பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
39 ஆண்டுகளுக்கு முன் 1975ஆம் ஆண்டில் இதே நாளில் (ஜூன் 25)தான், அப்போது காங்கிரஸ் கட்சியின்
சார்பில் மறைந்த இந்திரா காந்தி தலைமையிலிருந்த
அன்றைய காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தால் “அவசரநிலைப் பிரகடனம்’’ செய்யப்பட்டது. அன்றைய தினம் சூரியன் உதித்தபோது, ஆயிரக்கணக்கானவர்கள் கைது
செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் கறுப்பு அத்தியாயம்
தொடக்கி வைக்கப்பட்டது. இதன் பின்னர் விடாது தொடர்ந்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களின்
விளைவாக 1977இல் முன்கூட்டியே தேர்தலை நடத்த இந்திரா காந்தி முன்வந்ததும் அத்தேர்தலில் அவசரநிலை
ஆட்சி முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டதும் நடைபெற்றது. சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக,
காங்கிரஸ் கட்சி
முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் அல்லாத மத்திய அரசாங்கம் அமைக்கப்பட்டது. அவசரநிலையை எதிர்த்த கட்சிகளில் சில ஒன்றிணைந்து
`ஜனதா கட்சி’
என்ற பெயரில் அரசாங்கத்தை
அமைக்க முன்வந்தது. ஆயினும், பல்வேறு அரசியல் சக்திகளின்
கதம்பமாக அது இருந்ததால் அதனால் நீடித்திருக்க முடியவில்லை.
ஜனதா கட்சி உருவான தருணத்திலிருந்தே அக்கட்சிக்குள் நடந்துவந்த குடுமிபிடி சண்டைகளின்
காரணமாகவும், அக்கட்சியும் காங்கிரஸ் கட்சியைப் போன்றே வர்க்க நலன்களையே
அடிப்படையில் பிரதிநிதித்துப்படுத்தியதாலும், மக்களின் அபிலாசைகளை அதனால் தீர்த்து
வைக்க முடியவில்லை. அதனால் விரைவில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டுவிட்டது. எந்த மக்கள் அவசரநிலைக் காலத்தில் அக்கட்சிக்கு
அமோக வரவேற்பு அளித்தார்களோ அதே மக்கள் அதனைத் தூக்கி எறியவும் முன்வந்துவிட்டார்கள்.
வரலாற்றிலிருந்து முறையான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள இவை அனைத்தும் முக்கியமாகும்.
இன்றைய தினம் இதனையும் நாம் நன்கு மனதில் கொள்ள வேண்டும். 18 மாதங்களுக்குப்பின்னர் அவசரநிலையை
முறியடித்தது நவீன இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் ஒரு முக்கியமான அடையாளச்சின்னமாகும். நாட்டில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள், எதிர்காலத்தில் எதேச்சாதிகாரம் எந்த ரூபத்தில் தலையெடுத்தாலும்
அதனைத் தடுத்துநிறுத்தக்கூடிய அளவிற்கு ஜனநாயகத்தின் அடித்தளங்களை நன்கு ஆழமாகப் பதிய
வைத்தன.
மாறாக, 1977இல் உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனத்தை முறியடித்ததுடன் நாட்டைப் பீடித்த எதேச்சாதிகார
ஆபத்துக்களை முற்றிலுமாக முறியடித்துவிட்டோம் என்று நம்பினோமானால் வெற்றி மயக்கத்தில்
முட்டாள்தனமாக இருக்கிறோம் என்றே அர்த்தம்.
இது தொடர்பாக, ஜனதா கட்சி அரசாங்கம் அடிப்படையிலேயே ஒரு ஸ்திரமற்ற தன்மையுடன் பிறந்தது என்பதை
நாம் நினைவுகூர்தல் அவசியம். அப்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத்
திகழ்ந்த ஜன சங்கம் என்னும் கட்சி (இன்றைய பாஜக) தன்னைக் கலைத்துவிட்டு, ஜனதா கட்சியின் ஓர் அங்கமாக
மாறியது. ஆயினும், அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரகர்களாகத்
தொடர்ந்து பணியாற்றியும் வந்தார்கள். இவ்வாறான `இரட்டை உறுப்பினர்’ நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும் என்ற ஒரு கோரிக்கை ஜனதா கட்சிக்குள்ளே எழுந்தது. இதனை ஆர்எஸ்எஸ் வகையறாக்கள்
ஏற்காததன் விளைவாக அரசாங்கம் கவிழும் நிலை ஏற்பட்டது.
அவசரநிலைப் பிரகடனம் திணிக்கப்பட்ட 39ஆம் ஆண்டை அனுஷ்டிக்கக்கூடிய இத்தருணத்தில், புதிய ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கம் மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய
இன்றைய நிலையில், இதனை நினைவுகூர்தல் முக்கியம். ஏனெனில் எதேச்சாதிகாரப் போக்குகள் அவசரநிலைப் பிரகடனம்
பிறப்பிக்கப்பட்ட காலத்தில் வந்ததுபோன்றே வரவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவை பல
வழிகளிலும் வர முடியும். நாட்டில் புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின்னர் அவற்றின்
கறுப்பு நிழல்கள் ஏற்கனவே விழத் தொடங்கிவிட்டன. அவற்றில் ஒருசிலவற்றை இப்பகுதியில்
கடந்த சில வாரங்களாகக் குறிப்பிட்டு வந்திருக்கிறோம்.
நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் கீழான அமைப்புகள் நலிவடையும்பொழுது அல்லது அரித்து
வீழ்த்தப்படும்போது எதேச்சாதிகாரப் போக்குகள் இயல்பாகத் தலைதூக்கத் தொடங்கிவிடும்.
நம்முடைய குடியரசின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை சாராம்சம் என்பது நாட்டின் உச்சபட்ச
இறையாண்மை மக்களையே சார்ந்திருக்கிறது என்பதாகும். “... மக்களாகிய, நாம், ’’ என்றுதான் நம் அரசமைப்புச் சட்டம்
துவங்குகிறது. இவ்வாறு மக்களின் இறையாண்மை மக்களால் நாடாளுமன்றத்திற்குப் பிரதிநிதிகளைத்
தேர்ந்தெடுப்பதன் மூலம் மேற்கொள்ளப் படுகிறது. இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது
என்பதும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் விழிப்புடனிருந்து அரசாங்கத்தை மக்களுக்குப்
பதில் சொல்ல வைக்கிறது. இவ்வாறு, அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குப் பதில் கூறக் கடமைப்பட்டது. இதன்
தொடர்ச்சியாக இவ்வாறு நாடாளுமன்றம் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டது. இவ்வாறு
ஒருவர்க்கொருவர் பதில்கூறும் இத்தகைய சங்கிலித்தொடர் திட்டமிட்டு தகர்க்கப்பட்டால்
அல்லது வலுவிழக்கச்செய்யப்பட்டால், பின்னர் இதன் விளைவுகள் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்து,
எதேச்சாதிகாரம் தலைதூக்குவதற்கு
இட்டுச் செல்லும்.
இந்த அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர், இத்தகைய சங்கிலித்தொடரைத் தகர்ப்பதற்கான
வேலைகளில் அது இறங்கியிருப்பதைப் பார்க்கிறோம். மத்திய அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்குப்
பதிலாக, நாம்
இப்பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, `முக்கியமான கொள்கை முடிவுகளை’
பிரதமர் மட்டுமே எடுப்பார்
என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர்கள் அமைச்சரவைக்குப்
பதில் சொல்ல வேண்டும் என்ற பொறுப்பு,
அரித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது.
அதேபோன்று, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த
அரசு செயலாளர்களும் பிரதமரால் நேரடியாக அழைப்பாணை அனுப்பப்பட்டு அவருக்குத் தாங்கள்
ஆற்றிய பணிகள் குறித்து கூற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலம்
அரசு செயலாளர்கள் தாங்கள் எந்தத்துறையில் பணியாற்றுகிறார்களோ அந்தத்துறையின் அமைச்சருக்குப்
பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு இதர அமைச்சர்களின் சுயாட்சி உரிமைகள் அரித்து
வீழ்த்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தவிர்க்கமுடியாத வகையில் கூட்டப்பட
வேண்டிய நிலையில் இருந்தபோதிலும்கூட நாடாளுமன்றத்தில் ஜனநாயகரீதியிலான விவாதம் அல்லது
நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்வதைத் தவிர்க்கும் விதத்தில் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.
பிரதமர் அலுவலகத்தில் மிக முக்கியமான பதவிகளில் தனக்கு வேண்டியவர்களை நியமிக்கும் விதத்தில்
இவ்வாறு அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய போக்குகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கீழான அரசமைப்புச் சட்ட வடிவங்களைக்
காட்டிலும் ஜனாதிபதி தலைமையிலான ஆட்சி வடிவங்களையேப் பெரிதும் ஒத்துள்ளன. நாடாளுமன்ற
ஜனநாயகத்தை அரித்து வீழ்த்திட வகைசெய்யும் அணுகுமுறைகள் எதேச்சாதிகாரத்தை நோக்கியப்
பயணமேயாகும்.
பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் ஆகியவற்றை இன்னும் பதினைந்து நாட்களுக்குள்
சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், டீசல், சமையல் எரிவாயு அல்லது ரயில்வே
கட்டணங்கள் போன்று அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளையும், ஒரு நிர்வாக உத்தரவின் கீழ்
உயர்த்தி இருப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு
அரசு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு ஆகியவற்றையே மீண்டும் ஒருமுறை இந்த அரசு அரித்து
வீழ்த்தி இருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் கால அட்டவணையைச் சற்றே ஆராய்ந்து பார்க்கையில்
ஒவ்வொரு அமைச்சகத் துறை சார்பாகவும் பட்ஜெட்
விவரங்களை விவரமான ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய விதத்தில் அவை அமைந்திடவில்லை என்பதைப்
பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் இதற்காக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகையில் பட்ஜெட் ஆவணங்களை நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் ஆய்வு
செய்வதற்காக இடையில் மூன்று வாரங்கள் கூட்டத்தொடர் நடைபெறாமல் கால அவகாசம் அளிக்கப்படும்.
பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்தபின் இதுவரை இத்தகைய நிலைக்குழுக்களே அமைக்கப்படவில்லை.
இதன்மூலம், அரசாங்கத்தை நாடாளுமன்றம் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு இக்கூட்டத்தொடரில் பறிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய ஆரோக்கியமற்ற போக்குகள் மட்டுமல்லாது, நாம் இதற்குமுன் இப்பகுதியில் ஏற்கனவே
குறிப்பிட்டதைப்போல, நாட்டின் பல பகுதிகளிலும் மதவெறித் தீயை விசிறிவிடும் போக்குகள் மிகப் பெரிய அளவில்
நடைபெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன. கூடுதலாக, பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படையான
ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கூட `சகிப்புத் தன்மையற்ற போக்கு’ அதிகரித்து வருவதாகவும் செய்திகள்
வந்துகொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாட்டில் ஜனநாயகத்தின் எதிர்காலம் எந்த அளவிற்கு மோசமாக
இருக்கக்கூடும் என்பதற்கு தீய அறிகுறிகளாக கீழே குறிப்பிடப்படும் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
முகநூல் பக்கத்தில் மோடிக்கு எதிராக சில கருத்துக்களைப் பதிவு செய்தமைக்காக சென்ற
மாதம் பானாஜியில் பணியாற்றும் கடற்படைப் பொறியாளர் தேவு சோடங்கார் என்பவர் சிக்கலில்
மாட்டிக்கொண்டார். அமர்வு நீதிமன்றம் ஒன்று அவரைக் கைது செய்ய ஆணைபிறப்பித்திருக்கிறது.
அவரது முன்பிணை மனுவைக் கூட நிராகரித்திருக்கிறது. அதேபோன்று பெங்களூரில் எம்.பி.ஏ.
படிக்கும் சையது வகாஸ் என்னும் மாணவர் ஒருவர் மோடிக்கு எதிராக
இணையதளத்தில் கருத்தக்களைப் பரப்பினார் என்று குற்றம்சாட்டப்பட்டு சென்ற மே மாதம் கைது
செய்யப்பட்டார். மே 15 அன்று `புல்லட் ராஜா’ என்று திரைப்படத்தின் கதாசிரியர்
புகழ்பெற்ற அமரேஷ் மிஷ்ரா, இதேபோன்று தன்னுடைய டிவிட்டர் அக்கவுண்டில் செய்திகள் பதிவு
செய்திருந்தார் எனக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த ஒருசில நாட்களில் மட்டும்
கேரள காவல்துறையினர் 18 கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக இரு வெவ்வேறு வழக்குகளைப் பதிவு
செய்துள்ளது. இவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா? தங்களுடைய கல்லூரி சஞ்சிகைகளில் `மோடியை இகழ்ந்து’ கட்டுரைகள் எழுதியிருந்தார்களாம்.
இவ்வாறு, நாம் இன்றைக்குப் பார்க்கும் விஷயங்கள்
ஜனநாயகத்திற்கு ஆபத்தை அளிப்பவை மட்டுமல்ல, நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும்
மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் மதவெறித் தீயை விசிறிவிடும்
போக்குகளும் அதிகரித்து வருகின்றன. இவை அனைத்தும் தீய அறிகுறிகளாகும். நாம் ஏதோ மிகவும்
அவசரப்பட்டு இவ்வாறெல்லாம் கூறுவதாக சிலருக்குத் தோன்றக்கூடும். வருமுன்னர்க் காவாதான்
வாழ்க்கை எரிமுன்னர் வைத்த ஊறுபோலக் கெடும் என்பதால் அனைவரையும் எச்சரிக்க வேண்டியது
மிகவும் அவசியமாகும். அப்போதுதான் இத்தகைய ஆபத்துக்களை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாம்,
அவற்றை எதிர்த்துநின்று
முறியடித்திடவும் முடியும்.
அவசரநிலைப் பிரகடனத்தின் 39ஆவது ஆண்டை அனுஷ்டிக்கும் இவ்வேளையில் இந்தியக் குடியரசைப் பாதுகாத்திட
தயாராக இருக்க வேண்டும் என்று அனைவரும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட வேண்டும்.
இந்தத் தடவை ஜனநாயகத்திற்கு எதிரான ஆபத்துக்களை முறியடிப்பதோடு மட்டும் அல்ல,
மதச்சார்பின்மை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் சமூகத்தின் மகோன்னதமான
மாண்பினையும் உயர்த்திப்பிடித்திடவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியமாகும். நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப்
பாதுகாப்பது நம்முன் உள்ள பணியாகும். நம் மக்களுக்கு சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான
போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு இதுவே அடித்தளமாகும்.
(தமிழில்: ச.வீரமணி)