Sunday, July 28, 2013

வறுமைக் குறைப்பு : அரசின் கயமைத்தனம்

தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதை அடுத்து, ஐமுகூட்டணி ஆட்சிக்காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்து பெரிய அளவில் முன்னேறிவிட்டதாக, மக்களை ஏமாற்றுவதற்கான வஞ்சக நடவடிக்கைகளில் ஐமுகூட்டணி 2 அரசாங்கம் இறங்கி இருக்கிறது. அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகத்தான் திட்டக் கமிஷன் மூலமாக நாட்டின் வறுமை அளவு குறித்த சமீபத்திய மதிப்பீடு வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் மக்களை ஏமாற்றி, மிகப்பெரிய அளவில் தேர்தலில் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆட்சியாளர்கள் இவ்வாறு சரடு விட்டிருப்பதானது, மிகவும் புகழ்பெற்ற ஆங்கிலப் பழமொழி ஒன்றைத்தான் மீளவும் உறுதி செய்திருக்கிறது. அதாவது பொய்கள் வடிகட்டிய பொய்களின் மறுபெயர் புள்ளிவிவரம்.

2011-12இல் தேசிய வறுமைக்கோடு என்பது திட்டக்கமிஷனின் டெண்டுல்கர் கணக்கீட்டின்படி நாளொன்றுக்கு நபர் ஒருவர் நகர்ப்புறங்களில் ரூ.33.33ம், கிராமங்களில் ரூ.27.20ம் செலவு செய்பவர் என்பதாகும். எவரேனும் ஒருவர் தன்னுடைய உணவுக்காக மட்டுமல்ல மற்ற பொருள்களையும் சேவை களையும் வாங்குவதற்காகவும், இத்தொகையைவிடக் கூடுதலாகச் செலவு செய்தால் அவர் ஏழை அல்லவாம்! ஏழை அல்லாதவர் குறித்து இதைவிட அபத்தமான, மனிதாபிமானமற்ற வரையறை வேறேதாவது இருக்க முடியுமா?ஆட்சியாளர்களின் இத்தகைய நகைக்கத் தக்க வரையறைகளின்படிதான், 2004-05 ஆம் ஆண்டு, ஐமுகூட்டணி 1 ஆட்சிக் காலத் தில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் 41.8 விழுக்காடாக இருந்தது, தற்போது 25.7 விழுக் காடாகவும், நகர்ப்புறங்களில் 25.7 விழுக்காடாக இருந்தது தற்போது 13.7 விழுக்காடாகவும், வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதாவது, 2004-05 இல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தோர் எண்ணிக்கை 40.71 கோடியாக இருந்தது. இப்போது 2011-12இல் அது 26,93 கோடியாக, அதாவது நம் மொத்த மக்கள் தொகையில் 21.9 விழுக்காடாகக் குறைந்திருக்கிறதாம். இவ்வாறாக வறுமைக்கான வரையறையை நகைக்கத்தக்க விதத்தில் குறைத்து, தேசிய அளவில் அட்டூழியம் செய்துள்ள ஐமு கூட்டணி அரசாங்கம், இதற்கெதிராக மக்களின் கடும் சீற்றம் எழுவதை ஆற்றுப்படுத்துவதற்காக, தற்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் சி.ரங்க ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அக்குழு, இத்தகைய வறுமைக் கோட்டு வரையறையை அளித்த டெண்டுல்கர் கணக்கீட்டை மறுஆய்வு செய்திடுமாம். ஆயினும், இக்குழு, தன் அறிக்கையை 2014 - அதாவது அடுத்த பொதுத்தேர்தல் முடிந்த பிறகு - அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதுவரை ஐமுகூட்டணி அரசாங்க மானது இந்த அபத்தமான புள்ளிவிவரத்தால் மக்களை முட்டாளாக்கும் திருப்பணியைத் தொடரும்.
ஒவ்வொருவருக்குமான நுகர்வு அடிப்படையில் வறுமை குறித்து அமைந்த இந்த வரையறைகள் மிகவும் தடங்காண முடியா அளவிற்குக் குறைவானது என்பதுடன் மக்களின் சுகாதாரம், குடியிருப்பு, உடைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து எதுவுமே குறிப்பிடாதது மட்டுமல்ல, இவை மக்களுக்குக் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய வில்லை. இத்தகைய வரையறைகள் ஆதரவற்றவர்களின் நிலையைக் குறித்திடும் அளவைவிட மிகவும் குறைவானவைகளாகும்.கடந்த பல ஆண்டுகளாகவே, வறுமை தொடர்பாக அரசாங்கம் ஏற்படுத்தி வைத்திருந்த வரையறைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வந்திருக்கிறது. 1979இல் தேசிய மாதிரி சர்வேயின் கணக்கீட்டின்படி, ஒவ்வொருவரும் உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகள் உட்பட நுகர்வுப்பொருள்களுக்குச் செலவு செய்வதன் அடிப்படையில் வறுமைக் கோடு வரையறுக்கப்பட்டது. இவ்வரையறையின்படி, ஒருவர் செலவு செய்திடும் தொகை, நாளொன்றுக்கு கிராமப்புறங்களில் 2400 கலோரி சக்தியும், நகர்ப்புறங்களில் 2100 கலோரி சக்தியும், உட்கொள்ளக்கூடிய அளவிற்குச் செலவு செய்கிறார் எனில், அவர் வறுமைக்கோட்டிற்கு மேலே இருக்கிறார் என்று பொருள். கிராமப்புறத்தினருக்கான வரையறை பின்னர் 2200 கலோரியாகக் குறைக்கப்பட்டது. இந்த வரையறையின்படி 1973-74ஆம் ஆண்டில், கிராமப்புற/நகர்ப்புற வறுமைக்கோடுகள் ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு ரூ.49/56 என வரையறுக்கப்பட்டது.

இதன்படி, அன்றையதினம் கிராமப்புறங்களில் 56 விழுக்காட்டினரும் நகர்ப்புறங்களில் 49 விழுக்காட்டினரும் ஏழைகளாகக் கருதப்பட்டார்கள். பின்னர், நாட்டில் வறுமையின் அளவைக் குறைக்க முடியாததன் காரணமாக மிகவும் சங்கடத்திற்குள்ளான ஆட்சியாளர்கள், படிப்படியாக மேற்படி வரையறையையும் மாற்றி அமைத்தார்கள். 2200/2100 கலோரி உட்கொள்ளும் வரையறைகளை எல்லாம் வறுமை மட்டத்திற்கு எடுத்துக்கொள்வதைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். மாறாக, 1973-4ஆம் ஆண்டிலிருந்து, பணவீக்கத்திற்குப் பயன்படுத்தும் விலைவாசி அட்டவணையின் அடிப்படையில் கணக்கிடத் தொடங்கி னார்கள். விலைவாசி அட்டவணையைத் தங்கள் வசதிக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் திட்டக் கமிஷன் வறுமை மதிப்பீடுகளை கற்பனையான முறையில் கணக்கிடுவதைத் தொடர்ந்தது. 2009-10ஆம் ஆண்டில் கிராமப்புற/நகர்ப்புறங்களில் முறையே நாளொன்றுக்கு ஒருவர் ரூ.22.4/28.7 செலவு செய்தாலே அவர் வறுமைக்கோட் டைத் தாண்டியவர் என்னும் அபத்தமான வரையறையை உற்பத்திச் செய்தது. பின்னர் இரு ஆண்டுகளுக்கான விலைவாசி அட்டவணையைத் தங்கள் வசதிக்கேற்ப மாற்றி யமைத்து இந்த வரையறையை 2011-12ஆம் ஆண்டில் ரூ.26/32ஆக மாற்றியமைத்தது. டெண்டுல்கர் கணக்கீட்டைப் பயன்படுத்தி இப்போது இது திட்டக்கமிஷனால் ரூ.33.33/27.20 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இத்தகைய வறுமைக்கோடுகள் மிகவும் அபத்தமானவை மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் தங்கள் ஜீவனத்திற்காகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களின் ஜீவ மரணப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். இவர்கள் அளித்துள்ள நகர்ப்புற வறுமை வரையறையின்படி ஒருவர் வெளிச்சந்தையில் இன்றைய தினம் தரமான நல்ல ரக அரிசி ஒரு கிலோ கூட வாங்க முடியாது. ஆட்சியாளர்கள் எரி பொருள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைத் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருப்பதைத் தொடர்ந்து அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் நாள் தோறும் விஷம்போல் ஏறிக்கொண்டிருப் பதால் மக்களின் வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும் விவசாய நெருக்கடியின் விளைவாக ஏற்கனவே நொந்து நூலாகிப்போயுள்ள விவசாயிகள் தற்போது ரசாயன உரங்களுக்கு அளித்து வந்த மான்யங்களை ஆட்சியாளர்கள் கடுமையாக வெட்டிச் சுருக்கியிருப்பதன் காரணமாக மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு மக்களின் வாழ்க்கை அதலபாதாளத்திற்குச் சென்றிருப்பதை மக்கள் நாள்தோறும் வாங்கும் உணவு தானியங்கள் அளவு 1991இல் 480 கிராம்களாக இருந்தது, தற்போது 440 கிராம்களாகக் குறைந்திருப்பதிலிருந்தே நன்கு தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய சூழ்நிலைமையில்தான் நாட் டில் பெருமளவில் அவதிப்பட்டுக்கொண் டிருக்கும் நம் மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் அர்த்தமுள்ளவிதத்தில் அளிக்க முடியும் என்றால் அது அனைவருக்குமான பொது விநியோக முறை மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதன்மூலம்தான் செய்திட முடியும். இதன் பொருள், நம் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 90 விழுக்காட்டினராவது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கிலோ கிராம் 2 ரூபாய் விலையில் மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களை அளிப்பதன் மூலம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதேயாகும். இதனைச் செய்வதற்குப் பதிலாக, ஐமுகூட்டணி-2 அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு, உணவு அளவை 25 கிலோவாகக் குறைத் திருப்பதுடன் அவற்றின் விலையையும் 3 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. அதுவும் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கிற்கும் மேல் உள்ளவர்களுக்குக் கிடையாது.
நிச்சயமாக இது போதுமானதல்ல. இது உணவுப் பாதுகாப்பை அளிப்பதற்குப் பதிலாக நம்மக்களுக்கு உணவுப் பாதுகாப்பின்மையைத்தான் பெரிய அளவில் உத்தரவாதப்படுத்திடும். நமக்குத் தேவை வறுமையைக் குறைத்துவிட்டோம் என்று ஐமுகூட்டணி-2 அரசாங்கம் தற்போது செய்து கொண்டிருக்கும் வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் அல்ல, மாறாக நம் மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை அளிக்கக்கூடிய விதத்தில் ஓர் அர்த்தமுள்ள வாழ்வாதாரமேயாகும். இதனை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் மக்களைத் திரட்டி வலுமிக்க போராட் டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

(தமிழில்: ச.வீரமணி)



No comments: