Wednesday, July 18, 2018

கும்பலாகச் சென்று கொலை செய்வதைத் தனிக் குற்றமாக்கிடுக நாடாளுமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் பரிந்துரை


கும்பலாகச் சென்று கொலை செய்வதைத் தனிக் குற்றமாக்கிடுக
நாடாளுமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் பரிந்துரை

புதுதில்லி, ஜூலை 18-
கும்பல் குண்டர்கள், கொலை செய்வதைத் தனிக் குற்றமாக்கி, சட்டமியற்றவேண்டும் என்று நாடாளுமன்றத்தை, உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.‘
கும்பல் குண்டர்கள், கொலை செய்யும் சமீபத்திய நிகழ்வுகளை, பயங்கரமான நடவடிக்கைகள்” (“horrendous acts of mobocracy”என்று செவ்வாய்க் கிழமையன்று, கடுமையாகக் கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், இவ்வாறு கும்பல் குண்டர்கள் சென்று கொலை செய்யும் நடவடிக்கையைத் தனிக் குற்றமாகப் பாவித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தினைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான மூவரடங்கிய உச்சநீதிமன்ற அமர்வாயம், தன்னுடைய 45 பக்கங்கள் கொண்ட தீர்ப்புரையில், மாபெரும் மக்கள்தொகை கொண்ட மாபெரும் குடியரசைச் சேர்ந்த நாம், பன்முகக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதற்கான சகிப்புத்தன்மை என்னும் மாண்பினை இழந்துவிட்டோமா” என்றும் வியந்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். சமீபத்தில் நாட்டின் பல பகுதிகளில் குண்டர்கள் அடங்கிய கும்பல்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு, கொடூரமான முறையில் மக்களைக் கொலைகள் செய்துவருவதும், அதனை அங்குள்ள மக்கள் செய்வதறியாது திகைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதும், காவல்துறையின் செயலற்றதன்மையும், பின்னர் குண்டர்களால் நிகழ்த்தப்பட்ட அக்கொடூர சம்பவங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு அனைவராலும் பார்க்கப்படும் நிலை இருப்பதையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். 
மனித இயல்பற்ற கோர உருவத்தினர் எச்சரிக்கை’’ (‘Beware of the monster’)
இவ்வாறு நாடு முழுதும் குண்டர்களின் கும்பல்கள் கொலைகளிலும் மற்றும் வன்முறை வெறியாட்டங்களிலும் ஈடுபடுவதை,மெல்லமெல்ல அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள்” என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், இவ்வாறு கும்பல்களின் வெறித்தனமான நடவடிக்கைகள் அதிகரித்துவருவது நாட்டை, மனிதஇயல்பற்ற கோர உருவம்கொண்டவர்கள்கொண்ட ஒரு நாடாக மாற்றிவிடும், என்றும் குறிப்பிட்டிருக் கிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் தீர்ப்புரையில், நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும், அவர்கள் எந்த இனத்தவராக இருந்தாலும் சரி, எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி,  அவர்கள்  அனைவரையும் பாதுகாக்க வேண்டிய அடிப்படையான கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு,” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள், குற்றத்தைப் பொறுத்தவரை அதற்கு மதம் இல்லை. குற்றத்தைச் செய்த கயவரோ அல்லது குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபரோ எந்த இனத்தைச் சேர்ந்தவர், எந்த சாதியைச் சேர்ந்தவர், எந்த வகுப்பைச் சேர்ந்தவர் அல்லது எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று பார்க்கக்கூடாது,” என்றும் தீர்ப்புரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.  மேலும் அவர்கள், இவ்வாறு நடைபெறும் கும்பல் கூட்டத்தினரின் கொலைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்களைத் தடுக்கக்கூடிய, சரிசெய்யக்கூடிய மற்றும் அவ்வாறு செயல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கக்கூடிய நடவடிக்கைகளையும் தங்கள் தீர்ப்புரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவற்றை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்திட வேண்டும் என்றும், அவ்வாறு அமல்படுத்தியது தொடர்பான அறிக்கைகளைத் தங்கள் நீதிமன்றத்திற்கு அடுத்த நான்கு வார காலத்திற்குள் அனுப்பி வைத்திட வேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார்கள்.
இந்தத் தீர்ப்புரையானது, பசுப் பாதுகாப்புக் குழுவினர் என்ற பெயரில் தலித்துகள் மற்றும் முஸ்லீம்களுக்க எதிராக மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹர்யானா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வெட்கங்கெட்ட தாக்குதல்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவின்மீது பிறப்பிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம், எம்.பி., வரவேற்றிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், அரசாங்கத்தின் பாதுகாப்பு இல்லாமல் இத்தகைய குண்டர் குழுக்கள் இயங்கிட முடியாது,” என்றும் கூறினார். ’நாங்கள் இந்தத் தீர்ப்பினை வரவேற்கிறோம். இந்தப்பிரச்சனை மீது அரசாங்கம் விவாதம் செய்ய விரும்பவில்லை என்ற போதிலும், இதனை நாங்கள் 2015இல் எழுப்பினோம். அரசாங்கம் இந்தப் பிரச்சனைதொடர்பாக விவாதிப்பதற்கு எங்களுக்கு நேரமே ஒதுக்கிடவில்லை. நான் மீண்டும் வலியுறுத்திக்கூற விரும்புவது என்னவெனில், அதிகாரத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பு இல்லாமல் இத்தகைய குண்டர் குழுக்கள் இயங்கிட முடியாது என்பதேயாகும்,” என்றார்.


(ந.நி.)

No comments: