Sunday, November 6, 2022

நவம்பர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும் -சீத்தாராம் யெச்சூரி

 நவம்பர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும்

-சீத்தாராம் யெச்சூரி

(தமிழில்:ச.வீரமணி)

இந்த ஆண்டும் இஎம்எஸ் நினைவு கருத்தரங்கைத் துவக்கி வைத்திட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 19 ஆண்டுகளாக, எவ்விதத் தொய்வுமின்றி தொடர்ந்து ஒவ்வோராண்டும் இக்கருத்தரங்கை நடத்தி வருவதற்காக இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2017ஆம் ஆண்டு, மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்ற நூற்றாண்டாக அனுசரித்து வருகிறோம்.  இப்புரட்சியானது 20ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் ஆழமான செல்வாக்கினை ஏற்படுத்திய ஒன்றாகும், மனிதகுல விடுதலை மற்றும் முன்னேற்றத்தில் பாய்ச்சல் வேக மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். மனிதனை மனிதன்சுரண்டுவதை ஒழித்துக்கட்டி ஒரு சமூக அமைப்பை நிறுவுவதை நோக்கி மனிதகுல நாகரிகத்தை முன்னோக்கி உந்தித்தள்ளிய ஒன்றாகும். மார்க்சியம் என்பது ஓர் ஆக்கப்பூர்வமான அறிவியல் என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்த ஒரு சகாப்த நிகழ்வாகும். நவம்பர் புரட்சி என்றென்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பது இதில்தான் அடங்கி இருக்கிறது.

 

காரல் மார்க்ஸ் மறைவிற்குப்பின் 1883இல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்கு பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரையில் அவர் குறிப்பிட்டதாவது: ‘‘அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன. ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போனகாலம் தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளிவர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப்போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாய் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.’’ (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.)

மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், நவம்பர் புரட்சியின் சாதனை என்பது இதுதான்: ‘...சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்து விடுவிக்க வேண்டும், ...’ மார்க்சியத்தின் இத்தகைய தீர்க்கமான முடிவுகளை எதார்த்தமற்றது என்று கண்டித்து, சர்வதேச பிற்போக்குவாதிகள் தாக்குதல் தொடுப்பது இயற்கையேயாகும். மார்க்சிசம் என்பது அறிவியல் உண்மையின் அடிப்படையிலான ஓர் ஆக்கபூர்வ அறிவியல் என்பதை ருஷ்யப்புரட்சியும், அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் அமைந்ததும் மிகவும் அழுத்தமாக உறுதிசெய்தது.

நவம்பர் புரட்சியின் முக்கியத்துவம் எண்ணற்றவைகளாகும். சுரண்டலற்ற ஒரு சமூகஅமைப்பை எதார்த்தமாக்கிய அதே சமயத்தில், உழைக்கும் மக்களின் படைப்பாற்றலையும் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. சோசலிசத்தின் மூலமாக எண்ணற்ற சாதனைகளை மிக வேகமாக அடைய முடிந்தது. அதற்கு முன் மிகவும் பிற்போக்குப் பொருளாதார நாடாக இருந்ததை , ஒரு பலமிக்க பொருளாதார மற்றும் ராணுவ வல்லமை கொண்ட நாடாக, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்ட நாடாக மாற்றி, சோசலிச அமைப்புமுறையின் மேன்மையை உறுதி செய்தது. சோவியத் யூனியனில் சோசலிசம் கட்டி எழுப்பப்பட்டதானது மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வீரகாவியமாகும். 20ஆம் நூற்றாண்டின் வரலாறு, நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து சோசலிசம் நிறுவப்பட்டதால் பிரதானமான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்தை முறியடிப்பதில் சோசலிச சோவியத் யூனியன் குடியரசு மேற்கொண்ட தீர்மானகரமான பங்கும், அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல சோசலிச நாடுகளாக உருவானதும் உலக வளர்ச்சிப்போக்கில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் மீதான வெற்றிக்கு சோவியத் செஞ்சேனை ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பே பிரதான காரணமாகும். இது, காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளில் அதற்கு எதிராகப் போராடி வந்த இயக்கங்களுக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்து, பின்னர் அந்நாடுகள் காலனியாதிக்க சுரண்டலிலிருந்து விடுதலை அடைந்ததைப் பார்த்தோம்.

சீனப் புரட்சியின் வரலாறு படைத்திட்ட வெற்றி, வீரம் செறிந்த வியட்நாம் மக்கள் போராட்டம், கொரிய மக்கள் போராட்டம், கியூபா புரட்சி வெற்றிவாகை சூடியது ஆகியவை உலக வளர்ச்சிப்போக்கின் மீது மகத்தான செல்வாக்கைச் செலுத்தின.சோசலிச நாடுகளின் சாதனைகள் அளவிடற்கரியனவாக இருந்தன. வறுமை மற்றும் எழுத்தறிவின்மை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியது ஆகியவை உலகம் முழுதும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு வலுவான முறையில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

 

முதலாளித்துவத்துக்கு பெரும் சவால்

சோசலிசத்தின் சாதனைகள் உலக முதலாளித்துவத்திற்குப் பெரும் சவால்களாக அமைந்தன. எனவே அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோசலிச நாடுகள் கடைப்பிடித்த மக்கள் நலத் திட்டங்களில் சிலவற்றைக் கடைப்பிடித்தன. உழைக்கும் மக்களுக்கு முன்னெப்போதும் அளிக்க மறுத்திட்ட உரிமைகளைத் தற்போது அளிக்க முன்வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதலாளித்துவ நாடுகள் நலத்திட்ட அரசுகளாக அமைந்து பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தியதற்கு, சோவியத் யூனியனில் சோசலிசத்தின் சாதனைகளால் உத்வேகம் அடைந்த தொழிலாளி வர்க்கம் இந்நாடுகளில் நடத்திய போராட்டங்களின் விளைவுகளேயாகும். இன்றைய தினம் உலகின் பல நாடுகளில் ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் மனிதகுல நாகரிகத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாக மாறி இருக்கின்றன எனில் அதற்கு சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்கள்தான் காரணமே தவிர, முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருணை அல்ல.

இத்தகைய புரட்சிகர மாற்றங்கள் தரமான விதத்தில் மனிதகுலத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றன. நவீன நாகரிக வாழ்க்கையில் அழிக்கமுடியாத வகையில் பங்களிப்பினைச் செய்தன. இவை, பண்பாடு, அறிவியல், அழகியல் என பல்வேறு துறைகளிலும் பிரதிபலித்தன. திரைப்படத்துறையின் இலக்கணத்தில் ஐசன்ஸ்டீன் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த அதே சமயத்தில், ஸ்புட்னிக் நவீன அறிவியலின் எல்லையை விண்ணில் உள்ள கோள்களை ஆராயும் அளவிற்கு விரிவுபடுத்தியது.

அக்டோபர் புரட்சியின் பாரம்பர்ய மாண்புகள்

அக்டோபர் புரட்சியின் விளைவாகத் தோன்றிய சோவியத் யூனியன் இன்றில்லை. அது சிதைந்து சிதறுண்டு போனதற்கான காரணங்களைத் தனியே விவாதித்திருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1992இல் 14ஆவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் ஆய்வு செய்திருக்கிறோம். சோவியத் யூனியன் இன்றில்லை என்ற போதிலும், அக்டோபர் புரட்சியின் புரட்சிகர பாரம்பர்யத்தின் முக்கியமான நான்கு அம்சங்கள், மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்தை நோக்கி செல்வதற்கு  இடையிலான இடைப்பட்ட மாறுதல் காலத்தில் அச்சாணியாக விளங்கக்கூடிய  நான்கு அம்சங்களை  அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும்.

(1)  தோழர் லெனின் அவர் காலத்திய உலக நிலைமைகளுடன் முதலாளித்துவ வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுக்கையில், மூலதனக் குவியல் ஏகபோக மூலதனத்தினை உருவாக்கும் என்று மார்க்ஸ் கூறியதானது, அடுத்து ஏகாதிபத்தியக் கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றார்.  மேலும் தோழர் லெனின் ஏகாதிபத்தியத்தின் சங்கிலியின் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து அதனைத் தகர்க்கும் விதத்தில் மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளில் முதல் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் அந்தப் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து, தகர்த்திட்டார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தை தங்கள் விடுதலைக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிட  ருஷ்யத் தொழிலாளர் வர்க்கத்திற்கு வாய்ப்பினை அளித்தது. எனவே, இன்றைய சூழ்நிலையில், எந்தவொரு நாடும் ஏகாதிபத்தியத்தினை உறுதியுடன் எதிர்த்திடாமல்  தங்கள் நாட்டில் புரட்சிகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்திட முடியாது என்பது தெளிவாகும்.

இன்றைய  ஏகாதிபத்திய உலகமயக் காலத்திலும்கூட அக்டோபர் புரட்சியின் இந்த அம்சம் இப்போதும் செல்லத்தக்கதாகவே தொடர்கிறது.  ஏகாதிபத்திய உலகமயம் என்னும் சங்கிலியின் பலவீனமான கண்ணிகளால் உருவாக்கப்பட்டுள்ள மூலதனத்தின் வர்க்க ஆட்சியின்மீதான அரசியல் தாக்குதல் அழுத்தமாகத் தொடரப்பட வேண்டும்.

இங்கே அடிக்கோடிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், மனிதகுலம் இதற்குமுன் கண்டிராத ஒரு பாதையில்தான் சோசலிசத்தைக் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது. சோசலிசக் கட்டுமானத்திற்கென்று குறிப்பிட்ட அனுபவ வரையறையோ அல்லது இதுதான் இதற்கான சூத்திரம் என்று குறிப்பிட்ட எதுவுமோ கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு, சோவியத் யூனியனில் நடைபெற்ற குறைபாடுகள் என்று கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் குறித்து ஆய்வினை மேற்கொண்டது. அதாவது, சோசலிச அரசின் வர்க்க குணம், சோசலிச ஜனநாயகம் நிறுவப்படுதல், சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் சோசலிசத்தின் கீழ் மக்களின் தத்துவார்த்த சமூக உணர்வினை உயர்த்தத் தவறியமை ஆகிய நான்கினை அது சுட்டிக்காட்டி இருந்தது. ஆகவே, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சிந்தனைகளில் இருந்த குறைபாடுகளினால் அல்ல என்கிற முடிவிற்கு ஒருவர் நிச்சயமாக வர முடியும். மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து நழுவிச் சென்றதே பின்னடைவுக்குப் பிரதானமான காரணமாகும். எனவே, இந்தப் பின்னடைவுகள் மார்க்சிய-லெனினியத்தை மறுதலித்ததாலோ அல்லது சோசலிசச் சிந்தனையாலோ அல்ல.

சரியற்ற மதிப்பீடுகள்: 20ஆம் நூற்றாண்டில் சோசலிம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஈடிணையற்ற விதத்தில் முன்னேற்றங்களைக் கண்டபோதிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஒருசிலவற்றைத்தவிர பல நாடுகளில் ஏற்பட்ட அனைத்து சோசலிசப் புரட்சிகளும் ருஷ்யாவில் இருந்ததைப்போன்ற ஒரு பிற்போக்கு முதலாளித்துவ நாடுகள் அல்ல. இந் நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் கண்ணி, லெனினிசத்தின் புரிதல்படி பலவீனமான ஒன்று  அல்ல. இந்நாடுகளில் உலக முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் மீது தன்னுடைய பிடிப்பை வலுவாகப் பற்றிக்கொண்டிருந்தது. அதன் காரணமாக எதிர்காலத்தில் அதனால் வளரவும் முடிந்தது. சோசலிச நாடுகள் உலகச் சந்தையின் மூன்றில் ஒரு பகுதியை முதலாளித்துவத்திடமிருந்து நீக்கியது. எனினும்,  இதன்மூலம் அதனால், உலக முதலாளித்துவம் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில் தன்னுடைய உற்பத்தி சக்திகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கான கொள்திறனை நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்க முடியவில்லை. இதன்காரணமாக ஏகாதிபத்தியம் நவீன காலனியாதிக்கத்தின் மூலமாக உலகச் சந்தையை விரிவாக்கிக்கொள்வதை சாத்தியமாக்கிக் கொண்டுள்ளது.

முன்னூறு ஆண்டுகளில் முதலாளித்துவத்தால் சாதிக்கமுடியாததை, சோசலிசத்தின் மூலம் முப்பது ஆண்டுகளில் சோவியத் யூனியன் சாதித்துக் காட்டியது. இது, எதிர்காலத்தில் சோசலிச முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்கிற எண்ணத்திற்கு இட்டுச்சென்றது.   சோசலிசத்தால் தோல்விக்கு ஆளாகியுள்ள முதலாளிகள் முன்னிலும் பன்மடங்கு மூர்க்கத்தனத்துடன் திருப்பித்தாக்குவார்கள் என்கிற லெனினிஸ்ட் எச்சரிக்கை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

தவிர்க்கமுடியாதபடி முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்பது தானாய் நடக்கக் கூடிய ஒன்று அல்ல. முதலாளித்துவத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் எதுவும் அதனை சுரண்டலற்ற ஒன்றாகவோ அல்லது நெருக்கடியற்ற ஒன்றாகவோ மாற்றிட முடியாது.  முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டியிருக்கிறது.  ஆனால் அதன் பலம் என்ன என்பது குறித்து சரியான மதிப்பீடு அவசியமாகும். அப்போதுதான் அதனைத் தூக்கி எறியக்கூடிய விதத்தில், மார்க்சிய - லெனினியத்தை ஏற்றுக்கொண்டுள்ள கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரமான தத்துவார்த்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக் கொண்டும் வலுப்படுத்திக்கொண்டும் இருப்பது  அவசியம் என்பதை உணர்ந்திட முடியும். இவ்வாறு ஒரு புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சிகரமான மாற்றம் சாத்தியமில்லை.

சோசலிசத்தின் வல்லமை குறித்து அதீத மதிப்பீடும் கூடாது. முதலாளித்துவத்தின் வல்லமை குறித்து குறைந்த மதிப்பீடும் கூடாது. இவை இரண்டும் ஒரு சரியான ஆய்வினை மேற்கொள்வதற்கும், அதன் காரணமாக இன்றைய உலக நிலைமை குறித்த ஒரு முறையான மதிப்பீட்டை உருவாக்குவதற்கும் அனுமதித்திடாது.

 

சோசலிசம் – ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம்: மேலும், சோசலிசம் என்பது முன்னேற்றத்தின் முதல்படி என்பதுபோல கருதப்பட்டது. ஒருதடவை சோசலிசத்தை அடைந்துவிட்டோமானால், அதன்பின்னர்  எதிர்காலத்தில் எவ்விதத்தடையுமின்றி ஒரு  வர்க்கமற்ற, கம்யூனிச சமூகத்தை எய்தும்வரை எவ்விதமானத் தடையும் இல்லாமல் மிகவும் நேரான பாதையாக இருந்திடும் என்று கருதப்பட்டது. இது ஒரு பிழையான சிந்தனையாகும்.

அனுபவமும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. சோசலிசம் என்பது ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம், அல்லது, மார்க்ஸ் கூறியதேபோன்று, கம்யூனிசத்தின் முதல் கட்டம் --  அதாவது ஒரு வர்க்கப் பிரிவினையுடனனான சுரண்டும் முதலாளித்துவ ஒழுங்கிற்கும், வர்க்கமற்ற கம்யூனிச ஒழுங்கிற்கும் இடையேயான இடைநிலை மாறுபாட்டுக் காலமாகும். எனவே, இந்த இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில், வர்க்க மோதல்களை ஒழித்துக்கட்டிவிட முடியாது. மாறாக உலக முதலாளித்துவம் தான் இழந்த  ஆட்சிப்பரப்பை மீளவும் பெறுவதற்கு முயற்சித்திடும் விதத்தில் அவை உக்கிரமடையும். எனவே இக்காலகட்டம் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருந்திடும்.  அதிலும் குறிப்பாக முதலாளித்துவரீதியாக பின்னடைந்திருந்த புரட்சி நடைபெற்ற  நாடுகளில் இந்த நிலைமை இருந்திடும்.

உலக சோசலிசத்தின் சக்திகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ, சோசலிசக் கட்டுமானத்தில்  எய்தப்பட்ட வெற்றிகளைக் கொண்டும் அதனை ஈட்டிய வர்க்க சக்திகளைச் சரியாக மதிப்பீடு செய்வதைக் கொண்டும் தீர்மானிக்கப்படும். இதனைச் சரியாகச் செய்திடாவிடில், எதிரி குறித்து, குறைத்து மதிப்பீடு செய்வதற்கே இட்டுச் செல்லும். அந்த எதிரி சோசலிச நாடுகளில் இருப்பினும் சரி, அல்லது வெளியே இருந்தாலும் சரி. சோசலிசம் குறித்த அதீத மதிப்பீடு என்பதும் சோசலிச நாடுகளில் உருவான பிரச்சனைகள் குறித்து கண்டுகொள்ளாது விடுவதற்கும், உலக முதலாளித்துவம் தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும்.

துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல் என்பதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம் என்று மாமேதை லெனின் நமக்கு எப்போதும் நினைவுபடுத்தி வந்துள்ளார்.  இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வு தடுமாற்றம் அடைந்தால், அல்லது எதார்த்த நிலைமை குறித்து சரியான புரிதல் இல்லாமல் தவறிழைத்தோமானால், பின், பிழையான புரிதல்களும் நெறிபிறழ்வுகளும் உண்டாகும்.

இத்தகைய நெறிபிறழ்வுகள்தான், முக்கியமாக, சோவியத் யூனியனின் பிந்தைய ஆண்டுகளில் மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சாராம்சத்திலிருந்து விலகல்களும், குறிப்பாக, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசுக்குப் பின்னர் சோசலிசக் கட்டுமானத்தின்போது தீர்க்கப்படாதிருந்த பிரச்சனைகள் இத்தகைய பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றன.

சோசலிசக் கட்டுமானத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய குறைபாடுகள்

சோசலிசக் கட்டுமானத்தின்போது நான்கு முக்கியமான அம்சங்களில் குறைபாடுகள் நடந்துள்ளன. இதனை விவாதிப்பதற்கு முன்பாக, சோசலிசம் என்பதைக் கட்டும் பணி, மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத ஒரு பாதையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை, மீண்டும் ஒருமுறை நாம் அடிக்கோடிட்டுக்கொள்வது அவசியமாகும். இதற்கென்ற எந்தவிதமான குறிப்பிட்ட சூத்திரமோ அல்லது வரைபடமோ கிடையாது. இத்தகு எதார்த்த உண்மைகளையும் நாம் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்திடும்போது கணக்கில் கொண்டிட வேண்டும்.

அரசின் வர்க்க குணம்

மேற்கண்ட நான்கு குறைபாடுகளில், முதலாவது, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணம் சம்பந்தமானதாகும்.  முந்தைய முதலாளித்துவ அரசமைப்பில் சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களுக்கு எதிராக, பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தின்  சர்வாதிகாரமே, அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணமாகும்.

எனினும், இந்த வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருந்தது.  தோழர் ஸ்டாலின் இதற்கான ஓர் அரசியல் அறிக்கையை 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசில் சமர்ப்பித்தார்.  ஆயினும், சோசலிசம் பல்வேறு கட்டங்களைக் கடந்தசெல்ல வேண்டியிருந்ததால், இத்தகு வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருந்தது.  சோவியத் யூனியன், முதலாளித்துவ  நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சூழலில், அல்லது உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், சோவியத் யூனியனில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த வடிவத்திலேயே தொடர்ந்து நீடித்திருந்துவிட வேண்டிய அவசியம் தேவையாய் இருக்கவில்லை.  பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பல்வேறு கட்டங்களையும், சோசலிச அரசின் பல்வேறு வடிவங்களையும்,  மிகவும் விரிவானமுறையில்  1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசின் அரசியல் அறிக்கையில் தோழர் ஸ்டாலின்  சமர்ப்பித்தார். இதற்கு "சித்தாந்தம் குறித்த கேள்விகள்" ("Questions of theory") என்று தலைப்பிட்டிருந்தார்.  எனினும், இவ்வாறு  வடிவங்களை மாற்றியமைத்ததை நடைமுறைப்படுத்தும்போது, இதற்கான இயக்கங்களை அரசு அறிவிக்கும்போது அதில் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு தேவைப்பட்டது. இதனை  மக்கள் தாமாக முன்வந்து மேற்கொள்வதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தாததன் காரணமாக, அவர்கள் அரசிடமிருந்து தனிமைப்படுவதற்கும், அரசின் மீது அதிருப்தி கொள்வதற்கும் இட்டுச்  சென்றது. மேலும், இதே வடிவம் சோசலிச நாடுகள் அனைத்திற்கும் ஒரே சீரான முறையில் அமல்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அந்தந்த நாட்டின் வரலாறு மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வுசெய்வதன் பின்னணியில்  தீர்மானிக்கப்பட வேண்டியதாகும். 

தோழர் லெனின் இதுகுறித்து தன்னுடைய அரசும் புரட்சியும் என்னும் நூலில் மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று தோழர் லெனின் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும்,  வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது என்றும் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டிருந்தார். "முதலாளித்துவ அரசுகளின் வடிவங்கள் மிகவும் தீவிரமானமுறையில் வேறுபட்டிருக் கின்றன, எனினும் அவற்றின் வடிவங்கள் வேறுபட்டிருந்தபோதிலும், இறுதி ஆய்வில் தவிர்க்கமுடியாதவகையில் அவை முதலாளிவர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருந்திடும். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும், வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது."

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான கிழக்கு  ஐரோப்பிய சோசலிச நாடுகள்,  சோவியத் யூனியனில் இருந்தைப்போன்ற சோவியத் வடிவத்தை கையகப்படுத்திக் கொண்டன. அவை தங்கள் நாடுகளின் துல்லியமான சமூகப் பொருளாதார நிலைமைகளையோ மற்றும் வரலாற்றுப் பின்னணியையோ கணக்கில் கொள்ளவில்லை.  இவற்றின் விளைவாக இந்நாட்டின் அரசுகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டன. இவற்றுக்கு எதிராக மக்களின் இடையேயான அதிருப்தியும் வளர்ந்துகொண்டிருந்தன.  

சோசலிஸ்ட் ஜனநாயகம்: இரண்டாவதாக மிகப் பெரிய குறைபாடு, சோசலிஸ்ட் ஜனநாயகம் சம்பந்தப்பட்டதாகும். ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் கீழ் இருந்ததை விட சோசலிசத்தின்கீழ் ஆழமானதாகவும், வளமானதாகவும் இருந்திட வேண்டியது அவசியம். முதலாளித்துவம் பெயரளவில் ஜனநாயக உரிமைகளை வழங்கும் அதே சமயத்தில், அது மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அதனை உண்மையில் அளித்திடாது. (முதலாளித்துவத்தின்கீழ் ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் எதனையும் வாங்குவதற்கு உரிமை படைத்தவன்தான். எனினும் அவ்வாறு வாங்குவதற்கான சக்தியை பெரும்பாலானவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.) ஆனால் சோசலிசம் எதனையும் வாங்கும் உரிமையையும், அதற்கான சக்தியையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கும்.

எனினும், பல நாடுகளில் சோசலிஸ்ட் கட்டுமானம் நடைபெற்ற சமயத்தில், இரு விதமான குறைபாடுகள் நடைபெற்றுள்ளன. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு,  பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையின் சர்வாதிகாரமாக, அதாவது கம்யூனிஸ்ட்  கட்சியின் சர்வாதிகாரமாக, மாற்றப்பட்டிருந்தது. இதுவும் சிறிது காலத்திற்கப்பின் கட்சித் தலைமையின்  சர்வாதிகாரமாக மாற்றப்பட்டது. இவ்வாறு சோசலிச அரசு என்பது, ஒட்டுமொத்த  பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சோசலிச அரசு என்பது, நடைமுறையில்  கட்சியின் ஒரு சிறு பிரிவால், அதாவது  கட்சியின் அரசியல் தலைமைக்குழுவால்,  மேற்கொள்ளப்படும் ஒரு விசித்திரமான நிலைமை ஏற்பட்டது. 

அரசு அறிவிக்கும் ஆணைகள் பெரும்பான்மையான மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் அமைந்திடவில்லை.  அவை சோவியத்துகள் போன்ற அடிப்படையான ஜனநாயக அமைப்புகளின் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்லப்படவில்லை. மாறாக அரசின் கட்டளைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன.  இவை இயற்கையாக மக்களை அரசிடமிருந்து தனிமைப்படுத்திட இட்டுச்சென்றது.

இரண்டாவதாக, ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்தும் சமயங்களில், உள்கட்சி ஜனநாயகம் என்பது அடிக்கடி பலிகிடாவாக மாறியது.  சோவியத் யூனியனின் வரலாற்றில் சில சமயங்களில் இருந்ததைப்போல மத்தியத்துவம் முன்னுக்கு வந்தது. இது, அதிகாரத்துவம் வளர்வதற்கு இட்டுச் சென்றது. இவ்வாறு அதிகாரத்துவம் வளர்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இவற்றின் காரணமாக சோசலிசத்திற்கு விரோதமான போக்குகள், ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்குச் சலுகை போன்றவை தலை தூக்கின.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல நாடுகளில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த  பெரும்பாலானவர்கள் சலுகைகள் அனுபவித்தது இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்சியின் புரட்சிகரத் தன்மை கொள்ளை போய்விட்டது, கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டது, கட்சித் தலைமையிடமிருந்து கட்சி அணிகளும் தனிமைப்பட்டன.   

இதுபோன்ற திரிபுகளைச் சரிசெய்வதற்குப்  பதிலாக, கோர்பசேவ் தலைமையானது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் கைவிடும் நிலைக்குச் சென்றது. நடைமுறையில் அது புரட்சிகரமான கட்சியையே நிராயுதபாணியாக்கியது,  அவசியமா  திருத்தங்கள் மேற்கொள்வதைத் தடுத்தது. இவை அனைத்தும் சோசலிசத்தையே கைவிடும் நிலைக்கு இறுதியில் இட்டுச் சென்றது.

சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானம்:  சில குறைபாடுகள் காணப்பட்ட மூன்றாவதான பகுதி என்பது சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானமாகும். அக்டோபர் புரட்சி வெற்றிபெற்றபின் முதலில் அது தேர்ந்தெடுத்த பாதை தொழிலாளர்-விவசாயிக் கூட்டணியின் அடிப்படையில் வெற்றிகரமாக ஜனநாயகப் புரட்சியை நிறுவியதாகும். இதுவே புதிய சவால்களை எதிர்கொண்டது.  ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோசலிஸ்ட் புரட்சிக்குத் மாறுவதற்கான இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் தேவைப்பட்டது, எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதார அடிப்படையில் சொத்து உறவுகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிறுவ வேண்டியிருந்தது.  தொழிலாளி – விவசாயிக் கூட்டணிதான் ஜனநாயகப் புரட்சிக்கான முதுகெலும்பு என்கிற உண்மை, விவசாயத்தில் சொத்து உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது என்பது விவசாயிகளில் சில பிரிவினரது அந்தஸ்தைக் கடுமையாகப் பாதித்தது என்று பொருளாகும். இவர்கள்தான் ஜனநாயகப் புரட்சியை எய்துவதற்குத் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளியாக இருந்தவர்கள். உள்நாட்டு யுத்தம் மற்றும் சோவியத் யூனியன் முதலாளித்துவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இந்த சிக்கலான பிரச்சனை மேலும் சிக்கலானது.  ஆனாலும், சோசலிஸ்ட் அரசை நிலைநிறுத்துவதற்கும்,  சோசலிஸ்ட் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் கட்டி எழுப்புவதற்கும் அபரிமிதமான தொழில்மயம் அவசியமாக இருந்தது. ‘யுத்த கம்யூனிசம்’ (‘war communism’), ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ (new economic policy) காலங்களின்போது, தோழர் லெனின் இந்தப் பிரச்சனையை இறுகப்பற்றிக் கொண்டிருந்தார். 

தோழர் லெனின் முன்னதாகவே இறந்ததை அடுத்து, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சோசலிஸ்ட் தொழில் மற்றும் விவசாயிகளின் விவசாயம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு குறித்து ஒரு விவாதம் எழுந்தது.   விவசாய உற்பத்தி அபரிமிதமாக இருந்ததன்  காரணமாக, அதன்மூலம் ஏற்பட்ட உபரியை தொழிற்துறை செயல்பாடுகளுக்கு எந்த அளவிற்குப் போடுவது என்பது தொடர்பாகவும், இதனை எப்படி தீர்மானிப்பது என்பது தொடர்பாகவும் விவாதங்கள் முன்னுக்கு வந்தன. தொழில்துறை நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு விவசாய உற்பத்தியின் உபரியை வெகுவாகப் பயன்படுத்தப்பட வேண்டியிருந்தது. இதனை எப்படிச் செய்வது? இதில் பிரச்சனைகள் எழுந்தன. விவசாயத்துறையில் புதிதாக உருவான பணக்கார விவசாயிகள் (குலாக்குகள்) வர்க்கம் அக்டோபர் புரட்சிக்கு ஒரு வித்தியாசமான விதத்தில் அச்சுறுத்தலாக அமைந்தனர்.

எனினும், உலகம் முழுதும் சோவியத் யூனியனுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் தொடர்ந்து இருந்த சூழ்நிலையில், இப்பிரச்சனையை தோழர் ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக சமாளித்தார். அவ்வாறு சமாளிக்காமல் மட்டும் இருந்திருந்தால் சோவியத் யூனியன் நாஜிக்கள் சோவியத் யூனியன் மீது மேற்கொண்ட தாக்குதலை வெற்றிகரமானமுறையில் முறியடித்திருக்க முடியாது.  அப்போது தோழர் ஸ்டாலின் மக்களுக்கு விடுத்த அறைகூவல்களை நினைவுகூருங்கள்.  நாஜிக்களுக்கு எதிராகப் போர்முனையில் போராடுவதால் மட்டும் வென்றுவிடமுடியாது, மாறாக அதனை தொழிற்சாலைகளிலும்,  வயல்களிலும் நாம் வெற்றிபெறுவதன் மூலமே சாத்தியமாக்கிட முடியும்.  சோசலிசத்தைக் காப்பதற்காகவும், உலகை பாசிசத்திலிருந்து காப்பதற்காகவும், போர்முனையில் சோவியத் செஞ்சேனை வீரஞ்செறிந்த முறையில் போராடுவதற்கு, எவ்விதத் தொய்வுமின்றி அவர்களின் தேவைகள் எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்யப்பட்டதே அடிப்படைக் காரணமாகும்.

ஆனால் "சந்தைப் பொருளாதாரம் என்கிற முதலாளிகளின் கடவுள்", செல்வாக்கு செலுத்தியதன் காரணமாகவும், இத்தகைய சோசலிஸ்ட் பொருளாதார அடித்தளங்களை,  கோர்பசேவ் படிப்படியாகக் கைவிட்டதன் காரணமாக, சோசலிசமே கைவிடப்படக்கூடிய நிலைக்கு கொண்டுசென்றது.

தத்துவார்த்த உணர்வினை உதாசீனம் செய்தல் (Neglect of Ideological Consciousness):  அடுத்து மாபெரும் குறைபாடு காணப்பட்ட பகுதி, மக்களின் கூட்டு தத்துவார்த்த உணர்வினை (collective ideological consciousness of the people) வலுப்படுத்தத் தவறியமையாகும்.  மக்களிடம் இத்தகைய கூட்டு தத்துவார்த்த உணர்வு உயர்ந்தோங்கி இருப்பதன்மூலமாகத்தான் சோசலிசம் நிலைத்து நிற்கமுடியும் மற்றும் அதனை மேலும் வளர்த்தெடுக்க முடியும். இதனை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த உறுதிப்பாடு இல்லாமல் மேற்கொண்டிட முடியாது.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசின் திருத்தல்வாதி திரிபுக்கு (revisionist deviation)ப் பின்னர் இது மிகப்பெரிய ஆபத்தாக (casualty-ஆக) மாறியது.  

இக்குறைபாடுகளின் காரணமாக, சோவியத்  யூனியனிலும் இதர சோசலிச நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்புரட்சி சக்திகள் முன்னுக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டு, சோசலிசம் கைவிடப்பட்டது.

இவ்வாறு இந்நாடுகளில் சோசலிசம் கைவிடப்பட்டதற்கு, மார்க்சிசம்-லெனினிசத்தின் அடிப்படைக் கொள்கைகள் காரணமல்ல. மாறாக, மார்க்சியம்-லெனினியத்தின் அறிவியல் மேற்றும் புரட்சிகர சாராம்சத்திலிருந்து நழுவிச் சென்றதே காரணமாகும்.  உலக முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து சரியற்ற மதிப்பீடுகளும் காரணமாகும். மார்க்சியத்தின் ஆக்கபூர்வ அறிவியலை வறட்டுத் தனமான முறையில் வியாக்கியானம் செய்ததும் காரணமாகும். மேலும் சோசலிசக் கட்டுமானத்தின்போது மேலே கூறியவாறு மேற்கொண்ட குறைபாடுகளும் காரணமாகும்.

நடப்பு முதலாளித்துவ நெருக்கடி – சோசலிச மாற்று

மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட இன்றைக்கும் ஒரே வழி, சோசலிசம்தான்.  இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் இன்றைய நிலைமைகளிலிருந்து மீள்வதற்கும் ஒரே மாற்று சோசலிசம்தான்.  2008இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலிருந்தே, உலக முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதனை மேலும் ஆழமான முறையில் புதிய நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றுவதன் மூலம் இதனை நன்கு உணர முடியும். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  மேலும் அதிகரித்திருக்கின்றன.  முதலாளித்துவ அமைப்பின்கீழ் இருந்துகொண்டு கொண்டுவரப்படுகிற எந்தவொரு சீர்திருத்தமும் மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட முடியாது. சோசலிசம் என்கிற அரசியல் மாற்று ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும். சுரண்டலிலிருந்து மனிதகுலத்தை விடுவித்திட வேண்டுமானால், மனிதகுலத்தின்மீது முதலாளித்துவத்தால் ஏவப்பட்டுள்ள கொடுங்கோன்மையாட்சிக்க எதிராக சோசலிசத்திற்கான அரசியல் மாற்று தன் தாக்குதலை உக்கிரப்படுத்திட வேண்டும்.

முதலாளித்துவத்தின் மீதான நெருக்கடி எவ்வளவுதான்  உக்கிரமானதாக இருந்தபோதிலும், நாம் முன்பே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல, எந்தக் காலத்திலும் அது தானாக வீழ்ந்துவிடாது. முதலாளித்துவத்திற்கு சவால் விடக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்று உருவாகாதவரை, மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் எப்படியாவது தன்னைத் தக்கவைத்துக் கொண்டுதான்  இருக்கும். எனவே, சோசலிஸ்ட் அரசியல் மாற்று அதனை எதிர்கொள்ளக் கூடிய விதத்தில் வெகுவாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தற்போதைய முதலாளித்துவத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுதும் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிற போதிலும்,   இன்றையநிலையில் இவை அனைத்தும் தற்காப்புநிலையில்தான் இருந்து வருகின்றன.  தற்காப்புநிலையில்தான் என்று ஏன் கூறுகிறேன் என்றால், மக்கள் தங்கள் போராட்டங்களின் மூலமாகத் தாங்கள் இதுநாள்வரை பெற்றிருந்த ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் பறிக்கப்படும்போது அவற்றைத் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் இன்றைய போராட்டங்கள் இருந்துவருகின்றன.  இத்தகு போராட்டங்கள் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய அளவிற்கு அதிகரித்திட வேண்டும். இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் மீதான தீர்மானத்தில் அலசி ஆராய்ந்திருப்பதைப்போல, லெனினிஸ்ட் அகநிலைக் காரணியை வலுப்படுத்திட வேண்டும். அதாவது, மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு புரட்சிக் கட்சியின் வல்லமையை வலுப்படுத்திட வேண்டும்.

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப்பணியைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறது. நமது கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடும், ஸ்தாபனத்தின் மீதான பிளீனமும் இந்தியாவின் நிலைமைகளில் அகக்காரணியை (கட்சியை) வலுப்படுத்தும் குறிக்கோளை எய்தக்கூடிய விதத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டங்கள்

அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்றைய தினம் தன் நிலையை சர்வதேச அளவில் வலுவாக்கிக்கொண்டுள்ள நிலையில், தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காக மூன்று முக்கிய குறிக்கோள்களை எய்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

முதலாவதாக அது இப்போது மீதம் இருந்துவரும் சோசலிஸ்ட் நாடுகளைக் கலைத்திட விரும்புகிறது. இரண்டாவதாக,  அணிசேரா இயக்கத்தின்கீழ் முக்கியமாக இருந்த  மூன்றாம் உலக நாடுகளை வலுவிழக்கச்செய்வதன்மூலம் எதற்கும் இலாயக் கற்றவைகளாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இறுதியாக, உலகத்தின்மீது பொதுவாகவும், குறிப்பாகத் தனக்குப் போட்டியாக வருபவர்கள் யார் என்று கருதுகிறதோ அவர்களை அழித்து ஒழித்து, தன்னுடைய ராணுவ மற்றும் பொருளாதார மேன்மையை நிலைநிறுத்திட முயற்சிக்கிறது. 

ஏகாதிபத்தியத்தின் ஒருதுருவ உலகக் கோட்பாட்டைத் திணிக்கும் முயற்சிக்கு எதிராக வலுவானத் தத்துவார்த்த தாக்குதலால் வெற்றிபெற முடியவில்லை.  ஏகாதிபத்தியம், ஜனநாயகத்தை சுதந்திர சந்தையுடன் சமமாக்கப் பார்க்கிறது. இத்தகைய நிலைப்பாட்டுடன்,  தன்னுடைய மேலாதிக்கத்தையும் மற்றும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ‘சுதந்திர சந்தைகளை’த் திணிப்பதை எதிர்த்திடும் ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தலையிடுகிறது.

ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகள்’ மற்றும் ‘மண்ணின் மாண்புகள்’ ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கிறோம் என்ற பெயரில் சுயேச்சையான இறையாண்மை நாடுகளுக்கு எதிராக ராணுவரீதியாகத் தலையிடுகிறது. இவ்வாறு ராணுவத் தலையீடுகளின் மூலமடாக அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவருகிறது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ந்துவந்த முதலாளிவர்க்கம் தங்கள் வர்க்க ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, தேசிய இறையாண்மையை மிகவும் புனிதமானதாக உயர்த்திப்பிடித்தது. இன்றையதினம், ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகளை’ப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அந்த நாடுகளின் தேசிய இறையாண்மையை மறுதலித்து, ராணுவ ரீதியாகத் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்தியம், வெறித்தனமாக கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கம்யூனிசத்தை, சர்வாதிகாரத்துடனும் பாசிசத்துடனும் சமப்படுத்திக் கூறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் கம்யூனிசத்தை பாசிசத்துடன் இணைத்து சமப்படுத்தி, அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று சட்டங்களை இயற்றி இருக்கிறது.  செக் குடியரசு, போலந்து போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கம்யூனிச அடையாளங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வமாகத் தடை விதித்திருக்கின்றன.

கடந்த இருபதாண்டுகளில் இந்தப் போக்குகள் மேலும் உக்கிரமடைந்திருக்கின்றன. சோவியத் யூனியன் தகர்ந்ததற்குப்பின்னர் மார்க்சியத்தை மக்கள் மத்தியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன. எனவேதான் மார்க்சியத்தைப் பல்வேறுவிதமாக திரித்திடும் சித்தாந்தங்கள் அறிவுஜீவிகள் மத்தியில் வலம் வருவது வாடிக்கையாகிவிட்டன. இவற்றின்மூலம் மக்களைக் குழப்பிடும் பணி வெகுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.

பின்-நவீனத்துவம் (Post-Modernism): ஏகாதிபத்தியமும், உலக நிதி மூலதனமும் எண்ணற்ற மார்க்சிஸ்ட் எதிர்ப்பு சித்தாந்தங்களை உருவாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் அனைத்து முற்போக்கு சித்தாந்தங்களையும் மறுதலித்திட முனைகின்றன.  வர்க்கப் போராட்டம் மறைந்துவிட்டது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் பங்களிப்பு மறுதலிக்கப்பட்டுவிட்டது போன்ற சிந்தனைகள் முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியிலிருந்து வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ள சித்தாந்தம்தான், பின்-நவீனத்துவம் என்பதாகும்.

பின்-நவீனத்துவம் என்பது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவம் வெற்றிபெற்று, சோசலிசத்திற்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உருவான முதலாளித்துவ தத்துவார்த்தக் கண்ணோட்டமாகும்.  இத்தத்துவமானது மார்க்சியம் உட்பட எந்தவொரு தத்துவமோ, அரசியலோ உலகளாவிய அளவில் இருந்திடமுடியாது என்று நிராகரிக்கிறது.  பின்-நவீனத்துவம் என்பது முதலாளித்துவத்தையோ அல்லது சோசலிசத்தையோ ஒரு கட்டமைப்பு (a structure) அல்லது ஒரு முறை (a system) என்கிற விதத்தில் அங்கீகரித்திடவில்லை. இவ்வாறு, இது, உலக நிதி மூலதனத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு தத்துவமாகும். ஏனெனில் இது வர்க்கங்கள் இருப்பதை மறுதலிக்கிறது. எனவே, வர்க்கம் மற்றும் வர்க்கப் போராட்டம் என்பனவற்றையும் மறுதலிக்கிறது. மேலும் இது, அடையாள அரசியலை உந்தித்தள்ளுவதற்கும், மக்களை அரசியலற்றவர்களாக ஆக்குவதற்கும் மிகவும் பொருத்தமான ஒரு தத்துவமுமாகும்.

கலாச்சாரா மேலாதிக்கம் (Cultural Hegemony): இந்தக் கால கட்டத்தில் ஏகாதிபத்தியமும், நவீன தாராளமயமும்  தங்களுடைய கலாச்சார மேலாதிக்கத்தை வலுவாக நிறுவியுள்ளன.  இவை மக்களைத் தங்களுடைய தகவல் (Information), தொடர்பு (Communication) மற்றும் பொழுதுபோக்கு (Entertainment) என்கிற மூன்று ஐசிஇ (ICE) ஆகியவற்றைத் தங்களுடைய மெகா கார்ப்பரேஷன்கள் மூலமாக மக்களிடையே கொண்டுசெல்வதில் மூர்க்கத்தனமாக இறங்கியிருக்கின்றன.  தங்களுடைய கார்ப்பரேட் ஊடகங்கள் மூலமாக செய்திகளைத் திரித்துக்கூறுதல் என்பதும், மக்களிடம் கூறப்படும் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதும் இவற்றின்  ஏகபோகமாக மாறியிருக்கின்றன.  கலாச்சாரத்தை வணிகமயமாக்குவது உலகமயத்தின் ஒரு பகுதியாகும்.

வர்க்க மேலாதிக்கத்தின் காரணமாக, உலகமயக் கலாச்சாரம் மக்களை தங்களுடைய எதார்த்தமான  வாழ்க்கை நிலைமைகளிலிருந்து கத்தரித்துவிட முயல்கிறது. இவர்களின் கலாச்சாரம் என்பது அழகியலை மேம்படச் செய்வதற்கானது அல்ல, மாறாக மக்கள் மத்தியில் காணப்படும் வறுமை மற்றும் ஏழ்மை  ஆகியவற்றால் உண்டாகும் பிரச்சனைகளிலிருந்து அவர்களை திசைதிருப்புவதற்கானதாகும்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை ஏகாதிபத்தியம் தன் ஆளுகையை அதிகரித்துக் கொள்வதற்கும், மக்கள் இயக்கங்களை நசுக்குவதற்கும் நன்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.

பின்-உண்மை (Post-Truth): மார்க்சியத்திற்கும், சோசலிசத்திற்கும் எதிராக, முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சொற்றொடர்தான், பின்-உண்மை (Post-Truth) என்பதாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தன்னுடைய 2016ஆம் ஆண்டின்  அகராதியில் ‘இந்த ஆண்டின் புதிய வார்த்தை’ என இதனைக் குறிப்பிட்டு, இதன் பொருளை வரையறுக்கும்போது, உணர்ச்சிக்கும் தனிப்பட்ட நம்பிக்கை அடிப்படையில் எழுப்பப்படும் வேண்டுகோள் அளவிற்கு  மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு செலுத்தாத சொற்றொடர் என்று கூறுகிறது.

டொனால்டு டரம்ப் மற்றம் நரேந்திர மோடி அரசோச்சும் இக்காலத்தில் இதனைப் புரிந்துகொள்வது எளிதாகும். ஈராக்கில் யுத்தத்தைத் தொடங்குவதற்காக அமெரிக்க புஷ் நிர்வாகம் அவிழ்த்துவிட்ட பொய்கள் மற்றும் ஏகாதிபத்திய அரசியல் மற்றம் ராணுவ ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்திட அவிழ்த்துவிடப்படும் பொய்களும் இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இந்தியாவிலும் இதேபோன்றே முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்கள் அவிழ்த்துவிடப்படுவதிலிருந்து இதனை நோம்  அறிந்துகொள்ள முடியும்.  மக்கள் மத்தியில் மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதற்காக தலித்துகள் மற்றம் முஸ்லீம்கள் மீது பசுப்பாதுகாப்புப் படை போன்ற தனியார் ராணுவத்தினர் கொலைபாதகத் தாக்குதல்கள் தொடுப்பதிலிருந்து இதனைத் தெரிந்துகொள்ள முடியும்.

பின்-உண்மை என்கிற சொற்றொடரும் மனிதகுல வரலாற்றில் புதிதான ஒன்றல்ல. ஹிட்லரின் கொள்கைப் பரப்பு அமைச்சராக இருந்த கோயபல்ஸ், "ஒரு பெரிய பொய்யைக் கூறுங்கள், திருப்பித் திருப்பி  அதனைக் கூறுங்கள், அது உண்மையாகிவிடும்," என்று கூறிவந்தான் அல்லவா?  அதுதான் இது. இதுதான் அன்றைக்கு நாஜி பாசிஸ்ட்டுகளின் பிரச்சாரத்திற்கு ஆணிவேராக இருந்தது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் இந்துத்துவா வெறியர்களுக்கும்  முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு ஹிட்லரின் பேச்சுகள் வானொலியில் ஒலிபரப்பப்படும் போது எப்படி மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டினார்கள் என்று ஒலிபரப்பப்பட்டதோ அதேபோன்றுதான் இன்றைக்கு மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிதுருக்கிறது. எனவே, பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி என்பது புதிய உருவாக்கம் ஒன்றுமல்ல.

இவ்வாறு ‘பின்-உண்மை’ என்பதும் மக்களை தாங்கள் சுரண்டப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் எதிரான போராட்டங்களிலிருந்து திசைதிருப்புவதற்கான ஒன்றே தவிர, வேறல்ல.

மார்க்சியம் ஒரு வறட்டு சூத்திரம்  அல்ல. மாறாக, அது ஓர் ‘ஆக்கபூர்வமான அறிவியல்’ ஆகும். அது, "துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வு செய்வதன்" அடிப்படையில் அமைந்த ஒன்று. மார்க்சியம், வரலாற்றைப் பொதுவாகவும், முதலாளித்துவத்தைக் குறிப்பாகவும் ஆய்வுசெய்திடும் ஓர் அணுகுமுறையாகும்.  மாமேதை மார்க்ஸ் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள இந்த அடித்தளத்தில் நின்றுகொண்டுதான், நாம் இன்றைய சூழ்நிலையைச் சரியான முறையில் புரிந்துகொண்டு, நம் தத்துவார்த்த சிந்தனையை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம்.

இந்த அடிப்படையில் நான் சரியானமுறையில் நின்றுகொண்டு, வர்க்க ஒற்றுமையையும், தொழிலாளர் ஒற்றுமையையும்  சீர்குலைக்கும் விதத்தில்,  நமக்கு எதிராகத் தற்போதும், எதிர்காலத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தங்களை முறியடித்திட வேண்டியது அவசியமாகும்.

இந்திய நிலைமைகளில் சோசலிசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் தொடர்பான தீர்மானத்தில், இந்தியாவில் சோசலிசம் என்பதன் கருத்தாக்கம் என்ன என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் சோசலிசம் எப்படி இருக்கும் என்பதை,  இந்தியப்புரட்சியின் ஜனநாயகக் கட்டம் நிறைவடைந்தபின்புதான், அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெற்ற பின்னர்தான் கெட்டிப்படுத்திட முடியும்.

எனினும், சோசலிசத்தின்கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு எவை எவை தேவை என்பதை நம்மால் எதிர்பார்த்திட முடியும். எனவே, இந்தியாவில் சோசலிசம் என்றால் அதன் பொருள் என்ன?

அதன்பொருள், அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, முழு வேலைவாய்ப்பு,  அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி.

அதன் பொருள்,தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நலிந்த பிரிவினர் என அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரநிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மேம்பாடு.

அதன்பொருள், மக்கள் அதிகாரமே உயர்வானது. ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் சமூகத்தின் அனைத்து அரசியல் மற்றும் சமூக ஒழுங்கிலும் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்தவைகளாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதுபோன்ற உரிமைகள் தரப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் அவை மாயை. இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி பெரும்பாலான மக்களுக்கு அதற்கான வல்லமை கிடையாது. சோசலிசத்தின் கீழ், அனைத்து மக்களுக்கும் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தி இருப்பதன் காரணமாக மனிதகுல வாழ்வின் தரம் உயர்ந்து, அங்கே சோசலிஸ்ட் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் செழுமையுடன் காணப்படும்.

அதன் பொருள், சாதி அமைப்புமுறை ஒழிக்கப்படுவதால் சாதி ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அனைத்து மொழிப்பிரிவினரும் சமமாக நடத்தப்படுவார்கள். அனைத்து மொழிகளும் சமமான முறையில் வளர்த்தெடுக்கப்படும். அனைத்து சிறுபான்மையினருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் உண்மையான சமத்துவம் அளிக்கப்படும், பாலின ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதன் பொருள், சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டமைப்பு, சோசலிச உற்பத்திச் சாதனங்கள் மற்றும் மத்திய திட்டமிடல்  அடிப்படையில் அமைந்திடும்.  சந்தை சக்திகள், மத்திய திட்டமிடலின் வழிகாட்டுதலின்கீழ் இயங்கிடும். சொத்தின் அனைத்துவிதமான வடிவங்களும் இருக்கும் அதே சமயத்தில், உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமையை தீர்மானகரமான வடிவமாக இருந்திடும். இவ்வாறு கூறுவதால் அது அரசின்கீழான பொதுத்துறை என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்திடும் அதே சமயத்தில், கூட்டு(collective) மேற்றும் கூட்டுறவு அமைப்புகள், அரசுக் கட்டப்பாட்டில் உள்ள பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் பொருளாதார வாழ்வாதாரங்களை இயக்கி முறைப்படுத்திடும்.

அக்டோபர் புரட்சி : உலகத்தை மாற்ற முடியும்

மாமேதை காரல் மார்க்ஸ் ஒரு சமயம் கூறிய பொருள்பொதிந்த வார்த்தைகள்: "தத்துவ ஞானிகள் உலகை பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்திருக்கிறார்கள். பிரச்சனை என்னவெனில், அதனை மாற்றுவதே ஆகும்."  அக்டோபர் புரட்சி உலகை மாற்றுவது சாத்தியமே என்று உலகுக்கு காட்டியிருக்கிறது. அது இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றேயாகும்.  பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தபோதிலும், அக்டோபர் புரட்சி மற்றம் அதன் பங்களிப்புகள் மனிதகுல நாகரிகத்தை முன்னேற்றுவதற்கு இன்றளவும் உதவிக்கொண்டு இருக்கிறது. நம் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச்சென்றிட வீர சகாப்தம் படைத்திட்ட அக்டோபர்புரட்சி தொடர்ந்து நமக்கு உத்வேகத்தை அளித்துவரும்.  அக்டோபர் புரட்சி உலகை மாற்றியதைப்போல, இந்தியப் புரட்சியும் இந்தியாவை மாற்றி அமைத்திடும். இதனை எதார்த்தமாக்கிடக்கூடிய விதத்தில் நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதே இன்றைய தேவையாகும்.

(கேரள மாநிலம், திருச்சூரில், 2017 ஜூன் 13 அன்று இஎம்எஸ் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று துவக்கவுரையாற்றினார். அப்போது  அவர் கூறியதிலிருந்து சில அம்சங்கள்.)

 

No comments: