Friday, July 20, 2018

1 சதவீதத்தினரின் நலனுக்காக, 99 சதவீதத்தினர் தாக்கப்படுகிறார்கள்: முகமது சலீம்




1 சதவீதத்தினரின் நலனுக்காக, 99 சதவீதத்தினர் தாக்கப்படுகிறார்கள்: முகமது சலீம்
புதுதில்லி, ஜூலை 20-
நாட்டில் உள்ள 1 சதவீதத்தினரின் நலனுக்காக, 99 சதவீதத்தினர் தாக்கப்படுகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் முகமது சலீம் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று முகமது சலீம் கூறியதாவது:
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கறுப்புப் பணம் வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் அதனை நம் நாட்டிற்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, நம் இந்திய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தீர்கள்.
பிரதமர் மோடி, அடிக்கடி தன் உரையில், கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரசார் செய்ததை நாங்கள் எங்கள் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்திருக்கிறோம் என்று கூறுவார். மேலும் தொடர்ந்து அவர், காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகளாக நாட்டிற்கு நாசத்தை மட்டும்தான் விளைவித்திருக்கிறது என்றும் கூறுவார்.
இந்த அரசாங்கம், திரும்பவும் விவசாயிகளிடம் தேர்தல் சமயத்தில் சென்றுதான்  ஆகவேண்டும். ஜியோ நிறுவனம் ஓர் ஆவணத்தைத் தாக்கல் செய்ததை வைத்தே, அதற்கு உயர்வல்லமை மிக்க நிறுவனம் என்று கூறி மத்திய அரசு நிதி அதற்கு  வழங்கியிருக்கிறது. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பள்ளிக்கூடத்தைத் தன் தொகுதியில் கட்ட வேண்டும் என்றும், நிதி தாருங்கள் என்றும் கோரினால், அவர் அதற்கான நிலம், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இருப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திட வேண்டும்.
“சுதேசி” என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் ஒவ்வொரு துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துக்கொண்டிருக்கிறீர்கள். ராணுவத்தையும் விட்டுவைக்கவில்லை.
நாட்டின் செல்வத்தில் 90 சதவீதம் ஒரு சதவீதத்தினரிடம் இருக்கிறது. இவர்களைப் பாதுகாப்பதற்காக, நாட்டில் உள்ள  99 சதவீதத்தினரிடையே மதவெறியைக் கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். மக்களை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், மொழியின் பெயராலும் மோதவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
இவ்வாறு முகமது சரீம் பேசினார். முகமது சலீமின் பேச்சிற்கு, பாஜகவினர் ஆட்சேபணை தெரிவித்தபோது, “நீங்கள், பொய்களைக் கூறுவதன்மூலம் தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனாலும் நாங்கள் எங்களிடமுள்ளதை இழந்தாலும் நாங்கள் உண்மை பேசுவதைத் தொடருவோம்,” என்று பதிலளித்தார்.  
(ந.நி.)



No comments: