Monday, December 24, 2018

நாகரீகமென்றால் என்ன? - தந்தை பெரியார்


நாகரீகமென்றால் என்ன? - தந்தை பெரியார்

அன்பார்ந்த முகநூல் நண்பர்களுக்கு,
வணக்கம். தீக்கதிர் நாளிதழுக்காக அக்டோபர் புரட்சி குறித்து தந்தை பெரியார் கூறியவற்றை குடிஅரசு இதழ்களில் தேடியபோது, நாகரிகம் குறித்து அவர் ஆற்றிய உரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
என் உள்ளத்தில் திருவள்ளுவர் குறித்தும் தந்தை பெரியார் குறித்தும் என் ஆழ்மனதில் நன்கு பதித்ததில் என் அண்ணனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. பல திருக்குறள்களை அவர் பொருளோடு கூறி என் மனதில் பதிய வைத்தார். அவ்வாறு கூறும்போது, தந்தை பெரியாரையும் ஒரு குறளோடு ஒப்பிட்டார்.
தந்தை பெரியாரிடம் யார் வந்து எது கொடுத்தாலும் அவர் கொடுத்தவரின் மனம் கோணாதவாறு அதை வாங்கி சாப்பிடுவாராம். அதற்கு அவர் ஒரு குறளை ஒப்பிட்டிருப்பார்.
பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என்பதே அந்தக் குறள்.
இது ஒருபுறமிருக்க குடி அரசு இதழ்களை நான் மேய்ந்தபோது. நாகரிகம் என்றால் என்ன என்று ஓர் உரை நிகழ்த்தியிருந்ததைப் பார்க்க முடிந்தது. அதில் தந்தை பெரியார் அவர்கள் அந்தக் குறளை மேற்கோள்காட்டியிருப்பார்.
அதை நான் படித்தபோது நான் அடைந்த இன்பத்தை, முகநூல் நண்பர்களும் அடையட்டும் என்று இங்கே பதிவு செய்திருக்கிறேன்.
தோழமையுடன்
ச. வீரமணி.


நாகரீகமென்றால் என்ன?
தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய நண்பர் கூறினார். நான் எப்பொழுதும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான - முடிவான பதில் சொல்லக் கூடிய சகலகலாவல்லவனென்று எண்ணி விடாதீர்கள். நான் சொல்லும் அபிப்பிராயம் தான் முடிவானதென்றோ, அதுவே முடிந்த ஆராய்ச்சியின் சரியான கருத்து என்றோ, நீங்கள் கருதக் கூடாது.
விவகாரம், நியாயம் என்ற இரண்டு வார்த்தைகளையும் உபயோகப் படுத்தும் விதத்தை சரியாக உணர்ந்து கொள்ளும்படி கோருகிறேன்.
நியாயம் வேறு-விவகாரம் என்பதும் வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக் கத்தையும், தந்திர சூக்ஷிகளையும், பணச் செல்வாக்கையும் பொருத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தி இல்லாத காரணத் தால்-பேசும் திறமை, எடுத்துக்காட்டும் அனுபோகம் ஆகியவை இல்லாத காரணத்தால்-ஒரு விஷயத்தைப் பற்றி வாதித்துத் தோல்வியுற்று விட்டால் அது நியாயம் கண்டு பிடித்தாகிவிடுமா? அது போல் உங்கள் வாய் அடங்கும்படி நான் பதில் சொல்லி விட்டதாலேயே நான் சொன்னது சரி என்று சொல்லிவிட முடியாது. உங்களுக்கு எடுத்துச் சொல்லி மெய்ப்பிக்க முடியாததாலேயே நான் சொன்னது தப்பு என்றும் சொல்லிவிட முடியாது. ஆதலால் எனக்குத் தெரிந்த பதில் சொல்லுகிறேன். அதை ஆராய்ச்சி செய்து பிறகு ஒரு தக்க முடிவுக்கு வாருங்கள்.
இன்றைய தினம் இங்கு பேச எடுத்துக் கொண்ட விஷயம் இந்தியா வின் தற்கால நாகரீகம் என்பதாகும். இது ஒரு கூடாத விஷயமல்ல. மிக்க ருசிகரமானதும் விரிந்த பொருள்களைக் கொண்டதுமான நல்ல விஷயத் தையே நீங்கள் இங்கு பேச எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நாகரீகம் என்கின்ற வார்த்தைக்குப் பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் ‘நாகரீகம்’ என்பதற்கு ஒரு தனிப் பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ் குறளில் நாகரீகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோகப்படுத்தப்பட்டி ருக்கிற தாக நான் 10, 20 வருஷங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாக்ஷண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டி ருப்பதாகவும் எனக்கு ஞாபகம். நாகரீகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லா பாவனை களிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கிறதென்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில் தான் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு ஸ்திரிகளும்-தெருக்களில் தெருக் கூட்டு வது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்த காலத்தில் துணிகளைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரீகம். இப்பொழுதோ என்றால் ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரீகமென்று தான் கருதுகிறோம். நாம் இவைகளைப்பற்றி எல்லாம் பேசும் பொழுதும் யோசிக்கும் பொழுதும் எந்தவித பற்றுதலும் இல்லாமல் அதாவது ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டு விட்டு  சுயேச்சையாக சீர்தூக்கிப் பார்த்தால் தான் விஷயங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுது தான் விளங்கும். ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவ சிவா என்று ஜெபிப்பது தான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்த மானங்கள் மேல் சொன்ன விஷயத்தை கேலி செய்கிறது. புருஷன் பெண்ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக் கொண்டா லும், முன்பு கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமையென்று நடந்து வந்த பெண்களைப் பற்றி பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால் இன்றோ புருஷனிடம் மனைவி யானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக் கிரதையாயிருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்த°தும் சம உரிமையும் சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண் களையே நாகரீகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம்.
முன்பு புராணத்தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பேசுவது தான் வித்வத் தன்மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகி பரிகசிக் கத் தக்கதாக ஆகிவிட்டது.
புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கையிருந்ததை சிலாகித்துப் பேசி னோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியக்ஷமாக எதையும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும்-விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுணர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம். நாகரீகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும்-காலப் போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. காலதேச வர்த்தமான-வழக்கத்தையேயொட்டி நாகரீகம் காணப்படுகிறது. காலப்போக்கானது எந்த தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும்-புரட்சி ஏற்படவும் செய்கிறது. மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர் கள். எது நாகரீகமென்று கருதுகின்றோமோ அது பெருத்த அஜீர்ணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக்கொண்டு போகத்தான் செய்கின்றது. ஒரு விஷயமானது வாய் சாமர்த்தியத்தினால் செலவாணியாகிவிடும். அது மெய்யோ-பொய்யோ சரியோ-தப்போ எப்படியும் இருக்கலாம். நாம் ஏன் எதற்காக உழைத்துப் பாடுபடவேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆகவேண்டுமா? நாகரீகம் என்பது சதா உழைத்துத் தான் உண்ண வேண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்து மக்கள் சமூகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரீகமாக கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம். இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரீகமாக பாவிக்கப் பட்டி ருந்தது. பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப் படுத்தப்பட்டு அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு இராட்டை சுற்றுவதும்-தக்ளி நூல் நூற்பதும் நாகரீகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம், ஜாதி) பற்றுதலுமில்லாத பொதுமனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது. நாம் ஓர்காலத்தில் தேசம், தேசீயம்-தேசப்பற்று என்பதை நாகரீக மாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளையெல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் மக்கள்அபிமானம் என்று கருதுவதையே பெரிதும் நாகரீக மாகக் கருத முன் வந்துவிட்டோம். ஒருகாலத்தில் நாகரீகமாக கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பாராட்டிக்கொண்டு ஒவ்வொரு வரும் தாங்கள் அதிக மேல் சாதிக்காரனாவதற்குச் சைவ-வைணவப் போக்கைப் பற்றிக் கொண்டு பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தங்கள் மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்திகெட்ட தனமென்றும், முற்போக்குக்கு முரணான தென்றும் கூறி வெகுவாகக் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனித் தத்துவம் நாகரீகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக ஒரு தனித்தனி ஜாதி நன்மையும்-தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப் பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும் ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்கு பொல்லாங்கு என்ப தையும் நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம். தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால் அறிவு ஆராய்ச்சியால் நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக் கிறோம். உதாரணமாக வியாபாரிகளை-மக்கள் சமூகத்தின் நலனைக் கொடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவா தேவிக்காரர்களை-மனித சமூக நாசகர்த்தாக்களென்றும் மத ஆதிக்கங் கொண்ட வர்க்கத்தினர்களையும்-மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக் கின்றோம். நாகரீகம் என்பது பிடிபடாத ஓர் விஷயமென்று முன்பே கூறினேன். நம்நாட்டு பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சீலைகட்டுகிறார் களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கியிருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களை சேர்த்து முடிந்துகொள்ளு கிறார்களென்றும், நாம் சாப்பாட்டுக்கு தினம் ஒரு இலை  எப்படி சிலவு செய்கிறோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப் பட்டு நம்மவர்களை கேட்பவரையும் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களின் செய்கையை சரியாக உணராததினால் சிலதை ஆச்சரியமாக கருத நேரிடுகிறது. நம்மிடையேயுள்ள சாதி அபிமானம் சொந்தகார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலையவேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாதுகாந்தியார் மேனாட்டில் முழங்கால் துண்டோடு-போதிய ஆடை யின்றி போன பெருமையைப் பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானதாகும் சௌகரியத்திற்காவும்- நன்மைக்காவும் அங்கு அதிக ஆடைகளை பந்தோபஸ்துக்காக அணிந்து கொள்ளாமல் பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக குளிரில் விரைத்துபோக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்? புதிய எண்ணங்களும் புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரிய பலனை வீணாக்காது பகுத்தறிவை மேற்போட்டுக்கொண்டு ஜனசமுதாய நன்மையை தேடி பாடு பட முன்வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களும்கூட தங்களுடைய போக்கை மாற்றிக்கொண்டு முயற்சி மெய்வருத்தகூலி தரும் என்றுசொல்லி வருகிறார்கள். ஆகவே தோழர்களே! நீங்கள் தன் நம்பிக்கைகொண்டுமக்களின் விடுதலைக்கு சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படை யாகக்கொண்டு போராட வாருங்கள்.
---

Saturday, December 22, 2018

ரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…!



ரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்!


===பி. அர்ஜூன்===
வெகு காலத்திற்கு முன் அல்லாமல், சமீபத்தில்தான், அதாவது 2012இல்தான், இந்திய விமானப் படை தன்னிடமிருந்த விமானங்களின் எண்ணிக்கை மிகவும் மோசமான முறையில் குறைந்துவிட்டதைச் சரிக்கட்டி அதிகப்படுத்துவதற்காக, ரபேல் ஜெட் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதெனத் தேர்வு செய்தது. இவ்வாறு போர் விமானங்களைக் வாங்குவதற்காக இந்திய விமானப் படை உருவாக்கியிருந்த தர நிர்ணயம் என்பது உலக அளவில் மிகவும் தரமான ஒன்றாக மதிப்பிடப் பட்டிருந்தது.
இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரியான ஏர் கமோடர் ஜஸ்ஜித் சிங் இதற்காக இந்திய விமானப்படையைமுறையான மற்றும் அறிவியல் செயல்முறையைப் பின்பற்றுவதாக, மிகவும் புகழ்ந்திட்டார். பிரேசில் ராணுவ அமைச்சர் செல்சேநலா அமோரின் அப்போது இந்திய ராணுவ அமைச்சராக இருந்த .கே. அந்தோணியிடம் இந்தியாவின்எம்எம்ஆர்சிஏஎனப்படும்வெளிப்படையான டெண்டர் மதிப்பீட்டு செயல்முறையை- நடுத்தர பலவகை போர் விமானப் போட்டி”(MMRCA—Medium Multi-role Combat Aircraft competition) மூலம் மிகவும் குறைந்த விலைகேட்டவராக பிரெஞ்சு தயாரிப்பான டசால்ட் ரபேல் தேர்ந்தெடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த இந்தியாவின் செயல்முறையைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் இருந்துவந்த குறைபாடுகள் பெரிய அளவில் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், இனிமேல்போபோர்ஸ்வகை ஊழல்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது என்றும் கருதப்பட்டது. ஆனால், அப்போது, ஒரு புதிய அரசாங்கம் வரும் என்றோ, அது ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தகைய செயல்முறைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டு, முந்தைய காலங்களில் இருந்ததைப் போன்று மர்மமான முறையிலானதாக மாற்றிவிடும் என்றோ யார்தான் அறிவார்!

தன்னிச்சையாக ஒரு ஒப்பந்தம்

ரபேல் விமானங்களை வாங்குவது என்று தீர்மானித்தபிறகு, 126 விமானங்களை வாங்குவதற்கான விலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்தன. ஆனாலும், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே, ஐமுகூ அரசாங்கம் 2014இல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே, மோடி அரசாங்கம், ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று விநோதமான முறையில் அறிவித்ததைப்போலவே, ரபேல் விமானங்களை வாங்குவது தொடர்பாகவும் அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக முந்தைய ஐமுகூ அரசாங்கம் 2007ஆம் ஆண்டிலிருந்து எடுத்துவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலுமாகத் துண்டித்துத் தூக்கி எறிந்துவிட்டு, தன்னிச்சையாக பிரெஞ்சு நிறுவனத்துடன் 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு, இது தொடர்பாக, அரசு வட்டாரத்திற்கு உள்ளேயோ, வெளியேயோ, எவ்விதமான விவாதமோ அல்லது ஆழமான முறையில் ஆய்வுகளோ நடந்திடவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்திய விமானப் படை பல ஆண்டு காலம் கடினமான உழைத்து உருவாக்கியிருந்த முன்மாதிரியான நடைமுறைத் திட்டத்தை சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டது. பிரெஞ்சு நிறுவனத்திற்கு உறுதிமொழிகளை இந்திய அரசு சார்பில் அளிப்பதற்கு முன்பு, நம் நாடு இதுவரை கடைப்பிடித்து வந்த தேசியப் பாதுகாப்பு அம்சங்கள், ஜனநாயக நெறிமுறைகள், மதிப்பு மரியாதைகளையெல்லாம், குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டது. புதிய ஒப்பந்தமானது, இதுபோன்ற விமானங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு மாற்றுவதற்காக இந்திய விமானப் படை செய்துவைத்திருந்த ஒப்பந்தங்களையும்கூட, மேலும் தொடராத விதத்தில், விட்டுக்கொடுத்துவிட்டது.

42 கப்பற்படைப் பிரிவுகள்
நம் நாட்டின் இந்திய விமானப் படையின் தேவைகளோடு ஒப்பிடும்போது, வெறுமனே 36 விமானங்களுக்கான ஒப்பந்தம் என்பதுகூடகேலிக்கூத்தான ஒன்றேயாகும். மிகவும் பழையதாகிப் போய்விட்ட ரஷ்ய விமானங்களுக்குப் பதிலாகத்தான் புதிதாக விமானங்களை வாங்கிட இந்திய விமானப் படை பத்து ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இந்திய விமானப் படையின் கூற்றின்படி, நம் நாட்டிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் அனுமானத்தின்படி, நமக்கு 42 போர்க்கப்பற்படைப் பிரிவுகள் தேவைப்படும். (ஒவ்வொரு கப்பற்படைப் பிரிவிலும் 16 – 18 விமானங்கள், போர் விமானங்கள் உள்ளடக்கிய விதத்தில் அமைந்திருக்கும்.) 2019-2020 வாக்கில், எம்ஐஜி 21 மற்றும் எம்ஐஜி 27 அடங்கிய 14 போர்க்கப்பற்படைப்பிரிவுகள் காலாவதியாகிவிட்டால், பின்னர் இந்திய விமானப் படையானது 30க்கும் குறைவான போர்க்கப்பற்படைப் பிரிவுகளுடன்தான் இயங்க வேண்டியநிலை ஏற்படும்.
இப்போது மிகவும் தெளிவாகத் தெரியவேண்டிய விஷயம் என்னவெனில், இரண்டே இரண்டு போர்க்கப்பற்படைப் பிரிவுகளுக்கான ரபேல் போர்விமானங்கள் வாங்குவதால், இந்திய விமானப் படையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டிட முடியுமா என்பதேயாகும். இந்திய விமானப் படையின் தொலைநோக்குத் திட்டங்களை பிரதமர் மோடி மாற்றியமைத்ததன் மூலம் ஏற்பட்டுள்ள ஆபத்தாகும் இது. எம்எம்ஆர்சிஏ மூலமாக கொள்முதல் செய்யும்போது அப்போதைய ஐமுகூ அரசாங்கத்தின் ராணுவ அமைச்சராக இருந்த .கே.அந்தோணி மூன்று வழிகாட்டும் கொள்கைகளை ஏற்படுத்தியிருந்தார். முதலாவது, இந்திய விமானப் படைக்குத் தேவையான விமானங்கள் முழுமையாக வாங்கப்பட்டுவிட வேண்டும். இரண்டாவது, விமானங்களை வாங்குவதற்கான செயல்பாடுகள் போட்டிமிக்கதாகவும், நேர்மையானதாகவும், வெளிப் படைத்தன்மை படைத்ததாகவும் இருந்திட வேண்டும். அப்போதுதான், பணத்திற்கான சிறந்த மதிப்பு உணரப்படும். இறுதியாக, இந்திய ராணுவத் தொழில்கள் உலக அளவில் வளர்வதற்கானதொரு வாய்ப்பினைப் பெற முடியும். இம்மூன்று கொள்கைகளையுமே இப்போது ஜெட் விமானங்களை வாங்கும் விஷயத்தில் மோடி அரசாங்கம் சுக்கு நூறாகக் கிழித்துப்போட்டுவிட்டது.
ஓர்இழிவான விற்பனையாளர்
நாட்டின் ராணுவத்திற்குச் சிறந்த பயன்தரக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்ட அடிப்படை வழிகாட்டும் நெறிமுறைகளை மோடி உதாசீனம் செய்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அவசரகதியில் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள மோடிக்கு சர்வதேச நிர்ப்பந்தம் ஏதேனும் ஏற்பட்டதா?
முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதியான பிரான்காய்ஸ் ஹாலண்டே சிறந்ததொருஇழிவான விற்பனையாளர்என்று கருதப்பட்டவர். வரலாறு அவரது பெயரை என்றென்றும் நினைவுகூர்ந்திடும். ஏனெனில் அவரது காலத்தில்தான் ஒரே ஆண்டில் அதிகபட்ச அளவில் ரபேல் போர் ஜெட் விமானங்கள் விற்கப்பட்டு, அதன்மூலம் டசால்ட் வானூர்தி நிறுவனம் கடனில் மூழ்காமல் காப்பாற்றப்பட்டது. இந்தியாவுக்கு 36 விமானங்களையும், கத்தார் மற்றும் எகிப்துக்கு தலா 24 விமானங்களையும் விற்பனை செய்தார். இது ஒரு சாதனையாகும். ஏனெனில் 2015க்கு முன்பு, 24 ஆண்டுகளில் ஒரு ரபேல் விமானம் கூட எந்த நாட்டுக்கும் விற்கப்படவில்லை.
ஹாலண்டேயின் இத்தகைய திகிலூட்டுகிற விற்பனைத் திறன் சமாச்சாரம், விற்பனையில் திடீர் தாவலுக்கான கேள்விக்கு மட்டும் பதில் அளித்துவிடவில்லை. கண்ணுக்குப்புலப்படாத, புதிரான, அமெரிக்க நலன்களால் வழிகாட்டப்பட்ட சில உயர்மட்ட அளவிலான சர்வதேச வர்த்தக மற்றும் அரசியல் வலைப்பின்னலும் அவரது குறிக்கோளை அடைய அவருக்கு உதவி இருக்கிறது.
ஹாலண்டேஓர் உன்னதமானவிற்பனையாளராக இருக்கலாம். ஏனெனில் அவர் இவ்வாறு விமானங்களை விற்றதன் மூலமாக பிரான்சின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தார் என்பதுமட்டுமல்ல, இதன்மூலம் அமெரிக்க ராணுவத்துறைக்கும் உதவினார். 2013இல் ஹாலண்டே ஜனாதிபதியான பின்பு, பிரெஞ்சு விமானப் படையிடம் போர் விமானங்களின் உற்பத்தியின் உச்சவரம்பை 286இலிருந்து 225 ஜெட் விமானங்களாகக் குறைத்துக்கொள்ளுமாறும், டசால்ட் நிறுவனத்திடம் ஆண்டுக்கு 11 விமானங்கள் விற்கக்கூடிய விதத்தில் தயார் செய்வதற்குப் பதிலாக ஐந்து விமானங்கள் மட்டும் விற்கக்கூடிய விதத்தில் தயாரிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ராணுவ செலவினங்களைக் குறைத்ததன் மூலம் சேமிக்கப்பட்ட பணத்தை அவர் மக்கள் நலத் திட்டங்கள் எதற்கும் பயன்படுத்திடவில்லை.
மாறாக, அவ்வாறு 61 விமானங்கள் உற்பத்தி செய்வதற்கான செலவினத்திலிருந்து சேமிக்கப்பட்ட பணத்தின் மூலமாக அமெரிக்காவிடமிருந்து நான்கு லாக்ஹீட் மார்ட்டின் சி-130ஜே விமானங்களும், நான்கு எம்கியூ-9 ரீப்பர் ஆளில்லா வளிமண்டல ஊர்திகளும் வாங்கினார். இவ்வாறு, ஹாலண்டே, அமெரிக்காவிற்கு உதவினார். இதற்குப் கைமாறாக, அமெரிக்கா, பிரான்சின் ரபேல் விமானங்களை தன்னுடைய கட்டளைகளுக்குக் கைகட்டி, வாய்பொத்தி செவிமடுக்கும் இந்தியா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளை வாங்கச்செய்வதற்கு அநேகமாக கட்டளையிட்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்த ரபேல் விமானங்கள் மூலமாகத்தான் சிரியா மற்றும் லிபியாவில் மக்கள் மீது அட்டூழியங்கள் புரிந்திட அமெரிக்காவுக்கும் பிரான்ஸ் உதவியது.
மோடி அரசு மறைக்கும் மர்மங்கள்
2015 பிப்ரவரியில் எகிப்து பிரான்சுடன் 24 விமானங்களை வாங்குவதற்கு ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. முதல் மூன்று விமானங்களை 2015 ஜூலையில் பெற்றுக் கொண்டது. இரண்டாவது அனுப்பப்பட்ட ஜெட் விமானங்கள் கெய்ரோவை 2016 ஜனவரியில் சென்றடைந்தன. மூன்றாவது தவணை இந்த ஆண்டு ஏப்ரலில் போய்ச் சேர்ந்தது.
2015 ஏப்ரலில் ஹாலண்டே மற்றொரு ஒப்பந்தத்தை மோடியுடன் செய்து கொண்டார். அதன்படி, இந்தியாவிற்கு 36 போர் விமானங்களை 9.2 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு) வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் மோடி கையெழுத்திட்டார். ஹாலண்டே அந்த ஆண்டில் மூன்றாவது ஒப்பந்தத்தை 24 ரபேல் ஜெட் விமானங்களை விற்பதற்காக கத்தாருடன் செய்துகொண்டார். பிரான்ஸ், எகிப்துக்கு 5.2 பில்லியன் ஈரோக்களில் விற்ற விமானத்தை கத்தார் விமானப் படைக்கு 6.3 பில்லியன் ஈரோக்களுக்கு விற்றதாகக் கூறப்பட்டது.
கத்தார் நாட்டுன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி விமானத்தின் விலை அதிகமாகும். ஏனெனில், இதனுடன் நீண்ட தூரம் பாயக்கூடிய குரூஸ் ஏவுகணைகள் மற்றும் விண்கற்கள் ஏவுகணைகளும் (meteor missiles) சேர்க்கப்பட்டிருந்தன. மேலும், எகிப்து வாங்கிய விமானங்களில் மூன்றில் இரண்டு பங்கு, பயிற்சியாளர்கள் இருவர் அமரக்கூடியவைகளாகும். அவை ஒருவரே அமரக்கூடிய போர் விமானங்களைவிட விலை குறைவானவைகளாகும்.
இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, டசால்ட் விமான நிறுவனம் மார்ச் 8 அன்று வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் கண்டுள்ள விவரங்கள், எதிர்க்கட்சிகள்விமானங்களை அதீத விலை கொடுத்து வாங்கியிருப்பதாக, அதாவது ஒவ்வொரு ரபேல் ஜெட் விமானத்திற்கும், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய ரபேல் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்ததைவிட 351 கோடி ரூபாய் அதிகமாகக் கொடுத்து வாங்கியிருப்பதாக, அரசாங்கத்தைக் குறை கூறிக்கொண்டிருக்கின்றன என்று, வெளிப்படுத்தி இருக்கிறது.
எனவே, இப்போது நம்முன் எழும் கேள்வி: ரபேல் விமானத்திற்கு கத்தார் கொடுத்த விலையைவிட இந்தியா அதிக விலை கொடுத்து வாங்கியதன் மூலம் இந்தியா வாங்கியுள்ள விமானத்தில் கூடுதல் அம்சங்கள் என்ன இருந்தன? இரண்டாவது கேள்வி: விமானத்தின் விலையில் திடீரென்று மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு விமானத்தில் சிறப்பாகவும் கூடுதலாகவும் பொருத்தப்பட்ட அம்சம் என்ன?
ரபேலுடன் விலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தியபிறகு, ஈரோ போர் விமானம், மலிவானதாக மாறியுள்ளது என்று அரசாங்கம் எவ்விதமான குறிக்கோளுமின்றி சொல்வதிலிருந்து, பிரெஞ்சு ஜெட் விமானம் ஒவ்வொன்றின் விலையும், அதனுடன் உள்ள அனைத்து துணை பாகங்களுடனும், அது முன்பு குறிப்பிட்டிருந்ததைவிட அதிகமாக இருக்கிறது என்று வெளிப்படுத்தி இருக்கிறது. எனவே, ரபேல் விமான நிறுவனம் குறைந்த விலைக்குத் தருவதாகக் கூறிய நிறுவனம் என்று இனி சொல்ல முடியாது. இறுதிப் பேச்சு வார்த்தைகளின்போதுதான் உண்மையான விலை வெளி வரும் எனில், பின் வேறு ஈரோ போர் விமானங்களை உற்பத்தி செய்பவர்களுடன் இதே போன்று பேச்சு வார்த்தைகள் நடத்தாமலேயே, டசால்ட் விமான நிறுவனம் குறைந்த விலைக்கு விமானங்களைக் கொடுக்கும் நிறுவனம் அல்ல என்று எப்படி இந்த அரசாங்கம் கூற முடியும்?
டசால்ட் நிறுவனம்செயல்திறன் மற்றும் வாரண்ட்டி பத்திரங்களை அளித்திடத் தயங்கியமையும்,” மற்றும்ஒப்பந்தத்திற்காக முழுமையாகப் பொறுப்பேற்கவும் மறுத்ததுதான், டசால்ட் நிறுவனத்துடனான ஆரம்ப ஒப்பந்தத்தை விலக்கிக்கொள்ள வேண்டியதற்கான காரணங்களில் ஒன்று என்று காட்டப்பட்டிருக்கிறது. இது, ரபேல் ஜெட் விமானங்களுக்கான நிபந்தனைகளும், விலையும் அதிகம் எனில், பின் ஏன் அந்த ஒட்டுமொத்த பேரத்தையும் ரத்து செய்ய அரசாங்கம் முன்வரவில்லை என்ற கேள்வியை எழுப்பிட இட்டுச்செல்கிறது. டசால்ட் நிறுவனம் தான் முன்பு சொன்ன விலையிலிருந்தும், உறுதிமொழியிலிருந்தும் பின்வாங்கியிருக்குமாயின், பின் ஏன் இந்த அரசாங்கம் அதே நிறுவனத்திடமிருந்து 36 விமானங்களை வாங்க முன்வந்தது?
உண்மை விலை என்ன?
விமானத்தின் உண்மையான விலையை மறைத்திருப்பதன் மூலம் இந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது. உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திடாமல் தடுத்து, தேசியப் பாதுகாப்பு என்கிற முகமூடிக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது. மற்றுமொரு போலியான வாதம், இந்த பேரம் இரண்டு அரசாங்கங்களுக்கு இடையே நடந்திருப்பதால் இதில் லஞ்சத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுவதாகும். பிரதமர் அவ்வாறுதான் கூறிக்கொண்டிருக்கிறார். எனினும், அவர் கூறுவதில் என்ன காணப்படவில்லை என்றால் உலகம் முழுதும் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்கு ஆதரவாக நின்று, ஊழலின் உறைவிடங்களாக இருப்பவை என்பதை மறைத்திருப்பதாகும்.
ரபேல் பேரத்தில் அதிகமான அளவிற்கு ஆதாயம் அடைந்துள்ளது. நவீனமயமான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் எவ்வித அனுபவமும் இல்லாத அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் என்கிற உண்மையை எப்படி ஒருவர் மறுக்கவோ மறைக்கவோ முடியும்? தேசியப் பாதுகாப்பைக் காவு கொடுத்து, கடனில் மூழ்கியுள்ள ஒரு முதலாளிக்கு கூச்சநாச்சமின்றி ஆதரவு அளித்திருப்பதன்மூலம், மோடி தான்தோன்றித்தனமாக நேர்மை தவறியிருக்கிறார்.
(தமிழில்: .வீரமணி)