Sunday, May 12, 2019



மதவெறி அரசியல்
-ஷேக் முஜிபுர் ரஹ்மான்
(பாசிஸ்ட் அரசியல் மற்றும் அதன் பல்வேறுவகையிலான உத்திகள் எப்படியெல்லாம் மக்கள் மத்தியில் கருத்தோட்டங்களை உருவாக்குகின்றன என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது.)

இந்தியாவில் 2014இல் நரேந்திர மோடியும், அமெரிக்காவில் 2016இல் டொனால்ட் டிரம்ப்பும் ஆட்சிக்கு வந்த பின்னர், அறிஞர் பெருமக்கள் மத்தியில் நம் தாராள ஜனநாயகத்தில் உள்ள பலவீனங்கள், குறைபாடுகள் குறித்தும், ஜனநாயகத்திற்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய அளவிற்கு ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஆபத்தான போக்கு  ஜனநாயக அமைப்பில் ஏற்பட்டிருப்பது குறித்தும், ஆழ்ந்த முறையில் கவலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.  ஜனநாயகச் செயல்பாடுகளில் குறைகள் பல இருந்தபோதிலும், ஜனநாயக அமைப்பு ஒன்றுதான் மக்கள் நேசிக்கக்கூடியதோர் அமைப்பாக இன்றைய நவீன உலகின் பல பகுதிகளில்  இப்போதும் இருந்து வருகின்றன. எனினும், எதேச்சாதிகார சக்திகளால் அல்லது பாசிஸ்ட்டுகளால் இந்த அமைப்புமுறை களவாடப்பட்டு அழிக்கப்பட்டு வருவது எப்படி என்ற கேள்வி, பல அறிஞர் பெருமக்கள் மத்தியிலும் இப்போது பெரிய அளவில் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது.
எப்படி பாசிசம் வேலைசெய்கிறது (How Fascism Works) என்கிற தன்னுடைய புத்தகத்தில், யேல் பல்கலைக் கழகத்தில் தத்துவவியல் பேராசிரியாகப் பணியாற்றும் ஜாசன் ஸ்டான்லி (Jason Stanley), பாசிஸ்ட் அரசியல் மற்றும் அது கடைப்பிடித்திடும் பல்வகையான உத்திகள் எப்படி தற்காலத்திய அரசியல் நிலைமைகளில் அமெரிக்காவிலும் மற்றும் பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் அந்தந்த நாடுகளில் உள்ள நிலைமைகள் அவற்றுக்கு எப்படியெல்லாம் வசதி செய்து தருகின்றன என்பதையும் விளக்கிட முயன்றுள்ளார்.
இந்தப் புத்தகம் பாசிஸ்ட் அரசியல் குறித்துத்தான் ஆய்வு செய்கிறதேயொழிய பாசிசம் குறித்து அல்ல என்று இதன் ஆசிரியர் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தி விடுகிறார்.   ஏனெனில் பாசிசம் என்பது ஒரு தத்துவ இயல். அதன்கீழ் ஏராளமான பொருள்கள் உள்ளடங்கியிருக்கின்றன. ஜெர்மன் தத்துவஞானியான ஹன்னா அருண்டே (Hannah Arendt) இதுதொடர்பாக எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தின் கருப்புப் பக்கங்களை வெளிக்கொணர்வதற்கு உதவிடும் விதத்தில் இதுதொடர்பாக படித்திடும் மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகைகள் அளிக்கப்படுவதற்கும் அவர் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.  இந்தப் புத்தகமும் ஹன்னா அருண்டே குறித்துக் குறிப்பிடுகிறது.
அனைத்து பாசிஸ்ட் அரசியலும், பாசிஸ்ட் அரசை உருவாக்குவதற்கு இட்டுச் செல்வதில்லை. ஆனாலும், பாசிஸ்ட் அரசியலை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் சமூகத்தில் நிலவிவரும் ஜனநாயகப் பண்புகளை ஒழித்துக்கட்டுவதற்கான பங்களிப்பினைச் செய்துவருகின்றன.  பாசிஸ்ட் அரசியல், சமூகத்தில், மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும், நிறத்தின் பெயராலும் பல்வேறு பிரிவினரிடையேயும், வெறுப்பு அரசியலையும்  காழ்ப்புணர்ச்சியையும் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. மேலும் அது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, பாசிஸ்ட் உத்திகளையும் உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. இத்தகைய பாசிஸ்ட் உத்திகளை, தாராள ஜனநாயகத்தின் கட்டமைப்பிலேயே நடைமுறைப்படுத்திடவும் அதனால் முடிகிறது. இவ்வாறு அது தங்கள் நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றிக் கொள்வதற்காக, கடந்தகால புராணக் கற்பனைக் கதைகள், பிரச்சாரங்கள், காலங்காலமாக இருந்துவரும் படுபிற்போக்குத்தனமான சடங்குகள், பழக்க வழக்கங்கள்,  சட்டம் – ஒழுங்கு, பாதிக்கப்பட்டவர்களின் கோபம், பாலியல் ஈர்ப்பு முதலானவற்றையும் பயன்படுத்திக்கொள்கிறது. தங்களைப் பின்பற்றுபவர்களுக்குப் போதிப்பதற்காக, தங்கள் பாசிஸ்ட் அரசியலைச் சுற்றிலும் எண்ணற்ற கதைகளையும் புனைந்து, தங்களின் அரசியலுக்கேற்றவிதத்தில் ஓர் உலகக் கண்ணோட்டத்தையும் உருவாக்குகிறது.  ஏனெனில் அப்போதுதான் பாசிஸ்ட்டுகள், தாங்கள் கூறும் அனைத்தையும் சாத்தியமான உண்மைகள் என்பதுபோல் மக்கள் மத்தியில் வியாக்கியானம் செய்திட முடியும்.
இன்றைக்குள்ள பாசிசம் என்பது ஹிட்லரின் ஜெர்மனி அல்லது 20ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் எந்தப் பகுதியிலுமிருந்த பாசிசத்துடன் ஒப்பிட முடியாத ஒன்று என்று இந்நூலின் ஆசிரியர் கூறுகிறார். இப்போதுள்ள பாசிசமானது தங்களுடைய குழுவின் குறிக்கோள் அடிப்படையில் பல்வேறு விதமான வடிவங்களைப் பெற்றிருக்கிறது என்றும், அதேபோல் தன் சொந்த மக்கள் தொகையினரில் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய பிரிவினரை பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பிரிவினர், எவ்வித மனிதாபிமானமுமின்றி  ஒடுக்கும் சித்தாந்தத்தைத் தங்கள் ஒடுக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் ஆசிரியர் கூறுகிறார்.
ஆசிரியர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்: இரண்டாம் உலகப் போரின் போது, பாசிஸ்ட் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளிலிருந்து தப்பிஓடி அகதிகளானவர்கள் தொகை அதிக அளவில் இருந்ததைத் தொடர்ந்து, 1948 உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (1948 Universal Declaration of Human Rights) பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, மனிதராக இருக்கிற ஒவ்வொருவருக்கும் கண்ணியமான வாழ்க்கை உத்தரவாதம் செய்யப்பட்டது. … இன்றுள்ள பாசிசம் 1930களில் நடவடிக்கைகள் மேற்கொண்டதைப்போல இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், இன்றையதினம் அகதிகள் உலகம் முழுதும் அனைத்து சாலைகளையும் நிரப்பிக் கொண்டிருப்பதை மீளவும் பார்க்க முடிகிறது. 
பல நாடுகளிலும் இவ்வாறு மக்கள் பாசிஸ்ட்டுகளின் பிரச்சாரத்திற்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது, நம் நாட்டின் எல்லைக்கு உள்ளேயும் அப்பாலும் இருக்கிற அந்நியர்கள் நமக்கு ஓர் அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் மாறியிருக்கிறார்கள், என்பது போன்ற இவர்களது பிரச்சாரங்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்க முடியும்.
சிறுபான்மையினரின் துன்பதுயரங்கள்தான் பாசிச சக்திகளின் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன. ஆயினும் இது மக்களில் ஒரு பிரிவினர் மத்தியில் சிறுபான்மையினர் மீதான பரிவையும் முடுக்கிவிடுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பாசிஸ்ட் உத்திகள் அல்லது அரசியல் - அவற்றின் வடிவங்கள் வெவ்வேறானவைகளாகத் தோன்றியபோதிலும் - ஒவ்வொரு தடவையும் ஒத்த வெளிப்பாடுகளை வெளிக்கொணர்கின்றன.
பாசிஸ்ட் உத்திகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று, நமக்கும்”, அவர்களுக்கும் இடையேயான வேறுபாட்டைப் பூதாகாரப்படுத்திக் காட்டுவதாகும். பாசிசம் ஒரு தத்துவம் என்ற முறையிலும், பாசிஸ்ட் அரசியல் ஒரு நடைமுறை உத்தி என்ற முறையிலும் மனிதகுலம் ஒட்டுமொத்தமாக ஒன்று என்பதை அங்கீகரிப்ப தில்லை. பாசிசம் என்பது மனிதகுலத்தின் ஒரு பகுதியினர், மனித குலத்தின் பிறிதொரு பகுதியினருக்கு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர் என்று முன்னூகிக்கிறது. இவ்வாறு  பாசிஸ்ட் அரசியலின் மிகவும் தீர்மானகரமான அடையாளம் என்பது மக்கள் மத்தியில் பிளவினை உண்டாக்குவதுதான். மக்கள் மத்தியில் இனத்தின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் அல்லது நிறத்தின் அடிப்படையில் வேற்றுமைகளைக் கூறி, ஓர் இனத்தை மற்றோர் இனத்திற்கு எதிராகவும், ஒரு மதத்தின் கீழ் உள்ளவர்களை மற்றொரு மதத்தின் கீழ் உள்ளவர்களுக்கு எதிரானவர்களாகவும், அல்லது ஒரு நிறத்தின் கீழ் (racial distinctions) உள்ளவர்களை மற்றொரு நிறத்தினருக்கு எதிரானவர்களாகவும் உருவாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். இவ்வாறு ஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மையானவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி, அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீது அடக்குமுறையை ஏவிட முனைகிறார்கள். இத்தகு பாசிஸ்ட்டுகள் தாங்கள் வாழும் ஜனநாயக சமூகத்தின் வல்லமையையும்  புரிந்துகொண்டவர்கள்தான். எனவே அதனைப் பயன்படுத்திக்கொண்டே, தங்கள் குறிக்கோளை எய்தும் வரையிலும் அதன்கட்டமைப்புக்குள் இருந்துகொண்டே செயல்படவும் முனைகிறார்கள். இவ்வாறு செயல்படும் சமயத்திலேயே தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், ஜனநாயகப் பண்பின் அடிப்படைக்கூறுகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.    
உதாரணமாக, இந்தியாவில் நமக்கும் மற்றும் அவர்களுக்கும் என்பதை இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் என்று எடுத்துக்கொண்டால் பயன்படும் என்று பாசிஸ்ட்டுகள் கருதுகிறார்கள். எனவேதான் இங்கே பாசிஸ்ட்டுகள் இந்துக்களின் உரிமையைக் காத்திடுவோம் என்று தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இவ்வாறு இங்கே இந்து – முஸ்லீம் அடையாளத்தை அடிப்படையாக வைத்து பாஜகவும், மோடியும், ஆர்எஸ்எஸ்-உம் மதவெறி அரசியலைத் தங்கள் தேர்தல் மற்றும் அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தி வருகின்றன.
தேசியவாதம் (Nationalism)
பாசிசத்தின் ஆணிவேராக இருப்பதே, தேசியவாதப் பிரச்சனைதான். இந்நூலின் ஆசிரியர், பாசிஸ்ட் அரசியலுக்கும், தேசியவாதத்திற்கும் இடையேயான உறவினை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து உதாரணங்களுடன் எடுத்துக்காட்டுகிறார். அவற்றைத் தற்போதுள்ள நிகழ்ச்சிப் போக்குகளுடன் தொடர்புபடுத்தி மிகவும் ஆழமான முறையில் இந்நூலில் விவரிக்கிறார். பாசிஸ்ட் சக்திகள், கடந்த கால புராணங்களில் காணப்படும் அத்தியாயங்களை, தேசியவாதத்துடன் இணைத்து, தற்போது தாங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல்களை எவ்வாறெல்லாம் நியாயப்படுத்துகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். எனினும் அனைத்துத் தேசியவாதங்களும் ஒரேமாதிரியானவை அல்ல என்பதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். சிறுபான்மையினரை ஒடுக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் ஒடுக்குமுறையாளர்களால் முன்வைக்கப்படும் தேசியவாதத்திற்கும், மனிதகுலத்தின் கண்ணியமிக்க வாழ்க்கைக்காக  சமத்துவ சமூகத்தை நிர்மாணித்திடப் பாடுபடும் தேசியவாதத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை ஸ்டான்லி தன் நூலில் விளக்கியிருக்கிறார்.  வேறுவார்த்தைகளில் சொல்வதானால், தேசியவாதத்தை பாசிசத்திற்கும் இட்டுச்செல்லமுடியும், அதேபோன்று அதனை சமூக நீதி மற்றும் சமத்துவத்துடனான சிந்தனைகளை நோக்கியும் எடுத்துச் செல்லமுடியும். ஆனாலும், ஒரு சராசரி குடிமகனுக்கு இருவிதமான தேசியவாதமும் ஒன்றுபோலத்தான் காட்சியளிக்கிறது. தேசியவாதத்தின் மீது எழுப்பப்பட்டுள்ள புனிதத்தன்மை அவர்களை வசீகரிக்கிறது.
பாசிஸ்ட் தேசியவாதம் ஓர் ஆபத்தான அவர்களை தங்களுடைய குழு அடையாளத்தை மீட்டமைப்பதற்கான குறிக்கோளுடன் உருவாக்குகிறது. இந்நூலின் ஆசிரியரின் கூற்றுப்படி, மக்கள் தொகையில் பல்வேறு பிரிவினரை மனிதாபிமானமற்றமுறையில் நடத்துவதும், அவர்களை இழிவுபடுத்துவதும் பாசிஸ்ட் சக்திகள் பின்பற்றிடும் முக்கியமான உத்திகளில் ஒன்றாகும். வரலாற்றில் தங்களுக்கிருந்த உன்னத இடத்திற்கு நீதி வழங்கிட வேண்டுமானால் இதுபோன்று விளிம்பு நிலை மக்களையும், ஒடுக்கப்பட்டுள்ள மக்களையும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது அவசியம் என்று பாசிஸ்ட் சக்திகள் கருதுகின்றன.  இந்தியாவில் ஔரங்கசீப் அல்லது கர் வாப்சி (தாய் வீட்டுக்குத்திரும்புவோம்) போன்ற பாசிஸ்ட் மதவெறியர்களின் நிகழ்ச்சிநிரல்களிலிருந்து இதனைத் தெளிவாகக் காண முடியும். பாபர் மசூதி – ராமர் கோவில் பிரச்சனையும் கூட இந்து ராஷ்ட்ரம் – மதச்சார்பின்மை விவாதத்தை முன்னுக்குக் கொண்டுவருவதும் இந்த அடிப்படையில்தான்.
பாசிஸ்ட் அரசியலின் ஒரு பகுதியாக வரலாற்றைப் பயன்படுத்துவது குறித்தும் நூலின் ஆசிரியர் பகுப்பாய்வு செய்திருக்கிறார். பாசிஸ்ட் அரசியல்வாதிகள், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களையெல்லாம் நாம், நம்முடைய புராணகாலத்திலேயே பெற்றிருந்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதெல்லாம் இதன் அடிப்படையில்தான்.
அதேபோல் அறிஞர் பெருமக்களை அசிங்கப்படுத்துவதென்பதும் இவர்களின் பிரதான தாக்குதல் அம்சங்களில் ஒன்றாக இருப்பதுபோல் தோன்றுகிறது. இதுதொடர்பாகவும் இந்நூலில் விவாதம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஆசிரியர் இந்தியாவில் 2014இல் புதுதில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஜமியா மிலியா இஸ்லாமியா போன்ற நிறுவனங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைத் தாக்குதல்களையும், ஹைதராபாத் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்துகொண்டதையும் எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார்.
மோடி அரசாங்கத்தின் நோக்கம் என்பது தங்களுடைய மதவெறி நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் பல்கலைக் கழகங்கள் செயல்படவேண்டும் என்பதேயாகும். அதற்குப் பதிலாக மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கக்கூடிய விதத்தில் அங்கே விவாதங்கள் நடைபெறுவதையெல்லாம் அதனால் சகித்துக்கொள்ள முடியாது என்பதையே மேற்கண்டவாறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன. அதனால்தான் இப்பல்கலைக் கழகங்களுக்கு அரசு சார்பில் அளித்துவந்த நிதிஉதவிகளை வெட்டுவதிலும், மாணவர்களுக்கு அளித்து வந்த கல்வி உதவித்தொகைகளை ஒழித்துக்கட்டுவதிலும் பாசிஸ்ட் அரசு முனைப்பாக உள்ளது.
இந்நூலின் அத்தியாயங்களில் மிகவும் கவர்ச்சிகரமான ஒன்று, பாலியல் பதட்டநிலைமை(Sexual anxiety) என்பதாகும். பாலின சமத்துவம் என்பது ஆணாதிக்க சமுதாயத்தினை வலுவிழக்கச்செய்திடும் மற்றும் அச்சுறுத்தக்கூடிய ஒன்றாகும். எனவேதான் பாசிஸ்ட்டுகள் இதனை விரும்புவதில்லை. நம் நாட்டில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியிருந்த ‘லவ் ஜிகாத்’ (Love Jihad), அறநெறிக் காவலர்கள் (Moral Police) போன்ற அமைப்புகள் இளைய சமுதாயத்தினரிடம் எவ்வாறெல்லாம் கொடூரமாக நடந்துகொண்டன என்பதை நாமறிவோம்.
பாசிஸ்ட் சித்தாந்தத்தின்படி, தங்கள் நாட்டிற்கு நெருக்கடி மற்றும் தேவை ஏற்படும்காலங்களில், தன்னையொத்த நாடுகளிடமிருந்துதான் ஆதரவினைப் பெறவேண்டுமேயொழிய, அதாவது நம்முடைய நாடுகளிலிருந்துதான் ஆதரவினைப் பெறவேண்டுமேயொழிய, அவர்களுடைய நாடுகளிலிருந்து ஆதரவினைப் பெறக்கூடாது. இதற்கு பாசிஸ்ட்டுகள்  கூறும் நியாயம் என்னவென்றால், ‘அவர்கள்’ எப்போதும் சோம்பேறிகள், வேலை செய்யவேண்டும் என்கிற ஆர்வம் இல்லாதவர்கள், ‘அவர்களை’ நம்பி அரசாங்கத்தின் நிதிகளை அவர்களுக்குச் செலவு செய்துவிடக் கூடாது, ஏனெனில் அவர்கள் கிரிமினல்கள். எனவே அவர்களிடம் உள்ள  சோம்பேறித்தனத்தை அவர்களுக்குக் கடின உழைப்பை அளிப்பதன்மூலம்தான் போக்க வேண்டும் என்பதேயாகும்.
இந்தப் புத்தகம் ஜனநாயகத்தையும் மனிதகுல நாகரிகத்தையும் பாதுகாப்பதற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கக்கூடிய ஆராய்ச்சியாளர்கள் படிக்க வேண்டிய மிகச்சிறந்த புத்தகமாகும். மதவெறியர்களால் தற்போது நம் நாட்டைப் பீடித்துள்ள ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற, போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்நூலைப் படிப்பதன் மூலம் பயனடைவார்கள் என்பது திண்ணம்.
கட்டுரையாளர், புதுதில்லி,ஜமியா மிலியா இஸ்லாமியாவில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அதிகரித்துவரும் காவி அதிகாரம்:இந்திய அரசியலில் அதன் பாதிப்புகள் (Rise of Saffron Power:Reflections on Indian Politics) என்னும் நூலின் ஆசிரியர்.
(நன்றி: ப்ரண்ட்லைன்)
தமிழில்: ச. வீரமணி
 


No comments: