சிறுத்தைப்புலியால் தன் புள்ளிகளை எப்போதுமே மாற்றிக்கொள்ள
முடியாது.
-சீத்தாராம் யெச்சூரி
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத் சமீபத்திய மூன்று நாள்
உரையின்போது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தோற்றத்தை நவீனமாக மாற்றுவதற்கு
முயற்சித்திருக்கிறார். எப்படி தங்கள் ஆர்எஸ்எஸ் முகாம்கள் இளைஞர்களைக்
கவர்வதற்காக “உடற்பயிற்சி மையங்கள்”” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதோ
அதேபோன்றதொரு முயற்சிதான் இது.
எனினும், இவர்களுடைய முக்கிய நோக்கம், ‘இந்து ராஷ்ட்ரம்’ என்று
தாங்கள் அடிக்கடி கூறுவதன்மூலம் மக்கள் மத்தியில் இது முஸ்லீம்களுக்கு எதிரான
ஒன்று என்பதும், தாங்கள் அமைத்திடும் இந்து ராஷ்ட்ரத்தில் முஸ்லீம்களுக்கு
இடமில்லை என்றும் மக்கள் மத்தியில் ஏற்படும் உணர்வை மாற்ற வேண்டும் என்பதேயாகும்.
”ஆர்எஸ்எஸ் உலகளாவிய சகோதரத்துவத்திற்காக வேலை செய்கிறது. இத்தகைய
சகோதரத்துவத்தின் அடிப்படைக் கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை காண்பதேயாகும். இந்த
சிந்தனையே நம்முடைய கலாச்சாரத்திலிருந்துதான் வருகிறது. இதனை உலகம் இந்துத்துவா
என்று அழைக்கிறது. அதனால்தான் நாம் அதனை ஓர் இந்து ராஷ்ட்ரம் என்று அழைக்கிறோம்.”
இவ்வாறு மோகன் பகவத் கூறியிருக்கிறார். இவர் கூறியதில் உள்ள, ‘இந்துத்துவா’
மற்றும் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் இரண்டு வார்த்தைகளையும் முதற்கண் ஆராய்வோம். 1923இல்
வி.டி. சாவர்க்கரால் உருவாக்கப்பட்ட வார்த்தைதான் ’இந்துத்துவா’ என்பதாகும்.
அப்போது அவர் இந்துத்துவா’-விற்கும் இந்து மதத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும்
இல்லை என்று தெளிவுபடக் கூறினார். இந்து தேசத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட
ஓர் அரசியல் திட்டம் அது என்றார். இதனை எய்திட, ‘இராணுவத்தை இந்துமயமாக்கு,
இந்துதேசத்தை இராணுவமயமாக்கு’ (`Hinduise the military, militarise
Hindudom’) என்ற முழக்கத்தை முன்வைத்தார். அவருடைய அடிப்படை உந்துதல்
என்னவெனில் (முஸ்லீம்கள், கிறித்தவர்களைத் தவிர) மற்றபடி இந்தியாவில் பல்வேறு மத
நம்பிக்கைகளுடனும், மதங்களுடனும் வாழும் பல்வேறுதரப்பு மக்களையும், வகையினரையும்
எப்படி ஒன்றுபடுத்துவது என்பதேயாகும்.
1939இல் “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’’
(We or Our Nationhood defined (1939) என்று ஆர்எஸ்எஸ்
இயக்கத்தின் முன்னாள் தலைவரான எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய தன் புத்தகத்தில், ‘இந்து
ராஷ்ட்ரம்’ என்றால் என்ன என்று வரையறுத்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்
பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் குறிக்கோளை எய்திட தேவையான தத்துவார்த்த
அடித்தளங்களையும், ஸ்தாபன வலைப்பின்னலையும் இந்நூலில் அவர் தெளிவுபடுத்தி
இருக்கிறார். இவ்வாறு தாங்கள் விரும்பும் ‘இந்து ராஷ்ட்ரம்’ அமையும்போது,,
அந்நியர்களாக இருப்பவர்களுக்கு (அதாவது
முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு) இரு மார்க்கங்கள் மட்டும்தான்
வெளிப்படையாக உண்டு என்றும், அதாவது, ஒன்று அவர்கள் தேசிய இனத்துடன் முழுமையாக இணைந்து, அவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள
வேண்டும், அல்லது தேசிய இனம் அவ்வாறு அவர்கள்
தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கும் வரையில் மற்றும் தேசிய இனத்தவரால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று
சொல்லும்வரையில், அவர்களது கருணையின் கீழ் வாழ்ந்து கொள்ள
வேண்டும் என்பதாகும். மேலும், இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் ஒன்று இந்து
கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்து மதத்தை மதித்திடவும், பயபக்தியுடன்
போற்றித் துதித்திடவும் வேண்டும், இந்து
இனத்தையும்,
கலாச்சாரத்தையும், அதாவது இந்து தேசத்தை வானளாவப்
புகழ்வதைத் தவிர வேறெந்த சிந்தனையையும் ஏற்காதிருக்க வேண்டும், தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களை யெல்லாம்
துறந்துவிட்டு இந்து இனத்துடன் சங்கமித்திட வேண்டும், அல்லது எதையும் கோராமல், எவ்விதமான சிறப்புரிமைகளையும்
உரிமைபாராட்டாமல், முன்னுரிமை
சலுகைகள் எதனையும் கோராமல், ஒரு
பிரஜைக்குரிய உரிமைகளைக் கூடக் கோராமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து இருந்து கொண்டு, நாட்டில் தங்கிக் கொள்ளலாம்.
குறைந்தபட்சம் அவர்கள் வேறெந்த விதத்திலும் இருந்துவிடக்கூடாது. (கோல்வால்கர், 1939, பக். 47-48)/
பின்னர்,
1966இல் அவர் எழுதிய ‘சிந்தனைக் கொத்துக்கள்’ (`Bunch of Thoughts’) என்னும் நூலில், (இந்து
ராஷ்ட்ரத்திற்கு) ‘உள்ளுக்குள்ளேயே இருந்திடும் அச்சுறுத்தல்கள்’ என்னும்
அத்தியாயத்தில், அவர் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளை
வரிசைப்படுத்தி, பட்டியலிட்டிருக்கிறார். இதுகுறித்து, மோகன் பகவத் கூறும்போது,
இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பவை எல்லாம் எல்லாக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய
அளவிற்கு சாசுவதமானது அல்ல என்றும் அது ஒரு சூழ்நிலையில் கூறப்பட்டது அவ்வளவே
என்றும், அது எப்போதும் நிலையானது அல்ல என்றும் சொல்கிறார். இவ்வாறு கோல்வால்கர்
கூறியதை, மோகன் பகவத் மறுதலித்திருக்கிறார்.
இது
விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நிச்சயமாக, இந்தியாவில் தற்போது வாழ்ந்து
கொண்டிருக்கும் 200 மில்லியன் (20 கோடி) முஸ்லீம்களை, வெளியேற்றிவிட முடியாது.
ஆனால், ‘இந்து ராஷ்ட்ரத்தில்’ அவர்களின் தகுநிலை என்ன? இந்திய
அரசமைப்புச்சட்டமானது, நாட்டில் வாழும் அனைவருக்கும், அவர்கள் எந்த சாதியைச்
சேர்ந்தவர்களாக இருந்தாலும், மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆணாக
இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அனைவரும் சமம் என்கிறது. அதேபோன்று இந்து
ராஷ்ட்ரத்தில் இந்துக்களுக்கு இணையாக சம அந்தஸ்துள்ள பிரஜைகளாக சுதந்திரத்துடனும்,
கண்ணியத்துடனும் அவர்கள் வாழ்ந்திட முடியுமா?
மோடி
அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சியின் அனுபவம், நமக்கு, பாஜக என்பது
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம் என்பதை மேலும் தெளிவாக, உறுதிப்படுத்தி
இருக்கிறது. பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லீம்கள்
மீதும், தலித்துகள் மீதும் ஏவப்பட்ட கொலைபாதகத் தாக்குதல்களும், நம்முடைய
குழந்தைகள் எப்படி உடை உடுத்திட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எவருடன் நண்பராக
இருந்திட வேண்டும் என்று கட்டளையிடுகிற தனியார் ராணுவங்கள், அவ்வாறு அவர்கள் செய்ய
மறுத்தால் அவர்களைத் தாக்குவதும், குண்டர் படையினர் முஸ்லீம்களைக் கொலை செய்து
வருவதும், ‘புனித ஜிகாத்’ என்னும் பெயரில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பதும்,
மனிதாபிமானமற்ற முறையில் சிறுமிகளைக்கூட வன்புணர்வு செய்து கொலை புரிவதும் – இவை
அனைத்தும் நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு பகுதி மக்களுக்கு
எதிராக வெறுப்பை உமிழ்ந்து, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு, சிறுபான்மை இன
மக்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் ஒரு மோசமான சூழ்நிலையை
உருவாக்கி இருக்கின்றன.
கடந்த
நான்காண்டு கால பாஜக ஆட்சியின் அனுபவங்கள், கோல்வால்கர் ’இந்து ராஷ்ட்ரம்’
குறித்துக் கூறியிருப்பவனவற்றை நமக்கு நம் இரத்தத்தை உறையக்கூடியவிதத்தில் நினைவூட்டுபவைகளாக,
அமைந்துள்ளன. மோகன் பகவத் வேறுபல விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். பசுப்
பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற கொலைகள் மற்றும் வன்முறைகள் குறித்து அவர்
குறிப்பிடும்போது, சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு
எதிராகக் கடும் தண்டனை அளித்திட வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவ்வாறு
அவர் பேசும்போதுகூட முன்னுக்குப்பின் முரண் ஏன்? முஸ்லீம்களைக் கொன்றதற்கு
எதிராகக் குரல் எழுப்பும் அதே சமயத்தில், பசுக்களைக் கடத்திச் செல்வதற்கு
எதிராகவும் கிளர்ச்சிகள் நடத்திட வேண்டும் என்று திருவாய்மலர்ந்திருக்கிறார். இது
ஏன்? உள்ளொன்று வைத்துக்கொண்டு, புறம்பொன்று பேசுவதற்குச் சரியான உதாரணம்
இதுவேயாகும். பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்துமே பசுப் பாதுகாப்புக்கு என்று
சட்டங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன. எனினும் அதனை அவை ஏன் அமல்படுத்தவில்லை.
மோகன்
பகவத், புதிய கல்வி கொள்கை கூறித்தும் பேசியிருக்கிறார். நம்முடைய மதிப்பு
அடிப்படையிலான கல்விமுறைகள் (value
based systems)
நம் கல்விக் கொள்கையில் இணைக்கப்பட வேண்டும் என்று அறிவுரை நல்கியிருக்கிறார்.
(அதாவது ‘இந்து ராஷ்ட்ரம்’ அடிப்படையிலான கல்விமுறைகள் என்று புரிந்துகொள்க)
அடுத்து, மொழிக் கொள்கையைப் பொறுத்தவரையில், அனைத்து மொழிகளும்
பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தாலும், நம் தாய்மொழியை,
அதாவது சமஸ்கிருதத்தை மதித்திட வேண்டும் என்றும், இம்மொழியில் ஏராளமான
இலக்கியங்களைப் படைப்பதன்மூலம் இதனைப் பிரபல்யப்படுத்திட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
மதமாற்றங்கள்
குறித்து அவர் பேசுகையில் அது உள்நோக்கங்களின் (ulterior motives) அடிப்படையில் அமைந்திடக்கூடாது என்று
கூறியிருக்கிறார். இதற்கு அவர் கூறிடும் உதாரணம், தேவாலயங்களில் நடைபெறும்
கூட்டத்திற்கு மக்கள் வரவேண்டும் என்பதற்காக பணம் தரப்படுவதாகவும், அதனைத் தடுத்திட
வேண்டும் என்பதுமாகும். மதச்சிறுபான்மை நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்
கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளும் தாக்குதல்கள் தொடுப்பதற்கான காரணங்கள்
புரிகிறதல்லவா?
மொத்தத்தில்,
மோகன் பகவத் உரை என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தை, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப
அழகுசாதன மையத்தின் மூலமாக, மக்கள் ஏற்கும் விதத்தில் மாற்ற
முயற்சித்திருப்பதேயாகும். இவ்வாறு அவர்கள் என்னதான் தங்கள் முகலட்சணத்தை மாற்ற
முயற்சித்தாலும், நம் நாட்டில் புழங்கும் முதுமொழிக்கிணங்க, “சிறுத்தைப்புலியால்
தன் புள்ளிகளை எப்போதுமே மாற்றிக்கொள்ள முடியாது.”
தமிழில்: ச.வீரமணி