Wednesday, December 22, 2021

ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான நீதித்துறை மிகவும் முக்கியமாகும்

 


ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான நீதித்துறை மிகவும் முக்கியமாகும்

மாநிலங்களவையில் ஜான் பிரிட்டாஸ் சங்கநாதம்

புதுதில்லி-

ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான நீதித்துறை என்பது மிகவும் முக்கியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று மாநிலங்களவையில் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊதியங்கள் திருத்தச் சட்டமுன்வடிவின்மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று ஜான் பிரிட்டாஸ் தன் முதல் பேச்சில் (maiden speech) பேசியதாவது:

தலைவர் அவர்களே, முதலில் ஓராண்டு காலமாக நடைபெற்ற வரலாறு படைத்திட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த விவசாயிகளுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன். அதேபோன்று, நாகாலாந்து மாநிலத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தளபதி பிபின் ராவத் மற்றும் இதரர்களுக்கும் என் அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்ததாக, இந்த அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 12 சக உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒருமைப்பாடு தெரிவிப்பதற்கும் அருள்கூர்ந்து என்னை அனுமதிக்கும்படித் தலைவர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அனைவரும் மிகவும் ஜனநாயக விரோதமான முறையில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் அவைக்குக் கொண்டுவருவதற்கு, அவைத் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  

நான் இந்த அவைக்கு புதிய உறுப்பினராக இருந்தபோதிலும், இது என்னுடைய முதல் பேச்சாக (maiden speech) இருந்தபோதிலும், இதனை நான் ஏன் கூறுகிறேன்? ஏனெனில் நான் 1988இலிருந்தே நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக இருந்திருக்கிறேன். (ஊடகவியலாளர்கள் அமரும் இருக்கையைச் சுட்டிக்காட்டி) நான் அங்கே அமர்ந்து அவை நடவடிக்கைகளைக் கவனித்து வந்திருக்கிறேன். அவையில் பல அமளிகளைப் பார்த்திருக்கிறேன். நம் மாநிலங்களவைத் தலைவர்களின் உணர்ச்சிமிகு உரைகள் பலவற்றைக் கேட்டிருக்கிறேன். சங்கர் தயாள் சர்மா ஜி ஒருமுறை கண்ணீர் விட்டுக் கதறியதைப் பார்த்திருக்கிறேன். அவ்வாறு அவர் கண்ணீர்விட்டுக் கதறக் காரணமாக இருந்த உறுப்பினர்களில் ஒருவர் மக்களவையில் உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் பெயர் கூட குறிப்பிடப்பட்டது. எனினும், எவரும் இடைநீக்கம் செய்யப்படவில்லை.

ஆனால், இப்போது பெயர் குறிப்பிடப்படாமலேயே எங்கள் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  

அடுத்ததாக, இந்தச் சட்டமுன்வடிவிற்கு வருகிறேன். நாம் மிகவும் குறிப்பிட்டுக்கூற விரும்புவது நீதித்துறையின் சுதந்திரமாகும். இந்தச் சட்டமுன்வடிவின் நோக்கம், நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கானது என்று சட்ட அமைச்சர் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதனை நான் முழுமையாக வரவேற்கிறேன். ஆனாலும், இதுபோன்ற விஷயங்களைத் தீர்மானிக்கும்போது ஓர் ஆழமான இடைவெளி (serious lacuna) இருப்பதை மாண்புமிகு சட்ட அமைச்சர் புரிந்துகொண்டிருக்கிறாரா? நீதிபதிகளின் நியமனத்தைப் பொறுத்தவரை நமக்கு எவ்விதமான பங்கும் கிடையாது. இதுபோன்ற நிலைமை உலகில் வேறெங்கும் இருக்கிறதா? கிடையாது. நீதிபதிகளே, நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையைக் கேள்விப்பட்டதே இல்லை. இந்த ‘விசித்திரமான’ நிலை குறித்து சட்ட அமைச்சர் ஓர் உறுதியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை.  ‘விசித்திரமான’ நிலை என்பதை நான் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

மக்களவையில் இந்தச் சட்டமுன்வடிவு விவாதத்திற்கு வந்தபோது அவர் அளித்திட்ட பதிலைப் பார்த்தேன். அங்கே, நீதித்துறை, அரசாங்கம், நாடாளுமன்றம்/சட்டமன்றம், வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்திருந்தது. மக்களும் தங்களுக்கு நீதி வழங்குபவரின் தகுதி, திறமை, நேர்மை குறித்து தெரிந்து கொள்ளட்டுமே. நீதிபதிகள் தேர்ந்தெடுக்கும் முறையில் மர்மம், ரகசியம், இருள்சூழ்ந்த நிலை இருக்க வேண்டுமா, என்ன? இதுபோன்ற நிலைமை உலகில் வேறெந்த நாட்டிலாவது உண்டா? இந்தியாவில் மட்டும்தான் இதுபோன்ற நிலை. இது தொடர்பாக சட்ட அமைச்சர் எதுவுமே கூறவில்லை. நீதித்துறையின் சுதந்திரத்தை சிதைத்திடும் இந்த முறை குறித்து அவர் எதுவுமே தன் பதிலில் கூறவில்லை. இந்த முறை ஒட்டு மொத்த நாட்டையும் பாதிக்கிறது, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கிறது.

நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் நாம் ஓர் அனுசரணையான போக்கை, கொடுக்கல் வாங்கல் போக்கைக் கடைப்பிடிக்கிறோமா? ஒரு சிறுகுழு (oligarchy) நீதிபரிபாலனம் செய்யும் முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமா? வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஏராளமான அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் இது குறித்து எதுவும் கூறுவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பிரச்சனை குறித்து நம்மைவிட அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நீதிபதிகளின் குடும்பங்களிலிருந்து வந்து நேர்மையான நீதி வழங்கிய எண்ணற்ற நீதிபதிகளும் உண்டு. நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதெல்லாம் விதிவிலக்குகள். உயர்நீதிமன்ற இணைய தளத்தில் ஒரு நீதிபதியின் தன் விவரம் குறித்துப் படிப்பதற்கு என்னை அனுமதிக்க வேண்டும். அவர் பெயரை நான் குறிப்பிட வில்லை. அவருடைய தாய்வழித் தாத்தா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். அவருடைய மாமா உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, இவ்வாறு அது நீண்டு போய்க்கொண்டிருக்கிறது.

இங்கே நாம் வம்சாவழியினரின் ஆட்சி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் உள்ள வம்சாவழியினர் குறித்து பாஜக உறுப்பினர்கள் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசுகிறார்கள். ஆனால் நீதிபதிகள் நியமனம் என்பது மிகவும் தெளிவான முறையில் வம்சாவழியாக வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து நாம் ஏன் மவுனம் கடைப்பிடிக்கிறோம்?

இவ்வாறு அரசிடம் இருந்து வந்த முன்மொழிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதன்மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் ஒரு பண்டமாற்று முறையைக் (barter) கடைப்பிடிக்கிறது என நான் குற்றஞ்சாட்டுகிறேன். இந்த அரசாங்கம் அவர்களுக்குப் பொருந்தாத நபர்களின் நியமனங்களை வெற்றிகரமானமுறையில் நீக்கிவிட்டது. மாண்புமிகு சட்ட அமைச்சர் அவர்களே, நான் என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் எவர் பெயரையாவது பரிந்துரைத்தால், அவர் தங்களுக்குப் பொருத்தமானவர் அல்ல என அரசாங்கம் நினைத்தால் அதனை ஏற்றுக்கொள்ளாது. சில நீதிபதிகள் எவ்விதக் காரணங்களுமே கூறாது தண்டிக்கும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

சில தலைமை நீதிபதிகள் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக, மதச்சார்பின்மைக்கு எதிராக வெளிப்படையாகவே பேசுகிறார்கள். ஒருவரை நீதிபதியாக்குவதற்கு எவ்விதமான வயது உச்சவரம்பும் கிடையாது. சிலர் வயதைக் கூறி நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர், இரவோடிரவாக நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்கள். நான் பெயர்களைக் கூற விரும்பவில்லை.   

நம் அரசமைப்புச்சட்டத்தின்படி, உயர்நீதிமன்றங்களும், உயர்நீதிமன்ற நீதிபதிகளும் எவருக்கும் கீழானவர்கள் (subordinate) அல்ல. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் அரசமைப்புச் சட்டத்தின்கீழான மன்றங்கள். ஆனால், உச்சநீதிமன்ற கொலிஜியம், உயர்நீதிமன்றங்களைத் தங்களுக்குக் கீழான நிறுவனங்களாக மாற்றியிருக்கின்றன.

சில புள்ளிவிவரங்களை உங்கள்முன் அளிக்க விரும்புகிறேன். டிசம்பர் 2 அன்று, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் என் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கொலிஜியம்களிலிருந்து அனுப்பப்பட்ட முன்மொழிவுகள் பல மட்டங்களில் நிலுவையில் இருக்கின்றன என்று கூறியிருந்தார். அதாவது, நீதித்துறை சம்பந்தப்பட்ட துறையில் 75 பெயர்கள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோன்று உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட 35 முன்மொழிவுகள் துறையின்கீழ் நிலுவையில் இருக்கின்றன. மூன்று முன்மொழிவுகள் பிரதமர் அலுவலகத்தில் நிலுவையில் இருக்கின்றன. 13 முன்மொழிவுகள் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அது நீளுகிறது. இவ்வாறாக உயர்நீதிமன்றங்களாலும், உச்சநீதிமன்றத்தாலும் அனுப்பப்பட்ட நீளமான பட்டியல்கள் நிலுவையில் இருந்து வருகின்றன.  இதுதொடர்பாக மேலும் எதுவும் கூற நான் விரும்பவில்லை.

இவ்வாறு நிலுவையில் இருப்பதால் மக்கள் ஏராளமாகச் சந்தேகப்படுகிறார்கள். நீங்கள் வெளிப்படையான முறையைக் கொண்டிருக்க வேண்டும்.

உயர்நீதிமன்றங்கள் தற்போது தாங்கள் பெற்றிருக்க வேண்டிய நீதிபதிகளின் எண்ணிக்கையில் வெறும் 59 சதவீதத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீதிபதிகள் ஓய்வு பெற்றபின்பு மீண்டும் நியமனம் செய்யப்படலாமா என்பது குறித்து அரசியல் நிர்ணய சபையில் பலர் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். நீதிபதிகள் ஓய்வுபெற்றபின் வேறு பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு எதிராகப் பலர் தங்கள் நிலைப்பாட்டினைப் பதிவு செய்திருக்கிறார்கள். பேராசிரியர் கே.டி. ஷா, ஓய்வுபெற்றபின்பு நீதிபதிகளுக்கு மறு நியமனம் அளிக்கக்கூடாது என்று வாதிட்டிருக்கிறார்.

பேராசிரியர் சிப்பன் லால் சக்சேனா, கூறியதை மேற்கோள் காட்டுகிறேன். “ஓய்வுபெற்றபின்பு வேறு உயர் பதவிகளுக்கு நியமனம் செய்யப்படலாம் என்கிற தூண்டுதல் இருக்குமாயின் இதனை ஆட்சியிலுள்ளவர்கள் துஷ்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்பளித்துவிடும். இந்த நிபந்தனையை நீக்காவிட்டால், ஆட்சியில் உள்ளவர்கள் அல்லது ஆட்சியில் உள்ள எந்தவொரு கட்சியாவது இதனைப் பயன்படுத்திக்கொள்ளும். இது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும்.

நம்முடைய முன்னாள் சட்ட அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி இது தொடர்பாக என்ன கூறியிருக்கிறார்? “சில சமயங்களில், ஓய்வு பெறுவதற்கு முன்பு சில நீதிபதிகள் நடந்துகொள்ளும் விதம், அவர்கள் ஓய்வு பெற்றபின் சில பதவிகளில் அமர்த்துவதற்கான ஆவலால் செல்வாக்கு செலுத்துகிறது,” என்று அருண்ஜெட்லி கூறியிருக்கிறார். அருண் ஜெட்லி இத்துடன் நின்றுவிடவில்லை. அவர் மேலும், “இருவிதமான நீதிபதிகள் இருக்கின்றனர். ஒன்று, சட்டத்தைத் தெரிந்துள்ள நீதிபதிகள். மற்றொன்று, சட்ட அமைச்சரைத் தெரிந்துள்ள நீதிபதிகள். நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையைக் கொண்டிருப்பது உலகிலேயே நம் நம் நாட்டில் மட்டும்தான். ஓய்வு பெறும்வயது வந்தபின்னரும்கூட, நீதிபதிகள் ஓய்வு பெற விரும்புவதில்லை,” என்று கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் ஒரு சில தீர்ப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் உள்ள வேதனையை வெளிப்படுத்த நான் தயங்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ரபேல் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழக இயக்குநர் அலோக் வர்மா அதிகாரங்கள் இரவோடிரவாக அவரிடமிருந்து பறிக்கப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது பிரிவு, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் கூறுகிறது. இதுதான் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பாகும்.

ஒருநாள், இந்திய மாநிலம் ஒன்று, ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டபோது, இந்த அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மீதே மரண அடி கொடுக்கப்பட்டது. இது குறித்து உச்சநீதிமன்றம் இதுவரை எதுவுமே கூறாதிருப்பது, ஏன்?

நான் அயோத்தி தீர்ப்பு குறித்து எதுவும் கூறப்போவதில்லை. அநாமதேய தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தங்களுக்கு ஆழமான கருத்துக்கள் இருப்பதாக ஓர் உறுதிவாக்குமூலத்தை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தது. நன்கொடைகளின் வெளிப்படைத்தன்மையைப் பொறுத்தவரையில் இது ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்று தேர்தல் பத்திரங்களைக் குறிப்பிட்டிருந்தது. நீதிபதிகள்  அதனை மறந்துவிட்டார்கள். இது தொடர்பான வழக்கைக் கையாண்ட நீதிபதியின் நேர்காணலை நான் பார்த்திருக்கிறேன். அவர், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு குறித்து ஞாபகம் இல்லை என்று கூறியிருந்தார். அந்த நீதிபதி யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் இந்த அவையின் ஓர் அங்கமாக இருக்க விரும்பவில்லை.

மாண்புமிகு உறுப்பினர் நிதின் கட்காரி கூட, ஒரு நீதிபதி ஓய்வு பெற்றபின் இரண்டு ஆண்டுகள் ஓய்வு கொடுத்துவிட்டுப் பிறகுதான் அவரை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த அரசாங்கம் தங்கள் அமைச்சர்கள் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி கூறியதைக்கூட கேட்க ஏன் மறந்துவிட்டது?

இப்போதுள்ள நீதிபதிகள் நியமன முறையானது, ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு மட்டும் சலுகைகள் அளிக்கிறது. ஒரு புதிய வர்க்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். நான் புரிந்துகொள்கிறேன். நீதிபதிகளின் குடும்பங்களிலிருந்து புத்திசாலித்தனமான நீதிபதிகள் வந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை இருந்துவந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் 47 பேர்களில் 14 பேர் பிராமணர்கள். 1950இலிருந்து 1970 வரை உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகள் எண்ணிக்கை 14இல் 11 பேர் பிராமணர்கள். 1971-89இல்…(குறுக்கீடு)

1980 வரை உச்சநீதிமன்றத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒருவர் கூட நியமனம் செய்யப்படவில்லை.

நீதித்துறை செயல்பாடு என்பதும் ஜனநாயகபூர்வமானதாக இருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், நீதித்துறையின் சுதந்திரம் மிகவும் முக்கியமாகும்.

இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் பேசினார்.

(ச.வீ

 

No comments: