பாபர் மசூதி மட்டும் இடிக்கப்படவில்லை, நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் அடித்தளமும் இடிக்கப்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் லிபரான் ஆணைய அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
‘‘இன்று நாம் பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமாக லிபரான் ஆணையம் என்ன கூறியிருக்கிறது என்பது குறித்தே இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம். பாபர் மசூதி எப்படி இடிக்கப்பட்டது? அது இடிக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் என்ன? லிபரான் ஆணையம் தன் அறிக்கையில் இடையில் என்னவெல்லாம் கூறியிருந்தாலும், முடிவாக ‘‘பாபர் மசூதியானது கரசேவகர்களால் மேற்கொள்ளப்பட்டது, இதனை இடிப்பதற்கு இவர்கள் எண்ணற்றவர்களைப் பயன்படுத்தினார்கள், மசூதியின் மாடங்களுக்குள் நுழைந்தார்கள், சிலைகளையும் அங்கிருந்த ரொக்கப் பணத்தையும் அள்ளிச் சென்றார்கள், பின்னர் அங்கே திடீர் கோவிலை (அயமந ளாகைவ வநஅயீடந) அமைத்தார்கள். இந்த இடிப்பு நிகழ்வானது மிகவும் நன்கு திட்டமிடப்பட்டு, முன்தயாரிப்பு வேலைகளுடன் மேற்கொள்ளப்பட்டது.’’ என்று கண்டிருக்கிறது. ஆணையம் இவ்வாறுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. தன்னிடமிருந்து சில சாட்சியங்களின் அடிப்படையில் ஆணையம் இவ்வாறு முடிவுக்கு வந்திருக்கிறது.
ஆணையத்தின் மையக் கருத்து, மசூதி எப்படி தரைமட்டமாக்கப்பட்டது, எப்படி இது செயல்படுத்தப்பட்டது, இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பவைகளேயாகும். அதனால்தான், 17 ஆண்டுகளான பிறகும் இது வந்திருக்கிறது. தாமதம் குறித்து நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆம், மேற்படி ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கியதற்கு இங்குள்ள ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. அவர்களால் 14 முறையும் மற்றவர்களால் 32 முறையும் கொடுக்கப்பட்டது. உண்மையில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் கூட காலநீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது இதற்கு யார் காரணம் என்று ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நாட்டின் நலன், எதிர்காலத்தின் நலனைக் கணக்கில் கொண்டு இந்த ஆணையத்தின் அறிக்கை முன்னமேயே வந்திருக்க வேண்டும்.
இரு முரண்பட்ட அம்சங்களின் அடிப்படையில் இதன்மீதான விவாதத்தைத் தொடங்க விரும்புகிறேன். முதலாவது அம்சம், அறிக்கையானது பாபர் மசூதி மிகவும் துல்லியமாக முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு இடிக்கப்பட்டுள்ளது என்பதை சட்டபூர்வமாக உறுதி செய்துள்ளது. எனக்கு நன்றாக நினைவுக்கு வருகிறது. இது பதிவுருக்களால் முழுமையாக அப்போதே நன்கு மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. தோழர் ஜோதிபாசு ஆணையத்தின் முன் வாக்குமூலம் அளிக்கையில் இது தொடர்பாக ஒரு குறுந்தகட்டையும் அளித்திருக்கிறார். அப்போது உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த கல்யாண்சிங் அந்த சமயத்தில் கொல்கத்தா சென்றபோது, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ‘‘பாபர் மசூதியை இடிக்கும் பொறுப்பை ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்திருந்தால், அவர்கள் அதனைச் செய்து முடிக்க சில நாட்கள் ஆகியிருக்கும். ஆனால் எங்களுடைய கரசேவகர்கள்ஐந்தே மணி நேரத்தில் இதனைச் செய்து முடித்து விட்டார்கள். இது உலக வரலாற்றில் மாபெரும் சாதனையாகும்.’’ என்று பீற்றிக்கொண்டார். இவ்வாறு அனைத்தும் அவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவைகள்தான். நம் அனைவருக்கும் இது தெரியும். ஆயினும் அதனைச் சட்டபூர்வமாகச் சொல்வதற்கு இத்தனை ஆண்டு காலம் ஆகியிருக்கிறது.
‘‘தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும்’’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆயினும், இப்போதாவது நீதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நம் அமைப்பின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை தகர்க்கப்படாதிருக்க வேண்டுமானால் நீதி இனி மேலாவது காலங்கடத்தாது வழங்கப்பட வேண்டும்.
இதுபோன்ற ஆணையங்கள் எண்ணற்றவைகளை கடந்த காலங்களிலும் நாம் கண்டிருக்கிறோம். அவைகள் பரிந்துரைத்த எதுவும் அமல்படுத்தப்பட்டதில்லை. ஏன், அயோத்தியா நிகழ்வு குறித்து 1997இலேயே குற்ற அறிக்கை ஒன்று லக்னோ கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இப்போது ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நபர்கள் அத்தனைபேர் மீதும் அப்போதே அமர்வு நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆயினும் 1997க்குப்பின் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து, வழக்கும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. எனவே, தாமதம்குறித்துப் பேசுவதில் அர்த்தமே இல்லை. இதனை நான் கூறுகிறேன் என்றால், நம் அமைப்பின் மீதான நம்பகத்தன்மையே நாளுக்கு நாள் வீழ்ந்து கொண்ருக்கிறது.
ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்றீர்கள். அதன்மீது எதுவும் நடக்கவில்லை. இதுபோல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலகங்கள்குறித்து ஒன்பது ஆணையங்களின் அறிக்கைகள் அரசிடம் உள்ளன . அவற்றின் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பார்த்தோமானால் நீதியரசர் ஜகன்மோகன் ரெட்டி ஆணையம், நீதியரசர் டி.பி. மதன் ஆணையம், நீதியரசர் விதைதால் ஆணையம், நீதியரசர் ஜிதேந்திர நாராயண் ஆணையம், கன்னியாகுமரி கலகம் தொடர்பாக நடைபெற்ற நீதியரசர் வேணுகோபால் ஆணையம் - இப்படி எண்ணற்ற ஆணையங்கள். ஆயினும் எந்த ஆணையத்தின் பரிந்துரைகளும் அமல்படுத்தப்படவில்லை.
இப்போது நாம் தெரிந்துகொள்ள விரும்புவது என்னவெனில், இதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதுதான்.
அரசாங்கம் இதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை (ஹகூசு - ஹஉவiடிn கூயமநn சுநயீடிசவ) தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் அது முற்றிலும் திருப்தியற்ற நிலையிலேயே இருக்கிறது. இதில் நீதி எப்படி வழங்கப்படவிருக்கிறது என்பது குறித்து எதுவுமே இல்லை.
நாட்டின் பல பகுதிகளில் பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆயினும், இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் முடிவு எதுவும் எடுக்கும்வரை, எதுவும் செய்திட முடியாது. உண்மையில் அரசாங்கம் இதில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், இவ்வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக்கி, உச்ச நீதி மன்றத்திற்குக் கொண்டுவந்து, விரைவில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இல்லாவிடில் இன்னும் பல ஆண்டுகளுக்கு இவை இழுத்தடிக்கப்படலாம்.
முக்கியமான அம்சம் என்னவெனில், நம் அமைப்பின் மீது நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டியது முக்கியம். இதனையே நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இடிக்கப்பட்டது வெறும் பாபர் மசூதியோ அல்லது ஒரு கட்டிடமோ அல்ல, மாறாக நவீன இந்தியாவின் தூண்கள் மற்றும் அடித்தளங்களே இடிக்கப்படுவதற்கான முயற்சி என்றே நான் கருதுகிறேன். இதனை இடிப்பதற்கு முன் இவ்வாறு இடிக்கப்படுவதற்கு ஆதரவாக நாடு முழுதும் அரசியல் பிரச்சாரமே மேற் கொள்ளப்பட்டது. நாடு முழுதும் மதவெறித் தீ விசிறிவிடப்பட்டது. இறுதியாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
அவற்றை லிபரான் ஆணையம் பட்டியலிட்டிருக்கிறது. அப்போது பிரதமராக இருந்தவரே இதனை ஒப்புக்கொண்டு, கூறியதாவது: ‘‘ 1989இல் மட்டும் மதவெறி நிகழ்வுகளால் 505 பேர் கொல்லப்பட்டனர், 768 பேர் காயமடைந்தனர். 1990இல் அத்வானி ரத யாத்திரை சென்றபோது, 312 மதவெறி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 483 பேர் கொல்லப்பட்டனர், 2000 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர், 210 மசூதிகளும் 35 கோவில்களும் சேதமடைந்தன அல்லது தரைமட்டமாக்கப்பட்டன.’’
இவற்றை அடுத்துத்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன்பின்னரும் நாடு முழுதும் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
நவீன இந்தியாவின் அடித்தளமே இடிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான், இவற்றி லிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சமாகும். நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலை அப்படியே தொடர நாம் அனுமதித்திடக் கூடாது.
மசூதியை இடித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு ஏன் மசூதி இடிக்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலின் மிகக் கேவலமான வெளிப்பாடே இது. இதற்கு ஆணையத்தின் அறிக்கையோ அல்லது எந்தவிதச் சான்றும் தேவையில்லை.
நம் நாட்டில் மூன்று விதமான அரசியல் கண்ணோட்டங்கள் 1920களில் தொடங்கின. ஆர்எஸ்எஸ் இயக்கம் அப்போதுதான் தொடங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போதுதான் துவங்கப்பட்டன. மோதிலால் நேரு குழுவின் பரிந்துரைகள், காங்கிரஸ் என்னும் அமைப்பை வரையறுத்தன. பின்ன அது 1928இல் அமைக்கப்பட்டது. அதன் பிறகு நவீன இந்தியா எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதில் இம்மூன்று விதமான அரசியல் முகாம்களுக்கும் இடையே போராட்டங்கள் நடைபெற்று வந்தன. நாம் சுதந்திரம் பெற்ற சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு என்கிற கண்ணோட்டம் இருந்தது. மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தின் மீது நவீன இந்தியா கட்டப்பட்டது.
அதேபோன்று இடதுசாரிகள் கண்ணோட்டம். இதன் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வெறுமனே மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை நிறுவினால் மட்டும் போதாது, நாட்டிற்குக் கிடைத்துள்ள அரசியல் சுதந்திரத்தை, மக்களின் பொருளாதார சுதந்திரம் கிடைப்பதற்கான முறையில் மாற்றவில்லை என்றால், இப்போது நாம் பெற்றிருக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று நாங்கள் கூறுகிறோம். எனவே, மதச்சார்பற்ற ஜனநாயகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், இதனை மாற்றியமைத்தாக வேண்டும் என்று கூறி, அத்தகையதோர் சமூக மாற்றத்திற்காகவும், மக்களுக்கு உண்மையான பொருளாதார சுதந்திரம் கிடைத்திடவும் நாங்கள் போராடி வருகிறோம்.
ஆனால், இவ்விரண்டுக்கும் பகையான ஒரு கண்ணோட்டம் மதவெறி அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டன. அது, சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் மதப் பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிற கண்ணோட்டமாகும்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மக்களவையில் கூறியதுபோல் இரு விதமான கண்ணோட்டங்களுக்கிடையே போராட்டம் அல்ல, இவ்வாறு மூன்று விதமான கண்ணோட்டங்களுக்கிடையே போராட்டம் நடந்து வருகிறது.
முஸ்லீம் லீக் தனி இஸ்லாம் நாடு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது, ஆர்எஸ்எஸ் இந்து ராஷ்ட்ரம் என்று கூறி வந்தது.
முகமது அலி ஜின்னா, ‘இரு தேசக் கொள்கையை’ அறிவித்தார். சாவர்கரும் இந்து மகாசபையில் தலைமையுரையாற்றுகையில் இதனை ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார். ‘‘இந்தியா ஒரே கடவுளின் கீழ் இருக்க முடியாது. மாறாக இங்கு இந்துக்கள் ஒரு தேசமாகவும், முஸ்லீம்கள் ஒரு தேசமாகவும் இருக்கிறார்கள்.’’ என்றார். 1943இல் மீண்டும் சாவர்கர், ‘‘எனக்கு ஜின்னாவின் ‘இரு தேசக் கொள்கை’யுடன் எந்த சண்டையும் கிடையாது. இந்துக்களாகிய நமக்கு ஒரு தேசம் உண்டு. இது வரலாற்று உண்மை. முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் உண்டு,’’ என்றார்.
இத்தகைய மதவெறிக் கிருமி நம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி இன்றளவும் அது நம் வாழ்வில் பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மூன்று கண்ணோட்டங்களுக்கு இடையே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாட்டின் வேற்றுமைப் பண்புகளுக் கிடையே ஒற்றுமையுடன் வாழும் மக்கள் மத்தியில் மதவெறியைக் கிளப்பி ஆதாயம் அடைய நினைக்கும் அரசியல் சக்திகளைத் தனிமைப்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறோம்.எனவேதான் பாபர் மசூதி இடிப்பு என்பது பெறும் ஒரு கட்டிடத்தை - ஒரு மசூதியை- இடித்த செயல் அல்ல, மாறாக ‘நவீன இந்தியா’வின் அடித்தளத்தையை இடித்த ஒரு செயலாகும் என்று நான் கூறவிரும்புகிறேன்.
எனவேதான் பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமாகவும் அதனையொட்டி எழுந்துள்ள வழக்குகளிலும் நீதி விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்,
1 comment:
All the secular persons must know the historical background of this issue.Yechury has very clear cut manner told the basic things..the contents shall given to all hands living under the sun---vimalavidya
Post a Comment