Monday, September 1, 2008

சிங்கூர் முற்றுகை: சவாலை அரசியல்ரீதியாக சந்திப்போம்



மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நிறு வப்பட்டுள்ள டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜி தலைமையில் அமைந்துள்ள கதம்பக் கூட்டணியானது தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் மூலம் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கையையும், அனைத்து வளர்ச் சிப் பணிகளையும் சீர்குலைத்து வருகிறது.
இந்தப் பிராந்தியத்தின் பிரதானமான சாலையான துர்காபூர் விரைவுப்பாதையில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து முற்றிலுமாக சீர்குலைந்திடும் வகையில் தடுத்துள்ளது. வங்கத்தின் கிராமப்புறங்களிலிருந்து கொல் கத்தாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு நலிவுற்ற நோயாளிகள் வரமுடியாத வகை யில் தடுக்கப் பட்டுள்ளார்கள். இவர்கள் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு சுருங்கி வருவதால், போக்குவரத்து மற்றும் ரயில் தொடர்பு சாதனங்களைத் துண்டிக்கும் இழி செயல்களிலும் இறங்கி யிருக்கிறார்கள். டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் குறித்த முழு விவரங்களையும் தெரிவித்துள்ள மேற்கு வங்க தொழில்துறை அமைச்சரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான நிருபம் சென், எதிர்க்கட்சிகள் முன்வைத் துள்ள குற்றச்சாட்டுகள் எந்த அளவிற்கு முட் டாள்தனமானவை என்பதை ஏற்கனவே விளக்கியிருக்கிறார். மேலும், அவர்கள் விவ சாயிகளிடம் திருப்பித் தரவேண்டும் என்று கோரும் இடங்கள் தொடர்பாக வரைபடம் வரைந்து, அறிவுக்குப் பொருந்தாத அவர்களது கோரிக்கைகளையும் விளக்கியுள்ளார். மேற்கு வங்க அரசு, ‘‘பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள லாம்’’ என்று அவர்களை அழைத்தபோதும் அவர்கள் வர மறுத்துவிட்டார்கள். கலகக் காரர்கள் கோரும் சில முக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து ஆராய் வோம்.முதலாவதாக, இப்போது கலகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் இடது முன்னணி ஆட்சிக்குத் தாங்கள் இதுவரை காட்டிவந்த எதிர்ப்பின் போது கூறிவந்த ஒரு குற்றச் சாட்டு, ‘‘இடதுமுன்னணி அரசாங்கத்தின் கீழ் வங்கத்தில் தொழில்மயம் சாத்தியமே இல்லை’’ என்பதாகும். கடந்த முப்பதாண்டு காலமாக அவர்கள் தொடர்ந்து பாடிவந்த பல்லவி இதுவேயாகும். இப்போது தொழில் மயத்திற்குத் துல்லியமாகத் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கும் சமயத்தில் இதே கூட்டம் அதனைத் தகர்த் திட முயற்சிக்கின்றன. இவர்களின் அரசிய லின் பின்னணி என்ன என்பதைப் புரிந்து கொள்வது கடினம் ஒன்றுமல்ல. இடது முன் னணி அரசாங்கத்தின் தலைமையில் வங்கத் தில் தொழில் மயம் முன்னேற்றம் அடைந் தால், அவர்கள் இதுநாள்வரை செய்துவந்த அரசியலும் எளிதாக அடிபட்டுப் போய்விடும். எனவேதான், தங்கள் அரசியல் சுயநலத்திற் காக, வங்கம் தொழில்மயமாகாமல் தடுத் திடவேண்டிய தேவை அவைகளுக்கு ஏற்பட் டிருக்கின்றன. அதன் காரணமாகவே பெருமளவில் வேலைவாய்ப்புகள் அளிக்கக் கூடிய, மக்களுக்கு மேலும் முன்னேற்றகர மான வாழ்க்கைத்தரத்தை அளிக்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றவிடாது நாச வேலைகளில் இறங்கியிருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் வங்கத்தின் வளமைக்கு எதிரிகளாக உருமாறி உள்ளனர். இரண்டாவதாக, வங்கத்தில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளைத் துவங்கி, சட்டத்தில் கூறப்பட்ட அளவிற்கு அதிகமாக நிலங்களை வைத்திருப்போரிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தியபோது, நிலப் பிரபுக்களுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே நின்று, நிலச்சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்த அதே சக்திகள்தான் இப்போது விவசாயிகளுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றன, தொழில்மயத்தை எதிர்க் கின்றன. இடது முன்னணி அரசாங்கம் 1977இல் ஆட்சிக்கு வந்தபின், நாட்டில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு மிக அதிகமான அளவில் நிலமற்றவர்களுக்கு நிலத்தை விநியோகம் செய்த ஒரே மாநிலம் மேற்கு வங்கம்தான். வங்கத்தில் மட்டும் நிலச்சீர்திருத்தத்தால் பயனடைந்தவர்கள் 29.7 லட்சம் பேர்களாவார். இது, இந்தியாவில் இவ்வாறு பயனடைந்தவர்களில் 55 சதவீதமாகும். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும், 2 லட்சம் ஹெக்டேர்களுக்கும் (சுமார் ஐந்து லட்சம் ஏக்கர்களுக்கும்) அதிகமாக நிலம் - பாசனத்திற்கு இலாயக்கான நிலம், இந்தியா முழுவதும் பாசனம் அல்லாத உப யோகத்திற்காகக் கட்டாயமான முறையில் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், மேற்கு வங்கத்திலோ இது ஒருசில ஆயிரம் ஏக்கர்கள் மட்டுமே. அதுவும் சாலைப் போக்கு வரத்திற்காக எடுக்கப்பட்டவைகளே.
அதே போன்று நாட்டின் மற்ற பகுதிகள் அளித்திருப்பதைவிட, சிங்கூரில் விவசாயிகளுக்கு, மிக அதிகமான அளவிலேயே, கையகப்படுத் தப்பட்ட நிலங்களுக்காக இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போதைய சந்தை விலை யைவிட மூன்று மடங்கு தொகை வழங்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு முதன்முதலாக, நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இல்லாவிட்டாலும் நிலத்தைச் சார்ந்திருந்து ஜீவனம் நடத்தி வந்த குத்தகை விவசாயிகள் போன்றவர்களுக்கும், உரிய இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில், அதாவது 2005-2008க்கு இடையில், சிங்கூரில் கைய கப்படுத்தப்பட்ட நிலம் என்பது ஆயிரம் ஏக்கருக்கும் குறைவு. ஆனால், அதே சமயத்தில் மாநிலம் முழுவதும் நிலமற்ற விவசாயிகளுக்கு சுமார் 30 ஆயிரம் ஏக்கர்கள் நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் வேறெந்த மாநிலங்களிலும் இதுபோன்று நடந்ததில்லை. வங்கத்தில் தொழில்மய முயற்சிகளை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள், விவசாய நிலத்தைக் கட்டாயப்படுத்திக் கையகப்படுத்துகிறார்கள் என்று இடது முன்னணி மீது குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பவர்கள், இந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்துவிடுகிறார்கள்.
மேற்கு வங்கம், நிலச்சீர்திருத்தங்களில் இவ்வாறு தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்தபோதிலும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி என்பது பிரதானமாக வேகமான தொழில்மயவளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது. மாநிலத்தில் தொழில்மயமாக்குவதற்குப் பல்வேறு பிரச்சனைகள் குறுக்கிட்டா லும் அதில் மிக முக்கியமான பிரச்சனை என்பது, நிலங்கள் துண்டு துண்டாக பல்வேறு நபர்களிடம் சிதறிக் கிடப்பதாகும். முப்பதாண்டுகளுக்கு முன் நிலச்சீர்திருத்தம் தொடங்கி, நிலமற்றவர்களுக்கு நில விநியோகம் நடந்தது. இப்போது அந்த நிலம் பல்வேறு நபர்களின் பெயர்களில் துண்டு துண்டாகச் சிதறிக்கிடக்கின்றன. சிங்கூரில் 999.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதில், இழப்பீட்டுக்குத் தகுதி படைத்த உரிமையாளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்திற்கும் அதிகமாகும். இவர்கள் தவிர குத்தகை விவசாயிகள் வேறு. இதன் பொருள் என்ன வெனில், ஒரு ஏக்கர் நிலத்திற்கு 13 பேருக்கும் மேல் சொந்தக்காரர்கள் என்பதாகும். ஆனால், யதார்த்தத்தில் குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் அல்லது இருவர்தான் மேற்படி நிலத்தில் விவசாயப் பணிகளைச் செய்து வருகிறார்கள். மற்ற எல்லோரும் வெளியில் வேறேதேனும் சில்லரை வேலைசெய்துதான் தங்கள் ஜீவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் வேகமான தொழில் வளர்ச்சியில்லாமல் அதன் மூலமாக வேலை வாய்ப்பை அதிகரித்திடாமல் வங்கத்திற்கு எதிர்காலமோ, வங்க மக்களுக்கு வளமையோ சாத்தியமேயில்லை என்பது இதன்மூலமாகத் தெளிவாகிறது.
இறுதியாக, வங்கத்தின் தொழில்மயத்திற்கான முயற்சிகள் வெற்றி பெற்றுவிட்டால், அதன் மூலமாக மக்களின் வாழ்க்கைத்தரம் கணிசமாக முன்னேறிவிட்டால், இதன் மூலம் இடது முன்னணி மேலும் கெட்டிப் படுத்தப்பட்டுவிடும், தங்கள் அடித்தளம் வேகமாகக் கரைந்துவிடும் என்று எதிர்க் கட்சிகள் பயப்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் கண்ணோட்டத்தின்படி, தாங்கள் ஜீவித்திருக்க வேண்டுமானால், எப்பாடுபட்டாவது தொழில்மயம் நடைபெறாது அதனைச் சீர்குலைத்திட வேண்டும் என திட்டமிடுகிறார்கள்.. இப்போது இதைத்தான் சீர்குலைவு சக்திகள் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நடவடிக்கையில் இப்போது திரிணாமுல் காங்கிரசோடு, காங்கிரஸ், பாஜக, சில முஸ்லிம் மதஅடிப்படைவாத அமைப்புக்கள், ‘மாவோயிஸ்ட்டு கள்’, எஸ்யுசிஐ, அந்நியநாடுகளிலிருந்து உதவி பெறும் சில அரசு சாரா அமைப்புக்கள், கார்ப்பரேட் ஊடகங்களில் ஒருசில பிரிவினர் - என அனைவரும் இடது முன்னணிக்கு எதிராக ஒன்றுசேர்ந்திருக்கின்றனர். இவை அனைத்தும், இன்றைய இந்தியாவில் இடதுசாரி சக்திகளைப் பலவீனப்படுத்த துடிக்கும் ஏதோ ஒரு அமைப்பின் நலன்களுக்கு ஆதர வாய்ச் செயல்படும் கருவிகளேயாகும். ஏகாதிபத்தியம், இந்தியாவை தன்னுடைய ‘‘இளைய பங்காளியாக’ மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்பு, இடதுசாரிகளிடமிருந்துதான் வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு வகை செய்யும் நவீன தாராளமய பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு இடதுசாரிகளிட மிருந்துதான் வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை இடதுசாரிகள் பாதுகாப்பதன் மூலம் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தனியார்மயம் மூலமாக விரைவில் லாபமீட்டுவது தடுக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக பரி வாரமானது, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் தடுத்திடும் பெரும் அரணாக இடதுசாரிகள்தான் இருப்பதாகக் கருதுகின்றன. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கத்தின் பிரதான வீரர்களாக இடதுசாரிகள்தான் செயல்படுகிறார்கள் என்பதை அனைத்து தீவிரவாத மற்றும் பிற்போக்கு சக்திகளும் பார்க்கின்றன. அந்நிய நாடுகளிடமிருந்து உதவி பெறும் அரசு சாரா அமைப்புகள் தங்களுக்குப் படியளப்போருக்கு ஆதரவாக நிற்கவேண்டுமென்றால், இடதுசாரிகளை எதிர்க்கவேண்டும் என்ற முறையில் செயல்படுகின்றன. இவ்வாறு இந்த சக்திகள் அனைத்தும் இடதுசாரிகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக ஒன்றுபட்டிருப்பது இயல்பே.
இந்தியாவில் இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழும் மேற்கு வங்கத்தை அதனால்தான் அவைகள் குறி வைத்துத் தாக்குகின்றன. இன்றைய தினம் சிங்கூரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிப் போக்குகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் எதிராக மகா கூட்டணியால் விடுக்கப்பட்டிருக்கிற அரசியல் சவாலாகும்.
இவ்வாறு நடைபெறுவது இது ஒன்றும் முதன்முறையல்ல. இதற்கு முன்பும் இதனை நாம் அரசியல் ரீதியாக எதிர்கொண்டிருக்கிறோம். இப்போதும் அவ்வாறே எதிர்கொள்ளப்படும்.
தமிழில்: ச.வீரமணி

2 comments:

சந்திப்பு said...

Dear Com. Very excellent editorial. It will open eyes on this issue.

we have going to expose mamatha and fundamentalist holy allience in front of people.

Thanks
K. Selvaperumal

இயக்கம் said...

நல்ல பதிவு தோழரே
வாழ்த்துகளுடன் இயக்கம்
http://ieyakkam.co.cc/