Saturday, November 2, 2013

சிறப்பு மாநாடு மகத்தான வெற்றி




மதவெறிக்கு எதிராக, மக்கள் ஒற்றுமைக்காக விடுக்கப்பட்ட அறைகூவலுக் கிணங்க நடைபெற்ற சிறப்பு மாநாடு மகத்தான வெற்றி பெற்றிருப்பதன் மூலம் மதவெறி சக்திகள் தொடர்ந்து மேற் கொண்டுவரும் தாக்குதல்களிலிருந்து இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பினைப் பாதுகாப்பதற்கு எவ்வித ஊசலாட்டமுமில்லாது மிகவும் தெளிவான அறைகூவலை விடுத்துள்ளது. மக்கள் நலன்களைக் காத்திடவும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவசிய மான மாற்றுக் கொள்கையை வகுப்பதற்கு தளம் அமைக்கும் விதத்திலும் இச்சிறப்பு மாநாடு அமைந்தது. சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற பதினான்கு அரசியல் கட்சி களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அல்லாது, பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற அறிவுஜீவிகள் பலரும் சிறப்பு மாநாட்டின் குறிக்கோளுடன் தங்களை இணைத்துக் கொண்டு மாநாட்டில் பங்கேற்றார்கள். நாட்டின் புகழ்வாய்ந்த வர லாற்றாசிரியரும், அறிஞருமான இர்பான் ஹபீப் சிறப்பு மாநாட்டைத் துவக்கி வைத்த தன்மையே, இந்தியாவை எந்த மதவெறி சக்திகளும் சிதைத்திட அனுமதி யோம் என்று கட்டியம் கூறும் வகையில் அமைந்திருந்தது. மதவெறிக்கு எதிரான மக்கள் ஒற்று மைக்கான அறைகூவலை நாடு முழுவதும் இதுபோன்ற சிறப்பு மாநாடுகள் மற்றும் வெகுஜனங்களின் அணிதிரட்டல்கள் மூலம் முன்னெடுத்துச் செல்வோம் என்கிற சிறப்பு மாநாட்டின் செய்தி மிகவும் தெளிவானது.

மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் அத்தகையதோர் அறை கூவலை விடுத்துள்ளது. சிறப்பு மாநாடு நடைபெற்ற தல்கோடரா அரங்கில் திரண் டிருந்த அனைத்துக் கட்சித் தொண்டர் களும், தங்கள் இரு கரங்களையும் உயர்த்தி தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர். மேலும், சிறப்பு மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே, நாட்டின் பல முனைகளிலிருந்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களிடமிருந்து மாநாட்டை வாழ்த்தியும், எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சாரங்களில் தங்களையும் இணைத்துக் கொள்வதாகக் கூறியும் செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.

தற்போது ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியக் காங்கிரஸ் கட்சியும் இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்றதானது, மாநாட்டில் பங்கேற்ற கட்சிகளுடன் கட்சி களின் பட்டியல் `முடிந்துவிட வில்லை என்பதையும், எதிர்காலத்தில் குறிப்பிடத் தக்க அளவிற்கு அது மேலும் விரிவடை யும் என்பதையுமே பிரகடனம் செய்துள் ளது. அதுமட்டுமல்ல, நாட்டில் அதிக அள வில் மக்கள் வாழும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் ஆட்சியில் உள்ள மாநிலக் கட்சிகளும், மற்றும் இரு முக்கிய மாநிலங் களான ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் ஆட்சி புரியும் கட்சிகளும் வரவிருக்கும் காலங்களில் இத்தகைய ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று ஆர்வத் துடன் அறைகூவல் விடுத்துள்ளன.மாநாட்டில் நாட்டின் பல்வேறு திசை களிலும் செயல்படும் கட்சிகள் பங்கேற்ற தானது நாட்டின் சமூகக் கலாச்சாரங்கள் வேறுபட்டிருந்தாலும், அவற்றிற்கிடையி லான ஒற்றுமையினைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

அசாம் மாநிலத்தில் முன்னாள் ஆளும் கட்சியாக இருந்த அசாம் கண பரிசத், ஜார்கண்ட் மாநிலத் தின் முன்னாள் முதல்வர் மற்றும் பல் வேறு தலைவர்கள் கலந்து கொண்டிருப் பது, நம் நாட்டின் பன்முகக் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற கட்சிகள் அனைத்துமே, இவ்வாறு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பை மட்டுமல்ல, நாட்டை மேலும் வலுவானதாகவும், வள மிக்கதாகவும் மாற்றுவதற்கு ஒன்றுபட்டு முன்னேற வேண்டும் என்கிற உறுதியை யும் வெளிப்படுத்தியுள்ளன. மாநாட்டில் பங்கேற்ற அனைவருமே, ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் தற்போது செய்துவரும் மதவெறி நச்சுப் பிரச்சாரத் தை மிகவும் தாக்கிப் பேசினார்கள். உதா ரணமாக, ஆர்எஸ்எஸ்/பாஜக கூடார மானது இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேலை (தவறாய்) பயன்படுத்திக்கொள்ள முயற்சி கள் மேற்கொண்டிருப்பதைக் கடுமை யாகச் சாடினார்கள். சுதந்திரப் போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் அதிலிருந்து ஒதுங்கி இருந்ததை அவர்கள் அம்பலப் படுத்தினார்கள்.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப் பட்டதை அடுத்து, ஆர்எஸ்எஸ் இயக்கத் திற்குத் தடையைக் கொண்டுவந்தது இதே சர்தார் படேல்தான் என்பதை இங்கே நினைவுகூர்வது அவசியமாகும். 1948 பிப்ரவரி 4 அன்று சர்தார் படேலால் வரையப்பட்ட அரசின் செய்திக்குறிப்பு ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்து அறிவித்தபோது அச்செய்திக் குறிப்பில் கூறியிருந்ததாவது:சங் பரிவாரத்தின் ஆட்சேபணைக் குரிய மற்றும் ஊறுவிளைவிக்கக்கூடிய நடவடிக்கைகள் முழுவீச்சுடன் தொடர் கின்றன. சங் பரிவாரத்தின் வன்முறைக் கலாச்சாரம் பல உயிர்களைப் பலி கொண்டுவிட்டது.

இதற்குப் பலியான மிகவும் சமீபத்திய, மிகவும் விலைமதிக்க முடியாத உயிர் காந்திஜியினுடையதாகும்.’’உண்மை இவ்வாறிருக்கையில் எப் படி அவர்கள் படேலைப் பயன்படுத்து கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக் கிறது. 1948 நவம்பர் 14 அன்று படேலின் கீழ் செயல்பட்ட உள்துறை அமைச்சகம் ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல் வால்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த் தைகள் குறித்து ஒரு பத்திரிகைக் குறிப் பை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேச்சு வார்த்தையின்போது கோல்வால்கர் வஞ்சகமான முறையில் சமரசங்கள் பலவற்றைச் செய்துகொண்டார். ஆர்எஸ் எஸ் தலைவர்கள் வெளியே சொல்வதற் கும், உண்மையில் அதன் தொண்டர் களின் நடைமுறைக்கும் எவ்விதச் சம் பந்தமும் இல்லை’’ என்பதையே இவரது வாக்குறுதிகள் நமக்குத் தெரிவிக்கின்றன என்று கூறி, தடையை நீக்க மறுத்து அந் தப் பத்திரிகைக் குறிப்பு வெளியிடப் பட்டது.மேலும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய் திடுமாறு சர்தார் படேலிடம் கோல்வால் கர் கோரியிருந்தார்.

இந்த வேண்டு கோளையும் சர்தார் படேல் நிராகரித்து விட்டு, அவரை நாக்பூருக்குத் திருப்பி அனுப்பிட படேல் கட்டளையிட்டார். 1949 ஜூலை 11 அன்றுதான், அரசாங்கத்தின் தரப்பில் விடுக்கப்பட்ட அனைத்து நிபந் தனைகளையும் ஏற்றுக்கொண்ட பின்னும், வன்முறைக் கலாச்சாரத்தைக் கைவிட்டுவிடுவோம்’’ என்றும், சதி வேலைகளில் இறங்கமாட்டோம்’’ என் றும் வெறும் கலாச்சார அமைப்பாக மட்டும் செயல்படுவோம்’’ என்றும் எழு திக் கொடுத்த பின்னர்தான் ஆர்எஸ்எஸ் மீதான தடை நீக்கப்பட்டது.சர்தார் படேலை இவ்வாறு தவறாகப் பயன்படுத்திக்கொள்வது என்பது இந்திய வரலாற்றை, இந்து தேசம்’’ என்கிற தங்களது குறிக்கோளுக்கு ஏற்றபடி திருத்தி எழுத வேண்டும் என்ற ஆர்எஸ் எஸ் கூடாரத்தின் ஒட்டுமொத்த குறிக் கோளின் ஒரு பகுதியேயாகும்.

இது, இன் றைய நவீன இந்திய மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசை, தங்களுடைய இந்து ராஷ்ட்ரம்’’-ஆக மாற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியேயாகும், பாசிச நடைமுறைகளின் மூலம் நாட்டில் மதவெறியை கூர்மைப்படுத்தப் படுவதும், இந்து ராஷ்ட்ரம்’’ என்னும் ஆர்எஸ்எஸ் திட்டம் வெற்றி பெறுவது என்பதானது இந்திய அரசியல் அமைப் புச் சட்டம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அளித்திருக்கின்ற கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை சவக் குழிக்கு அனுப்புவது என்று பொருளாகும். இவ்வாறு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடே ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் நடவடிக்கைகளால் இடருக் குள்ளாகி இருக்கின்றன. நாம் பல்வேறு சமூக-கலாச்சார-மதத்தினராக இருந் தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் வளமான சமூக அமைப்பே ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது.

சிறந்த தோர் இந்தியாவை உருவாக்குவதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுத் துச் செல்ல வேண்டும் என்றால் இவர் களின் இத்தகைய இழி முயற்சிகளை அனுமதிக்கக் கூடாது. இச்சிறப்பு மாநாடானது, வரவிருக்கும் பொதுத்தேர்தல்களின்போது காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத, அரசியல் மாற்றை உருவாக்கி அறிவித்திடும் என்று ஊடகங்களில் பெரும்பாலானவை ஊகங்களை வெளியிட்டிருந்தன. நமது எதிர்காலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ள மதவெறிக்கு எதிராக மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவதுதான் மாநாட்டின் பிரதான குறிக்கோள் என்று மாநாடு தெள்ளத் தெளிவாக்கி விட்டது. மாநாட்டின் செய்தி இப்போது நாடு முழுவதற்கும் விரிவான அளவில் எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)


No comments: