மோடி
அரசாங்கத்தின் எட்டாண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாஜக பதினைந்து நாட்களுக்குப்
பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தின்போது அது
பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, உணவு தானிய உற்பத்தி, சமூக நலத்
திட்டங்கள் மற்றும் அயல்துறைக் கொள்கை சம்பந்தமாக
அரசாங்கத்தின் பல்வேறு சாதனைகளை உயர்த்திப்பிடித்திட கூறியிருக்கிறது. இவை அனைத்துமே
பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு ஒழிச்சலின்றி மேற்கொண்ட
செயல்பாடுகளின் காரணமாகவே என்றும் பிரச்சாரத்தின்போது அது தம்பட்டம் அடிக்க முடிவு
செய்திருக்கிறது. எனினும், இவர்கள் பட்டியலிட்டுள்ள சாதனைகளில் காணப்படாதிருப்பது
என்னவென்றால், மோடி அரசாங்கம், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும்,
அரசமைப்புச்சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் (directive principles)
குறிப்பிட்டுள்ள சமூக நீதி மற்றும் பொருளாதார நீதியை உத்தரவாதப்படுத்துவதற்கும்
ஏற்றவிதத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் அது என்ன
செய்தது என்பதேயாகும்.
ஜனநாயக நெறிமுறைகளை
ஒழித்துக் கட்டும் செயல்கள்
இது
வேண்டுமென்றேதான் விடுபட்டிருக்கிறது. ஏனெனில் மோடி அரசாங்கமானது கடந்த எட்டு
ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயக அமைப்புக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் அளப்பரிய
அளவில் தீங்கினை ஏற்படுத்தி இருக்கிறது. எட்டாண்டு கால மோடியின் ஆட்சியில் நாடாளுமன்ற
ஜனநாயகத்தைச் சுருக்கிடவும், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை வெட்டிக்
குறைத்திடவும், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கிடும் அனைத்து அமைப்புகளையும்
சீர்குலைத்திடவும் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக நாடாளுமன்றத்தை
மதிப்பிழக்கச் செய்திடும் வேலையும், நாடாளுமன்ற நடைமுறைகளை
இழிவுபடுத்திடும் வேலையும் மோடி அரசாங்கம் இரண்டாவது முறை பதவியேற்றபின்பு
உக்கிரமடைந்துள்ளது. நாடாளுமன்றம் சென்ற ஆண்டில் நாற்பது நாட்களுக்கும் குறைவாகவே
நடந்திருக்கிறது. கொண்டுவரப்பட்ட சட்ட முன்வடிவுகளின் மீது போதிய அளவிற்கு
விவாதங்கள் நடைபெறவில்லை என்பது மட்டுமல்ல, சட்டமுன்வடிவு களை நாடாளுமன்ற
நிலைக்குழுக்களின் நுண்ணாய்வுக்கு அனுப்பும் நடைமுறையே அநேகமாக ஒழித்துக்
கட்டப்பட்டுவிட்டது. ஐமுகூ அரசாங்கத்தின்
காலத்தின் மக்களவை 60 முதல் 70 விழுக்காடு சட்டமுன்வடிவுகளை நாடாளுமன்ற
நிலைக்குழுக்களுக்கு அனுப்பி இருந்தது. அது மோடியின் முதல் முறை ஆட்சிக்
காலத்தின்போது 27 விழுக்காடாகவும், இரண்டாவது முறை ஆட்சிக் காலத்தின்போது வெறும்
13 விழுக்காடாகவும் வீழ்ந்தது. இத்துடன்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரச்சனைகளை எழுப்புவதற்கான உரிமைகள்
மறுக்கப்பட்டதும், சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப் படுகையில் வாக்கெடுப்புக்கு
விடுவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டதும் சேர்ந்துகொண்டுள்ளன. மாநிலங்களவையில்
மூன்று வேளாண் சட்டங்களும் அடாவடித்தனமாக நிறைவேற்றப்பட்ட வழிமுறையே இதற்குச்
சரியான எடுத்துக்காட்டாகும்.
அரசு விருப்பத்திற்கேற்ப
செயல்படும் தேர்தல் ஆணையம்
நாடாளுமன்றத்தின்
நடைமுறை சுருக்கப்படுவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள்
நெரிக்கப்படுவதும், ஒட்டுமொத்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையையே அரித்து
வீழ்த்திக் கொண்டிருக்கிறது. நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல்கள் நடத்த
வேண்டிய தேர்தல் ஆணையத்திற்கு கடிவாளமிடப்பட்டிருக்கிறது, நாளுக்குநாள் அது
அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் ஓர் அமைப்பாக
மாறிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. தேர்தல் பத்திரங்கள் விநியோகம், லஞ்ச
ஊழலை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது. இதன் வழியாக ஆளும் கட்சிக்கு நிதி திரட்டுவது
என்பது உத்தரவாதப்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் நிதி
திரட்டுவதற்கான வாய்ப்பு வாசல்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
எதிர்க்கட்சி தலைவர்களை
பழிவாங்கும் நடவடிக்கைகள்
எதிர்க்கட்சிகள்
மீதான தாக்குதல்கள் இப்போது ஒன்றிய அரசாங்கத்தின் அமலாக்கத்துறை, மத்தியக் குற்றப்
புலனாய்வுக் கழகம் போன்றவற்றின் மூலமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தாலும், அமலாக்கத்
துறையினராலும், வருமான வரித் துறையினராலும் குறி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. அவர்களில் சிலர்
கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி சுகாதார அமைச்சரும்,
மகாராஷ்டிர மாநில தேசிய வாதக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு கேபினட் அமைச்சரும்
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
டஜன் கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றப்
புலனாய்வுக் கழகத்தினராலும், அமலாக்கத் துறையினராலும் விசாரிக்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றனர். எதிர்க் கட்சியினரின் குரல்வளையை நெரிக்க வேண்டும் என்ற
நோக்கத்துடனேயே இவ்வாறு நாணமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேஷனல்
ஹெரால்டு வழக்கில் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறையினரால்
காங்கிரஸ் கட்சித் தலைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது.
ஜனநாயக உரிமைகள் பறிப்பு
அரசுக்கு
எதிராகக் கருத்துக் கூறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுப்பதும் குடிமை
உரிமைகளை நசுக்குவதும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் தேசத்
துரோகக் குற்றப்பிரிவு போன்ற கொடுங்கோன்மை சட்டங்களைப் பயன் படுத்துவதன் மூலமாக
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றிருக்கின்றன. 2014க்கும்
2020க்கும் இடையே, ஏழு ஆண்டுகளில், சுமார் 690 வழக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகள்
தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 10,552 பேர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு
சிறையில் அடைக்கப்பட்டவர்களில், அரசியல் செயற்பாட்டாளர்கள், குடிமை உரிமைகள்
வழக்கறிஞர்கள், இதழாளர்கள் மற்றும் எழுத்தாளர்களும் அடங்குவர். இந்தியத் தண்டனைச்
சட்டத்தின் 124-ஏ என்னும் தேசத் துரோகக் குற்றப் பிரிவும் ஆட்சியாளர்களுக்கு
எதிராகக் குரல் எழுப்புகிறவர்களுக்கு எதிராக ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப் பட்டது.
2014இலிருந்து 2021 வரையிலும் தேசத் துரோகக் குற்றப் பிரிவின்கீழ் 450க்கும்
மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதைத்
தடுத்திட, மிரட்டல் உருட்டல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதழாளர்களுக்கு எதிராக
ஒடுக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதுடன், சில ஊடகங்களின் உடைமையாளர்கள்
பொருளாதாரக் குற்றங்களுக்காகக் குறிவைக்கப்பட்டு, அது தொடர்புடைய ஏஜன்சிகள்
அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. கார்ப்பரேட் ஊடகங்கள் மிகப்பெரிய
அளவில் ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக மாறி இருக்கின்றன.
மாநில உரிமைகள் மீது
கைவைப்பு
மோடி
அரசாங்கத்தின் மத்தியத்துவப்படுத்தப்பட்ட எதேச்சதிகார நடைமுறையானது ஜனநாயக அமைப்பு
முறையின் கூட்டாட்சி அம்சத்தையே காலில் போட்டு மிதித்திருக்கிறது.
மாநிலப் பட்டியலிலும், பொதுப் பட்டியலிலும் உள்ள பல துறைகளில் மாநிலங்களுக்கு
இருந்து வந்த உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்றிய
அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள் ஒன்றிய ஆட்சியின் கருவிகளாகவே
செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள், மாநில அரசாங்கங்களின் விவகாரங்களில்
தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், சில சமயங்களில் மாநில அரசாங்கங்களின் வேலைகளில் குறுக்கிடு கிறார்கள்.
ஜனநாயகத்திற்குப் பதிலாக இவர்கள் மாற்ற விரும்புவது, பெரும்பான்மையினரின்
ஆட்சியாகும். நாடாளுமன்றத்திலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் தங்களுக்கு இருக்கும்
பெரும்பான்மையைப் பயன் படுத்திக்கொண்டு, மத மாற்றத் தடைச்சட்டம், கால் நடைகளை
வெட்டுவதற்குத் தடை போன்ற சட்டங்களை சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தில் குடியுரிமைத்
திருத்தச் சட்டம் போன்றவற்றையும் நிறை வேற்றியிருக்கிறார்கள். இச்சட்டங்கள்
அனைத்துமே சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதைக் குறியாகக்
கொண்டவைகளாகும். இத்தகைய சட்டங்கள் இந்துத்துவா அமைப்பினர்களால்
சிறுபான்மையினத்தவர் மீது குரூரமானமுறையில் மேற்கொள்ளப்படும்
தாக்குதல்களுக்கெல்லாம் சட்டப்பூர்வமான பாதுகாப்பை அளித்து வருகின்றன.
எதேச்சதிகார ஆட்சி திணிப்பு
இவை
அனைத்தும் எதேச்சதிகார ஆட்சியை ஒருமுகப்படுத்தும் அடையாளங்களாகும். ஆயினும்
நாட்டில் வெளியாகிக் கொண்டிருக்கும் முன்னணி செய்தித்தாள்களோ இவற்றை முழுமையாக
வெளிச் சத்திற்குக் கொண்டுவரத் தயங்குகின்றன. இந்தியாவை, இந்துத்துவா எதேச்சதிகார
அரசாக மாற்ற நடந்துகொண்டிருக்கும் எதார்த்த உண்மைகளை மிகவும் கவனத்துடன்
மூடிமறைக்கின்றன. பாஜக அரசாங்கத்தின் எட்டு ஆண்டு கால ஆட்சியின் மையமான உண்மை
என்பது, இந்தியாவை, ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலின்படி மாற்றியமைக்க
இடைவிடாது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதேயாகும். இதனை
அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இதுவரை இருந்துவந்த நாடாளுமன்ற ஜனநாயக
அமைப்பு, நீதித்துறையின் பங்களிப்பு, நிர்வாக அமைப்பு மற்றும் ஊடகங்கள் முதலானவை
தங்களின் நயவஞ்சகமான எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு சேவகம் செய்யக்கூடிய விதத்தில்
மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரக் கொள்கையின் அனைத்து வரம்புகளும்,
இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணிக்கு முட்டுக்கொடுக்கும் விதத்தில் மாற்றி
யமைக்கப்பட்டிருக்கின்றன. எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியின்கீழ் ஏதேனும்
படிப்பினையைப் பெற்றிருக்கிறோம் என்றால் அது நாட்டின் ஜனநாயகமும் அடிப்படைப்
பொருளாதார, சமூக மற்றும் குடிமக்களின் குடியுரிமைகளும் ஆள்வோரால் ஆபத்திற்குள்ளாகி
இருக்கின்றனஎன்பதேயாகும்.
ஜூன் 1, 2022, தமிழில்
: ச.வீரமணி
No comments:
Post a Comment