Sunday, November 16, 2014

அமைச்சரவை மாற்றம் : உலர்ந்து உதிர்ந்த உறுதிமொழி




ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் ளாகவே, அமைச்சரவையில் புதிதாக 21 அமைச்சர்களை இணைத்துக் கொண்டதன் மூலம் மோடி அரசாங்கம் ஊதிப் பெருத்து விட்டது. இப்போது அமைச்சரவையில் 66 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இருவர் நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினர்கள் கிடையாது. நம்முடைய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி ஆறு மாதகாலத்திற்குள் இவர்கள் ஏதேனும் ஓர் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். ஆட்சியாளர்களின் நடைமுறைப் பாணியை உற்று நோக்கும்போது, அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் இன்னமும் நான்கரை ஆண்டு காலம் ஆட்சி புரியக்கூடிய சமயத்தில், அமைச்சரவை மேலும் விரிவாக் கப் படக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று சொல்வதற்கில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, நரேந்திர மோடியும், ஆர்எஸ் எஸ்/பாஜக பரிவாரங்களும், ஐமுகூ-2 அரசாங்கம் மிகவும் ஊதிப் பெருத்திருந்ததாகக் குற்றம்சாட்டினர். ஐமுகூ-2 அரசாங்கத்தில் உச்சபட்சமாக 79 அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் பதவியிலிருந்து இறங்குகையில் 77 அமைச்சர்கள் இருந்தார்கள். ஐமுகூ-2 அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சி தவிர ஐந்து கூட்டணிக் கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகித்தன. ஆனால், தற்போது பாஜக விரிவாக்கம் செய்துள்ள அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்ட்ரா சட்டமன்றத்தில் பாஜக சிறுபான்மையாக இருந்த போதிலும்கூட சிவசேனைக் கட்சியை தன் கூட்டாளியாக ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கிய நபர் ஒருவர், வாஜ்பாய் அரசாங்கத்தின்போது கேபினட் அமைச்சராக இருந்தவர், அவர் சிவசேனைக் கட்சியிலிருந்து விலகிய ஒருசில நொடிகளுக்குள், மின்னல் வேகத்தில் பாஜகவில் இணைந்து, அமைச்சராகவும் ஆகிவிட்டார்.
மோடி அரசாங்கம் ஏற்கனவே அமைச்சர்களின் எண்ணிக்கையை அரசமைப்புச் சட்டத்தின் அதிகபட்ச வரம்பான 83ஐ மிகவும்நெருங்கிவிட்டது. (அமைச்சர்களின் எண்ணிக்கை என்பது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மொத்த உறுப்பினர்களில் பத்துசதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.) ஆயினும் கார்ப்பரேட் ஊடகங்களில் மோடி அரசாங்கத்தின் துதிபாடிகள் இவ்வாறுஅமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து, மோடி தன் தேர்தல் வாக்குறுதியான `குறைந்த எண்ணிக்கையுடன் அமைச்சர்கள் - அதிகநன்மை பயக்கும்ஆட்சியை நிறைவேற்றிவிட்டார் என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பல்வேறு செய்தித்தாள்களும் மோடி அரசாங்கத்தைப் புகழ்ந்து தலைப்புச் செய்திகள் வெளியிட்டிருப்பதற்கு மத்தியில், ஒரேயொரு நாளேடுமட்டும் வெளிப்படையாகவே விரும்பத் தகாத விதத்தில் இல்லை என்றபோதிலும் மிகவும் ஆட்சேபகரமான முறையில் கருத்துதெரிவித்திருக்கிறது. அது இவ்வாறு குறிப்பிட் டிருந்தது: பிரதமர் சாதியையும், தகுதியையும் சரிக்கட்டிஇருக்கிறார்.’’ இந்நாளேடு கூற வரும் செய்தி என்னவென்று புரிகிறதா? சாதியும் தகுதியும் உடனொத்து இருக்க முடியாது என்பதாகும். இது காலங்காலமாக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் வழக்கமாகக் கூறிவரும் பல்லவிதான். இவ்வாறு இவர்கள் கூறுவதன் மூலம், “நாட்டிலுள்ள அனைவரும், அவர்களின் சாதி, இனம் அல்லது பாலினம் எதுவாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் சமம் என்று நம் அரசமைப்புச் சட்டம் உயர்த்திப்பிடிக்கும் புனிதமான அடிப்படையை, வெளிப்படையாய் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நடைமுறையில் மறுதலிக்கும் விதத்தில் அவமதித்திருக்கிறார்கள்.
அனைவரும் சமம் என்று கூறும் அரசமைப்புச் சட்டத்தின்கீழ்தான் அனைத்து அமைச்சர்களும் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சமயத்தில், மோடி அமைக்கும் அமைச்சரவை மிகவும் சிறியதாக இருந்து, முன்பிருந்த அனைத்து அரசாங்கங்களையும்விட மிகவும் திறமை யுடன் செயல்படும் என்று நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உறுதிமொழிகள் திரும்பத்திரும்ப அள்ளிவீசப்பட்டன. மோடி பிரச்சாரத்தின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வஞ்சனையானவைகளே என்று தேசிய தேர்தல்கண்காணிப்பு என்ற அமைப்பும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பும் ஆய்வுகள் மேற்கொண்டு ஆதாரப் பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளன.
மொத்தம் உள்ள 66 அமைச்சர்களில் 64 பேர் தேர்தல் ஆணையத்தின் முன் அளித்த சுய உறுதி வாக்குமூலங்களை ஆய்வு செய்கையில், (இரு அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இதுவரை ஆகாததால், இவர்கள் தேர்தல் ஆணையத்தின்முன்பு இவ்வாறு உறுதிவாக்குமூலம் எதுவும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.) இவர்களில் 20 அமைச்சர்கள் மீது (31 சத வீதம்) கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரிய வந்திருக்கிறது. இப்போதுபுதிதாக அமைச்சர் பொறுப் பேற்றுள்ளவர் களிலும் எட்டு பேர் (38 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களில் நால்வர் மீது மிகவும் மோசமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஒட்டுமொத்த அமைச்சரவையிலும் 11 அமைச்சர்கள் மீதுகொலை செய்ய முயற்சி, பல்வேறு மதப்பிரிவினரிடையே வகுப்புத் துவேஷத்தை ஏற்படுத்துதல், தேர்தல் விதிமுறைகளை மீறல் போன்ற குற்றங்களைப் புரிந்ததாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவற்றில் இரு வழக்குகள் இந்தியத் தண்டனைச் சட்டம் 307ஆவது பிரிவின் கீழும் (கொலை செய்ய முயற்சி), இரு வழக்குகள் இந்தியத் தண்டனைச் சட்டம் 153(ஏ) (பல்வேறு மதப்பிரிவினரிடையே வகுப்புத் துவேஷத்தை ஏற்படுத்துதல்) பிரிவின் கீழும் நிலுவையில் இருக்கின்றன. மேலும்ஒரு மோசமான வழக்கு பீகார், நவாடா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிரிராஜ் சிங் என்பவர் மீதானதாகும். இந்த நபர், கடந்த காலங்களில் தலித்துகள் மீது பல்வேறு கொலைவெறித் தாக்குதல்களை நடத்திய ரண்வீர் சேனா என்ற அமைப்பில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர். சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடியை எதிர்ப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை, அவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும்,’’ என்று மிகவும் அருவருப்பான முறையில் பேசிய பேர் வழியாவார். இத்தகைய கண்டனத்திற்குரிய முறையில் பேசியதை இந்நபர் இதுவரை திரும்பப் பெறவே இல்லை. மாறாக, இதை இப்பேர்வழி திரும்பத் திரும்பக் கூறி வந்தார். மோடி அரசாங்கம், (நம்முடைய அரசமைப்புச் சட்டம் உத்தரவாதமளித்துள்ள உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதாக பாசாங்குகாட்டுவதற்காகவாவது) இத்தகைய பேர் வழியைக் கண்டித்து, ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக, அப்பேர்வழிக்கு அமைச்சர் பதவி என்கிற விருதினை வழங்கி இருக்கிறது.
இவைதான் இவர்கள் நல்லாட்சி வழங்கிடும் லட்சணமாகும்.பண பலம் என்பதைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 64 அமைச்சர்களில் 59 பேர் (92 சதவீதத்தினர்) அவர்கள் சுயஉறுதி வாக்குமூலங்களின்படி கோடீஸ்வரர்களாவார்கள். சராசரியாக ஒவ்வொரு அமைச்சரின் சொத்துமதிப்பும் 14 கோடியே 25 லட்சம் ரூபாய்களாகும். புதிதாக அமைச்சரவையில் சேர்ந்துள்ளவர்களின் சொத்து மதிப்பு இதைவிட அதிகம். அதாவது 18 கோடியே 48 லட்ச ரூபாய்களாகும். ஏழு அமைச்சர்களின் சொத்து மதிப்பு 30 கோடி ரூபாய்களுக்கும் அதிகமாகும். சிலரது சொத்து மதிப்பு நூறு கோடிக்கும் அதிகமாக வருகிறது. தலைநகரில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையான எய்ம்ஸ் எனப்படும் அகிலஇந்திய மருத்துவ அறிவியல் இன்ஸ்டிட்யூட்டில் நேர்மையாகச் செயல்பட்ட புலனாய்வுஅதிகாரியை வெளியேற்றிய `புண்ணிய வான்தான் தற்போது மத்திய சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
`நல்லாட்சிவழங்குவோம் என்று மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை இவ்வாறு பொய்யாக்கி நிறைவேற்றத் தவறியதுமட்டுமின்றி, இவ்வாறு அமைச்சரவையில் பணபலம் மிக்கோர் ஆதிக்கம் செலுத்துவ தென்பது, வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை வெளிக்கொணர்வோம் என்று திரும்பத் திரும்ப வாக்குறுதிகளை அள்ளிவீசிய மோடி அரசாங்கத்தின் மீது பல்வேறு ஐயங்களை எழுப்பியிருக்கிறது. நாட்டிலுள்ள கோடீஸ்வரர்கள் அனைவருமே லஞ்சம் மற்றும் இரண்டகமான வழிகளில் சம்பாதித்து அந்நிய வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று நாம் கூறவில்லை.
ஆனால், கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் முன் மோடி அர சாங்கம் ஊசலாடியதைப் பார்க்கையில், அது தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்திட்ட வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றுமா என்கிற ஐயங்களை ஆழமான முறையில் ஏற்படுத்தி இருக்கின்றன. அரசியல்ரீதியாகவும், மக்கள் அதிகமாக வும் வாழும் மிகவும் முக்கியமான மாநிலங் களான உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகியஇரு மாநிலங்களுக்கும் விரைவில் தேர்தல்நடைபெறுவதையொட்டி, உத்தரப் பிரதேசத்தி லிருந்து நான்கு பேரையும், பீகாரிலிருந்து மூன்று பேரையும் மோடி அமைச்சர்களாகப் பதவியில் அமர்த்தி இருக்கிறார். புதிதாக பதவியேற்றுள்ள 21 பேர்களில் இவர்கள் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஆர்எஸ்எஸ்/பாஜக மோடி அரசாங்கத்தின் குணம் என்ன என்பதை இவை நன்கு தெளிவுபடுத்துகின்றன.மோடி அரசாங்கம்,`குறைந்த எண்ணிக் கையுடன் அமைச்சர்கள் - அதிகநன்மை பயக்கும் ஆட்சிஎன்ற வாக்குறுதிக்கு இரண்டகம் செய்துள்ளதுடன், நம் நாட்டு மக்களின் பெரும்பான்மையோருக்கு மேலும்சுமைகளை ஏற்றும் வண்ணம் பொருளா தாரச் சீர்திருத்தக் கொள்கைகளைப் பின்பற்றிக்கொண்டும், மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் பெரும்பான்மை மக்களுக்கு சொல் லொண்ணாத் துயரங்களை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறது.
இவர்களின் கொள்கைத் திசைவழி இப் போது நன்கு தெளிவாகிவிட்டது. இவர்களின் கொள்கைகள் நாட்டு மக்களுக்கு அதிக சுமைகளை ஏற்றும் அதே சமயத்தில், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நம் சமூகத்தின்உயரிய பண்பாட்டிற்கும், நாட்டின் ஒற்றுமைக் கும் ஒருமைப்பாட்டுக்குமே பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மிகவும் விரிவான மற்றும் வலுவான மக்கள் போராட் டங்கள் மற்றும் இயக்கங்கள் மூலம் இதை முறியடித்தாகவேண்டியது அவசியமாகும்.
(நவம்பர் 12, 2014)
- தமிழில்: ச.வீரமணி


Wednesday, November 12, 2014

ஆர்எஸ்எஸ் கூறும் இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன?




ஆர்எஸ்எஸ் கூறும் இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன?

(கோல்வால்கர் எழுதியுள்ள பாசிஸ்ட் சித்தாந்தம் மற்றும் காவிப் படைகளின் நடைமுறைகள் மீது ஓர் ஆய்வு)

-சீத்தாராம் யெச்சூரி
(தமிழில் .. ச.வீரமணி)

நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் [We or Our Nationhood defined (Bharat Publications, 1939, Re. 1)] என்கிற எம்.எஸ். கோல்வால்கர் நூல் குறித்து மீண்டும் ஒருமுறை கணிசமான அளவிற்கு அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள்  எழுந்துள்ளன.  இது தொடர்பாக எழுந்துள்ள விவாதங்கள் காவிப் படையினரின் உண்மையான நோக்கத்தை - அதாவது இந்து ராஷ்ட்ரம் என்று தாங்கள் அமைக்க விரும்பும் தங்களுடைய உண்மையான பணித்திட்டத்தின் அனைத்து பாசிஸ்ட் பாணியிலான அம்சங்களையும் தோலுரித்துக் காட்டுவதால் - அவர்களை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளன.  இவ்வாறு, ஜனநாயகத்தைப் பற்றிக்கொண்டிருப்பவர்கள் என்று தங்களை வெளிக்காட்டிக் கொண்டு, நாட்டு மக்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்ல அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குத்திக்கிழிக்கப் பட்டிருப்பதானது முக்கியத்துவமானதாக மாறி இருக்கிறது. காவிப்படையினரின் பல்வேறு விதமான பேர்வழிகளும் தங்களுடைய பல்வேறு விதமான தொனிகளில், இந்தப் புத்தகத்தை உண்மையில் கோல்வால்கர் எழுதவில்லை என்றும், இந்தப் புத்தகம் 1942-இலும் அதற்குப் பின்னரும் மறுபதிப்பாக வெளியிடப் படவில்லை என்றும் உறுதிப்படுத்திட அரும்பாடுபட்டு வருகின்றனர்.  ஆயினும், அவர்களில் எவரும், கோல்வால்கர் மேற்கொண்ட நிலைப்பாட்டை மறுதலிக்கக்கூடிய விதத்தில் உருப்படியாக எதுவுமே கூறிடவில்லை என்பதே  கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.
இந்தப் புத்தகம் கோல்வால்கரால் எழுதப்படவில்லை என்றும்ராஷ்ட்ரா மீமான்சா என்று மராத்திய மொழியில் எழுதப்பட்ட நூலை  வி.டி. சாவர்கரின் சகோதரர் ஜி.டி. சாவர்கர் மொழியாக்கம் செய்த நூல் என்றும் (இவ்வாறுதான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த  புது தில்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா ஆய்வு மையத்தால் நடத்தப்பட்டு வரும்  ஜன்சத்தா, 1993 ஜனவரி 7 இதழில் ஒரு மூத்த அலுவலரால் கூறப்பட்டிருக்கிறது) கூறுவோர் தெரிந்து பயனடைய வேண்டும் என்பதற்காக 1939இல் மார்ச்சுத் திங்களில் கோல்வால்கரே இந்நூலின் முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரையை இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.
இந்தப் பணியைத் தொகுக்கும் சமயத்தில், எண்ணற்றவர்களிடமிருந்து எனக்கு உதவி கிடைத்தது. அவர்கள் அனைவரையும் குறிப்பிட முடியாத அளவிற்கு அவை அதிகமானவை. அவர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும் அவர்களில் ஒருவருக்கு நான் மிகவும் நன்றி உடையவனாவேன்.  அவர்தான் தேசபக்தர் ஜி.டி. சாவர்கர் ஆவார். அவர் மராத்தியில் எழுதிய ராஷ்ட்ர மீமான்சா எனக்கு உத்வேகத்தையும் உதவியையும்அளித்திட்ட முக்கியமான ஆதார நூல்களில் ஒன்றாகும். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் விரைவில் வெளிவர விருக்கிறது. இந்தப் பொருள் குறித்து மேலும் விரிவான முறையில் அது ஆய்வு செய்திருக்கிறது.  வாசகர்கள் அந்த நூலையும் படிக்க வேண்டும் என்று நான் இந்த சந்தர்ப்பத்தில்  கேட்டுக் கொள்கிறேன்.  இந்தப் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1938 நவம்பர் முதல் வாரத்திலேயே தயாராக இருந்தது. ஆனாலும் அதனை வெளிக் கொணர்வது என்பது, நாம் விரும்பியபோதிலும்பல்வே சிரமங்களின் காரணமாக சாத்தியமில்லாமல் போனது.’’ (கோல்வால்கர், 1939, ப. 4)
நூலாசிரியர் யார் என்பது குறித்து இவ்வாறு சந்தேகத்திற்கிடமின்றி  தெளிவாகி விட்டது. மேலும் இந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது என்றோ அல்லது 1942க்குப் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்ட ஒன்று அல்ல என்றும்கூட நிச்சயமாக நம்மால் கூற முடியும். (நான் இதை ஏன் கூறுகிறேன் என்றல், இதனை வெளியிட்ட இதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அலுவலர் ஒருவர், நவபாரத் டைம்ஸ் ஏட்டின் ஆசிரியர், என்னுடைய கட்டுரைகளில் ஒன்றை விமர்சிக்கும் சமயத்தில், இந்தப் புத்தகம் விலக்கிக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.)  1947இல் வெளியான இந்நூலின் நான்காவது பதிப்பு (கோல்வால்கர், 1947) நம்மிடம் உள்ளது.    ஆயினும், பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒருசிலர் இதனை ஒப்புக் கொள்வதுடன் மட்டுமல்லாமல், இந்நூல் 1942க்குப்பின் பல பதிப்புகள் வெளி வந்திருப்பதாகவும்  (மோடக், 1993) கூறுகிறார்கள். சில இடங்களில் இதன் நான்காவது பதிப்பில் முதல் பதிப்பில் காணப்பட்ட சில அருவருப்பான வார்த்தைகள் (உதாரணமாக `இடியட்என்கிற வார்த்தை `தவறாக வழிநடத்தப்பட்டோர்என்று) திருத்தப் பட்டிருந்தபோதிலும், சாராம்சம் அதேதான். ஆயினும், இத்தகைய திருத்தங்கள், மிகவும் குறைவே.  எனவேதான் நூலாசிரியர் இவை குறித்து தன்னுடைய முன்னுரையில் எதுவும் குறிப்பிடவில்லை. மிகவும் உன்னிப்பாகக் கூர்ந்தாராயாவிட்டால், இதனைக் கண்டுபிடிக்க முடியாது. பின்னர் வந்த பதிப்பில் ஒரு முக்கியமான விடுபடல் இருக்கிறது எனில் அது, `லோக் நாயக்எம்.எஸ். அனி ('Lok Nayak' M.S.Aney)  எழுதிய அணிந்துரையாகும். அது ஏன் எடுக்கப்பட்டுவிட்டது என்பதற்கான காரணங்களை அவர் அணிந்துரையைப் படித்தாலே நாம் புரிந்துகொள்ள முடியும். அனி கூறுகிறார்: தேசப்பற்று குறித்து அவர் கூறும் கோட்பாட்டை ஏற்காதவர்களை அவர் மிகவும் கடுமையான வார்த்தைகளில் வெறித்தனமாக சாடுவதென்பது கண்ணியமிக்க ஒன்றல்ல. தேசப்பற்று போன்ற சிக்கலான பிரச்சனை அறிவியல்ரீதியாக ஆய்வுசெய்யப்பட வேண்டும். இவற்றை இந்த அணிந்துரையில் சுட்டிக்காட்டுவது எனக்கு வலியை ஏற்படுத்து கிறது.’’ (கோல்வால்கர், 1939, ப. xviii).
ஆர்எஸ்எஸ் இயக்கமானது நாட்டுப் பிரிவினைக்கு முன்பு அதிகரித்து வந்த வகுப்புவாத பதட்ட நிலைமைகளையும், மதப் பிரிவினருக்கிடையே இருந்த பூசல்களையும் அதிகமான அளவில் அறுவடை செய்து கொண்டிருந்ததால், இத்தகைய கருத்துக்கள் அதனால் அந்த சமயத்தில் பிரச்சாரம் செய்திட அனுமதிக்கப்பட முடியாத நிலையில் இருந்தன. ஆயினும் இப்புத்தகத்தின் வெறித்தனமான பிரச்சார முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
கோல்வால்கரின் நூல், காவிப் படையினரின் திட்டத்தை இன்றைய தினம் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தும் அதே சமயத்தில், அவ்வேலைகளில் இறங்கியிருக்கும் கூட்டத்தினர் தங்களுடைய தத்துவார்த்த அடிப்படைகளை மூடி மறைத்திட முயன்று வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் `பைபிள்
ஜே.ஏ. கரன் என்பவர் எழுதிய  இந்திய அரசியலில் தீவிர இந்துயிசம் - ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்த ஓர் ஆய்வு (Militant Hinduism in Indian Politics - A Study of the RSS) என்னும் நூலில் ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து மிகவும் இணக்கரீதியாக குறிப்பிட்டிருப்பதைவிட சிறப்பாக நாம் கூறிவிட முடியாது. அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
சங் பரிவாரத்தின் மெய்யான தத்துவம் அதன் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் என்பவரால் வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இக் கொள்கைகள் தற்போதைய தலைவரால் 1939இல் எழுதப்பட்ட  நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’’ என்னும் நூலில்  ஒருங்கிணைக்கப்பட்டு, விரிவாக்கப் பட்டிருக்கின்றன. நாம்’’ என்கிற சொல்லை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் `பைபிள்என சித்தரித்திட முடியும். சங் பரிவாரத் தொண்டர்களின் மனங்களில் புகுத்தப்பட்டுள்ள அடிப்படைப் பாட நூலாக இது விளங்குகிறது. இந்நூல்  பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒன்று என்ற போதிலும், இன்றைய சூழ்நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு தேசிய சூழ்நிலையில் எழுதப்பட்ட ஒன்று என்ற போதிலும், இதில் காணப்படும் கொள்கைகள் முழுமையாக இன்றைக்கும் சங் பரிவாரத் தொண்டர்களுக்குப் பொருத்தமுடையதாகவே கருதப்படுகின்றன.  (கரண்ட், 1979, ப. 39. மூல நூலில் குறிப்பிட்டுள்ளவாறே அழுத்தம் தரப் பட்டிருக்கிறது.)
ஆர்எஸ்எஸ் இயக்கத்தினருக்கான இந்நூலின் முக்கியத்துவத்தை வரலாற்றில் கோல்வால்கரின் பங்களிப்புடனும் தொடர்புபடுத்திப் பார்த்திட வேண்டும்  கோல்வால்கர் ஆர்எஸ்எஸ்-இன் தலைமைப் பொறுப்பில் 1940இல் அமர்த்தப்பட்டார். இதற்கு ஈராண்டுகளுக்கு முன்பு, 1938இல், அவர் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக ஹெட்கேவாரால் நியமிக்கப்பட்டார்.  ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தலைவராக இருப்பவர்தான் தனக்குப் பின் தலைவராக வருபவரை நியமித்துவிட்டு செல்வது வழக்கம். தலைவராக வருபவர்கள் தாங்கள் இறக்கும் வரையில் அப்பொறுப்பில் நீடிப்பார்கள்.  அவர்களுக்கு ஜனநாயகத்தின்’’ மீது இருக்கும் நம்பிக்கைகளைக் காட்டுவதற்கு  இவை போதும் என்று கருதுகிறேன். கோல்வால்கர் 1973 வரை தலைவராகச் செயல்பட்டார். அவர் பங்களிப்பினை, குறிப்பாக 1930 இலிருந்து 1954 வரை முதல் கட்டமாக, கீழ்க்கண்டவாறு தொகுத்திடலாம்: அது (கோல்வால்கருடைய தலைமை) இன்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தவருக்கும் அதன் `குடும்பத்தாருக்கும்வரலாற்றுரீதியான ஆதாரமாக இருந்து வருகிறது. குறிப்பாக, கலவரங்கள் நடக்கும் சமயங்களில் கலவரங்களில் ஈடுபட்டிருப்போருக்கு மதவெறியை ஊட்டி அவர்களை வெறித்தனமாக ஈடுபடுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.   நம் நாட்டிற்கு இந்துத்துவாவின் வெற்றி எதில் அடங்கியிருக்கிறது என்று நாம் வழுவின்றி புரிந்து கொண்டிருப்பதற்கும் அது மிகவும் உதவிகரமாய் இருந்திருக்கிறது.’’ (பாசு, தத்தா, சர்க்கார், சர்க்கார் மற்றும் சென், 1993, ப. 25) கோல்வால்கருடைய  தொடர் செல்வாக்கு காவிப் படையினருக்கு ஒரு தத்துவார்த்த வடிவத்தை, அவர்களின் கருத்தோட்டங்கள் மற்றும் கொள்கைகளில் மட்டுமல்ல, தங்களுடைய பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரம் என்னும் குறிக்கோளை எய்திட ஸ்தாபனக் கட்டமைப்பை எங்ஙனம் நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதனையும் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது.  மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்மீது விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்ட காலகட்டத்தில் இது மிகவும் கூர்மையாக மெய்ப்பித்துக் காட்டப்பட்டது. (இவ் வியக்கத்தின் மீதான தடை 1948 பிப்ரவரி 4இலிருந்து 1949 ஜூலை 12 வரை அமலில் இருந்தது.) ஆர்எஸ்எஸ், தங்கள் இயக்கத்தின் மீதான தடையை விலக்கிக்கொள்வதற்காக வஞ்சகமான பல சமசரங்களை ஏற்றுக் கொண்டது.
கர்ரன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: ஆர்எஸ்எஸ் இயக்கம் சட்டரீதியாக இயங்கக் கூடிய விதத்தில் தடை நீக்கப்பட்டவுடனயே கோல்வால்கர் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் அல்லது அவர் அளித்த உறுதிமொழிகள் அனைத்தும் பயனற்றவைகளாகி விட்டன. ஸ்தாபனத்திற்குள் தேர்தல்கள் நடத்துவதற்கான ஷரத்துக்கள் மற்றும் வகுப்புவாத உணர்வுகளைக் கிளப்பாமல் அவற்றை வெளிப்படையாகக் கண்டனம் செய்வோம் என்று அளித்த உறுதிமொழி, மற்ற இனத்தினரிடம் சகிப்புத்தன்மையுடனான அணுகுமுறையைப் பின்பற்றுவோம் என்கிற அனைத்தும் சங் பரிவாரங்களின் நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானவைகளாகும். ஆயினும் அரசாங்கம் வற்புறுத்தியதன் பேரிலேயே அவற்றைப் பின்பற்றுவதாக அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆயினும் நடைமுறையில் அவர்கள் இவற்றைப் பின்பற்றவில்லை. சங் பரிவாரக் கூட்டம் மிகவும் உறுதியாக அவற்றை உதாசீனம் செய்தன.’’ (கர்ரன், 1979, பக். 31-32. அழுத்தம் மூல நூலில் உள்ளவாறு அளிக்கப்பட்டிருக்கிறது.)
அரசாங்கம் கட்டாயப்படுத்தியன் பேரில், ஆர்எஸ்எஸ் ஓர் அமைப்புச்சட்டத்தை நிறைவேற்றியது. (ஆயினும் இதுநாள்வரை அது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வில்லை.) அதில் 3ஆவது பிரிவு கீழ்க்கண்டவாறு கூறுகிறது: சங் பரிவாரத்தின் குறிக்கோள்களும் கோட்பாடுகளும் இந்து சமாஜத்தின் கீழ் இயங்கி வந்த பல்வேறுவிதமான குழுக்களையும் ஒருங்கே பிணைத்து, அவற்றை நம்முடைய தர்மம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில்அவை அனைத்தையும் பாரதத்தின் அனைத்து விதமான வளர்ச்சியை எய்தக்கூடிய விதத்தில் அவற்றுக்குப் புத்துயிரூட்டி, இயங்கச் செய்திட வேண்டும்.’’ (கர்ரன், 1979, ப. 35). ஆனால் கர்ரன் தன் சொந்தக் கருத்தாக மேலும் கூறியிருப்பதாவது: அமைப்புச் சட்டத்தில் அது ஒரு தீவிரமான மற்றும் சகிப்புத்தன்மையற்ற இந்து நாடாக இருக்கும் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை.  அமைப்புச் சட்டத்தில் குறிக்கோள்கள் என்று கூறப்பட்டிருப்பதற்கும், சங் பரிவாரங்களின் நடைமுறைத் திட்டங்களுக்கும் இடையே ஓர் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. சங் பரிவாரம்  மறைத்து வைத்திருந்த தன்னுடைய  லட்சியங்களையும் அவற்றை அடைவதற்கான  வழிமுறைகளையும் கைவிட்டு விட்டது. ஆனால், அமைப்புச் சட்டத்தின் சகிப்புத்தன்மையுடனான இந்து தத்துவஞானத்தின் ஒவ்வாமையையும், அவற்றில் உறுப்பினராகவேண்டுமானால் அவர் ஒரு இந்து ஆதரவாளராகவும், இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிரானவராகவும் இருந்திட வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம்  வெறிபிடித்த தன் குறிக்கோள்களை அது உறுப்பினர்கள் மத்தியில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிறது என்பது மிகவும் தெளிவான ஒன்று. பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவர்களது தத்துவஞானம் மிகவும் மங்கலானது மற்றும் சங் பரிவாரங்களின் உண்மையான குறிக்கோள்களை வஞ்சனையுடன் பிரதிபலிப்பவை. ... சங் பரிவாரங்களின் கொள்கைகள் மிகவும் வெளிப்படையாகக் கூறப்பட்டால் சந்தேகத்திற் கிடமில்லாமல் அவை ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகள் மீது ஒடுக்குமுறைகளை ஏவி விடவே இட்டுச் செல்லும்.  எனவேதான் சங் பரிவாரங்களின் தலைவர்கள் அவ்வாறு அரசாங்கத்துடன் வெளிப்படையாக மோதலை ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்ப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.’’  (கர்ரன், 1979, பக்.35-36. அழுத்தம் மூல நூலில் உள்ளபடி தரப்பட்டிருக்கிறது.)
இதன் அடிச்சுவட்டின்படியே கோல்வால்கர் 1949 செப்டம்பரில் லக்னோவில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் இந்தியாவின் அரசமைப்புச் சட்டம், “பாரதத்தினருக்கு எதிரானது’’ UnBharat")) என்கிற  ஆர்எஸ்எஸ் விமர்சனத்தை வெளிப்படுத்தினார். அவரைப் போன்றே விசுவ இந்து பரிசத்தின் இன்றைய தலைவர்கள், அதனை இந்துக்களுக்கு எதிரானது’’ ("UnHindu") என்று சித்தரிப்பதிலும் ஒரு பொருத்தம் இருப்பதைக் காணலாம்.
ஸ்தாபனத்தின் இரட்டை முகம்
இவ்வாறு சில உத்திகளைப் பின்பற்றியதுடன் அல்லாமல் கோல்வால்கர் சில ஸ்தாபன நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீதான தடையை விலக்கிக் கொள்வது தொடர்பாக அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, கோல்வால்கர் இப்போது உள்ள சங் பரிவாரத்தை நிறுவும் வேலையில் இறங்கினார். இதன் நோக்கம் மிகவும் தெளிவானது. பொது மக்களின் பார்வையில் ஆர்எஸ்எஸ் இயக்கம் என்பது ஒரு கலாச்சார அமைப்பு’’ என்று கருதப்படும். ஆனால் அதே சமயத்தில் அதன் கீழ் இயங்கும் இதர அமைப்புகள் அனைத்தும் இந்து ராஷ்ட்ரம்’’ என்னும் செய்தியை பல்வேறு பிரிவினர் மத்தியிலும் பரப்பிடும் வேலைகளைச் செய்திடும். இவை அனைத்துமே சுயேச்சையாக செயல்படுவது போல் தெரிந்தாலும் இவை அனைத்துமே ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் இயங்குபவைகளே யாகும். இன்றைய தினம் இத்தகைய ஸ்தாபன வலைப்பின்னலை அனைவருமே நன்கு பார்க்க முடியும்.
கோல்வால்கரின் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று, 1964களின் மத்தியவாக்கில், பல்வேறு இந்துப் பிரிவினரும் தங்கள் வித்தியாசங்களைக் கைவிட்டுவிடவும், ஒன்றிணைந்து செயல்படவும், அயல்நாடுகளில் உள்ள இந்துக்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும்  இந்து மதத் தலைவர்களை  அணிதிரட்டுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளுமாகும். இவ்வாறுதான் விசுவ இந்து பரிசத் அமைப்பிற்கான அடித்தளங்கள் போடப்பட்டன. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரகராக இருந்த ஷிவ்ராம் ஷங்கர் ஆப்டே அதன் முதல் பொதுச் செயலாளராக மாறினார். இன்றைய தினம் அந்த அமைப்புதான் ஆர்எஸ்எஸ் அமைப்புகளிலேயே மிகவும் கெட்டிப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறி இருக்கிறது. இது குறித்து தனியே ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம்.’’ (பாசு, தத்தா, சர்க்கார், சர்க்கார், சென், ப.50).
அவரால் மேற் கொள்ளப்பட்ட மற்றொரு ஸ்தாபன நடவடிக்கை, தன் குடும்பத்தின்’’ ஸ்தாபன கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஓர் அரசியல் முன்னணியை உருவாக்குது என்பதும், அது எப்போதும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைமை மற்றும் கட்டுப்பாட்டில் இருந்திட வேண்டும் என்பதுமாகும். 1951இல் பாரதிய ஜன சங்கம் அமைப்பைத் துவக்கிடஷியாமா பிரசார் முகர்ஜிக்கு உதவிட அவர் சில ஊழியர்களை அனுப்பி வைத்தார். அன்றைய பாரதிய ஜன சங்கம்தான் இன்றைய பாரதிய ஜனதா கட்சியாக அவதாரம் எடுத்திருக்கிறது.  அவ்வாறு அனுப்பப்பட்ட ஊழியர்களில் தீன் தயாள் உபாத்யாய, அடல் பிகாரி வாஜ்பாயி, எல்.கே. அத்வானி மற்றும் எஸ்.எஸ். பண்டாரி ஆகியோர் முக்கியமானவர்களாவார்கள். (இந்த உண்மை பாசு, தத்தா, சர்க்கார், சர்க்கார் மற்றும் சென், 1993, ப.48 இல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.) இதன் காரணமாகத்தான், 1992 டிசம்பர் 6 நிகழ்வுகளின்போது அத்வானி கைது செய்யப் பட்டபோது, பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளராக எஸ்.எஸ். பண்டாரி இருந்தார்.
இவ்வாறுகாவிப் படையினரின் இன்றைய தத்துவார்த்த அடித்தளங்களை உருவாக்கியதில், கோல்வால்கரின் பங்களிப்பினை, குறைத்து மதிப்பிட முடியாது. ஒட்டுமொத்த ஸ்தாபனக் கட்டமைப்பும் ஓர் அரசியல் லட்சியத்தை நிறுவக்கூடிய விதத்திலேயே இருந்தது. அத்தகைய லட்சியம் எவ்வித ஐயப்பாட்டிற்கும் இடமளிக்காத வகையில், “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’’ என்னும் இவரது நூலில் இடம் பெற்றிருக்கிறது. எனவே, காவிப் படையினர் அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் இந்நூல் மிகவும் முக்கியத்துவமுடைய ஒன்றாகும்.  இந்தியாவை மீண்டும் இருண்ட காலத்திற்கோ அல்லது  மத்திய கால குருமார்களின் ஆட்சி காலத்திற்கோ இழுத்துச் செல்லப்படக்கூடாது என்று விரும்பும் நாட்டுப் பற்றுள்ள அனைவரும் இந்தப் புத்தகத்தின் சாராம்சங்களையும், காவிப் படையினரின் நோக்கங்களையும்  அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
கோல்வால்கர் ஸ்வராஜ்’’ என்கிற வார்த்தையைப் புரியவைக்கக்கூடிய விதத்தில் தன் முயற்சியைத் தொடங்குகிறார். ஸ்வ’’ என்றால் என்ன என்ற கேள்வியைக் கேட்டு, அதற்கு நாம்’’ என்று பொருள் என்று பதில் கூறி தன் புத்தகத்தைத் தொடங்குகிறார். இந்நூலுக்கு அவர் எழுதியுள்ள முகவுரையில் இவ்வாறு அவர் கூறுகிறார்: புத்துயிரளிக்கப்பட்ட தேசத்தை உருவாக்குவதற்காகவே நாம் பாடுபடுகிறோம். மாறாகஅரசியல் உரிமைகள் என்கிற ஒழுங்கற்ற சில மூட்டைமுடிச்சுகளுக்காக அல்ல. ஸ்வராஜ்யமே நமக்குத் தேவை. ஸ்வ’’ என்பதன் பொருளையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.  நமது ராஜ்ஜியம் - நாம் யார்?’’ (கோல்வால்கர், 1939, ப.3).  “ஸ்வா’’ என்றால் இந்துக்கள் என்று பொருள் என்றும், எனவே ஸ்வராஜ்யம்’’ என்றால் இந்துக்கள் ராஜ்ஜியம் அல்லது இந்து ராஷ்ட்ரம்’’ என்று பொருள் என்றும் விளக்கக்கூடிய விதத்திலுமே ஒட்டுமொத்த புத்தகமும் அடங்கி இருக்கிறது.
வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டுள்ள திரிபுகள்
இந்தப் புத்தகத்தின் அடிப்படை நோக்கம் என்னவெனில் எப்போதுமே இந்தியா என்பது இந்து தேசமாகத்தான் இருந்தது என்பதும், தொடர்ந்து அவ்வாறே இருக்க வேண்டும் என்பதுமேயாகும். இங்கே  இந்தியா என்று கோல்வால்கர் பொருள்கொள்வது கடலிலிருந்து கடல் வரைக்கும் உள்ள நிலங்கள்’’ என்பவையாகும். உண்மையில், இந்தப் புத்தகத்தின் அட்டையில் வெளியிடப்பட்டிருக்கும் தேச வரைபடத்தில் பூகோள எல்லைகளை அவர் கோடிட்டுக் கொடுத்திருக்கிறார். அவை ஆப்கானிஸ்தானிலிருந்து பர்மா வரைக்கும் நீளுகிறது, அப்படம் இலங்கையையும் உட்படுத்தி இருக்கிறது.
வரலாற்றையும் அறிவியலையும் கெட்டிக்காரத்தனமாக திரிப்பதன் மூலமாக தன் நோக்கத்தை எய்திட கோல்வால்கர் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். முதலாவதாக, நாட்டில் பல நூறு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இருந்து வரும் பல்வகைப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பர்யங்கள், மொழிகள் மற்றும் பழக்க வழக்கங்களை எல்லாம் `இந்துயிசம்என்கிற  ஒரே பையில் திணிக்க முயல்வது. இரண்டாவதாக, அயலான எதிரி (external enemy) ஒருவரை உருவாக்குவது. அதாவது `அயலானஎன்பதன் பொருள் இந்துக்களுக்கு `அயலானவர்என்பதாகும். `இந்துக்களை ஒருமுகப்படுத்திட இத்தகைய `அயலானவர்களுக்குஎதிராகத்தான் வெறிச்செயல்கள் விசிறிவிடப்படுகின்றன.
கோல்வால்கர் ஹிட்லரின் பாசிச பாணி அனுபவத்தையே இங்கே மிகவும் அதிகமான அளவில்  சார்ந்திருந்தார். சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்காக  சளையாது பாசிஸ்ட் எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஜார்ஜி டிமிட்ரோவ் கூறியதாவது: பாசிசம் அதிதீவிர ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்கே சேவகம் செய்கிறது. ஆயினும் மக்கள் மத்தியில் முந்தைய மோசமான ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்று நாடகமாடி, எனவே நாட்டுப்பற்று மிக்கோர் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது. (டிமிட்ரோவ், 1972, ப. 11). அதேபோன்றே ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் மக்களின் துன்ப துயரங்களைப் போக்க வந்த வீரமுதல்வனாகக் காட்டுவதற்காக, மக்கள் மத்தியில் தவறானதொரு உணர்வினை  உருவாக்க வேண்டியது அவசியமாகும். அதன் காரணமாகவே இந்துக்கள் எல்லா விதங்களிலும் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்றும் அவர்கள் சொத்துக்கள் எல்லாம் முஸ்லீம்களால் பறிக்கப்பட்டுவிட்டன என்றும் கூறி முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பினை விதைக்கத் தொடங்கினார்கள்.  ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகக் கடைப்பிடித்த வெறித்தனமான நடவடிக்கைகளை அப்படியே நகலெடுத்து, இங்கே முஸ்லீம்களுக்கு எதிராக இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்துக்களின் துன்பங்களுக்கெல்லாம் முஸ்லீம்கள்தான் காரணம் என்று முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை விதைத்தார்கள். இந்தப் புத்தகத்தின் நுட்பமான நோக்கம் அதுதான்.
கோல்வால்கர் அளித்துச் சென்றுள்ள தத்துவார்த்தப் பின்புலத்தின் அடிப்படையில்தான் காவிப்படையினர் தங்கள் நடவடிக்கைகளையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். இதனை எய்திட, ஹிட்லரின் கொள்கைப் பரப்பு அமைச்சர் கோயபல்ஸ் மேற்கொண்ட தொழில்நுட்பங்களைத்தான் இவர்களும் பின்பற்றுகிறார்கள். அதாவது, உண்மையாக இருக்கக்கூடுமோ என்று மக்கள் நினைக்கக்கூடிய அளவிற்கு, திரும்பத் திரும்பப் போதுமான அளவிற்குப் பொய்களைச்  சொல்வது என்பதே கோயபல்ஸ் பாணியாகும்.
இந்த சமயத்தில் ஒன்றை நாம் குறித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தவரால் அயலக எதிரியாக அந்தக்காலத்தில் நம்மை ஆட்சி  செய்த பிரிட்டிஷார் அடையாளப் படுத்தப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உண்மையில் அந்த சமயத்தில் மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.    ஆர்எஸ்எஸ் இயக்கம் பிரிட்டிஷாருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்ததைவிட முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்ததுதான் அதிகம். அவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புதான் பரப்பப்பட வேண்டும் என்று அது தன் அமைப்புகளைக் கோரியது. ஏனெனில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய இந்திய மக்கள் அனைவரையும் `இந்து ராஷ்ட்ரம்என்ற தங்கள் குறிக்கோளை எய்திட ஒன்றுபடுத்திட முடியாது என்பதை ஆர்எஸ்எஸ் அறியும். மக்களின்  பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகள் ஒன்றுபட்ட விடுதலை இயக்கத்தின் வல்லமை அதிகரித்து வருவதன் வெளிப்பாடாகும். இதன் காரணமாகத்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போதுமே பிரிட்டிஷாரைத் தங்கள் எதிரியாகப் பாவிக்கவில்லை. அதன் விளைவாகத்தான் நடைமுறையில் அது பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்கள் பலவற்றை பகிஷ்கரித்தது. சில சமயங்களில் விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கவும் செய்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு ஆதரவாக எழுதிய எழுத்தாளர்கள்கூட(காவியில் சகோதரத்துவம்: வால்டர் கே.ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி.டாம்லே, 1987 மற்றும் சிலருடன்) ((The Brotherhood in Saffron by Walter K. Andersen and Shridhar D. Damle, 1987, amongst others)) விடுதலை இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் இல்லாதிருந்ததையும், அதற்குப் பதிலாக அவை பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற சலுகைகளையும்  விவரமாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். நானாஜி தேஷ்முக் கூட இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்: ஒரு ஸ்தாபனம் என்ற முறையில் விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஏன் பங்கேற்கவில்லை?’’ (தேஷ்முக், 1979, ப. 29). உண்மையில், 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றபோது, பம்பாய் உள்துறை கீழ்க்கண்டவாறு கணித்திருந்தது: “... சங் பரிவாரம் சட்டத்திற்குட்பட்டு மிகவும் விழிப்புடன் தன்னைத் தற்காத்துக் கொண்டது. குறிப்பாக, 1942 ஆகஸ்டில் பல இடங்களில் நடைபெற்ற கிளர்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்துக் கொண்டுவிட்டது. ...’’ (ஆண்டர்சன் மற்றும் டாம்லே மேற்கோள், 1987, ப.44). ஓர் `இந்து ராஷ்ட்ரம்நிறுவிட வேண்டும் என்கிற அரிப்புதான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பிரிட்டிஷாரின் உண்மையான கூட்டாளியாக இருப்பதற்கு இட்டுச் சென்றது. விடுதலைப் போராட்டமும், காங்கிரசும் அவர்களின் குறிக்கோளிலிருந்து திசைதிருப்பும் காரியங்களைச் செய்வதாகக் கருதப்பட்டன. குறிப்பாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, (1931இல் நடைபெற்ற கராச்சி காங்கிரஸ் மாநாட்டில்) விடுதலைப் பெற்ற இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாகத் திகழும் என்று அறிவித்ததை அடுத்து, இவர்களுக்குக் காங்கிரஸ் மீது கடும் வெறுப்பு வளர்ந்தது. காங்கிரசின் இத்தீர்மானம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இந்து ராஷ்ட்ரம் என்னும் கோட்பாட்டிற்கு நேர் எதிரானதாக இருந்ததால், இவர்களின் கண்ணோட்டத்தின்படி இவ்வாறு காங்கிரசுக்கு எதிராகவும் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவும் இருப்பது  சரியெனவே பார்க்கப்பட்டது.  
மகாத்மா காந்தி, தீவிரமானமுறையில் கடவுள் நம்பிக்கை உள்ளவர். இந்து மதப் பழக்க வழக்கங்களைத்தான் நடைமுறைப்படுத்தி வந்தார். ஆயினும் அவர் படுகொலை செய்யப்பட்டார். ஏனெனில், அவரும் அவருடன் சேர்ந்துகொண்டு இந்திய மக்களில் பெரும்பான்மையோரும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நிராகரிக்கும் வண்ணம் மதச்சார்பற்ற ஜனநாயகத்தைத் தழுவினார்கள். 
ஆயினும் கோல்வால்கர், தன்னுடைய நிலைப்பாட்டினை மெய்ப்பித்திட வேண்டும் என்பதற்காக சில அம்சங்களை நிறுவ வேண்டியிருந்தது. முதலாவதாக, இந்துக்கள் மற்றும் இந்துக்கள் மட்டுமே இந்தியாவின் பூர்வ குடியினர் என்று நிறுவ வேண்டியது அவசியமாகியது. இதனை அவர் மிகவும் எளிதான விதத்தில் செய்திட முயற்சிக்கிறார். அவர் கூறுகிறார்: இந்துக்களாகிய - நாம் - இந்த நிலத்தில் எட்டு அல்லது அதற்கு மேலும், அதாவது, பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நிலம் `அயல் இனத்தினர்எவராலும் படையெடுத்துக் கைப்பற்றப் படுவதற்கு முன்பிருந்தே, விவாதத்திற்கு இடமில்லாது எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விதத்திலும் எவரும் குறுக்கிடாத விதத்திலும் இருந்து வந்திருக்கிறோம். எனவே இந்த நிலம், இந்துக்களின் இந்த நிலம், இந்துஸ்தான் என்று அறியப்படக்கூடிய விதத்தில் இருந்தது. (கோல்வால்கர், 1939, ப. 6). உண்மையில் இந்துஸ் ஆறு ஓடும் பகுதியில் வாழ்பவர்கள் என்பதைக் காட்டுவதற்காக  இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்த மக்களால்தான் இந்துஸ்தான் என்ற பெயரே உருவாவதற்கு சாத்தியக்கூறுகள் இருந்தன. இந்த உண்மை உட்பட புராதன இந்திய வரலாறு குறித்த பல்வேறு ஆய்வுகள் குறித்து கோல்வால்கர் வேண்டுமென்றே மவுனமாக இருந்து விட்டார்.
கோல்வால்கர் தன்னுடைய கூற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்துக்கள் இந்தப் பூமிக்கு வேறெங்கிருந்தும் வந்தவர்கள் அல்ல என்பதை `மெய்ப்பித்திடவும் முயல்கிறார். இது கோல்வால்கரின் அரசியல் குறிக்கோளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இவ்வாறு அவரால் மெய்ப்பிக்கப்பட முடியா விட்டால், பின்னர்  இந்த பூமிக்கு வந்த மற்றவர்களைப் போலவே இந்துக்களும் `அயல் இனத்தவர்களாககருதப்பட்டு விடுவார்கள்.
எனவேதான் தன் நிலையினை மெய்ப்பிப்பதற்காக நயவஞ்சகமான காரியங்களில் ஈடுபடுகிறார்.  கோல்வால்கர் தன் நூல் முழுவதும் இந்து’’ என்கிற சொல்லையும், “ஆர்ய இனம்’’ என்ற சொற்களையும்  ஒரே அர்த்தத்தில்தான் பயன்படுத்துகிறார். .இவ்வாறு அவர் ஆரியர்கள் வேறெங்கிருந்தோ இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர்கள் அல்ல, மாறாக பூர்வ குடியினராக இங்கேயே பிறந்தவர்கள் என்று காட்டவே முயற்சி செய்கிறார்.  இவரது கூற்றுக்கு முரணாக உள்ள அனைத்து வரலாற்றுச் சாட்சியங்களையும் மேற்கத்திய அறிஞர்களின் இழிந்தக் கூற்றுக்கள்’’ எனக்கூறி தள்ளுபடி செய்து விடுகிறார். (கோல்வால்கர், 1939, ப. 6). ஆயினும், ஆர்எஸ்எஸ் குரு லோகமான்ய பால கங்காதர திலகரின் கருத்தை - அதாவது வேதங்களின் ஆர்க்டிக் மூலத்தின் கருத்தை - எதிர்க்க வேண்டி இருந்தது. ஆயினும், கோல்வால்கர் ஒரு செல்வாக்குமிக்க தலைவரின் கருத்தை நிராகரித்திட இயலவில்லை. ஏனெனில் அவரும் ஓர் இந்து. எனவே ஆர்க்டிக் மண்டலம் குறித்து எவரும் நம்பமுடியாத அளவில் புதிதாகக் கருத்துக்களைக் கூறுகிறார். அதாவது ஆர்க்டிக் மண்டலம் என்பது ஆரம்பத்தில் உலகில் தற்போது பீகார் மற்றும் ஒரிசா என்று அறியப்படும் பகுதியில்தான் இருந்தது. பின்னர் அது வடகிழக்கே நகர்ந்து, பின்னர் சிலகாலம் மேற்குப்புறமாக நகர்ந்து, சில சமயங்களில் வடக்கே நகர்ந்து, இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது. நிலைமை இவ்வாறிருப்பதால், ஆர்க்டிக் மண்டலத்தை விட்டு நாம் விலகினோம் மற்றும் இந்துஸ்தானத்திற்கு வந்தோம் அல்லது நாம் எப்போதும் இங்கேதான் இருக்கிறோம், ஆர்க்டிக் மண்டலம்தான் நம்மை விட்டு வடக்கே வலமும் இடமுமாய் வளைந்து வளைந்து சென்று விட்டது. லோக் காலத்தில் இந்த உண்மை கண்டறியப் பட்டிருந்தால் எவ்விதத் தயக்கமுமின்றி நாம் இதனை ஏற்றுக்கொண்டிருப்போம். திலகரும் எவ்விதத்தயக்கமுமின்றி `வேதங்களின் ஆர்க்டிக் இல்லம்இந்துஸ்தானத்தில்தான் இருந்தது என்பதையும், மாறாக இந்துக்கள் இந்த இடத்திற்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்ல என்பதையும், ஆனால் ஆர்க்டிக் மண்டலம்தான் இந்துக்களை இந்துஸ்தானத்திலேயே விட்டுவிட்டு குடிபெயர்ந்து சென்றுவிட்டது என்றும்  இப் பிரச்சனைக்குத் தீர்வுகாணக்கூடிய விதத்தில் முன்மொழிந்திருப்பார்.’’ (கோல்வால்கர், 1939, ப. 8)
என்னே பைத்தியக்காரத்தனமான வாதம்!    நிலவியல் அறிவியல் மற்றும் வான்வெளி அறிவியல் மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள இன்றைய நிலையில் பல நூறு ஆண்டு காலத்தில் பூமியின் சுழற்சி எவ்வாறு இருந்தது என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.  இதனை கோல்வால்கர் அறிந்திருக்க மாட்டார் என்கிற சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்திடுவோம். ஆயினும் ஓர் எளிய கேள்வியைக் கேட்க விரும்புகிறோம். அவருடைய வாதத்தின்படியே ஆர்க்டிக் மண்டலம் பீகார் மற்றும் ஒரிசாவிலிருந்து நகர்ந்து சென்றுவிட்டது என்றால், அந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் மட்டும் அங்கேயே எப்படி இருப்பார்கள்? நிலப்பரப்பு நகரும்போது அத்துடன் சேர்ந்து அனைத்துமே நகர்ந்துதானே ஆக வேண்டும். கோல்வால்கர் விரும்பும்போது எங்கே போடப்பட வேண்டுமோ அங்கே போடப்படும்வரை மக்கள் மட்டும் தனியே வெற்றிடத்தில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது.  ஆர்யர்கள் இந்தியாவின் பூர்வ குடியினர் என்று நிறுவவும்’’ அவர்கள் வேறெங்கிருந்தும் வந்தேறியவர்கள் அல்ல என்று காட்டவும்தான் இத்தகைய நயவஞ்சக செயல்கள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கின்றன. இது, ஒரு பாசிச இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக அவரால் கையாளப்பட்ட அரசியல் குறிக்கோளின் முக்கியமான நடவடிக்கையாகும்.
இவ்வாறு எவராலும் நம்புதற்கரிய கருத்தை அனைவரையும் ஏற்கச் செய்ய வேண்டும் என்பதற்காக/ கோல்வால்கர் வரலாறையே திரித்துக்கூறும் வேலைகளில் இறங்கவேண்டி இருந்தது. மகாபாரதத்தின் காலம் வரையிலான இந்து நாகரிகத்தின் புகழை’’ முன்வைத்த அவர் மேலும் கூறுகிறார்: “...நாம் மேலும் பல நூற்றாண்டுகளின் இடைவெளியைப் பெற்றிருக்கிறோம். இக்காலம் சம்பந்தமாக அனைவராலும் ஏற்கத்தக்க வரலாறு என ஏதுமில்லை. ஆனாலும் நாடு குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமின்றி  தன்னுடைய இயல்பான வாழ்க்கையைப் பெற்றிருந்தது என்று நாம் ஊகித்துணர முடியும். பிறகு, புத்தர் வந்தார், குப்தா அரசபரம்பரையின் மாபெரும் மாமன்னர்கள், அசோகர், ஹர்ஷவர்த்தன், விக்ரமாதித்யன், புலிகேசி மற்றும் பலர் ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்களின் ஆட்சி காலம் குறித்து எவராலும் மறுக்க இயலாத வகையில் சாட்சியங்களைப் பெற்றிருக்கிறோம். `உலகை வெற்றிகொண்டஅலெக்சாண்டர் நம் நாட்டிற்குள் புகுந்தது வெறும் கீறல் போன்றது.  உண்மையில் அவர் நம் நாட்டிற்குள் நுழைந்தார் என்று கூறவே முடியாது. அந்த அளவிற்கு மிகவும் விரைவாக அவர் பின்வாங்கல் அமைந்திருந்தது.’’ (கோல்வால்கர், 1939, ப. 9)
அறிவியலையும் வரலாற்றையும் நிராகரிக்கும் போக்கு
கோல்வால்கரின் தலைமுறையினருக்கு இந்தக்காலகட்டத்தில் கிடைத்து வந்த பதிவுசெய்யப்பட்ட வரலாற்றையே ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டு - உண்மையில் நிராகரித்துவிட்டுகோல்வால்கர் அவரது விருப்பு வெறுப்புக்கிணங்க மாற்றிக் கூறுகிறார். அவர்  தரப்படுத்தும் ஆட்சியாளர்கள் அனைவரும் `இந்து அரசர்கள்மட்டுமே.  அவர் இவ்வாறு குறிப்பிடும் அரசர்களில் கூடபுலிகேசி-2 என்பவர் தெற்கு நோக்கிச் சென்ற ஹர்ஷவர்த்தனாவை நர்மதை நதிக்கரையில் தடுத்து நிறுத்தி, தோற்கடித்துவிட்டார். இது ஏன்? இருவருமே, கோல்வால்கரின் கூற்றின்படிமாபெரும் இந்து அரசர்கள்தான், ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள்தான்.  அவருடைய செயல்   வரலாற்றை மட்டுமல்ல, சமூக வளர்ச்சி விதிகளையும்கூட புறக்கணிக்கிறது. மன்னர்கள் ஏன் ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்? சாம்ராஜ்ஜியங்கள் ஏன் எழவும் வீழவும் வேண்டும்அடிமை அமைப்பு முறை ஏன் நிலப்பிரபுத்துவ அமைப்புமுறைக்கு வழி காண வேண்டும்? அல்லது எப்படி மற்றும் ஏன் பிரிட்டிஷார் `இந்து மன்னர்களைதங்களிடமிருந்த ஆற்றல் மிக்க ஆயுதங்களால் வென்றடக்க முடிந்ததுஏன் மாபெரும் இந்து நாடு அவர்களை அடக்கக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற மன்னர்களை உருவாக்க முடியவில்லை? இந்தக் கேள்விகள் அனைத்துமே கோல்வால்கர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு சம்பந்தம் இல்லாதவை. 
இதே போன்ற தொனியில்தான் ஒடுக்கப்பட்ட  இந்து சடங்கு மற்றும் சாதிய ஒழுங்குக்கு எதிரான கலகங்களும் கண்டு கொள்ளப்படவில்லை. புத்திசம் என்பது இந்துயிசத்தின்  மாற்றுவடிவம் என்ற முறையில் தான் சித்தரிக்கப்படுகிறது.  உண்மையில்மற்ற அனைத்து மதங்களும் (குறிப்பாக இந்தியாவில் உருவான  சீக்கிய மதமும், சமண மதமும்)  இந்து மதத்திற்குள் அடங்கியவைதான் என்று கூறப் பட்டது.
எண்ணூறு ஆண்டு கால இந்திய வரலாறு என்பது முஸ்லீம்களின் படையெடுப்புக்கு எதிரான `ஒட்டுமொத்த இந்து தேசத்தின்நீண்ட நெடிய யுத்தகாலம் என்பது போலவே சித்தரிக்கப்படுகிறது. எனினும் கோல்வால்கர், இறுதியில் இந்து தேசம் வெற்றிவாகை சூடியதாகவும், அது புதியதொரு எதிரியால், அதாவது பிரிட்டிஷாரால், வென்றடக்கப்பட்டது என்றும் கூறுகிறார். 1857இல் பிரிட்டிஷாருக்கு எதிராக நடைபெற்ற முதலாவது இந்திய சுதந்திர யுத்தம், இந்து தேசத்தால்,  “நீண்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக  நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பெரிய யுத்தம்’’ என்று சித்தரிக்கப்படுகிறது. (கோல்வால்கர், 1939, , 11)  “முயற்சி தோல்வியடைந்துவிட்டது. ஆயினும் அவ்வாறு அவர்கள் தோல்வியடைந்திருந்த போதிலும், உன்னதமான இந்து தேசப்பற்றாளர்கள் அனைவரும் நாடு பூஜிக்கக்கூடிய அளவிற்கு பிரகாசமான அடையாளங்களாக மாறிவிட்டார்கள்,’’ (கோல்வால்கர், 1939, ,11) என்றும் கூறுகிறார்.   பிரிட்டிஷாருக்கு எதிரான இந்தக் கலகத்தை மேற்கொண்டது மொகலாய சக்ரவர்த்தி, பகதூர் ஷா ஜஃபார் அல்லவா? அவருடைய படையில்தானே .இந்து ராணியான  ஜான்சி ராணி லட்சுமி பாய் இணைந்து நின்று வீரஞ்செறிந்த போராட்டத்தை மேற்கொண்டார்.  கோல்வால்கர் இதையெல்லாம் வசதி கருதி மறந்துவிட்டார். இந்த யுத்தம், இந்தியாவைப் படையெடுத்து வந்த முஸ்லீம்களுக்கு எதிரான `இந்துக்கள்யுத்தமா? அல்லது இந்தியர்கள் சுதந்திரத்திற்காக நடத்திய யுத்தமா? வரலாற்றின் இத்தகைய உண்மைகள், கோல்வால்கரைப் பொறுத்தவரையில் சம்பந்த மில்லாதவைகளாகும்.
மேலும், தேசம் என்று வரையறுப்பதற்கு கோல்வால்கர் ஐந்து குணாம்சங்களை அல்லது (ஒற்றுமைகளை’’) குறிப்பிடுகிறார். பூகோளநிலை, இனம், மதம்கலாச்சாரம் மற்றும் மொழி’’ (கோல்வால்கர், 1939, ,33). இந்தியாவில் உள்ள இந்துக்கள் மட்டுமே இந்த ஐந்து தகுதிகளையும் பெற்றிருக்கிறார்கள் என்றும், அவ்வாறே இந்தியா ஓர் இந்து தேசமாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்றும்  நிறுவுவதே கோல்வால்கர் செயல்பாட்டின் நோக்கம்.
ஆயினும் இந்தப் பணி, கோல்வால்கருக்கே, அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.  இவை எல்லாவற்றிலும் அதிக முடிச்சுகள் நிறைந்த அம்சம் மதமாகும். அதற்கு அடுத்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மொழியாகும்.’’ (கோல்வால்கர், 1939, ப.33) கோல்வால்கருக்கு “... இனம் என்பது  ஒரு தேசத்திற்கான மிகவும் முக்கியமான மூலக்கூறு’’ ஆகும். (கோல்வால்கர், 1939, ப. 21). இந்தக் காரணத்திற்காகத்தான் இவர் இந்து என்ற சொல்லையும் ஆரியர் என்ற சொல்லையும்  எப்போதும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்.    ஆனாலும் வரலாற்றுச் சான்று இதற்குச் சம்பந்தமில்லாமல் முற்றிலும் வேறானதாக இருக்கிறது.
ஆரியர்களைப் பொருத்துதல்
அவருடைய வாதத்தின்படி, இந்து சமவெளி நாகரிகம் என்பது இந்த நாட்டின் தொன்முதற் குடியினரான ஆரியர் நாகரிகம் என்பதாகும்.  அப்படியெனில் அது ஏன் சிதறுண்டு போக வேண்டும்? அதற்கு உள்ளார்ந்த காரணங்கள் என்ன? இந்த நாகரிகம் வெளியாரால் சூறையாடப்பட்டிருப்பின், அவர்கள் யார்? அவர்கள் இந்த நிலத்திற்கு வந்தபின்னர், அவர்கள் இங்கேயே தொடர்ந்து இருந்துவிட்டார்களா? அல்லது திரும்பிச் சென்று விட்டார்களா? அவர்கள் இங்கேயே தொடர்ந்து இருந்துவிட்டார்கள் என்று சாட்சியங்கள் சுட்டிக்காட்டும் எனில், இவ்வாறு இரு தரப்பினரும் கலந்ததன் மூலம் உருவான இனம் என்னவாக இருந்தது? வரலாற்றுச் சாட்சியங்கள் இன்றைய காவிப் படையினருக்கு மிகவும் அசௌகரியமானவைகளாக இருப்பதால், இக்கேள்விகள் அனைத்தும் கோல்வால்கருக்கும் அசௌகரியமான கேள்விகளே யாகும். இக்கேள்விகள் அனைத்தையும் இவர்கள் `நம்பிக்கையின் அடிப்படையிலேயேஎதிர்த்து முறியடித்திட விரும்புகிறார்கள். உதாரணத்திற்கு, பிரபல வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், கூறுவதாவது:
சமஸ்கிருத வேதத்தின் மொழியியல் சாட்சியமானது ஈரானிலிருந்து ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழி இந்தியாவிற்குள் வந்தது, ஆனால் அது இந்தியா ஆரியர்களின் தாய்நாடு என்னும் கற்பிதத்தினை ஆதரித்திடவில்லை,’’ (செமினார் 400, டிசம்பர் 1992 மற்றும் பார்க்க செமினார் 364, டிசம்பர் 1989).
கோல்வால்கர் இத்தகைய வரலாற்றுச் சாட்சியங்கள் அனைத்தையும் ஓர் அடிக்குறிப்பில் தள்ளுபடி செய்துவிடுகிறார்: ஆனால், ஆரியர்கள் இந்துஸ்தானுக்கு காஸ்பியன் கடலுக்கு அருகில் அல்லது ஆர்க்டிக் பிராந்தியம் அல்லது அதுபோன்று ஓரிடத்திலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும் என்று நன்கு சிந்திப்பதன் மூலம் தோன்றுகிறது. அவ்வாறு இந்த நிலத்திற்குள்  கொள்ளைக்கும்பல் போன்று படையெடுத்து வந்திருக்கக்கூடும்.  அவர்கள் முதலில் பஞ்சாப்பிலும் பின்னர் படிப்படியாக கங்கையையொட்டி கிழக்கேயும் பரவி மாபெரும் சாம்ராஜ்ஜியங்களை பல இடங்களில் அமைத்துள்ளார்கள், அவற்றில் அயோத்தியில் அமைந்ததும் ஒன்று. வரலாற்றாசிரியர்கள் இதனை காலக் குளறுபடியான ஒன்று என எண்ணுகிறார்கள்.  ராமாயணத்தில் உள்ள அயோத்தியின் சாம்ராஜ்ஜியம் பாண்டவர்களின் ஹஸ்தினா புரத்தில்  இருந்த சாம்ராஜ்ஜியத்தை விட பழைமையானது.  கல்விச்செருக்குடன் கூடிய அறிவின்மை காரணமாக, ((with pedantic ignorance)) மகாபாரதக் கதை பழைமையானது என போதிக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இத்தகைய  தப்பெண்ணங்கள்  நம் இளம் சந்ததியினர் மூளையில் நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களால் தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் மூலமாக  நிரப்பப்பட்டிருக்கின்றன. நாம் நம் வரலாற்றை ஆய்வுசெய்து, புரிந்துகொண்டுநம் வரலாற்றை நாமே எழுதுவதற்கும்,   வேண்டுமென்றோ அல்லாமலோ இவர்கள் செய்துள்ள திரிபுகளை விலக்கி வைப்பதற்கும்  இதுவே சரியான தருணம். (கோல்வால்கர், 1939, பக். 5-6).
பாஜக மாநில அரசாங்கங்கள் பள்ளிப் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க முன் வந்திருப்பதற்கு இத்தகைய புரிதல்தான் காரணமாகும்.  இவர்களது சித்தாந்தம் ஏற்கத்தக்கதில்லை என்றபோதிலும்கூடசமூக வாழ்க்கையில் மதத்தின்  ஒப்புயர்வற்ற நிலையை உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பதற்காக கோல்வால்கர் இதனை உறுதிபடக் கூறுகிறார். இவரது கூற்றுக்கும் சமயப்பற்றுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.  கோல்வால்கர் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காக அமைத்துத்தந்த அரசியல் குறிக்கோளை எய்துவதற்கு இதனை நிறுவ வேண்டியிருந்தது.  மதச்சார்பின்மை குறித்த நவீன சித்தாந்தத்தை அவர் தள்ளுபடி செய்கிறார்.  மதம், அரசியலிலிருந்தும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்றும் அதனை தனிப்பட்டவரின் பிரச்சனையாகக் கருத வேண்டும் என்கிற  மதச்சார்பின்மை குறித்த நவீன சித்தாந்தத்தை அவர் தள்ளுபடி செய்கிறார்.  வெளிப்படையாக இல்லை என்றபோதிலும் தெய்வ நிந்தனையாகவே மதச்சார்பின்மை கருதப்பட வேண்டும் என்று கூறும் அவர் அதற்காகக் கீழ்க்கண்டவாறு வாதிடுகிறார்: மதம் தனிப்பட்டவரின் பிரச்சனை என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு பொதுவாழ்விலும் அரசியல் வாழ்விலும் இடமில்லை என்றும்  பொதுவான போக்கு இருக்கிறது.  இந்தப் போக்கு மதம் குறித்த தவறான தப்பெண்ணத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.   சொல்லிக்கொள்ளக்கூடிய அளவிற்கு மதத்தைப் பெறாத மக்களாலேயே இவ்வாறு கூறப்படுகிறது.’’ (கோல்வால்கர், 1939, ப.23).
இந்துயிசம் தவிர வேறெந்த மதமும் மதிப்புமிக்கதல்ல என்பதால் அவர் கீழ்க்கண்டவாறு வலியுறுத்திக்கூறுகிறார்:
இத்தகைய மதத்தை - இந்த அளவிற்கு உயர்ந்த இடத்தை வேறெந்த மதமும் பெறமுடியாது - தனிப்பட்டவர்களாலோ அல்லது பொது வாழ்விலோ உதாசினம் செய்யத்தக்கதல்ல. கணிசமான அளவிற்கு அரசியலிலும் அதற்கு இடமிருக்க வேண்டும். உண்மையில்மதத்துடன் ஒப்பிடுகையில் அரசியலே ஒரு சிறிய காரணியாக மாறிவிடுகிறது. எனவே அது மதத்தின் கட்டளைக் கிணங்க செயல்படக்கூடிய ஒன்றாகவும் பின்பற்றப்பட வேண்டும். (கோல்வால்கர், 1939, ப. 24).
இவ்வாறு, பல்வேறு தேசங்கள், ஒரே மதத்தை அரசு மதமாகக் கொண்டிருக்கிறது என்பதையோ, அல்லது எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளாது மதச்சார்பற்ற தேசங்களும் இருப்பதையோ மற்றும் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட தேசங்களும் இருப்பதையோ, நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காத்திட மதத்திற்கு இடமில்லை என்று அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிற உண்மையையோ, அவர் மறுதலிக்கிறார். இஸ்லாமிய வங்கதேசம் வங்கதேச மக்களால் நடத்தப்பட்ட தேசியப் போராட்டத்தின் விளைவாக முஸ்லீம் பாகிஸ்தானிடமிருந்து - அவ்விருநாடுகளுக்கும் இடையே  அரசு மதமாக இஸ்லாம் இருந்தபோதும் -   பிரிந்த உண்மை கோல்வால்கருக்குத் தன்னுடைய நிலைப்பாட்டிற்கு அசௌகரியத்தை விளைவிக்கிற ஒன்றுதான். ஆனாலும், தன்னுடைய அரசியல் திட்டத்தை அரங்கேற்றிட மதத்தின் ஒப்புயர்வற்ற தன்மையை உயர்த்திப்பிடிக்க வேண்டியது கோல்வால்கருக்கு அவசியமாகும்.
கோல்வால்கருடைய சூழ்ச்சித்திறம் கொண்ட நயவஞ்சகம் என்னவெனில் அவர் மொழி குறித்து கூறியிருப்பவைகளாகும். நம் நாட்டில் புழக்கத்திலிருக்கும் ஏராளமான மொழிகளையும், அவை ஒவ்வொன்றுக்குமே தனி வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பர்யம் இருப்பதையும், பரஸ்பரம் தொடர்ந்து கலந்துறவாடுவதன் மூலமே தேசிய இனங்கள் உருவாகி இருக்கின்றன என்பதையும் அவரால் ஏளனத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. மொழி சார்ந்த ஒற்றுமை (டுiபேரளைவiஉ ரnவைல) தேவை என்பதுபோல் தோன்றுகிறது. ஒன்றல்ல, பல தேசங்கள் மொழி வேறுபாடுகளின் காரணமாக ஒன்றிலிருந்து மற்றொன்று தனித்திருக்கின்றன. ஆனால், உண்மையில் அது அப்படி அல்ல. ஒரே மொழிதான். அது சமஸ்கிருதம்தான். மற்ற மொழிகள் அனைத்துமே அதிலிருந்து பிறந்த அதன் குழந்தைகள்தான். அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதம்தான் தாய் மொழி.  கடவுள்களால் பேசப்பட்ட சமஸ்கிருத மொழி இமயமலையிலிருந்து தெற்கேயுள்ள பெருங்கடல் வரையும், கிழக்கிலிருந்து மேற்கேவரை பரவியுள்ள அனைவருக்கும் பொதுவான மொழி. மற்றும் நவீன அனைத்து சகோதர மொழிகளும் அதிலிருந்துதான் வந்திருக்கின்றன. நடைமுறையில் அனைத்து மொழிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளுமாகும்.  எவர் வேண்டுமானாலும் மிகச்சிறிய உழைப்புடன் சற்றே பழக்கப்படுத்திக் கொண்டால் பேச முடியும். தற்போதுள்ள நவீன மொழிகளில் கூட பல்வேறு மாகாணங்களில் வாழ்பவர்களுக்கிடையே பொதுவாக புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் கருத்தை வெளிப்படுத்தக்கூடிய  பொதுவான மொழியாக  இந்தி  இருக்கிறது.’’ (கோல்வால்கர், 1939, ப.43)
மிகவும் நகைக்கத்தக்க இத்தகைய வாதங்கள் எல்லாம் இந்தியாவிற்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும்.  பல ஐரோப்பிய நாடுகள் ஒரு பொது மொழியைத்தான் பயன்படுத்துகின்றன. அல்லது அவர்களுடைய மொழிகள் ஒரு தனித்த இந்தோ ஐரோப்பிய தாய்மொழியின் தளிர்களாக இருந்திருக்கின்றன. பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள் மற்றும் பாரம்பர்யங்கள்  கலந்துறவாடியதால்  இன்றைய தினம் இவ்வாறு பல தேசங்களும், தேசிய இனங்களும் தோன்றியுள்ளன.
ஆயினும் இவை அனைத்தும் கோல்வால்கருக்கு சம்பந்தம் இல்லாதவை. ஏனெனில், இந்தியா பல்வேறு வேற்றுமைகளுடன் உள்ள நாடு என்பதை அவர் ஏற்கவில்லை. அதேபோல் எவ்விதமான அறிவியல் ஆய்வையோ அல்லது வரலாற்று அனுபவத்தையோ ஏற்கவும் அவர் தயாராயில்லை. மாறாக தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக அது ஒரே கல்லாலான  நாடு (அடிnடிடiவாiஉ ரnவைல) என்கிறார்.  இத்தகைய புரிதலின் அடிப்படையின்கீழ்தான் காவிப் படையினர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை இன்றளவும் எதிர்க்கின்றனர், எதிர்ப்பதைத்  தொடர்கின்றனர்.   தமிழும் காஷ்மீரியும் மொழிகளில் சமஸ்கிருதக் குழு அல்லாத மூலங்களைக் கொண்டவை என்பது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. அல்லது அதற்காகவாவது, சமஸ்கிருதம் மொழியே இந்தோ ஐரோப்பிய மொழிகளின் ஒரு கிளைதான் என்றும், அது உலகத்தின் இந்தப் பகுதியில் மலர்ந்து வளர்ந்தது  என்றும் கூறவேண்டும். இந்தியாவிலேயே முழுமையாகவும் பூரணமாகவும் மலர்ந்த மொழி உருது. அதனைக் காவிப் படையினர் எதிர்க்கிறார்கள்  மற்றும் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறார்கள். அதன் தற்போதைய முழக்கமான, “இந்து, இந்தி, இந்துஸ்தான்’’ என்பது நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இந்தி பேசாத மக்களின் எதிர்காலத்திற்கு எப்படி சவாலாக இருக்கப் போகிறது என்பதை அதன் அரசியல் திட்டம் முன்னறிவித்து எச்சரிக்கிறது.
தேசம் என்கிற மேற்கத்திய சித்தாந்தம் மற்றும் இந்திய சுவடிகளில் காணப்படும் சித்தாந்தத்திலிருந்தும் கோல்வால்கர் முற்றிலுமாக தனிமைப்படுகிறார். அவரே கூறுவதைப் பாருங்கள்: ராஷ்ட்ரம்  கருத்தாக்கம் முழுமை பெற வேண்டுமாயின் அது `தேசம்’ (நாடு), `ஜாதி’ (இனம்), மற்றும் `ஜன்பத்’ (மக்கள்) ஆகியவற்றால் கோக்கப்பட வேண்டும்.’’ (கோல்வால்கர், 1939, ப. 52). ஆனால், அவர் கூறியுள்ள கருத்தை அனைவரும் ஏற்றுக்  கொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காக, அவர் புராதன இந்திய சுவடிகளில் மதம், பண்பாடு, மொழி ஆகிய மூன்று மூலக்கூறுகள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும், `ஜன்பத்என்கிற கருத்தாக்கம் இம்மூன்றையும் திட்டவட்டமாய் இணைக்கிறது,’’ என்கிறார்.  (கோல்வால்கர், 1939, ப. 52).
சகித்துக்கொள்ள முடியாத மதவெறி
இவ்வாறாக இந்துக்கள் தான் எப்போதும் இந்தத் தேசத்தில் இருந்தார்கள் என்றும் தொடர்ந்து இருந்து வருகிறார்கள் என்றும்  அறிவியல்பூர்வமற்ற முறையிலும்,   வரலாற்று ஆய்வு அடிப்படையிலும் நிறுவியதைத்’’ தொடர்ந்து, கோல்வால்கர் அத்தகைய இந்து தேசத்தின் சகிப்புத்தன்மையற்ற, தத்துவார்த்த சாராம்சத்தையும் பதித்திடும் வேலையில் தொடர்கிறார்.
“... இவ்வாறு நாம் மேற்கொண்டுள்ள ஆய்வானது, நம்மை மறுக்க இயலாத விதத்தில் ... இந்துஸ்தான் இங்கேதான் தோன்றியது மற்றும் புராதன இந்து தேசமும் இங்கேதான் தோன்றி இருக்க வேண்டும், வேறெங்கும் அல்ல என்ற முடிவுக்கே தள்ளிவிடுகிறது. இந்த தேசத்திற்குச் சொந்தமாயிராத மற்ற அனைவரும், அதாவது, இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றுக்குச் சொந்தமாயிராத அனைவரும் இயற்கையாகவே உண்மையான `தேசியவாழ்விலிருந்து விலகிவிடுகிறார்கள்.
நாம் மீண்டும் கூறுகிறோம்: நாம், இந்துஸ்தானத்தில், இந்துக்களின் நிலத்தில், வாழ்கிறோம்.  இந்து தேசத்தில், நவீன உலகின் அறிவியல் தேச சித்தாந்தத்திற்கான ஐந்து அத்தியாவசிய நிபந்தனைகளைத் திருப்திப்படுத்திக்கொண்டுவாழ வேண்டும். இவற்றை ஏற்றுக்கொண்டு, தற்போதைய மந்த நிலையிலிருந்து இந்து தேசத்தை மீளவும் கட்டக்கூடிய விதத்தில், புத்துயிரூட்டி, விடுவிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய இயக்கங்கள் மட்டுமே உண்மையில் `தேசியஇயக்கங்களாகும். அதில் செயல்படுபவர்கள் மட்டுமே தேசப் பற்றாளர்கள். இந்து இனத்தைப் பெருமைப்படுத்தக்கூடிய விதத்தில், லட்சியத்தை எய்திட வேண்டும் என்ற ஆர்வத்துடன்  அவர்கள் மட்டுமே  செயல் படுகிறார்கள்.  மற்றவர்கள் எல்லாம் தேசத்தின் லட்சியத்தைக் காட்டிக்கொடுப்பவர்களாக இருக்க வேண்டும், அல்லது, கருணையான பார்வையுடன் கூறவேண்டுமானால், இடியட்டுகளாக இருக்க வேண்டும்.’’ (கோல்வால்கர், 1939, பக். 43-44). அவர் மேலும் தொடர்கிறார்:  ஒன்றை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது  `தேசம்என்ற வரையறை குறித்து நாம் குறிப்பிட்டுள்ள ஐந்து நிபந்தனைகளுக்குள் வராதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து, நம் தேசத்திற்குரிய மதம், கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டுஇந்த தேசத்தின் இனத்துடன் முழுமையாக இணையாதவரைஅவர்கள் தேசிய வாழ்வில் இடம்பெற முடியாது. ஆயினும், அவர்கள் தங்களுடய இன, மத மற்றும் கலாச்சார வேற்றுமைகளையே பின்பற்றுவார்களெனில், அவர்கள் அந்நியர்களாக (foreigners)க் கருதப்படுவதைத் தவிர வேறெப்படியும் இருக்க முடியாது. (கோல்வால்கர், 1939, ப. 45).
அவர் மேலும் கூறுகிறார்:
இவ்வாறு அந்நியர்களாக இருப்பவர்களுக்கு இரு மார்க்கங்கள் மட்டும்தான் வெளிப்படையாக இருக்கிறது. ஒன்று அவர்கள் தேசிய இனத்துடன் முழுமையாக இணைந்து, அவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது தேசிய இனம் அவ்வாறு அவர்கள் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கும் வரையில்   மற்றும் தேசிய இனத்தவரால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லும்வரை, அவர்களது கருணையின் கீழ் வாழ்ந்து கொள்ள வேண்டும். ...   கூர்மதி வாய்ந்த பழைய தேசங்களின் அனுபவத்தால் வழங்கப்பட்ட இந்த நிலைப்பாட்டில் நின்று கொண்டு, இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் ஒன்று இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்து மதத்தை மதித்திடவும், பயபக்தியுடன் போற்றித் துதித்திடவும் வேண்டும், இந்து இனத்தையும், கலாச்சாரத்தையும், அதாவது இந்து தேசத்தை வானளாவப் புகழ்வதைத் தவிர வேறெந்த சிந்தனையையும் ஏற்காதிருக்க வேண்டும், தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களை யெல்லாம் துறந்துவிட்டு இந்து இனத்துடன் சங்கமித்திட வேண்டும், அல்லது எதையும் கோராமல், எவ்விதமான சிறப்புரிமைகளையும் உரிமைபாராட்டாமல், முன்னுரிமை சலுகைகள் எதனையும் கோராமல், ஒரு பிரஜைக்குரிய உரிமைகளைக்கூடக் கோராமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து இருந்து கொண்டு, நாட்டில் தங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் அவர்கள் வேறெந்த விதத்திலும் இருந்துவிடக்கூடாது. நாம் ஒரு பழைய தேசத்தைச் சேர்ந்தவர்கள், பழைய தேசத்தவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி நம்மை நாம் நிர்வகித்துக்கொள்வோம், நம் நாட்டில் வாழ்வதற்கு முன்வரும் அந்நிய இனத்தினரையும் அந்த விதத்திலேயே கையாளு வோம்.  (கோல்வால்கர், 1939, பக். 47-48)
பாசிசத்திலிருந்து உத்வேகம் பெறுதல்
`பழைய தேசங்கள்எப்படி நடந்துகொள்ளவேண்டும்? இது தொடர்பாக பாசிஸ்ட் ஜெர்மனியைப் போற்றி முகஸ்துதி செய்வதுபோல் இதற்குமுன்னெப்போதும் அப்பட்டமாய் இருந்ததில்லை.
புராதன இன உணர்வு, ஜெர்மானியப் பழங்குடியினரை ஐரோப்பா முழுவதையுமே கைப்பற்றக்கூடிய அளவிற்கு செயலாற்ற வைத்திருக்கிறது, நவீன ஜெர்மனியில் மீளவும் எழுச்சிகொள்ள வைத்திருக்கிறது.  அதன் விளைவாகதேசம் தவிர்க்கவியலாத விதத்தில் வல்லமை பொருந்தியவர்களாக இருந்த  மூதாதையர்களால் விட்டுச் செல்லப்பட்ட பாரம்பர்யங்களின்படி முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்ட ஆசைகளைப் பின்பற்றி வெற்றிபெற்றார்கள். நாமும் அப்படி .இருப்போம்: நம் இனத்தில் நாம் உற்பத்தி செய்த ஆன்மீக ஜாம்பவான்கள் இன்றையதினம் உலகில் வீர நடைபோட்டு பவனி வந்துகொண்டிருப் பதிலிருந்து நம் இன உணர்வு மீண்டும் ஒருமுறை எழுச்சி பெற்றிருக்கிறது என்பதைக் காண முடிகிறது.  (கோல்வால்கர், 1939, ப. 32).
மேலும் அவர் கூறுவதாவது:
ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாய்ப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்றுபோலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.’’ (கோல்வால்கர், 1939, ப. 35).
ஹிட்லர், இவ்வாறு, “குருஜியினுடைய குரு’’வாக வெளிப்படுகிறார். உண்மையில், இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் திட்டத்தின் கொடூரமான குணத்தை வெளிப்படுத்துகிறது.  பாசிசம் என்னும் பரிபூரணமான நவீன மற்றும் மேற்கத்திய சித்தாந்தத்தைக் கடன் வாங்கிக் கொள்வதில் அதற்கு எவ்விதமான மனஉறுத்தலும் இல்லை. ஆனால், வெளித்தோற்றத்தில் இந்து மதத்தினை உயர்த்திப்பிடிப்பதற்கும், அனைத்துமே புராதனமானவை என்று காட்டுவதற்கும் அதனை வெகு சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பாசிசம் தவிர மற்ற அனைத்து மேற்கத்திய சித்தாந்தங்களும் நாகரிக முன்னேற்றங்களும் `அந்நியமானவைஎன்று கண்டனத்திற்குரியவைகளாகின்றன.
 பாசிஸ்ட் போலி இந்துயிசத்திற்கு வக்காலத்து வாங்கும் சிலர், மிகவும் திறமையுடன், பாசிசத்தைப் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.  யூதர்களை ஜெர்மனி எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியது என்பது  குறித்த தகவல் 1939இல் அதிகமான அளவிற்கு வெளி உலகிற்கு வராததால் இவ்வாறு இவர் எழுதியது தொடர்பாக அப்போது பெரிய அளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை அல்லது சம்பந்தப்பட்ட நபருக்கு சந்தேகத்தின் பலனை அளித்திருக்கிறார்கள். (மோடக், 1993, ப. 11) அப்படித்தான் எனில், இந்நூல் 1947இல் மறுபதிப்பு கண்ட சமயத்தில் இதே பத்தி எவ்வித மாற்றமும் இன்றி இருந்ததே, ஏன்பதில் கூறுமாறு பிரார்த்திக்கிறோம். 1947இலும், 1939ஐப் போலவே, ஹிட்லரின் குற்றங்கள் பொது மக்களுக்குத் தெரிந்திருந்தன.  பிந்தைய பதிப்புகளில் இந்தப் பத்தியை கோல்வால்கர் ஏன் நீக்கிடவில்லைஇது தொடர்பாக தகவல்கள் கிடைக்கவில்லை என்பதற்காக அல்ல, மாறாக, கோல்வால்கரும் இன்றைய காவிப் படையினரும் ஹிட்லரின் நடைமுறைகளை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றி நடக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அவ்வாறு செய்திடவில்லை.
ஆயினும் முனைப்பாய் தெரிகின்ற முரண்பாடு ஒன்று கோல்வால்கரைக் கிஞ்சிற்றும் சங்கடப்படுத்தவில்லை. அவரது கூற்றின்படி இந்துக்கள் எல்லாம் ஆரியர்கள் என்றால், ஹிட்லர் பரிந்து பேசும் ஆரியர்கள் யார்? அவர்களும் ஆரியர்கள்தான் என்றால், பின்னர் அவர்கள் எல்லாம் இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்குக் குடியேறியவர்களா? அல்லது அவர்கள் எல்லாம் ஜெர்மனியிலிருந்து இந்தியாவிற்குள் வந்தேறியவர்களா? அவரது கற்பிதத்தின்படி இந்தியாவும் ஜெர்மனியும் ஒரே தனித்த தேசத்தின் அங்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் முன்வைக்கிற திட்டமானது, ஒரு பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரத்திற்கான தத்துவார்த்த அடிப்படையை அளிக்கிறது. அதுதான் இன்றைய காவிப்படையின் பல்வேறு அமைப்புகளுக்கும் ஆணிவேராய் அமைந்துள்ளது.
இந்துயிசத்தையே  கடத்திச் செல்லுதல்
இவர்கள் தங்கள் எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்து மதத்தையும் அதனுடைய வளமான பன்முக அம்சங்களையும் தங்கள் அரசியல் திட்டத்திற்குச் சேவை செய்யக்கூடிய விதத்தில் மாற்றி அமைத்து, கடத்திச் செல்வதற்கும் முயற்சிகளை மேற்கொண் டிருக்கிறர்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அன்றைய நிகழ்ச்சி நிரலும், காவிப் படையினரின் இன்றைய நிகழ்ச்சிநிரலும் மதத்துடன் செயல்படுவதற்கு அநேகமாக அல்லது முற்றிலுமாக எதுவுமில்லை. அது ஒரு வகுப்புவாத சித்தாந்தம். அது மதப் பிரிவினையைப் பயன்படுத்திக் கொள்கிறது. தன்னுடைய அரசியல் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அதனை மிகவும் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இதனை வெளிப்படுத்துவோர் மீது அந்த சித்தாந்தத்திற்காக வக்காலத்து வாங்குவோர் விஷத்தை உமிழ்கிறார்கள். இவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக மிகவும் வலுவான விதத்தில் மதத் தலைவர்கள் பலரிடமிருந்து பதில்கள் வந்திருக்கின்றன. (குன்றக்குடி அடிகளார் நேர்காணல், ப்ரண்ட்லைன், மார்ச் 12, 1993). மக்களின் மத உணர்வுகள் தங்கள் அரசியல் லட்சியத்தை எய்துவதற்கான பிரதான வழியாக இவர்களால் பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன.   இவ்வாறு மதத்தைத் துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அவர்கள் இந்துயிசத்தின் மனிதாபிமான சாராம்சத்தின் எதிரிகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் புத்தகத்தின் வேறு இரு முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். முதலாவது, சிறுபான்மையினர் பிரச்சனை குறித்ததாகும். சர்வதேச சங்கத்தால் (League of Nations) சிறுபான்மையினர் சம்பந்தமாகப் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பலவற்றைக் கடிந்துரைத்து, கோல்வால்கர் கூறுகிறார்: சிறுபான்மையினரின் பிரச்சனைக்கு நம்முடைய நவீனத் தீர்வு மிகவும் ஆபத்தானதாகும்.  அவர்களுக்கு அளவற்ற உரிமைகள் வழங்கப்படுவது மட்டுமல்ல, அவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கை மற்றும் இங்கே வாழ்ந்த காலத்தின் அளவு (இதையும் நாம் ஐயுறுகிறோம்) ஆகியவை சர்வதேச சங்கத்தின் கூற்றின்படி சிறுபான்மையினருக்காகப் பரிசீலனை செய்யப்படலாம் என்பது மட்டுமல்ல, சர்வதேச சங்கத்தால் கூறப்படுவதை விட அதிகமான அளவில் உரிமைகளும் சிறப்புரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் தற்போது உணரப்படுகின்றன.  இந்து தேசிய வாழ்வே சிதைந்திடுமோ என்கிற அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நாம் இதனைக் கவனத்தில் கொண்டு தயாராய் இருக்க வேண்டும்.’’ (கோல்வால்கர், 1939, பக். 49-50 அழுத்தமும் அந்நூலில் தரப்பட்டிருப்பதுதான்). 
சிறுபான்மையினருக்கு எதிராக இவ்வாறு அருளிரக்கமின்மை காட்டப்படுவதை இதற்கு முன்பு கூறப்பட்டிருப்பவைகளுடன் இணைத்துப் பார்த்தோமானால், காவிப் படையினர் இந்து ராஷ்ட்ரம் என்னும் தங்களுடைய சித்தாந்தத்தை நிறுவுவதில் வெற்றுபெறுவார்களானால் நாசி பாசிசம் வெட்கித் தலைகுனியக்கூடிய அளவிற்கு இவர்களும் அழிப்பு வேலைகளில் இறங்குவார்கள் என்பதையே இந்தப் புரிதல் கோடிட்டுக் காட்டுகிறது.
மனுவின் இந்தியா
இரண்டாவது அம்சம் இந்து ராஷ்ட்ரத்தில் சமூக ஒழுங்கு எப்படி இருக்கும் என்பது குறித்துக் குறிப்பிடுகிறது. கோல்வால்கர் மனுவை உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநருமாவார்’’ என்று போற்றிப் பாராட்டியிருப்பதுடன்,  “அவர்தான் தன்னுடைய மனுதர்மத்தில் உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்நாட்டிலுள்ள `முதலில் பிறந்தபிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத்  தெளிய வேண்டும்,’’  என்றும் கட்டளையிட்டிருக்கிறார். (கோல்வால்கர், 1939, பக். 55-56).
இப்போது மனுஸ்மிருதி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.  சமூகத்தைப் பாரம்பர்யமாக சாதிய கட்டமைப்புக்குள் உறுதியாகப் பிரித்து நிறுவியுள்ள மனுஸ்மிருதி கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
சூத்திரனுக்கு மிகவும் சிறந்த இயற்கையாய் அமைந்த செயல் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதுதான் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. இதைத் தவிர அவன்  வேறு எதைச்செய்தாலும் அவனுக்குப் பலனளிக்காது. (123, அத்தியாயம் 10).
அவர்கள் அவனுக்கு (சூத்திரனுக்கு) தங்கள் உணவில் மிச்சமானதை, பழைய துணிமணிகளை, தங்கள் வீட்டில் வீணாய்ப்போன தானியங்களை மற்றும் பயனற்றுவிட்ட வீட்டுப் பாத்திரங்களைக் கொடுக்க வேண்டும்.’’ (125, அத்தியாயம் 10).
ஒரு வேலைக்காரன் (சூத்திரன்), அவனுக்கு அதற்கான திறமை இருந்தபோதிலும்கூடசெல்வத்தைப் பெருமளவில் திரட்டக் கூடாது. பெருமளவில் செல்வத்தைத் திரட்டிய வேலைக்காரன் (சூத்திரன்) புரோகிதர்களுக்கு எரிச்சலுண்டாக்குகிறான்.’’ (129, அத்தியாயம் 10).
(மேற்கண்ட அனைத்து மேற்கோள்களும் டோனிகர் மற்றும் ஸ்மித், 1991இல் எழுதியவற்றிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.)
பின்னர் மனுஸ்மிருதி சமூகத்தில் சாதியற்றவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் குறிப்பிடப்படுபவர்களை வரையறுப்பதைத் தொடர்கிறார். அவர்களுக்கு சமூகத்தில் எந்த இடமும் எப்போதும் கிடையாது என்று கூறும் அவர் அவர்களது இழி செயல்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறார். சகித்துக் கொள்ள முடியாத சாதியக் கட்டமைப்பு கோல்வால்கரின் நூலிலும் இன்றைய காவிப் படையினரிடத்திலும் எதிரொலிப்பதைக் காணலாம். ஏனெனில் மனுஸ்மிருதியும் `ஆரியர்சமூக அமைப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்றுதான்.
ஆரியர் அல்லாதவர்களுக்குள்ள முரட்டுத்தனம், கொடூரமானவனாக இருத்தல் மற்றும் சடங்குகளைப் புரியும்போது வழக்கமாகத் தோல்வியுறுதல் அனைத்தும் இந்த உலகில் அவர்கள் கறைபட்ட கருப்பையிலிருந்து பிறந்தவர்கள் என்பதைத் தெளிவாய்க் காட்டும். (58, அத்தியாயம் 10).
இத்தகைய நான்கு சாதியக் கட்டமைப்புக்குள் வராத அனைவரும் பழங்குடியினர், திராவிடர்கள் மற்றும் குறிப்பாக ஆந்திரர்கள் ஆவர்.
பெண்கள் எப்படி இழிவாக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
குழந்தைப் பருவத்தில் தந்தையாலும், இளம்பருவகாலத்தில் கணவனாலும், கணவன் இறந்தபிறகுமைந்தராலும் பெண்கள் காக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சுதந்திரம் எதுவும் கிடையாது. (148, அத்தியாயம் 5)
ஆண்கள் அழகாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு அவசியம் இல்லை, அவன் இளைஞனாகத்தான் இருக்க வேண்டும் என்பதுமில்லை. ஓர் ஆணாக இருந்தால் போதும்அவன் அழகானவனோ அல்லது அசிங்கமானவனோ அவனுடன் உடலுறவை அனுபவி’’ என்று பெண்கள் கூறுவார்கள். (14)
பரத்ததையர் போன்று ஆண்களின் பின்னே ஓடுதல், மனம்மாறும் இயல்பு மற்றும் இயற்கையாகவே பாசத்துடன் இல்லாதிருப்பது ஆகிய குணங்கள் உடைய பெண்கள், என்னதான் அவர்களுடன் பற்றார்வத்துடன் இருந்தபோதிலும் அவர்கள்  தங்களுடைய கணவர்களுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள். (15).
அவர்களின் சொந்த இயற்கையான குணமே இது என்பதை அறிந்திருப்பதால், அவ்வாறு அவர்கள் சிருஷ்டிக் கடவுளால் படைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் தப்பிச்செல்லாதவாறு ஆண்கள் தங்களாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.’’ (16)
படுக்கை, ஆசனம், நகை, காமம், சினம், நேர்மையின்மை, துரோகம் மற்றும் கெட்ட நடத்தை ஆகியவைதான் மனு பெண்கள் குறித்து ஒதுக்கியுள்ள குணங்களாகும்.’’(18)
பெண்களுக்கு என்று தனியே வேத சுலோகங்கள், சடங்குகள் இல்லை. இது மிகவும் உறுதியாக நிறுவப்பட்டுள்ள சட்டமாகும். பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஆண்களைப்போன்று பலம் உள்ளவர்கள் அல்லபொய்யைப் போல் மாசு வடிவினர். இது நன்கு நிறுவப்பட்டிருக்கிறது.’’ (19, அத்தியாயம் 9)
அரசாங்கம் பெண்கள் குறித்து எப்படி நடந்து  கொள்ள வேண்டும் என்று மிகவும் விரிவாக எழுதப்பட்டிருக்கும் அதே சமயத்தில், பெண்கள் குறித்து மனுஸ்மிருதி கூறுவதாவது:
ஆனால் கணவனுக்கு உண்மையாக இல்லாத ஒரு பெண் இந்த உலகில் இடித்துரைக்கப்பட வேண்டியவளாவாள். பின்னர் மறுபிறவியில் அவர் நரியின் கருப்பையில் பிறப்பாள்.  பல்வேறு நோய்களாலும் சித்திரவதை செய்யப்படுவாள். (30, அத்தியாயம் 9). இவ்வாறு விதவைத் திருமணங்களைத் தடை செய்வது போன்று ஏராளமான பிரிவுகள் காணப்படுவதைச் சொல்லத் தேவை இல்லை. (64, 65 அத்தியாயம் 9). கோல்வால்கர் மனுஸ்மிருதியை இந்த நூலில் மட்டும் கொண்டாடவில்லை. மிகவும் பிற்பகுதியில் அவர் எழுதியுள்ள சிந்தனைத் துளிகள் (Bunch of Thoughts)என்னும் நூலிலும் அவர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
பிராமணன் தலையிலிருந்து பிறந்தவன், சத்திரியன் (அரசன்) கைகளிலிருந்து பிறந்தவன், வைசியன் தொடைகளிலிருந்து பிறந்தவன், சூத்திரன் கால்களிலிருந்து பிறந்தவன். இதன் பொருள் மக்கள் இவ்வாறு நான்கு மடிப்புகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே, அதாவது இந்து மக்கள் நம் கடவுள்.’’ (கோல்வால்கர், 1966, ப. 25).
இந்தப் புரிதலின் காரணமாகத்தான் ஆர்எஸ்எஸ், சுதந்திரத்திற்குப் பின்  இந்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவை (Hindu Code Bill) உடனடியாக எதிர்த்தது. இந்தப் புரிதலின் காரணமாகத்தான் இன்றைய தினம் மனுஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கும் வேலைகளில் காவிப்படையினர் உறுதியாக இறங்கியுள்ளனர்.  1992 டிசம்பரில் `தரம் சன்சாத்தில் நடைபெற்ற தாக்குதல் இதற்குச் சாட்சியமாகும். இன்றைய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்துக்களுக்கு அல்லாதது’’ ("non-Hindu") என்று குறைகூறுவதும் அதனால்தான். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ இதழான ஆர்கனைசர்  ஏட்டில் வந்துள்ள கீழ்க்கண்ட அறிக்கையைக் கவனியுங்கள் (1992 மே 10) :
“1992 ஏப்ரல் 18 மற்றும் 19 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற விசுவ இந்து பரிசத்தால் நடத்தப்பட்ட 2ஆவது  மாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாட்டில் அரசியலமைப்புச் சட்டம் மறுவரைவு செய்யப்பட வேண்டும் என்றும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரி இருக்கிறது.  உத்தரப்பிரதேச அட்வகேட் ஜெனரல், ஸ்ரீ வி.கே.எஸ். சௌத்ரிமனுஸ்மிருதியால் அனைவருக்கும் நீதி’’ அளித்திட முடியும் என்று வலியுறுத்திப் பேசி இருக்கிறார். மனு காலங்காலமாக ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் மற்றும் அதன் தேவைகளையும் ஆராய்ந்து, மனு நீதிச் சட்டத்தை உருவாக்கி இருக்கிறார்.  மனுஸ்மிருதி எல்லாக் காலத்திற்கும்  அனைத்து மனிதகுலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்.’’
இந்தப் பின்னணியில், உயர்சாதி மகாராஷ்ட்ரா பிராமணர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்களாக இதுநாள்வரை இருந்து வருவதன் முக்கியத்துவம் கவனிக்கத்தக்கது.
“1920களின் மத்தியவாக்கில் மகா ராஷ்ட்ராவில் இந்துத்துவா தத்துவமும் ஸ்தாபனமும் அமைந்தது எப்படி என்பது சற்றே ஆச்சரியமாகத் தோன்றக் கூடும். ஏனெனில் இங்கே முஸ்லீம்கள் மிகவும் சிறுபான்மையினர்தான்.  அவர்கள் ஓர் அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்று கூறுவதற்கில்லை. 1920களில் முற்பகுதியில் அப்படி ஒன்றும் பெரிய கலவரங்களும் ஏற்பட்டதில்லை. ஆனாலும் மகாராஷ்ட்ரா 1870களுக்குப் பின்னர் தாழ்த்தப்பட்டோரின்  ஒரு வலுவான பிராமண எதிர்ப்பு இயக்கத்திற்கு சாட்சியமாக இருந்திருக்கிறது.  ஜோதிபா புலே தன்னுடைய சத்யாசோதாக் சமாஜ் என்னும் அமைப்பை உருவாக்கி இருந்தார். 1920களில் தலித்துகளும் கூட அம்பேத்கரின் தலைமையின் கீழ் அணிதிரளத் தொடங்கி இருந்தார்கள். 1925இல் இந்துத்துவா தற்போது 1990-91இல் இருப்பதைப்போல், நழுவிக்கொண்டிருக்கும் மேலாதிக்கத்தை மீள அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் ஓர் உயர்சாதி அமைப்பாகத்தான் இருந்தது. ...’’ (பாசு, தத்தா, சர்க்கார், சர்க்கார் மற்றும் சென், 1993, பக்.10-11).
இவ்வாறு இந்து ராஷ்ட்ரத்தின் முன்வைக்கும் சமூக அமைப்பு என்பது மனிதாபிமானமற்ற சாதிய ஒடுக்குமுறையையும், பெண்களுக்கு அடிப்படை உரிமைகளைக்கூட அளிக்க மறுக்கும் ஒன்றாகவும்தான் இருக்கிறது. இந்து ராஷ்ட்ரம் முன்வைக்கும் விதிகளின்படி கணவன் இறந்தால்  மனைவி உடன்கட்டை ஏறும் `சதி’ (ளயவi) போன்ற கிரிமினல் நடவடிக்கைகள்கூட சரியான நடவடிக்கையே என்று நியாயப்படுத்தப் படலாம், ஏன், அவ்வாறு எரியும் பெண்களை பெருமைப்படுத்தப்படவும் கூடும்.
கோல்வால்கர் முன்வைக்கும் இத்தகைய தொலைநோக்குப் பார்வையைத்தான் காவிப் படையினரும்  இந்து ராஷ்ட்ரத்தை அமைத்திடத் தங்கள் தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டிருக்கிறார்கள்.
1950களில் இந்தப் புத்தகம் மறுபதிப்பு செய்யப்படவில்லை என்று அவர்கள் கூறிக்கொண்டிருப்பதற்கும், இந்தப் பார்வையை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்று கூறுவதற்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் அப்படித்தான் கூறுகிறார்கள் எனில்  இரண்டாம் உலகப் போரின்போது பாசிசம் தோல்வி அடைந்ததும், கோடிக்கணக்கானோர் ஒடுக்குமுறை நுகத்தடியிலிருந்து விடுதலை பெற்றதும்தான் அதற்குக் காரணமாக இருக்க முடியும்.  கோல்வால்கர் உருவாக்கிய சிந்தனை தகர்த்தெறியப்பட்டதன் காரணமாக, காவிப் படையினர் அதனைஇந்தியாவில் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. நமது நாட்டிலும் காந்திஜி படுகொலை செய்யப்பட்டதற்குப்பின்னர், காங்கிரஸ் பற்றி வெறித்தனமாக அது கூறி வந்த குற்றச்சாட்டுகள் மக்களிடம் எடுபடவில்லை.
 ஆனால் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கருத்துக்கள், நாம் முன்பு குறிப்பிட்டிருப்பதுபோல, இன்றும் காவிப் படையினருக்கு உத்வேகம் ஊட்டக் கூடியவைகளாகத் தொடர்கின்றன. அவர்களின் இரு குறிக்கோள்கள்: 1. `இந்துக்களுக்குஇடையே உள்ள உள்ளார்ந்த வேற்றுமைகளையெல்லாம் களைந்து ஒரே தனித்த ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வர முயற்சித்தல், 2.  இந்துக்களுக்கு வெளியில் உள்ள இனத்தினருக்கு எதிராக - அதாவது முஸ்லீம்களுக்கு எதிராக - வெறுப்பை உருவாக்குதல். (காவிப்படையினர் இத்தகைய வெறுப்பை பரப்புவதற்கான அடிப்படையில் உள்ள பொய்க்கூற்றுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருப்பதை, 1993 ஜனவரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள போலி இந்துயிசம் தோலுரிக்கப்படுகிறது:காவிப்படையினரின் புராணக் கற்பனைகளும் எதார்த்தமும் என்னும் பிரசுத்தைப் பார்க்க.)
அவர்கள் முன்னிறுத்துகிற விஷயங்கள் குறித்து ஒருசில வேடிக்கை விநோதங்களைச் சற்றே பார்ப்போம். இந்து மக்களை ராமனைக் கொண்டும் ராமாயணத்தைக்கொண்டும் ஒருங்கிணைத்திட அவர்கள் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.  இந்த ராமனில்தான் எத்தனை ராமன்கள்? ராமாயணத்தில்தான் எத்தனை ராமாயணங்கள்? ஏராளமான ராமன்களும், ராமாயணங்களும் புழக்கத்தில் உள்ளன. என்னுடைய குழந்தைப் பருவத்தில் ராமாயணத்தில் வரும் ஏற்றுக்கொள்ள இயலாத எண்ணற்ற கதாபாத்திரங்கள் குறித்து நினைத்துப் பார்த்திருக்கிறேன். விந்திய மலைகளுக்குத் தெற்கே இருந்த மன்னர்களின் பெயர்கள் வாலி, சுக்ரீவன் மற்றும் ஜம்பவந்தா என்பவைகளாகும். இவர்கள் எல்லாம் மனிதர்களாக அல்லாமல் மிருகங்களாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள்.  திராவிடர்களின் மீது ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரு முயற்சியின் பிரதிபலிப்பு இல்லையா, இது?
கேரளத்தில் ஓணம் பண்டிகை தொடர்பாக நிலவும் புராணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கேரள மக்கள் தங்களுக்குப்பிரியமான மன்னர் மகா பாலி ஒவ்வோர் ஆண்டும் திரும்பி வரும் நாளாக அதனைக் கொண்டாடுகிறார்கள். ஆர்யர்களின்படி இந்த மகா பாலி அசுரர்களின் அரசனாவார். இவரை விஷ்ண வாமனவதாரம் எடுத்து வந்து கொன்றாராம்.  
இந்துக்களின் ஒரு பகுதியினருக்கு ஹீரோவாக இருப்பவர், மற்றொரு பகுதியினருக்கு வில்லன். (காவிப் படையினர், இந்த அரசர்கள் எல்லாம் வேறு என்று கூறக்கூடும்.   எப்படி சந்திரனில் மனிதன் காலடி வைத்தபோது, இங்கே சில சாமியார்கள் அந்த சந்திரன் வேறு, புராணங்களில் உள்ள சந்திரன் வேறு என்று சொன்னதுபோல இவர்களும் கூறலாம்.)
இதேபோன்று ராவணனை உயர்த்திக் கூறும் ராவணயனாவில் ராவணன் கதை வேறு. ராவணன், எவராலும் கொல்லமுடியாத வரம் வாங்கியிருந்தாராம். அவருக்கு இந்த பூலோக வாழ்க்கை சலித்துப்போய்விட்டதாம். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் கடவுள் ராமர் அவதாரம் எடுத்து இந்தப் பூலோகத்திற்கு வந்து அவரது கைகளால் ராவணன் கொல்லப்பட்டு மோட்சத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாராம்.  விஜயதசமி தினத்தன்று, தீமைகளுக்கு எதிராக நன்மை வெற்றிபெற்றதாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக, ராவணனுக்கு மோட்சம் கிடைத்த தற்காகக் கொண்டாடப்படுவதாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது.  (ராமாயணக் கதை தொடர்பாக எண்ணற்ற வகைகள் இருப்பதை, பாவ்லா ரிச்மேன், 1992, புத்தகத்தில் பார்க்க.)
உண்மையில், தமிழில் எழுதப்பட்டுள்ள  கம்ப ராமாயணம், தாய்லாந்து நாட்டில் பேங்காக் நகரின் அரண்மனையின் மாடங்களை அலங்கரித்த கம்பர் என்பவரால் எழுதப்பட்டது. இதுவும் ஒரு பெரும் காப்பியமாகும். இது குறித்து கம்பர் கூறுகையில், “இது முடிவில்லாத வகையில்  ஒரே சமயத்தில் ஒன்றாகவும் பலவாகவும் பரவிக் கொண்டிருக்கிறது,’’ என்று கூறுகிறார்.    ஆயினும் பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரத்தை நிறுவ விரும்புகிறவர்கள் அனைத்து ராமாயணங்களையும் ஒன்றுபடுத்தி, தங்கள் அரசியல் குறிக்கோளுக்கு  ஏற்ற விதத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் கோல்வால்கருக்குத் திரும்புவோம். அவருடைய புத்தகத்தின் முடிவுரையில் அவர் கூறுவதாவது:
கடந்த கால நாகரிகங்கள் பலவும் ஒரு சில நாட்கள் மட்டும் நீடித்து மறைந்து விட்டன. ஏனெனில் அவற்றுக்கு நிறைவேற்ற வேண்டிய லட்சியம் என்று எதுவும் இல்லை. ஆயினும், நாம் பல மாபெரும் பேரிடர்களை எதிர்கொண்ட போதிலும், உலகின் எஜமானர்களாக வெற்றி வாகை சூடி எழுந்திருக்கிறோம். நாம் நம்பிக்கை இழப்பதற்கான காரணமே இல்லை. முதலில் செயல்படுங்கள். ... கடும்துன்பங்கள் நமக்கு வந்து நாம் அனைவரும் பல முறை நோய்க்கு ஆளாகி இருக்கிறோம். ஆயினும், பொறுமையாக இருங்கள், நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது நம் `தீவிரமான நாடகத்தின்’  கடைசிக் காட்சியில் தெரியவரும்.  நம்முடைய செயல்பாடுகளின் உண்மையான பொருள் என்னவென்று அப்போது தெரியவரும். அதுவரை நாம் பொறுமை காப்போம்.’’ (கோல்வால்கர், 1939., ப. 65).
இவர்களின் `தீவிரமான நாடகம்தன்னுடைய பாசிஸ்ட் குணங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஜார்ஜி டிமிட்ரோவ், “பாசிசம், முதலாளிகளின் மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகளின் நலன்களுக்காகத்தான் செயல்படுகிறது. எனினும், அது பழைய முதலாளித்துவக் கட்சிகளின் செயல்களினால் அவற்றைக் கைகழுவிவிட்டு வெளியேறும் விரக்தியடைந்த மக்களை வழிமறித்துத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள முயல்கிறது. இதற்காக அது முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் ஆட்சியிலிருந்த முதலாளித்துவக் கட்சிகளின் சமாதானமற்ற அணுகுமுறையைக் கடுமையாகத் தாக்குவதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறுகிறது.`` (டிமிட்ரோவ், 1972, ப. 12). காவிப் படையினர் இவ்வாறு கடுமையாக எதைத் தாக்குகிறார்கள்? சுதந்திர இந்தியாவின் அரசியலை வரையறுத்த மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களைத் தாக்குகிறார்கள். இதனை நன்கு நாம் குறித்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் பாபர் மசூதி  இடிக்கப்பட்டதற்குத் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள்தான் காரணம்  என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.   அரசமைப்புச் சட்டத்தையும் நாட்டின் நடைமுறையில் இருந்து வரும் சட்டங்களையும் மிக மோசமான முறையில் மீறியதால் அல்ல என்று ஒட்டுமொத்த பழியையும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் மீது காவிப்படையினர் வைப்பதை  நாம்  நன்கு குறித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய இவர்களது உத்திகள் குறித்தும் டிமிட்ரோவ் குறிப்பிட்டிருப்பதாவது:
பாசிசம்  மிகவும் லஞ்சம் மற்றும் கைக்கூலி வாங்குகிற பேர்வழிகளின் கருணையில் இருக்கும்படி மக்களை வைக்கிறது. ஆனால் அதே சமயத்தில் மிகவும் விரக்தியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் மக்களிடம்  `ஒரு நேர்மையான மற்றும் லஞ்சத்திற்கு ஆட்படாத அரசாங்கத்தைஅமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைக்கிறது. ... பாசிசம்  மக்கள் மத்தியில் வெறியைக் கிளப்புவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பிரத்தியேகமான சிறப்பியல்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. பாசிசம் மக்கள் உணர்ச்சியை வெறித்தனமாகக் கிளப்பிடும் பேச்சுக்களுக்கு, சிறு முதலாளிய வர்க்கத்தினரும், ஏன், தேவையாலும், வேலையின்மையாலும், பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருவதாலும் விரக்தியினால் பீடிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களும்கூட, மிக எளிதாக பலியாகி விடுகிறார்கள்.`` (டிமிட்ரோவ், 1972, ப. 12).
பாசிசத்தின் இந்த அம்சத்தை இன்றைய தினம் காவிப்படையினர் மிகவும் துல்லியமான முறையில் தங்கள் வெறித்தனமான கிளர்ச்சிப் பிரச்சாரங்களுக்கு வரையறுத்துள்ளனர்.  (`லஞ்ச ஊழலற்ற அரசாங்கத்தைஅளிப்போம் என்று கூறும் அதே சமயத்தில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசாங்கமானது ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு 15 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்களை `நன்கொடையாக வழங்கி இருக்கிறது என்கிற உண்மையைக் குறித்துக் கொள்ளுங்கள். (இந்தியா டுடே, அக்டோபர் 30, 1992). மேலும், தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடும் சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்யும் கல்யாண் சிங் அரசாங்கமும் சாத்வி ரிதம்பரா என்னும் சாமியாருக்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விலையில்லாமல் இலவசமாக மாற்றிட அவசர அவசரமாய் கோரியிருப்பதை, வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருப்பதையும் குறித்துக் கொள்ளுங்கள். முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கக் கொள்கைகளால் எழுந்துள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு, இத்தகைய  திசைதிருப்பும் வேலைகளில் இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் தங்கள் முயற்சிகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் மக்களின் ஏழ்மை நிலைமையைப் போக்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, மாறாக, மதவெறி அமைப்புகள் தங்கள் குறிக்கோளை மிக வேகமாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் அவற்றுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்களின் ஒரே நிகழ்ச்சிநிரல் ராம ஜன்ம பூமி கோவில் கட்டுவதுதான் என்று மக்கள் முன் வைத்துள்ள காவிப் படையினர், உண்மையில் மக்களின் துன்ப துயரங்களை அதிகப்படுத்தக்கூடிய விதத்தில் சுரண்டும் அமைப்புகளைத்தான் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய குறிக்கோளுக்காக ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு அளித்திட வெளிப்படையாகவே உதவி வரும் இவர்களின் நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கு மிகவும் பாதகமான நிலைமைகளைத்தான் ஏற்படுத்திடும்.
காவிப்படையினர் இன்றைய தினம், நாட்டு மக்களின் இன்றைய நிலைமைகள் குறித்தோ, அவர்களின் துன்ப துயரங்கள் குறித்தோ எங்களுக்குக் கிஞ்சிற்றும் கவலையில்லை என்று மிகவும் தெளிவாக வெளிப்படுத்திவிட்டார்கள். நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் - அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமான அளவில் - நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே மிகவும் வறிய நிலையில் படுபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை.  பல நாடுகளின் மக்கள்தொகையைவிட அதிகமான அளவில் பல லட்சம் குழந்தைகள் நம் நாட்டில் தங்கள் ஜீவனத்திற்காக வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது குறித்து இவர்களுக்குக் கவலையில்லை.  ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகையைவிட அதிகமானஅளவில் நம் நாட்டில் மக்கள் ஒவ்வோராண்டும் ஊட்டச்சத்தின்மையால் மடிந்து கொண்டிருக் கிறார்கள் என்பது குறித்து இவர்களுக்குக் கவலையில்லை. தங்களுடைய அரசியல் ஆசைகள் நிறைவேறவேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் காணப்படும் இத்தகைய அதிருப்தி நிலையைத் திசைதிருப்பிட அனுமதிக்க முடியுமா? ராமனின் பெயரில் இன்றையதினம் காவிப் படையினர் கோடானுகோடி இந்தியர்களை ஏழ்மையில் தள்ளும் நிலைக்கு இட்டுச்சென்று கொண்டிருக்கின்றனர். 
இதுமட்டுமல்ல, காவிப்படையினரின் நிகழ்ச்சிநிரலானது நம் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 1992 டிசம்பர் 6க்குப் பின்னர், பம்பாய் கலவரங்களால் கணக்கிடமுடியாத அளவிற்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பது அல்லாமல், பொருளா தாரத்திற்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப் பட்டிருக்கின்றனஅதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, அத்வானி மதுரா மற்றும் வாரணாசியில் உள்ள மசூதிகள் இடிப்பும் தங்கள் நிகழ்ச்சிநிரலில் இருக்கிறது என்று கூறி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார். இது நிச்சயமாக இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கக்கூடிய விதத்தில் தொடர்ந்து மோதலை உருவாக்குவதற்கான ஒன்று என்பதில் ஐயமில்லை.  
ஆயினும், கோல்வால்கர் மற்றும் காவிப்படையினர், “இவ்வளவு கேடுகளுக்கும் நாங்கள் காரணம் அல்ல, தேசிய உணர்வு செயலற்று இருப்பதுதான் காரணம். ...’’ என்று கூறுவார்கள். (கோல்வால்கர், 1939, ப. 62)
காவிப்படையினர் நாட்டு மக்கள் முன் வைத்திருக்கும் நிகழ்ச்சிநிரலும், அதனை நிறைவேற்ற தாங்கள் பின்பற்றும் நடைமுறைகளும், தங்களுடைய குறிக்கோளை எய்துவதற்காக, பாசிஸ்ட் ஆட்சியாளர்கள் பின்பற்றும் வடிவம்தான். ஆனால் அதன் வடிவத்தை அவர்கள் இந்தியாவிற்கு ஏற்றவிதத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  அரசின் வடிவமும், அது பின்பற்றும் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளும், பாஜக ஆளும் வர்க்கங்களிலேயே மிகவும் பிற்போக்குத்தனமான ஒரு பிரிவு என்பதை தோலுரித்துக்காட்டி இருக்கிறது. காவிப் படையினரின் தற்போதைய முயற்சி, மத்திய கால குருமார்களின் இந்து ராஷ்ட்ரம்’’ என்னும் ஆட்சி அமைப்பை நிறுவுவதற்கான ஒன்று மட்டுமல்ல, தற்போது அமலில் இருந்து வரும் ஜனநாயக மற்றும் மதச்சார்பின்மையின் அடிப்படையின் அமைப்பையே  மறுதலிக்கும் ஒன்றுமாகும்.
இத்தகைய பாசிஸ்ட் அச்சுறுத்தலை, நாட்டில் ஒரு கட்சிக்குப் பதிலாக பிறிதொரு கட்சி ஆட்சிக்கு வருகிறது என்பதைப் போலப் பார்க்கக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். காவிப்படையினர் ஆட்சிக்கு வருவது என்பதுமத்தியில் ஒரு கட்சிக்குப் பதிலாக பிறிதோர் கட்சி ஆட்சியை அமைக்கிறது என்பதுபோன்ற வழக்கமான ஒன்று அல்ல. மதச்சார்பின்மை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பு, சகிப்புத்தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ள   வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது என்பது இதன் பொருளாகும்.  இது ஒரு வடிவ மாற்றம் மட்டும் அல்ல. மாறாக, மிகவும் நச்சுத்தன்மை கொண்ட சாராம்ச மாற்றமும் ஆகும்.  நவீன இந்தியாவைப் பாதுகாத்திட வேண்டுமானால், காவிப் படையினரின் இத்தகைய நிகழ்ச்சிநிரல் முறியடிக்கப் பட்டாக வேண்டும்.  இவர்களிட மிருந்து இந்தியா பாதுகாக்கப்பட வில்லை என்றால், பின்னர் அது சிறந்ததோர் இந்தியாவாக மாற்றப்பட முடியாது. 
முஸ்லீம் அடிப்படைவாதம்
கோல்வால்கரின் புத்தகம் வெளிவந்தபின்னர் ஈராண்டுகள் கழித்து ஜமாத்-இ-இஸ்லாமி என்னும் அமைப்பு உருவானது. 1941 ஆகஸ்ட் 26 அன்று, மௌலானா அபுல் அலா மௌடுடி என்பவர் தலைமையில் பதான்கோட்டில் அமைப்பு மாநாடு நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு கோல்வால்கர் எப்படியோ அதேபோன்று ஜமாத் இயக்கத்திற்கு மௌடுடி. அவர்களுடைய அரசியல் திட்டங்களிலும், வேலைமுறைகளிலும் உள்ள ஒத்த தன்மை உண்மையிலேயே பிரமிக்கத்தக்கது.  எப்படி ஹிட்லர் கோல்வால்கருக்கு ஹீரோவாக இருந்தாரோ, மெளுடுடிக்கும் அவர்தான் ஹீரோ. எப்படி கோல்வால்கர் நவீன மனிதசமூக நாகரிகத்தின் அனைத்து அம்சங்களையும் - அதாவது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற அமைப்புகள் அனைத்தையும் - `அந்நிய கருத்தாக்கங்கள்’ (`(`alien concepts') என நிராகரிக்கிறாரோ அதேபோன்றுதான் மௌடுடியும் முஸ்லீம் அடிப்படைவாதமும் நிராகரிக்கின்றன.
மௌடுடி, 1947 மே மாதத்தில் பதான்கோட்டில் உரையாற்றிய சமயத்தில்,   நாடு விரைவில் இரண்டாகப் பிரிந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டபோதுதாங்கள் எப்படி பாகிஸ்தானில் `அல்லாவால் வடித்துத்தரப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் பாகிஸ்தானை அமைக்க இருக்கிறோமோ அதேபோன்றுஇந்தியர்கள் தங்கள் அரசையும் சமூகத்தையும் இந்து சுவடிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் அமைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.  பாகிஸ்தானில் குவாடியானிஸ் என்னும் இடத்தில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட நீதியரசர் முகமது முனீர் என்னும் தனி உறுப்பினர் ஆணையத்தின் முன் ஒருசில சந்தேகங்களுக்குப் பதில் கூறும் விதத்தில் மௌடுடி உரையாற்றுகையில் கூறியதாவது:
இந்து சட்டத்தின் அடிப்படையில் ஓர் இந்து அரசு இந்தியாவிற்கு வருமானால், மனு தர்மம் இந்தியாவின் சட்டமாக மாறுமானால், அதன் விளைவாக முஸ்லீம்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப் படுவார்களானால், அரசாங்கத்தில் எவ்விதப் பங்கும் அளிக்கப்படாமல் போனால், அது மட்டுமல்ல, பிரஜா உரிமைகள்கூட அவர்களுக்கு வழங்கப்படாமல் போனால், எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை.’’ (இசட்.ஏ. நிசாமி, 1975, ப.11இல் மேற்கோள் காட்டியிருக்கிறார்.)
இந்து வகுப்புவாதமும் முஸ்லீம் அடிப்படைவாதமும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்க்கின்றன. நடைமுறையில் இரண்டுமே வகுப்புவாத நஞ்சை மிகவும் ஆழமாகப் பரப்பி, நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும்  அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இரண்டுமே தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறும் மக்களில் பெரும்பான்மையினரின் நலன்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. இந்தியா இன்றைய தினம் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இருக்கிறது.  ஏனெனில் இங்குள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களில் பெரும்பான்மையினர் இந்த அரசியலை நிராகரித்துவிட்டார்கள்.
இன்றைய இந்தியா பேணிப்பாதுகாக்கப்பட, இவ்வாறு ஹிட்லர்-கோல்வால்கர்-மௌடுடி ஆகியோரிடையே அமைந்துள்ள கூட்டு  அரசியல்ரீதியாக முறியடிக்கப்பட்டாக வேண்டும். 
தங்கள் மனசாட்சியை நாட்டின் எதிரிகள் எவருக்கும் விற்காதநாட்டுப் பற்று கொண்ட அனைவரும், இத்தகைய பாசிஸ்ட் சவாலை எதிர்கொண்டு முறியடித்திட ஒன்றுபட்டு எழ வேண்டும்.

References

Andersen, W. and Damle, Sridhar D., `The Brotherhood in Saffron: The Rashtriya Swayamsevak Sangh and Hindu Revivalism', Vistaar Publications,New Delhi 1987.

Basu, Tapan; Datta, Pradip; Sarkar, Sumit; Sarkar, Tanika;Sen, Sambuddha, `Khaki Shorts: Saffron Flags, Tracts For The Times/1', Orient Longrnan, New DEIW, 1993.

Curran, J. A., `Militant Hinduism in Indian Politics: A study of the RSS', the All India Quami Ekta Sammelan,1979.

Deshmukh, Nana, `R.S.S.: Victim of Slander', Vision Books, New Delhi,1979.

Dimitrov, Georgi, `Selected Works', Volume 2, Sofia Press, 1972.

Doniger, Wendy and Smith, Brian K. (translated), , Penguin Classics, Penguin Books, U.K., 1991.

Golwalkar, M.S., `We or Our Nationhood defined', Bharat Publications: .11 1939, with a foreword by Loknayak M.S. Aney,

Golwalkar, M.S., `We or Our Nationhood Ddined', Bharat Prakashan: 1, Fourth Edition, 1947.

Golwalkar, M.S., `Bunch of Thoughts', Vikrama Prakashan, Bangalore, 1966.
Modak, Ashok, `A Reply to the vilification of Hindutva', Rambhau Malgi Prabhodhini, Bombay, 1993, Rs.10.

Nizan-ti, Z.A., `Jamaat-e-Islami: Spearhead of Separatism', Ministry of Information & Broadcasting, Government of India, New Delhi, 1975.

Richman, Paula (ed.), `Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia', Oxford University Press, New Delhi, 1992.

Thapar,Romila, `The Perennial Aryans', Seminar, No. 400, December 1992.

Yechury,Sitaram, `Pseudo Hinduism Exposed: Saffron Brigade's Myths and Reality', a CPI(M) Publication, New Delhi, 1993.