Showing posts with label Harkishan Singh Surjith. Show all posts
Showing posts with label Harkishan Singh Surjith. Show all posts

Wednesday, March 23, 2011

பகத்சிங்: புரட்சியாளர்களின் விடிவெள்ளி - ஹர்கிசன்சிங் சுர்ஜித்





நவஜவான் பாரத் சபாவில் சேர்ந்தபோது எனக்கு வயது 14. நாட்டில் போராட்டங்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சம யம் அது. நாட்டிற்குப் பூரண சுதந்திரம் மற்றும் அதனை அடைவதற்கு ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக, லாகூர் காங்கிரஸ் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மக்கள் மத்தி யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டு பகத்சிங் புரிந் திட்ட தியாகம், எனக்குத் தனிப்பட்ட முறை யில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. பகத் சிங்கின் உச்சபட்ச தியாகத்தால் உத்வேகம டைந்து, நான் கல்வி கற்பதைக் கைவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாகக் குதித்துவிட்டேன். பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்குமேடையில் வெளிப்படுத் திய வீராவேசம் மட்டுமல்ல, அவர்கள் புதி தாகப் பின்பற்றத் தொடங்கிய விஞ்ஞான சோசலிசக் கருத்துக்களும் இதற்குக் காரண மாகும். விஞ்ஞான சோசலிச சிந்தனைகள் அந்த சமயத்தில் அனைவரையும் வேகமாக ஈர்த்து வந்தன. அக்டோபர் புரட்சி மற்றும் அதன் சிந்தனைகள் 1922இல் லாகூரிலிருந்து வெளிவந்த “இன்குலாப்”, 1923இல் ஜலந்தரி லிருந்து வெளிவந்த “தேஷ் சேவாக்”, 1926இல் அமிர்தசரசில் இருந்து வெளிவந்த “கிர்திக்” (தொழிலாளி) போன்ற வெளியீடு களில் அவை தெளிவுபடுத்தப்பட்டன. இந்த இதழ்களில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக் கள், பகத்சிங் மீது அழிக்கமுடியாத அளவிற்கு ஈர்ப்பை ஏற்படுத்தின. பகத்சிங், தில்லி நாடா ளுமன்றத்தில் வெடிகுண்டை வீசியபோது, “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்ட தன் மூலமாக, அம்முழக்கத்தை மிகக்குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் கொண்டுசென்று விட்டார். “நான் எந்தத் தனிப்பட்ட நபரையும் குறி வைத்து இந்த வெடிகுண்டை வீசவில் லை. மாறாக, 1919 மாண்ட்போர்ட் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாடாளு மன்றத்திற்கு எதிராகவே இதனைப் பயன் படுத்துகிறேன்” என்று மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்தார். ஒரு ஜனநாயக முறையில் செயல்படும் நாடாளுமன்றம் என்று பகட்டான முறையில் பிரிட்டிஷார் சொல்லிக் கொண்டி ருந்தாலும், உண்மையில் அது “சுரண்டல் பேர்வழிகளின் குரல் வளையை நெரிக்கும் அடையாளச் சின்னம்” என்று பகத்சிங்கும் பட்டுகேஷ்வர் தத்தும் தங்களுடைய அறிக் கையில் கூறினார்கள். தொழிற்சங்க இயக்கத் தின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்பட்டதற்கு (மீரட் சதி வழக்கு தொடர் பாக கம்யூனிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்ட தற்கு) எதிராகவும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோதமாக்கி டும் ‘தொழில் தகராறு சட்டமுன்வடிவிற்கு’ எதிராகவும் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நடவடிக் கையில் இறங்கினோம் என்று தங்கள் அறிக் கையில் அவர்கள் மேலும் பிரகடனம் செய் தார்கள்.

இந்த இளம் புரட்சியாளர்களின் மனதில் ஏற்பட்ட மாற்றம் இவர்களது அறிக்கையிலி ருந்து மிகத் தெளிவாக உலகுக்குத் தெரிய வந்தது. “ஒரு புரட்சிகர மாற்றம் அத்தியாவசி யம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூக அமைப்பை மாற்ற விரும்பும் அனைவரும் இதனைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.... புரட்சி என்பதன் பொருள், தொழி லாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீ கரிக்கப்படுவதன் அடிப்படையில் ஓர் உன் னதமான சமூக அமைப்பு இறுதியாக நிறுவப் படுவதேயாகும்,” என்று அந்த அறிக்கையில் அவர்கள் மேலும் தெளிவுபடுத்தி இருந்தார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, காந்தி இப்புரட்சியா ளர்களின் வீரஞ்செறிந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, எதிர்மறையான அணுகுமுறையைக் கையாண்டார். ஆயினும், பகத்சிங் மேற் கொண்ட வழிகளைக் கண்டிப்பதற்காக, காங் கிரசாரை அணி திரட்டுவதற்கு அவர் மேற் கொண்ட முயற்சிகள் மிகவும் கடினமாகவே இருந்தன.

பகத்சிங், நாட்டுப்பற்றும் தேச விடுதலைப் போராட்ட வீரர்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர். அவர் மாமா அஜீத்சிங், 1905ஆம் ஆண்டு காலனிமய சட்டத்திற்கு (ஊடிடடிnளையவiடிn ஹஉவ) எதிராகப் போராடிய முன்னோடி. இதன் காரணமாக நாடு சுதந்திரம் அடையும் வரை யில் அவர் நாடு கடத்தப்பட்டிருந்தார். அப்போ தும் அவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடுவதைத் தொடர்ந்து நடத்தி வந்தார். பகத்சிங் தந்தையும், தேச விடுத லைக்கான போராட்டத்தில் தன்னையும் முழுமையாக இணைத்துக் கொண்டவர்தான். இத்தகைய பாரம்பரியம்தான் இயற்கையா கவே பகத்சிங்கிடமும் வீரத்தை விளைவித் திருந்தது. மாணவப் பருவத்திலேயே அவர் புரட்சியாளர்களின் செல்வாக்கிற்கு ஆட்பட் டார். அக்டோபர் புரட்சி அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக வங்காளம், பஞ்சாப், பம்பாய், உத்தரப்பிரதேசம், சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பல கம்யூனிஸ்ட் குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தன.

நான் முன்பே குறிப்பிட்டிருப்பதுபோல, சோசலிசக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு பரப்பிடும் வகையில் ஏராளமான இதழ்கள் வெளிவரத் தொடங்கி இருந்தன. பகத்சிங், ‘‘கிர்த்தி’’ (தொழிலாளி) இதழுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். இந்த இதழ் கதார் கட்சி சார்பாக அமிர்தசர சில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது. அவர்கள் கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர் பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். பகத்சிங், இம்மாத இதழின் பஞ்சாபி மற்றும் உருது மொழிகளின் ஆசிரியர்களான சோஹன் சிங் ஜோஷ் மற்றும் ஃபெரோசிதீன் மன்சூர் ஆகி யோருடன் இணைந்து பணியாற்றினார். இதன் வாயிலாக மார்க்சிசம்-லெனினிசத் தை மேலும் ஆழமாகக் கற்றிட பகத்சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது,. அதன் காரணமாக, இந்தி யப் புரட்சியின் பாதை மார்க்சிச - லெனினிச வழியிலேயே அமைந்திட வேண்டும் என்றும் பகத்சிங் முடிவுக்கு வந்தார்.

அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் இலக்கி யங்கள் மிகவும் குறைவு. மார்க்ஸ் தேர்வு நூல் கள் சிலவற்றின் பிரதிகளைத் தவிர, கம்யூ னிச சித்தாந்தம் குறித்த மங்கலான தெளி வற்ற சில வெளியீடுகளே வெளிவந்திருந்த காலம். பகத்சிங் மாணவராகப் பயின்று கொண் டிருந்த தேசியக் கல்லூரி, இந்த சிந்தனை களைப் பரப்பிடும் மையமாக அப்போது திகழ்ந் தது. இக்கல்லூரியின் முதல்வர் சபிலிதாஸ். இவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. இவர் சோசலிசம் பற்றி எழுதிய பல பிரசுரங்கள் புகழ்பெற்றவைகளா கும். இப்பிரசுரங்களில், அறிவியல் பூர்வமான தர்க்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறை காணப்படவில்லை எனினும், சோசலிச சிந்தனையை நோக்கி மக்களைக் கவர்ந் திழுக்கும் பங்கினை இவையாற்றின.

இன்றுள்ள தோழர்களுக்குக் கிடைத் திருக்கக் கூடிய அளவிற்கு, அபரிமிதமான அளவில் கம்யூனிச நூல்கள் கிடைக்காத அந் தக் காலத்தில், பகத்சிங்கும் அவரது தோழர்க ளும் இப்போதுள்ள கம்யூனிஸ்ட்டுகள் அள விற்கு மார்க்சிச- லெனினிச அறிவியல் மற் றும் சித்தாந்தம் குறித்து ஞானம் பெற்றிருப்பார் கள் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது, எதிர் பார்க்கவும் கூடாது. ஆயினும் அவர்களுக்குக் கிடைத்திட்ட குறைந்த அளவிலான நூல் களைக் கற்றே அவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய பாதையை மிகத் தெளிவாக, அஞ் சாநெஞ்சுடனும் அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடனும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந் தார்கள். இதுதான் மற்ற புரட்சியாளர்களிலி ருந்து பகத்சிங் மற்றும் அவரது தோழர் களைத் தனியே நிறுத்தி வைக்கிறது. இது தான், அவர்கள் வீரமரணத்திற்குப் பின்னரும் அவர்களைப் புகழடைய வைத்திருக்கிறது. அதனால்தான் நாம் அவர்களது நினைவு களை இன்றும் போற்றிப் பாராட்டுகிறோம்.

அவர்களுக்கு மரண தண்டனை விதிக் கப்பட்ட சமயத்தில், நாடு முழுவதும் மிகப் பிரம்மாண்டமான வகையில் வெடித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அவர்களுக்கு மக்கள் மத்தி யில் இருந்த செல்வாக்கை வெளிப்படுத்தின. மக்கள் மத்தியில் வெளிப்பட்ட இத்தகைய ஆவேச உணர்ச்சி அலை காரணமாகத்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உடல்களைத் திருட்டுத்தனமாக அப்புறப்படுத்தி எரியூட்டினர்.

அவர்களது வீரச் செயல்கள் நாடு முழுவ தும் அலை அலையாகப் பிரதிபலித்தது. வீரத் தியாகிகளின் லட்சியத்தின் மீது மக்கள் மத்தி யில் பற்று ஏற்பட்டது. சோசலிசம் குறித்து மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண் டும் என்கிற அவா வளர்ந்தோங்கியது. மக்களின் உணர்வு வெளிப்பாடு காங்கிரஸ் கட்சிக்குள் ளும் வெளிப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் விவாதங்களின்போது, கட்சியில் கணிசமான பகுதியினர் பகத்சிங் மற்றும் தோழர்கள் கொல் லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர்களது வீரமரணமும், அவர்கள் நீதிமன் றத்தில் ஆற்றிய வீரஞ்செறிந்த பிரச்சாரமும் சுதந்திரப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக மாறின.

பகத்சிங் எழுத்துக்களை நுணுகி ஆராயும் போது, பகத்சிங் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெ டுத்தபின், தனக்குக் கிடைத்த அனுபவங்க ளின் அடிப்படையில், நாட்டில் தன் முன்னி ருந்த யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கியதையும் அதன் தொடர்ச் சியாக அரசியல் மற்றும் சித்தாந்தத் தெளிவு பெற்று, சோசலிச லட்சியத்திற்காகத் தன் னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என் கிற நிலைக்கு வந்தார் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

இன்று தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள்

(தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித், 14.11.1995இல் எழுதிய கட்டுரை)

தமிழில்: ச.வீரமணி