(பீப்பிள்ஸ் டெமாக்ரசி
தலையங்கம்)
தேர்தல் ஆணையம்
இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையில் ஒரு கேந்திரமான பங்களிப்பினைச்
செய்துவருகிறது. தேர்தல் ஆணையம் என்பது அரசமைப்புச்சட்டத்தால், நாட்டில் தேர்தல்களை
நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.
அரசமைப்புச்சட்டத்தின் 324(1)ஆவது பிரிவு, ஆணையத்திற்கு, “நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும்
அனைத்துத் தேர்தல்களையும் நடத்துவதையும், தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேவையான
வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதையும், மேற்பார்வையிட, நடத்திட மற்றும்
கட்டுப்படுத்திடத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் அளிக்கிறது.”
தேர்தல்
ஆணையமும் கடந்த எழுபதாண்டு காலமாக, அரசமைப்புச் சட்டத்தில் அறிவுறுத்தியபடி தன்
பொறுப்புகளைச் செம்மையாக மேற்கொண்டு, நாட்டில் தேர்தல்களைச் சிறப்பாக நடத்தி, தன்னுடைய அமைப்பின் நம்பகத்தன்மையை
அனைத்துத்தரப்பினர் மத்தியிலும் உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது. நாடாளுமன்றம்
மற்றும் சட்டமன்றங்களுக்குத் தேர்தல்கள் நடத்திடும் இம்மாபெரும் பணியை,
குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முறையாகவும்,
திறமையுடனும் இதுவரையிலும் நடத்தி வந்திருக்கிறது.
தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தியது தொடர்பாக, தேர்தல் ஆணையம்
இதுவரையிலும் அநேகமாக அனைத்துத்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில்
நம்பகத்தன்மையுடன் கூடிய பதிவையே பெற்று வந்திருக்கிறது. பல சமயங்களில் சிறுசிறு
குறைகள் காணப்பட்டன என்ற போதிலும், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாகவே செயல்பட்டு
வந்திருக்கிறது. இவ்வாறு குறைகள் ஏற்பட்டதற்கு முழுமையாகத் தேர்தல் ஆணையத்தையும்
குறை கூறிட முடியாது. ஏனெனில் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்திட பக்குவமற்ற அதிகார
வர்க்கத்தினரைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. பல சமயங்களில் தேர்தல்
ஆணையம் அந்த சமயத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் மற்றும் ஆளும் கட்சியின்
நிர்ப்பந்தங்களைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்திருக்கிறது. ஆயினும் கூட,
ஒருசில விதிவிலக்குகளை ஒதுக்கிவிட்டோமானால், ஒட்டுமொத்தத்தில் தேர்தல் ஆணையம்
அரசமைப்புச்சட்டம் தனக்கு வகுத்துத்தந்துள்ள விதிமுறைகளுக்கும் நெறிமுறைகளுக்கும்
உட்பட்டே செயல்பட்டு வந்திருக்கிறது.
எனவேதான் அப்படி இருந்த தேர்தல் ஆணையம், இப்போது 17ஆவது மக்களவைக்கான
தேர்தலை நடத்தும் சமயத்தில், பல்வேறு கேள்விகளை எழுப்பக்கூடிய விதத்தில்
நடந்துகொண்டு வருகிறதே என்பதைக் காணும்போது மிகவும் ஆழ்ந்த கவலையை உருவாக்கி
இருக்கிறது.
தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தத்தொடங்கிய பின்னர், ஆளும்
கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசு எந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாது பார்த்துக்
கொள்வதில் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அனைத்துக் கட்சியினரையும்
சமமாகப் பாவிக்கும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்றும், பண பலம் தேர்தலை
கேலிக்கூத்தாக்காத வண்ணம் பணவிநியோகத்தைக் கட்டுப்படுத்தித் தேவையான நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட பணிகளில் சிலவற்றை அமல்படுத்துவதில் இப்போது சுனில் அரோரா
தலைமையிலான மூன்று பேர் அடங்கிய தேர்தல் ஆணையம் போதுமான அளவிற்கு செயல்படவில்லை
என்பது தெரிகிறது. அதன்மீது வந்துள்ள புகார்களில் மிகவும் முக்கியமானது, அது
தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதாகும். அதிலும் குறிப்பாக,
பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல்களை அது முழுமையாகக்
கண்டுகொள்ளவில்லை. பிரதமர் நரேந்திர மோடி,
தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வண்ணம் தேர்தல் பிரச்சாரங்களை திரும்பத் திரும்பச்
செய்து வருகிறார். அவர், தன்னுடைய தேர்தல் பிரச்சார உரை ஒன்றில், காங்கிரஸ் கட்சி,
இந்துக்களை அவமதித்துக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டிவிட்டு, இதற்காக மக்கள்
இந்தத் தேர்தலில் அதனைத் தண்டித்திடுவார்கள் என்று அறிவித்திருக்கிறார். அவர் பாலக்கோட்டில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலின் அடிப்படையிலும், புல்வாமா தாக்குதலில்
வீரமரணம் அடைந்த துணை ராணுவத்தினர் பெயரிலும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும்
என்று மக்களுக்குத் திரும்பத்திரும்ப வேண்டுகோள் விடுத்து வருகிறார். இவ்வாறு
ஆயுதப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தையும் தமதாக்கிக் கொண்டு அவர் பேசுவது
என்பது, அவருக்கு வாடிக்கையாகவே
போய்விட்டது.
இவை தொடர்பாக எண்ணற்ற புகார்களை தேர்தல்
ஆணையத்திடம் அளித்துள்ள போதிலும், இவற்றின்மீது தேர்தல் ஆணையம் எவ்வித
நடவடிக்கையும் எடுத்திடவில்லை.
உச்சநீதிமன்றம், ஏப்ரல் 15 அன்று,
வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை
எடுத்தீர்கள் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டபின்னர், தேர்தல் ஆணையம் ஆதித்யநாத்,
மாயாவதி, அசம் கான் மற்றும் மேனகா காந்தி ஆகியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து
அவர்களை இரண்டு, மூன்று நாட்களுக்குத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது
என்று தடை விதித்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குஜராத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய அதே
கூட்டத்தில் பேசிய மற்றொரு பாஜக தலைவர் வாகானி என்பவர் மீதும் தேர்தல் ஆணையம்
நடவடிக்கை எடுத்து அவரும் மூன்று நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்
பேசக்கூடாது என்று ஆணை பிறப்பித்தது. எப்போது தெரியுமா? குஜராத்தில் வாக்குப்
பதிவுகள் நடைபெற்ற நாளான ஏப்ரல் 23ஆம் தேதி இவ்வாறு ஆணை பிறப்பித்தது.
இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் செயலற்ற
தன்மைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்
வழக்கு தொடுத்த பின்னர்தான், தேர்தல் ஆணையம் முதன்முறையாக ஏப்ரல் 30 அன்று ஓர்
அமர்வினை நடத்தி, பிரதமர் மோடி வார்தாவில் பேசிய தேர்தல் பிரச்சார உரை மீது ஓர்
ஆணை பிறப்பித்திருக்கிறது. அதாவது, வார்தாவில் பேசிய பிரதமரின் உரையில் தேர்தல்
நடத்தை விதி மீறல், அல்லது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிராக,
எதுவுமில்லை என்று அதில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு
ஆயுதப்படையினரின் பங்களிப்பினைப் பயன்படுத்தக் கூடாது என மிகத் தெளிவாகத் தேர்தல்
ஆணையம் அறிவுறுத்தியிருந்த போதிலும் அதனை முழுமையாக மீறி பேசிவரும் பிரதமர்
நரேந்திர மோடி மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்திட தேர்தல் ஆணையம் உறுதியாக
மறுத்துவருகிறது. ஏப்ரல் 1 அன்று லட்டூர் என்னுமிடத்தில் அவர் ஆயுதப்படையினரின்
வீரதீரச் செயல்களைத் தமதாக மாற்றிப் பேசிய சமயத்தில் நாட்டில் நான்கு கட்டங்களில்
வாக்குப் பதிவுகள் முடிந்துவிட்டன. தேர்தல் நடத்தை விதி மீறல்களை மோடி
மீறிவந்தபோதிலும் தேர்தல் ஆணையம் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும்
எடுக்காததன் மூலம் தேர்தல் ஆணையம் அவருக்குத் தேர்தல் நடத்தை விதிகளைத் தொடர்ந்து
மீறுவதற்கு உதவி செய்து வருகிறது. கடைசியாக மே 1 அன்று, மோடிக்கு எதிராகத் தன்னிடம் வந்த புகார்
ஒன்றின்மீது, மோடி தன்னுடைய கட்சிக்கோ அல்லது தனக்கோ நேரடியாக வாக்களியுங்கள்
என்று கேட்காததன் காரணமாக, அவர் தேர்தல் நடத்தை விதி எதையும் மீறவில்லை எனத் தீர்வளித்துள்ளது.
இவ்வாறு அவர் சுத்தமானவர் என்று தேர்தல் ஆணையம் சான்றளித்திருப்பதானது, மோடி
இவ்வாறு ஆயுதப்படையினரின் வீரதீரச் செயல்களைப் பயன்படுத்தி வருவதை மிகவும் வெட்கமின்றி
புகழ்ந்துகொண்டிருக்கும் அமித் ஷா
போன்றோரை மேலும் ஊக்கம்கொள்ளச் செய்திடும்.
மேலும் தேர்தல் ஆணையமானது, மத்தியிலும்
சில மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக விளங்கும் பாஜக மேற்கொண்டுவரும் குற்றச்
செயல்களுக்கு எதிராகவும் உறுதியான நடவடிக்கை எடுத்திடத் தயக்கம் காட்டுவதும்
தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. திரிபுராவில், ஏப்ரல் 11 அன்று திரிபுரா மேற்கு
மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலின்போது மிகப்பெரிய அளவிற்கு மோசடிகள்
நடந்துள்ளன. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, சிசிடிவி கேமராக்களைச் செயல்
இழக்கச் செய்வது மற்றும் எதிர்க்கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களையும்,
எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களையும் விரட்டியடிப்பது போன்ற குற்றச்
செயல்கள் நடந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 846 வாக்குச்சாவடிகளில்
முறைகேடுகள் நடந்துள்ளன என்று போதுமான அளவிற்கு ஆதாரங்களை அளித்து, அங்கே மீளவும்
தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியிருந்தது. எனினும் தேர்தல் நடந்து மூன்று
வாரங்கள் கழிந்தபின்னரும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தேர்தல் ஆணையம் அமைத்திட்ட
விசாரணைக் குழுக்கள் அனைத்தும், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன என அறிக்கைகள்
சமர்ப்பித்துள்ளபோதிலும், தேர்தல் ஆணையம் வெறும் 131 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும்
மீண்டும் தேர்தல் நடத்த ஆணை பிறப்பித்திருப்பதாக இப்போது செய்தி வெளியாகி
இருக்கிறது. திரிபுராவில் ஆளும் கட்சியாக இருந்திடும் பாஜகவை அதிருப்திப்படுத்திட
தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
ஆனால் அதே சமயத்தில் இதற்கு முற்றிலும்
நேர்விரோதமான முறையில், தமிழ்நாட்டில்
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டில் மிகப்பெரிய
அளவில் பணம் இருந்ததாகக் கூறி, அத்தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் எதிர்க்கட்சியான திமுக-வைச் சேர்ந்தவர் என்பதே தேர்தல் ஆணையத்தின்
நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த வித்தியாசத்திற்குக் காரணமாகும்.
தேர்தல் ஆணையம், பிரதமர் நரேந்திர மோடி
மற்றும் பாஜகவை நேரடியாக மோதுவதைத் தவிர்த்து வருவதானது, அதன் மீதிருந்த நம்பகத்தன்மையைத்
தகர்த்துவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளில், மோடி அரசாங்கம், அரசமைப்புச்சட்டத்தின்
கீழ் இயங்கிவந்த ஒவ்வொரு நிறுவனத்தின் மீதும் தாக்குதல் தொடுத்து, அவற்றைக் கொஞ்சம்
கொஞ்சமாக அரித்து வீழ்த்தி வந்ததை நாம் பார்த்துக்கொண்டுதான் வந்திருக்கிறோம்.
அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கும் எந்தவொரு நிறுவனமும் விட்டுவைக்கப்படவில்லை. இதில்,
இதுவரையிலும் மிகவும் நேர்மையுடனும் பெருமைப்படும் விதத்திலும் இயங்கிவந்த தேர்தல்
ஆணையமும் இப்போது, சேர்ந்துகொண்டு, தன் கவுரவத்தை
இழந்து நிற்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் நேர்மையையும்,
வல்லமையையும் தொடர்ந்து உத்தரவாதப்படுத்திட வேண்டுமானால், ஆட்சியாளர்கள் மற்றும்
ஆளும் கட்சியினரின் செல்வாக்கிலிருந்து அது விடுபட வேண்டுமானால், அதன் அமைப்புமுறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவர
வேண்டியது மிகவும் அவசியமாகும் என்பதை, தேர்தல் ஆணையத்தின் தற்போதைய பரிதாபகரமான
நிலைமை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அந்த
விதத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியும் இதர ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து கோரி வருகின்றன. மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய தேர்தல் அறிக்கையில், தேர்தல் ஆணையர்கள் முழுமையாக
ஆட்சியாளர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, நியமனம் செய்யப்படும் முறை மாற்றப்பட
வேண்டும் என்று கூறியிருக்கிறது. அதற்குப் பதிலாக, தேர்தல் ஆணையத்தின்
உறுப்பினர்கள், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலைமை
நீதிபதி ஆகியோரடங்கிய குழுவின் அறிவுரையின் அடிப்படையில் குடியரசுத்தலைவரால்
நியமிக்கப்பட வேண்டும். மேலும், தேர்தல் ஆணையர்கள் தங்கள் பணிக்காலம் முடிந்து
ஓய்வுபெற்ற பின்னர், அரசாங்கத்தின் கீழோ, அல்லது, ஆளுநராகவோ, அல்லது,
நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினராகவோ வருவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம், ஆட்சியாளர்களின்
கருணையின் கீழ் இயங்கக்கூடிய நிறுவனமாக விட்டுவிட
முடியாத அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும்.
(மே 1, 2019)
தமிழில்: ச. வீரமணி
No comments:
Post a Comment