Thursday, January 18, 2018

உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதியரசர்களின் போர்க்குரல்



தலையங்கம்
ஜனவரி 12 அன்று உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நால்வரால் நடத்தப்பட்ட  ஊடகவியலாளர்கள் சந்திப்பு என்பது உண்மையில், இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும்.  நீதியரசர்கள் ஜெ. செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.  லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் தலைமை நீதிபதிக்கு அடுத்து உள்ள மிகவும் மூத்த நீதிபதிகளாவார்கள். அத்துடன் ஐந்து உறுப்பினர் லொலீஜியம் (collegium) எனப்படும் மூத்த ஐந்து உறுப்பினர்களில் தலைமை நீதிபதியைத்தவிர ஏனைய நான்கு நீதிபதிகளுமாவார்கள்.  இந்த நான்கு நீதிபதிகளும்தான் இவ்வாறு தலைமை நீதிபதிக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாகவும், அரசமைப்புச்சட்ட அமர்வாயங்கள் அமைப்பது சம்பந்தமாகவும் உள்ள நிர்வாக விஷயங்களில் தலைமை நீதிபதி நடந்து கொள்ளும் முறைகள் பற்றி முறையிட்டுள்ளார்கள்.
மேற்கண்ட நான்கு நீதிபதிகளும் தாங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தலைமை நீதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்தையும் சுற்றுக்கு விட்டார்கள். அந்தக் கடிதத்தில் அவர்கள், தங்கள் மனத்தாங்கல்களை வெளிப்படுத்தி இருந்தார்கள். ஏற்கனவே கொலிஜியத்தால் தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு வழக்கில் நடைமுறையை மீறி தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்ததையும் எடுத்துக்காட்டி இருந்தார்கள். மேலும் அந்தக்கடிதமானது,    எந்தெந்த நீதிபதிகள் அமர்வாயங்களில் அமர்வார்கள் என்று தெளிவாகக் குறிப்பிடாமல், “தன் இஷ்டத்திற்கு அமர்வாயங்கள்“ அமைக்கப்படுவதுகுறித்தும் பேசியது.
நீதித்துறையின் நேர்மையையும், சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளை மூத்த நீதிபதிகள் எழுப்பி இருக்கிறார்கள்.  அவர்களுக்கேற்பட்ட அனுபவ சாட்சியமே இவ்வாறு அவர்கள் கவலை யடைந்ததற்கான காரணத்தை உறுதிசெய்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, நீதிமன்றத்தின்முன் நிலுவையில் உள்ள  மிக முக்கியமான அயோத்தி வழக்கு மற்றும் ஆதார் வழக்கு போன்றவற்றிற்காக அமைக்கப்பட்ட அமர்வாயங்களில்,   இந்த மூத்த நீதிபதிகளில் எவருமே இடம்பெறவில்லை. ஆதார் வழக்கில், நீதியரசர் செலமேஸ்வர் தலைமையிலான அமர்வாயம், இதனை அரசமைப்புச்சட்ட அமர்வாயத்திற்கு அனுப்பிட வேண்டும் என்று பரிந்துரைத்தது.  எனினும், அவ்வாறு ஐந்து உறுப்பினர் அடங்கிய அரசமைப்புச்சட்ட அமர்வாயம் அமைக்கப்பட்டபோது, செலமேஸ்வர் உட்பட முன்பு ஒரிஜினலாக அங்கம் வகித்த உறுப்பினர்கள் எவரும் இடம் பெறவில்லை.
நீதியரசர் லோயா வழக்கானது, நீதியரசர் அருண் மிஷ்ரா தலைமையிலான பத்தாவது அமர்வாயத்திற்கு அனுப்பப்பட்டபோதுதான், மூத்த நீதிபதிகளின் அச்சங்கள் உறுதிப்படுத்தியிருக்கும்போல் தோன்றுகிறது.  அமர்வாயங்கள் அமைக்கப்படும்போது அவற்றில் மூத்த நீதிபதிகளை ஒதுக்குவதும், வழக்குகள் பிரித்தனுப்பப்படும்போதும் மூத்த நீதிபதிகளை ஒதுக்குவதும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுவது நன்கு தெரிய ஆரம்பித்தது.
மிகவும் மூத்த நீதிபதிகள் ஜனவரி 15 அன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபின் மூன்று நாட்கள் கழித்து, இந்தியத் தண்டனைச் சட்டம் 377ஆவது (முறைபிறழ்ந்த புணர்ச்சி) பிரிவின்கீழ் வருபவர்களைக் கிரிமினல்களாகக் கருதக்கூடாது மற்றும் சபரிமலைக் கோவிலுக்கு பெண்கள் நுழைவு உட்பட ஏழு வழக்குகளைக் கேட்பதற்கான அரசமைப்புச்சட்ட அமர்வாயம் அமைக்கப்பட்ட போது, இது மீண்டும் ஒருமுறை தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.   தலைமை நீதித்துறை நடுவரின் தலைமையிலான ஐந்து உறுப்பினர்கள் கொண்ட அமர்வாயத்தில் மேற்கண்ட நான்கு நீதிபதிகளில் எவரொருவரும் இடம் பெறவில்லை.
இது நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்ற பீடத்தில் எழுந்துள்ள மிக ஆழமான நெருக்கடி என்பதில் எவ்விதச்  சந்தேகமும் இல்லை.  ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பும் பல்வேறுவிதமான சிரமங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு  ஆளாகியுள்ள நிலையில்தான் இதுவும் வந்திருக்கிறது.  நாட்டின் உயர்ந்தபட்ச அமைப்பில் இயங்கும் உச்சநீதிமன்றத்தில் ஆட்சியாளர்கள் தலையிடுவது என்பது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், உச்சநீதிமன்றத்தின் நடைமுறைகளை (Memorandum of Procedure) மாற்றியமைத்து உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைத் தன்வயப்படுத்திட பல்வேறு விதங்களில் ஆட்சியாளர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.  தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்திடவும், வேண்டாதவர்கள் நியமிக்கப்பட்டால் அவர்களை ஏற்காமல் மறுப்பதும் என்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் ஒன்று, கொலிஜியத்தால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட நீதிபதிகளின் பெயர்களை, தேசியப் பாதுகாப்புக்காக ரத்து செய்வதாகக்கூறி ரத்து செய்ததாகும். இவ்வாறு ஆட்சியாளர்களால் அளிக்கப்பட்டுவரும் நிர்ப்பந்த உத்திகளால் சமரசம் செய்துகொள்ளப்பட்டு நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்திற்குள்ளாகும் அபாயம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
 இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் மிகவும் ஆழமான முறையில் பிரச்சனைகள் உருவாகி இருக்கக்கூடிய சூழலில், அவற்றை நீதிபதிகளுக்கிடையே பேசி, சரி செய்துவிட்டோம் என்றும் அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டமைத்துவிட்டோம் என்றும் பூசிமெழுகுவது முறையாக இருக்காது.
கொலிஜியத்தின் கீழ் வரும் அனைத்து நீதிபதிகளும் மற்றும் ஒட்டுமொத்த நீதிபதிகளும் இப்பிரச்சனைகளை விவாதித்து, உச்ச நீதிமன்றத்தின் ஜனநாயக செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய திசைவழியில்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் செயல்படுவார்கள்  என்று நம்புவோமாக.
இறுதியாக, நம் நீதித்துறை அமைப்பில் அடிப்படைச் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று, உச்ச நீதிமன்றத்தின்  நீதிபதிகள் நியமனம் மற்றும் மேற்பார்வை குறித்ததாகும்.
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC-- National Judicial Appointments Commission), அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது எனக்கூறப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் அடித்து, நிராகரிக்கப்பட்டுவிட்டது. நீதிபதிகள் நியமனத்திற்குத் தற்போது இருந்துவரும் கொலிஜியம் எனப்படும் மூத்த நீதிபதிகளின் முறை திருப்திகரமானது அல்ல. இதனை மாற்ற வேண்டியது அவசியமாகும். இதில்,  தேசிய நீதித்துறை நியமன ஆணையம்  குறைபாடு உடையதாகும். ஆட்சியிலிருப்பவர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு இதில் வாய்ப்பு இருந்தது. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதர ஜனநாயக வழக்குரைஞர்கள் சங்கங்களுடன் இணைந்து நின்று, மேலும் விரிவான அளவிலான தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அது நீதிபதிகளின் நியமனங்களை மட்டுமல்ல, நீதிபதிகளின் நடத்தை குறித்து வரும் முறையீடுகளையும் விசாரித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறிக்கொண்டிருக்கிறது.
(ஜனவரி 17 , 2018)





1 comment:

ஞானகுரு.ந said...

நீதித்துறையே சனநாயகமாக செயல்படவில்லை என்றால் இந்தியா சனநாயக நாடாக இருக்கமுடியுமா!