Tuesday, November 19, 2013

இந்திய வரலாற்றை திரித்தல்:எத்தனை செண்டுகள் பூசினாலும் உங்கள் கைகள் மணக்காது


2014 பொதுத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மிகவும் விபரீதமான முறையில் நம்முடைய வரலாற்றை மாற்றியமைப்பதற்கான முயற்சி களும் நடந்து கொண்டிருக்கின்றன. ‘‘மனி தர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆயினும் அது அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட சூழ்நிலைகளில் அல்ல’’ என்று மாமேதை மார்க்ஸ் ஒருதடவை சொல்லி இருந்தார். அந்தச் சூழ்நிலைகள் அவர்களுக்கு ஆதரவானதாக இல்லாமல் இருக்கலாம், உண்மையில் நாம் சுதந்திரம் பெற்ற சமயத் தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு ஆதரவான நிலையில் சூழ்நிலைமைகள் இல்லாமல் தான் இருந்தது.
எனவேதான் நாம் இந்தியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியபோது, ஆர்.எஸ்.எஸ் கூடாரம் இந்தியாவை ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன் மையற்ற பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரமாகமாற்றிட சாதகமான சூழ்நிலை இருப்பதாக அனைவரையும் நம்ப வைப்பதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டன. நம் நாட்டில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் அவற்றுக் கிடையிலும் ஒற்றுமையுடன் வளர்ந்து வந்த நம் நாகரிக வரலாற்றைச் சிதைத்தும், திரித் தும் கூறுவதன் மூலம் மட்டுமே அவ்வாறு சூழ்நிலை இருந்தது என்று மக்களை நம்ப வைக்க முடியும்.
இந்தியாவில் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள், இந்துக்கள் மட்டுமே, எவ்வித இடையூறு மின்றி மிகவும் பெருமைகொள்ளும் விதத் தில் வாழ்ந்தார்கள்என்று இந்தியாவின் வர லாற்றைச் சித்தரிப்பதன் மூலம் மட்டுமே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். தற் போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்பும் இந்து ராஷ்ட்ரமாகமாற்றுவதற்கான அவர்களு டைய தத்துவார்த்த அடித்தளங்களின் மையக்கூறு இதுவேயாகும். இந்தியாவின் வரலாற்றை அவர்கள் விரும்பும் வண்ணம் திரித்து மாற்ற முயலும் போது ஆர்.எஸ்.எஸ். பல்வேறு பிரச்சனை களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றிற்கான சாட்சியங்கள் பலவற்றை இதற்காக அது மாற்றிட வேண்டிய கட்டாயத் திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இவற்றில் மிக வும் முக்கியமான பகுதி என்பது இந்திய மக்க ளின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத் தில் ஆர்.எஸ்.எஸ். முழுமையாகவே பங்கேற் காது ஒதுங்கி இருந்ததாகும்.
இவ்வாறு ஒதுங்கி இருந்ததற்கான காரணங்களை மக்கள் மத்தியில் விளக்க முடியா நிலையில் அது இருக்கிறது. ஒருகாலத்தில் அவர்களு டைய தத்துவ ஆசானாக விளங்கிய நானாஜி தேஷ்முக் தன்னுடைய புத்தகமொன்றில் ஆர் . எஸ்.எஸ். இந்திய விடுதலைப் போராட்டத் தில் பங்கேற்காமல் விலகி இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் இந்து மத உணர்ச்சிகளை மக்கள் மத்தியில் விசிறிவிட இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் காரண மாக, முஸ்லீம் லீக் கட்சியும் முஸ்லீம்கள் மத்தியில் மத உணர்வைக் கிளப்பிவிடுவதற் கும் அதன் மூலம் பிரிட்டிஷார் தங்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் பங்களிப் பினைச் செய்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் சம்பந்தப் பட்ட நபர் ஒருவர் விடுதலைப் போராட்டத் தில் கலந்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டுமானால் ஒரேயொரு வரைத்தான் சொல்ல முடியும். அது வி.டி. சாவர்கர் மட்டுமேயாகும். இந்துத்துவா கொள்கைப் பிடிப்புள்ள வரலாற்றாசிரியர் ஆர்.சி. மஜும்தார் அந்தமான் செல்லுலர் சிறைகளில் இருந்தவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து ஆவணப்படுத்தியுள்ளார்.
அவ்வாறு அவர் எழுதியுள்ளதில் வி.டி.சாவர் கர்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பிரிட்டிஷாரிடம் எவ்வாறெல்லாம் கூழைக் கும்பிடு போட்டுள் ளார் என்பதை விவரித்துள்ளார். இந்த சாவர் கர்தான் இந்து மகா சபைக் கூட்டம் ஒன்றில் தலைமையுரை ஆற்றுகையில் இந்தியாவில் இரு தேசங்கள் இருக்கின்றன, அவை இந்து மற்றும் இஸ்லாமிய தேசங்கள் என்று முதன் முறையாக ஒரு கருத்தை முன்வைத்தார். முகமது அலி ஜின்னா தன்னுடைய இரு தேசக்கொள்கையை முன்வைத்து நடை முறைப்படுத்த முயல்வதற்கு ஈராண்டுகளுக் கும் முன்பே வி.டி.சாவர்கர் இவ்வாறு கூறி னார். இவ்வாறான இவர்களுடைய இரு தேசக் கொள்கையை பிரிட்டிஷார் நன்கு பயன்படுத்திக் கொண்டு, நாட்டைப் பிரித் திடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி னர். அதேபோன்று இந்துத்துவாஎன்ற சொல்லையும் உருவாக்கியது வி.டி.சாவர்கர் தான். அவ்வாறு இந்தச் சொல்லை அவர் உரு வாக்கும்போது இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு என்றும் இரண்டுக்கும் அநேகமாக எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் கூறி னார்.
மேலும் இந்து தேசத்தை உருவாக்கிட அவர் ஒரு கோஷத்தை முன்வைத்தார். அதா வது, ‘‘ராணுவத்தை இந்துமயமாக்குங்கள், இந்து தேசத்தை ராணுவமயப்படுத்துங்கள்’’ என்றார். இந்தக் கோஷம்தான் இந்துத்வா பயங்கரவாதத்தின் சமீபத்திய நிகழ்வுகளுக் கும் உந்துசக்தியாக இருந்திருக்கிறது.இந்தக் குறிக்கோளை இந்துத்வாவாதி கள் எய்த வேண்டுமானால், மதவெறியைக் கூர்மைப்படுத்துவதுடன், நாட்டின் வரலாற் றையும் மிகப்பெரிய அளவிற்கு மாற்றி எழுத வேண்டியது அவசியமாகும். ‘‘நாங்கள் மத்தி யில் ஆட்சிக்கு வரும்போது, பாடப்புத்தகங் களை மாற்றி எழுத இருக்கிறோம்’’ என்று பாஜகவின் முன்னாள் தலைவர் ஒருவர் பேசியதை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின் றன. (இந்துஸ்தான் டைம்ஸ், 2013 ஜூன் 24). ‘‘இவ்வாறு செய்வதற்கு முன்பும் முயற்சித் தோம், மீண்டும் முயற்சிப் போம்’’ என்று அவர் கூறியிருக்கிறார். அன் றைய தினமே அத்வானியும், ‘‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத் திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது விதியை ரத்து செய் வதற்காக நாடு இன்னமும் காத்துக் கொண்டி ருக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் கூடாரம், சர்தார் வல்லபாய் பட்டேலைத் தவறாகப் பயன்படுத்த மேற் கொண்டுள்ள சமீபத்திய முயற்சிகள் ‘‘இந்து தேசம்’’ என்னும் தங்கள் குறிக்கோளை உயர்த்திப் பிடிப்பதற்காக இந்தியாவின் வர லாற்றைத் திருத்தி எழுதுவதற்கான ஒட்டு மொத்த முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்து சர்தார் பட்டேல் வெளியிட்ட அறிக்கை குறித்து இப்பகுதியில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். சர்தார் பட்டேல் ஆர்.எஸ்.எஸ்-இன் மதவெறி சித்தாந்தத் திற்கு முற்றிலும் எதிரானவர் என்பதையே இது காட்டுகிறது.
ஆயினும் பாஜக சார்பில் பிரதமர் வேட் பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர், வரலாற்றை எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி சிதைத்தும் திரித்தும் ‘‘தங்களுக்கு சாதகமான சூழ்நிலை யை’’ உருவாக்குவதற்காக, அவசரகதியில் புதிதாக ஒரு வரலாற்றை உருவாக்கமுயல்வது போலவே தோன்றுகிறது. சர்தார் பட்டேலின் புரவலர் என்று தன்னைச் சித்தரிக்க முயற் சிப்பதுடன், பாட்னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் மோடி, தட்சசீலம் (தற் போது அது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கிறது) பீகாரில் இருந்ததாக உரிமை கொண்டாடி யிருக்கிறார். அவர் மேலும், பீகாரில் கங்கை நதிக்கரை யோரம்தான் அலெக்சாண்டர் இறந்தார் என்றும் கூறி யிருக்கிறார். என்னே ஆச்சர்யம்! பின்னர். ஒரு நேர்காணலின்போது, ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேலுடன் தங்களுக்குள் தீர்க் கப்பட முடியாத அளவிற்கு அரசியல் கருத்து வேறுபாடுகளின் காரணமாக, சர்தார் பட்டே லின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளா மல் ஒதுங்கி இருந்தார் என்று அளந்திருக் கிறார். பின்னர் இந்த உண்மையின்மையை பல்வேறு தரப்புகளில் இருந்தும் வந்த தாக்கு தலைத் தொடர்ந்து அவர் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
அதேபோன்று, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உண்மையில் இறந்ததற்கு இருபதாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் என்று கூறியது குறித்தும், அவர் குஜராத்தின் பெருமைமிகு புதல்வர் என்றும் கூறியிருந்தார். இவ்வாறு வரலாற் றைத் திரித்துக் கூறியமைக்காக மீண்டும் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல, இதே போன்று எல்.கே.அத்வானியும் வரலாற்றைத் திரிக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டி ருக்கிறார். எம்.கே.கே.நாயர் என்பவர் எழுதிய புத்தகம் ஒன்றை மேற்கோள்காட்டி, ஹைத ராபாத் மாகாணத்தில் போலீஸ் நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது பட்டேலை நேரு ஒரு வகுப்புவாதிஎன்று அழைத்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால் உண்மை வரலாறு என்ன? அத்தகையதோர் அமைச்சரவைக் கூட்டம் 1948 ஏப்ரலில் நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் திருவாளர் எம்கேகே நாயர் ஐஏஎஸ் அதிகாரி யாகப் பணியில் சேர்ந்ததே 1949இல்தான். மேலும், அத்வானி, அப்போது இந்திய ராணுவத் தளபதியாக இருந்த சர் ராய் புச்சர் என்பவர், 1948 செப்டம்பரில் ஹைதராபாத் தில் நடைபெற்ற போலீஸ் நடவடிக்கை தொடர்பாக மற்றொரு வெள்ளைக்காரனான பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு சில தகவல்களைக் கசிய வைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு அதற்காக ராஜினாமா செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டார் என்றும் கூறியிருக்கிறார். இதுவும் உண்மையல்ல. மேற்படி புச்சர் 1949 ஜனவரி 15 வரை, அதாவது ஜெனரல் கரியப்பா பொறுப்பேற்கும் வரை, ராணுவத் தளபதியாக தொடர்ந்து பணி யாற்றி இருக்கிறார்.
இதுபோல் எல்.கே. அத் வானியும் தன் பங்கிற்கு வரலாற்றைத் திரித் தும் சிதைத்தும் கூறிக் கொண்டிருக்கிறார். தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தங்கள் சித்தாந்தமான ஓர் இந்து ராஷ்ட்ரமாகமாற்றுவதற்காக, இவர்கள் இவ்வாறு என்னதான் வரலாற் றைச் சிதைத்திடவும் திரித்திடவும் முயற்சி கள் மேற்கொண்டாலும், நம் நாட்டின் ஒற்று மையையும் ஒருமைப்பாட்டையும் குலைப்ப தில் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் வெற்றி பெற முடியாது. சிறந்ததோர் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை உருவாக்குவதற்காக நடைபெற்று வரும் மக்கள் போராட்டங் களையும் இவர்களால் தடுத்து நிறுத்திவிட முடியாது. நம் மக்களுக்காக சிறந்ததோர் இந் தியாவை உருவாக்குவதற்கான முக்கியமான பிரச்சனையிலும், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடா ரம் மவுனம் சாதிக்கிறது. ஏனெனில், நாட்டு மக்களில் பெரும்பான்மையோருக்குத் துன் பங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தி வரும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங் களை இக்கூட்டமும் தாங்கிப் பிடிப்பதேயாகும்.
(தமிழில்: ச.வீரமணி)

Friday, November 8, 2013

தேர்தல் கருத்துக் கணிப்பு



தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கணிப்பு வெளியிடுவதைத் தடை செய்வது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் கருத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் கோரியிருப்பது குறித்து மிகப் பெரிய அளவில் பெருங்கூச்சல் எழுந் துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும், ஊடகங்களில் சில பிரிவினரும் இவ்வாறு தேர்தல் ஆணையம் கோரியிருப்பதை, பேச்சுசுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் மீதுமானமட்டு மீறிய தாக்குதல் என்று கூறியிருக்கின்றன.

இந்தப் பின்னணியில் இது தொடர்பாக சில விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.முதலாவதாக, இதுபோன்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் கருத்தைக்கோருவது முதல் முறை அல்ல. பத்தாண்டுகளுக்கு முன்பு, அரசியல் கட்சிகளுடன் இதுபோன்று கருத்துக்களைக் கேட்டறிந்த பின்புதான் தேர்தல் ஆணையம், தேர்தல் நாளன்று வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் கருத்து கேட்டு வெளியிடுவதற்கு (நஒவை யீடிடடள) தேர்தல் நடைமுறைகள் தொடங்கி அது முடியும் வரை வெளியிடக் கூடாதுஎன்று தடை விதிக்கப்பட்டது.

ஏனெனில் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கையில், அந்த சமயத்தில்இவ்வாறு ஒரு பகுதியில் வாக்களித்தவர்களி டம் கருத்து கேட்டு வெளியிடுவது என்பது, அது சரியானதாகவும் இருக்கலாம் அல்லது சரியற்றதாகவும் இருக்கலாம், அடுத்தடுத்து வாக்களிக்க இருக்கிற வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கை செலுத்திடும் என்ப தால் அவ்வாறு தடை விதிக்கப்பட்டது. அப்போதும்கூட, தேர்தல் கணிப்பு குறித்த பிரச்சனை எழுந்தது. ஆயினும் அப்போது இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இரண்டாவதாக, மக்களுக்கு அவர்கள் தகவல் பெறும் உரிமையை மறுப்பதாக இப்போது பாஜக இவ்வாறு கூச்சல் போடுவதுஉண்மையில் விசித்திரமாக இருக்கிறது.கருத்துக் கணிப்பு என்பது தகவல் தரும்விஷயம் கிடையாது.

அந்தப் பெயரே குறிப்பிடுவதுபோல அது கருத்துக்கள் (opinions)தான். இவ்வாறு கருத்துக்கள் கூறுவதே வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். வரையறைகளின்படியே கூட, கருத்துக் கணிப்புகள் என்பவை நடுநிலையான தகவல்களும் அல்ல, அல்லது, பாரபட்சமற்ற முறையில் அளிக்கப்படும் செய்திகளும் கிடையாது. மேலும், 2004 பொதுத் தேர்த லுக்குப் பின்பு இதேபோன்றதொரு நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் நடத்தியபோது, பாஜக இப்போது கூறுவதற்கு நேர் எதிரான கருத்துக்களை அப்போது கூறியது.

அதாவது தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான பின்னர் கருத்துக் கணிப்பு வெளி யிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொது ஆவணத்தில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: தேர்தலுக்கான தேதி மற்றும் தேர்தல் பணிகள் முடிவுறும் வரையிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின்பு தேர்தல்கள் குறித்துக் கருத்துக் கணிப்பு மேற்கொள்வதோ அவற்றை வெளியிடுவதோ அனுமதிக்கப்படக் கூடாது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமனதான கருத்தாக இருந்தது.’’(முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்தங்கள்: தேர்தல் ஆணையத்தின் ஆவணம், ஜூலை 2004).

எனவே, பாஜக 2004ஆம் ஆண்டு, வாக் காளர்களைக் கவர்வதற்காக தேர்தலுக்கு முன்பு மோசடியான கருத்துக் கணிப்புகள் மூலம் நடவடிக்கைகளில் இறங்கியதும், ஆயி னும் அது தோல்வியடைந்ததால், அத்தகைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடக்கூடாது எனத் தடை விதிக்கக் கோரியதும் தெள்ளத்தெளிவான ஒன்று. கருத்துக் கணிப்புகள் என்பவை பாரபட்சமற்றமுறையில் கருத்துக்களைத் தருவதற்குப் பதிலாக, ஒரு சில கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தின் உத்திகளாக உபயோகப்படுத்தப்படுகிறது என்கிற எதார்த்தத்தை இது காட்டிக்கொடுத்தது. மூன்றாவதாக, மேற்கத்திய நாடுகளின் ஜனநாயகம் இத்தகைய முறையை அனு மதிக்கும்போது, ஏன் அத்தகைய உரிமையை இந்திய மக்களுக்கு மறுக்க வேண்டும் என்று சில ஊடகங்கள் விவாதக்கின்றன. இதுவும் சரியான கூற்று அல்ல. பல மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் தேர்தல் நாளுக்கு முன்பு தங்கள் கருத்துக்களை பிரதிபலித்தல் என்னும் முறை அல்லது மவுனமாக இருத்தல் என்னும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஸ்பெயினில் இவ்வாறு மவுனமாக இருக்கும் தினத்தை, பிரதிபலித்தல்’’ என்று அழைக்கிறார்கள்.

இத்தாலியில் இத்தகைய தடை உத்தரவு பதினைந்து நாட்களுக்கு நீடிக்கிறது. நியூசிலாந்து நாட்டில் தேர்தல் நாளன்று சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேற்கத்திய ஜனநாயக நாடும் வாக்களிக்கும் நாளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குப் பிரச்சாரம் செய்வதற்குத் தடை விதித்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இன்றைய வரையில், தேர்தல் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பிரச்சாரம் செய்வது முடித்துக் கொள்ளப்படுகிறது. தேர்தல் சம்பந்தமான நடத்தை விதி தேர் தல் நாளுக்கு 40 நாட்களுக்கு முன்பு தொடங்கிவிடுகிறது. இந்தக் காலத்தில் அரசாங்கங்கள் வாக்காளர்களை வரம்புமீறிய முறையில் ஈர்க்கும் விதத்தில் எவ்வித சலுகையையும் அறிவிக்கக் கூடாது. அதே போன்று வாக்காளர்களிடம் முறையற்ற முறையில் செல்வாக்கு செலுத்தும் விதத்தில் வெறித்தனமான பிரச்சாரத்திலும் எந்தக் கட்சியும் ஈடுபடக் கூடாது. எனவே, தடை கள் விதிப்பது என்பது ஒன்றும் புதிதல்ல.

இவை, வாக்காளர்களை, தவறான மற்றும் கட்சிகளின் மிகைப்படுத்தப்பட்ட பிரச் சாரத்திலிருந்து பாதுகாத்திட உதவின. நான்காவதாக, கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்று எந்தவொரு சுதந்திரமாக இருந்தாலும் அதற்கான உரிமை முற்றிலும் சுயேச்சையானதாக இருந்திட வேண்டும். அந்த உரிமைக்காக ஏதேனும் விலை கொடுக்க வேண்டியிருக்கிறதெனில், பின் அது ஒரு சுதந்திரம் என்று கூறுவதற்கில்லை. இன்றைய இந்தியாவில் காசு கொடுத்து செய்தி வெளியிடுவது என்னும் நோய் பல்கிப் பெருகியுள்ள நிலையில், பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் சுதந்திரம் என்னும் உரிமைகள் மிகப்பெரிய அளவில் சிதைக்கப்பட்டு பாரபட்சமற்ற முறையில் உண்மை செய்திகளை மக்களுக்குத் தெரிவிப்பது என்பது அநேகமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வித பழிபாவத்திற்கும் அஞ்சாது கொள்ளை லாபம் ஈட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளவர்களின் பலிபீடத்தின் முன் பாரபட்சமற்ற முறையில் உண்மை செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற செயல் சில சமயங்களில் பெரிய அளவிற்கு பலிகொடுக்கப் பட்டுவிடுகிறது.

இத்தகைய நிலைமைகளில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் வாக்காளர்களிடம் தவறான முறையில் செல்வாக்கு செலுத்தக்கூடிய விதத்தில் கருத்துத் திணிப்பை ஏற்படுத்தும் வேலைகளும் மிகப்பெரிய அளவிற்கு நடக்கின்றன. எனவே, இன்றைய இந்தியாவின் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட சுதந்திரத்தின் மீது போதுமான அளவிற்குத் தடைகள் விதிக்க வேண்டியது குறித்து மிகவும் ஆழமானமுறையில் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய சூழ்நிலையில், கருத்துக் கணிப்பை முற்றிலுமாகத் தடை செய்யக் கூடாது என்று சொல்கிற அதே சமயத்தில், அத்தகைய கருத்துக் கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு, அதாவது தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் நாள்கள் முடியும் வரை, வெளியிடக் கூடாது என்று கூறுவது சாலச் சிறந்ததாக இருக்கும்.

ஆயினும், இந்தக் கால கட்டம் குறித்து, தேர்தல் ஆணையம், அனைவரிடமும் ஆழமான முறையில் கலந்தாலோசனைகள் மற்றும் விவாதங்கள் மேற்கொண்டபின் வரையறை செய்து, அறிவித்திட வேண்டும்.இறுதியாக, கடந்த காலங்களில் அநேகமாக ஒவ்வொரு தேர்தலின்போதும் வெளியாகி இருந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தையுமே வாக்காளர்கள் தவறு என்ற மெய்ப்பித்துள்ளார்கள் என்கிற உண்மையா னது, இவ்வாறு வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் எல்லாமே எந்த அளவிற்கு அறிவியல்பூர்வமற்றது, எந்த அளவிற்கு மிகவும்குறுகிய அடித்தளத்தைக் கொண்டது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கியுள்ளன. இவ்வாறு இந்தியாவில் கருத்துக் கணிப்பு வெளியிடும் முறை உருவான சமயத்தில் இது குறித்து ஈடிணையற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லெக்ஷ்மணன் ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார். தேர்தலில் மின்னணு எந்திரங்கள் (EVMs) பயன்படுத்தாத காலம் அது. அந்தக் கார்ட்டூனில், ஒரு கணவர் மிகவும் சோகத்துடன் தன் மனைவியிடம் தன் வாக்குச்சீட்டைத் தவறான பெட்டியில் போட்டுவிட்ட தாக வருத்தத்துடன் கூறுவார்.

மனைவியின் முகத்தில் கோபம் கொப்பளிப்பதைப் பார்த்ததும், அவர், கவலைப் படாதே, இந்தத் தவறை நான் சரி செய்துவிட்டேன், வெளியில் வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் கருத்து கேட்பவர்களிடம் (exit poll) மாற்றிச் சொல்லி சரிப்படுத்திவிட்டேன்’’ என்பார். இந்தியாவில் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்று கேட்பவர்களிடம் வாக்காளர்கள் அநேகமாக இப்படித்தான் கருத்து கூறுகிறார்கள்.

தமிழில்: ச.வீரமணி


Saturday, November 2, 2013

சிறப்பு மாநாடு மகத்தான வெற்றி




மதவெறிக்கு எதிராக, மக்கள் ஒற்றுமைக்காக விடுக்கப்பட்ட அறைகூவலுக் கிணங்க நடைபெற்ற சிறப்பு மாநாடு மகத்தான வெற்றி பெற்றிருப்பதன் மூலம் மதவெறி சக்திகள் தொடர்ந்து மேற் கொண்டுவரும் தாக்குதல்களிலிருந்து இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பினைப் பாதுகாப்பதற்கு எவ்வித ஊசலாட்டமுமில்லாது மிகவும் தெளிவான அறைகூவலை விடுத்துள்ளது. மக்கள் நலன்களைக் காத்திடவும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவசிய மான மாற்றுக் கொள்கையை வகுப்பதற்கு தளம் அமைக்கும் விதத்திலும் இச்சிறப்பு மாநாடு அமைந்தது. சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற பதினான்கு அரசியல் கட்சி களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அல்லாது, பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற அறிவுஜீவிகள் பலரும் சிறப்பு மாநாட்டின் குறிக்கோளுடன் தங்களை இணைத்துக் கொண்டு மாநாட்டில் பங்கேற்றார்கள். நாட்டின் புகழ்வாய்ந்த வர லாற்றாசிரியரும், அறிஞருமான இர்பான் ஹபீப் சிறப்பு மாநாட்டைத் துவக்கி வைத்த தன்மையே, இந்தியாவை எந்த மதவெறி சக்திகளும் சிதைத்திட அனுமதி யோம் என்று கட்டியம் கூறும் வகையில் அமைந்திருந்தது. மதவெறிக்கு எதிரான மக்கள் ஒற்று மைக்கான அறைகூவலை நாடு முழுவதும் இதுபோன்ற சிறப்பு மாநாடுகள் மற்றும் வெகுஜனங்களின் அணிதிரட்டல்கள் மூலம் முன்னெடுத்துச் செல்வோம் என்கிற சிறப்பு மாநாட்டின் செய்தி மிகவும் தெளிவானது.

மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் அத்தகையதோர் அறை கூவலை விடுத்துள்ளது. சிறப்பு மாநாடு நடைபெற்ற தல்கோடரா அரங்கில் திரண் டிருந்த அனைத்துக் கட்சித் தொண்டர் களும், தங்கள் இரு கரங்களையும் உயர்த்தி தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர். மேலும், சிறப்பு மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே, நாட்டின் பல முனைகளிலிருந்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களிடமிருந்து மாநாட்டை வாழ்த்தியும், எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சாரங்களில் தங்களையும் இணைத்துக் கொள்வதாகக் கூறியும் செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.

தற்போது ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியக் காங்கிரஸ் கட்சியும் இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்றதானது, மாநாட்டில் பங்கேற்ற கட்சிகளுடன் கட்சி களின் பட்டியல் `முடிந்துவிட வில்லை என்பதையும், எதிர்காலத்தில் குறிப்பிடத் தக்க அளவிற்கு அது மேலும் விரிவடை யும் என்பதையுமே பிரகடனம் செய்துள் ளது. அதுமட்டுமல்ல, நாட்டில் அதிக அள வில் மக்கள் வாழும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் ஆட்சியில் உள்ள மாநிலக் கட்சிகளும், மற்றும் இரு முக்கிய மாநிலங் களான ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் ஆட்சி புரியும் கட்சிகளும் வரவிருக்கும் காலங்களில் இத்தகைய ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று ஆர்வத் துடன் அறைகூவல் விடுத்துள்ளன.மாநாட்டில் நாட்டின் பல்வேறு திசை களிலும் செயல்படும் கட்சிகள் பங்கேற்ற தானது நாட்டின் சமூகக் கலாச்சாரங்கள் வேறுபட்டிருந்தாலும், அவற்றிற்கிடையி லான ஒற்றுமையினைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

அசாம் மாநிலத்தில் முன்னாள் ஆளும் கட்சியாக இருந்த அசாம் கண பரிசத், ஜார்கண்ட் மாநிலத் தின் முன்னாள் முதல்வர் மற்றும் பல் வேறு தலைவர்கள் கலந்து கொண்டிருப் பது, நம் நாட்டின் பன்முகக் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற கட்சிகள் அனைத்துமே, இவ்வாறு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பை மட்டுமல்ல, நாட்டை மேலும் வலுவானதாகவும், வள மிக்கதாகவும் மாற்றுவதற்கு ஒன்றுபட்டு முன்னேற வேண்டும் என்கிற உறுதியை யும் வெளிப்படுத்தியுள்ளன. மாநாட்டில் பங்கேற்ற அனைவருமே, ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் தற்போது செய்துவரும் மதவெறி நச்சுப் பிரச்சாரத் தை மிகவும் தாக்கிப் பேசினார்கள். உதா ரணமாக, ஆர்எஸ்எஸ்/பாஜக கூடார மானது இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேலை (தவறாய்) பயன்படுத்திக்கொள்ள முயற்சி கள் மேற்கொண்டிருப்பதைக் கடுமை யாகச் சாடினார்கள். சுதந்திரப் போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் அதிலிருந்து ஒதுங்கி இருந்ததை அவர்கள் அம்பலப் படுத்தினார்கள்.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப் பட்டதை அடுத்து, ஆர்எஸ்எஸ் இயக்கத் திற்குத் தடையைக் கொண்டுவந்தது இதே சர்தார் படேல்தான் என்பதை இங்கே நினைவுகூர்வது அவசியமாகும். 1948 பிப்ரவரி 4 அன்று சர்தார் படேலால் வரையப்பட்ட அரசின் செய்திக்குறிப்பு ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்து அறிவித்தபோது அச்செய்திக் குறிப்பில் கூறியிருந்ததாவது:சங் பரிவாரத்தின் ஆட்சேபணைக் குரிய மற்றும் ஊறுவிளைவிக்கக்கூடிய நடவடிக்கைகள் முழுவீச்சுடன் தொடர் கின்றன. சங் பரிவாரத்தின் வன்முறைக் கலாச்சாரம் பல உயிர்களைப் பலி கொண்டுவிட்டது.

இதற்குப் பலியான மிகவும் சமீபத்திய, மிகவும் விலைமதிக்க முடியாத உயிர் காந்திஜியினுடையதாகும்.’’உண்மை இவ்வாறிருக்கையில் எப் படி அவர்கள் படேலைப் பயன்படுத்து கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக் கிறது. 1948 நவம்பர் 14 அன்று படேலின் கீழ் செயல்பட்ட உள்துறை அமைச்சகம் ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல் வால்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த் தைகள் குறித்து ஒரு பத்திரிகைக் குறிப் பை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேச்சு வார்த்தையின்போது கோல்வால்கர் வஞ்சகமான முறையில் சமரசங்கள் பலவற்றைச் செய்துகொண்டார். ஆர்எஸ் எஸ் தலைவர்கள் வெளியே சொல்வதற் கும், உண்மையில் அதன் தொண்டர் களின் நடைமுறைக்கும் எவ்விதச் சம் பந்தமும் இல்லை’’ என்பதையே இவரது வாக்குறுதிகள் நமக்குத் தெரிவிக்கின்றன என்று கூறி, தடையை நீக்க மறுத்து அந் தப் பத்திரிகைக் குறிப்பு வெளியிடப் பட்டது.மேலும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய் திடுமாறு சர்தார் படேலிடம் கோல்வால் கர் கோரியிருந்தார்.

இந்த வேண்டு கோளையும் சர்தார் படேல் நிராகரித்து விட்டு, அவரை நாக்பூருக்குத் திருப்பி அனுப்பிட படேல் கட்டளையிட்டார். 1949 ஜூலை 11 அன்றுதான், அரசாங்கத்தின் தரப்பில் விடுக்கப்பட்ட அனைத்து நிபந் தனைகளையும் ஏற்றுக்கொண்ட பின்னும், வன்முறைக் கலாச்சாரத்தைக் கைவிட்டுவிடுவோம்’’ என்றும், சதி வேலைகளில் இறங்கமாட்டோம்’’ என் றும் வெறும் கலாச்சார அமைப்பாக மட்டும் செயல்படுவோம்’’ என்றும் எழு திக் கொடுத்த பின்னர்தான் ஆர்எஸ்எஸ் மீதான தடை நீக்கப்பட்டது.சர்தார் படேலை இவ்வாறு தவறாகப் பயன்படுத்திக்கொள்வது என்பது இந்திய வரலாற்றை, இந்து தேசம்’’ என்கிற தங்களது குறிக்கோளுக்கு ஏற்றபடி திருத்தி எழுத வேண்டும் என்ற ஆர்எஸ் எஸ் கூடாரத்தின் ஒட்டுமொத்த குறிக் கோளின் ஒரு பகுதியேயாகும்.

இது, இன் றைய நவீன இந்திய மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசை, தங்களுடைய இந்து ராஷ்ட்ரம்’’-ஆக மாற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியேயாகும், பாசிச நடைமுறைகளின் மூலம் நாட்டில் மதவெறியை கூர்மைப்படுத்தப் படுவதும், இந்து ராஷ்ட்ரம்’’ என்னும் ஆர்எஸ்எஸ் திட்டம் வெற்றி பெறுவது என்பதானது இந்திய அரசியல் அமைப் புச் சட்டம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அளித்திருக்கின்ற கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை சவக் குழிக்கு அனுப்புவது என்று பொருளாகும். இவ்வாறு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடே ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் நடவடிக்கைகளால் இடருக் குள்ளாகி இருக்கின்றன. நாம் பல்வேறு சமூக-கலாச்சார-மதத்தினராக இருந் தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் வளமான சமூக அமைப்பே ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது.

சிறந்த தோர் இந்தியாவை உருவாக்குவதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுத் துச் செல்ல வேண்டும் என்றால் இவர் களின் இத்தகைய இழி முயற்சிகளை அனுமதிக்கக் கூடாது. இச்சிறப்பு மாநாடானது, வரவிருக்கும் பொதுத்தேர்தல்களின்போது காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத, அரசியல் மாற்றை உருவாக்கி அறிவித்திடும் என்று ஊடகங்களில் பெரும்பாலானவை ஊகங்களை வெளியிட்டிருந்தன. நமது எதிர்காலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ள மதவெறிக்கு எதிராக மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவதுதான் மாநாட்டின் பிரதான குறிக்கோள் என்று மாநாடு தெள்ளத் தெளிவாக்கி விட்டது. மாநாட்டின் செய்தி இப்போது நாடு முழுவதற்கும் விரிவான அளவில் எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)