Sunday, November 16, 2014

அமைச்சரவை மாற்றம் : உலர்ந்து உதிர்ந்த உறுதிமொழி




ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் ளாகவே, அமைச்சரவையில் புதிதாக 21 அமைச்சர்களை இணைத்துக் கொண்டதன் மூலம் மோடி அரசாங்கம் ஊதிப் பெருத்து விட்டது. இப்போது அமைச்சரவையில் 66 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இருவர் நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினர்கள் கிடையாது. நம்முடைய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி ஆறு மாதகாலத்திற்குள் இவர்கள் ஏதேனும் ஓர் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். ஆட்சியாளர்களின் நடைமுறைப் பாணியை உற்று நோக்கும்போது, அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் இன்னமும் நான்கரை ஆண்டு காலம் ஆட்சி புரியக்கூடிய சமயத்தில், அமைச்சரவை மேலும் விரிவாக் கப் படக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று சொல்வதற்கில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, நரேந்திர மோடியும், ஆர்எஸ் எஸ்/பாஜக பரிவாரங்களும், ஐமுகூ-2 அரசாங்கம் மிகவும் ஊதிப் பெருத்திருந்ததாகக் குற்றம்சாட்டினர். ஐமுகூ-2 அரசாங்கத்தில் உச்சபட்சமாக 79 அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் பதவியிலிருந்து இறங்குகையில் 77 அமைச்சர்கள் இருந்தார்கள். ஐமுகூ-2 அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சி தவிர ஐந்து கூட்டணிக் கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகித்தன. ஆனால், தற்போது பாஜக விரிவாக்கம் செய்துள்ள அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்ட்ரா சட்டமன்றத்தில் பாஜக சிறுபான்மையாக இருந்த போதிலும்கூட சிவசேனைக் கட்சியை தன் கூட்டாளியாக ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கிய நபர் ஒருவர், வாஜ்பாய் அரசாங்கத்தின்போது கேபினட் அமைச்சராக இருந்தவர், அவர் சிவசேனைக் கட்சியிலிருந்து விலகிய ஒருசில நொடிகளுக்குள், மின்னல் வேகத்தில் பாஜகவில் இணைந்து, அமைச்சராகவும் ஆகிவிட்டார்.
மோடி அரசாங்கம் ஏற்கனவே அமைச்சர்களின் எண்ணிக்கையை அரசமைப்புச் சட்டத்தின் அதிகபட்ச வரம்பான 83ஐ மிகவும்நெருங்கிவிட்டது. (அமைச்சர்களின் எண்ணிக்கை என்பது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மொத்த உறுப்பினர்களில் பத்துசதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.) ஆயினும் கார்ப்பரேட் ஊடகங்களில் மோடி அரசாங்கத்தின் துதிபாடிகள் இவ்வாறுஅமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து, மோடி தன் தேர்தல் வாக்குறுதியான `குறைந்த எண்ணிக்கையுடன் அமைச்சர்கள் - அதிகநன்மை பயக்கும்ஆட்சியை நிறைவேற்றிவிட்டார் என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பல்வேறு செய்தித்தாள்களும் மோடி அரசாங்கத்தைப் புகழ்ந்து தலைப்புச் செய்திகள் வெளியிட்டிருப்பதற்கு மத்தியில், ஒரேயொரு நாளேடுமட்டும் வெளிப்படையாகவே விரும்பத் தகாத விதத்தில் இல்லை என்றபோதிலும் மிகவும் ஆட்சேபகரமான முறையில் கருத்துதெரிவித்திருக்கிறது. அது இவ்வாறு குறிப்பிட் டிருந்தது: பிரதமர் சாதியையும், தகுதியையும் சரிக்கட்டிஇருக்கிறார்.’’ இந்நாளேடு கூற வரும் செய்தி என்னவென்று புரிகிறதா? சாதியும் தகுதியும் உடனொத்து இருக்க முடியாது என்பதாகும். இது காலங்காலமாக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் வழக்கமாகக் கூறிவரும் பல்லவிதான். இவ்வாறு இவர்கள் கூறுவதன் மூலம், “நாட்டிலுள்ள அனைவரும், அவர்களின் சாதி, இனம் அல்லது பாலினம் எதுவாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் சமம் என்று நம் அரசமைப்புச் சட்டம் உயர்த்திப்பிடிக்கும் புனிதமான அடிப்படையை, வெளிப்படையாய் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நடைமுறையில் மறுதலிக்கும் விதத்தில் அவமதித்திருக்கிறார்கள்.
அனைவரும் சமம் என்று கூறும் அரசமைப்புச் சட்டத்தின்கீழ்தான் அனைத்து அமைச்சர்களும் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சமயத்தில், மோடி அமைக்கும் அமைச்சரவை மிகவும் சிறியதாக இருந்து, முன்பிருந்த அனைத்து அரசாங்கங்களையும்விட மிகவும் திறமை யுடன் செயல்படும் என்று நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உறுதிமொழிகள் திரும்பத்திரும்ப அள்ளிவீசப்பட்டன. மோடி பிரச்சாரத்தின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வஞ்சனையானவைகளே என்று தேசிய தேர்தல்கண்காணிப்பு என்ற அமைப்பும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பும் ஆய்வுகள் மேற்கொண்டு ஆதாரப் பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளன.
மொத்தம் உள்ள 66 அமைச்சர்களில் 64 பேர் தேர்தல் ஆணையத்தின் முன் அளித்த சுய உறுதி வாக்குமூலங்களை ஆய்வு செய்கையில், (இரு அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இதுவரை ஆகாததால், இவர்கள் தேர்தல் ஆணையத்தின்முன்பு இவ்வாறு உறுதிவாக்குமூலம் எதுவும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.) இவர்களில் 20 அமைச்சர்கள் மீது (31 சத வீதம்) கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரிய வந்திருக்கிறது. இப்போதுபுதிதாக அமைச்சர் பொறுப் பேற்றுள்ளவர் களிலும் எட்டு பேர் (38 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களில் நால்வர் மீது மிகவும் மோசமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஒட்டுமொத்த அமைச்சரவையிலும் 11 அமைச்சர்கள் மீதுகொலை செய்ய முயற்சி, பல்வேறு மதப்பிரிவினரிடையே வகுப்புத் துவேஷத்தை ஏற்படுத்துதல், தேர்தல் விதிமுறைகளை மீறல் போன்ற குற்றங்களைப் புரிந்ததாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவற்றில் இரு வழக்குகள் இந்தியத் தண்டனைச் சட்டம் 307ஆவது பிரிவின் கீழும் (கொலை செய்ய முயற்சி), இரு வழக்குகள் இந்தியத் தண்டனைச் சட்டம் 153(ஏ) (பல்வேறு மதப்பிரிவினரிடையே வகுப்புத் துவேஷத்தை ஏற்படுத்துதல்) பிரிவின் கீழும் நிலுவையில் இருக்கின்றன. மேலும்ஒரு மோசமான வழக்கு பீகார், நவாடா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிரிராஜ் சிங் என்பவர் மீதானதாகும். இந்த நபர், கடந்த காலங்களில் தலித்துகள் மீது பல்வேறு கொலைவெறித் தாக்குதல்களை நடத்திய ரண்வீர் சேனா என்ற அமைப்பில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர். சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடியை எதிர்ப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை, அவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும்,’’ என்று மிகவும் அருவருப்பான முறையில் பேசிய பேர் வழியாவார். இத்தகைய கண்டனத்திற்குரிய முறையில் பேசியதை இந்நபர் இதுவரை திரும்பப் பெறவே இல்லை. மாறாக, இதை இப்பேர்வழி திரும்பத் திரும்பக் கூறி வந்தார். மோடி அரசாங்கம், (நம்முடைய அரசமைப்புச் சட்டம் உத்தரவாதமளித்துள்ள உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதாக பாசாங்குகாட்டுவதற்காகவாவது) இத்தகைய பேர் வழியைக் கண்டித்து, ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக, அப்பேர்வழிக்கு அமைச்சர் பதவி என்கிற விருதினை வழங்கி இருக்கிறது.
இவைதான் இவர்கள் நல்லாட்சி வழங்கிடும் லட்சணமாகும்.பண பலம் என்பதைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 64 அமைச்சர்களில் 59 பேர் (92 சதவீதத்தினர்) அவர்கள் சுயஉறுதி வாக்குமூலங்களின்படி கோடீஸ்வரர்களாவார்கள். சராசரியாக ஒவ்வொரு அமைச்சரின் சொத்துமதிப்பும் 14 கோடியே 25 லட்சம் ரூபாய்களாகும். புதிதாக அமைச்சரவையில் சேர்ந்துள்ளவர்களின் சொத்து மதிப்பு இதைவிட அதிகம். அதாவது 18 கோடியே 48 லட்ச ரூபாய்களாகும். ஏழு அமைச்சர்களின் சொத்து மதிப்பு 30 கோடி ரூபாய்களுக்கும் அதிகமாகும். சிலரது சொத்து மதிப்பு நூறு கோடிக்கும் அதிகமாக வருகிறது. தலைநகரில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையான எய்ம்ஸ் எனப்படும் அகிலஇந்திய மருத்துவ அறிவியல் இன்ஸ்டிட்யூட்டில் நேர்மையாகச் செயல்பட்ட புலனாய்வுஅதிகாரியை வெளியேற்றிய `புண்ணிய வான்தான் தற்போது மத்திய சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
`நல்லாட்சிவழங்குவோம் என்று மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை இவ்வாறு பொய்யாக்கி நிறைவேற்றத் தவறியதுமட்டுமின்றி, இவ்வாறு அமைச்சரவையில் பணபலம் மிக்கோர் ஆதிக்கம் செலுத்துவ தென்பது, வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை வெளிக்கொணர்வோம் என்று திரும்பத் திரும்ப வாக்குறுதிகளை அள்ளிவீசிய மோடி அரசாங்கத்தின் மீது பல்வேறு ஐயங்களை எழுப்பியிருக்கிறது. நாட்டிலுள்ள கோடீஸ்வரர்கள் அனைவருமே லஞ்சம் மற்றும் இரண்டகமான வழிகளில் சம்பாதித்து அந்நிய வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று நாம் கூறவில்லை.
ஆனால், கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் முன் மோடி அர சாங்கம் ஊசலாடியதைப் பார்க்கையில், அது தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்திட்ட வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றுமா என்கிற ஐயங்களை ஆழமான முறையில் ஏற்படுத்தி இருக்கின்றன. அரசியல்ரீதியாகவும், மக்கள் அதிகமாக வும் வாழும் மிகவும் முக்கியமான மாநிலங் களான உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகியஇரு மாநிலங்களுக்கும் விரைவில் தேர்தல்நடைபெறுவதையொட்டி, உத்தரப் பிரதேசத்தி லிருந்து நான்கு பேரையும், பீகாரிலிருந்து மூன்று பேரையும் மோடி அமைச்சர்களாகப் பதவியில் அமர்த்தி இருக்கிறார். புதிதாக பதவியேற்றுள்ள 21 பேர்களில் இவர்கள் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஆர்எஸ்எஸ்/பாஜக மோடி அரசாங்கத்தின் குணம் என்ன என்பதை இவை நன்கு தெளிவுபடுத்துகின்றன.மோடி அரசாங்கம்,`குறைந்த எண்ணிக் கையுடன் அமைச்சர்கள் - அதிகநன்மை பயக்கும் ஆட்சிஎன்ற வாக்குறுதிக்கு இரண்டகம் செய்துள்ளதுடன், நம் நாட்டு மக்களின் பெரும்பான்மையோருக்கு மேலும்சுமைகளை ஏற்றும் வண்ணம் பொருளா தாரச் சீர்திருத்தக் கொள்கைகளைப் பின்பற்றிக்கொண்டும், மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் பெரும்பான்மை மக்களுக்கு சொல் லொண்ணாத் துயரங்களை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறது.
இவர்களின் கொள்கைத் திசைவழி இப் போது நன்கு தெளிவாகிவிட்டது. இவர்களின் கொள்கைகள் நாட்டு மக்களுக்கு அதிக சுமைகளை ஏற்றும் அதே சமயத்தில், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நம் சமூகத்தின்உயரிய பண்பாட்டிற்கும், நாட்டின் ஒற்றுமைக் கும் ஒருமைப்பாட்டுக்குமே பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மிகவும் விரிவான மற்றும் வலுவான மக்கள் போராட் டங்கள் மற்றும் இயக்கங்கள் மூலம் இதை முறியடித்தாகவேண்டியது அவசியமாகும்.
(நவம்பர் 12, 2014)
- தமிழில்: ச.வீரமணி


1 comment:

ஞானகுரு.ந said...

Matha saarbinmai kurithu koasam ezhuppi vantha pala katchigal BJP yidam saranadain thiruppathu kavalaikkuriya ondraagum Idathu saarigalukku migapperiya Svaalaana ondru