சமீபத்தில் ஐந்து மாநில சட்டமன்றப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல்கள் ஒரு தெளிவான
தீர்ப்பை அளித்திருக்கின்றன. நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை எவ்விதத் தயவுதாட்சண்யமுமின்றி
மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்பதே அந்த செய்தியாகும். வட கிழக்கு மாநிலங்களில்
ஒன்றான மிகவும் சிறிய அளவிலான மிசோரத்தில்
மட்டும் விதிவிலக்காக காங்கிரஸ் தன்னுடைய பெரும்பான்மையைத் தக்க வைத்துக்
கொண்டிருக்கிறது.
ராஜஸ்தானிலும் தில்லியிலும் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியின்
தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் துடைத்தெறியப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில், 21 இடங்களை மட்டுமே, அதாவது மொத்த இடங்களில் பத்து சதவீதத்திற்குக் கொஞ்சம் கூடுதலாக, காங்கிரஸ் பெற்றிருக்கிறது.
தில்லியில் வெறும் எட்டு இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்திருக்கிறது. மொத்த
இடங்களில் இது 11 சதவீதமேயாகும்.
மத்தியப் பிரதேசத்திலும், சட்டீஸ்காரிலும் பாஜக மூன்றாவது தடவையாக ஆட்சி அமைக்கிறது. இவ்விரு
மாநிலங்களிலும், பாஜக கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில்,
13 அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன.
பத்தாயிரம் மக்களை விரட்டி அடித்துவிட்டு அவர்களுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர்
நிலங்கள் கம்பெனிகளுக்கு இனாமாக அளிக்கப்பட்டன. சாமானிய மக்களின் வாழ்நிலைமை,
குறிப்பாக பழங்குடியினர்
நிலைமை, மிகவும்
மோசமான முறையில் சீரழிந்திருக்கிறது. ஆயினும், ஆட்சியாளர்களுக்கு எதிராக அம்மாநிலங்களில்
மக்கள் மத்தியில் நிலவிவரும் அபரிமிதமான அதிருப்தியை ஒன்றுபடுத்தி ஓர் எதிர்ப்பினை
நல்கி அதனை முறியடித்திட காங்கிரஸ் கட்சி பரிதாபமானமுறையில் தோல்வியே அடைந்திருக்கிறது. பாஜகவுக்கு மாற்றாக
காங்கிரசைத் தேர்ந்தெடுக்க மக்கள் மறுத்துவிட்டார்கள். ஏனெனில், அதன் யோக்கியதையும்,
அதன் நடவடிக்கைகளும்
மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு இல்லை. மாறாக, மத்தியில் ஆட்சி செய்யும்
காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமானது, அனைத்துப் பொருள்களின் விலைகளும் மட்டுமீறிய
அளவில் உயர்த்தி இருப்பதாலும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு
மிகப் பெரிய அளவில் ஊழல் சகதியில் திளைத்துக் கொண்டிருப்பதாலும் மக்களின் கடும் விமர்சனத்திற்கு
ஆளாகியிருக்கிறது. இதே நிலைமைதான் சட்டீஸ்காரிலும்
இருக்கிறது.
இந்த நான்கு மாநிலங்களிலும் வெகு காலமாகவே பாஜக-வும் காங்கிரசும்தான் ஆதிக்கம்
செலுத்தி வருகின்றன. மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு எதிராக மிகவும் வலுவான முறையில்
மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை பாஜக இத்தேர்தல்களில் நன்கு அறுவடை செய்துகொண்டுவிட்டது.
ஆயினும் தில்லியைப் பொறுத்தவரை, ஒரு புதிய அம்சம் உருவாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி
முழுமையாகத் துடைத்தெறியப்பட்டபோதிலும், பாஜக தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றிட முடியவில்லை.
இதற்குக் காரணம் சாமானியன் என்று பொருள்படும் ஆம் ஆத்மி கட்சி 30 சதவீத வாக்குகளைப் பெற்று
28 இடங்களில்
வெற்றி பெற்றிருப்பதாகும். ஏஏபி எனப்படும் ஆம் ஆத்மி கட்சி மத்தியத் தர வர்க்கத்திடமும்,
நகர்ப்புற ஏழைகள் மற்றும்
தலித்துகளில் கணிசமான பகுதியினரிடமிருந்து ஆதரவினைப் பெற்றிருப்பதே இவ்வெற்றிக்குக்
காரணமாகும். தில்லி தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன? எங்கெல்லாம் காங்கிரசுக்கும்,
பாஜகவிற்கும் பயனளிக்கக்கூடிய விதத்தில் ஒரு மாற்று இருக்கிறதோ
அங்கெல்லாம் மக்கள் அதனை ஆதரிப்பார்கள் என்பதேயாகும். ஏஏபி கட்சியின் அரசியல் தீர்மானம் என்ன, அது தன் ஆதரவு தளத்தை எப்படி ஒருமுகப்படுத்த
இருக்கிறது என்பது குறித்தெல்லாம் இனிவருங்காலங்களில்தான் தெரிய இருக்கின்றன.
ஊடகங்கள், நடந்துமுடிந்த இத்தேர்தல்களை, மக்களவைத் தேர்தலுக்கான ஒரு ’’அரை இறுதி’’ (“ளநஅi-கiயேட”) என்று வர்ணித்துள்ளன. சில நோக்கர்கள், பாஜக-வால் மோடி பிரதமர் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள தேசிய அளவிலான சிந்தனைப்போக்கு என்று கூட சித்தரித்திருக்கிறார்கள்.
இத்தகைய கருத்துக்கள் மிகவும் எளிமைப் படுத்தப்பட்டவை மட்டுமல்ல, பிழையானவை களுமாகும். இந்தத் தேர்தல்கள், பொதுத் தேர்தலுக்கான ஓர் ’’அரை இறுதி’’ அல்ல என்பதை முதலிலேயே சொல்லிக்
கொள்கிறோம். தேர்தல் நடைபெற்ற நான்கு மாநிலங்களில் மக்களவைக்கான இடங்கள் வெறும் 72 தான். அதாவது மொத்த மக்களவை
இடங்களில் வெறும் 13 சதவீதம் மட்டுமேயாகும். எனவே இவற்றை வைத்து தேசிய அளவிலான சிந்தனைப் போக்கை மதிப்பிடுவது
என்பது பிழையானதும் தவறானதுமாகும். 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களின்போதுகூட
பாஜக இந்த 72 இடங்களில் பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தது. ஆயினும் அப்போதும் கூட தேசிய
ஜனநாயகக் கூட்டணி தேர்தல்களில் தோல்வியே அடைந்தது.
மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு எதிரான சிந்தனைப்போக்கு வலுவாக இருக்கிறது என்று
நிச்சயமாகக் கூற முடியும். காங்கிரஸ் அல்லது பாஜக என்று நிலவுகிற இந்த நான்கு
மாநிலங்கள் போல் அல்லாது மற்ற மாநிலங்களில் இத்தகைய நிலைமை கிடையாது. அங்கெல்லாம் போட்டி
என்பது காங்கிரசுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் அல்லது இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையிலானதாகும். சில
மாநிலங்களில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இம்மாநிலங்களில் பெரும்பாலானவற்றில்,
காங்கிரசுக்கு எதிரான
மக்கள் சிந்தனையோட்டத்தால் ஆதாயம் அடைவது பாஜக-வாக இருக்க முடியாது, மாறாக காங்கிரஸ் அல்லாத
மற்றும் பாஜக அல்லாத கட்சிகள்தான். காங்கிரசுக்கு எதிராக மிகவும் உக்கிரமானமுறையில்
வாக்களித்துள்ள மக்கள் அவ்வாறு வாக்களித்ததற்கான காரணம், காங்கிரசின் கொள்கைகளை எதிர்த்துத்தான்.
இக்கொள்கைகள்தான் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் போன்றவற்றால் அவர்களது வாழ்வில்
சொல்லொண்ணாத் துன்ப துயரங்களைக் கொண்டுவந்துள்ளன. இவற்றுக்கு மாற்றாக பாஜகவிடமும் எந்தக்
கொள்கையும் கிடையாது. தேவை என்னவெனில், மாற்றுக் கொள்கைகளை அடிப்படையாக் கொண்ட ஒரு மதச்சார்பற்ற
ஜனநாயக மாற்றேயாகும்.
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment