Tuesday, June 2, 2015

வெற்றுப் பிரச்சாரம் வயிற்றை நிரப்பாது!

பாஜக தலைமையிலான தேஜகூட்டணி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி அதன் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் தொடங்கி இருக் கின்றன. பிரதமர் மோடி ஊடகங்களின் படாடோபமான பிரச்சாரங்களுக்கிடையே முதலாமாண்டு கொண் டாட்டத்தை மதுராவில் தொடக்கி வைத்திருக்கிறார். நாடு முழுதும் இதனையொட்டி 200 பொதுக் கூட்டங்கள் நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருக்கிறது. அனைத்து மத்திய அமைச்சர்களும் தலா குறைந்தது மூன்று பொதுக் கூட்டங்களையும், மூன்று பத்திரிகை யாளர் மாநாடுகளையும் நடத்திட வேண்டும் என்றும், அதாவது நாடு முழுதும் குறைந்தபட்சம் 200 பொதுக்கூட்டங்களிலும், 200 பத்திரிகையாளர் மாநாடுகளிலும் பங்கேற்க வேண்டும் என்றும் கட்டளை யிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்கள் பங்கேற்கும் 200 கூட்டங்களுடன் மேலும் 200 கூட்டங்கள் கூடுதலாக இருந்திடும். பிரதமர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அயல்நாடுகளில் பயணம் செய்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் தன்னுடைய பகட்டு ஆரவாரத்தன்மையை நன்கு காட்டிவிட்டு வந்திருக்கிறார். இப்போது ஆர்எஸ்எஸ்/பாஜக அதேபோன்று நாட்டு மக்கள் மத்தியில் தங்கள் வாய்வீச்சுக் கலையைக் காட்ட விருக்கின்றன.
ஊடகங்களுக்கு விளம்பரம் வாரியிறைப்பு
பிரதமர் தன் பிரச்சாரத்தை மதுராவிலிருந்து தொடங்கியிருப்பது கள்ளங்கபடமற்ற ஒன்று அல்ல. நாடு முழுதும் மதக்கலவரங்களை உருவாக்க வேண்டும் என்கிற மிகவும் மோசமான இழிநோக்கத்துடன்தான் அங்கிருந்து இது தொடங்கப்படுகிறது. ராமன் பிறந்த இடம் (அயோத்தி), கிருஷ்ணன் பிறந்த இடம் (மதுரா) மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவை `விடுவிக்கப்படும்’ என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் பேசி வருவதை நினைவுகூர்க. அதற்குப் பொருத்தமான வகையில் பிரதமர் மோடிக்கு மதுராவின் உள்ளூர் பாஜக எம்பியான ஹேம மாலினியால் கிருஷ்ணன் சிலை பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பிரச்சாரம், பல நூறு ஆண்டு காலமாக இருந்து வந்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதற்கும் அதனைத் தொடர்ந்து நாடு முழுதும் மதவெறி விஷப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வைப் பலிகொள்வதற்கும், நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையினர் மத்தியில் ஓர் ஆழமான பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்குவதற்கும் இட்டுச் சென்றிருக்கிறது.
பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினராக இரு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின், தன் சொந்த மாநிலமான குஜராத்தில் வென்ற தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, உ.பி. யில் வென்ற பனாரஸ் தொகுதியை மட்டும் இருத்தி வைத்துக்கொண்டிருக்கிறார். இப்போது ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தை மதுராவில் இருந்து தொடங்குகிறார். உண்மையில் இவை அனைத்தும் கெட்ட சமிக்ஞைகளேயாகும்.தனக்கு விசுவாசமாக இருக்கும் அனைத்துவகை ஊடகங்களுக்கும் பல வண்ண விளம்பரங்களை அரசாங்கம் வாரி இறைத்திருப்பது அதிகமாகி இருக் கிறது. எனவே, ஊடகங்கள் பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கம் தன் முதலாம் ஆண்டில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அதிக வித்தியாசத்துடன் தேறிஇருக்கிறது என்று அளந்திருப்பதில் ஆச்சரியப்படு வதற்கு எதுவும் இல்லை.
(தி டைம்ஸ் ஆப் இந்தியா) ஒருவர் தேர்விற்கு அமரும்போதுதான் மதிப்பெண்கள் கொடுக்கப்படும். இங்கே, இந்த அரசாங்கம் எந்தவிதமான தேர்வையும் எழுதாமல் இருக்கும் நிலையிலேயே, ஊடகங்கள் இந்த அரசாங்கத்திற்கு மதிப் பெண்களை வாரி வழங்கி இருக்கின்றன. ஊடகங்களின் வாயிலாக ஊட்டி, வளர்க்கப் படுவதன் காரணமாக எழுந்துள்ள `செல்வாக்கி’ன் தாக்கம் எப்படி இருந்தபோதிலும், சொந்தமாகவே ஊடக நிறுவனங்களை வைத்திருக்கும் கார்ப்பரேட்டுகள் இந்த அரசாங்கத்திற்குத் துதிபாடுவதில் போட்டிபோடுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
கார்ப்பரேட்டுகள் ஊடகங் களை விலைக்கு வாங்கியிருப்பது அவற்றின் மூலம் தங்கள் செல்வாக்கை செலுத்துவதற்கான முயற்சியேயாகும். கார்ப்பரேட்டுகள் ஊடகங்களின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்தி, துதிபாடுவது என்பது எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதன் காரணமாக, மக்கள் மத்தியில் ஊடகங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.
முதல் பக்கத்தில் துதி தலையங்கத்தில் விமர்சனம்
இதன்காரணமாகத்தானோ என்னவோ, பத்திரிகைகளின் முதல் பக்கத்தலைப்புச் செய்தியில் அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு விழா குறித்து `ஓகோ’ என்று துதி பாடியிருந்தாலும், அதன் தலையங்கங்களில் இந்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பது என்பதும் தொடர்ந்துள்ளது. ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். மேலே கூறியதுபோன்று தி டைம்ஸ் ஆப் இந்தியா இந்த அரசாங்கத்தைத் தூக்கி வைத்துப் பாராட்டியுள்ள அதே சமயத்தில், அதன் தலையங்கப்பகுதியோ, “... தேஜகூட்டணி அரசாங்கத்தின் முதல் ஓராண்டு ஆட்சிக் காலத்தில், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது கடினம்தான். ஏற்றுமதிகளும் தொழில்உற்பத்தியும் தேக்க நிலையில் இருக்கின்றன.
2014-ல் சற்றே உயர்ந்திருந்த `சென்செக்ஸ்’ புள்ளிகள் மீண்டும் இறங்குமுகத்தில் வீழத் தொடங்கிவிட்டன. போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஒவ்வோராண்டும் ஒரு கோடி பேர் வேலைதேடி வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழைந்து கொண்டிருப்பதால் `நல்லகாலம் பிறப்பதற்கான’ நம்பிக்கைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன,’’ என்று எழுதியிருப்பதுடன் இதேபோன்று மேலும் பல கருத்துக்களையும் அளித்துள்ளது.தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, “இந்த அரசாங்கம் எவ்விதத்திட்டத்தின் அடிப்படையிலோ அல்லது ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலோ செயல்படுவதுபோலத் தோன்றவில்லை,’’ என்று கூறுகிறது.
மேலும் அது, “இந்த அரசாங்கம் தன்னிடம் உள்ள தகவல்தொழில்நுட்பங்கள் வழியாக மக்களிடம் நேரடியாகப் பிரச்சாரம் மேற்கொள்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் ஒரு கருத்தொற்றுமையை உருவாக்க தன் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’’ என்றும் அறிவுரை வழங்கி இருக்கிறது.
ஆதரித்தவர்களே குறைகூறுகிறார்கள்
தி ஆசியன் ஏஜ் நாளேடு, “... ஆட்சியிலிருப்போர் மக்களுக்கு அளித்துள்ள வானளாவிய வாக்குறுதிகள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினர் மத்தியிலும் அதீத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், இவை நிறைவேற்றப்படுவதென்பது மிகவும் ஒளிமங்கிய நிலையிலேயே இருப்பதால், இந்த அரசாங்கத்தை வலுவாக ஆதரித்தவர்களே இப்போது இந்த அரசாங்கம் எந்தத் திசைவழியில் செல்வது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருப்பதாகக் குறைகூறத் தொடங்கி விட்டனர்,’’ என்று கூறுகிறது. மேலும் அது, “நாடு முழுதும் விவசாயத்துறை கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அதிலும் முக்கியமாக இந்த அரசாங்கம் யாரைத் தூக்கிநிறுத்த வேண்டும் என்று விரும்புகிறதோ அந்தக் கார்ப்பரேட் துறையே, அதிலும் குறிப்பாக பெரும் வர்த்தக நிறுவனங்களே, இப்போது இந்த அரசாங்கத்தைக்குறைகூறத் தொடங்கி இருக்கின்றன,’’ என்றும் கூறுகிறது.
தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு கூட, “இந்த அரசாங்கத்தின் கொள்கையைத் தீர்மானிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்கள்கூட இப்போது இந்த அரசாங்கம் தங்களுக்கு நம்பிக்கை மோசம் செய்துவிட்டதோ என சந்தேகம் கொள்ளத் தொடங்கி, எதிர்ப்பினைக் காட்டும் போக்கு உருவாகி இருக் கிறது. எதிர்க்கட்சிகள் குறித்து மோதல்போக்கைக் கடைப் பிடிப்பதற்குப் பதிலாக அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகும். அடுத்த நான்கு ஆண்டு கால நிகழ்ச்சிநிரல் அப்படித்தான் அமைந்திட வேண்டும். வருடாந்திரக் கொண்டாட்டங்கள் குறித்து வாக்காளர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்,’’ என்று எச்சரித்திருக்கிறது. தி பிசினஸ் ஸ்டாண்டர்டு தலையங்கமும் இதேதொனியை எதிரொலித்திருக்கிறது. தன் தலையங்கத்தில் அது இறுதியாக, “இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் கடந்த ஓராண்டின் செயல்பாடுகளிலிருந்து கற்றுக்கொண்டு, 2016 மே 26 அன்று விளம்பரம் செய்து தான் தங்கள் பெருமையைப் பீற்றிக்கொள்ள வேண் டும் என்கிற அவசியம் இல்லாத அளவிற்கு, சிறந்தமுறையில் செயலாற்ற வேண்டும்,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
நிறைவேறா வாக்குறுதிகள்
தி இந்து நாளேடு, “இந்த அரசாங்கத்தின் முதலாம் ஆண்டின் இறுதியில், இவை கூறிய வாக்குறுதிகளில் பல இன்னமும் முன்மொழிவுகளாகவே நீடிக்கின்றன. பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக எதுவுமே நடக்காததன் காரணமாக, இவையெல்லாம் அடுத்த நான்காண்டுகளில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பே கிடையாது அல்லது வாய்ப்பு அபூர்வம் என்றே தோன்றுகிறது,’’ என்று கூறியிருக்கிறது. அது மேலும், “இந்த அரசாங்கத்தின் அரசியல் வரவு செலவுப் பதிவேட்டில் வரவுப் பக்கத்தைக் காட்டிலும் செலவுப் பக்கமே நீண்டதாக இருக்கிறது,’’ என்று தன் தலையங்கத்தை முடித்திருக்கிறது.
இவ்வாறு நாட்டின் முக்கிய பத்திரிகைகள் தங்கள்தலையங்கங்கள் மூலம் கொஞ்சம் நம்பகத்தன் மையை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண் டிருக்கின்றன. ஆயினும், `நான்காவது தூண்’ என்று அழைக்கப்படும் ஊடகங்களின் நம்பகத்தன்மை, அரசாங்கத்திடமிருந்து கணிசமான அளவிற்கு விளம்பரங்களைப் பெறக்கூடிய நிலையில், நீடிக்குமா என்பது சந்தேகமே.வெறும் பிரச்சாரங்கள் மூலமாக மட்டும் மக்கள் வயிறு நிரம்பிடாது மற்றும் எப்போதும் நிரப்பிடவும் முடியாது என்பதை பெரும்திரளாக மக்களை அணி திரட்டுவதன் மூலம் பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கத்திற்கு நன்கு உறைக்கும் விதத்தில் சொல்ல வேண்டும்.
இன்றைய எதார்த்த நிலைமைகள் நம் வயிற்றை நிரப்பிடப் போதுமானதல்ல என்பதால், இந்த அரசாங்கம் தன் மக்கள் விரோதக் கொள்கைகளை மாற்றியமைத்திடவும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையே மறுதலிக்கக்கூடிய விதத்தில் மதவெறிப் பிரச்சாரங்களைக் கூர்மைப் படுத்து வதைத் தவிர்த்திடவும் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.
(மே 27, 2015)
(தமிழில்: ச.வீரமணி)


Sunday, May 24, 2015

மூவகை ஆபத்துகள்



மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின் கடந்த ஓராண்டிற்குள், 18 அயல்நாடு களுக்குப் பயணம் செய்து சாதனை படைத்திருக்கிறார். நாட்டின் பிரச்சனைகளைத் தீர்த்திட அவர் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று நாடும் நாட்டு மக்களும் விரும்பக்கூடிய அதே சமயத்தில், பிரதமர் இப்பயணங்களின் மூலமாக உலகின்பல பகுதிகளிலுமுள்ள 40 நாடுகளுக்குச் சென்று தங்கள் வலைப்பின்னலைப் பரப்புவதில் உதவி இருப்பதாக, ஆர்எஸ்எஸ் குதூகலம் அடைந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ்-இன் பிரச்சாரகர் என்ற முறையில் அவர் தொடர்ந்து தன் பொறுப்புக்களை நிறைவேற்றுவார் என்பது தெளிவு.மோடி பயணம் செய்த கடைசி நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பேசுகையில்,
கடந்த அறுபது ஆண்டுகளாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட்டனர் என்றும், இப்போதுதான் தங்கள் அரசின் காரணமாக,நாட்டுப்பற்றுடன் தங்களை இந்தியர்என்று கூறிக்கொள்வதில் பூரிப்புகொள்கின்றனர் என்றும் பீற்றிக்கொண்டிருக் கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள்இந்தியப் பிரஜா உரிமையைப் பாதுகாத் துக் கொள்ளவும், இந்தியக் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்டு)களைத் தக்க வைத்துக் கொள்ளவும் விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெற மோடியும் பாஜகவும் எது வேண்டுமானாலும் செய்ய லாம்.
அருகதை இல்லை
இவையல்லாமல், இந்த ஓராண்டு காலத்தில், சுதந்திர இந்தியாவில் கடந்த அறுபதாண்டு காலமாக தொடர்ந்து ஆட்சிசெய்து வந்த அரசாங்கங்கள் நிர்மூலமாக்கி இருந்த நாட்டை மீண்டும் கட்டி எழுப்பிக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடியும் பாஜக அரசாங்கமும் மிகவும் அருவருப்பையும் வெறுப்பையும் உண்டாக்கும் விதத்தில் நாட்டிற்கும், உலகிற்கும் சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்த அறுபதாண்டுகளில், அடல் பிகாரி வாஜ்பாயின் தலைமையிலான ஆறு ஆண்டு காலதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங் கமும் இருந்தது என்பதை மிகவும் கருணையற்ற முறையில் இவர்கள் அங்கீகரிக்க மறுத்துள்ளனர்.
மேற்படி அறுபதுஆண்டுகளில் மக்களுக்கு அளித்தஎண்ணற்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட வில்லை என்பதிலோ, நம் நாட்டின் வளங்கள் எவ்விதத் தங்குதடையுமின்றிக் கொள்ளையடிக்கப்பட்டது என்பதிலோ, நம் மக்கள் சுரண்டப்படுவது நாளும் அதிகரித்து வந்தது என்பதிலோ எவ்விதச் சந்தேகமுமில்லை. ஆயினும், இவற்றை மோடி அரசாங்கம் சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது. புத்தெழுச்சி பெற்ற இந்தியாவை இந்த அரசாங்கம்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. மாறாக, நாட்டின் மீதும் நாட்டு மக்கள்மீதும் புதிய வகையில் மும்முனைகளிலிருந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.
நவீன தாராளமயக் கொள்கைகளை அரக்கத்தனமான முறையில் பின்பற்றிக் கொண்டிருத்தல், மதவெறியைக் கூர்மைப்படுத்தி இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற அடித்தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களைத் தொடுத்து வருதல், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் புனிதமாகக் கருதப்படும் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளைக் காலில் போட்டு மிதிப்பதன் மூலமாக எதேச்சதிகாரத்தை நோக்கி முன்னேறுதல் எனத் தாக்குதல்கள் கொத்தாக நம் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மோடி அரசாங்கம், டாக்டர் மன்மோகன் சிங் பின்பற்றிய அதே தாராள மயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேலும் அரக்கத்தனமான முறையில் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. நம் பொருளாதாரத்தின் கேந்திரமான துறைகள் அனைத்துமே மிகப் பெரிய அளவில் அந்நிய நேரடிமுதலீட்டிற்காக அகலத் திறந்து விடப்பட்டிருக்கிறது.
முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த பலவற்றை (எடுத்துக்காட்டாக, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை முன்பு எதிர்த்து வந்தது) இப்போது எதிர்ப்பதிலிருந்து பின்வாங்கிவிட்டது. இதில் மிகவும் வெட்கங்கெட்ட முறையில் பின்வாங்கல் என்பது புதிய நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டமாகும். 2013 சட்டமுன்வடிவுக்கு அது அளித்து வந்த ஆதரவை மறுதலித்துவிட்டு இப்போது மூன்று முறை நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
‘நல்ல’ விதத்தில் சித்தரிக்க நடத்தும் சித்துவேலை
நம் நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடிவிட்டு, அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக நம் நிலங்களைத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடிப்பதுடன், நம் நாட்டின் இயற்கை கனிம வளங்களையும், அந்நியமற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறது. சலுகை சார் முதலாளித்துவம் (crony capitalism) கொடிகட்டிப் பறக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)யை நல்லவிதத்தில் சித்தரிக்க வேண்டும்என்பதற்காக தேசிய வருமானக் கணக்குகளுக்கான புள்ளிவிவர அடிப்படை ஆண்டு மாற்றப்பட்டிருக்கிறது. எனினும்கூட, தொழில் வளர்ச்சி தொடங்கவே இல்லை. கார்ப்பரேட்டுகள் உற்பத்தி செய்தபொருட்கள் சந்தைக்கு வராமல் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு குவிந்து கிடக்கின்றன. இது வேலைவாய்ப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்தி, வேலையில்லாத இளைஞர் பட்டாளத்தையும் அதிகப்படுத்தி இருக்கிறது. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தின் விலைகளும் நாளும் ஏறிவருவதாலும், எரிபொருள்களின் விலைகளும் தொடர்ந்து கடுமையாக உயர்த்தப் பட்டு வருவதாலும், நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன.
விவசாய நெருக்கடியும் ஆழமாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் பெற்ற பின் முதன்முறையாக, மொத்த விளை நிலங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வேளாண் இடுபொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதாலும், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்களைக் கடுமையாகக் குறைத்து விட்டதாலும் விவசாயிகளில் பெரும்பாலோருக்கு விவசாயம் தங்கள் வாழ்வாதா ரங்களை எதிர் கொள்வதற்குப் போதுமான வையாக அமையவில்லை. இதன் காரணமாகத்தான் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன. தொழிலாளர்களின் நிலைமையும் சிறந்ததாக இல்லை. 1990-91இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் 25 சதவீதமாக இருந்தது. ஆனால் அது இன்றைய தினம் 10 சதவீதத்தைவிடச் சற்றே அதிகம் அவ்வளவுதான். ஆனால், அதே சமயத்தில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி இருக்கிறார் கள். ஃபோர்ப்ஸ் (குடிசநௌ) இதழின் 2014ஆம் ஆண்டின் பட்டியலின்படி, இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் 100 பேர் பில்லியனர்களாவார்கள்.
அதாவது ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் வைத்திருப்பவர் களாவார்கள். (ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இன்றைய தினம் இந்திய ரூபாயின் மதிப்பில் 6,400 கோடி ரூபாய்க்குச் சம மாகும்.) 2011இல் இருந்த பட்டியலின்போது இது வெறும் 55 பேர்களாக இருந்தது. இப்போது மேலும் 45 பேர் அதிகரித்து 100 பேர்களாக மாறியிருக்கிறது. இந்த 100 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு346 பில்லியன் அமெரிக்க டாலர்களா கும். நாட்டில் உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் சொத்து மதிப்பு 2000இல் 36.8 சதவீதமாக இருந்தது, தற்போது 2014இல் 49 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வெறும் கனவாய்ப்போன‘நல்ல கால’ வாக்குறுதி`நல்லகாலம் வருகுது’ என்று கூறி மக்களுக்கு இந்த அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் வெறும் கனவாய் போய்விட்டன. இந்த ஓராண்டில், இருப்போர்க்கும் இல்லாதோருக்கும் இடையேயான இடைவெளி மேலும் கூர்மையாக விரிவடைந்திருக்கிறது.
அதே சமயத்தில், மக்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகி வருவதன் காரணமாக, மக்கள் தங்கள் கிளர்ச்சிப் போராட் டங்களை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்தஅரசாங்கம் மதவெறி நடவடிக்கைகளை யும் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம் என்ற விதத்தில், தற்போதைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் இயக்கத் தின் லட்சியமான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. `தாய்மதம் திரும்புதல்’ மற்றும் `காதலுக்கு எதிரான புனிதப்போர்’ என்ற மதவெறிப் பிரச்சாரங்களுடன் புராணக் கட்டுக்கதைகளை வரலாறாகவும், மதப் பிரச்சாரத்தை தத்துவஞானமாகவும் மாற்றுவதற்கான இழிமுயற்சிகளில் வெறித்தனமாக இறங்கி இருக்கிறது.
இவற்றின் விளைவாக, பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களும் கல்வியாளர்களின் ஆராய்ச்சி அமைப்புகளும் மாற்றப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அறிவியல் மனோபாவம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிஇருக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் வகுப்புவாதப் பதற்ற நிலைமைகளும், கலகங்களும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், குறிப்பாக கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவதும் அதிகரித்து வருகின்றன. மதவெறியுடன் வெறுப்பைக் கக்கும் தன் அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற உத்தரவாதத்தைக்கூட பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூற மறுத்துள்ளார்.
அச்சுறுத்தும் அறிகுறிகள்
பாஜக, வெறும் 31 சதவீத வாக்கு களைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள போதிலும், மக்களவையில் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தில் எவ்வித ஆய்வுக்கும் ஓர் அர்த்தமுள்ள விவாதத் திற்கும் உட்படுத்தாமல், முக்கியமான பல சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் உண்மையில் அச்சுறுத்தும் சமிக்ஞைகளாகும்.
நாடாளு மன்ற நடைமுறைகளைக் காலில்போட்டு மிதிப்பது என்பது நிச்சயமாக எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும் வழியே யாகும். இது நம் குடியரசின் ஜனநாயக அடித்தளங்களை அழிப்பதற்கே இட்டுச் செல்லும். வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்துவந்த நம் சமூக நல்லிணக்கத்தை அழிக்கும் நோக்கத்துடன், தங்கள் வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அரக்கத்தனமாகப் பின்பற்றுவதும், மதவெறித் தாக்குதல்களைத் தொடுப்பதும், நம் குடியரசின் அடித்தளங்கள் மீதும் மாபெரும்தாக்குதல்களைத் தொடுக்கும் செயல் களேயாகும்.பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியின் முதலாமாண்டில் மூவகை அச்சுறுத்தல்கள் வெளிப்பட்டிருக்கின்றன.
இது, நாட்டு மக்களில் பெரும்பான்மையோர்மீது கருணையற்ற முறையில் தாக்குதலைத் திணித்திருக்கும் அதே சமயத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்கிற `இந்தியா’ என்னும் மாபெரும் சிந்தனையை அழித்திடும் செயலுமாகும். “மிகச்சிறிய அளவிலான அரசாங்கம் மிகப்பெரிய அளவிலான ஆட்சி’’ (“minimum government maximum governance) என்று இவர்கள் கூறும் சொற்றொடரின் உண்மைப் பொருள் இதுவேயாகும். இந்த ஓராண்டில் ஊழல் வழக்கு எதுவும் வெளிப்படவில்லை என்று பிரதமர்மோடியும், பாஜகவும் பீற்றிக்கொண்டி ருக்கிறார்கள். ஐமுகூ அரசாங்கத்தின் முதல் நான்கு ஆண்டு காலங்களில் இவ்வாறு ஊழல் எதுவும் வெளிப்பட்டதாக எவரேனும் நினைவுகூர முடியுமா? சலுகைசார் முதலாளித்துவக் கொள்கைகளை அரக்கத்தனமாகப் பின்பற்றும் இந்த அரசாங்கத்தின் உண்மை சொரூபமும் விரைவில் வெளியாகும்.
தமிழில்: ச.வீரமணி


Monday, May 18, 2015

அரசியல் சந்தர்ப்பவாதத்தின் கூட்டுக் கலவை



அகர்தலா வந்திருந்த பிரதமரை அதிகாரப்பூர்வ மரியாதை நிமித்தமாக திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் வரவேற்றபோது, அவருக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவதூறை வீசி எறிந்து வெகுகாலம் ஆகிவிடவில்லை. அதே மம்தா பானர்ஜிதான் இப்போது பிரதமர் மோடி கொல்கத்தா வருகை தந்தபோது, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே புதிதாக ஏற்பட்டுள்ள உறவானது, 2014 மக்களவைத் தேர்தலின்போது அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பை வரலாற்றின் பதிவேடுகளில் மூட்டை கட்டி வைக்கப்பட்டுவிட்டது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது.
இவர்கள் சந்திப்பின்போது இவர்களிருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடல் மொழியானது இருவருக்குமிடையே புதியதொரு உறவு மலர்ந்திருப்பதை - ஓர் அரசியல் கூட்டணி வரவிருப்பதை - கோடிட்டுக் காட்டி இருக்கிறது. இதற்கான காரணங்களுக்காக மிகவும் சிரமப்பட வேண்டிய தேவை இல்லை. மேற்குவங்கத்தில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ள சாரதா சீட்டு நிதிநிறுவனம் மற்றும் பல்வேறு சீட்டுநிதி நிறுவனங்களின் ஊழல்கள் தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் கழகம் புலன் விசாரணைகள் நடத்தி வருவதும், இவற்றில் ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசின் முன்னணி மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டும் அக்கட்சி முழுமையாக முற்றுகைக்கு உள்ளாகியும் இருக்கக்கூடிய நிலையில், அக்கட்சி அதிலிருந்து விடுபடமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், மத்தியில் உள்ள மோடி அரசாங்கத்துடன் ஓர் `அரசியல் ஒப்பந்தம்’ ஏற்பட்டால் மட்டுமே முடியும். தற்போது இந்த ஊழல்கள் தொடர்பாக அக்கட்சிக்கு இருந்து வரும் நிர்ப்பந்தங்களிலிருந்து மீள வேண்டுமானால் இது அவசியமாகும்.
புதிய பேரம் உருவாகியுள்ளது
இவ்வாறான நம் ஊகத்தை பிரதமர் மோடியின் உரையே உறுதிப்படுத்தி இருக்கிறது. அசன்சாலில் அவர் உரையாற்றுகையில், நிலக்கரி, அலைக்கற்றை வரிசை போன்று ஐமுகூ அரசாங்கத்தின் அனைத்து ஊழல்களையும் நினைவுகூர்ந்த அதே சமயத்தில், சாரதா சீட்டு நிதிநிறுவன ஊழல் குறித்து குறிப்பிட வசதியாக மறந்துவிட்டார். மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்ட இதே மோடிதான்,
இந்த சாரதா சீட்டு நிதிநிறுவன ஊழலைச் சுட்டிக்காட்டி திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராகவும் அக்கட்சியின் முதலமைச்சருக்கு எதிராகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டவர். உண்மையில், தில்லியில் மார்ச் 9 அன்று பிரதமர், மேற்கு வங்க முதல்வரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, சிபிஐ, சாரதா ஊழல் புலன் விசாரணைகளை நத்தை வேகத்தில் நடத்தத் துவங்கிவிட்டது. அதேபோன்று சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நகராட்சித் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பெரிய அளவில் மோசடிகளை செய்வதற்கு வசதி செய்து தரும் விதத்தில், பெயரளவில் மத்தியப் படைகளை அனுப்பி வைத்ததையும் பார்த்தோம்.
இதற்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் பிரதமரை பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாலோசனைக்காக சந்திக்க வரவில்லை. (மத்திய நிதி அமைச்சரைக்கூட சந்திக்க மறுத்துவிட்டார்.) இப்போது அவற்றுக்கு நேரெதிராக நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, ஒரு ‘புதிய பேரம்’ உருவாகியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேற்குவங்க முதல்வரும் தனது பங்கிற்கு, இதற்கு முன்பு பாஜக மற்றும் தனிப்பட்ட முறையில் பிரதமருடன் கொண்டிருந்த அனைத்துவிதமான பகைமை உணர்வுகளையும் கைவிட்டுவிட்டார். இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் மிகவும் சுமூகமான முறையில் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
நஸ்ருல் மஞ்ச் அரங்கத்தில் பொது மக்கள் மற்றும் ஊடகங்கள் இல்லாது, சுமார் 30 நிமிடங்களுக்கு இச்சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. பின்னர் இருவரும் ஆளுநர் மாளிகையில் உணவு அருந்தி இருக்கிறார்கள். மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடையாது என்பதால், நிலுவையில் உள்ள முக்கியமான சட்ட முன் வடிவுகளை நிறைவேற்றிட திரிணாமுல் காங்கிரசின் ஆதரவை, பிரதமர் கோரி இருக்கிறார். சமீபத்தில், நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் சட்டமுன்வடிவு மற்றும் நிலக்கரி ஒதுக்கீடுகள் சட்டமுன்வடிவு ஆகியவை நிறைவேறுவதற்கு மோடி அரசாங்கத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் உதவியது.
இதற்கு முன் கடுமையாக எதிர்த்து வந்த பொருள்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவிற்கு ஆதரவு அளித்திடவும் இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறது. இவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையே `பயன்கள்’ பரஸ்பரமானவைகளாகும். பிரதமர் மோடி, சமீபத்திய அரசியல் வரலாற்றைக்கூட, குறிப்பாக, மத்திய அரசுக்கும் மேற்குவங்க மாநில அரசுக்கும் இடையேயான உறவுகளைக் கூட, மாற்றி அமைத்திடும் வேலையில் இறங்கி இருக்கிறார். அசன்சாலில் அவர் இந்திய இரும்பு மற்றும் உருக்கு கம்பெனி விரிவாக்கத் திட்டத்தைத் துவக்கி வைக்கும் நிகழ்வின்போது உரையாற்றுகையில், மாநிலத்தில் ஆட்சி செய்த இடதுமுன்னணி தொழில்மயத்திற்கு உதவவில்லை என்றும், அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையிலான முன்னாள் பாஜக அரசாங்கம் அளிக்க முன்வந்த உதவியையும் இடது முன்னணி அரசாங்கம் ஒதுக்கித் தள்ளிவிட்டது என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஆனால் உண்மை என்ன? இந்திய இரும்பு மற்றும் உருக்கு கம்பெனியின் ஒட்டுமொத்த நவீனமயமும் இடது முன்னணி அரசாங்க காலத்தில்தான் தொடங்கியது. இது தொடர்பாக அடல் பிகாரி வாஜ்பாயி அரசாங்கம் எவ்வித உதவியையும் செய்ய மறுத்துவிட்டது. இடதுசாரிகள் வெளியே இருந்து ஆதரவு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்து ஐமுகூ-1 அரசாங்கத்தின் காலத்தில்தான் மத்திய அரசின் உதவியைக் கட்டாயப்படுத்தி பெற முடிந்தது. அந்த சமயங்களில் எல்லாம், மேற்கு வங்கத்தில், அன்றைய மேற்கு வங்க அரசாங்கம் மேற்கொண்ட இஸ்கோ நவீனமயம் உட்பட அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்தது.
பிரதமர் மோடி, தற்போது பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, புதிய திட்டங்கள் என்ற பெயரில் படாடோபமாக அறிவித்திருக்கிறார். இவை அனைத்துமே முந்தைய அரசாங்கங்கள் பின்பற்றிய திட்டங்கள்தான். புதிய பெயர்களைச் சொல்லி அறிவித்திருக்கிறார். இந்த சமயம் அவர் மூன்று திட்டங்களை - பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் அடல் பென்ஷன் திட்டம் - என்னும் மூன்று திட்டங்களை மிகுந்த வாணவேடிக்கைகளுடன் அறிவித்திருக்கிறார்.
இவ்வாறு திட்டங்களை அறிவிக்கும்போது அவர், கடந்த அறுபதாண்டுகளில் நாட்டில் உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை என்றும், தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்புதான் மக்களுக்கான நலத்திட்டங்கள் எல்லாமே தொடங்கி இருப்பதாகவும் சரடு விட்டிருக்கிறார். பிரதமர் மேலும் கூறுகையில், “ஏழைகளுக்காக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போதிலும், வங்கிகளில் ஏழைகள் எவருமில்லை’’ என்றும் அடுக்குமொழியில் அளந்திருக்கிறார். “80 இலிருந்து 90 சதவீதம் வரையிலான மக்களுக்கு ஓய்வூதியமோ இன்சூரன்சோ கிடையாது’’.
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தையும் கோடிக்கணக்கான புதிய வங்கிக் கணக்குகளும் திறக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஆனால், இப்போதும்கூட நாட்டின் 120 கோடி மக்கள் தொகையில் 15 கோடி மக்களுக்குத்தான் வங்கிக் கணக்கு உண்டு. இதில் மிகவும் மோசமான விஷயம், இவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கு ரொக்க இருப்பே கிடையாது என்பதாகும். மோடி அறிவித்திருக்கும் மேற்கண்ட மூன்று திட்டங்களுமே வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, நடைமுறையில் நாட்டிலுள்ள மக்களில் 90 சதவீதத்தினர் இத்திட்டங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறார்கள். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்களும் இவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத்தான் பொருந்தும்.
இத்திட்டங்கள் எதற்கும் எவ்விதமான பட்ஜெட் ஒதுக்கீடோ அரசாங்க நிதி ஒதுக்கீடோ கிடையாது என்பது அனைத்தையும் விட மோசமான விஷயமாகும். இதன் பொருள், இத்திட்டங்கள் அனைத்துமே மக்கள் அளித்திடும் நிதியைக் கொண்டு அவர்களுக்கு உதவிடும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதேயாகும்.
மோசடி பென்சன் திட்டம்உதாரணமாக, `அடல் பென்ஷன் யோஜனா’ என்னும் ஓய்வூதியத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முறைசாராத் தொழிலாளர்கள் 18 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் மாதா மாதம் அளிக்கும் தொகையிலிருந்து அவர்களுக்கு 60 வயது ஆன பின்னர், அவர்கள் அளித்திடும் பங்களிப்பின் அடிப்படையில், குறைந்தபட்சம் 1000 ரூபாய்க்கும் 5000 ரூபாய்க்கும் இடையே ஒரு தொகையை அளிக்கும் திட்டமாகும். அதாவது, ஒரு நபர் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மாதா மாதம் ஒரு தொகையை அளித்திட வேண்டும். இவ்வாறு இவர்கள் அளிக்கும் தொகைக்கு வட்டி எதுவும் சேர்க்கப்பட மாட்டாது. இவர்கள் அளித்த தொகையிலிருந்து ஒரு தொகை ஓய்வூதியமாக இவர்களுக்கு அளிக்கப்படுமாம். மேலும், தற்போது நாட்டில் மக்கள் உயிர்வாழ்வது என்பது சராசரி 65.5 வயதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அப்படியெனில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் மாதா மாதம் தொகையை ஒருவர் செலுத்தினால், அவர்களுக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு இவ்வாறு இவர்கள் ஓய்வூதியம் அளிப்பார்கள். இவ்வாறுதான் பிரதமர் மோடியும்மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், மக்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைக ளாக படாடோபமான விளம்பரங்களுக்கு இடையே அறிவித்துள்ள பல திட்டங்களின் லட்சணங்களாகும். பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் “கர் வாப்ஸி’’ (வீட்டிற்குத் திரும்புவோம்) திட்டத்தை அமல்படுத்துவதில் பெற்றி பெற்றிருக்கிறார் என்றும் இதற்கு திரிணாமுல் காங்கிரசின் அரசியல் சந்தர்ப்பவாதம் உதவி இருக்கிறது என்றும் எண்ணற்ற பேச்சுகள் நாடாளுமன்றத்தின் நடைக்கூடங்களில் உலா வருகின்றன. கடந்த காலங்களில் மேற்குவங்கத்திற்குள் நுழைய பாஜகவிற்கு வழியேற்படுத்தித் தந்தது திரிணாமுல் காங்கிரஸ்தான். மம்தா பானர்ஜியே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் ஆரம்பத்தில் ரயில்வே துறைக்கும், பின்னர் நிலக்கரித்துறைக்கும் கேபினட் அமைச்சராக இருந்திருக்கிறார். முந்தைய இடதுமுன்னணி அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை மற்றும் பயங்கரவாத பிரச்சாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டிருந்த சமயத்தில் அதற்கு ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்களிடமிருந்து தாராளமாய் ஆதரவு கிடைத்து வந்தது. இப்போது மீண்டும் மத்திய அரசாங்கமும், பாஜக வும் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராஜகம், வன்முறை மற்றும் பயங்கரவாத அரசியலுக்குப் பங்காளிகளாகி இருப்பது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது.மத்திய அரசும், மேற்குவங்க மாநில அரசும் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதன் காரணமாக மக்களின் சுமைகள் மேலும் அதிகரித்துவரும் நிலையில், இவ்விருவருக்கும் இடையிலான கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவாதம் மாநிலத்தில் மதவெறியைக் கூர்மைப்படுத்துவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. வரவிருக்கும் காலங்களில் மிகவும் மட்டரகமான இக்கூட்டுக் கலவையை எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தலுக்கு மேற்கு வங்க மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுதும் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக எண்ணம் கொண்ட மக்களின் ஆதரவு இல்லாமல் மேற்கு வங்க மக்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அச்சுறுத்தலை முறியடித்திடவோ, நாட்டையே விழுங்குவதிலிருந்து தடுத்திடவோ முடியாது. இத்தகைய அச்சுறுத்தலின் சவாலை நாம் அனைவரும் ஒன்றுபட்டு முறியடித்திடுவோம்.
மே 13, 2015
தமிழில் : ச.வீரமணி