உண்மையில் 2013ல் வரலாற்றில் நீண்ட காலம் இருந்து வந்த தந்தி அனுப்பும் முறை கைவிடப்பட்டுவிட்டது. திரைப்படங்கள் ரீல்களில் எடுப்பது கைவிடப்பட்டு, டிஜிட்டல் மூலம் வரத் தொடங்கிவிட்டன. சமீபத்தில் வெளியான தூம்3 இந்திப்படம் உலகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலேயே வெளியாகி இருக்கிறது. இனி டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கையோ, பவுலிங் கையோ நாம் பார்க்க முடியாது. இவ் வாறு பல நிகழ்ச்சிப்போக்குகள் நடைபெற்றுள்ளன. ஆயினும் இதுபோன்ற வற்றைப் பட்டியலிடும் பணியை வரலாற்றாய்வாளர்களிடம் நாம் விட்டுவிடு வோம்.
2013ஆம் ஆண்டு தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அரசாங்கம் அமைந்திருப்பதுடன் நிறைவடைந் திருக்கிறது. நாம் அவர்களுக்குப் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆயினும், 2014ல்தான் ஆம் ஆத்மி அரசாங்கம் செயல்படத் துவங்கி இருக்கிறது. இந்திய ஜனநாயகம் இதுபோன்ற பல நிகழ்வுகளைக் கண்டுள்ளது. என்.டி.ராமராவ் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி உருவான சமயத்திலும் இதே போன்று தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. இத்தகைய கட்சிகள் தொடர்ந்து நீடித்து நிலைத்திருப்பது என்பது அவை பின்பற்றக்கூடிய கொள்கைகள் மற் றும் திட்டங்களையே முக்கியமாக சார்ந்திருக்கின்றன. தில்லியில் அமைந்துள்ள ஏஏபி-க்கும் இது பொருந்தும். 2014ஆம் ஆண்டு சாமானிய மக்களுக்கு சொல்லொண்ணா அளவில் துன்ப துயரங்களை ஏற்படுத்திடும் நவீன தாராள மயப் பொருளாதார சீர்திருத்தங்கள் சம்பந்தமாகவும், நவீன இந்தியாவின் மதச் சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கே மிகவும் அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய வகுப்புவாதம் குறித்தும் ஏஏபி-யின் கொள்கைகளும் திட்டங்களும் தெளிவு படுத்தப்படும் என்று நம்புவோம்.
அடுத்து, நாட்டில் ஆட்சியாளர்களின் கொள்கைகளில் புரட்சிகரமான முறை யில் மாற்றம் எதுவும் வரவில்லையெனில், 2013ல் பெரும்பான்மை மக்கள் மீதுஏற்றப்பட்டுள்ள பொருளாதார சுமை கள் 2014ஆம் ஆண்டிலும் மேலும் உக்கிரமான முறையில் அமைந்திடும் என்றே அஞ்ச வேண்டிய நிலையில் இருக்கிறோம். புத்தாண்டு பிறந்தவுடனே யே மக்கள் மீது மற்றொரு சுற்று எரி பொருள்களின் விலை உயர்வுகள் ஏற்றப்பட்டுள்ளன. உலகப் பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் பாதிப்புகளை நம் மக்கள் மீதும் உடனுக்குடன் ஏற்றுவது என்பது சர்வசாதாரணமான ஒன் றாக மாறிவிட்டது. ஆயினும் உலகப் பொருளாதார நெருக்கடி தொடரும் என்றே தோன்றுகிறது. உலகப் பொரு ளாதாரத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி 2013ல் சரியாகிவிடும் என்று நம்பப்பட்டது. ஆனால் நம்பிக்கைகள் தவிடுபொடியாகி உலகப் பொருளாதாரம் தொடர்ந்து தடு மாறித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகள் தன்னைத் தாக்காதவாறு இந்தியா 2008ல் தன்னை சமாளித்துக்கொண்ட போதிலும், அதனை அடுத்து வந்த ஆண்டுகளில் அதனால் அவ்வாறு செய்ய முடிய வில்லை. தற்போது மிகவும் கடுமையான முறையில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இந்தியாவின் வளங்களையும், சந்தைகளையும் அந்நிய மற்றும் உள் நாட்டு மூலதனம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வகை செய்யக்கூடிய கட்டற்ற பொருளாதார சீர்திருத்தங்களை முற்றிலுமாக மாற்றியமைத்தால் மட்டுமே இத்தகைய நிலைமையையும் மாற்றி அமைத்திட முடியும். அப்போதுதான் நம் நாட்டின் வளங்களை நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும், அதன் மூலம் நம் நாட்டு மக்களின் நலன்களையும் முன்னேற்றிட முடியும்.ஆயினும், பொருளாதாரக் கொள் கைகளைப் பின்பற்றுவதில், அதிலும் குறிப்பாக லஞ்ச ஊழல்களில் ஊறித்திளைப்பதில், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே பெரிய அள வில் வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இவ்விரு கட்சிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதை நாடாளுமன்றத்தில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயல் பட்ட அனுபவமும் உறுதிப்படுத்தியது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வரிசை ஊழலாக இருந்தாலும் சரி அல்லது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழலாக இருந்தாலும் சரி, இவற்றின் மீது ஆழமான முறையில் விவாதம் நடைபெறாது நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீர்குலைக் கப்பட்டதைப் பார்த்தோம். விவாதங்கள் நடைபெற்றிருக்குமானால் வாஜ்பாய் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்களும் வெளிவந்திருக்கும். நவீன தாராளமயக் கொள்கை களை அமல்படுத்துவதிலும், கோடிக் கணக்கான ஊழியர்களின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக்கூடிய விதத்தில் ஓய்வூதிய நிதியத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதாக இருந்தாலும் சரி அல்லது வங்கிகள் தேசிய மயம் என்னும் கொள்கையைக் கை விட்டு, அவற்றைத் தனியாரிடமும் அந் நிய நிதி நிறுவனங்களிடமும் தாரை வார்த்து அதன்மூலம் சர்வதேச நிதி ஊகவர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாக்கப்படும் நடவடிக்கையாக இருந் தாலும் சரி, காங்கிரசும் பாஜகவும் ஒரே பக்கத்தில்தான் இருந்தன.நாட்டில் ஆள்வோரின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற் கானதொரு வாய்ப்பை 2014 நமக்குஅளித்திருக்கிறது.
ஆளும்கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாற்றுக்கொள்கைகளைக் கடைப்பிடிப்போரையும் ஓரணியில் கொண்டு வருவதற்கானதொரு வாய்ப் பாக வரவிருக்கும் பொதுத் தேர்தல்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள், தங்கள் வாழ்வு சிறந்த முறையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்தும் வல்லமை மிக்கவர்களை அரசியல் மாற்றாகக் கொண்டு வருவ தற்கு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மாற்றுக் கொள்கைத் திசைவழி என்பது மக்களுக்கு கருணை வழங்குவது அல்ல, மாறாக உணவுப் பாதுகாப்பு, இலவசமாக சுகாதாரப் பாதுகாப்பு, அனைவருக்குமான இலவசக்கல்வி,வேலை உரிமை அல்லது வேலையில்லாக் காலத்தில் போதிய அளவு நிவார ணம், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி களைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் ஆகிய உரிமைகளை வழங்கிடக் கூடிய விதத்தில் அவை இருந்திட வேண்டும்.
இத்தகைய மாற்றுத் திசை வழி என் பது மனிதாபிமான அடிப்படையில் மட்டு மல்ல, பொருளாதார ரீதியிலும் விரும்பத்தக்கதாகும். இவ்வாறாக மக்களை மேம்படுத்துவதன் மூலம்அவர்களது வாங்கும் சக்தி கணிசமான அளவிற்கு அதிகரித்து அதன் மூலம்மிகவும் உள்நாட்டுத் தேவைகளும் அதிக அளவில் உருவாக்கப்படும். இவை நாட்டின் உற்பத்தி வளர்ச்சிக்கும் உந்து சக்தியாகஅமைந்து வேலைவாய்ப்பும் பெருகுவதற்கு இட்டுச் செல்லும். இவ்வாறு ஒரு சங்கிலித் தொடர்போன்று நாட்டில் நிலையான மற்றும் நேர்மையான வளர்ச்சி அமைந்திடும்.இத்தகைய கொள்கையைப் பின்பற்றிட போதுமான வாய்ப்பு வளங்களுக் கும் நாட்டில் பஞ்சமில்லை.
நாட்டில் அபரிமிதமான அளவிற்கு நடை பெற் றுள்ள ஊழல்கள் தடுக்கப்பட்டும், பணக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகைகள் நிறுத்தப்பட்டும் அவற்றால் அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய தொகை கள் முறையாக வந்திருந்தால் அத்தொகை களை பொது முதலீட்டில் செலுத்தி நம் நாட்டிற்கு மிகவும் தேவையாக இருக்கக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி, அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி இருக்கமுடியும். இத்தகையதொரு மாற்றுக்கொள்கைத் திசைவழியில் பயணிக்கக் கூடிய ஓர் அரசியல் மாற்றுதான் நாட் டிற்குத் தற்போது தேவைப்படுகிறது. இவ்வாறாக, நமக்கு இன்றைய தேவை வெறும் தேர்தல் மாற்று அல்ல, மாறாக ஓர் அரசியல் மாற்றேயாகும். இந்தியா 2014ல் அத்தகையதொரு இடது, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற மாற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
நாம் இந்தப் புத்தாண்டை வாழ்த்துவதன் பொருள் நாம் மக்கள் போராட்டங்களை மிகவும் சக்திமிக்க விதத்தில் வலுப்படுத்துவதன் மூலம் பொதுத் தேர்தலுக்குப் பின் 2014ல் அத்த கையதொரு மாற்றை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதேயாகும்.நாட்டில் நடைபெற்றுள்ள சக்தி வாய்ந்த மக்கள் இயக்கங்களும் போராட்டங்களும் ஆட்சியாளர்களின் கொள் கைகளை மாற்றுவதில் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன என்பது வரலாறு. அத்தகைய வரலாற்றை மீண்டும் இந்த ஆண்டில் உண்டாக்கிட மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயத்தில் நாட்டில் தலைநீட்டும் மதவெறி சக்திகளையும் முழுமையாக முறியடித்திட வேண்டும், அதன் மூலம் நம் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாத்திட வேண்டும். சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிடவும் நம் மக்களுக்குச் சிறந்ததரமான வாழ்க்கையை அளிப்பதற்கும் இது அத்தியாவசியமான தேவையாகும்.
- தமிழில்: ச. வீரமணி
No comments:
Post a Comment