு உள்ளூர்வாசிகள்தான் உதவ முடியும். அந்த உதவி ஓர் ஓவிய நண்பரின்மூலம் கிடைத்தது. அகமதாபாத்தில் கலை - இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறிமுகமானவரான அவர் என்னை ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு சங்கடத்திற்குள்ளாக்காமல் இங்கிதமாக நடந்துகொண்டார். நான் ஓர் ஊடகவியலாளர், என்னுடைய புலனாய்வுக் கட்டுரை காரணமாகவே மாநில உள்துறை அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதே அவருக்குப் போதுமானதாக இருந்தது. அவர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி நேரு பவுண்டேசன் என்ற கல்வி நிலைய விடுதியில் நான் தங்குவதற்கு உதவினார். விடுதிக் காப்பாளரிடம் நான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்தப் பட்டேன். குளியலறையுடன் நாளொன்றுக்கு 250 ரூபாய் வாடகையில் 250 சதுர அடி அறையை வெற்றிகரமாகப் பெற்றுவிட்டேன்.
விடுதியில் தங்கியிருந்தவர்களும் எனக்குப் பல வகைகளில் உதவ முன்வந்தார்கள். ஜெர்மனி, கிரீன்லாந்து, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் அவர்கள். விடுதியின் வார்டனாகவோ மேலாளராகவோ இருந்த மாணிக் பாய் (மாற்றப்பட்ட பெயர்) என் முதல் நண்பரானார். ‘மேடம் இங்கே குஜராத் குறித்து திரைப்படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்,’’ என்று நண்பர் என்னை அறிமுகப்படுத்தியதும், ‘ஓ, ரொம்ப நல்லது, தயவுசெய்து எங்கள் நகரத்தைப் பற்றியும், எங்கள் முதலமைச்சரைப் பற்றியும் நல்ல விஷயங்களைக் கூறுங்கள். இந்த அகமதாபாத் மிக அழகான நகரம்...’’ என்றார். தொடர்ந்து அவர் நகரத்தை எனக்குச் சுற்றிக் காட்டவும் முன்வந்தார். எனக்கு ஒதுக்கப்பட்ட அறை, ஒரு படுக்கை, எழுதுவதற்கான ஒரு மேசை, ஒரு புத்தக அலமாரி ஆகியவற்றுக்கு மட்டுமே போதுமானதாக அமைந்திருந்தது. ஆனாலும், விடுதி அமைந்திருந்த சூழல் அறையின் இடப் போதாமையை ஈடுசெய்தது. குஜராத்தின் வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக, நகரின் மையத்தில் அது அமைந்திருந்தது. அடுத்த ஆறு மாத காலத்திற்கு அது என் இல்லமாக மாறியது. மறுநாள் காலை மைக் அகமதாபாத் வந்து சேர்ந்தான். கூர்மையான அறிவுத்திறனுடன் இருந்த அந்த 19 வயது பிரெஞ்சு இளைஞன் நல்ல உயரம். சீவிக் கலைத்துவிட்டதுபோன்ற தலைமுடி.
அவனை விடுதிக்கு அழைத்து வந்தேன். மாணிக் பாய் எனது அறைக்கு அடுத்த அறையை அவனுக்கு ஒரு மாத காலத்திற்கு என ஒதுக்கித் தந்தார். மைக், தனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை அருமையாகச் செய்தான். கண்ணில் படுகிற அனைத்தையும் அறிவதில் முனைப்புக் காட்டினான். புதிய அம்சங்களைக் கற்பதிலும், பண்பாட்டுக்கூறுகளைத் தெரிந்துகொள்வதிலும் அக்கறை செலுத்தினான். எதையும்விட அவனுக்கு மிகவும் ஆர்வம் உணவு வகைகளில் தான்! எங்கள் முதல் நாள் இரவு உணவு பக்வான் என அழைக்கப்படும் பலவகை உணவுப் பொருட்களுடன் கூடிய தலி சாப்பாடுதான். நானும் மைக்கும் இப்போதும் பிரியத்துடன் நினைத்துப்பார்த்து சிரித்துக்கொள்வது என்னவெனில், அன்றைய தினம் அவன் விழுங்கிய சுமார் இரண்டு டஜன் பூரிகளும், ஆறு கிண்ணங்களிலிருந்த அல்வாவும்தான்!இரவு உணவு முடிந்து, விடுதியின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தபோது அவன் சன்னமாகக் கேட்டான்: ‘வேறு யாரும் இல்லாத இடங்களில், அல்லது நாம் மட்டும் இருக்கும் சமயங்களில், நான் உங்களுடைய உண்மைப் பெயரில் அழைக்கலாமா?’ ‘இல்லை,இந்த நாட்டைவிட்டு நீ திரும்பிச் செல்லும் வரைக்கும் நான் உனக்கும் மைதிலிதான்.’ மைக் அந்த உறுதிமொழியைக் கடைசி வரையில் காப்பாற்றினான்.
பாரீஸ் புறப்படுவதற்கு முதல் நாள் என்னிடமிருந்து விடைபெறும் விதத்தில் இந்தியில் எழுதிவைத்த குறிப்பில், ‘அன்புள்ள மைதிலி, இனிமேல் உங்களை நீங்களேதான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். -மைக்’ என்று கூறியிருந்தான். முதல் சில நாட்கள், நேரு பவுண்டேசனில் எங்கள் புதிய வாழ்நிலைக்கு எங்களை நாங்கள் தயார்படுத்திக் கொண்டோம். மைக் அவன் அறையில் அமர்ந்து பிரெஞ்சு-இந்தி மொழிபெயர்ப்புப் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே இருப்பான். என்னிடம் கேள்விகள் கேட்பான். அதே நேரத்தில் மார்க் துல்லி நூல் ஒன்றையும் படித்துக் கொண்டிருந்தான். அவனதுவயதுப் பையன்களுடன் ஒப்பிடும்போது, மைக் நன்கு பயிலும் மாணவனாகவும், கொள்கை உறுதிகொண்டவனாகவும், எதையும் கூர்மையாக ஆராய்கிற மனநிலை பெற்றவனாகவும் இருந்தான்.

பவுண்டேசனில் ஒரு கேண்டீன் இருந்தது. அதில் 25 ரூபாய்க்கு மதிய உணவு (லஞ்ச்) அளித்து வந்தார்கள். பவுண்டேசனின் மேல் மாடிக்குச் செல்ல சித்திரப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலேயிருந்து பார்த்தால் பக்கத்தில் ஓர் அழகான காடு இருப்பது தெரியும். மதிய நேரங்களில் நாங்கள் இருவரும் மடிக்கணினிகளோடு மேல் தளத்துக்குச் சென்று, மதிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டே, பணியில் ஈடுபடுவோம். அப்போதெல்லாம் அவன் கேட்பான், ‘ஆக, மைதிலி, இன்றைக்கு என்ன திட்டம்? இன்று யாரைச் சந்திக்கப் போகிறோம்?’ நான் அதற்கு, வழக்கம்போலவே, ‘சமயம் வரும்போது நானே உனக்குச் சொல்லுவேன்,’ என்பேன். (தொடரும்)

Thursday, September 1, 2016

குஜராத் கோப்புகள் 2 தொடங்கிய முயற்சியும் துணைசேர்ந்த முகமூடியும்




எங்கள் ஊடகத்தின் மூத்த சகாக்கள் ஆழமாக விசாரணையை மேற்கொள்ள ஊக்குவித்தார்கள். அதிகார பீடங்களில் அமர்ந்திருந்தவர்களிடமிருந்து உண்மையை வெளிக்கொணர்வது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்திருந்தேன். 2002 கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களிடம் பேட்டிஎடுப்பதைத் தவிர்க்க முடிவு செய்தேன்.
அவர்களை ஏவிய காவல்துறை உயரதிகாரிகளையே சந்திக்க விரும்பினேன். பழம் தின்று கொட்டை போட்டவர்களான அந்த அதிகாரிகள் இந்திய உளவு நிறுவமான ‘ரா’ உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புள்ளவர்கள். அந்த முரட்டுத் தோல் அதிகாரிகளைப் பேச வைக்க மதிநுட்பம் வாய்ந்த புலனாய்வாளராகச் செயல்படும் திறன் தேவைப்பட்டது. அதற்காகத் திட்டமிடுவதும் நிறைவேற்றுவதும் முழுக்க என்னையே சார்ந்திருந்தது. உதவிக்காக எங்கள் அலுவலகத்திலிருந்துஇளநிலைப் பணியாளர் எவரையும் அழைத்துக் கொள்ள முடியாது.
அது மேற்கொண்டுள்ள பணிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். என் கட்டுரைகளை அனுப்பும் ஒவ்வொரு முறையும்,பத்திரிகையின் ஆசிரியர்கள் ஷோம சவுத்திரி, தருண் தேஜ்பால் இருவரும் ‘‘அற்புதம்... தொடர்க...’’, ‘‘திடுக்கிடும் விவரங்கள்’’ என்றெல்லாம் பதிலனுப்பி ஊக்குவித்தார்கள்தான். அதே வேளையில் இந்தப் போர்க்களத்தில் நான் ஒருத்தி மட்டுமே தனித்து நின்று வாள் சுழற்றும் நிலையில் இருந்தேன். என்னைத் தற்காத்துக் கொண்டே, எனது புலனாய்வு முடிவுகள் உண்மையின் அடிப்படையில் அமைவதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.2002ல் ரத்த ஆறு ஓடிய சமயத்தில் பணியிலிருந்த நேர்மையான அதிகாரிகள் பலர் அந்த அக்கிரமங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளாமல் ஒதுங்கியிருந்தது எனக்குத் தெரியும். அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் உதவ முடியுமென்று நான் அவர்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டியபோதெல்லாம் அவை இறுக மூடப்பட்டன. எனக்கிருந்த ஒரே வழி, உண்மையைக் கண்டறிவதற்காக ஒரு பத்திரிகையாளர் கடைசியாகக் கடைப்பிடிக்கும் உத்திதான் - மாறுவேடம் பூணுவது. நான் 26 வயதுப் பெண்.
அதுவும் ஒரு முஸ்லிம். இந்த அடையாளங்கள் குறித்து அதுவரை நான் பொருட்படுத்தியதில்லை. ஆனால், மதவாத அடிப்படையில் வெறித்தனமாக செயல்படுவோர் மிகுந்திருக்கிற ஒரு மாநிலத்தில், இத்தகைய ஒரு புலனாய்வுத் திட்டத்தை பகுத்தறிவுடன் வகுக்க வேண்டியவளானேன். என்னுடன் கல்லூரியில் படித்தவர்களில் சிலர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தார்கள். இன்றைய புகழ்பெற்ற கதாநாயகி ரிச்சா சத்தா என் வகுப்புத் தோழி. அவர் ஒரு நேர்காணலில், தான் ஒரு படத்தில் செய்தியாளராக நடிப்பதாகவும், அதற்காகஎன்னை ஒரு முன்மாதிரியாகத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார். அதேபோன்று மற்றொரு நடிகரும் எனக்கு நெருக்கமானவர். அவருடைய உதவியுடன், நான் அவரது ஒப்பனைக் கலைஞரைச் சந்தித்தேன்.
மும்பை புறநகரில் இருந்த ஸ்டுடியோ ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டே, சரியான முறையில் செயற்கை கூந்தல் (விக்) வைத்துக் கொள்வதற்கான நுட்பங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கைதேர்ந்த அந்த ஒப்பனைக்கலைஞர் கொடுத்த விக்குகள் என்னை மாற்றிக் காண்பித்தன என்றாலும் அது அன்றாடவாழ்க்கையில் பொருந்தி வராது என்று கண்டறிந்தேன். எனவே விக் அணியும் யோசனையைக் கைவிட்டு வேறு அடையாளத்தை உருவாக்குவது பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்.மின்னஞ்சலில் வந்த ஒரு தகவல் அருமையான யோசனையைத் தந்தது. என்னோடு படித்தவர் ஒருவர்அனுப்பிய அந்த மின்னஞ்சலில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற அமெரிக்கன் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
‘யுரேகா’ என்று கத்த வேண்டும் போல இருந்தது. எனக்கொரு அடையாளம் கிடைத்துவிட்டது! அந்தக் கல்லூரியில் பயில்கிற இளம் இயக்குநர் நான்! குஜராத் பற்றியும் மோடி பற்றியும் ஒரு ஆவணத் திரைப்படம் தயாரிக்கப் போகிறேன்!அடுத்த சில நாட்கள் அந்தக் கல்லூரி தொடர்பான தகவல்களை ஆராய்ந்தேன். அதன் பழைய மாணவர்கள், அங்கு தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், இன்ன பிற விவரங்களைத் தேடிப் படித்தேன்.இப்போது எனக்கொரு புதிய பெயரையே நான் சூட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் பெயர் இயல்பானதாக, பழம்பெருமை பேசக்கூடியதாக, ஏற்கத்தக்கதாக, வலுவானதாக இருக்க வேண்டும்.
எனது சினிமா பைத்தியம் இதற்கு உதவியது. தில்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தபோது நான் பார்த்த படம் ‘லஜ்ஜா’ -ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் மாதுரி தீட்சித், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்த அந்தப் படத்தின் சிறப்பு, பெண்களின் வலுவான பாத்திரப்படைப்பு. மைதிலி என்ற, சாதிய ஒடுக்குமுறைகளையும் ஆணாதிக்கக் கொடுமைகளையும் எதிர்கொண்ட பெண்ணாக நடித்திருந்தார் மனிஷா. மைதிலி என்பது ராமனின் மனைவி சீதையின் மற்றொரு பெயர். பிராமணராகவோ தலித்தாகவோ காட்டாத பொதுவான பெயரில், `மைதிலி தியாகி’ பிறந்தாள். ‘மைதிலி தியாகி, தன்னார்வத் திரைப்பட இயக்குநர், அமெரிக்கன் திரைப்படக் கல்லூரி’ என்று விசிட்டிங் கார்டு அச்சிட்டேன்.அடுத்து ஒரு திறமையான உதவியாளர் தேவைப்பட்டபோது, என் வாழ்க்கையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவனாக வந்தான் மைக் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது).
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக் இந்திய-பிரெஞ்சு மாணவர் பகிர்வுத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வந்திருந்தான். இந்திய ஊடகவியலாளர்களோடு பணியாற்றிக் கற்றுக்கொள்ள விரும்பிய அவனுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டேன். எனது புலனாய்வு பற்றிய முழு விவரங்களைத் துல்லியமாக அவனுக்கு நான் தெரிவிக்கவில்லை என்றாலும், சாத்தியமான அளவுக்கு அவனிடம் எனது திட்டம் குறித்து நேர்மையாகச் சொல்லிவிடுவது என முடிவு செய்தேன். என்னுடன் பணி செய்வது போல் நடிப்பதற்கு இந்தியரல்லாத ஒருவர் தேவைப்படுகிறார் என்றும், நான் மேற்கொண்டிருக்கிற மிக முக்கியமான புலனாய்வுத் திட்டத்தின் ஒரு பகுதி இது என்றும் அவனிடம் தெரிவித்தேன். ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டவனிடம், பணியின்போது சிக்கலான கேள்விகளைக் கேட்டு சங்கடத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்றேன். என் புதிய அடையாளத்தின் அங்கீகாரத்துக்கு அவன் ஒரு முகமூடி - அவ்வளவுதான்.
(தொடரும்)