Tuesday, December 1, 2009

லிபரான் ஆணையத்தின் மீதான விவாதம் ஒத்தி வைத்திருப்பதை ஏற்கமுடியாது:சீத்தாராம் யெச்சூரி

புதுதில்லி, டிச.1-

மத்தியஅரசு லிபரான் ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதத்தை ஒத்தி வைத்திருப்பதை ஏற்பதற்கில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அன்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

‘‘முதலாவதாக, லிபரான் ஆணைய அறிக்கை மீதான விவாதத்தை அரசு ஒத்தி வைத்திருப்பது தொடர்பாகக் குறிப்பிட விரும்புகிறோம். அரசின் இந்த முடிவு மிகவும் விசித்திரமானது. லிபரான் ஆணையம் அரசுக்கு அறிக்கைஅனுப்பி ஐந்து மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இப்போது அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் அதன் இந்தி மொழிபெயர்ப்பு இல்லை என்று காரணம் கூறி அதன் மீதான விவாதத்தை அரசு ஒத்தி வைத்திருக்கிறது. இது முற்றிலும் ஏற்புடையதல்ல. அரசின் இந்த முடிவானது, அரசின் நம்பகத்தன்மையையே சந்தேகிக்க வைக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் மத்தியில் ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் தலைமையிலான நரசிம்மராவ் அரசாங்கம்தான். லிபரான் ஆணையம் நரசிம்மராவ் அரசாங்கம் மீது மிகவும் மேலோட்டமான முறையிலேயே கருத்து தெரிவித்திருக்கிறது. இப்போது அரசு விவாதத்தை ஒத்திவைத்திருப்பதும். இதன் மீதான விவாதத்தைத் தவிர்க்கும் ஒன்றாகவே தெரிகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்ற மதவெறி சம்பவங்கள் அனைத்திலும், சம்பவங்களுக்குக் காரணமான கயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், அவர்கள் மீதான விசாரணைகளை விரைந்து நடத்தி, அவர்களுக்கு எதிராக நீதி வழங்குவதில் மிகுந்த மந்த நிலையே நீடிக்கிறது. இது நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பை உயர்த்திப் பிடிக்க உதவாது. குஜராத் மதக் கலவரமாக இருந்தாலும் சரி, பம்பாயில் நடைபெற்ற கலவரம் மீதான ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை மீதான நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி - எதுவாக இருந்தாலும் சரி இவற்றின் மீதான நீதி விசாரணைகள் நத்தை வேகத்திலேயே நடைபெறுகின்றன. இது மக்களுக்கு நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பின் மீதுள்ள நம்பிக்கையையே அரித்துவிடும். எனவே இதனைப் போக்கி, இதனை வலுப்படுத்தக்கூடிய வகையில் நீதி விசாரணைகள் முடுக்கிவிடப்பட வேண்டும்.

அடுத்ததாக, மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு சட்டம் - ஒழுங்கு நிலைமை தொடர்பாக மத்தியக் குழு ஒன்றை அனுப்பியிருப்பது தொடர்பாகக் குறிப்பிட விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கள் கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் மற்றும் பல கட்சிகளும் இரு அவைகளிலும் இது தொடர்பாக பிரச்சனையை எழுப்பியதை அடுத்து, மத்திய அரசின் சார்பில் மிகத் தெளிவான முறையில், மத்தியக் குழுவானது மேற்கு வங்க அரசுக்கு உதவுவதற்காகத்தான் (assist) அனுப்பப்பட்டிருக்கிறதேயொழிய, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மதிப்பிடுவதற்காக (assess)அல்ல என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. இதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மாநில அரசுடன் மத்திய அரசு எவ்விதமான மோதல் போக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் அங்கே மேற்கொள்ளாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே மத்தியக்குழு அங்கு சென்றிருக்கிறது என்றும், மாநில அரசின் ஆலோசனைப்படிதான் அது அங்கு செயல்படும் என்றும் மாநில அரசுக்கு உதவுவதற்காகவும். வசதி செய்து தருவதற்காகவும்தான் அது சென்றிருக்கிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மத்தியக்குழு எந்த அரசியல் கட்சியுடனும் எவ்விதமான விவாதத்தையும் மேற்கொள்ளாது என்றும், எந்த அரசியல் கட்சியாவது மனு எதுவும் கொடுத்தால் அதனைப் பெற்றுக்கொண்டு அதனை மத்திய அரசிடம் கொண்டு வந்து ஒப்படைத்துவிடும் என்றும் மாறாக அந்த அரசியல் கட்சிகளுடன் எவ்விதமான விவாதத்தையும் மேற்கொள்ளாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த நான்கு அம்சங்களும் விவகாரத்தைத் தெளிவுபடுத்திவிட்டது.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். மத்தியக் குழு அனுப்பப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பின் ஏன் அமளியில் ஈடுபட்டார்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, அரசு இப்போது அளித்துள்ள விளக்கத்தை முன்பு அளிக்கவில்லை என்றும் ஊடகங்களில் வந்த செய்திகளில் மாநில அரசுக்கு உதவுவதற்காக அது அனுப்பப்பட்டதாகக் கூறப்படவில்லை என்றும், மாநில அரசின் அனுமதியின்று மத்தியக்குழு சென்றிருந்தால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயல் என்றும் எனவேதான் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆவேசமடைந்தார்கள் என்றும், இப்போது அரசு தெளிவுபடுத்திவிட்டது, சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
----

No comments: